Sunday, July 22, 2007

"கந்தகுரு கவசம்" -- 2 [41-80]



"கந்தகுரு கவசம்" -- 2 [41-80]

[ஸ்கந்தகிரிக் குமரனை அழைக்கையில், அப்படியே அடுத்தடுத்து, அனைத்துக் கோயில்களிலும் குடிகொண்டிருக்கும் குமரனையெல்லாம் கூடவே கூப்பிட்டு அழைக்கிறார்.]

அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே
அருணாசலக் குமரா அருணகிரிக்கு அருளியவா
திருப்பரங்கிரிக் குகனே தீர்த்திடுவாய் வினை முழுதும்
திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்
எட்டுக்குடிக் குமரா ஏவல்பில்லி சூனியத்தை ...... 45

பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய்
எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே
எங்கும் நிறைந்த கந்தா எண்கண் முருகா நீ
என்னுள் அறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய்
திருப்போருர் மாமுருகா திருவடியே சரணமய்யா ...... 50

அறிவொளியாய் வந்து நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய்
திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா
ஜகத்குரோ சிவகுமரா சித்தமலம் அகற்றிடுவாய்
செங்கோட்டு வேலவனே சிவானுபூதி தாரும்
சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய் ...... 55

குன்றக்குடிக் குமரா குருகுகனாய் வந்திடப்பா
குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர்
பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா
பவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பா
விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா ...... 60

வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரே
வெண்ணைமலை முருகா மெய்வீட்டைத் தந்திடுவீர்
கதிர்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்
காந்த மலைக் குமரா கருத்துள் வந்திடுவீர்
மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர் ...... 65


கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்
குமரமலை குருநாதா கவலையெலாம் போக்கிடுவீர்
வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர்
வடபழனி ஆண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர்
ஏழுமலை ஆண்டவனே எத்திக்கும் காத்திடுவீர் ...... 70

ஏழ்மை அகற்றிக் கந்தா எமபயம் போக்கிடுவீர்
அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்
அறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்
பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு
பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன் ...... 75

அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே
படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே
உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான்
உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய்
அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் ...... 80


[கவசம் தொடரும்]

1 comments:

குமரன் (Kumaran) July 31, 2007 7:22 AM  

ஒவ்வொரு வரியும் மிகவும் பொருள் பொருந்தியதாக இருக்கின்றன எஸ்.கே. சொல்லச் சொல்ல இனிக்குதடா என்று பாடவேண்டியது தான். ஒவ்வொரு திருத்தல முருகனையும் அழைத்து வைக்கும் வேண்டுதல்கள் அருமை.

பணிவதே பணியெனப் பணித்தனை நீ எனக்கு
பணிந்தேன் கந்தா உன் பாதம் பணிந்து உவப்பேன்

அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன்

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP