Thursday, December 08, 2011

"தீப" மங்கள சோதீ நமோ நம!

அன்பர்கள் அனைவருக்கும் "கார்த்திகை விளக்கீடு" வாழ்த்துக்கள்!
திருக் கார்த்திகைத் தீபம் = தீப மங்கள சோதீ நமோ நம!



நாத விந்து கலாதீ நமோ நம என்னும் திருப்புகழ்! - இது திருவாவினன்குடி என்னும் பழநித் திருப்புகழில் உள்ள அர்ச்சனை!

இதை மனப்பாடம் செய்வதும் மிக எளிது! முயன்று பாருங்க! இந்த அர்ச்சனை உங்களுக்குப் பிடித்துப் போகும்!
இதோ, சுதா ரகுநாதன் ஒவ்வொரு பத்தியின் முடிவிலும், ஒரு இழு இழுப்பது நல்லாவே இருக்கு! :) கேட்டுக் கொண்டே வாசியுங்கள்!



நாத விந்து கலாதி நமோ நம
வேத மந்திர சொரூபா நமோ நம
ஞான பண்டித சுவாமி நமோ நம - வெகுகோடி


நாம சம்பு குமாரா நமோ நம
போக அந்தரி பாலா நமோ நம
நாக பந்த மயூர நமோ நம - பரசூரர்

சேத தண்ட வினோதா நமோ நம
கீத கிண்கிணி பாதா நமோ நம
தீர சம்பிரம வீரா நமோ நம - கிரிராஜ

தீப மங்கள சோதி நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம - அருள்தாராய்



மேலோட்டமான பொருள்:

நாத விந்து கலாதீ நமோநம = சிவ சக்தி தத்துவத்துக்குப் பொருளே நமோநம!
வேத மந்த்ர சொரூபா நமோநம = வேத மந்திர உருவமானவனே நமோநம!
ஞான பண்டித சாமீ நமோநம = ஞான பண்டித, சுவாமி நாதனே நமோநம!

வெகு கோடி
நாம சம்பு குமாரா நமோநம = கோடி பெயர்கள் கொண்ட சிவ குமாரனே நமோநம!
போக அந்தரி பாலா நமோநம = இன்பம் தரும் பார்வதி குமாரனே நமோநம!

நாக பந்த மயூரா நமோநம = பாம்பைக் காலில் கட்டிய, மயில் வாகனனே நமோநம!

பரசூரர்
சேததண்ட விநோதா நமோநம = சூரரைத் தண்டித்து விளையாடல் செய்தவனே நமோநம!
கீத கிண்கிணி பாதா நமோநம = இன்னொலி சதங்கைகள் கட்டிய பாதங்களைக் கொண்டவனே நமோநம!
தீர சம்ப்ரம வீரா நமோநம = தீரனே, போர்வீரனே, நமோநம!

கிரிராஜ = மலை அரசே
தீப மங்கள சோதீ நமோநம = தீப விளக்குகளின் ஒளி வடிவே நமோநம!
தூய அம்பல லீலா நமோநம = தூய அம்பலத்தில் லீலைகள் புரிபவனே நமோநம!
தேவ குஞ்சரி பாகா நமோநம = தேவயானைப் பிராட்டியைப் பக்கத்தில் கொண்டவனே நமோநம!
அருள் தாராய் = உனது திருவருளைத் தந்தருள்வாய்
!



இனி, அர்ச்சனையைத் தொடர்ந்து வரும் அதே பாடல்!

ஈதலும் பல கோலால பூஜையும்
ஓதலும் குண ஆசார நீதியும்
ஈரமும் குரு சீர்பாத சேவையும் - மறவாத


ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மனோகர
ராஜ கம்பீர நாடாளு நாயக - வயலூரா


ஆதரம் பயில் ஆரூரர் தோழமை
சேர்தல் கொண்டு அவரோடே முன்னாள் அதில்
ஆடல் வெம்பரி மீதேறி மாகயிலை - இல் ஏகி

ஆதி அந்த உலா ஆசு பாடிய
சேரர் கொங்குவை காவூர் நன்னாடதில்
ஆவினன் குடி வாழ்வான தேவர்கள் - பெருமாளே



தமிழிலேயே உள்ளதால் பொருள் சொல்லவில்லை. பின்னூட்டத்தில் யாராச்சும் சொல்லுங்க! அருணகிரி ஒரு முக்கியமான நிகழ்ச்சியையும் இந்தப் பாடலில் குறிக்கிறார். அந்தக் கதையை இங்கு காணலாம்!

திருப்புகழ் அர்ச்சனையில் வரும் காவிரி வயல் வர்ணனையில் உள்ளம் பறி கொடுக்கலாம். ராஜ கம்பீர நாடாளு நாயக - வயலூரா என்று நாமும் அர்ச்சிக்கலாம், வாருங்கள்!

தீப மங்கள சோதீ நமோநம!
வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா!

6 comments:

kaialavuman December 09, 2011 3:13 AM  

பலமுறைக் கேட்டிருந்தாலும் கேட்க கேட்க திகட்டாத பாடல். அதுவும் சுதாவின் குரல் அதற்கு ஒரு கம்பீரமும் சேர்க்கிறது. நன்றிகள்.

ரசிகன் December 10, 2011 10:13 AM  

மிகவும் ரசித்து கேட்டேன். பதிவிட்டதற்கு நன்றி.

பின்னிருப்பது தமிழ், அதனால் விளக்கமில்லை. அப்படி எனில் முன்னிருப்பது?

(தமிழாயிருந்தாலும், என் போன்ற அரைகுறைகளுக்காக விளக்கம் தந்திருந்தால் இன்னும் இனித்திருக்கும்)

Lalitha Mittal December 10, 2011 7:22 PM  

மீண்டும் மீண்டும் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத திருப்புகழ் !நன்றி!


தலைப்பில் "சோதீ"என்று போட்டிருப்பது விழித்தீயாய் உதித்தவன் என்பதாலா?

Anonymous December 13, 2024 7:52 AM  

முருகா சரணம்

Anonymous May 07, 2025 12:13 AM  

Thanku for uploading the lyrics. Vadivelu muruganukku Arogara

Anonymous July 01, 2025 2:53 AM  

அருமையான இனிமையான திருப்புகழ் பாடல். கேட்க கேட்க மனம் அமைதி பெரும்.
பகிர்ந்தமைகு நன்றி 🙏🙏🙏🙏

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP