Tuesday, August 03, 2010

குவா குவா! குகா குகா! - ஊமைச் சிறுவன் கதை!

குழந்தை பிறக்கலையே என்ற கவலை ஒரு சிலரை வாட்டினால், குழந்தை பிறந்தும்......ஒரு சிலரைக் கவலை தொத்திக் கொள்ளும்!
ஒரு ஜீவன் உலகை எட்டிப் பார்ப்பதை வைத்துத் தான், எத்தனை எத்தனை இன்ப உணர்ச்சிகள், துன்ப உணர்ச்சிகள்! ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில், ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர..."நான்" என்றே இருந்த மனிதன், "நாம்" என்று திசை மாறுகிறான்! :)

தாமிரபரணிக் கரை ஊரான ஸ்ரீவைகுண்டம் என்னும் அழகிய தலத்தில் ஒரு சைவ வேளாளக் குடும்பம்! சண்முக சிகாமணிக் கவிராயர்-சிவகாம சுந்திரி அம்மை!
குடும்பமே தமிழ்ப் புலமையிலும் முருகனிலும் தான் நடந்து கொண்டிருந்தது! அந்த வீட்டின் அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒரு சத்தம்...குவா-குவா! குகா-குகா!

குமரகுரு என்று பேரிட்டுக் கொஞ்சிக் கொஞ்சி வளர்த்த குழந்தைக்கு, பதி்லுக்குக் கொஞ்சத் தெரியவில்லை!
"அம்மா, அப்பா" என்று அழைத்தால், அதைக் கேட்க, ஏங்கும் காது!
ஆனால் "மா, பா" என்று அழைத்தாலே போதும், அதாவது நடக்காதா என்று ஏங்கியது மனம்! - குழந்தைக்குப் பேச்சு வரவில்லை!

அட, எல்லாக் குழந்தையும் முதல் ஆண்டிலேயே பேசி விடுகிறதா என்ன? அதன் போக்கில் விட்டுப் பார்ப்போம் பார்ப்போம் என்று பார்த்தது தான் மிச்சம்.....கேட்க ஒன்றும் மிச்சமே இல்லை! ஐந்து ஆண்டுகள் கழித்துத் தெரிந்தது...குழந்தை "ஊமை"!



இந்த "ஊமை" என்கிற சொல்லே பிடிக்கலை! அது என்ன "ஊமை ஊரைக் கெடுக்கும்" என்று பழமொழி? நல்லாவே இல்லை! வேறு ஏதாச்சும் நல்ல சொல் உள்ளதா?

பார்வையற்றோர், காது கேளாதோர் என்பது போல்...வாய் பேசாதோர் என்று அழைப்பது ஓரளவு மரியாதையாக இருக்கும்!
விழிப்புலனர்கள், செவிப்புலனர்கள், வாய்ப்புலனர்கள் என்று அழைக்கலாமோ? Physically Handicapped-ஐ விட, Physically Challenged என்பது போல், இது பிடிச்சிருக்கு!

நடுங்கிப் போன குமரகுருவின் பெற்றோர் மருத்துவரை நாடினர்!
பிறவிப் பலனாய் வாய்த்ததை பிற மருத்துவர் தீர்க்க முடியுமா? பிறவி மருத்துவன் அல்லவா தீர்க்க முடியும்!
யார் அவன்? = என்னை...செந்தூர் முருகா சேர்த்துக் கொள்!

மடியேறிய குழந்தையுடன் படியேறினாள்! முருகன் படியேறினாள்! காதலன் வீட்டுப் படி இல்லை என்று ஆனாலும், முருகன் வீட்டுப் படி இல்லை என்று ஒருநாளும் ஆகுமா?

அந்தச் செந்தூர் வீட்டுப் படியிலேயே படியாய்க் கிடந்தனர் பெற்றோர்!
படியாய்க் கிடந்து, உன் பவளவாய் காண்பேனே என்பது ஆழ்வார் பாசுரம்!
இங்கோ, படியாய்க் கிடந்து, மகன் பவளவாய் பேசக் காண்பேனே என்று ஆயிற்று பெத்த வயிறுப் பாசுரம்!

திருச்செந்தூர் தரையிலே வளர்த்தி விட்ட குழந்தை, முருகனருள் முன்னிற்க, வாய் அசைக்கத் தொடங்கியது! அலை அசைக்கும் திருச்செந்தூரில் வாய் அசைக்க, வந்து சேய் அசைக்க, கண்டு தாய் அசைக்க, தமிழ் அசைக்கத் தொடங்கியது!

பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய
பாமேவு தெய்வப் பழமறையும் – தேமேவு
நாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்த
போதமுங் காணாத போதமாய்...

என்று கந்தர் கலி வெண்பா பிறக்கத் துவங்கிற்று! பிள்ளைக் கலி தீர வந்த குழந்தை, கந்தர் கலியைப் பாடத் துவங்கிற்று!

(புத்தேள் = இறைவன்; தேறு அரிய = தெளிய முடியாத; பழமறை = பழமையான மறைகள்;
தேமேவு = இறைவனை சார்ந்த; நாதமும் = நாத தத்துவம்; நாதாந்தம் = விந்து தத்துவம்
நவை = குற்றம்; போதமும் காணாத போதம் = அறிவால் அறிய முடியாத இறைவன்!)


சிறுவனுக்கு முன்பு வாய் மூடி இருந்தாலும், அவன் செவி மூடவில்லை போலும்!
தந்தை சண்முக சிகாமணிக் கவிராயரின் தமிழை, வீட்டில் கேட்டுக் கேட்டே வளர்ந்த குழந்தை, இன்று பாட்டு பாட்டே என்று பாடத் துவங்கி....பையன் குமரகுரு, சில நாளில், குமரகுருபர சுவாமிகள் ஆனார்!



துறவு கொள்ளும் முன், தன் குருவான தருமபுர ஆதீனத்தின் சொற்படி, பல தலங்களுக்குச் சென்ற குமரகுருபரர்...
* மதுரையில் மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் பாடினார்!
* வைத்தீஸ்வரன் கோயிலில் முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழைப் பாடினார்!
* தில்லையில் சிதம்பரக் கோவை பாடினார்!
* பின்பு துறவு பூண்டு, காசிக்குச் சென்று, சகலகலாவல்லி மாலை பாடினார்!
பிள்ளைத்தமிழ் நூல்களில் எல்லாம், இவரின் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழே, இலக்கிய வளத்துக்காகப் பெரிதும் கொண்டாடப்படுகிறது!

தில்லையில், பல சைவ அன்பர்கள், இவரிடம் ஒரு வித்தியாசமான வேண்டுகோள் வைத்தனர்!
தமிழில் உள்ள யாப்பருங்கலக் காரிகை என்னும் பிற்காலத் தமிழ் இலக்கண நூல்! அதில் சமணக் கருத்துக்கள் உள்ள உதாரணச் செய்யுள்கள் இடம் பெறுவதாக அவர்கள் கருதியதால், அதை மாற்றி, அந்நூலின் இலக்கணங்களுக்குச் சைவ விஷயமாகச் செய்யுள் அமைத்துத் தர வேண்டினார்கள்! குமரகுருபரர் முதலில் தயங்கினாலும், பின்னர் எழுதித் தந்தது தான் சிதம்பரச் செய்யுள் கோவை!

இவர் வாழ்வில், சிங்கத்தின் மேலேறிச் சென்று, டில்லி பாதுஷா ஒளரங்கசீப் மன்னரைச் சந்தித்ததாகவும், இந்துஸ்தானி மொழியிலேயே பேசி, அவரிடம் கொடைகள் பெற்று, காசியில் குமரகுரு மடம் அமைத்ததாகவும் சொல்லுவார்கள்!

ஆனால் இது வரலாற்றில் எவ்வளவு தூரம் நிற்கும் என்று தெரியவில்லை!
ஆனானப்பட்ட ஒளரங்கசீப் சிவாலயத்துக்கு நன்கொடை அளித்தாரா? அவர் சிசியா (Jiziya) என்னும் மத வரியைப் போடாமல் விட்டாலே போதும் என்று இருந்த காலம்! அதனால், இப்படியான அதீத சமயப் புனைவுகள் தேவை இல்லை!

மேலும், திருமலை நாயக்கர் முன்னிலையில், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடியதாகவும் இன்னொரு குறிப்பு உண்டு! ஆனால் நாயக்கரோ 1659-லேயே மறைந்து விட்டார்! ஒளரங்கசீப் ஆட்சிக்கு வந்ததே அப்போது தான்!
அப்படி இருக்க, அதற்கு முன்னரே நாயக்கர் முன்னிலையில் பாடி, உடனே காசி யாத்திரையும் சென்று, டில்லி பாதுஷாவைச் சந்தித்தார் என்பதும் ஒட்டாது!

எனவே, டில்லி பாதுஷா என்று குறிப்பிட்டாலும், அது தாரா ஷிகோ-வாக இருக்க வாய்ப்புண்டு!
இவரே ஷாஜகானின் மூத்த வாரிசு! நல்ல சமயப் பொறையாளர்! இவரிடம் குமரகுருபரர் மான்யம் வாங்கி இருக்கலாம்! பின்னாளில், அண்ணன் தாரா ஷிகோ ஒரு முஸ்லீமே அல்ல என்று அறிவித்த ஒளரங்கசீப், தாராவை ஓட ஓட விரட்டி, காட்டிக் கொடுக்க வைத்து, கொன்றது எல்லாம் வரலாற்றுப் பிரசித்தம்!

எனவே, குமரகுருபரர் போன்ற நல்-அடியவர் கதைகளில், ஒட்டாமல் இருக்கும் விஷயங்களைத் திருத்தி எழுதுவது, நாளைய தலைமுறைக்கு நன்மையே பயக்கும்! இதை இன்றைய சமயப் பெரியவர்கள், எதிர்ப்பு என்று எண்ணாது, புரிந்து கொள்ள வேணும்!


காசியில் இன்றும் குமரகுரு மடம் உள்ளது! அங்கே மடம் அமைத்துத் தங்கி, வடகாசியில் தென்மொழித் தொண்டாற்றி வந்தார் குமரகுரு!

இந்துஸ்தானி/இந்தியிலும் புலமை கொண்டவர் ஆதலால், அம்மொழிகளிலும் உபன்னியாசம் நிகழ்த்துவார்! அப்போது ஆற்றியது தான் கம்பராமாயணச் சொற்பொழிவு! = கேட்டவர் துளசிதாசர்! பிறந்தது துளசி ராமாயணம்!

வடமொழி ஆதிக்கம் மிகுந்த அந்தக் காலக் கட்டத்திலேயே, பெருமாள் கோயில்களில்...
* தமிழ்ப் பாசுரங்கள் ஓதி முன்னே செல்ல,
* தமிழை அந்த இறைவனே பின் தொடர,
* அதற்குப் பின்னர் தான் வடமொழி வேதங்களையே ஓதி வந்தனர்!
இந்தக் காட்சிகளைக் கண்ட குமரகுருபரர் மிகவும் லயித்துப் போய்,
இது போன்ற ஒரு நிலை, தில்லையில் வராதா, தமிழ் கடவுளான முருகன் கோயில்களில் தமிழ் என்று முன் செல்லுமோ என்று ஏங்கினார்! அப்போது அவர் வாய் விட்டுப் பாடியது தான் - "பச்சைத் தமிழின் பின் சென்ற பசுங் கொண்டலே!!"

காசியிலேயே குமரகுருபரர் நெடுநாள் வாழ்ந்து, தமிழ்த் தொண்டாற்றி, பின்னர் சிவனடியைச் சேர்ந்தார்!
அன்னாரின் பிள்ளைத் தமிழ் = பிள்ளையின் மீதும், தாயின் மீதும்!
* ஒன்று முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்!
* இன்னொன்று மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்!
இரண்டுமே தமிழ் இலக்கியத்தின் விலைமதிக்க முடியாத பெருஞ்சொத்து! அரசு குமரகுருபரர் நினைவாக வெளியிட்ட அஞ்சல் தலை இதோ!



சரி, எதுக்கு இன்னிக்கி குமரகுருபரர் பற்றி மாதவிப் பந்தலில் பதிவு-ன்னு பாக்கறீங்களா? அவர் குருபூசை-நினைவு நாள் ஏதாச்சும்? இல்லை!
கீழே Youtube காணொளியைப் பாருங்க! - தாய்ப்பால் கொடுத்தாள்! தமிழ்ப் பால் கொடுத்தான்!!


தாய்ப்பால் கொடுத்தாள் பராசக்தி - தனிக்கருணைத்
தமிழ்ப் பால் கொடுத்தான் தமிழ் முருகன்!
வாய்ப்பால் `நான்பாடும் பழந்தமிழில் - பாடத் தொடங்குகிறேன்
ஆடும் மயில் வேலன் அருள்!!

தந்தைக்கு மந்திரத்தைச் சாற்றிப் பொருளுரைத்த
முந்து தமிழ் சக்தி மகன் முருகன் வந்தான்! - பல்
முளைக்கு முன்னே எனக்குக் கவிதை தந்தான்!
கந்தன் வந்தான் கவிதை தந்தான்!!

ஆதிசக்தி நாயகியின் பாதிசக்தி ஆனவர்தம்
நீலிக்கண்ணிலே பிறந்த முருகன் வந்தான் - கலை
ஞானக்கண் திறந்து வைத்து தமிழும் தந்தான்!
கந்தன் வந்தான் கவிதை தந்தான்!!


ஆங்கார சக்தி என்னும் ஓங்காரத் தாமரைக்குள்
ரீங்காரம் செய்யும் வண்டு கந்தன் வந்தான்!
என்றும் நீங்காத செந்தமிழில் கவிதை தந்தான்!
கந்தன் வந்தான் கவிதை தந்தான்!!


வந்தகலி தீர்ந்ததென்று கந்தர்கலி பாட வந்தேன்
சந்தமுள்ள நூறுகவிச் சரணம் தந்தேன்!
அந்தக் கந்தனவன் தனது திருச்சரணம் தந்தான்!
கந்தன் வந்தான் கவிதை தந்தான்!!


வரிகள்: கண்ணதாசன்
குரல்: ராதா ஜெயலட்சுமி (ராதா ஜெயலட்சுமி பாடிய இதர திரைப்பட முருகன் பாடல்கள், இதோ! ; மனமே முருகனின் மயில் வாகனம் என்ற பாட்டு மிகவும் பிரபலமானது!)
இசை: கே.வி. மகாதேவன்
படம்: ஆதிபராசக்தி

18 comments:

கோவி.கண்ணன் August 03, 2010 10:01 PM  

//தாய்ப்பால் கொடுத்தாள் பராசக்தி - தனிக்கருணைத்
தமிழ்ப் பால் கொடுத்தான் தமிழ் முருகன்!//

இந்த கிழமை (வாரம்) தாய்பால் கிழமையாமே......

Test August 03, 2010 11:27 PM  

ஆடி திருகார்த்திகை தினத்தில் திருச்செந்தூர் திருமுருகனின் அருளை வெளிப்படுத்தும் அருமையான பாடல்...

@கோவி அண்ணனுக்கு
//இந்த கிழமை (வாரம்) தாய்பால் கிழமையாமே.....//
:-))))

Jayashree August 04, 2010 12:57 AM  

இருவருக்கும் காண்பரிய ஈசர்மது சேரனார்
விருதுகட்டி அங்கம் வெட்டி வென்றான்காண் அம்மானை
விருதுகட்டி அங்கம்வெட்டி வென்றனரே யாமாகில்
ஆனாலும் காயமில்லை ஐயரவர்க் கம்மானை
ஆடிக்க்ருத்திகைக்கு அருமையான பதிவு!!

நாடி நாடி நரசிங்கா! August 04, 2010 2:30 AM  

நாட்ல எவ்ளோ குழைந்தங்க பேச முடியாம இருக்காங்க!
குமரகுருபரர் பேச முடியாம முருகன் பேச வச்சிருக்கார்!
அப்ப மற்ற குழந்தைங்க?

Eswari August 04, 2010 4:19 AM  

//மேலும், திருமலை நாயக்கர் முன்னிலையில், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடியதாகவும் இன்னொரு குறிப்பு உண்டு! ஆனால் நாயக்கரோ 1659-லேயே மறைந்து விட்டார்! ஒளரங்கசீப் ஆட்சிக்கு வந்ததே அப்போது தான்!
அப்படி இருக்க, அதற்கு முன்னரே நாயக்கர் முன்னிலையில் பாடி, உடனே காசி யாத்திரையும் செய்து, டில்லி பாதுஷாவைச் சந்தித்தார் என்பதும் ஒட்டாது!//

நீங்க படிச்சது HISTORY யா?
நல்ல பதிவு.

Kannabiran, Ravi Shankar (KRS) August 04, 2010 11:30 AM  

//குமரகுருபரர் பேச முடியாம முருகன் பேச வச்சிருக்கார்!
அப்ப மற்ற குழந்தைங்க?//

குமரகுருபரரை முருகன் பேச வைச்சானா? இல்லை அவர்கள் நம்பிக்கை பேச வைத்ததா?

தெய்வத்தால் ஆகாது எனினும்
முயற்சி,
தன் மெய் வருத்த,
கூலி தரும்!

Kannabiran, Ravi Shankar (KRS) August 04, 2010 11:31 AM  

//Eswari said...
நீங்க படிச்சது HISTORY யா?//

இல்லை ஈஸ்வரி!
His Story! :)

Kannabiran, Ravi Shankar (KRS) August 04, 2010 11:37 AM  

//கோவி.கண்ணன் said...
இந்த கிழமை (வாரம்) தாய்பால் கிழமையாமே......//

ஆமாம்!
யாராச்சும் பாட்டில் இருந்து கோடி காட்டுவாங்களா-ன்னு காத்துக்கிட்டு இருந்தேன்! எல்லாம் முருகனையே பாத்துக்கிட்டு இருந்தாங்க போல! "தாய்ப்பால் கொடுத்தாள்"-ன்னு பாடல் துவங்குவதை யாரும் நோட் பண்ணலை போல!

உலகத் தாய்ப்பால் வாரம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1-7 வரை!
எங்கள் Community Center-இலும் ஒரு சுற்றறிக்கை வந்தது! Breast is the Best!

எப்படி இருக்கீங்க கோவி அண்ணா?

Kannabiran, Ravi Shankar (KRS) August 04, 2010 11:39 AM  

//Logan said...
ஆடி திருகார்த்திகை தினத்தில் திருச்செந்தூர் திருமுருகனின் அருளை வெளிப்படுத்தும் அருமையான பாடல்...//

ஓ...இன்னிக்கி ஆடிக் கிருத்திகையா? நான் வழக்கம் போல செவ்வாய்க் கிழமைப் பதிவு தான் போட்டேன்! அது குமரகுருபரர் பதிவா, ஆடிக்கிருத்திகைப் பதிவாத் தான் அமைஞ்சிரிச்சோ?

Kannabiran, Ravi Shankar (KRS) August 04, 2010 11:42 AM  

//Jayashree said...
இருவருக்கும் காண்பரிய ஈசர்மது சேரனார்//

திருமாலும் பிரம்மனும் தேடித் தேட முடியாத ஈசனை

//விருதுகட்டி அங்கம் வெட்டி வென்றான்காண் அம்மானை//

?

//விருதுகட்டி அங்கம்வெட்டி வென்றனரே யாமாகில்
ஆனாலும் காயமில்லை ஐயரவர்க் கம்மானை//

அங்கம் வெட்டினாலும் காயமில்லை! என்ன அங்கம்? என்ன சிலேடை? என்ன அம்மானை விளையாட்டு? விளக்குங்க ஜெயஸ்ரீ மேடம்! You know, I am one big maNdu! :)

குமரன் (Kumaran) August 04, 2010 11:53 AM  

பாட்டும் நல்லா இருக்கு... :-)

Kannabiran, Ravi Shankar (KRS) August 04, 2010 11:58 AM  

@குமரன் (Kumaran)
//பாட்டும் நல்லா இருக்கு... :-)//

பாட்டும்-மா? உம்மைத் தொகை?
அப்போ, வேறு எது நல்லா இருக்கு, குமரன்? கோவி சொன்னதா, ஜெயஸ்ரீ மேடம் சொன்னதா? இல்லை நான் எதுனா பதிவில் உளறி விட்டேனா?

குமரன் (Kumaran) August 04, 2010 12:01 PM  

பாட்டும்ன்னு சொன்னா அது உம்மைத் தொகையா? இன்னொரு தடவை இலக்கணம் படிச்சுட்டு வாங்க! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) August 04, 2010 12:04 PM  

@குமரன்
அது குமரனாகிய "உம்மைச்" சொன்னது! ஏதோ நீங்க தொக்கி (மறைத்து) சொல்றீங்களே! அந்த "உம்மை" தொகை! :)

நீங்க சொன்ன பாட்டு"ம்" - உம்மைத் தொகை இல்லை! உம்மை விரி! :) ஆனா வேறு ஏதோ ஒன்னு அதுல தொகைஞ்சி இருக்கு! :)

எப்படி? Spin Doctor பண்ணிட்டேனா?

Sweatha Sanjana August 04, 2010 11:41 PM  

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

நாடி நாடி நரசிங்கா! August 05, 2010 1:08 AM  

தெய்வத்தால் ஆகாது எனினும்
முயற்சி,
தன் மெய் வருத்த,
கூலி தரும்!
:))))

Sweatha Sanjana August 08, 2010 11:41 PM  

படிங்க படிங்க உங்களுக்கு பிடிச்சத படிங்க .. எழுதுங்க எழுதுங்க ஆக்கபூர்வமா எழுதுங்க
அப்படியே பரிசுகளையும் வெல்லுங்க !! ஜீஜிக்ஸ் .( www.jeejix.com )

Unknown August 16, 2010 5:57 AM  

I think your native is near tiruchendur,srivaikundam? Whenever i go to senthilandavar my inspiration as prarthanai utharanam is kumaraguruparar and their parents.Your casual heading is deceptive in the sense it contains very serious statistics and your craving for equating Saivam AND vAINAVAM ON THE SAME SANGAPALAHAI is very apparent and it also shows your courage to " see only the neck" as visualised by Arjunan.But having brushed aside the Aurangaseep's theory you chose to link it as caption!.It is a Baghyaraj technique..Vandhiathevar muthaippa sollitar.I am a late entrant into this computerworld.But am a lucky one.Muthalil pullanipakkathil vizhunthu aako pakkam sendru vanthiathevanai vanangi Mathavipanthalil mohithirukkiren! I feel at home.But your reaction to Narasimharin nalayiram is of matured one that has no bias and not reactive.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP