Saturday, January 17, 2009

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன்

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் - ஒரு
மரமானாலும் பழமுதிர்சோலை மரம் ஆவேன் - கருங்
கல்லானாலும் தணிகை மலையில் கல் ஆவேன் - பசும்
புல்லானாலும் முருகன் அருளால் பூ ஆவேன்




(மண்ணானாலும்)

பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன் ஆவேன் - பனிப்
பூவானாலும் சரவணப் பொய்கை பூ ஆவேன் - தமிழ்ப்
பேச்சானாலும் திருப்புகழ் பேச்சாவேன் - மனம்
பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்

(மண்ணானாலும்)

சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன் - பழச்
சுவையானாலும் பஞ்சாமிருதச் சுவையாவேன் - அருள்
உண்டானாலும் வீடும் பேறும் உண்டாவேன் - தனி
உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்


(மண்ணானாலும்)

முருகா முருகா முருகா முருகா


***

சிறு வயதில் இருந்தே இந்தப் பாடலும் இதோடு இசைக்கப்படும் மற்ற முருகன் பாடல்களும் மிகவும் பிடிக்கும். அடிக்கடி கேட்டுக் கேட்டுப் பொருள் புரியாமலேயே மனப்பாடம் ஆன பாடல்கள் இவை. அதிலும் இந்தப் பாட்டில் 'ஆவேன் ஆவேன்' என்று வரும் போது திருச்செந்தூரில் கடற்கரை இருப்பதால் கடற்கரை மண் ஆவேன் என்பது புரிந்தது; மற்றவை புரியவில்லை. நாட்கள் செல்ல செல்ல ஒவ்வொன்றாகப் புரியத் தொடங்கியது.

குலசேகர ஆழ்வார் பத்து பாசுரங்களில் 'மீன் ஆவேன்; பறவை ஆவேன்; படி ஆவேன்; எம்பெருமான் திருமலையில் ஏதேனும் ஆவேனே' என்று பாடுவார். அப்பாசுரங்கள் இந்தப் பாடலை எழுதியவருக்குத் தூண்டுகோலாக இருந்தது போலும்.

சில வரிகளில் அந்த இடத்தில் / தலத்தில் எது சிறந்ததோ (திருச்செந்தூர்/மண்) அதுவாக ஆவேன் என்கிறார் பாடலாசிரியர். சில வரிகளில் பொதுவாக பொருட்களைக் கூறி அவற்றில் சிறப்பாகவும் விதப்பாகவும் இருப்பதாக (புல்/பூ) ஆவேன் என்கிறார்.

திருச்செந்தூர் என்றவுடனே பலருக்கும் அங்கே அலை வீசி நிற்கும் கடலும் கோவிலுக்கு நேரே நெடுக விரிந்திருக்கும் கடற்கரை மணல்வெளியும் தான் நினைவிற்கு வரும். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்களே; திருச்செந்தூரில் எங்கே குன்று என்றும் சிலர் கேட்கலாம். திருச்செந்தூரும் ஒரு குன்றின் மேல் தான் இருக்கின்றது. கடல்நுரைகளால் ஆன சிறு குன்றில் தான் கோவில் கட்டப்பட்டிருக்கிறது; கோவிலுக்குள்ளே ஆங்காங்கே அந்தக் குன்று வெளிப்படுவதைக் காணலாம். வள்ளி குகையையும் பலர் பார்த்திருப்பீர்கள். இப்படி தேடிப் பிடித்துத் தான் திருச்செந்தூரில் குன்றைக் காணவேண்டும். ஆனால் பரந்து விரிந்த மணல்பரப்பு அப்படி இல்லை. எல்லா அடியார்களும் ஓடி ஆடி நடந்து இளைப்பாறிக் கிடக்கும் வெளி அது. அடியார் பெருமை சொல்லவும் பெரிதே என்றாளே ஒளவைக்கிழவி. அந்த அடியார்களின் திருவடிகள் படும் இடத்தில் அறிவே இல்லாத பொருளாக மாறி இருக்கவும் அருளாளர்கள் விரும்புகிறார்களே. அந்த மரபை ஒட்டி இந்தப் பாடலை எழுதியவரும் திருச்செந்தூரில் அடியார்கள் திருவடி படும் இடமான மணல் வெளியில் ஒரு மண்ணாக இருப்பேன் என்கிறார் போலும்.

இறைவன் கட்டளைப்படி மண் ஆகும் வாய்ப்பு கிடைத்தால் திருச்செந்தூரில் மண் ஆவேன் என்றார். இறைவன் 'நீ மரமாக ஆவாய்' என்றால் அப்போது பழமுதிர்ச்சோலையில் அந்த மரம் ஆவேன் என்கிறார் பாடலாசிரியர். பழமுதிர்ச்சோலை என்றாலே அங்கே பலவிதமான மரங்கள் தானே இருக்கும். வெயிலுக்கு இதமாக அடியார்கள் அமர்ந்து இளைப்பாற நிழல் தந்து உதவும் அம்மரங்கள். அப்படிப்பட்ட மரத்தின் கீழ் தான் அடியாரான ஒளவைப் பாட்டியும் அமர்ந்து இளைப்பாறினார். அவள் அங்கே இளைப்பாறியதால் குமரனும் அம்மரத்தின் மேல் அமர்ந்து சுட்ட பழம் உதிர்த்தான். அப்படி அடியார்கள் நிழலில் அமர்ந்து இளைப்பாறவும் குமரன் கோல் ஏந்தி வீற்றிருக்கவும் உதவும் ஒரு மரமாக ஆவேன் என்கிறார் பாவலர்.

மண்ணும் இல்லை மரமும் இல்லை கல்லாக ஆவாய் என்பது இறைவன் கட்டளையானால் அப்போது திருத்தணிகை மலை கல்லாக ஆவேன் என்கிறார். அங்கே தானே படிகளெல்லாம் இறைவன் திருப்புகழ் பாடும். அங்கே தானே மலையேறி வந்த களைப்பு தீர அங்கிருக்கும் கல்லின் மேல் அமர்ந்து அடியார்கள் இளைப்பாறுவார்கள். அப்படிப்பட்ட கல்லாக, திருப்புகழ் பாடும் படிக்கல்லாக ஆவேன் என்கிறார் புலவர்.

புல்லாக பிறவி பெறுவாய் என்றான் புவனசுந்தரன் எனில் அவன் அருளாலே அப்புல்லே பூசைக்குப் பயன்படும் பூவாக மாறுவது போல் அறுகம் புல்லாக ஆவேன் என்கிறாரோ? இருக்கலாம். இல்லையேல் செடி கொடி என்றிவற்றில் பூக்காமல் புல்லில் பூக்கும் சிறு பூவாக மாறி அவன் முற்றம் முழுக்க நிறைந்து அவன் திருப்பாதங்களுக்கும் அவன் அடியார்கள் திருப்பாதங்களுக்கும் மெத்தையாக அமைவேன் என்கிறார் போலும்.

பொன்னாக மாறுவாய் என்று கூறினான் எனில் அப்பொன்னும் மக்கள் அணியும் அணிகலனாக மாறாமல் அவன் அழகுக்கு அழகு சேர்க்கும் சக்தி வடிவேல் செய்யும் பசும்பொன்னாக ஆவேன் என்கிறார். சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல் என்று அவன் அடியார் இடர் கடியும் அணிகலன் இச்சுடர்வேல் தானே. அவன் பணியைப் போல் அடியார் பணியும் செய்யும் அணிவேலாக ஆவேன் என்கிறார்.

நீரில் மலரும் பூவாக ஆவாய் எனில் திருக்குமரன் சிறு குழந்தையாகப் பிறக்கும் சரவணப்பொய்கைப் பூவாக ஆவேன் என்கிறார். அப்பொய்கையில் அடியார் இறங்கிக் குடைந்து நீராடும் போது அவர்களின் திருமேனிக்கு மணம் சேர்க்கும் பனிப்பூவாக ஆவேன் என்கிறார்.

எத்தனையோ பேசுகிறோம்; அப்பேச்செல்லாம் பேச்சா? சில நேரங்களில் அவை ஏச்சாகவும் போகின்றன. செந்தமிழால் வைவோரையும் வாழவைப்பான் வேலவன். அதே செந்தமிழால் அவன் திருப்புகழ் பாடினால்? அவனது திருவுள்ளமும் அவன் அடியார் திருவுள்ளமும் மகிழும் படி திருப்புகழ் விளக்கப் பேச்சாவேன் என்கிறார் புலவர்.

அதெல்லாம் கிடையாது; நீ பித்தனாகத் தான் திரிவாய் என்று திருமுருகன் திருவுள்ளாம் வைத்தானாகில் அப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை; அவன் மேலேயே பித்தாகி 'முருகன் மேல் பித்தி இவனுக்கு முத்திப் போச்சு' என்னும் படி திரிவேன் என்கிறார் புலவர். சிவனார் மனம் குளிர உபதேச மந்திரம் இரு செவி மீதிலும் பகரும் குருநாதனின் திருப்புகழ் பாடி அடியார் மனம் குளிரச் செய்யும் முத்தனாவேன் என்கிறார்.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே; அதைத் தொழுது படித்திடடி பாப்பா என்றான் இன்னொரு புலவன். அச்சொற்களிலேயே ஒற்றை எழுத்துச் சொல்லான ஓம் என்ற சொல்லின் பொருள் உணர்ந்து சொன்னால் இன்னும் பயன் உண்டு. சிவனார் மனம் குளிர சொல்லப்பட்டது அம்மந்திரம் தானே. தமிழ்ப்பேச்சாக கூட இல்லை; ஒற்றைச் சொல்லாக மாறுவாய் என்றால் அந்த ஒற்றைச் சொல்லும் ஓம்காரம் என்னும் சொல்லாக மாறுவேன் என்கிறார் புலவர்.

அடியாருக்கும் அண்ணலுக்கும் பிடித்தது அவன் திருமேனி தீண்டிய பஞ்சாமிருதம் தானே. அப்பஞ்சாமிருதத்தில் ஒரு பழமாக ஆவேன் என்கிறார் புலவர்.

அவன் அருள் இருந்தால் தானே எனக்கு வீடுபேறு கிட்டும்; என் முயற்சியால் இனி ஆவதொன்று இல்லை; எல்லாம் அவன் அருளாலே நிகழ்வது என்று நினைந்திருந்து ஆன்மிகப்பயிராக அவன் அருளால் ஆவேன் என்று நிறைக்கிறார் ஆசிரியர்.

Wednesday, January 07, 2009

மாதயை எனும் நிதி நீ தயை புரிந்தருள் மாதவன் மருகனே

செந்தில் வாழ் நகர் தேவாதி தேவன் முருகனுக்கு அரோகரா
இன்று கிருத்திகைத் திருநாள். முருகனை வணங்க வாய்ப்பளித்த முருகனுக்கு நன்றி. திரு. பாபநாசம் சிவனின் முத்தான ஒரு பாடல்.வசந்தா ராகத்தில் அமைந்தது . வசந்தாவின் ஜீவா-ஸ்வரமான மா தா என்ற ஸ்வரங்களை வைத்து விளையாடி இருக்கிறார் . இதற்குத்தான் _ச்வராக்ஷரம் என்று பெயர். -ஸ்வரங்களே வார்த்தைகளாக வரும்.
ராகம்;- வஸந்தா தாளம்:- ஆதி2 களை
பல்லவி
மாதயை நிதிஎனும் நீதயை புரிந்தருள் மாதவன் மருகனே
முருகனே குகனே மலைமகள் மகனே........(மாதயை நிதியெனும்)

அனுபல்லவி

போதயன் பணிமலர்ப்பாதனே மறைமுகன்
புகலரும் ப்ரணவ மகிமை மெய்ப்பொருளை
புகழ் தாதை காதில் ஓதும் குருநாத...(மாதயை நிதியெனும்)

சரணம்

கந்தனே கலியுகந்தனில் இரு கண்
கண்ட தெய்வமென எண்டிசை புகழும்
செந்திலாதிப சிறந்த வேலணியும்
சேவலா அமரர் காவலா ஷண்முகா...(மாதயை நிதியெனும்)
பாடல் கிடைக்கவில்லை யாரவது தெரிந்தால் சொல்லுங்கள்

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP