Tuesday, October 24, 2017

திரு முருகா...அருள் முருகா!

அனைவருக்கும் இனிய கந்த சஷ்டி திருநாள் வாழ்த்துகள்!
வெற்றி வேல் முருகனுக்கு… அரோஹரா!

ஆறு மலர் மீதில் ஆறு உருவாகி
ஆறு முகமான திரு முருகா
கோடி மலர் கொண்டு குழந்தை உனைக் கண்டு
கொஞ்சும் தமிழ் பாட அருள் முருகா

ஆனை முகக் கன்று ஞானப் பழந் தன்னை
வெல்ல வழி செய்த திரு முருகா
தானே பழமாகி ஞான வடிவாகி
பழனி மலை மீதில் அருள் முருகா

ப்ரணவப் பொருள் அறியா அயனைச் சிறையிட்டு
படைப்புத் தொழில் புரிந்த திரு முருகா
தந்தை சிவனார்க்கு தானே குருவாகி
சுவாமி மலைமீதில் அருள் முருகா

அன்னை சிவகாமி தந்த வடிவேலை
தாங்கி அமர் செய்த திரு முருகா
சூரன் தனைப் பிளந்து சேவல் மயிலாக்கி
செந்தூர் அலைவாயில் அருள் முருகா

தேவ சேனைக்கு சேனாபதியாகி
தேவர்களைக் காத்த திரு முருகா
தேவசேனைக்குக் காதல் பதியாகி
பரங் குன்றின் மீதில் அருள் முருகா

வேகம் மிகக் கொண்டு வேலை ஏந்திக் கொண்டு
அசுரர்களை அழித்த திரு முருகா
கோபந் தணிந்து வந்து கொஞ்சம் இளைப்பாற
தணிகை மலை மீதில் அருள் முருகா

வேடர் குல மாது வள்ளிக் குற மகளைக்
காதல் மணம் புரிந்த திருமுருகா
வள்ளி தேவயானை தேவியர் அருகிருக்க
பழமுதிர் சோலையில் அருள் முருகா


--கவிநயா


1 comments:

Nanjil Siva January 02, 2020 8:15 AM  

ஆஹா ... எழில் கொஞ்சும் பாடல் ..

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP