Monday, August 23, 2010

அந்தோணி முத்து! என் ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி!

இந்த நாளில், முருகனருளில் ஒரு அஞ்சலி!
ஊனங்கள் பல இருந்தும், வானங்கள் தொட முடியும் என்பதற்கும்...
எவ்வளவு தோண்டினாலும், தன்னம்பிக்கை சுரக்கச் சுரக்க, சுரக்கும் என்பதற்கும்...
என் கண் முன்னே எடுத்துக்காட்டாய் நின்றவர்...
அந்தோணி முத்து அண்ணா!

இளம் வயதில், அவர் மறைந்த செய்தி, என்னை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது!


இப்பத் தான், நானும் மதுமிதா அக்காவும், சென்னை புழலேரியில், இவர் வீட்டிற்குச் சென்று பார்த்தாப் போல இருக்கு! இளையாராஜா இசையில் உச்சி வகிடு எடுத்து-ன்னு பாடக் கேட்டாப் போல இருக்கு!

காலன்றி, மேல்கொண்டு, தவழ்ந்து தவழ்ந்தே அவர் எங்களை உபசரித்த விதம்...
இல்லத்துக்கு வருவோரை முகத்தாலேயே எப்படி மனங்குளிர வரவேற்கலாம் என்பதை நண்பர்களை விட இவரிடத்தில் தான் தெரிந்து கொண்டேன்!

என்னவொரு முனைப்பு, தன்னார்வம், சுய சம்பாத்தியம், பொது முனைப்பு!
தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்! - இந்தக் குறளுக்கு உரை = அந்தோணிமுத்துவின் வாழ்வு!

இதோ, அந்தோணி அண்ணன் பற்றிய இசை இன்பப் பதிவு!
அவருக்குப் பிடிச்ச சிவரஞ்சனி பாட்டு பத்தி அவரே எழுதின பதிவு இங்கே!

ஊரெல்லாம் ஓரோர் பேர் சொல்லி என்னை அழைக்க...நீங்கள் மட்டும் "விஷ்ணு" என்று எதற்கு அழைத்தீரோ? அறியேன்!
ஆனால் இதோ உங்கள் "விஷ்ணுவின்" துதிகள்! - பிதாவே, இவர் மனத்தை சொஸ்தம் பண்ணி ஆற்றும்! இணையடி நீழலில் ஆற்றும்!

என் முருகா.....அந்தோணிமுத்து அண்ணாவின் ஆவி குடி இருக்க...ஆவி-நன்-குடி அருள்வாய் தானே?
Father, into thy hands I commit my spirit!" - Luke 23:46
Mr. Antonimuthu passed away on August 23, 2010 at 10.00 a.m. due to stomach tumor and wheezing in Chennai.
Funeral Mass offered at 11.00 a.m. on August 23, 2010, at Peria Nayagi Chapel in his native village, Peria Nayagi Nagar, Villupuram District 605702.ஆவி குடி இருக்க - ஆவினன் குடி! இதுவே இந்த வார முருகனருள் பாடல்! சீர்மிகு சீர்காழியின் குரலில்...இதோ


ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி - அங்கே
கொலுவிருக்கும் அழகுத் திருவடி
(என் ஆவி குடியிருக்கும்)

பாவங்களைப் போக்கும் பால் காவடி
தேன் பஞ்சாமிருதம் இனிக்கும் குகன் சேவடி
(என் ஆவி குடியிருக்கும்)

சேவல் எழுந்தாடும் வெற்றிக்கொடி
சேந்தன் திருப்பாதம் பற்றிப்பிடி
வேல் வந்து வரவேற்கும் வா இப்படி
கேளாய் நீ நெஞ்சே என் சொல் படி
(என் ஆவி குடியிருக்கும்)

நீல மயில் ஆடும் கோயில் படி
நித்த நித்தம் காணும் நிலை எப்படி
காலம் எல்லாம் நினைந்து கண்ணீர் வடி
வாழ்வு தரும் முருகன் வண்ணப்பொற் கழலடி
(என் ஆவி குடியிருக்கும்)

Tuesday, August 03, 2010

குவா குவா! குகா குகா! - ஊமைச் சிறுவன் கதை!

குழந்தை பிறக்கலையே என்ற கவலை ஒரு சிலரை வாட்டினால், குழந்தை பிறந்தும்......ஒரு சிலரைக் கவலை தொத்திக் கொள்ளும்!
ஒரு ஜீவன் உலகை எட்டிப் பார்ப்பதை வைத்துத் தான், எத்தனை எத்தனை இன்ப உணர்ச்சிகள், துன்ப உணர்ச்சிகள்! ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில், ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர..."நான்" என்றே இருந்த மனிதன், "நாம்" என்று திசை மாறுகிறான்! :)

தாமிரபரணிக் கரை ஊரான ஸ்ரீவைகுண்டம் என்னும் அழகிய தலத்தில் ஒரு சைவ வேளாளக் குடும்பம்! சண்முக சிகாமணிக் கவிராயர்-சிவகாம சுந்திரி அம்மை!
குடும்பமே தமிழ்ப் புலமையிலும் முருகனிலும் தான் நடந்து கொண்டிருந்தது! அந்த வீட்டின் அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒரு சத்தம்...குவா-குவா! குகா-குகா!

குமரகுரு என்று பேரிட்டுக் கொஞ்சிக் கொஞ்சி வளர்த்த குழந்தைக்கு, பதி்லுக்குக் கொஞ்சத் தெரியவில்லை!
"அம்மா, அப்பா" என்று அழைத்தால், அதைக் கேட்க, ஏங்கும் காது!
ஆனால் "மா, பா" என்று அழைத்தாலே போதும், அதாவது நடக்காதா என்று ஏங்கியது மனம்! - குழந்தைக்குப் பேச்சு வரவில்லை!

அட, எல்லாக் குழந்தையும் முதல் ஆண்டிலேயே பேசி விடுகிறதா என்ன? அதன் போக்கில் விட்டுப் பார்ப்போம் பார்ப்போம் என்று பார்த்தது தான் மிச்சம்.....கேட்க ஒன்றும் மிச்சமே இல்லை! ஐந்து ஆண்டுகள் கழித்துத் தெரிந்தது...குழந்தை "ஊமை"!இந்த "ஊமை" என்கிற சொல்லே பிடிக்கலை! அது என்ன "ஊமை ஊரைக் கெடுக்கும்" என்று பழமொழி? நல்லாவே இல்லை! வேறு ஏதாச்சும் நல்ல சொல் உள்ளதா?

பார்வையற்றோர், காது கேளாதோர் என்பது போல்...வாய் பேசாதோர் என்று அழைப்பது ஓரளவு மரியாதையாக இருக்கும்!
விழிப்புலனர்கள், செவிப்புலனர்கள், வாய்ப்புலனர்கள் என்று அழைக்கலாமோ? Physically Handicapped-ஐ விட, Physically Challenged என்பது போல், இது பிடிச்சிருக்கு!

நடுங்கிப் போன குமரகுருவின் பெற்றோர் மருத்துவரை நாடினர்!
பிறவிப் பலனாய் வாய்த்ததை பிற மருத்துவர் தீர்க்க முடியுமா? பிறவி மருத்துவன் அல்லவா தீர்க்க முடியும்!
யார் அவன்? = என்னை...செந்தூர் முருகா சேர்த்துக் கொள்!

மடியேறிய குழந்தையுடன் படியேறினாள்! முருகன் படியேறினாள்! காதலன் வீட்டுப் படி இல்லை என்று ஆனாலும், முருகன் வீட்டுப் படி இல்லை என்று ஒருநாளும் ஆகுமா?

அந்தச் செந்தூர் வீட்டுப் படியிலேயே படியாய்க் கிடந்தனர் பெற்றோர்!
படியாய்க் கிடந்து, உன் பவளவாய் காண்பேனே என்பது ஆழ்வார் பாசுரம்!
இங்கோ, படியாய்க் கிடந்து, மகன் பவளவாய் பேசக் காண்பேனே என்று ஆயிற்று பெத்த வயிறுப் பாசுரம்!

திருச்செந்தூர் தரையிலே வளர்த்தி விட்ட குழந்தை, முருகனருள் முன்னிற்க, வாய் அசைக்கத் தொடங்கியது! அலை அசைக்கும் திருச்செந்தூரில் வாய் அசைக்க, வந்து சேய் அசைக்க, கண்டு தாய் அசைக்க, தமிழ் அசைக்கத் தொடங்கியது!

பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய
பாமேவு தெய்வப் பழமறையும் – தேமேவு
நாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்த
போதமுங் காணாத போதமாய்...

என்று கந்தர் கலி வெண்பா பிறக்கத் துவங்கிற்று! பிள்ளைக் கலி தீர வந்த குழந்தை, கந்தர் கலியைப் பாடத் துவங்கிற்று!

(புத்தேள் = இறைவன்; தேறு அரிய = தெளிய முடியாத; பழமறை = பழமையான மறைகள்;
தேமேவு = இறைவனை சார்ந்த; நாதமும் = நாத தத்துவம்; நாதாந்தம் = விந்து தத்துவம்
நவை = குற்றம்; போதமும் காணாத போதம் = அறிவால் அறிய முடியாத இறைவன்!)


சிறுவனுக்கு முன்பு வாய் மூடி இருந்தாலும், அவன் செவி மூடவில்லை போலும்!
தந்தை சண்முக சிகாமணிக் கவிராயரின் தமிழை, வீட்டில் கேட்டுக் கேட்டே வளர்ந்த குழந்தை, இன்று பாட்டு பாட்டே என்று பாடத் துவங்கி....பையன் குமரகுரு, சில நாளில், குமரகுருபர சுவாமிகள் ஆனார்!துறவு கொள்ளும் முன், தன் குருவான தருமபுர ஆதீனத்தின் சொற்படி, பல தலங்களுக்குச் சென்ற குமரகுருபரர்...
* மதுரையில் மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் பாடினார்!
* வைத்தீஸ்வரன் கோயிலில் முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழைப் பாடினார்!
* தில்லையில் சிதம்பரக் கோவை பாடினார்!
* பின்பு துறவு பூண்டு, காசிக்குச் சென்று, சகலகலாவல்லி மாலை பாடினார்!
பிள்ளைத்தமிழ் நூல்களில் எல்லாம், இவரின் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழே, இலக்கிய வளத்துக்காகப் பெரிதும் கொண்டாடப்படுகிறது!

தில்லையில், பல சைவ அன்பர்கள், இவரிடம் ஒரு வித்தியாசமான வேண்டுகோள் வைத்தனர்!
தமிழில் உள்ள யாப்பருங்கலக் காரிகை என்னும் பிற்காலத் தமிழ் இலக்கண நூல்! அதில் சமணக் கருத்துக்கள் உள்ள உதாரணச் செய்யுள்கள் இடம் பெறுவதாக அவர்கள் கருதியதால், அதை மாற்றி, அந்நூலின் இலக்கணங்களுக்குச் சைவ விஷயமாகச் செய்யுள் அமைத்துத் தர வேண்டினார்கள்! குமரகுருபரர் முதலில் தயங்கினாலும், பின்னர் எழுதித் தந்தது தான் சிதம்பரச் செய்யுள் கோவை!

இவர் வாழ்வில், சிங்கத்தின் மேலேறிச் சென்று, டில்லி பாதுஷா ஒளரங்கசீப் மன்னரைச் சந்தித்ததாகவும், இந்துஸ்தானி மொழியிலேயே பேசி, அவரிடம் கொடைகள் பெற்று, காசியில் குமரகுரு மடம் அமைத்ததாகவும் சொல்லுவார்கள்!

ஆனால் இது வரலாற்றில் எவ்வளவு தூரம் நிற்கும் என்று தெரியவில்லை!
ஆனானப்பட்ட ஒளரங்கசீப் சிவாலயத்துக்கு நன்கொடை அளித்தாரா? அவர் சிசியா (Jiziya) என்னும் மத வரியைப் போடாமல் விட்டாலே போதும் என்று இருந்த காலம்! அதனால், இப்படியான அதீத சமயப் புனைவுகள் தேவை இல்லை!

மேலும், திருமலை நாயக்கர் முன்னிலையில், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடியதாகவும் இன்னொரு குறிப்பு உண்டு! ஆனால் நாயக்கரோ 1659-லேயே மறைந்து விட்டார்! ஒளரங்கசீப் ஆட்சிக்கு வந்ததே அப்போது தான்!
அப்படி இருக்க, அதற்கு முன்னரே நாயக்கர் முன்னிலையில் பாடி, உடனே காசி யாத்திரையும் சென்று, டில்லி பாதுஷாவைச் சந்தித்தார் என்பதும் ஒட்டாது!

எனவே, டில்லி பாதுஷா என்று குறிப்பிட்டாலும், அது தாரா ஷிகோ-வாக இருக்க வாய்ப்புண்டு!
இவரே ஷாஜகானின் மூத்த வாரிசு! நல்ல சமயப் பொறையாளர்! இவரிடம் குமரகுருபரர் மான்யம் வாங்கி இருக்கலாம்! பின்னாளில், அண்ணன் தாரா ஷிகோ ஒரு முஸ்லீமே அல்ல என்று அறிவித்த ஒளரங்கசீப், தாராவை ஓட ஓட விரட்டி, காட்டிக் கொடுக்க வைத்து, கொன்றது எல்லாம் வரலாற்றுப் பிரசித்தம்!

எனவே, குமரகுருபரர் போன்ற நல்-அடியவர் கதைகளில், ஒட்டாமல் இருக்கும் விஷயங்களைத் திருத்தி எழுதுவது, நாளைய தலைமுறைக்கு நன்மையே பயக்கும்! இதை இன்றைய சமயப் பெரியவர்கள், எதிர்ப்பு என்று எண்ணாது, புரிந்து கொள்ள வேணும்!


காசியில் இன்றும் குமரகுரு மடம் உள்ளது! அங்கே மடம் அமைத்துத் தங்கி, வடகாசியில் தென்மொழித் தொண்டாற்றி வந்தார் குமரகுரு!

இந்துஸ்தானி/இந்தியிலும் புலமை கொண்டவர் ஆதலால், அம்மொழிகளிலும் உபன்னியாசம் நிகழ்த்துவார்! அப்போது ஆற்றியது தான் கம்பராமாயணச் சொற்பொழிவு! = கேட்டவர் துளசிதாசர்! பிறந்தது துளசி ராமாயணம்!

வடமொழி ஆதிக்கம் மிகுந்த அந்தக் காலக் கட்டத்திலேயே, பெருமாள் கோயில்களில்...
* தமிழ்ப் பாசுரங்கள் ஓதி முன்னே செல்ல,
* தமிழை அந்த இறைவனே பின் தொடர,
* அதற்குப் பின்னர் தான் வடமொழி வேதங்களையே ஓதி வந்தனர்!
இந்தக் காட்சிகளைக் கண்ட குமரகுருபரர் மிகவும் லயித்துப் போய்,
இது போன்ற ஒரு நிலை, தில்லையில் வராதா, தமிழ் கடவுளான முருகன் கோயில்களில் தமிழ் என்று முன் செல்லுமோ என்று ஏங்கினார்! அப்போது அவர் வாய் விட்டுப் பாடியது தான் - "பச்சைத் தமிழின் பின் சென்ற பசுங் கொண்டலே!!"

காசியிலேயே குமரகுருபரர் நெடுநாள் வாழ்ந்து, தமிழ்த் தொண்டாற்றி, பின்னர் சிவனடியைச் சேர்ந்தார்!
அன்னாரின் பிள்ளைத் தமிழ் = பிள்ளையின் மீதும், தாயின் மீதும்!
* ஒன்று முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்!
* இன்னொன்று மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்!
இரண்டுமே தமிழ் இலக்கியத்தின் விலைமதிக்க முடியாத பெருஞ்சொத்து! அரசு குமரகுருபரர் நினைவாக வெளியிட்ட அஞ்சல் தலை இதோ!சரி, எதுக்கு இன்னிக்கி குமரகுருபரர் பற்றி மாதவிப் பந்தலில் பதிவு-ன்னு பாக்கறீங்களா? அவர் குருபூசை-நினைவு நாள் ஏதாச்சும்? இல்லை!
கீழே Youtube காணொளியைப் பாருங்க! - தாய்ப்பால் கொடுத்தாள்! தமிழ்ப் பால் கொடுத்தான்!!


தாய்ப்பால் கொடுத்தாள் பராசக்தி - தனிக்கருணைத்
தமிழ்ப் பால் கொடுத்தான் தமிழ் முருகன்!
வாய்ப்பால் `நான்பாடும் பழந்தமிழில் - பாடத் தொடங்குகிறேன்
ஆடும் மயில் வேலன் அருள்!!

தந்தைக்கு மந்திரத்தைச் சாற்றிப் பொருளுரைத்த
முந்து தமிழ் சக்தி மகன் முருகன் வந்தான்! - பல்
முளைக்கு முன்னே எனக்குக் கவிதை தந்தான்!
கந்தன் வந்தான் கவிதை தந்தான்!!

ஆதிசக்தி நாயகியின் பாதிசக்தி ஆனவர்தம்
நீலிக்கண்ணிலே பிறந்த முருகன் வந்தான் - கலை
ஞானக்கண் திறந்து வைத்து தமிழும் தந்தான்!
கந்தன் வந்தான் கவிதை தந்தான்!!


ஆங்கார சக்தி என்னும் ஓங்காரத் தாமரைக்குள்
ரீங்காரம் செய்யும் வண்டு கந்தன் வந்தான்!
என்றும் நீங்காத செந்தமிழில் கவிதை தந்தான்!
கந்தன் வந்தான் கவிதை தந்தான்!!


வந்தகலி தீர்ந்ததென்று கந்தர்கலி பாட வந்தேன்
சந்தமுள்ள நூறுகவிச் சரணம் தந்தேன்!
அந்தக் கந்தனவன் தனது திருச்சரணம் தந்தான்!
கந்தன் வந்தான் கவிதை தந்தான்!!


வரிகள்: கண்ணதாசன்
குரல்: ராதா ஜெயலட்சுமி (ராதா ஜெயலட்சுமி பாடிய இதர திரைப்பட முருகன் பாடல்கள், இதோ! ; மனமே முருகனின் மயில் வாகனம் என்ற பாட்டு மிகவும் பிரபலமானது!)
இசை: கே.வி. மகாதேவன்
படம்: ஆதிபராசக்தி

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP