Friday, July 20, 2012

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 1

" சங்கரநாராயணா. திருமுறைப்பாடல்களின் அமைப்பை நீ கவனித்திருக்கிறாயா?"

"எந்த அமைப்புமுறையைக் குறிப்பிடுகிறாய் என்று புரியவில்லையே இராகவா!"

"அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்னும் மூவர் முதலிகள் பாடிய தீந்தமிழ் பாடல்களுக்குத் தேவாரம் என்ற திருப்பெயர் வழங்குவதற்கு முன் திருப்பதியம் என்ற திருப்பெயர் வழங்கியிருக்கிறது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியமுடிகிறது. இன்றைக்கு அதே பெயரை திருப்பதிகம் என்று சொல்கிறோம். இத்திருப்பெயரின் காரணம் உனக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்"

"தெரியும் இராகவா. மூவர் முதலிகள் ஒவ்வொரு திருத்தலங்க ளிலும் பாடிய பாடல்களைத் தொகுக்கும் போது பத்து பத்து பாடல்களாகத் தொகுத்திருக்கிறார்கள். அதனால் அவற்றை திருப்பதிகங்கள் என்று அழைக்கிறார்கள்"

"ஆமாம். அப்படி பத்து பத்து பாடல்களாக வரும் போது கடைசி பாடலில் இந்த பதிகத்தைப் பாடி இறைவனை வணங்கினால் என்ன என்ன பயன் விளையும் என்றும் பாடியிருக்கிறார்கள்"

"ஆமாம். வடமொழியிலும் அந்த வழக்கம் உண்டு. துதிப்பாடல்களின் இறுதிப் பாடல் அந்தப் பாடல்களைப் பாடிப் பரவுவதால் கிடைக்கும் பயன்களைச் சொல்லும். அதனைப் பலச்ருதி என்று அழைப்பார்கள்"

"அப்படி பதிகங்களின் இறுதியில் பயன்கூறும் பாடலைப் பாடுவது துதிப்பாடல்களின் அமைப்பு முறையாக இருக்கிறது"

"அருளிச்செயல்களாம் ஆழ்வார்ப் பாசுரங்களிலும் இந்த அமைப்பைப் பார்க்க முடிகிறது இராகவா"

"இந்த கந்தர் சஷ்டி கவசத்திலும் அந்த அமைப்பைப் பார்க்கலாம் நாராயணா. நூலின் இறுதிப்பகுதியில் மந்திர நூலான இதனை முப்பத்தாறு முறை உருவேற்றி திருநீறு பூசினால் என்ன என்ன பயன்கள் எல்லாம் விளையும் என்று தேவராய சுவாமிகள் கூறுகிறார்.

அப்படி வழக்கத்தை மாற்றாமல் பயன்களை நூலின் இறுதிப்பகுதியில் சொன்னாலும் புது வழக்கமாக நூலின் தொடக்கத்திலும் பயனைக் கூறும் ஒரு வெண்பாவை பாடியிருக்கிறார்"

"நீ சொல்வது புரிகிறது இராகவா. துதிப்போர்க்கு வல்வினை போம் என்று தொடங்கும் வெண்பாவினைத் தானே சொல்கிறாய்.

அது புது வழக்கமில்லை இராகவா. ஆழ்வார் பாசுரங்களின் தொடக்கத்தில் நூலையும் நூல் இயற்றியவரையும் அதாவது ஆழ்வாரையும் அவர்கள் ஊரையும் புகழும் வெண்பாக்கள் பிற்காலத்தவர் இயற்றி அதனை ஆழ்வார் பாசுரங்களைப் பாடுவதற்கு முன்னர் பாடும் வழக்கம் ஒன்று இருக்கிறது. அந்த வெண்பாக்களை தனியன்கள் என்று சொல்வார்கள்.

நீ கூட திருப்பாவைக்குப் பொருள் சொல்லும் போது அப்படி சில தனியன்களுக்கும் பொருள் சொல்லியிருக்கிறாய்.

எடுத்துக்காட்டாக இந்த தனியனை எடுத்துக் கொள்ளலாம்.

பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
வேதம் அனைத்திற்கும் வித்தாகும் - கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு"

"ஆனால் தனியன்களுக்கும் சஷ்டி கவசத்தின் தொடக்கத்தில் வரும் வெண்பாவிற்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது நண்பா. தனியன்கள் நீ சொன்னதைப் போல் நூலையோ ஆசிரியரையோ ஊரையோ புகழும் போது இந்த வெண்பா கந்தர் சஷ்டி கவசம் தனை துதிப்போர்க்கு என்ன என்ன பயன் விளையும் என்று கூறுகிறது. இறுதியில் மட்டுமே ஆழ்வார் பாசுரங்களும் பயன்கூறு பாடல்களைப் பாடுகின்றன. இங்கே தொடக்கத்திலும் பாடுகிறார். அதனால் இதனை புதுமை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்"

"நீ சொல்வதும் சரி தான். சரி. இப்போது இந்தப் பாடலின் பொருளைக் கூறு"

"பொருள் சொல்வதற்கு முன் அதனை ஒரு முறை பாடு சங்கரா"

"துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்து - கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலர் அருள் கந்தர்
சஷ்டி கவசந்தனை"

"இந்த வெண்பாவை உரைநடையாகச் சொல்வதென்றால் எப்படி சொல்வாய் நண்பா?"

"நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசம் தனைத் துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம் போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்; நிஷ்டையும் கைகூடும்"

"அருமை. இப்போது பொருள் புரிந்திருக்குமே"

"பொருள் புரிகிறது இராகவா. ஆனாலும் சில சொற்களுக்கு இன்னும் விளக்கம் சொல்லலாம் போல் தோன்றுகிறதே. எடுத்துக்காட்டாக முதல் சொல்லான நிமலர் யாரைக் குறிக்கிறது?"

"உனக்குப் புரிவதை சொல் நண்பா. மேலும் ஏதேனும் சொல்ல வேண்டும் என்றால் நான் சொல்கிறேன்"

"கந்தர் என்பது முருகப்பெருமானின் திருப்பெயர் என்று தெரியும். அந்த கந்தனை அருளும் நிமலர் என்பதால் அங்கே முருகப்பெருமானைத் தோற்றுவித்த சிவபெருமான் என்று புரிந்து கொள்கிறேன். சரி தானா?"

"சரி தான் நண்பா. மலம் என்ற வடசொல் குற்றம் என்ற பொருளைத் தரும். நிமலர் என்றால் குற்றமற்றவர், குறையொன்றுமில்லாதவர் என்று பொருள் தரும். இங்கே அது சிவபரம்பொருளைக் குறித்து நிற்கிறது.

கந்தன் என்ற திருப்பெயருக்கும் பொருள் விளக்கம் உண்டு. சங்க காலத்தில் கந்து என்ற உருவில் இறைவனை வழிபட்டார்கள். அதிலிருந்து கந்தன் என்ற திருப்பெயர் வந்ததாகக் கொள்ளலாம். ஸ்கந்தன் என்ற வடசொல் தமிழில் கந்தன் என்று வழங்கப்படுகிறது என்று பெரும்பான்மையோர் எடுத்துக் கொள்ளும் பொருளில் பார்த்தால் கந்தன் என்பதற்கு இணைக்கப்பட்டவன் என்று பொருள்"

"இணைக்கப்பட்டவனா? அந்த பெயர் எப்படி முருகனுக்குப் பொருத்தம்?"

"ஆறு குழந்தைகளாக சரவணப் பொய்கைக் கரையில் விளையாடிக் கொண்டிருந்தவனை உமையன்னை வாரி அணைத்த போது ஆறுருவும் ஓருருவாக இணைந்ததால் ஆறுமுகனுக்கு ஸ்கந்தன் என்ற பெயர் வந்ததாக கந்த புராணமும் பிற நூல்களும் கூறும் நண்பா."

"கந்தம் என்றால் நறுமணம், சந்தனம் என்றெல்லாம் கூட பொருள் உண்டல்லவா? நறுமணம் மிக்கவன், சந்தனக் குழம்பைப் பூசியவன் என்ற பொருள்களை எல்லாம் கூட இந்தப் பெயருக்குச் சொல்லலாம் இல்லையா?"

"ஆமாம். சொல்லலாம். ஆனால் அவை முதன்மைப் பொருள்கள் இல்லை"

"ஆகட்டும். நிமலரான சிவபெருமான் அருளும் கந்தனாகிய முருகப்பெருமான் மேல் இயற்றப்பட்ட சஷ்டி கவசம் என்ற நூல் இந்த நூல். செய்யுளின் கடைசி அடிக்குப் பொருள் சரி தானா?"

"சரி தான்.

உடலைக் காக்க அணிவது கவசம். இந்த நூலும் உடலைக் காக்க இறையருளை வேண்டுவதால் இந்த நூலுக்கும் கவசம் என்ற பெயர் வந்தது.

ஓவ்வொரு நாளும் இந்த கவசத்தைச் சொல்லி உகந்து திருநீறு அணியலாம். சஷ்டி திதியில் ஓதினால் இன்னும் பலமடங்கு பயன் உண்டு. அதனால் இதற்கு சஷ்டி திதியில் சொல்லும் கவசம் என்ற பொருளில் சஷ்டி கவசம் என்ற பெயர் வந்தது"

"இப்படி ஒவ்வொரு சொல்லாக விளக்கிச் சொல்வதற்கு நன்றி இராகவா. இந்த வெண்பாவின் மற்ற அடிகளுக்கும் இப்படியே பொருள் சொல்"

"இந்த கந்தர் சஷ்டி கவசத்தை துதிப்போர்க்கும் நெஞ்சில் பதிப்போர்க்கும் என்ன என்ன பயன் விளையும் என்பதை மற்ற அடிகள் சொல்கின்றன.

துதிப்போர்க்கு வலிய வினைகள் போகும். பல பிறவிகளாகச் செய்த செயல்களின் பயன்களை இப்பிறவியிலும் இனி வரும் பிறவிகளிலும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். தீவினைகள் துன்பமாகவும் நல்வினைகள் இன்பமாகவும் மாறி மாறிப் பயன் தந்து கொண்டிருக்கின்றன.

இந்நூலைத் துதிப்போர்க்கு தீவினைப் பயன்களான துன்பங்கள் போகும் என்பதை வல்வினை போம் துன்பம் போம் என்று தெளிவாக எடுத்துச் சொல்கிறார் தேவராய சுவாமிகள்.

மீண்டும் மீண்டும் துதித்து இப்பனுவலை நெஞ்சில் பதிப்போர்க்கு நல்வினைப் பயன்களான இன்பமும் செல்வமும் பலித்து பயன் தந்து ஆல் போல் தழைத்து அருகு போல் வேர் ஊன்றி பல தலைமுறைகளாக ஓங்கி நிற்கும்.

இங்கே செல்வம் என்று சொன்னது இம்மையில் வேண்டும் பொருட்செல்வம் மட்டும் இல்லை; மறுமைக்கு வேண்டிய அருட்செல்வமும் தான்.

அந்த அருட்செல்வம் பலித்து கதித்து ஓங்கும் ஒரு வழி இறைவன் திருவடிகளிலேயே மனம் நின்று கிடைக்கும் ஆழ்ந்த நிஷ்டை தான். நெஞ்சில் பதிப்பவர்களுக்கு அந்த நிஷ்டையும் எளிதாகக் கை கூடும்"

"அடடா. இம்மை மறுமைப் பயன்களை அனைத்தும் தரும் பனுவலாக அல்லவா சஷ்டி கவசம் இருக்கிறது. மனம், மொழி, மெய்யாலே உந்தனைத் துதிக்க என்று அருளாளர்கள் சொன்னதை போல் இப்பனுவலை ஓதினால் இப்பயன்கள் எல்லாமே கிட்டும் கிட்டும்"

"நண்பா. இன்னும் நுண்ணிய பொருளைச் சொல்லாமல் சொல்லிவிட்டாயே. ஆமாம். மனம், மொழி, மெய் என்னும் மூன்று கரணங்களையும் இந்த வெண்பாவில் குறிக்கிறார் சுவாமிகள்.

துதிப்பது வாயால் செய்யும் செயல். அங்கே மொழியைக் குறித்தார்.

நெஞ்சில் பதிப்பது மனத்தால் செய்யும் செயல்.

அனைத்துப் புலன்களையும் அடக்கி நிஷ்டையில் அமர்வது உடலால் செய்யும் செயல். அங்கே மெய்யைக் குறித்தார்.

ஆக மனம், மொழி, மெய் என்னும் முக்கரணங்களாலும் ஒன்றி வழிபட இப்பயன்கள் கிட்டும் என்பது அவர் சொல்லும் செய்தி"

தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி
மனத்தினால் சிந்திக்க

என்று கோதை சொன்னதைப் போல் இருக்கிறது இராகவா"



“புன்னகை மட்டும் தான் இதற்கு பதிலா இராகவா?

சரி தான். இன்னும் வேறு பொருள்களும் இந்த வெண்பாவில் இருக்கின்றனவா?"

"இதற்கு மேலும் ஆழ்ந்த பொருள் இருக்கலாம் நண்பா. இறையருளில் ஆழங்காட்பட்டவர்களிடம் தான் கேட்டு உணர்ந்து கொள்ள வேண்டும்"

"அப்படியென்றால் அடுத்த வெண்பாவிற்குச் செல்லலாம் இராகவா"

(தொடர்ந்து பேசுவார்கள்)



34 comments:

சீனு July 20, 2012 10:21 AM  

அருமை...

திண்டுக்கல் தனபாலன் July 20, 2012 11:00 AM  

சிறப்பான பதிவு...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
பகிர்வுக்கு நன்றி...

Lalitha Mittal July 20, 2012 12:24 PM  

நான் உணர்வதை ஒரு பின்னூட்டத்தில் அடைக்கமுடியலை!நன்றி!



ஒரு கட்டுரையில் "ஸ்கந்தன்" என்றால் "துள்ளித் தெறித்து வந்தவன்"
(பரமனின் நுதல் கண்ணிலிருந்து நெருப்புப் பொறியாய்த் தெறித்து வந்தவன் ) என்று படித்தது நினைவுக்கு வந்தது.

குமரன் (Kumaran) July 21, 2012 11:42 AM  

நன்றி சீனு & தனபாலன்.

நன்றி லலிதாம்மா.

ஸ்கந்தன் என்பதற்கு இன்னும் நிறைய பொருள் இருக்கிறது அம்மா. நீங்கள் சொன்ன பொருளும் உண்டு.

வல்லிசிம்ஹன் July 21, 2012 7:31 PM  

அன்பு குமரன், காலையில் கண்விழித்ததும் தொலைக்காட்சியில் கந்தசஷ்டிகவசம் பார்ப்பதும் சொல்வதும் வழக்கம்.
இன்று பாக்கியமாக இணையத்திலேயெ வந்துவிட்டான்.பொருள் அறிந்து சொல்வது இன்னும் அருமை. மனம் நிறைகிறது அப்பா.

cheena (சீனா) July 21, 2012 7:59 PM  

அன்பின் குமரன்

அருமையான துவக்கம் - நல்லதொரு செயல் - ஒரு முறை படித்தேன் - மீண்டும் படித்து இரு பகுதிகளுக்கும் கருத்து சொல்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Geetha Sambasivam July 21, 2012 8:29 PM  

ஸ்கந்தனின் பொருள் அனைத்தும் அருமை. பின்னணியில் கவசத்தைக் கேட்டுக்கொண்டே படித்தேன்.நல்ல துவக்கம். மேலும் சிறப்பாகவும், ஆழமான நுண்ணிய பொருளை உணர்ந்து சொல்லவும் முன் கூட்டிய வாழ்த்துகள்.

சிவபாலன் July 22, 2012 10:46 AM  

நல்ல பதிவு! வாத்துக்கள் குமரன்!

பதிவுக்கு நன்றி!

சிவபாலன், சென்னை.

குமரன் (Kumaran) July 22, 2012 12:02 PM  

நன்றி வல்லியம்மா, சீனா ஐயா, கீதாம்மா! தங்கள் ஆசிகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.

குமரன் (Kumaran) July 22, 2012 12:02 PM  

வாங்க சிவபாலன். நல்லா இருக்கீங்களா? நன்றிகள்.

kaialavuman July 23, 2012 3:10 AM  

’நிமலர்’ விளக்கம் அருமை.

இந்த கந்தர் சஷ்டி கவசத்தை’ அருளிய தேவராய ஸ்வாமிகளும் நிமலர் தான்....

anonymous July 23, 2012 11:21 AM  

அந்தாதி போல், சொற்கள் முன்னும் பின்னும், ஒட்டி ஒட்டி அமைந்த கவசம்!
------------------

நிமலர் அருள்..
கந்தர் சட்டிக் கவசம் தனை..

துதிப்போர்க்கு வல்வினை போம்!
துன்பம் போம் நெஞ்சில்!

-நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்!

-கதித்து ஓங்கும் நிட்டையும் கைகூடும்!

-கைகூடும் நிமலர் அருள்!

anonymous July 23, 2012 11:33 AM  

துன்பம் எங்கே இருக்கு?
= தெருவிலா? வீட்டிலா? Room-லயா?
= துன்பம் இருக்கும் இடம் = நெஞ்சம்!
அதான் துன்பம் போம்- நெஞ்சில்!

துன்பம் எதனால் வருது?
= வினையால் வருது
= நாம் செய் வினை/ செயப்பாட்டு வினை
அதான் வல்வினை போம்!

வினை போனா, துன்பம் போயீரும்
அதான்
1) வல்வினை போம்!
2) துன்பம் போம் நெஞ்சில்!
----------------------------

முன் அடியில் உள்ள "நெஞ்சில்"-ஐ, எடுத்து அடுத்த அடியிலும் வைங்க!

அடி எங்கே பட்டுச்சோ, அங்கே தானே மருந்தும் பூசணும்?
நெஞ்சில் அடி! அதனால் நெஞ்சில் பதித்து...

anonymous July 23, 2012 11:41 AM  

-நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்!

செல்வம் இருந்தாலும் இன்பம் வந்துறாது!
அந்தச் செல்வம் "பலிக்கணும்";

செல்வம் எவ்ளோ இருக்கு; கூடவே நோயும் இருக்கு! இன்பமா?
செல்வம் பலிக்கணும்! அப்போ தான் இன்பம்!

செல்வம் பலிச்சி, ரெண்டே நாள்-ல்ல மறைஞ்சிட்டா?
அதான் செல்வம் பலித்து + கதித்து ஓங்கும்!
----------------------

-கதித்து ஓங்கும் நிட்டையும் கைகூடும்!

நிஷ்டை -ன்னு பல சாமியார்கள் செய்வதைப் பார்க்கிறோம்! அதெல்லாம் நித்ய நிஷ்டை! "கதித்து ஓங்கும் நிட்டை" அல்ல!

நிட்டை = மனசுல இருக்கு! ஒடம்புல அல்ல!
அவனே அவனே என்னும் அன்பு.. அது உள்ளுக்குள்ளேயே "கதித்து", நாளாக நாளாக "ஓங்கும்"

கதித்து ஓங்கும் நிட்டை - கைகூடும்!

anonymous July 23, 2012 11:53 AM  

-கைகூடும் நிமலர் அருள்!

எது கை கூடணும்?
= வல்வினை போமா?
= துன்பம் போம் நெஞ்சிலா?
= செல்வம் பலித்துக் கதித்து ஓங்கலா?
= கதித்து ஓங்கும் நிட்டையா?

இதெல்லாம் கைகூடுதா, கூடலையா -ன்னு கவலை இல்லை! துன்பம் நெஞ்சில் இருந்தா, இருந்துக்கிட்டு போவட்டும்!

= நிமலர் அருள் = முருகன் அருள் = இது மட்டும் கை கூடினாப் போதும்!

-கைகூடும் நிமலர் அருள்!
-கைகூடும் நிமலர் அருள்!
-கைகூடும் நிமலர் அருள்!

காதல் முருகா...எனக்கு நீயே கை கூடு!

முருகனுக்கு என்னை விதியென்ற இம்மாற்றம்
நாம் கடவா வண்ணமே நல்கு!

anonymous July 23, 2012 12:03 PM  

அவனைத் துதிச்சாத் தான் அருள்வானா?
அவன் என்ன துதிப் பிரியனா?
நாம் என்ன துதி பாடியா?

அவனைத் துதிக்கணும் -ன்னு கூட இல்லை!
அவனைச் சுமக்கும் உள்ளத்தில் இருந்து வரும் மொழி - அந்த மொழியைத் துதிக்கணும்!

அதான் கந்தனைத் துதிப்பார்க்கு ன்னு சொல்லாம...
கந்தர் சட்டிக் கவசம் தனைத் துதிப்போர்க்கு...
----------------------------

கந்தர் சட்டிக் கவசம் தனைத் துதிப்போர்க்கு
* வல்வினை போம்
* துன்பம் போம் நெஞ்சில்
* நெஞ்சில் பதிப்பார்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்
* கதித்தோங்கும் நிட்டையும் கைகூடும்
* கைகூடும் நிமலர் அருள்!

அவனே!
அவனே என்னொடு கைகூடும்!
கைகூடும் நிமலர் அருள்!

நன்றி், முருகனருளில் கவசப் பொருளுக்கு!

VSK July 23, 2012 2:21 PM  

நல்லதொரு இறைப்பணி.

துதிப்பதும், அதனை நெஞ்சில் பதிப்பதும் நம் முயற்சியால் நிகழக் கூடியவை. ஆனால், நிஷ்டை என்பது கைகூட வேண்டுமானால், அதற்கு அந்த மோனகுருவாம் தக்ஷிணாமூர்த்தி,... அந்த நிமலனின் அருளாலேயே கைகூடும்.

"நிமலர் அருள் நிஷ்டையும் கைகூடும்" எனப் பொருள் கொள்ள வேண்டுமென, ஒரு பெரியவர் சொன்னார்.

படித்தாலே துன்பம் தொலைந்து போய்விடும்; வல்வினையும் தீர்ந்து போகும்.
நெஞ்சில் பதித்தால் செல்வம் பலிதமாகும்; மேன்மேலும் வளர்ந்து நம் கதியை உயர்த்தும்.
இதெல்லாம் வேண்டாமென, தவத்தில் ஆழ்வோர்க்கு, அதனைத் தரவல்ல நிமலரின் அருளால், நிஷ்டையும் கைகூடும்.

அதனால்தான், அதற்கு நாம் என்ன செய்ய வேண்டுமெனச் சொல்லப்படவில்லை.

எனவே, இந்த வெண்பாவில்,['நிமலர் அருள்'] 'கந்தர்' எனப் பிரித்துப் பொருள் கொள்வது சரியில்லையோ என எண்ணுகிறேன்.

ஏனெனில், 'கந்தர் சஷ்டி கவசம்' என்னும் நூலின் பெருமையை, பயன்களைச் சொல்லும் வெண்பா இது.

அப்படிப் பார்க்கும்போது, நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசம் எனக் கொண்டால், பதிவில் சொன்ன பொருள் வராமல் போகலாம். நிமலரே இந்த நூலை அருளினாரோ எனவும் ஒரு ஐயம் எழலாம்.

கந்தர் சஷ்டி கவசம் தனை... துதிப்போர்க்கு.... நெஞ்சில் பதிப்போர்க்கு என்னும் இரண்டும் பொருந்துவதுபோல, மூன்றாவது சொல்லுக்குப் [நிஷ்டையும்] பொருந்தா நிற்பது கவனிக்கத் தக்கது.

இன்னொரு விதமாகப் பார்த்தால், ...

பொதுவாகக் கண்களை மூடி நிஷ்டையில் அமர்வதென்பது அனைவரும் பரவலாகச் செய்யக்கூடிய இந்த 'தியானம்' என்னும் வகை.

ஆனால், நிஷ்டை கைகூடுவது என்பது, மூலாதாரத்திலிருந்து எழும்பி, விரைந்து மேனோக்கி ஓடி [கதித்து,] அங்கேயே நிலைத்து 'ஓங்கும்' நிஷ்டை... சமாதி நிலை... என்பது அந்த நிமலனின் அருளால் கைகூடும் எனக் கொள்வது இன்னும் சிறப்பு.

[கதி&sup4;-த்தல் kati ::, 11 v. < gati. intr. 1. To hasten, move rapidly; விரைதல். அரியேறு கதித்தது பாய்வதுபோல் (கம்பரா. பஞ்சசே. 56). 2. To go, move, proceed; ]

கவசமே ஆதி பகவனின் அருளைக் கூட்டிவந்து, நிஷ்டையைத் தந்தருளும். இதுவே நிஷ்டையாகி நிலைத்தருளும்.

இன்னும் சற்று ஆழ்ந்து நோக்கினால், இதில் சொல்லப்பட்டிருக்கும் மூன்றுக்குமே அந்த நிமலரின் அருள் தேவை எனவும் விளங்கும்.

முருகனருள் முன்னிற்கும்!

Kavinaya July 23, 2012 4:57 PM  

கந்தன் தன்னருள் பெற எல்லோரையும் அழைத்து வந்து விட்டான்! அவன் கருணையே கருணை. பதிவும் பின்னூட்டங்களும் படிக்கப் படிக்கப் பரவசம்.

வெற்றி வேல் முருகனுக்கு... அரோகரா!

Geetha Sambasivam July 23, 2012 8:54 PM  

KRS, ஏன் அநானியாக வந்திருக்கீங்க? புரியலையே?

மதுரையம்பதி July 24, 2012 9:20 AM  

இன்றுதான் வர முடிந்தது குமரன். மிக அருமையான துவக்கம். வாழ்த்துக்கள்..

Vishvesh July 24, 2012 5:45 PM  

Nice to read your interpretation, Kumaran!

குமரன் (Kumaran) July 24, 2012 8:11 PM  

நன்றி வெங்கட ஸ்ரீநிவாசன்

குமரன் (Kumaran) July 24, 2012 8:13 PM  

நல்ல விளக்கம் அனானி நண்பரே. இதற்குத் தான் நீங்கள் வரவேண்டும் என்பது. :-)

குமரன் (Kumaran) July 24, 2012 8:15 PM  

மிக நல்ல விளக்கம் ஐயா. நிஷ்டை மட்டுமின்றி துதிப்பதும் நெஞ்சில் பதிப்பதும் கூட நிமலர் அருள் இருந்தால் தான் இயலும்.

இடுகையின் இறுதியில் சொன்னது போல் ஆழங்காட்பட்டவர்கள் வந்து சொல்ல வேண்டும் என்று சொன்னதைப் போல் நீங்களும் அனானி நண்பரும் சொல்லியிருக்கிறீர்கள்.

இன்னொருவரையும் எதிர்பார்க்கிறேன். பார்க்கலாம். அவரும் வந்து ஏதாவது சொல்கிறாரா என்று.

முருகனருள் முன்னிற்கும்.

குமரன் (Kumaran) July 24, 2012 8:17 PM  

உங்கள் பரவசத்தைப் பார்க்கத் தான் பழனியாண்டவன் இராகவனையும் நண்பனையும் பேச வைக்கிறான் கவிநயா அக்கா. :-)

நன்றி மதுரையம்பதி & விஸ்வேஷ்.

G.Ragavan July 26, 2012 12:38 PM  

// குமரன் (Kumaran) said...
உங்கள் பரவசத்தைப் பார்க்கத் தான் பழனியாண்டவன் இராகவனையும் நண்பனையும் பேச வைக்கிறான் கவிநயா அக்கா. :-) //

குமரன், இந்தப் பதிவிலிருந்து இராகவன் என்ற பெயரை நீக்கி விட்டால் நன்றாக இருக்கும்.

பதிவில் குறிப்பிடப்படும் இராகவன் நான் இல்லை என்று நீங்கள் குறிப்பிடுவீர்களானால் அதற்கு மேல் நான் எதையும் கேட்கப்போவதில்லை.

நன்றி.

குமரன் (Kumaran) July 26, 2012 9:00 PM  

இராகவன்,

என் அம்மாவின் சின்ன தகப்பனார் பெயரும் இராகவன் தான். எமனேஸ்வரம் இராகவனும் இருக்கிறார் இங்கே. எத்தனையோ இராகவர்கள் இந்த நானிலத்தில். அத்தனை பேருக்கும் என் வணக்கங்கள்.

சாயிதாசன் (mnv_mdu) July 26, 2012 10:24 PM  

பாடல்கள் அனைதிற்கும் ராகம், தாளம், பாவம் முக்கியம். பொருள் அறிந்தால் மட்டுமே பாவம் (பக்தி உணர்வு) வரும். பாவத்துடன் பாடும்போது மட்டுமே பூரண பலன் கிட்டும் என்பது சான்றோர் வாக்கு. அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம்.

தி. ரா. ச.(T.R.C.) July 27, 2012 5:05 AM  

வள்ளிக் கணவன் பேரை வழிப் போக்கர் சொன்னாலும் உள்ளம் குழையுமடி >உரைநடையில் சொன்னாலும் உருக்கமாகவும் விளக்கமாகவும் இருக்கிறது . நன்றி குமரன்

தி. ரா. ச.(T.R.C.) July 27, 2012 5:10 AM  

ஈசனடி போற்றி எந்தையடி போற்றி நேயத்தே நின்ற நிமலனடி போற்றி

தி. ரா. ச.(T.R.C.) July 27, 2012 7:30 AM  

ஸ்கந்தன் என்பதும் சுப்பிரமணியரின் பிரக்யாதி வாய்ந்த பெயர். ஸ்கந்த என்கிற தாது (Root) வுக்கு, வெளிப்படுவதுபோல், சிவ ஜோதியிலிருந்து ஆறு பொறிகளாக வெளிப்பட்டுத் தெறித்ததால், ஸ்கந்த என்ற பெயர் உண்டாயிற்று. ஸ்கந்த என்ற நாமாவை விசேஷமாக வைத்தே புராணத்திற்கு ஸ்காந்தம் என்ற பெயர் வந்திருக்கிறது. தமிழில் இதைக் காஞ்சிபுரத்தில் இருந்த கச்சியப்ப சிவாச்சாரியார் கந்த புராணம் என்று செய்திருக்கிறார். ஸ்கந்தன் தமிழில் கந்தனாகிறான்.
--- from theyvathin kural Mahaperiyavavin vaakku

குமரன் (Kumaran) July 27, 2012 7:22 PM  

நன்றி விஸ்வேஷ் பாபு.

குமரன் (Kumaran) July 27, 2012 7:23 PM  

சிவபுராணத்திலிருந்து பொருத்தமான வரி தி.ரா.ச. ஐயா.

லலிதாம்மா சொன்னதைப் படித்த போதே நினைத்தேன் அந்த செய்தி தெய்வத்தின் குரலில் படித்தோமோ என்று. ஆசார்யதேவரின் வரிகளை இட்டு உறுதி செய்துவிட்டீர்கள். நன்றி.

G.Ragavan July 28, 2012 2:04 AM  

// குமரன் (Kumaran) said...
இராகவன்,

என் அம்மாவின் சின்ன தகப்பனார் பெயரும் இராகவன் தான். எமனேஸ்வரம் இராகவனும் இருக்கிறார் இங்கே. எத்தனையோ இராகவர்கள் இந்த நானிலத்தில். அத்தனை பேருக்கும் என் வணக்கங்கள். //

நீர் தன்னெஞ்சரிந்தவராகவே ஆகுக. நன்றி.

என்னுடைய பெயரை முருகனருள் வலைப்பூ பங்கீட்டாளர் பட்டியலில் இருந்து நீக்கும்படி கேட்டுக் கொண்டேன். நீங்களும் என்னுடைய பெயரை நீக்கியிருந்தார்கள். மறுபடியும் என்னுடைய பெயர் ஜிரா என்ற அடைமொழியோடு சேர்க்கப்பட்டிருக்கிறது. வேண்டுமென்றே என்னை வெறுப்பேற்ற யார் சேர்த்திருப்பார்கள் என்று என்னால் யூகிக்க முடிகிறது. என்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து என்னுடைய பெயரை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. அல்லது இதுவும் உங்கள் பெரியப்பா, மாமா என்று யாரையாவது குறிப்பிடுகிறது என்றால் நான் மறுபடியும் அமைதியாகிக் கொள்கிறேன்.

எருது புண் காக்கைக்குச் சுவையானது என்று ஒருவரின் செயலில் இருந்து நான் புரிந்து கொள்கிறேன்.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP