கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 11
“ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண் ஆள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும்
உன்னைத் துதிக்க உன் திருநாமம்!
சரஹண பவனே! சைலொளி பவனே!
திரிபுர பவனே! திகழ் ஒளி பவனே!
பரிபுர பவனே! பவம் ஒளி பவனே!
அரி திரு மருகா! அமராபதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்!
கந்தா! குகனே! கதிர்வேலவனே!
கார்த்திகை மைந்தா! கடம்பா! கடம்பனை
இடும்பனை அழித்த இனிய வேல் முருகா!
தணிகாசலனே! சங்கரன் புதல்வா!
கதிர்காமத்து உறை கதிர்வேல் முருகா!
பழநிப் பதி வாழ் பாலகுமாரா!
ஆவினன்குடி வாழ் அழகிய வேலா!
செந்தின்மாமலை உறும் செங்கல்வராயா!
சமராபுரி வாழ் சண்முகத்தரசே!”
"தீமைகளை விலக்கி அருள வேண்டும் என்று வேண்டியதன் பின் உலகத்து நன்மைகளை எல்லாம் தரும் முருகனின் திருநாமங்களைப் பாடிப் பரவுகிறார் அடிகளார்.
பூலோகம், புவர்லோகம், சுவர்க்கலோகம், மஹர்லோகம், ஜனலோகம், தபலோகம், சத்யலோகம் என்ற ஏழு மேல் உலகங்களும், அதலலோகம், சுதலலோகம், விதலலோகம், ரசாதலலோகம், தலாதலலோகம், மஹாதலலோகம், பாதாளலோகம் என்ற ஏழு கீழ் உலகங்களும், அவற்றில் இருக்கும் அனைத்தும் எனக்கு நன்மை செய்யும் உறவினர்கள் ஆகவும், ஆண்களும் பெண்களும் அனைவரும் எனக்காக, உலகங்களை ஆளும் அரசர்களும் மகிழ்ந்து எனக்கு உறவாகவும் அருளுகின்ற உன் திருநாமங்களால் உன்னைத் துதிக்க அருள் செய்தாய்.
ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண் ஆள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும்
உன்னைத் துதிக்க உன் திருநாமம்!
சரவணப் பொய்கையில் உதித்தவனே சரஹண பவனே!
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று போற்றும்படி அனைத்து மலைகளுக்கும் ஒளியும் புகழும் தருபவனே! சைல ஒளி பவனே!
தங்கக்கோட்டை, வெள்ளிக்கோட்டை, இரும்புக்கோட்டை என்னும் முப்புரங்களை வைத்துக் கொண்டு உலக மக்களுக்குத் துன்பத்தைத் தந்த திரிபுரர்களை அழித்த சிவபெருமானை ஒத்தவனே! திரிபுர பவனே!
எங்கும் எப்போதும் விளங்குகின்ற ஒளியை உடையவனே! திகழ் ஒளி பவனே!
பரிபுரம் என்னும் காலணியை அணிந்து விளங்குபவனே! பரிபுர பவனே!
பிறப்பு இறப்பு என்னும் பவச் சுழலிலிருந்து என்னை விடுவித்து பவத்தை ஒளிப்பவனே! பவம் ஒளி பவனே!
சரஹண பவனே! சைலொளி பவனே!
திரிபுர பவனே! திகழ் ஒளி பவனே!
பரிபுர பவனே! பவம் ஒளி பவனே!
திருமால் திருமகள் இருவருக்கும் மருகனே! தேவர்களின் தலைநகராகிய அமராபதியை சூரனின் கொடுமையிலிருந்து காத்துத், தேவர்களைச் சூரனின் கடுஞ்சிறையிலிருந்து விடுவித்தவனே!
கந்தனே! அடியவர்களின் மனக்குகையில் இருக்கும் குகனே! கதிரவனைப் போல் ஒளிக் கொண்ட வேலவனே! கார்த்திகைப் பெண்களின் திருமகனே! கடம்ப மாலை அணிந்தவனே! கடம்பனையும் இடும்பனையும் அழித்த இனிய வேல் முருகா!
அரி திரு மருகா! அமராபதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்!
கந்தா! குகனே! கதிர்வேலவனே!
கார்த்திகை மைந்தா! கடம்பா! கடம்பனை
இடும்பனை அழித்த இனிய வேல் முருகா!
திருத்தணிகைமலையில் இருப்பவனே! சங்கரனின் திருமகனே! கதிர்காமத்தில் உறைகின்ற கதிர்வேல் முருகா! பழநிமலையில் வாழ்கின்ற பாலகுமாரா! திருவாவினன்குடியில் வாழும் அழகிய குழந்தைவேலாயுதா! திருக்காளத்தியில் வாழும் செங்கல்வராயா! சமராபுரியெனும் திருப்போரூரில் வாழும் ஆறுமுக அரசே!
தணிகாசலனே! சங்கரன் புதல்வா!
கதிர்காமத்து உறை கதிர்வேல் முருகா!
பழநிப் பதி வாழ் பாலகுமாரா!
ஆவினன்குடி வாழ் அழகிய வேலா!
செந்தின்மாமலை உறும் செங்கல்வராயா!
சமராபுரி வாழ் சண்முகத்தரசே!
அடுத்த பகுதியைப் பாடு நண்பா"
(தொடர்ந்து பேசுவார்கள்)
9 comments:
அருமை... அருமை... தொடர்கிறேன்... நன்றி...
தெந்தில்மாமலையில் =செந்தின்மாமலை??? என்ன ஆச்சு உங்களுக்கு? ஆச்சரியமா இருக்கு.
இங்கே எழுத்துப்பிழை இல்லை அம்மா. செந்தில் மாமலை என்பது இலக்கணத்தின் படி செந்தின்மாமலை ஆகிறது என்று நினைக்கிறேன். பாடல்வரிகளில் செந்தின்மாமலை என்று எழுதிவிட்டு விளக்கத்தில் மட்டும் செந்தில்மாமலை என்று எழுதியிருக்கிறேன். அதுவும் தவறு என்றால் திருத்துகிறேன். நான் இலக்கணத்தில் வலிவில்லாதவன்.
இல்லை குமரன், செந்தில் என்பதை தெந்தில் என எழுதி இருந்தீர்கள். அதைத் தான் சுட்டினேன். இப்போத் திருத்திட்டீங்க. நன்றி.:)))))
இல்லைம்மா. இன்னும் அப்படி தான் இருக்கு. தெந்தில்ன்னு. :-( இப்ப மாத்தறேன். நன்றி அம்மா.
மனதிற்கு உவகையூட்டும் அற்புதமான தொடர்..நன்றி குமரன்.
நன்றி செங்கோவி.
செங்கல்வராயா meaning
Where is செங்கல்வராயா God place?
Post a Comment