Tuesday, August 09, 2011

திருப்பதி மாமனுக்குக் கண் இல்லையோ? - வருவான் வடிவேலன்!

இன்னிக்கி முருகனருளில், எனக்கே எனக்கான பாட்டு!
திருப்பதி மாமனுக்குக் கண் இல்லையோ?
இலக்குமி எனைப்போலே பெண் இல்லையோ?


(நானும் என்-அவனும்! same color too..)

வருவான் வடிவேலன்-ன்னு ஒரு படம் வந்துச்சி!
அறுபடை வீடு மட்டுமன்றி, சிங்கப்பூர், மலேசியா, கதிர்காமம் என்று பல நாடுகளுக்கும் சென்று எடுத்த படம்!
அதில் தான் இந்தப் பாட்டு! வாணி ஜெயராம்-இன் வார்த்தெடுத்த குரலில்...!

புராணப் படம் அல்ல! ஆனா, முருகனை மையமாக வைத்து, இன்றைய வாழ்விலே நடக்கும் ஒரு கதை!
முருகனே குழந்தை உருவத்தில் வந்து, வளர்ந்து, சொற்பொழிவு செஞ்சி, மாயோன் அன்ன மாயங்கள் செய்து...பல பேரின் வாழ்வைச் சீராக்கும் கதை!



அவளுக்கு இயற்கையிலேயே இறையன்பு ஒரு சுத்து கூடுதலாப் போயிருச்சி!
இதனாலோ (இல்லை) வேறு என்ன புரிதலினாலோ, கொண்டவன் அவளைச் சீண்டுவதில்லை! கேலி பேசுறான்!
நாள் முற்ற முற்ற, விவாகரத்துக்கு ஓலையே அனுப்பிகிறான்! என்ன செய்வாள்?

அவனுக்கே ஒப்புவித்து விட்டவள்! விவாகரத்தை ஏற்க மறுக்கிறாள்!
மனதால் கொண்ட கணவனுக்கே, தன்னையும் கொடுத்து, அவர்களுக்குள் பிறக்கும் பிள்ளைக்கு "வடிவேலன்" என்று பேர் வைப்பேன்!
= கங்கணம் கட்டிக் கொள்கிறாள்! நடக்கற காரியமா இது? = வருவானா வடிவேலன்?

இவ இப்படின்னா... இன்னொருத்தி.... தன் உயிராய் வைத்து இருக்கும் கணவனுக்குக் கண் பார்வையில்லை! எத்தனையோ இடம் பார்த்தாகி விட்டது! = இனி ஒன்னுமே இல்லை!

ஈழத்துக் கதிர்காமம் சன்னிதியில் கையேந்திக் கெஞ்சுகிறாள்!
இனி ஒன்னுமே இல்லை-ன்னாலும்.....
அவன் ஒருவன் மட்டும் உண்டு தானே?
உண்டு தானே? = என் முருகன், எனக்கு என்னிக்குமே உண்டு தானே!!!

பாடலைக் கேட்டுக் கொண்டே வாசியுங்கள்! இதோ!!!



நீயின்றி யாருமில்லை விழி காட்டு- முருகா
நெஞ்சுருக வேண்டுகிறேன் ஒளி காட்டு!
நம்பிக்கை கொண்டு வந்தேன் அருள் கேட்டு - நீ
ஞானக்கண் தனைத் திறந்து வழி காட்டு!


அருளே அருளே, உலகம் உனதல்லவா
அறிவும் பொருளும், யாவும் நீயல்லவா!

(நீயின்றி யாருமில்லை)

திருப்பதி மாமனுக்குக் கண் இல்லையோ? - மாமி
இலக்குமி எனைப்போலே பெண் இல்லையோ?

கவனத்தில் எங்கள் நிலை வரவில்லையோ? - நாங்கள்
கதிர்காமம் வந்ததற்குப் பலன் இல்லையோ?


காசி விசாலாட்சி, உன்தன் மகனிடம் சொல்வாய்!
காஞ்சி காமாட்சி, உன்தன் மகனிடம் சொல்வாய்!
அங்கயற் கண்ணி, உன்தன் மகனிடம் சொல்வாய்!
அடி அபிராமி, நீ உனது மகனிடம் சொல்வாய்!


(என்ன மாயமோ, காதல் கணவன்....கண் கொண்டு பார்க்கிறான்!
அவள் முருகன் அவளைக் கைவிடவில்லை!)

கண்டேன்! கண்டேன்! கண்டேன்!
முத்துக் குமரன், பக்திச் சரவணன், வைத்திய நாதனைக் கண்டேன்!
முடியுடை மன்னன், திருமுடி அருகே, கொடியுடைச் சேவலைக் கண்டேன்!
கொத்தும் நாகம் பொல்லாதாக கத்தும் தோகையைக் கண்டேன்!
கோலம் மாறிட, ஞானக் கண்களும், ஊனக் கண்களும் கொண்டேன்!


வீடு நமக்குண்டு = அறுபடை வீடு!
வேதம் நமக்குண்டு = முருகனின் பாதம்!
விருந்து நமக்குண்டு = கந்தனின் நாமம்!
மருந்து நமக்குண்டு = வைத்திய நாதம்!


ஐயா, முருகய்யா! ஐயா, முருகய்யா!
ஐயா, முருகய்யா! ஐயா, முருகய்யா!


படம்: வருவான் வடிவேலன்
குரல்: வாணி ஜெயராம், சீர்காழி
வரி: கண்ணதாசன்
இசை: MSV



திரையருட் செல்வர் என்று புகழப்பட்ட K.சங்கர் இயக்கிய அருமையான படம் = வருவான் வடிவேலன்! பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படம்!
ஜாய்ஃபுல் சிங்கப்பூர் கலர்ஃபுல் மலேசியா போன்ற பிரபல பாடல்கள் எல்லாம் இந்தப் படத்தில் தான்!

வாணி ஜெயராமின் வார்த்தெடுத்த குரலுக்கென்றே வந்த படமோ-ன்னு கூடச் சொல்லலாம்!
வருவான் வடிவேலன் - தணிகை வள்ளல் அவன் - அழகு மன்னன் அவன்-ன்னு வரும் துவக்கப் பாடலைக் கேட்டால் தெரியும்...தோழன் இராகவனுக்கு மிகவும் பிடித்த பாடல்!

பத்துமலை திரு முத்துக்குமரனை - என்னும் பாடல்...கூட்டாக...MSV, சுசீலாம்மா, சீர்காழி, TMS, LR Eswari என்று பலரும் சேர்ந்து பாடுவது!
இன்று நாம் அறிந்த Batu Caves (எ) மலேசியப் பத்துமலையில் படமாக்கப்பட்ட பாடல்!

இந்த மலைக்கு..... அம்மா-அப்பாவோடு இரண்டு ஆண்டுக்கு முன்பு சென்றிருந்த போது... I had to play a trick on my murugan...



மதியம்.....கோயில் நடை சாத்தும் நேரம்! நல்ல மழை வேறு!

அம்மா அப்பாவால் வேகமாக ஏற முடியவில்லை! 300 படிகள்! மழையில் வழுக்குது வேறு!
நான் மட்டும் ஓடோடிச் சென்று, சன்னிதியில் திருப்புகழ் பாட....அர்ச்சகரால் நடைசாத்த முடியலை...அதற்குள் அம்மா அப்பா மெல்ல வந்து விட்டார்கள்!

தரிசனம் ஆன பிறகும், நடை சார்த்தாமல், அர்ச்சகர் ஏனோ தாமதிக்க... நான் அவரிடம் உண்மையைச் சொல்லி, மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்!
ஆனால் அவரோ... இன்னொரு முறை பாடமுடியுமா தம்பி?-ன்னு கேட்க...

பத்துமலை மூலத்தானத்து முருகனுக்கு உருவமில்லை! வேல் தான்!
ஆள் மயக்கும் அழகோ....அலங்கார ஒப்பனையோ ஒன்னுமே இல்லை!
கற் காரைக்கு இடையே, உருவான வடிவேல்! என்னவன் கைவிடேல்!!

வாழ்வின் முக்கியமான காலகட்டம் அந்தத் தருணம்... அப்போ எனக்கு முருகன் மேல் ஆயிரம் கோவம்...
அம்மா-அப்பாவுக்குச் சொல்லாம ஏதோ தப்பு பண்ணுறோமோ-ன்னு மனசில் ஒரு எண்ணம்! தப்பில்லை-ன்னு அதே மனசும் சொல்லுது;

இந்தச் சூழலில், அர்ச்சகரோ, பாடச் சொல்றாரு...
அம்மா அப்பாவைப் பக்கத்துல வச்சிக்கிட்டே, கண்ணில் தண்ணி தண்ணியா ஊத்துது!
ரெண்டு கையுமே தாளமாக்கி, ஒலி எழுப்பி, அந்தத் திருப்புகழைப் பாட... குறை தீர வந்து குறுகாயோ? பேதை கொண்டேன் கொடிதான துன்ப மையல் தீர,  குறை தீர வந்து குறுகாயோ?

முருகனின் வேலில் இருந்து, சிவந்த நூலினைக் களைந்து, தாளந் தட்டும் என் கையைப் பிடித்துக் கொண்டார் ஓதுவார்...
அந்தக் காப்புக் கயிற்றைக் கட்டி விட...
வேலின் மேலிருந்த மாலையை எடுத்து, எனக்கே எனக்காய்ச் சூட்ட...

முருகா...
காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன்!
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன்!


விழியில் பெருகுவதை அவரே துடைத்து விட...
அம்மா-அப்பா ஒன்றுமே புரியாமல் விழிக்க...
தீபம் காட்டி...திருநீறு குடுத்து...நடையைச் சார்த்தாமல்...
நான் சொன்ன திருப்புகழையே, பேப்பரில் எழுதித் தரச் சொல்லி...அவரும் பாடத் துவங்கினார்! - "விறல் மாரன் ஐந்து"

அம்மா என்னை மெல்ல இழுத்துக் கொண்டு வந்து விட்டார்கள்!
நானோ என் கையில் கட்டப்பட்ட சிவப்புக் காப்பினையே பார்த்துப் பார்த்து...

மயிலும் செங்கையும் ஆறிரு திண்புயக்
கவியின் சங்கமி இராகவ புங்கவன்
அகமும் கண்டருள் வாய்-என அன்பொடு...
வரவேணும் முருகா வரவேணும்.....வந்துனை எனக்குத் தரவேணும்!
இரு நிலம் மீதில் எளியனும் வாழ.....
எனது முன் ஓஓஓஓடி வர வேணும்!


"வருவான்" வடிவேலன்!

16 comments:

adithyasaravana August 09, 2011 8:09 AM  

படிச்சுட்டு எனக்கு னெஞ்சுறுகி, ( அப்படடித்தான் வருது, என்ன செய்ய?) கண் கலங்கீடுச்சு..STUPID AZHAGI PLUS.

குமரன் (Kumaran) August 09, 2011 11:34 AM  

முருகன் குமரன் குகன் என்று மொழிந்து (இரவியைப் போல்) உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்?!

Kannabiran, Ravi Shankar (KRS) August 09, 2011 8:36 PM  

@சரவணன் அண்ணா
நன்றி! தனிப்பட்ட personal ஆனாலும், இன்னிக்கு இதை முருகனடியார்கள் முன் சொல்லணும் போல இருந்துச்சி! சொல்லிட்டேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) August 09, 2011 8:39 PM  

@குமரன்
:) அது என்ன இரவி போல்? வேணும்-ன்னா இராகவன் போல்-ன்னு சொல்லுங்க!:)

முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல் தந்து, (அதுவே) உணர்வென்று அருள்வாய்!!
No question mark :) only exclamation mark!

குமரன் (Kumaran) August 10, 2011 12:52 PM  

எனக்கு நினைவு தெரிந்து பார்த்து மகிழ்ந்த படம் இது என்று நினைக்கிறேன். முருகன் சிலை சிறுவனாக மாறுவதும் சிறுவன் முருகன் சிலையாக மாறுவதும் அந்தத் தங்கச் சிலையும் இன்னும் மனக்கண்ணில் நினைக்கிறது. இந்தப் படத்தில் தானே மயில் பறந்து பறந்து வந்து சண்டை போடும்.

படத்திலிருந்து எந்தப் பாடலும் இப்போது நினைவில்லை. இந்தப் பாடலும். அதனால் முதன்முறையாகக் கேட்பது போல் இருக்கிறது. ;-)

Kavinaya August 10, 2011 10:02 PM  

//எனக்கே எனக்காய்//

:)

திருப்புகழை எங்களுக்கும் பாடிக் காட்டணும் என்பது எனது அன்பு வேண்டுகோள்!

(முதலில் அன்புக் கட்டளை, அப்படின்னு போட்டு பிறகு எடுத்துட்டேன். என் கட்டளையெல்லாம் ஒரு நாய்க்குட்டி கூட கேட்காது, இவ்ளோ பெரிய முருகனடிமையா கேட்கப் போறாரு? :)

Kavinaya August 10, 2011 10:18 PM  

சொல்ல மறந்துட்டேன். படங்கள் எல்லாம் அழகு!

Kannabiran, Ravi Shankar (KRS) August 10, 2011 10:48 PM  

@கவி-க்கா
//முதலில் அன்புக் கட்டளை, அப்படின்னு போட்டு பிறகு எடுத்துட்டேன்//

:)

//இவ்ளோ பெரிய முருகனடிமையா கேட்கப் போறாரு? :)//

என்னாது? நான் அவனுக்கு அடிமையா? தோடா! இந்தச் சேவல் "கொடியவன்" இப்படி உங்க மூலமா ஆளு செட் பண்ணி என்னை அடிமையாக்கப் பாக்குறானா? அவன் தலையில நொங்-ன்னு குட்ட...

வேணும்-ன்னா அவனை எனக்கு அடிமையா இருக்கச் சொல்லுங்க!

அவனுக்குச் சோறாக்கிப் போட்டு, அவன் காரியம் யாவினும் கைகுடுத்து, அவனைச் சந்தோசமா வச்சிக்கறேன்-ல்ல, இதுக்கு, அடிமை-ன்னுஞ் சொல்லுவான், அதுக்கு மேலேயும் சொல்லுவான்! டேய் முருகா...உன்னைக் கடிச்சேன்-ன்னா தெரியும்..பல்லு எறங்கிரும், ஆமா!:)

Lalitha Mittal August 11, 2011 1:26 AM  

கவிநயாவின் ''திருப்புகழ்'' வேண்டுகோள் --ரிபீட்டு

Kavinaya August 11, 2011 9:08 AM  

(தாமதமான) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கண்ணா!

இராஜராஜேஸ்வரி August 14, 2011 7:04 AM  

வருவான் வடிவேலன்!"
மனம் மயக்கும் பாடல் தந்து அழகிய படங்களுடன் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.

Kavinaya August 14, 2011 10:18 PM  

//அடிமை-ன்னுஞ் சொல்லுவான், அதுக்கு மேலேயும் சொல்லுவான்!//

அப்பனே! அவன் ஒண்ணும் சொல்லல. நானாதான் சொன்னேன். வேற எப்படி சொல்றதுன்னு சொல்லுங்க. அடுத்த தரத்திலிருந்து சரியா சொல்லுறேன் :) அவன் பாவம் குழந்தை, அவனை ஒண்ணும் சொல்லாதீங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) August 15, 2011 10:44 AM  

//அவன் பாவம் குழந்தை, அவனை ஒண்ணும் சொல்லாதீங்க//

டேய் முருகா, இந்த சப்போர்ட்டுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்லடா ஒனக்கு! கவி-க்கா ஒங்க வீடு தானே! புகுந்த வீட்டுல என்னைய அடக்கப் பாக்குறாங்க :)

//வேற எப்படி சொல்றதுன்னு சொல்லுங்க. அடுத்த தரத்திலிருந்து சரியா சொல்லுறேன் :)//

திருமுருக, முருகத்திரு, முருகன்பன்...சரி பரவாயில்லை...முருகனடிமை கூட ஒரு வகையில் இன்பம் தான்! :)

அம்பாளடியாள் August 21, 2011 3:27 AM  

வருவான் வடிவேலன் பாடலோடு சேர்த்து அருமையான படைப்பு!...உங்கள் இரு தளமும்
கண்டு வியந்தேன் .நன்றி ஐயா செவ்வனே பணி
இறை அருளால் சிறப்பாக விளங்கும் இரு தளங்கள் .உங்கள் விடா முயற்சிக்குத் தலைவணங்குகின்றேன்......

anandrajah October 05, 2011 8:18 AM  

//மயிலும் செங்கையும் ஆறிரு திண்புயக்
கவியின் சங்கமி இராகவ புங்கவன்
அகமும் கண்டருள் வாய்-என அன்பொடு...

வரவேணும் முருகா வரவேணும்..// அருமை..

நண்பரே உங்கள் பக்தி மெய்சிலிர்க்க வைக்குது.. அவனருளால் எந்த குறையும் இல்லாமல் இருப்பீர்..!

Unknown July 19, 2012 8:36 AM  

Hi

could you share the song

//நான் சொன்ன திருப்புகழையே, பேப்பரில் எழுதித் தரச் சொல்லி//

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP