Tuesday, August 07, 2012

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 3

"கந்தர் சஷ்டி கவசம் நூலுக்குள் செல்லும் முன்னர் அதற்கு முன் இருக்கும் இரண்டு வெண்பாக்களின் பொருளையும் பார்த்தோம். அப்போது ஒவ்வொரு பாட்டாக எடுத்துப் பொருள் சொல்ல முடிந்தது. ஆனால் சஷ்டியை நோக்க என்று தொடங்கும் முழு நூலுக்கும் அப்படி பொருள் சொல்ல இயலாது. ஒவ்வொரு வரியாக எடுத்துக் கொண்டு பொருள் சொல்லலாமா?"


"அதை விட இன்னொரு நல்ல வழி இருக்கிறது நண்பா. ஒவ்வொரு அடியாக எடுத்துக் கொண்டால் பொருள் சில நேரங்களில் தொடர்ச்சியாகச் சொல்ல இயலாமல் போகலாம். அதனால் ஒவ்வொரு பகுதியாக எடுத்துக் கொண்டு பேசலாம். நூலின் ஒவ்வொரு அடியையும் பாடிக் கொண்டே வா. எப்போது ஒரு பகுதி முழுமையடைகிறது; எப்போது நிறுத்த வேண்டும் என்று உனக்குத் தோன்றுகிறதோ அப்போது நிறுத்து. அந்த பகுதி முழுமைக்கும் பொருள் காணலாம்"

"ஆகட்டும். அப்படியே செய்யலாம்.

சஷ்டியை நோக்க சரவண பவனார்
சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி ஆட
மையல் நடம் செய்யும் மயில்வாகனனார்
கையில் வேலால் எனை காக்கவென்று வந்து

"இது ஏன் ஒரு பகுதி என்று உனக்கு தோன்றியது என்று சொல்வாயா?"

"வேலும் மயிலும் துணை"

"அருமை.

ஆமாம். முருகப்பெருமானின் முதன்மை அடையாளங்கள் வேலும் மயிலும். இரண்டையும் இந்தப் பகுதியில், நூலின் தொடக்கமான இந்த அடிகளில் குறித்துவிடுகிறார் அடிகளார்.

அடியாரைக் காக்க அவனையும் விட வேகமாக முந்துவது சேந்தனின் திருக்கைவேல். அடியாருக்கு அருள அவனை விரைவாக அழைத்து வருவது மயில். கம்பத்தில் இளையனார் தோன்றிய போது மயில் தானே அவனை அழைத்துவந்தது. வேலும் மயிலுமே அடியவர்களுக்குத் துணை"

" இன்னுமொரு காரணமும் உண்டு நண்பா.

’குமரன் அடி நெஞ்சே குறி’ என்று இதற்கு முந்தைய குறள் வெண்பாவில் சொன்னார் அல்லவா? அதன் தொடர்ச்சியாக இந்தப் பகுதியில் முருகனின் வரவை நெஞ்சில் குறிப்பதைப் போல் தோன்றுகிறது"

"சரி தான். இந்த பகுதி

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

என்ற குறட்பாவினைப் போல் எனக்குத் தோன்றும்.

எப்படி ‘கற்க’ என்று முதலில் அந்த குறளில் வந்ததோ அதைப் போல் இங்கே ‘சஷ்டியை நோக்க’ என்று வந்தது. இங்கே சஷ்டி என்பது சஷ்டி திதியில் பாடப்படும் இந்த நூலாகிய சஷ்டி கவசத்தைக் குறிக்கும்.

‘வாழ்வில் என்ன செய்ய வேண்டும்’ என்ற கேள்விக்கு விடை சொல்வதைப் போல் குறளாசான் ‘கற்க’ என்ற கட்டளையை இட்டார். அதே கேள்விக்கு இன்னொரு பதிலைப் போல் தேவராய சுவாமிகள் ‘சஷ்டியை நோக்க’ என்ற கட்டளையை இடுகிறார்.

‘நெஞ்சே குறி’ என்று முன்னர் தனது நெஞ்சுக்குச் சொன்னதால் இங்கேயும் இந்த கட்டளை மற்றவர்களுக்கு இல்லை; இந்த நூலைப் பயில்பவர் ஓதுபவர் அனைவரும் தத்தமது நெஞ்சுக்கே இடும் கட்டளை என்று கொள்ள வேண்டும்”

"'என்ன செய்ய வேண்டும்' என்று குறளாசான் சொல்லிவிட்டு 'எப்படி அதைச் செய்ய வேண்டும்' என்ற கேள்விக்கும் விடை சொல்கிறார். அதே போல் இங்கேயும் தேவராய சுவாமிகள் சொல்கிறார் என்று நினைக்கிறேன். சரி தானா?"

"சரி தான் நண்பா. நெஞ்சுக்குச் சொல்லுவதாக 'நெஞ்சே. முருகப்பெருமான் என்னைக் காக்கவென்று வருகிறான் என்பதை நினைவில் நிறுத்திக் கொண்டு சஷ்டி கவசமாகிய இந்த நூலை ஓது' என்று சஷ்டி கவசத்தை எப்படி ஓத வேண்டும் என்றும் சொல்கிறார்"

"மற்ற வரிகளுக்குப் பொருள்?"

"சொல்கிறேன் கேள்.

சரவணப் பொய்கையில் உதித்ததால் முருகப்பெருமானுக்கு சரவணபவன் என்ற திருப்பெயர் இருப்பது உனக்குத் தெரிந்திருக்கும். அந்த சரவணபவனார் சிஷ்டருக்கு உதவுபவன். சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்.

சிஷ்டர் என்றால் அடியவர். சிரேஷ்டர் என்ற வடசொல்லுக்குச் சிறந்தவர், அடியவர் என்று பொருள். அது சிஷ்டர் என்று சிதைந்து பேச்சுவழக்கில் புழங்கும். அடியவர்கள், சிறந்தவர்கள், ஆசிரியர்கள் இவர்களின் வாழ்வுமுறையை, ஆசாரத்தைச் சிஷ்டாசாரம் என்று குறிப்பதும் வழக்கத்தில் இருக்கிறது.

அடியவர்களுக்கு உதவுவது செங்கதிர் வேல். அதனை கையில் ஏந்தியவன் வேலோன்.

அடியவர்களுக்கு உதவுபவன் செங்கதிர் வேலோனாகிய முருகன்.

சிவந்த ஒளியை வீசுவது வேல் என்று கொண்டால் செங்கதிர் என்பது வேலைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். முருகனுக்கு செவ்வேள், சேந்தன் என்ற திருப்பெயர்களும் இருப்பதால் சிவந்த ஒளியை வீசுபவன் திருமுருகன் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

'அடி நெஞ்சே குறி' என்று திருவடிகளை மனத்தில் நிறுத்தும் படி முன்னர் சொன்னதின் தொடர்ச்சியைப் போல் இங்கும் திருப்பாதங்களைச் சொல்கிறார்.

பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாட.

திருப்பாதங்கள் இரண்டிலும் பல அரிய இரத்தின மணிகள் பூட்டிய சதங்கை இசைப்பாடல் பாட.

கிண்கிணி ஆட.

கிண்கிணி என்பது திருப்பாதங்களில் இருக்கும் இன்னொரு ஆபரணம். மாணிக்கப்பரல்கள் இட்டு இனிய ஓசை எழுப்பும் தண்டை. அதுவும் ஆட.

மையல் நடம் செய்யும் மயில்வாகனனார்.

பார்ப்பவர் உள்ளங்களைக் கொள்ளைக் கொள்ளும் நடனத்தை ஆடும் திருமுருகன். அவன் மயிலை வாகனமாக கொண்டிருப்பதால் அவன் மயில்வாகனன்.

இப்படி சதங்கை கீதம் பாடவும் கிண்கிணி ஆடவும் மையல் நடம் செய்பவன் திருமுருகன் என்று பொருள் கொண்டால் அவன் ஆடிக் கொண்டு வரும் அழகான தோற்றத்தைத் தியானிக்கலாம்.

சதங்கை பாடவும் கிண்கிணி ஆடவும் மையல் நடஞ்செய்வது மயில் என்று பொருள் கொண்டால் ஆடிவரும் மயிலில் மயில்வாகனன் ஏறிவருவதை தியானிக்கலாம்.

சிஷ்டரைக் காக்கும் அதே திருவேலைக் கையில் ஏந்தி அடியவர்களின் ஒருவனான என்னைக் காக்க முருகன் வருகிறான் என்று எண்ணி சஷ்டி கவசத்தை ஓத வேண்டும்"

"ஆக

சரவணபவனார்
சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாட
கிண்கிணி ஆட
மையல் நடம் செயும் மயில் வாகனனார்
கையில் வேலால் எனைக் காக்க என்று வந்தான்
(என்று மனத்தில் குறித்து)
சஷ்டியை நோக்க

என்று பொருள் கொள்ள வேண்டும். சரியா?"

"சரி தான்"

(தொடர்ந்து பேசுவார்கள்)

9 comments:

Kavinaya August 07, 2012 9:40 PM  

'வேலும் மயிலும் துணை'! அருமை!

எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை. அழகான விளக்கத்திற்கு நன்றி குமரன்!

திண்டுக்கல் தனபாலன் August 08, 2012 2:53 AM  

சிறப்பான பகிர்வு... பாராட்டுக்கள்...

விரிவான விளக்கம் அருமை...

நன்றி… தொடர வாழ்த்துக்கள்...

S.Muruganandam August 08, 2012 9:04 AM  

அருமையான விளக்கம் குமரன்

குமரன் (Kumaran) August 08, 2012 9:26 PM  

நன்றி கவிநயா அக்கா, தனபாலன் ஐயா, கைலாஷி ஐயா.

VSK August 13, 2012 10:38 AM  

2 - 3 வாரங்களாக ஊரில் இல்லை. அதனால் உடனே பின்னூட்டம் இட இயலவில்லை. மன்னிக்கவும்.

'சஷ்டியை நோக்க' எனும் வரிக்குச் சொல்லியிருக்கும் பொருள் இனிமை என்றாலும், அதன் பொருள் அப்படி இல்லை எனக் கருதுகிறேன்.

சஷ்டி விரதம் தொடங்குவோர்க்கு ஒரு ஊக்கமாக இந்த வரியைச் சொல்லியிருக்கிறார் தேவராய ஸ்வாமிகள்.

சஷ்டியை நோற்க என்பதையே சஷ்டியை நோக்க எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சஷ்டியைத் தான் நோற்கும்போது, சிஷ்டருக்கு உதவும் அந்தச் செங்கதிர் வேலோன் எப்படி வருகிறான் [வந்தான்] எனத் தொடங்குகிறார்.

வேலும், மயிலும் விளக்கம் அழகு.

முருகனருள் முன்னிற்கும்.

VSK August 14, 2012 12:47 PM  

"சஷ்டியை நோ[க்]ற்க .....
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாட, கிண்கிணி ஆட
மையல் நடம் செய்யும் மயில்வாகனனார், சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன், சரவண பவனார் கையில் வேலால்
எனை காக்கவென்று வந்து”.....

குமரன் (Kumaran) August 15, 2012 5:17 PM  

நல்ல விளக்கம் எஸ்.கே. ஐயா. நன்றி.

Geetha Sambasivam September 17, 2012 2:36 AM  

விளக்கத்தின் மேலதிக விளக்கம் அருமை. நன்றி.

Geetha Sambasivam September 17, 2012 2:36 AM  

தொடர

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP