Sunday, October 28, 2012

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 10

"புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனி தொடர்ந்தோட!
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துயர் அங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க!
ஒளிப்பும் சுளுக்கும் ஒரு தலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தும்
சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப்பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத்து அரணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்!

“இந்தப் பகுதியில் கொடிய விலங்குகளிடமிருந்தும், விஷப் பூச்சிகளிடமிருந்தும், நோய்களிடமிருந்தும் காக்க வேண்டும் என்று வேண்டுகிறார் சுவாமிகள்.

என்னைத் தாக்க வரும் புலிகளும், நரிகளும், சிறிய நரிகளும், நாய்களும், எலிகளும், கரடிகளும் என்னைக் கண்டதும் உன் அருளால் என்னைத் தாக்காமல் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து அவை ஓட வேண்டும்!

புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனி தொடர்ந்து ஓட!

விஷ ஜந்துகளான தேள்களும் பாம்புகளும் செய்யான் எனப்படும் பெரும்பூரான்களும், சிறுபூரான்களும், கொடிய விஷங்களையுடைய பற்களால் கடித்து உயர் அங்கங்களான தலை, மார்பு போன்ற அங்கங்களில் விஷம் ஏறியிருந்தாலும் அவை எளிதுடன் இறங்க நீ அருள வேண்டும்!

தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்து உயர் அங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க!

ஆளை உருத் தெரியாமல் குலைக்கும் குஷ்டம் முதலிய பெரு நோய்களும் (ஒளிப்பும்), சுளுக்கு முதலான சிறு நோய்களும், ஒற்றைத் தலைவலியான ஒரு தலை நோயும், வாயு தொடர்பான வாத நோய்களும், குளிர் நோயான சயித்தியமும், கை கால்கள் இழுக்கும் வலிப்பு நோயும், பித்தத்தால் உண்டாகும் மனநோய் முதலியவையும், வயிற்று வலியான சூலை நோயும், எலும்பை உருக்கும் க்ஷய நோயும், குன்ம நோயும், உடற்சோர்வு என்னும் சொக்குநோயும், அரிக்கும் சிரங்கும், கை கால் குடைச்சலும், சிலந்தி நோயும், குடலில் வரும் சிலந்தி நோயும், விலாப்புறங்களில் வரும் பக்கப்பிளவையும், தொடையில் படரும் வாழையும், கடுவன் படுவன் முதலிய நோய்களும், கை கால்களில் வரும் சிலந்தியும், பல் குத்து நோயும், பல்லில் வரும் அரணையும், இடுப்பில் வரும் பெரிய அரையாப்பு என்னும் கட்டிகளும், எல்லாப் பிணிகளும் என்னைக் கண்டால் நில்லாது ஓடும்படி நீ எனக்கு அருள் செய்ய வேண்டும்!

ஒளிப்பும் சுளுக்கும் ஒரு தலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தும்
சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப்பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்!

அடுத்த பகுதியைப் பாடு நண்பா"

(தொடர்ந்து பேசுவார்கள்)

Sunday, October 21, 2012

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 9



ஆனை அடியினில் அரும்பாவைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகள் உடனே பல கலசத்துடன்
மனையில் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒரு வழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட!

"இந்தப் பகுதியில் மந்திரதந்திரங்களினால் கேடு உண்டாகாத வண்ணம் காக்க வேண்டும் என்று வேண்டுகிறார் தேவராய சுவாமிகள்.

ஒருவரை அழிக்க நினைத்து அவரைப் போல் மாவினாலும் மரத்தினாலும் பாவை என்னும் சிறு உருவங்களைச் செய்து அவற்றில் மந்திரத்தை உருவேற்றி அவற்றை யானைகள் கட்டப்பட்டிருக்கும் இடத்திலும் புற்றுகள் நிறைந்திருக்கும் இடத்திலும் புதைத்து வைப்பார்கள். யானையின் காலடியில் மிதிபட்டும் புற்றுகளில் இருக்கும் கரையான்களால் உண்ணப்பட்டும் அந்த பதுமைகள் மற்றவர்களால் கண்டெடுக்கப்பட்டு மாற்று மந்திரம் செய்யப்படும் முன்னர் உருக்குலையும்; அப்படி நேர்ந்தால் யாரை அழிக்க நினைத்து அப்பாவைகளைப் புதைத்து வைத்தார்களோ அவர்களின் அழிவு உறுதியாகும் என்பது சூனியம் வைப்பவர்களின் நம்பிக்கை.

அப்படி யானை அடியினில் வைக்கப்பட்ட அரும்பாவைகளும்

ஆனை அடியினில் அரும்பாவைகளும்

காட்டுப்பூனையின் முடி, தலைச்சன் பிள்ளைகளின் எலும்பு, நகம், தலைமுடி, நீண்ட முடியுடன் கூடிய மண்டை போன்றவற்றுடன் பாவைகளும் பல கலசங்களும் மந்திர உருவேற்றப்பட்டு ஒருவரின் அழிவை விரும்பி அவரது வீட்டில் புதைத்து வைக்கப்படும். அப்படி வீட்டில் புதைத்து வைக்கப்பட்ட வஞ்சனையும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகள் உடனே பல கலசத்துடன்
மனையில் புதைத்த வஞ்சனை தனையும்

ஒட்டியம் என்பது ஒருவகை சூனிய மந்திரச் சாத்திரம். அந்த நூலில் கூறப்பட்ட வகையில் செய்யப்பட்ட மந்திர தந்திரங்கள் ஒட்டியச் செருக்குகள். அந்த நூலில் கூறப்பட்ட வகையில் செய்யப்பட்ட பாவைகள் ஒட்டியப் பாவைகள். அந்த ஒட்டியச் செருக்கும், ஒட்டியப் பாவையும், கூடவே புதைக்கப்பட்ட காசும் பணமும், பலி கொடுக்கப்பட்ட விலங்குகளின் குருதியில் கலந்த சோறும், அந்த ஒட்டியச் சாத்திரம் கூறும் மந்திர மையும், மனம் கலங்கித் தனி வழியே போகும்படி செய்யும் மந்திரமும்

ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒரு வழிப் போக்கும்

உன் அடிமையான என்னைக் கண்டவுடனே நடுங்கி அழிந்து போகும் படி நீ அருள் செய்ய வேண்டும்!

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட!

அடுத்த பகுதி பாடு"

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட!
காலதூதாள் எனைக் கண்டால் கலங்கிட!
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட!
வாய் விட்டலறி மதி கெட்டு ஓட!
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு!
கட்டி உருட்டு கால்கை முறிய!
கட்டு கட்டு கதறிடக் கட்டு!
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட!
செக்கு செக்கு செதில் செதில் ஆக!
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு!
குத்து குத்து கூர்வடிவேலால்!
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது ஆக!
விடுவிடு வேலை வெருண்டது ஓட!

"எதிரிகளும் கூடவே இருந்து குழி பறிக்கும் வஞ்சகர்களும் உயிரைப் பறிக்க வரும் எம தூதர்களும் அழிந்து போகும்படி அருள் செய்ய வேண்டுகிறார்.

எதிரிகளும் வஞ்சகர்களும் மனம் திருந்தி வந்து என்னை வணங்கிட வேண்டும்!

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட!

காலனின் தூதர்களான எம தூதர்கள் என்னைக் கண்டால் கலங்க வேண்டும்!

காலதூதாள் எனைக் கண்டால் கலங்கிட!

அவர்கள் என்னைக் கண்டால் அஞ்சி நடுங்க வேண்டும்! பயந்து புரண்டு ஓட வேண்டும்! வாய் விட்டு அலறி புத்தி கெட்டு ஓட வேண்டும்!

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட!
வாய் விட்டு அலறி மதி கெட்டு ஓட!

மனம் திருந்தாத பகைவர்களையும் வஞ்சகரகளையும் இந்த காலதூதர்கள் கொண்டு வரும் பாசக் கயிற்றால் படியினில் முட்டும்படி கட்ட வேண்டும்! அவர்கள் உடல் உறுப்புகள் எல்லாம் கதறிடக் கட்ட வேண்டும்! அவர்கள் கால் கைகள் எல்லாம் முறியும் படி கட்டி உருட்ட வேண்டும்! அவர்கள் விழிகள் பிதுங்கும்படி முட்ட வேண்டும்! அவர்கள் செதில் செதிலாக உதிர்ந்து போகும் படி அவர்களை நீ செகுக்க வேண்டும்!

படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு!
கட்டி உருட்டு கால்கை முறிய!
கட்டு கட்டு கதறிடக் கட்டு!
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட!
செக்கு செக்கு செதில் செதில் ஆக!

அழகனே! சூரனின் பகைவனான அழகனே! கூர்மையான உன் அழகான வேலால் அவர்களைக் குத்த வேண்டும்! பகலவனின் எரிக்கும் தணல் போல நீ அவர்களைப் பற்றி எரிக்க வேண்டும்! அவர்கள் வெருண்டு ஓடும் படி உன் வேலை விட வேண்டும்!

சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு!
குத்து குத்து கூர்வடிவேலால்!
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது ஆக!
விடுவிடு வேலை வெருண்டது ஓட!

அடுத்த பகுதியை பாடு நண்பா!"

(தொடர்ந்து பேசுவார்கள்)

Sunday, October 14, 2012

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 8

"எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க.


அடுத்த பகுதியைப் பாடவா நண்பா?"

"இந்த முறை நான் பாடுகிறேன்.

அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க!
வரும் பகல் தன்னில் வச்ரவேல் காக்க!
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க!
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க!
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க!
காக்க காக்க கனகவேல் காக்க!
நோக்க நோக்க நொடியினில் நோக்க!
தாக்க தாக்க தடையறத் தாக்க!
பார்க்க பார்க்க பாவம் பொடிபட!

சென்ற பகுதியின் தொடர்ச்சியாகவே இந்தப் பகுதியும் அமைகிறது. செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப பயன்கள் இந்தப் பிறவியில் கிடைக்கின்றன. எல்லா விதமான துன்பங்களில் இருந்தும் இறைவனின் அருள் உருவாகிய திருவேல் காக்க வேண்டும் போது அந்த துன்பங்களுக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கும் எல்லா பாவங்களும் தூள் தூளாகப் போவது போல் இறைவன் திருவருட் கருணைப் பார்வை கிடைக்க வேண்டும் என்று இந்தப் பகுதியில் வேண்டுகிறார் அடிகளார்.

கடைசி காலம் வரையில் கந்தன் கருணைப் பார்வை வேண்டும். மூச்சு நிற்பதற்கு சற்று முன்னர் நிற்பது பேச்சு. உயிரில்லாதவரைப் போல் மூர்ச்சையுற்றுக் கிடப்பவரை பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்கிறார் என்று தானே சொல்கிறோம். அப்படி கடைசி காலத்தில் பேச்சும் மூச்சும் நிற்கும் காலம் வரையில் விரைவாக வந்து கனகவேல் காக்க வேண்டும்.

உன் அடியவனாகிய எனது பேச்சு இருக்கும் காலம் எல்லாம் விரைவாக வந்து உனது கனகவேல் காக்கவேண்டும்!

அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க!

இருக்கும் காலம் வரையில் இறைவன் துணை வேண்டும்! இரவும் பகலும் இறைவன் திருக்கை வேலின் துணை வேண்டும்!

நாள்தோறும் வருகின்ற பகல் நேரங்களில் வச்சிரம் போல் வலிமை உடைய வேல் காக்கவேண்டும்! அரையிருள் நேரத்திலும் அந்த வேலே காக்கவேண்டும்! முன்னிரவு நேரமான ஏமத்திலும் நடு இரவான நடுச்சாமத்திலும் பகைவர்களை எதிர்த்து அழிக்கும் எதிர்வேல் காக்க வேண்டும்!

வரும் பகல் தன்னில் வச்ரவேல் காக்க!
அரையிருள் தன்னில் அனைய வேல் காக்க!
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க!

எந்நேரத்திலும் மயக்கம், குழப்பம், அமைதியின்மை, சோம்பல் போன்றவற்றை ஏற்படுத்தும் தாமதகுணம் என்னை அண்டாமல் அந்தக் குணத்தினை நீக்கி திறமையுடைய வேல் காக்கவேண்டும்!

தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க!

கனகவேல் விரைந்து எப்போதும் என்னைக் காக்க காக்க காக்க! விரைவாக என் மேல் உனது கருணைத் திருவிழிகளால் நோக்குக நோக்குக நோக்குக! எல்லாவிதமான தடைகளும் அறவே நீங்கும்படி அவற்றைத் தாக்குக தாக்குக தாக்குக! உன் கருணைத் திருவிழிகளால் என் பாவங்கள் எல்லாம் பொடியாகப் போகும் வண்ணம் பார்க்க பார்க்க!

காக்க காக்க கனகவேல் காக்க!
நோக்க நோக்க நொடியினில் நோக்க!
தாக்க தாக்க தடையறத் தாக்க!
பார்க்க பார்க்க பாவம் பொடிபட!"

"நல்ல விளக்கம் நண்பா. அடுத்த பகுதி கொஞ்சம் கடினமான பகுதி என்று நினைக்கிறேன்"

"கடினம் இல்லை. எளிமை தான். ஆனால் அறிவியல் சார்ந்த சிந்தனை கொண்டவர்கள் நம்ப மறுக்கும் சிலவற்றை அடிகளார் இந்தப் பகுதியில் கூறுகிறார். ஐம்புலன்களுக்கு எளிதில் எட்டாதவை எத்தனையோ இருப்பதை அறிவியலாளர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். அதனால் அப்படி நம் ஐம்புலன்களுக்கு இன்னும் எட்டாத சிலவற்றைப் பற்றி அடிகளார் இங்கே சொல்கிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான். அப்படியும் மனம் ஏற்கவில்லை என்றால் துன்பங்களின் பலவிதமான வடிவங்களை இப்பகுதியில் சொல்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்"

"சரி தான்.

அடுத்த பகுதியைப் பாடுகிறேன்.

பில்லிச் சூனியம் பெரும்பகை அகல!
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம ராக்ஷதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட!
இரிசி காட்டேரி இத்துன்பச் சேனையும்
எல்லினும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும்
விட்டாங்காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக்காரரும் சண்டாளர்களும்
என் பெயர் சொல்லவும் இடி விழுந்து ஓடிட!"

“பில்லிச் சூனியம் என்பது ஒருவர் மீது அவரது பகைவர்கள் ஏவிவிடும் மந்திர வடிவான துன்பம். அந்தத் துன்பங்களும் வலிமையுடைய பெரும்பகைவர்களால் ஏற்படும் துன்பங்களும் அகல வேண்டும்!

பில்லிச் சூனியம் பெரும்பகை அகல!

வலிமையுடைய பூதங்களும், மிகவும் வலிமையுடைய பேய்களும், அல்லல்களைக் கொடுத்து எந்த விதமான மந்திர தந்திரங்களுக்கும் அடங்காத முனிகளும், சிறுபிள்ளைகளைத் தின்று வீடுகளின் பின்புறத்தில் இருக்கும் புழைக்கடைகளில் வாழும் முனிகளும், தீயை வாயில் கொண்டு எல்லோரையும் பயமுறுத்தும் கொள்ளிவாய்ப் பேய்களும், குள்ள வடிவம் கொண்டிருக்கும் குறளைப் பேய்களும், வயதுப் பெண்களைத் தொடர்ந்து சென்று பயமுறுத்து பிரம்ம ராட்சதரும், உன் அடியவனான என்னைக் கண்டவுடன் அலறிக் கலங்கிட வேண்டும்!

வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம ராக்ஷதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட!

வயதிற்கு வரும் முன்னரே சிறுவயதிலேயே துர்மரணம் அடைந்த பெண்கள் கொள்ளும் இரிசி என்னும் பேய் வடிவங்களும், குருதியை விரும்பி உண்ணும் காட்டேரிகளும், இவை போன்ற துன்பங்களைக் கொடுக்கவே இருக்கும் படைகளும், பகலிலும் இருட்டிலும் எதிரே வந்து மிரட்டும் அண்ணர்களும், உயிர்ப்பலிகளுடன் கூடிய கனபூசைகளை விரும்பிப் பெற்றுக் கொள்ளும் காளி முதலானவர்களும், மிகுந்த ஆங்காரத்தை உடையவர்களும், இன்னும் மிகுதியான பலம் கொண்டிருக்கும் பேய்களும், பல்லக்கில் ஏறிவந்து அதிகாரம் செய்யும் தண்டியக்காரர்களும், சண்டாளர்களும், என் பெயரைச் சொன்னவுடனேயே இடி விழுந்தது போல் பயந்து ஓடிட வேண்டும்!

இரிசி காட்டேரி இத்துன்பச் சேனையும்
எல்லினும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும்
விட்டாங்காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக்காரரும் சண்டாளர்களும்
என் பெயர் சொல்லவும் இடி விழுந்து ஓடிட!"

“இந்தப் பகுதியின் தொடர்ச்சியாகவே அடுத்த பகுதிகளும் வருகின்றன. அந்தப் பகுதியையும் பாடுகிறேன்"

(தொடர்ந்து பேசுவார்கள்)

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP