Sunday, August 19, 2012

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 5

"பன்னிரு திருக்கண்களும் அழகுடன் விளங்க பன்னிரு திருக்கைகளிலும் பன்னிரு படைக்கலன்களை ஏந்தி விரைந்து என்னை காக்க வரும் என்னை ஆளும் இளையவன். ஆகா. என்ன ஒரு அழகான திருத்தோற்றம்?!


பன்னிரு திருக்கரங்களிலும் ஏந்தியிருக்கும் ஆயுதங்களைப் பற்றி சுவாமிகள் ஏதேனும் சொல்லியிருக்கிறாரா நண்பா?"

"ஆமாம். அறுபடைவீட்டுக் கவசங்களில் ஐந்தாவது சஷ்டி கவசமாகிய குன்று தோறாடும் குமரனைப் போற்றும் கவசத்தில் சுவாமிகள் இந்த ஆயுதங்களைப் பற்றி சொல்லியிருக்கிறார்.

வேலாயுதம், சூலாயுதம், சங்கு, சக்கராயுதம், வில், அம்பு, வாள், மழு, குடை, தண்டாயுதம், சந்திராயுதம், வல்லாயுதம் என்னும் பன்னிரு ஆயுதங்களையும் முருகன் தனது திருக்கரங்களில் ஏந்தியிருப்பதாகச் சொல்கிறார்"

"அருமை. அருமை"

"அடுத்த பகுதியைப் பாடு நண்பா"

ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளியையும்

நிலை பெற்று என் முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் தீயும் தனியொளி ஒவ்வும்
குண்டலியாம் சிவ குகன் தினம் வருக"

இந்த பகுதி முழுக்க முழுக்க மந்திரங்களைப் பற்றி பேசும் பகுதி.

ஐம், க்லீம், சௌம் என்னும் மந்திர ஒலிகளைப் பற்றியும் ஓம்காரத்தைப் பற்றியும் சுவாமிகள் கூறுகிறார்.

ஐம், க்லீம், சௌம் என்பவை பீஜாக்ஷரங்கள் என்று வடமொழியில் கூறுவார்கள். மந்திரங்களின் வித்தாக விளங்கும் ஒலிகள். இம்மூன்றிலும் ஐம் என்பதை உயிர் என்றே குறிக்கும் வழக்கமும் இருக்கிறது.

ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்.

ஐம் க்லீம் சௌம் என்று முறையே சொல்லும் மந்திரமும்.

உய் ஒளி சௌவும் உயிரையும் கிலியும்.

உய்வதற்கு வழி தரும் ஒளி மிகுந்த சௌம் ஐம் க்லீம் என்ற வகையில் சொல்லும் மந்திரமும்.

கிலியும் சௌவும் கிளர் ஒளி ஐயும்.

ஒளி கூடி விளங்கும் க்லீம் சௌம் ஐம் என்ற வகையில் சொல்லும் மந்திரமும்.

நிலை பெற்று என் முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் தீயும்.

தினமும் என் முன்னே ஒளியுடன் திகழும் ஆறுமுகங்கள் கொண்ட தீயைப் போன்றவனும்.

தனி ஒளி ஒவ்வும்.

தனித்து ஒளிவீசும் ஓம்காரமும்.

குண்டலியாம் சிவ குகன் தினம் வருக.

மூலாதாரம் என்னும் சக்கரத்தில் வீற்றிருக்கும் குண்டலினி சக்தியின் வடிவமாகிய சிவகுமாரன் குகன் தினந்தோறும் வருக"

"மடமடவென்று சொல்லிக் கொண்டே சென்றுவிட்டாயே நண்பா. விரிவான பொருளையும் சொல்வாய்"

"மந்திரங்களின் பொருளை நான் அறியேன் நண்பா. அவற்றை குருவிடம் கேட்டு உணர்ந்து ஓதுவதே முன்னோர் வகுத்த முறை. இவை மந்திரங்கள் என்று மட்டும் உணர்ந்து கொண்டு சஷ்டி கவசம் ஓதும் போது இவ்வரிகளைச் சொல்லி வந்தால் போதும். அவற்றின் பயன் கிடைக்கும். மனக்குகையில் வாழும் குறிஞ்சிக்கிழவன் குகனும் முன் வந்து காப்பான்"

(தொடர்ந்து பேசுவார்கள்)

Sunday, August 12, 2012

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 4


"மையல் நடம் செய்து கொண்டே நம்மைக் காக்க வரும் முருகனை வரவேற்கும் வரிகளைப் பாடு நண்பா"


"வர வர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரஹணபவனார் சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோ நம
நிபவ சரஹண நிறநிற நிறென
வசர ஹணப வருக வருக
அசுரர் குடி கெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசாங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க
விரைந்தெனை காக்க வேலோன் வருக

"இந்தப் பகுதியில் இரண்டு இரண்டு அடிகளாகவோ நான்கு நான்கு அடிகளாகவோ எடுத்துக் கொண்டு பொருள் சொல்லும் வகையில் வரிகள் அமைந்திருக்கின்றன"

"ஆமாம். வடிவேலும் மயிலும் துணை என்பதை மீண்டும் வலியுறுத்துவதைப் போல வேலாயுதனார் என்றும் மயிலோன் என்றும் முருகனை முதல் இரு அடிகள் விளிக்கின்றன"

"ஆமாம்.

வர வர என்பதும் வருக வருக என்பதும் ஒருவரை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் போது புழங்கும் அடுக்குத் தொடர்கள்.

வேல் என்னும் ஆயுதத்தை அடியாரைக் காக்கும் பொருட்டு ஏந்தியிருப்பதால் முருகனை வேலாயுதனார் என்று அழைத்தார் அடிகளார்.

அவன் ஆடி வரும் மயில் மேல் ஏறி வருவதால் மயிலோன் என்றார்.

வர வர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக"

"அடுத்த இரு வரிகளில் இந்திரன் முருகப்பெருமானைப் போற்றுவதைக் குறிக்கிறாரா?"

"ஆமாம். இந்திரன் மட்டும் இல்லை. இந்திரனைத் தலைவனாகக் கொண்ட தேவர்களும் அவர்கள் காக்கும் திசைகளில் இருக்கும் அனைத்து உயிர்களும் போற்றிப் புகழ வடிவேலவன் வருவதைக் கூறுகிறார்.

கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு என்னும் எட்டுத் திசைகளிலும் இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்னும் எட்டுத் திசைக் காவலர்கள் இருந்து அனைத்து உயிர்களையும் காப்பதாக முன்னோர் நூல்கள் சொல்லும். இவர்களை அஷ்டதிக்பாலகர் என்று வடனூல்கள் அழைக்கும்.

அப்படி இந்திரன் முதலாக உள்ள எண் திசைக் காவலர்களும் அவர்களால் காக்கப்படும் உயிர்களும் போற்றிக் கொண்டாட மந்திர வடிவேல் ஏந்தியவன் வருக வருக"

"மந்திர வடிவேல் என்று தானே சொல்கிறார். ஏந்தியவன் என்பதை இங்கே நாமாக எடுத்துக் கொள்ள வேண்டுமா?"

"உடைமையின் பெயரை உரியவர் மேல் ஏற்றிக் கூறுவது உலக வழக்கு என்பதால் இங்கே வேலவனைக் குறித்ததாக எடுத்துக் கொண்டேன். வேலை வரவேற்பதாக எடுத்துக் கொண்டாலும் பொருள் பொருத்தமாகத் தான் இருக்கும்"

"சரி தான். மந்திர வடிவேல் என்பதற்கு என்ன பொருள்?"

"மந்திரங்களில் முதன்மையானது ஓங்கார மந்திரம். ஓங்காரமே வேல்வடிவாய் அமைந்ததால் மந்திரமே வடிவான வேல் என்று பொருள் கொள்ளலாம்.

அழகே வடிவான வேல் என்றும் பொருள் கொள்ளலாம்"

"கொல்லர் உலைக்களத்தில் வடிக்கப்பட்ட வேல் என்றும் பொருள் கொள்ளலாமா?"

"மனிதர் கை வேல் என்றால் அப்படி பொருள் கொள்ளலாம். சிவசக்தியின் உருவான சிவகுமரன் கை வேல் கொல்லர் உலைக்களத்தில் வடிக்கப்படாததால் அந்த பொருள் இங்கே பொருந்தாது"

"சரி தான்.

இந்திரன் முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக

அடுத்த அடிகளுக்குப் பொருள் கூறு"

"ஞான சக்தி வடிவான முருகப்பெருமானின் இருபுறமும் வீற்றிருக்கும் இச்சா சக்தி, கிரியா சக்திகளான திருத்தேவியர் இருவரையும் அடுத்த வரிகளில் நினைத்து அவர்களையும் முருகனுடன் சேர்ந்து வரவேற்கிறார் அடிகளார்.

உலகச் செல்வங்கள் அனைத்திற்கும் தலைவர்களாக எட்டு வசுக்கள் என்னும் தேவர்களைச் சொல்லுவார்கள். அந்த எட்டு வசுக்களின் தலைவன் இந்திரன். அதனால் அவனுக்கு வாசவன் என்று ஒரு பெயர் உண்டு. அவன் மகளாகிய தெய்வயானைப் பிராட்டியாரை மணம் புரிந்தவன் என்பதால் முருகனை ‘வாசவன் மருகா’ என்று விளித்து வரவேற்கிறார்.

குறவர் குலமகளாகிய வள்ளிப் பிராட்டியாரின் நெஞ்சம் நிறை நேசத்தை என்றும் மறவாமல் நினைத்துக் கொண்டே இருப்பதால் 'நேசக் குறமகள் நினைவோன்' என்றார்.

வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக"

"அடுத்த வரிகளுக்கும் பொருள் கூறு நண்பா"

"ஆறுமுகம் கொண்ட ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக

ஆறு திருமுகங்களைக் கொண்ட ஐயனே வருக. திருநீற்றை நெற்றியிலும் உடம்பிலும் அணிந்திடும் வேலவன் தினந்தோறும் வருக.

சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரஹணபவனார் சடுதியில் வருக

சிரம் என்றால் தலை; சென்னி என்றாலும் தலை. சென்னிமலையில் மேல் அமர்ந்திருக்கும் வேலவன் சீக்கிரம் வருக. சரவணப்பொய்கையில் உதித்த சரவணபவன் விரைவில் வருக.

சரஹணபவ என்பது ஷடாக்ஷரம் என்னும் ஆறெழுத்து மந்திரம். அதன் எழுத்துகளை சிறிதே முன்னும் பின்னுமாக மாற்றி உருவேற்றினால் வெவ்வேறு பயன்கள் கிடைக்கும் என்பார்கள் மந்திர நூலோர். அப்படி வெவ்வேறு உருவில் அமையும் ஆறெழுத்து மந்திரங்களையே மந்திர நூலாகிய இந்த நூலின் அடுத்த அடிகளில் அமைத்திருக்கிறார் அடிகளார். அவற்றின் பொருளினை குரு மூலமாக அறிந்து கொள்வதே நலம்.

எனக்கும் அவற்றின் உட்பொருள் ஏதும் தெரியாது. அதனால் அவற்றின் பொருளைச் சொல்லாமல் அடுத்த அடிகளுக்குப் பொருள் கூறுகிறேன்.

ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோ நம
நிபவ சரஹண நிறநிற நிறென
வசர ஹணப வருக வருக
அசுரர் குடி கெடுத்த ஐயா வருக

கெட்டதை இல்லாமல் ஆக்க அதனை அழிக்கலாம்; அல்லது திருத்தி ஆட்கொள்ளலாம். கருணைக் கடலாகிய கந்தன் சூரனின் அசுரர் குடி முழுவதையும் திருத்தி ஆட்கொண்டதால் கெட்டது கெட்டது. அதனால் அசுரர் குடி கெடுத்த ஐயா என்றார்”

"ஆகா"

"என்னை ஆளும் சிவகுமரர்களில் இளையவனான ஐயன் தனது பன்னிரண்டு திருக்கைகளிலும் பன்னிரண்டு ஆயுதங்களையும் பாச அங்குசங்களையும் ஏந்தி அழகாக பரந்து இருக்கும் பன்னிரண்டு திருக்கண்களும் அழகுடன் திகழ விரைவாக எனைக் காக்க வருக.

என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசாங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக"

(தொடர்ந்து பேசுவார்கள்)

Thursday, August 09, 2012

அனைத்தும் நீ!

ஆடிக்கிருத்திகை சிறப்புப் பதிவு.


சுப்பு தாத்தா தன் பேரனுடன் பாடியதை இங்கே கேட்கலாம்! மிக்க நன்றி, தாத்தா மற்றும் Sanchu! :)


ஆடியிலே காவடிகள் எடுத்து வந்தோம் முருகய்யா!
ஆடியாடி உன்னை நாடி ஓடி வந்தோம் முருகய்யா!

ஆடிவெள்ளிக் கிழமையிலே
ஆடும் மனம் அடங்கிடவே!
ஆடிவரும் காவடியில்
ஆறுமுகம் கனிந்திடவே!

(ஆடியிலே)

அரசனும் நீயடா!
ஆண்டியும் நீயடா!
ஆறுதலைத் தந்தருளும்
அழகுமுகம் நீயடா!

கந்தனும் நீயடா!
கடம்பனும் நீயடா!
கனியிதழ் மலர்ந்திழுக்கும்
காந்தனும் நீயடா!

(ஆடியிலே)

கண்மணி நீயடா!
கருணையின் வடிவடா!
கார்த்திகைப் பெண்டிரின்
கவினுறும் சேயடா!

முருகும் நீயடா!
முத்தமிழ் நீயடா!
மூவுல கேற்றிடும்
முதல்வனும் நீயடா!

(ஆடியிலே)


--கவிநயா 

படத்துக்கு நன்றி: http://www.trinethram-divine.com/2012/05/kaavadiyaam-kaavadi-kandhavelan-kaavadi.html

Tuesday, August 07, 2012

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 3

"கந்தர் சஷ்டி கவசம் நூலுக்குள் செல்லும் முன்னர் அதற்கு முன் இருக்கும் இரண்டு வெண்பாக்களின் பொருளையும் பார்த்தோம். அப்போது ஒவ்வொரு பாட்டாக எடுத்துப் பொருள் சொல்ல முடிந்தது. ஆனால் சஷ்டியை நோக்க என்று தொடங்கும் முழு நூலுக்கும் அப்படி பொருள் சொல்ல இயலாது. ஒவ்வொரு வரியாக எடுத்துக் கொண்டு பொருள் சொல்லலாமா?"


"அதை விட இன்னொரு நல்ல வழி இருக்கிறது நண்பா. ஒவ்வொரு அடியாக எடுத்துக் கொண்டால் பொருள் சில நேரங்களில் தொடர்ச்சியாகச் சொல்ல இயலாமல் போகலாம். அதனால் ஒவ்வொரு பகுதியாக எடுத்துக் கொண்டு பேசலாம். நூலின் ஒவ்வொரு அடியையும் பாடிக் கொண்டே வா. எப்போது ஒரு பகுதி முழுமையடைகிறது; எப்போது நிறுத்த வேண்டும் என்று உனக்குத் தோன்றுகிறதோ அப்போது நிறுத்து. அந்த பகுதி முழுமைக்கும் பொருள் காணலாம்"

"ஆகட்டும். அப்படியே செய்யலாம்.

சஷ்டியை நோக்க சரவண பவனார்
சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி ஆட
மையல் நடம் செய்யும் மயில்வாகனனார்
கையில் வேலால் எனை காக்கவென்று வந்து

"இது ஏன் ஒரு பகுதி என்று உனக்கு தோன்றியது என்று சொல்வாயா?"

"வேலும் மயிலும் துணை"

"அருமை.

ஆமாம். முருகப்பெருமானின் முதன்மை அடையாளங்கள் வேலும் மயிலும். இரண்டையும் இந்தப் பகுதியில், நூலின் தொடக்கமான இந்த அடிகளில் குறித்துவிடுகிறார் அடிகளார்.

அடியாரைக் காக்க அவனையும் விட வேகமாக முந்துவது சேந்தனின் திருக்கைவேல். அடியாருக்கு அருள அவனை விரைவாக அழைத்து வருவது மயில். கம்பத்தில் இளையனார் தோன்றிய போது மயில் தானே அவனை அழைத்துவந்தது. வேலும் மயிலுமே அடியவர்களுக்குத் துணை"

" இன்னுமொரு காரணமும் உண்டு நண்பா.

’குமரன் அடி நெஞ்சே குறி’ என்று இதற்கு முந்தைய குறள் வெண்பாவில் சொன்னார் அல்லவா? அதன் தொடர்ச்சியாக இந்தப் பகுதியில் முருகனின் வரவை நெஞ்சில் குறிப்பதைப் போல் தோன்றுகிறது"

"சரி தான். இந்த பகுதி

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

என்ற குறட்பாவினைப் போல் எனக்குத் தோன்றும்.

எப்படி ‘கற்க’ என்று முதலில் அந்த குறளில் வந்ததோ அதைப் போல் இங்கே ‘சஷ்டியை நோக்க’ என்று வந்தது. இங்கே சஷ்டி என்பது சஷ்டி திதியில் பாடப்படும் இந்த நூலாகிய சஷ்டி கவசத்தைக் குறிக்கும்.

‘வாழ்வில் என்ன செய்ய வேண்டும்’ என்ற கேள்விக்கு விடை சொல்வதைப் போல் குறளாசான் ‘கற்க’ என்ற கட்டளையை இட்டார். அதே கேள்விக்கு இன்னொரு பதிலைப் போல் தேவராய சுவாமிகள் ‘சஷ்டியை நோக்க’ என்ற கட்டளையை இடுகிறார்.

‘நெஞ்சே குறி’ என்று முன்னர் தனது நெஞ்சுக்குச் சொன்னதால் இங்கேயும் இந்த கட்டளை மற்றவர்களுக்கு இல்லை; இந்த நூலைப் பயில்பவர் ஓதுபவர் அனைவரும் தத்தமது நெஞ்சுக்கே இடும் கட்டளை என்று கொள்ள வேண்டும்”

"'என்ன செய்ய வேண்டும்' என்று குறளாசான் சொல்லிவிட்டு 'எப்படி அதைச் செய்ய வேண்டும்' என்ற கேள்விக்கும் விடை சொல்கிறார். அதே போல் இங்கேயும் தேவராய சுவாமிகள் சொல்கிறார் என்று நினைக்கிறேன். சரி தானா?"

"சரி தான் நண்பா. நெஞ்சுக்குச் சொல்லுவதாக 'நெஞ்சே. முருகப்பெருமான் என்னைக் காக்கவென்று வருகிறான் என்பதை நினைவில் நிறுத்திக் கொண்டு சஷ்டி கவசமாகிய இந்த நூலை ஓது' என்று சஷ்டி கவசத்தை எப்படி ஓத வேண்டும் என்றும் சொல்கிறார்"

"மற்ற வரிகளுக்குப் பொருள்?"

"சொல்கிறேன் கேள்.

சரவணப் பொய்கையில் உதித்ததால் முருகப்பெருமானுக்கு சரவணபவன் என்ற திருப்பெயர் இருப்பது உனக்குத் தெரிந்திருக்கும். அந்த சரவணபவனார் சிஷ்டருக்கு உதவுபவன். சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்.

சிஷ்டர் என்றால் அடியவர். சிரேஷ்டர் என்ற வடசொல்லுக்குச் சிறந்தவர், அடியவர் என்று பொருள். அது சிஷ்டர் என்று சிதைந்து பேச்சுவழக்கில் புழங்கும். அடியவர்கள், சிறந்தவர்கள், ஆசிரியர்கள் இவர்களின் வாழ்வுமுறையை, ஆசாரத்தைச் சிஷ்டாசாரம் என்று குறிப்பதும் வழக்கத்தில் இருக்கிறது.

அடியவர்களுக்கு உதவுவது செங்கதிர் வேல். அதனை கையில் ஏந்தியவன் வேலோன்.

அடியவர்களுக்கு உதவுபவன் செங்கதிர் வேலோனாகிய முருகன்.

சிவந்த ஒளியை வீசுவது வேல் என்று கொண்டால் செங்கதிர் என்பது வேலைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். முருகனுக்கு செவ்வேள், சேந்தன் என்ற திருப்பெயர்களும் இருப்பதால் சிவந்த ஒளியை வீசுபவன் திருமுருகன் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

'அடி நெஞ்சே குறி' என்று திருவடிகளை மனத்தில் நிறுத்தும் படி முன்னர் சொன்னதின் தொடர்ச்சியைப் போல் இங்கும் திருப்பாதங்களைச் சொல்கிறார்.

பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாட.

திருப்பாதங்கள் இரண்டிலும் பல அரிய இரத்தின மணிகள் பூட்டிய சதங்கை இசைப்பாடல் பாட.

கிண்கிணி ஆட.

கிண்கிணி என்பது திருப்பாதங்களில் இருக்கும் இன்னொரு ஆபரணம். மாணிக்கப்பரல்கள் இட்டு இனிய ஓசை எழுப்பும் தண்டை. அதுவும் ஆட.

மையல் நடம் செய்யும் மயில்வாகனனார்.

பார்ப்பவர் உள்ளங்களைக் கொள்ளைக் கொள்ளும் நடனத்தை ஆடும் திருமுருகன். அவன் மயிலை வாகனமாக கொண்டிருப்பதால் அவன் மயில்வாகனன்.

இப்படி சதங்கை கீதம் பாடவும் கிண்கிணி ஆடவும் மையல் நடம் செய்பவன் திருமுருகன் என்று பொருள் கொண்டால் அவன் ஆடிக் கொண்டு வரும் அழகான தோற்றத்தைத் தியானிக்கலாம்.

சதங்கை பாடவும் கிண்கிணி ஆடவும் மையல் நடஞ்செய்வது மயில் என்று பொருள் கொண்டால் ஆடிவரும் மயிலில் மயில்வாகனன் ஏறிவருவதை தியானிக்கலாம்.

சிஷ்டரைக் காக்கும் அதே திருவேலைக் கையில் ஏந்தி அடியவர்களின் ஒருவனான என்னைக் காக்க முருகன் வருகிறான் என்று எண்ணி சஷ்டி கவசத்தை ஓத வேண்டும்"

"ஆக

சரவணபவனார்
சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாட
கிண்கிணி ஆட
மையல் நடம் செயும் மயில் வாகனனார்
கையில் வேலால் எனைக் காக்க என்று வந்தான்
(என்று மனத்தில் குறித்து)
சஷ்டியை நோக்க

என்று பொருள் கொள்ள வேண்டும். சரியா?"

"சரி தான்"

(தொடர்ந்து பேசுவார்கள்)

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP