Sunday, August 19, 2012

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 5

"பன்னிரு திருக்கண்களும் அழகுடன் விளங்க பன்னிரு திருக்கைகளிலும் பன்னிரு படைக்கலன்களை ஏந்தி விரைந்து என்னை காக்க வரும் என்னை ஆளும் இளையவன். ஆகா. என்ன ஒரு அழகான திருத்தோற்றம்?!


பன்னிரு திருக்கரங்களிலும் ஏந்தியிருக்கும் ஆயுதங்களைப் பற்றி சுவாமிகள் ஏதேனும் சொல்லியிருக்கிறாரா நண்பா?"

"ஆமாம். அறுபடைவீட்டுக் கவசங்களில் ஐந்தாவது சஷ்டி கவசமாகிய குன்று தோறாடும் குமரனைப் போற்றும் கவசத்தில் சுவாமிகள் இந்த ஆயுதங்களைப் பற்றி சொல்லியிருக்கிறார்.

வேலாயுதம், சூலாயுதம், சங்கு, சக்கராயுதம், வில், அம்பு, வாள், மழு, குடை, தண்டாயுதம், சந்திராயுதம், வல்லாயுதம் என்னும் பன்னிரு ஆயுதங்களையும் முருகன் தனது திருக்கரங்களில் ஏந்தியிருப்பதாகச் சொல்கிறார்"

"அருமை. அருமை"

"அடுத்த பகுதியைப் பாடு நண்பா"

ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளியையும்

நிலை பெற்று என் முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் தீயும் தனியொளி ஒவ்வும்
குண்டலியாம் சிவ குகன் தினம் வருக"

இந்த பகுதி முழுக்க முழுக்க மந்திரங்களைப் பற்றி பேசும் பகுதி.

ஐம், க்லீம், சௌம் என்னும் மந்திர ஒலிகளைப் பற்றியும் ஓம்காரத்தைப் பற்றியும் சுவாமிகள் கூறுகிறார்.

ஐம், க்லீம், சௌம் என்பவை பீஜாக்ஷரங்கள் என்று வடமொழியில் கூறுவார்கள். மந்திரங்களின் வித்தாக விளங்கும் ஒலிகள். இம்மூன்றிலும் ஐம் என்பதை உயிர் என்றே குறிக்கும் வழக்கமும் இருக்கிறது.

ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்.

ஐம் க்லீம் சௌம் என்று முறையே சொல்லும் மந்திரமும்.

உய் ஒளி சௌவும் உயிரையும் கிலியும்.

உய்வதற்கு வழி தரும் ஒளி மிகுந்த சௌம் ஐம் க்லீம் என்ற வகையில் சொல்லும் மந்திரமும்.

கிலியும் சௌவும் கிளர் ஒளி ஐயும்.

ஒளி கூடி விளங்கும் க்லீம் சௌம் ஐம் என்ற வகையில் சொல்லும் மந்திரமும்.

நிலை பெற்று என் முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் தீயும்.

தினமும் என் முன்னே ஒளியுடன் திகழும் ஆறுமுகங்கள் கொண்ட தீயைப் போன்றவனும்.

தனி ஒளி ஒவ்வும்.

தனித்து ஒளிவீசும் ஓம்காரமும்.

குண்டலியாம் சிவ குகன் தினம் வருக.

மூலாதாரம் என்னும் சக்கரத்தில் வீற்றிருக்கும் குண்டலினி சக்தியின் வடிவமாகிய சிவகுமாரன் குகன் தினந்தோறும் வருக"

"மடமடவென்று சொல்லிக் கொண்டே சென்றுவிட்டாயே நண்பா. விரிவான பொருளையும் சொல்வாய்"

"மந்திரங்களின் பொருளை நான் அறியேன் நண்பா. அவற்றை குருவிடம் கேட்டு உணர்ந்து ஓதுவதே முன்னோர் வகுத்த முறை. இவை மந்திரங்கள் என்று மட்டும் உணர்ந்து கொண்டு சஷ்டி கவசம் ஓதும் போது இவ்வரிகளைச் சொல்லி வந்தால் போதும். அவற்றின் பயன் கிடைக்கும். மனக்குகையில் வாழும் குறிஞ்சிக்கிழவன் குகனும் முன் வந்து காப்பான்"

(தொடர்ந்து பேசுவார்கள்)

Sunday, August 12, 2012

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 4


"மையல் நடம் செய்து கொண்டே நம்மைக் காக்க வரும் முருகனை வரவேற்கும் வரிகளைப் பாடு நண்பா"


"வர வர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரஹணபவனார் சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோ நம
நிபவ சரஹண நிறநிற நிறென
வசர ஹணப வருக வருக
அசுரர் குடி கெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசாங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க
விரைந்தெனை காக்க வேலோன் வருக

"இந்தப் பகுதியில் இரண்டு இரண்டு அடிகளாகவோ நான்கு நான்கு அடிகளாகவோ எடுத்துக் கொண்டு பொருள் சொல்லும் வகையில் வரிகள் அமைந்திருக்கின்றன"

"ஆமாம். வடிவேலும் மயிலும் துணை என்பதை மீண்டும் வலியுறுத்துவதைப் போல வேலாயுதனார் என்றும் மயிலோன் என்றும் முருகனை முதல் இரு அடிகள் விளிக்கின்றன"

"ஆமாம்.

வர வர என்பதும் வருக வருக என்பதும் ஒருவரை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் போது புழங்கும் அடுக்குத் தொடர்கள்.

வேல் என்னும் ஆயுதத்தை அடியாரைக் காக்கும் பொருட்டு ஏந்தியிருப்பதால் முருகனை வேலாயுதனார் என்று அழைத்தார் அடிகளார்.

அவன் ஆடி வரும் மயில் மேல் ஏறி வருவதால் மயிலோன் என்றார்.

வர வர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக"

"அடுத்த இரு வரிகளில் இந்திரன் முருகப்பெருமானைப் போற்றுவதைக் குறிக்கிறாரா?"

"ஆமாம். இந்திரன் மட்டும் இல்லை. இந்திரனைத் தலைவனாகக் கொண்ட தேவர்களும் அவர்கள் காக்கும் திசைகளில் இருக்கும் அனைத்து உயிர்களும் போற்றிப் புகழ வடிவேலவன் வருவதைக் கூறுகிறார்.

கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு என்னும் எட்டுத் திசைகளிலும் இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்னும் எட்டுத் திசைக் காவலர்கள் இருந்து அனைத்து உயிர்களையும் காப்பதாக முன்னோர் நூல்கள் சொல்லும். இவர்களை அஷ்டதிக்பாலகர் என்று வடனூல்கள் அழைக்கும்.

அப்படி இந்திரன் முதலாக உள்ள எண் திசைக் காவலர்களும் அவர்களால் காக்கப்படும் உயிர்களும் போற்றிக் கொண்டாட மந்திர வடிவேல் ஏந்தியவன் வருக வருக"

"மந்திர வடிவேல் என்று தானே சொல்கிறார். ஏந்தியவன் என்பதை இங்கே நாமாக எடுத்துக் கொள்ள வேண்டுமா?"

"உடைமையின் பெயரை உரியவர் மேல் ஏற்றிக் கூறுவது உலக வழக்கு என்பதால் இங்கே வேலவனைக் குறித்ததாக எடுத்துக் கொண்டேன். வேலை வரவேற்பதாக எடுத்துக் கொண்டாலும் பொருள் பொருத்தமாகத் தான் இருக்கும்"

"சரி தான். மந்திர வடிவேல் என்பதற்கு என்ன பொருள்?"

"மந்திரங்களில் முதன்மையானது ஓங்கார மந்திரம். ஓங்காரமே வேல்வடிவாய் அமைந்ததால் மந்திரமே வடிவான வேல் என்று பொருள் கொள்ளலாம்.

அழகே வடிவான வேல் என்றும் பொருள் கொள்ளலாம்"

"கொல்லர் உலைக்களத்தில் வடிக்கப்பட்ட வேல் என்றும் பொருள் கொள்ளலாமா?"

"மனிதர் கை வேல் என்றால் அப்படி பொருள் கொள்ளலாம். சிவசக்தியின் உருவான சிவகுமரன் கை வேல் கொல்லர் உலைக்களத்தில் வடிக்கப்படாததால் அந்த பொருள் இங்கே பொருந்தாது"

"சரி தான்.

இந்திரன் முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக

அடுத்த அடிகளுக்குப் பொருள் கூறு"

"ஞான சக்தி வடிவான முருகப்பெருமானின் இருபுறமும் வீற்றிருக்கும் இச்சா சக்தி, கிரியா சக்திகளான திருத்தேவியர் இருவரையும் அடுத்த வரிகளில் நினைத்து அவர்களையும் முருகனுடன் சேர்ந்து வரவேற்கிறார் அடிகளார்.

உலகச் செல்வங்கள் அனைத்திற்கும் தலைவர்களாக எட்டு வசுக்கள் என்னும் தேவர்களைச் சொல்லுவார்கள். அந்த எட்டு வசுக்களின் தலைவன் இந்திரன். அதனால் அவனுக்கு வாசவன் என்று ஒரு பெயர் உண்டு. அவன் மகளாகிய தெய்வயானைப் பிராட்டியாரை மணம் புரிந்தவன் என்பதால் முருகனை ‘வாசவன் மருகா’ என்று விளித்து வரவேற்கிறார்.

குறவர் குலமகளாகிய வள்ளிப் பிராட்டியாரின் நெஞ்சம் நிறை நேசத்தை என்றும் மறவாமல் நினைத்துக் கொண்டே இருப்பதால் 'நேசக் குறமகள் நினைவோன்' என்றார்.

வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக"

"அடுத்த வரிகளுக்கும் பொருள் கூறு நண்பா"

"ஆறுமுகம் கொண்ட ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக

ஆறு திருமுகங்களைக் கொண்ட ஐயனே வருக. திருநீற்றை நெற்றியிலும் உடம்பிலும் அணிந்திடும் வேலவன் தினந்தோறும் வருக.

சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரஹணபவனார் சடுதியில் வருக

சிரம் என்றால் தலை; சென்னி என்றாலும் தலை. சென்னிமலையில் மேல் அமர்ந்திருக்கும் வேலவன் சீக்கிரம் வருக. சரவணப்பொய்கையில் உதித்த சரவணபவன் விரைவில் வருக.

சரஹணபவ என்பது ஷடாக்ஷரம் என்னும் ஆறெழுத்து மந்திரம். அதன் எழுத்துகளை சிறிதே முன்னும் பின்னுமாக மாற்றி உருவேற்றினால் வெவ்வேறு பயன்கள் கிடைக்கும் என்பார்கள் மந்திர நூலோர். அப்படி வெவ்வேறு உருவில் அமையும் ஆறெழுத்து மந்திரங்களையே மந்திர நூலாகிய இந்த நூலின் அடுத்த அடிகளில் அமைத்திருக்கிறார் அடிகளார். அவற்றின் பொருளினை குரு மூலமாக அறிந்து கொள்வதே நலம்.

எனக்கும் அவற்றின் உட்பொருள் ஏதும் தெரியாது. அதனால் அவற்றின் பொருளைச் சொல்லாமல் அடுத்த அடிகளுக்குப் பொருள் கூறுகிறேன்.

ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோ நம
நிபவ சரஹண நிறநிற நிறென
வசர ஹணப வருக வருக
அசுரர் குடி கெடுத்த ஐயா வருக

கெட்டதை இல்லாமல் ஆக்க அதனை அழிக்கலாம்; அல்லது திருத்தி ஆட்கொள்ளலாம். கருணைக் கடலாகிய கந்தன் சூரனின் அசுரர் குடி முழுவதையும் திருத்தி ஆட்கொண்டதால் கெட்டது கெட்டது. அதனால் அசுரர் குடி கெடுத்த ஐயா என்றார்”

"ஆகா"

"என்னை ஆளும் சிவகுமரர்களில் இளையவனான ஐயன் தனது பன்னிரண்டு திருக்கைகளிலும் பன்னிரண்டு ஆயுதங்களையும் பாச அங்குசங்களையும் ஏந்தி அழகாக பரந்து இருக்கும் பன்னிரண்டு திருக்கண்களும் அழகுடன் திகழ விரைவாக எனைக் காக்க வருக.

என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசாங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக"

(தொடர்ந்து பேசுவார்கள்)

Thursday, August 09, 2012

அனைத்தும் நீ!

ஆடிக்கிருத்திகை சிறப்புப் பதிவு.


சுப்பு தாத்தா தன் பேரனுடன் பாடியதை இங்கே கேட்கலாம்! மிக்க நன்றி, தாத்தா மற்றும் Sanchu! :)


ஆடியிலே காவடிகள் எடுத்து வந்தோம் முருகய்யா!
ஆடியாடி உன்னை நாடி ஓடி வந்தோம் முருகய்யா!

ஆடிவெள்ளிக் கிழமையிலே
ஆடும் மனம் அடங்கிடவே!
ஆடிவரும் காவடியில்
ஆறுமுகம் கனிந்திடவே!

(ஆடியிலே)

அரசனும் நீயடா!
ஆண்டியும் நீயடா!
ஆறுதலைத் தந்தருளும்
அழகுமுகம் நீயடா!

கந்தனும் நீயடா!
கடம்பனும் நீயடா!
கனியிதழ் மலர்ந்திழுக்கும்
காந்தனும் நீயடா!

(ஆடியிலே)

கண்மணி நீயடா!
கருணையின் வடிவடா!
கார்த்திகைப் பெண்டிரின்
கவினுறும் சேயடா!

முருகும் நீயடா!
முத்தமிழ் நீயடா!
மூவுல கேற்றிடும்
முதல்வனும் நீயடா!

(ஆடியிலே)


--கவிநயா 

படத்துக்கு நன்றி: http://www.trinethram-divine.com/2012/05/kaavadiyaam-kaavadi-kandhavelan-kaavadi.html

Tuesday, August 07, 2012

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 3

"கந்தர் சஷ்டி கவசம் நூலுக்குள் செல்லும் முன்னர் அதற்கு முன் இருக்கும் இரண்டு வெண்பாக்களின் பொருளையும் பார்த்தோம். அப்போது ஒவ்வொரு பாட்டாக எடுத்துப் பொருள் சொல்ல முடிந்தது. ஆனால் சஷ்டியை நோக்க என்று தொடங்கும் முழு நூலுக்கும் அப்படி பொருள் சொல்ல இயலாது. ஒவ்வொரு வரியாக எடுத்துக் கொண்டு பொருள் சொல்லலாமா?"


"அதை விட இன்னொரு நல்ல வழி இருக்கிறது நண்பா. ஒவ்வொரு அடியாக எடுத்துக் கொண்டால் பொருள் சில நேரங்களில் தொடர்ச்சியாகச் சொல்ல இயலாமல் போகலாம். அதனால் ஒவ்வொரு பகுதியாக எடுத்துக் கொண்டு பேசலாம். நூலின் ஒவ்வொரு அடியையும் பாடிக் கொண்டே வா. எப்போது ஒரு பகுதி முழுமையடைகிறது; எப்போது நிறுத்த வேண்டும் என்று உனக்குத் தோன்றுகிறதோ அப்போது நிறுத்து. அந்த பகுதி முழுமைக்கும் பொருள் காணலாம்"

"ஆகட்டும். அப்படியே செய்யலாம்.

சஷ்டியை நோக்க சரவண பவனார்
சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி ஆட
மையல் நடம் செய்யும் மயில்வாகனனார்
கையில் வேலால் எனை காக்கவென்று வந்து

"இது ஏன் ஒரு பகுதி என்று உனக்கு தோன்றியது என்று சொல்வாயா?"

"வேலும் மயிலும் துணை"

"அருமை.

ஆமாம். முருகப்பெருமானின் முதன்மை அடையாளங்கள் வேலும் மயிலும். இரண்டையும் இந்தப் பகுதியில், நூலின் தொடக்கமான இந்த அடிகளில் குறித்துவிடுகிறார் அடிகளார்.

அடியாரைக் காக்க அவனையும் விட வேகமாக முந்துவது சேந்தனின் திருக்கைவேல். அடியாருக்கு அருள அவனை விரைவாக அழைத்து வருவது மயில். கம்பத்தில் இளையனார் தோன்றிய போது மயில் தானே அவனை அழைத்துவந்தது. வேலும் மயிலுமே அடியவர்களுக்குத் துணை"

" இன்னுமொரு காரணமும் உண்டு நண்பா.

’குமரன் அடி நெஞ்சே குறி’ என்று இதற்கு முந்தைய குறள் வெண்பாவில் சொன்னார் அல்லவா? அதன் தொடர்ச்சியாக இந்தப் பகுதியில் முருகனின் வரவை நெஞ்சில் குறிப்பதைப் போல் தோன்றுகிறது"

"சரி தான். இந்த பகுதி

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

என்ற குறட்பாவினைப் போல் எனக்குத் தோன்றும்.

எப்படி ‘கற்க’ என்று முதலில் அந்த குறளில் வந்ததோ அதைப் போல் இங்கே ‘சஷ்டியை நோக்க’ என்று வந்தது. இங்கே சஷ்டி என்பது சஷ்டி திதியில் பாடப்படும் இந்த நூலாகிய சஷ்டி கவசத்தைக் குறிக்கும்.

‘வாழ்வில் என்ன செய்ய வேண்டும்’ என்ற கேள்விக்கு விடை சொல்வதைப் போல் குறளாசான் ‘கற்க’ என்ற கட்டளையை இட்டார். அதே கேள்விக்கு இன்னொரு பதிலைப் போல் தேவராய சுவாமிகள் ‘சஷ்டியை நோக்க’ என்ற கட்டளையை இடுகிறார்.

‘நெஞ்சே குறி’ என்று முன்னர் தனது நெஞ்சுக்குச் சொன்னதால் இங்கேயும் இந்த கட்டளை மற்றவர்களுக்கு இல்லை; இந்த நூலைப் பயில்பவர் ஓதுபவர் அனைவரும் தத்தமது நெஞ்சுக்கே இடும் கட்டளை என்று கொள்ள வேண்டும்”

"'என்ன செய்ய வேண்டும்' என்று குறளாசான் சொல்லிவிட்டு 'எப்படி அதைச் செய்ய வேண்டும்' என்ற கேள்விக்கும் விடை சொல்கிறார். அதே போல் இங்கேயும் தேவராய சுவாமிகள் சொல்கிறார் என்று நினைக்கிறேன். சரி தானா?"

"சரி தான் நண்பா. நெஞ்சுக்குச் சொல்லுவதாக 'நெஞ்சே. முருகப்பெருமான் என்னைக் காக்கவென்று வருகிறான் என்பதை நினைவில் நிறுத்திக் கொண்டு சஷ்டி கவசமாகிய இந்த நூலை ஓது' என்று சஷ்டி கவசத்தை எப்படி ஓத வேண்டும் என்றும் சொல்கிறார்"

"மற்ற வரிகளுக்குப் பொருள்?"

"சொல்கிறேன் கேள்.

சரவணப் பொய்கையில் உதித்ததால் முருகப்பெருமானுக்கு சரவணபவன் என்ற திருப்பெயர் இருப்பது உனக்குத் தெரிந்திருக்கும். அந்த சரவணபவனார் சிஷ்டருக்கு உதவுபவன். சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்.

சிஷ்டர் என்றால் அடியவர். சிரேஷ்டர் என்ற வடசொல்லுக்குச் சிறந்தவர், அடியவர் என்று பொருள். அது சிஷ்டர் என்று சிதைந்து பேச்சுவழக்கில் புழங்கும். அடியவர்கள், சிறந்தவர்கள், ஆசிரியர்கள் இவர்களின் வாழ்வுமுறையை, ஆசாரத்தைச் சிஷ்டாசாரம் என்று குறிப்பதும் வழக்கத்தில் இருக்கிறது.

அடியவர்களுக்கு உதவுவது செங்கதிர் வேல். அதனை கையில் ஏந்தியவன் வேலோன்.

அடியவர்களுக்கு உதவுபவன் செங்கதிர் வேலோனாகிய முருகன்.

சிவந்த ஒளியை வீசுவது வேல் என்று கொண்டால் செங்கதிர் என்பது வேலைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். முருகனுக்கு செவ்வேள், சேந்தன் என்ற திருப்பெயர்களும் இருப்பதால் சிவந்த ஒளியை வீசுபவன் திருமுருகன் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

'அடி நெஞ்சே குறி' என்று திருவடிகளை மனத்தில் நிறுத்தும் படி முன்னர் சொன்னதின் தொடர்ச்சியைப் போல் இங்கும் திருப்பாதங்களைச் சொல்கிறார்.

பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாட.

திருப்பாதங்கள் இரண்டிலும் பல அரிய இரத்தின மணிகள் பூட்டிய சதங்கை இசைப்பாடல் பாட.

கிண்கிணி ஆட.

கிண்கிணி என்பது திருப்பாதங்களில் இருக்கும் இன்னொரு ஆபரணம். மாணிக்கப்பரல்கள் இட்டு இனிய ஓசை எழுப்பும் தண்டை. அதுவும் ஆட.

மையல் நடம் செய்யும் மயில்வாகனனார்.

பார்ப்பவர் உள்ளங்களைக் கொள்ளைக் கொள்ளும் நடனத்தை ஆடும் திருமுருகன். அவன் மயிலை வாகனமாக கொண்டிருப்பதால் அவன் மயில்வாகனன்.

இப்படி சதங்கை கீதம் பாடவும் கிண்கிணி ஆடவும் மையல் நடம் செய்பவன் திருமுருகன் என்று பொருள் கொண்டால் அவன் ஆடிக் கொண்டு வரும் அழகான தோற்றத்தைத் தியானிக்கலாம்.

சதங்கை பாடவும் கிண்கிணி ஆடவும் மையல் நடஞ்செய்வது மயில் என்று பொருள் கொண்டால் ஆடிவரும் மயிலில் மயில்வாகனன் ஏறிவருவதை தியானிக்கலாம்.

சிஷ்டரைக் காக்கும் அதே திருவேலைக் கையில் ஏந்தி அடியவர்களின் ஒருவனான என்னைக் காக்க முருகன் வருகிறான் என்று எண்ணி சஷ்டி கவசத்தை ஓத வேண்டும்"

"ஆக

சரவணபவனார்
சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாட
கிண்கிணி ஆட
மையல் நடம் செயும் மயில் வாகனனார்
கையில் வேலால் எனைக் காக்க என்று வந்தான்
(என்று மனத்தில் குறித்து)
சஷ்டியை நோக்க

என்று பொருள் கொள்ள வேண்டும். சரியா?"

"சரி தான்"

(தொடர்ந்து பேசுவார்கள்)

Friday, July 27, 2012

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 2



"அடுத்து வரும் வெண்பாவைப் பாடு நண்பா"


"அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி"

"எளிமையான குறள் வெண்பா இது. தேவர்களின் துயர் தீர சூரனுடன் போர் புரிந்த குமரன் திருவடிகளை நினைவில் நிறுத்துவாய் நெஞ்சே என்று பொருள்"

"நம்மாழ்வார் திருவாய்மொழியின் முதல் பாசுரம் நினைவிற்கு வருகிறது.

துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே.

துயர் தீர்க்கும் திருவடிகளைத் தொழுவாய் என்று அங்கேயும் மனத்திற்குத் தான் அறிவுரை"

"மனம் ஒரு குரங்கு. ஓரிடத்தில் நில்லாது. அதனால் அதற்கே அறிவுரை சொல்கிறார்கள் அறிவோர்கள்.

அது மட்டுமில்லை. நம் மனமே நாம் கீழ்மையில் இழிவதற்கும் காரணம். அதுவே நாம் மேன்மையுறுவதற்கும் காரணம்"
"மனமே ஒருவனின் நண்பன்; மனமே ஒருவனின் எதிரி - என்று கீதையிலும் வருகிறதே"

"தாமே தமக்கு சுற்றமும் என்று வாதவூராரும் சொல்லுவார்"

"ஆமாம். நெஞ்சுக்கு ஏன் இந்த அறிவுரை என்பது புரிகிறது. சொற்பொருள் கூறு நண்பா"

"அமர என்ற வடசொல்லுக்கு இறப்பில்லாதவர் என்று பொருள். சாவா நிலையைத் தரும் அமுதத்தைப் பருகியதால் வானுலகோருக்கு அமரர் என்று பெயர்"

"சாவா நிலையைப் பெற்றவரைக் குறிக்கும் அமரர் என்ற சொல்லை இப்பொழுதெல்லாம் அண்மையில் இறந்தவரைக் குறிக்க இன்னார் அமரரானார் என்று குறிப்பது முரண்நகை தான்"

"அது இடக்கரடக்கல். அமங்கலத்தை மங்கலமொழியால் சொல்லுவது மூத்தோர் வழக்கம். சுண்ணாம்பு என்று சொல்லாமல் வெண்ணெய் என்று சொல்லுவார்கள். அது போல"

"சரி தான். அடுத்த சொல்லுக்குப் பொருள் கூறு"

"தீராத துன்பம் வந்தால் இறப்பாவது அதனை ஒரு முடிவிற்குக் கொண்டு வரும். ஆனால் சாகாத நிலை பெற்ற அமரர்களுக்கு அதுவும் கிடையாது. சூரனின் குலத்தவரால் தீராத இடர் அடைந்து வந்தார்கள்.

அவர்களின் இடர் தீர குமரன் அமர் செய்தான். அமர், அமரம் என்றால் போர். இச்சொல்லுக்கு சமர், சமரம் என்றும் பாடவேறுபாடு உண்டு"

"குமரன் என்ற பெயர் முருகனுக்கு ஏன் வந்தது நண்பா"

"சிவபெருமானுக்கு இளைய பிள்ளை என்பதாலும் என்றும் இளமை மாறாதவன் என்பதாலும் மன்மதனைப் போன்ற அழகுடையவன் என்பதாலும் முருகனுக்கு குமரன் என்ற திருப்பெயர்"

"சரி தான். மதனனை ஒத்தவன் என்பதால் தான் அவனை மதனவேள் என்று சொல்வது போல் இவனைக் குமரவேள் என்று சொல்கிறார்கள் போல"

"வேட்கையைத் தூண்டுபவன் வேள். இவனும் இவன் அழகால் இவன் மேல் வேட்கையைத் தூண்டுவதால் இவனைச் செவ்வேள், முருகவேள், கந்தவேள், குமரவேள் என்று இவனுடைய திருப்பெயர்களுடன் எல்லாம் வேள் என்பதைச் சேர்த்துச் சொல்வார்கள்"

"இவ்வளவு அழகான இவன் திருவுருவம் முழுவதையும் நெஞ்சே குறி என்று சொல்லாமல் ஏன் அடி குறி என்று சொன்னார்?"

"இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும் அடியவர்களுக்கு திருக்கோவில்களே இறையருளைத் தருவதைப் போல இவன் முழுவதும் அழகியவன் என்றாலும் இவன் திருவடிகளே அடியார்கள் வேண்டுவதை எல்லாம் தருவதால் நெஞ்சே குமரன் அடி குறி என்று சொன்னார்"

"ஆமாம். கைக்குழந்தைக்குத் தாயின் கொங்கைகளைப் போன்றும் மற்றவர்க்கு பசுவின் பால்மடுவைப் போன்றும் இன்னருள் சுரப்பவை திருவடிகளே அன்றோ?"

"பொய்யாமொழிப் புலவரும் திருக்குறளின் முதல் அதிகாரத்தில் திருவடிகளையே மீண்டும் மீண்டும் போற்றுகிறாரே"

"ஆமாம். அந்த திருவடிகளையே நெஞ்சில் நிறுத்தி சஷ்டி கவசமாகிய இந்தப் பனுவலை ஓத வேண்டும்"

(இன்னும் பேசுவார்கள்)

Friday, July 20, 2012

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 1

" சங்கரநாராயணா. திருமுறைப்பாடல்களின் அமைப்பை நீ கவனித்திருக்கிறாயா?"

"எந்த அமைப்புமுறையைக் குறிப்பிடுகிறாய் என்று புரியவில்லையே இராகவா!"

"அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்னும் மூவர் முதலிகள் பாடிய தீந்தமிழ் பாடல்களுக்குத் தேவாரம் என்ற திருப்பெயர் வழங்குவதற்கு முன் திருப்பதியம் என்ற திருப்பெயர் வழங்கியிருக்கிறது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியமுடிகிறது. இன்றைக்கு அதே பெயரை திருப்பதிகம் என்று சொல்கிறோம். இத்திருப்பெயரின் காரணம் உனக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்"

"தெரியும் இராகவா. மூவர் முதலிகள் ஒவ்வொரு திருத்தலங்க ளிலும் பாடிய பாடல்களைத் தொகுக்கும் போது பத்து பத்து பாடல்களாகத் தொகுத்திருக்கிறார்கள். அதனால் அவற்றை திருப்பதிகங்கள் என்று அழைக்கிறார்கள்"

"ஆமாம். அப்படி பத்து பத்து பாடல்களாக வரும் போது கடைசி பாடலில் இந்த பதிகத்தைப் பாடி இறைவனை வணங்கினால் என்ன என்ன பயன் விளையும் என்றும் பாடியிருக்கிறார்கள்"

"ஆமாம். வடமொழியிலும் அந்த வழக்கம் உண்டு. துதிப்பாடல்களின் இறுதிப் பாடல் அந்தப் பாடல்களைப் பாடிப் பரவுவதால் கிடைக்கும் பயன்களைச் சொல்லும். அதனைப் பலச்ருதி என்று அழைப்பார்கள்"

"அப்படி பதிகங்களின் இறுதியில் பயன்கூறும் பாடலைப் பாடுவது துதிப்பாடல்களின் அமைப்பு முறையாக இருக்கிறது"

"அருளிச்செயல்களாம் ஆழ்வார்ப் பாசுரங்களிலும் இந்த அமைப்பைப் பார்க்க முடிகிறது இராகவா"

"இந்த கந்தர் சஷ்டி கவசத்திலும் அந்த அமைப்பைப் பார்க்கலாம் நாராயணா. நூலின் இறுதிப்பகுதியில் மந்திர நூலான இதனை முப்பத்தாறு முறை உருவேற்றி திருநீறு பூசினால் என்ன என்ன பயன்கள் எல்லாம் விளையும் என்று தேவராய சுவாமிகள் கூறுகிறார்.

அப்படி வழக்கத்தை மாற்றாமல் பயன்களை நூலின் இறுதிப்பகுதியில் சொன்னாலும் புது வழக்கமாக நூலின் தொடக்கத்திலும் பயனைக் கூறும் ஒரு வெண்பாவை பாடியிருக்கிறார்"

"நீ சொல்வது புரிகிறது இராகவா. துதிப்போர்க்கு வல்வினை போம் என்று தொடங்கும் வெண்பாவினைத் தானே சொல்கிறாய்.

அது புது வழக்கமில்லை இராகவா. ஆழ்வார் பாசுரங்களின் தொடக்கத்தில் நூலையும் நூல் இயற்றியவரையும் அதாவது ஆழ்வாரையும் அவர்கள் ஊரையும் புகழும் வெண்பாக்கள் பிற்காலத்தவர் இயற்றி அதனை ஆழ்வார் பாசுரங்களைப் பாடுவதற்கு முன்னர் பாடும் வழக்கம் ஒன்று இருக்கிறது. அந்த வெண்பாக்களை தனியன்கள் என்று சொல்வார்கள்.

நீ கூட திருப்பாவைக்குப் பொருள் சொல்லும் போது அப்படி சில தனியன்களுக்கும் பொருள் சொல்லியிருக்கிறாய்.

எடுத்துக்காட்டாக இந்த தனியனை எடுத்துக் கொள்ளலாம்.

பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
வேதம் அனைத்திற்கும் வித்தாகும் - கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு"

"ஆனால் தனியன்களுக்கும் சஷ்டி கவசத்தின் தொடக்கத்தில் வரும் வெண்பாவிற்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது நண்பா. தனியன்கள் நீ சொன்னதைப் போல் நூலையோ ஆசிரியரையோ ஊரையோ புகழும் போது இந்த வெண்பா கந்தர் சஷ்டி கவசம் தனை துதிப்போர்க்கு என்ன என்ன பயன் விளையும் என்று கூறுகிறது. இறுதியில் மட்டுமே ஆழ்வார் பாசுரங்களும் பயன்கூறு பாடல்களைப் பாடுகின்றன. இங்கே தொடக்கத்திலும் பாடுகிறார். அதனால் இதனை புதுமை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்"

"நீ சொல்வதும் சரி தான். சரி. இப்போது இந்தப் பாடலின் பொருளைக் கூறு"

"பொருள் சொல்வதற்கு முன் அதனை ஒரு முறை பாடு சங்கரா"

"துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்து - கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலர் அருள் கந்தர்
சஷ்டி கவசந்தனை"

"இந்த வெண்பாவை உரைநடையாகச் சொல்வதென்றால் எப்படி சொல்வாய் நண்பா?"

"நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசம் தனைத் துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம் போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்; நிஷ்டையும் கைகூடும்"

"அருமை. இப்போது பொருள் புரிந்திருக்குமே"

"பொருள் புரிகிறது இராகவா. ஆனாலும் சில சொற்களுக்கு இன்னும் விளக்கம் சொல்லலாம் போல் தோன்றுகிறதே. எடுத்துக்காட்டாக முதல் சொல்லான நிமலர் யாரைக் குறிக்கிறது?"

"உனக்குப் புரிவதை சொல் நண்பா. மேலும் ஏதேனும் சொல்ல வேண்டும் என்றால் நான் சொல்கிறேன்"

"கந்தர் என்பது முருகப்பெருமானின் திருப்பெயர் என்று தெரியும். அந்த கந்தனை அருளும் நிமலர் என்பதால் அங்கே முருகப்பெருமானைத் தோற்றுவித்த சிவபெருமான் என்று புரிந்து கொள்கிறேன். சரி தானா?"

"சரி தான் நண்பா. மலம் என்ற வடசொல் குற்றம் என்ற பொருளைத் தரும். நிமலர் என்றால் குற்றமற்றவர், குறையொன்றுமில்லாதவர் என்று பொருள் தரும். இங்கே அது சிவபரம்பொருளைக் குறித்து நிற்கிறது.

கந்தன் என்ற திருப்பெயருக்கும் பொருள் விளக்கம் உண்டு. சங்க காலத்தில் கந்து என்ற உருவில் இறைவனை வழிபட்டார்கள். அதிலிருந்து கந்தன் என்ற திருப்பெயர் வந்ததாகக் கொள்ளலாம். ஸ்கந்தன் என்ற வடசொல் தமிழில் கந்தன் என்று வழங்கப்படுகிறது என்று பெரும்பான்மையோர் எடுத்துக் கொள்ளும் பொருளில் பார்த்தால் கந்தன் என்பதற்கு இணைக்கப்பட்டவன் என்று பொருள்"

"இணைக்கப்பட்டவனா? அந்த பெயர் எப்படி முருகனுக்குப் பொருத்தம்?"

"ஆறு குழந்தைகளாக சரவணப் பொய்கைக் கரையில் விளையாடிக் கொண்டிருந்தவனை உமையன்னை வாரி அணைத்த போது ஆறுருவும் ஓருருவாக இணைந்ததால் ஆறுமுகனுக்கு ஸ்கந்தன் என்ற பெயர் வந்ததாக கந்த புராணமும் பிற நூல்களும் கூறும் நண்பா."

"கந்தம் என்றால் நறுமணம், சந்தனம் என்றெல்லாம் கூட பொருள் உண்டல்லவா? நறுமணம் மிக்கவன், சந்தனக் குழம்பைப் பூசியவன் என்ற பொருள்களை எல்லாம் கூட இந்தப் பெயருக்குச் சொல்லலாம் இல்லையா?"

"ஆமாம். சொல்லலாம். ஆனால் அவை முதன்மைப் பொருள்கள் இல்லை"

"ஆகட்டும். நிமலரான சிவபெருமான் அருளும் கந்தனாகிய முருகப்பெருமான் மேல் இயற்றப்பட்ட சஷ்டி கவசம் என்ற நூல் இந்த நூல். செய்யுளின் கடைசி அடிக்குப் பொருள் சரி தானா?"

"சரி தான்.

உடலைக் காக்க அணிவது கவசம். இந்த நூலும் உடலைக் காக்க இறையருளை வேண்டுவதால் இந்த நூலுக்கும் கவசம் என்ற பெயர் வந்தது.

ஓவ்வொரு நாளும் இந்த கவசத்தைச் சொல்லி உகந்து திருநீறு அணியலாம். சஷ்டி திதியில் ஓதினால் இன்னும் பலமடங்கு பயன் உண்டு. அதனால் இதற்கு சஷ்டி திதியில் சொல்லும் கவசம் என்ற பொருளில் சஷ்டி கவசம் என்ற பெயர் வந்தது"

"இப்படி ஒவ்வொரு சொல்லாக விளக்கிச் சொல்வதற்கு நன்றி இராகவா. இந்த வெண்பாவின் மற்ற அடிகளுக்கும் இப்படியே பொருள் சொல்"

"இந்த கந்தர் சஷ்டி கவசத்தை துதிப்போர்க்கும் நெஞ்சில் பதிப்போர்க்கும் என்ன என்ன பயன் விளையும் என்பதை மற்ற அடிகள் சொல்கின்றன.

துதிப்போர்க்கு வலிய வினைகள் போகும். பல பிறவிகளாகச் செய்த செயல்களின் பயன்களை இப்பிறவியிலும் இனி வரும் பிறவிகளிலும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். தீவினைகள் துன்பமாகவும் நல்வினைகள் இன்பமாகவும் மாறி மாறிப் பயன் தந்து கொண்டிருக்கின்றன.

இந்நூலைத் துதிப்போர்க்கு தீவினைப் பயன்களான துன்பங்கள் போகும் என்பதை வல்வினை போம் துன்பம் போம் என்று தெளிவாக எடுத்துச் சொல்கிறார் தேவராய சுவாமிகள்.

மீண்டும் மீண்டும் துதித்து இப்பனுவலை நெஞ்சில் பதிப்போர்க்கு நல்வினைப் பயன்களான இன்பமும் செல்வமும் பலித்து பயன் தந்து ஆல் போல் தழைத்து அருகு போல் வேர் ஊன்றி பல தலைமுறைகளாக ஓங்கி நிற்கும்.

இங்கே செல்வம் என்று சொன்னது இம்மையில் வேண்டும் பொருட்செல்வம் மட்டும் இல்லை; மறுமைக்கு வேண்டிய அருட்செல்வமும் தான்.

அந்த அருட்செல்வம் பலித்து கதித்து ஓங்கும் ஒரு வழி இறைவன் திருவடிகளிலேயே மனம் நின்று கிடைக்கும் ஆழ்ந்த நிஷ்டை தான். நெஞ்சில் பதிப்பவர்களுக்கு அந்த நிஷ்டையும் எளிதாகக் கை கூடும்"

"அடடா. இம்மை மறுமைப் பயன்களை அனைத்தும் தரும் பனுவலாக அல்லவா சஷ்டி கவசம் இருக்கிறது. மனம், மொழி, மெய்யாலே உந்தனைத் துதிக்க என்று அருளாளர்கள் சொன்னதை போல் இப்பனுவலை ஓதினால் இப்பயன்கள் எல்லாமே கிட்டும் கிட்டும்"

"நண்பா. இன்னும் நுண்ணிய பொருளைச் சொல்லாமல் சொல்லிவிட்டாயே. ஆமாம். மனம், மொழி, மெய் என்னும் மூன்று கரணங்களையும் இந்த வெண்பாவில் குறிக்கிறார் சுவாமிகள்.

துதிப்பது வாயால் செய்யும் செயல். அங்கே மொழியைக் குறித்தார்.

நெஞ்சில் பதிப்பது மனத்தால் செய்யும் செயல்.

அனைத்துப் புலன்களையும் அடக்கி நிஷ்டையில் அமர்வது உடலால் செய்யும் செயல். அங்கே மெய்யைக் குறித்தார்.

ஆக மனம், மொழி, மெய் என்னும் முக்கரணங்களாலும் ஒன்றி வழிபட இப்பயன்கள் கிட்டும் என்பது அவர் சொல்லும் செய்தி"

தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி
மனத்தினால் சிந்திக்க

என்று கோதை சொன்னதைப் போல் இருக்கிறது இராகவா"



“புன்னகை மட்டும் தான் இதற்கு பதிலா இராகவா?

சரி தான். இன்னும் வேறு பொருள்களும் இந்த வெண்பாவில் இருக்கின்றனவா?"

"இதற்கு மேலும் ஆழ்ந்த பொருள் இருக்கலாம் நண்பா. இறையருளில் ஆழங்காட்பட்டவர்களிடம் தான் கேட்டு உணர்ந்து கொள்ள வேண்டும்"

"அப்படியென்றால் அடுத்த வெண்பாவிற்குச் செல்லலாம் இராகவா"

(தொடர்ந்து பேசுவார்கள்)



Tuesday, July 17, 2012

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - முன்னுரை



"அழகெல்லாம் முருகனே
அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே
தெய்வமும் முருகனே"

"அருமையாக பாடுகிறாய் இராகவா. அடடா! அடடா!"

"எல்லாம் முருகனருள் சங்கரா. யாமோதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்தது"

"உண்மை தான் நண்பா. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று தானே அருளாளர்களும் சொல்லியிருக்கிறார்கள்.

முருகன் புகழ் பாடுவதில் உனக்கு இருக்கும் அன்பையும் ஆர்வத்தையும் பார்த்தால் எனக்கு ஆழ்வார் பாசுரம் தான் நினைவிற்கு வருகிறது.

அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா

நீ நன்றாக ஞானத்தமிழ் விளக்குகளை ஏற்றுகிறாய்"

"இப்படிப் புகழ்வதெல்லாம் மிகை சங்கரா. நீ சொல்வதைப் போல் செய்த பேரருளாளர்கள் நக்கீரர் தொடங்கி வாரியார் சுவாமிகள் வரை நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் புகழ் பாடிக் கிடப்பதே அடியேன் பணி. வேலை வணங்குவதே வேலை"

"நன்கு சொன்னாய். அந்த அடியார்கள் செய்த திருப்பணிகளைப் பற்றியும் கொஞ்சம் சொல்வாய்"

"நண்பா. கரும்பு தின்னக் கூலியா? சொல்கிறேன் கேள்.

உலகம் உவப்ப பலர் புகழ உதித்த முருகனின் புகழைப் போற்றிப் பாடியவர்கள் பலர்.

திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை என்னும் தலங்களில் முருகப்பெருமான் குடியிருப்பதை பலருக்கும் அறிவித்து முருகனருளைப் பெறுவதற்கு அனைவரையும் ஆற்றுப்படுத்தும் திருநூலாக திருமுருகாற்றுப்படையை இயற்றினார் மதுரை கணக்காயனார் திருமகனார் நக்கீரனார். அதுவே தமிழின் முதல் துதிநூல்.

ஓசைமுனி அருணகிரிநாதப் பெருமானின் திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம் போன்ற பனுவல்களைப் பற்றி நீயும் நன்கறிவாய். அவற்றில் சில பாடல்களுக்கு பொருளுரைகளும் எழுதியிருக்கிறாய்.

நக்கீரனாரைப் போல் ஆறு படைவீடுகளின் மேல் ஓசைமுனியின் பனுவல்களை ஒத்த பொருளாழத்துடன் ஆறுபடை சஷ்டி கவசங்களைப் பாடியவர் தேவராய சுவாமிகள். அவரைப் பற்றி அண்மையில் அடியேன் எழுதினேன். படித்திருப்பாய் என்று எண்ணுகிறேன்"

"படித்தேன் இராகவா. கந்தர் சஷ்டி கவசத்தின் சில வரிகளுக்கு நீ பொருள் சொல்லியிருப்பதைப் படித்துவிட்டு கவிநயா அக்காவும் முழு நூலுக்கும் பொருள் சொல்லும்படி கேட்டிருந்தார்களே.

நீ ஆறுபடைவீட்டு சஷ்டி கவசங்களுக்கும் பொருள் சொல்லப்போகிறாயா?"

"இல்லை சங்கரா. ஆறு கவசங்களுக்கும் பொருள் சொல்ல இப்போது நேரம் போதாது. புகழ் பெற்று விளங்கும் திருச்செந்தூர் சஷ்டி கவசத்தை மட்டும் இப்போது எடுத்துக் கொள்ளலாம்

எளிமையான நூல் தானே அது. சூலமங்கலம் சகோதரிகள் பாடி இந்நூல் புகழ் பெற்று பலரது நாவிலும் மிகச் சரளமாகப் பயிலும் நூல். அதனால் பொருள் உரை தேவையா என்று தான் தயங்குகிறேன்"

"சொல்லும் பொருளும் எளிமையாக இருக்கலாம் இராகவா. ஆனால் அச்சொற்களின் கூட்டினால் உண்டாகும் பொருளமைதியையும் அதில் பயின்று வரும் மறைப்பொருளையும் விளக்கி எழுதினால் பயில்பவர் பொருளுடன் பயின்று இன்புறுவார்கள் இல்லையா? அதனால் பொருள் சொல்வதில் தயக்கம் வேண்டாம்"

"நீ சொல்வதும் சரி தான் நண்பா. முருகனருளை முன்னிட்டு எழுதலாம். எழுதுவதற்கு முன் நாம் இருவரும் ஒவ்வொரு வரியாக ஒவ்வொரு சொல்லாக எடுத்துப் பொருள் உரையாடலாம்"

"ஆகட்டும் இராகவா. வேலும் மயிலும் துணை!"

(இன்னும் பேசுவார்கள்)

Thursday, July 12, 2012

ஆறுமுகத்தரசே! யார் உந்தனைப் போல் ஆதரிப்பவர்?!



யார் உந்தனைப் போல் ஆதரிப்பவர்
ஆறுமுகத்தரசே (யார்)


பார் புகழும் பழனி மலை மேவிய
பரமனே திவ்ய பரஞ்சுடரே (யார்)


அல்லல் செய்யும் என் வினையை தீர்த்து
அன்பு கொண்டு என்னை வந்து காத்து
பொல்லா சூரன் உடலை வெடித்து
புரம் எரித்தவன் திருமதலையாய் உதித்து (யார்)




இந்தப் பாடலின் சரணத்தைக் கேட்கும் போது கொஞ்சம் வியப்பாக இருக்கிறது. புரம் எரித்தவனான சிவபெருமானின் திருமதலையாக உதித்து என்பதைத் தான் முதலில் சொல்லி, பின்னர் சூரனை வென்றதை சொல்லி, பின்னர் வினை தீர்த்து அன்புடன் காப்பதைச் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன். இந்தப் பாடலில் அது தலைகீழாக வருகிறது. என்ன காரணமோ?! :-)

Sunday, May 27, 2012

ஜிரா பிறந்தநாள்! சத்தியம், சிவம், சுந்தரம்!

முருகனருளில், இன்று ஜிரா சிறப்புப் பாடல் (May-27-2012)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகவா!:)))
- உனக்குப் பல்லாண்டு, பல்லாண்டு!!
- வடிவாய்த் தமிழோடும் முருகோடும் ஆயிரம் பல்லாண்டு!

சத்தியம் சிவம் சுந்தரம் - சரவணன் திருப்புகழ் மந்திரம்!





பஞ்சவர்ணக் கிளி என்னும் படத்தில், ஒரு திருமண வரவேற்பு (Reception);
அதில் ஒரு நடனக் காட்சி.
மிருதங்கத்துக்கு என்றே ஒரு கட்டம் வரும் பாருங்க; நிஜமாலுமே சூப்பர்!
பாட்டை விட ஒவ்வொரு பத்தியின் முடிவிலும்....
சுசீலாம்மா ஆஆஆ என்று இழுப்பாங்க பாருங்க, அது இன்னமும் சூப்பர்!

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
- இது தான் அந்த நடனம் + பாடல்!
சுசீலாம்மாவின் தேன் குழையும் குரலில், பாட்டைக் கேட்க...பார்க்க...


சத்தியம், சிவம், சுந்தரம்! ஆஆஆ....
சரவணன் திருப்புகழ் மந்திரம்! ஆஆஆ....

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்.
அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன் - அவன்
அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)



பனி பெய்யும் மாலையிலே, பழமுதிர் சோலையிலே,
கனி கொய்யும் வேளையிலே, கன்னி மனம் கொய்து விட்டான்!
பன்னிரெண்டு கண்ணழகைப் பார்த்திருந்த பெண்ணழகை,
வள்ளல் தான் ஆளவந்தான், பெண்மையை வாழ வைத்தான்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)



மலை மேல் இருப்பவனோ, மயில் மேல் வருபவனோ!
மெய்யுருகப் பாடி வந்தால் தன்னைத் தான் தருபவனோ!
அலை மேல் துரும்பானேன், அனல் மேல் மெழுகானேன்,
அய்யன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)


படம்: பஞ்சவர்ணக்கிளி
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வரிகள்: வாலி
குரல்: பி.சுசீலா


அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன் !
- வைர வரிகள் அல்லவா?

"உனக்கே என்னை விதி"யென்ற இம்மாற்றம், 
நாங்கடவா வண்ணமே நல்கு!

Monday, February 27, 2012

முருகா முருகா வாடா!


சுப்பு தாத்தா பாடித் தந்ததை கேட்டு மகிழுங்கள்! நன்றி தாத்தா!

முருகா முருகா வாடா - சின்ன
முத்துக் குமரா வாடா!
கந்தா கடம்பா வாடா - எங்கள்
கார்த்தி கேயா வாடா!

சின்னஞ் சிறு அடி எடுத்து – முருகா
சித்திரம் போல் நடந்து வாடா!
வண்ண மணி ஒலித்திடவே – நீயும்
வண்ண மயில் ஏறி வாடா!

சந்தத் தமிழ் பாட்டுனக்கே – செல்லமே
கேட்க நீயும் ஓடி வாடா!
சங்கத் தமிழ் தந்தவனே – எங்கள்
சங்கடங்கள் தீர்க்க வாடா!

நானிருக்கும் நாள் வரைக்கும் – முருகா
நாடி உனை வணங்கிடணும்!
தேனிருக்கும் உன் பெயரே – தினமும்
என் நாவில் தவழ்ந்திடணும்!

--கவிநயா

Tuesday, February 14, 2012

வள்ளி எந்தப் பக்கம்? தெய்வானை எந்தப் பக்கம்?


முருகனை வள்ளி தெய்வானை சகிதமாகப் பார்க்கும் போது உங்களுக்கு இந்தக் கேள்வி வந்திருக்கிறதா? இல்லையா? ம்… அப்படியென்றால் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் போல் இருக்கிறது.

வள்ளி வலது பக்கம்; தெய்வானை இடது பக்கம். அதாவது முருகனுக்கு. வள்ளி இச்சா சக்தியையும், தெய்வானை கிரியா சக்தியையும், முருகன் ஞான சக்தியையும் குறிப்பவர்கள். வள்ளி இகலோகத்திலும், தெய்வானை பரலோகத்திலும் நம்மை காப்பவர்களாம்.

வள்ளியுடைய கையில் பூலோகத்தில் காணப்படும் தாமரை மலர் இருக்கிறதாம். தெய்வானை கையில் தேவலோகத்தில் காணப்படும் நீலோத்பல மலராம். வடிவேல் முருகனின் வலது கண்ணை சூரியனாகவும், இடது கண்ணை சந்திரனாகவும் சொல்வார்கள். அவனுக்கு தந்தையைப் போன்ற அக்கினிக் கண்ணும் உண்டு.

வலது புறம் இருக்கும் வள்ளியின் கையில் இருக்கும் தாமரை மலர், குமரனின் வலது கண் பார்வை (சூரியன்) பட்டு எப்போதும் மலர்ந்தே இருக்குமாம். அதே போல, இடது புறம் இருக்கும் தெய்வானையின் கையில் இருக்கும் நீலோத்பல மலரும், முருகனின் இடக் கண் பார்வையினால் (சந்திரன்) எப்போதும் மலர்ந்தே இருக்குமாம். அதனால், முருகப் பெருமானை இடைவிடாது அன்புடன் வணங்குபவர்களுக்கு அவன் இருபத்தி நான்கு மணி நேரமும் அகலாத துணையாய் இருப்பான்.

சன் டி.வி. தெய்வ தரிசனம் நிகழ்ச்சியில் தேச.மங்கையர்க்கரசி அவர்கள் சொன்ன தகவல்.


--கவிநயா

படத்துக்கு நன்றி: trinethram-divine.com

Tuesday, February 07, 2012

காவலுக்கு வேலுண்டு! ஆடலுக்கு மயிலுண்டு!

அன்பர்களுக்கு இனிய தைப்பூச நன்னாள் வாழ்த்துக்கள்! அருட்பெருஞ் சோதி, தனிப்பெருங் கருணை!!

* முருகன் தோன்றிய நாள் = வைகாசி விசாகம்
* அறுவரும் ஒருவர் ஆன நாள் = கார்த்திகையில் கார்த்திகை
* அன்னையிடம் வேல் வாங்கிய நாள் = தைப்பூசம்
* அசுரரை அழித்தாட்கொண்ட நாள் = ஐப்பசியில் சஷ்டி
* வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் = பங்குனி உத்திரம்

இப்படி...
அன்னையிடம் வேல் வாங்கி, முதன் முதலாக, திருக்கையில் வேல் ஏந்திய நாளே = தைப்பூசம்!



இன்றைய பாடல் = சீர்காழி சினிமாப் பாடல்! கேட்டுக் கொண்டே வாசியுங்கள்!
மனிதனும் தெய்வமாகலாம் என்ற சிவாஜி-செளகார் ஜானகி படம்! பல இனிய முருகன் பாடல்கள் இந்தப் படத்தில்...

இன்பத் தமிழ்க் குமரா, வெற்றிவேல் வெல்லுமடா போன்ற பாடல்கள்!
ஆனால் சீர்காழி பாடிய இந்தப் பாடல், Hit பாடல்! - kaavalukku vel undu, aadalukku mayil undu!


காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு
கோவிலுக்கு பொருளென்னடா - குமரா
நீயிருக்கும் இடம் தானடா!
(காவலுக்கு)

நதிகளிலும் மலர்களிலும் நடந்துவரும் தென்றலிலும்
உன்முகம் கண்டேனடா - எங்கும்
சண்முகம் நின்றானடா!
(காவலுக்கு)

ஓம் முருகா என்றவுடன் உருகுதடா உள்ளமெல்லாம்
ஒருகணம் சொன்னேனடா - அங்கே
சரவணன் வந்தானடா!
(காவலுக்கு)

தெய்வயாணை தேடிவந்தாளே விழி வண்டோடு
கந்தனுன்னைக் காண வந்தாளோ அருள் கண்ணோடு
பக்தனென்னைப் பார்க்க வந்தாளோ
(காவலுக்கு)

ஆடுவதும் தொட்டிலடா அன்புமகன் கட்டிலடா
பாடுவது வள்ளி அல்லடா - என் கந்தையா
ஏழையுடன் பள்ளி கொள்ளடா!
(காவலுக்கு)

திருப்பாதம் நான் தாங்கத் தாலேலோ
புவியாவும் நீ தாங்கத் தாலேலோ
கந்தைய்யா வேலையா தாலேலோ
தங்கையா முருகையா தாலேலோ
............நீ தாலேலோ



படம்: மனிதனும் தெய்வமாகலாம்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்
வரிகள்: கண்ணதாசன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்

Monday, January 30, 2012

காக்கக் கடவியநீ காவாது இருந்தக்கால்?

காக்கக் கடவியநீ காவாது இருந்தக்கால்

ஆர்க்குப் பரமாம் ஆறுமுகா? - பூக்கும்

கடம்பா முருகா கதிர்வேலா நல்ல

இடங்காண் இரங்காய் இனி!


முருகா, காக்கும் கடமை உனக்கு! ஆனால் காக்காமலேயே இருக்கிறாய்!
என் பாரம் உனக்கே வந்து சேரும்!
நீ மனம் இரங்கலீன்னாலும் பரவாயில்லை! உனக்கு நல்ல இடமாகப் பார்த்துக்கொள்!

Monday, January 16, 2012

திருச்செந்தூர் பிள்ளைத்தமிழில் @nchokkan பிறந்தநாள்!

முருகா, நாளும் வலையில் நற்றமிழ் பரப்பும் நா.சொக்கனுக்கு (@nchokkan) இன்று பிறந்தநாள்! (Jan-17-2012)

இன்னிக்கு நீயும் பிறந்தநாள் குழந்தையாய் மாறித் தவழ்ந்து வாடா:)
உன்னை வழக்கம் போல் கொஞ்சி...Side Gap-இல் சொக்கனுக்கும் பிறந்தநாள் வாழ்த்தை, நாம ரெண்டு பேரும் சேர்ந்து சொல்லீறலாமா?:)

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொக்கரே! 
நாளும் நற்றமிழ் போல், நலஞ் சூழ வாழி! - From Me & My Murugan Guy:)

இதோ..."சொக்கன்" என்று வரும் திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்!



பிறந்த (முருகக்) குழந்தையைக் கொஞ்சுதல் 
ஆசிரியர் - பகழிக் கூத்தர்!  நூல் - திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்



தொழுதும் துதித்தும் துயர் ஆற்றிச்
சுரருக்கு இறையும் சுரரும் உடன்
சூழ்ந்த கடம்பா டவியில் உறை
சொக்கக் கடவுள் தனைமூன்று

முருகா, உன்னைத் தொழுது (கையால்) + துதித்து (வாயால்), துயர் ஆற்றிக் கொள்ளலாம்!
அமரர்க்கு இறைவனான நீ, அந்த அமரர்களுடன் சேர்ந்து இருக்கே! எங்கே? கடம்படாவி என்னும் கடம்ப வனமான மதுரையில்!
அங்கு....சொக்கன், சொக்கன் -ன்னு இருக்கிறாரே, உன்னோட அப்பா...

பொழுதும் பரவி எழுத்துச்சொற்
போலப் பொருளும் புகறி எனப்
புகலும் ஆறஞ்சு இரட்டி திணைப்
பொருட்சூத் திரத்தின் பொருள்மயங்கா(து)

அந்தச் சொக்கனை, நாளும் போற்றினோம்...
எழுத்து-சொல்-பொருள் என்று தமிழ் இலக்கணம் வகுத்தாரு அந்தச் சொக்கன் (எ) இறையனார்!
தானும் ஒரு புலவராகத் தமிழ்ச் சங்கத்தில் அமர்ந்து, "இறையனார் அகப்பொருள்" எழுதினாரு!
மொத்தம் ஆறு * அஞ்சு * இரட்டி = 60 பாட்டு! (இந்த நா.சொக்கனோ 365 பாட்டு:))))))))))

எழுதும் பனுவற் பரணன் முதல்
ஏழேழ் பெருமைக் கவிப்புலவர்
இதயங் களிக்க விருப்பமுடன்
இறையோன் பொருட்குப் பொருள்விரித்து

அந்தச் சொக்கன் எழுதிய இறையனார் அகப்பொருளை முதலாக வைத்தே...பொருள் மயங்காது...பரணன் முதலிய 49 தமிழ்ப் புலவர்கள், சங்கத்தில் பாடல் எழுதுறாங்க!
அந்தப் புலவர்களோடு, நீயும் சேர்ந்து கொண்டாயே முருகா!
சங்கத்தில் நீயும் தமிழ்நூல் விரித்து, இதயம் களித்து, சொக்கன் நூலுக்கு விளக்கஞ் சொன்னாயே!

முழுதும் பகர்ந்த கனிவாயான்
முருகா முத்தம் தருகவே
மொழியுஞ் சமயம் அனைத்தினுக்கும்
முதல்வா முத்தம் தருகவே.

* இறையனார் அகப்பொருளை முழுதும் விரித்துச் சொன்ன கனிவாயா! என் மேல் கனிவாயா? - முருகா முத்தம் தருகவே!
* பல நெறிகளை மொழியும் பல சமயங்களுக்கும் கொள்முதலான முதல்வா, முருகா முத்தம் தருகவே!

என் ஆருயிர்ப் பொற்க்கீ, முத்தம் தருகவே!:)

உன்னைச் சைட் அடிக்கத் தான், திருப்போரூர்-க்கு வந்துக்கிட்டே இருக்கேன்! 
காரில் கூட பதிவு எழுத வைக்கும் படவா, பிச்சிருவேன் பிச்சி:) - இப்படிக்கு, உன் பிச்சி


பகழிக் கூத்தர், பிறப்பால் வைணவர்! ஆனால் முருகன் பால் மாளாத காதல் கொண்டவர்!
அவரைத் திருச்செந்தூரில் சைவப் பெருமக்களான கோயில் பூசாரிகள் தடுத்தாலும், அவரும் முருகனைச் சேவித்தார் - எப்படி? - கதை இங்கே இருக்கு!

Friday, January 13, 2012

மயில் வாஹனா! வள்ளி மன மோஹனா!


மயில் வாஹனா! வள்ளி மனமோஹனா! மா (மயில்)
சரவண பவ! வரமருள்வாய்! வா! மா (மயில்)

கயிலாயம் முதல் மலைகளில் எல்லாம் களித்து
விளையாடும் பன்னிரு கையா! முருகையா! (மயில்)

பூர்ண சந்திரன் போலும் அறுமுகா!
புவனம் எங்கும் நிறை மாயவன் மருகா!
ஆரணப் பொருளே! அடிமை எனை ஆள
வா வா வா! இராமதாசன் பணி குஹா!



இராகம்: மோஹனம்
இயற்றியர்: பாபநாசம் சிவன்
பாடியவர்கள் : ப்ரியா சகோதரியர்

Thursday, December 08, 2011

"தீப" மங்கள சோதீ நமோ நம!

அன்பர்கள் அனைவருக்கும் "கார்த்திகை விளக்கீடு" வாழ்த்துக்கள்!
திருக் கார்த்திகைத் தீபம் = தீப மங்கள சோதீ நமோ நம!



நாத விந்து கலாதீ நமோ நம என்னும் திருப்புகழ்! - இது திருவாவினன்குடி என்னும் பழநித் திருப்புகழில் உள்ள அர்ச்சனை!

இதை மனப்பாடம் செய்வதும் மிக எளிது! முயன்று பாருங்க! இந்த அர்ச்சனை உங்களுக்குப் பிடித்துப் போகும்!
இதோ, சுதா ரகுநாதன் ஒவ்வொரு பத்தியின் முடிவிலும், ஒரு இழு இழுப்பது நல்லாவே இருக்கு! :) கேட்டுக் கொண்டே வாசியுங்கள்!



நாத விந்து கலாதி நமோ நம
வேத மந்திர சொரூபா நமோ நம
ஞான பண்டித சுவாமி நமோ நம - வெகுகோடி


நாம சம்பு குமாரா நமோ நம
போக அந்தரி பாலா நமோ நம
நாக பந்த மயூர நமோ நம - பரசூரர்

சேத தண்ட வினோதா நமோ நம
கீத கிண்கிணி பாதா நமோ நம
தீர சம்பிரம வீரா நமோ நம - கிரிராஜ

தீப மங்கள சோதி நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம - அருள்தாராய்



மேலோட்டமான பொருள்:

நாத விந்து கலாதீ நமோநம = சிவ சக்தி தத்துவத்துக்குப் பொருளே நமோநம!
வேத மந்த்ர சொரூபா நமோநம = வேத மந்திர உருவமானவனே நமோநம!
ஞான பண்டித சாமீ நமோநம = ஞான பண்டித, சுவாமி நாதனே நமோநம!

வெகு கோடி
நாம சம்பு குமாரா நமோநம = கோடி பெயர்கள் கொண்ட சிவ குமாரனே நமோநம!
போக அந்தரி பாலா நமோநம = இன்பம் தரும் பார்வதி குமாரனே நமோநம!

நாக பந்த மயூரா நமோநம = பாம்பைக் காலில் கட்டிய, மயில் வாகனனே நமோநம!

பரசூரர்
சேததண்ட விநோதா நமோநம = சூரரைத் தண்டித்து விளையாடல் செய்தவனே நமோநம!
கீத கிண்கிணி பாதா நமோநம = இன்னொலி சதங்கைகள் கட்டிய பாதங்களைக் கொண்டவனே நமோநம!
தீர சம்ப்ரம வீரா நமோநம = தீரனே, போர்வீரனே, நமோநம!

கிரிராஜ = மலை அரசே
தீப மங்கள சோதீ நமோநம = தீப விளக்குகளின் ஒளி வடிவே நமோநம!
தூய அம்பல லீலா நமோநம = தூய அம்பலத்தில் லீலைகள் புரிபவனே நமோநம!
தேவ குஞ்சரி பாகா நமோநம = தேவயானைப் பிராட்டியைப் பக்கத்தில் கொண்டவனே நமோநம!
அருள் தாராய் = உனது திருவருளைத் தந்தருள்வாய்
!



இனி, அர்ச்சனையைத் தொடர்ந்து வரும் அதே பாடல்!

ஈதலும் பல கோலால பூஜையும்
ஓதலும் குண ஆசார நீதியும்
ஈரமும் குரு சீர்பாத சேவையும் - மறவாத


ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மனோகர
ராஜ கம்பீர நாடாளு நாயக - வயலூரா


ஆதரம் பயில் ஆரூரர் தோழமை
சேர்தல் கொண்டு அவரோடே முன்னாள் அதில்
ஆடல் வெம்பரி மீதேறி மாகயிலை - இல் ஏகி

ஆதி அந்த உலா ஆசு பாடிய
சேரர் கொங்குவை காவூர் நன்னாடதில்
ஆவினன் குடி வாழ்வான தேவர்கள் - பெருமாளே



தமிழிலேயே உள்ளதால் பொருள் சொல்லவில்லை. பின்னூட்டத்தில் யாராச்சும் சொல்லுங்க! அருணகிரி ஒரு முக்கியமான நிகழ்ச்சியையும் இந்தப் பாடலில் குறிக்கிறார். அந்தக் கதையை இங்கு காணலாம்!

திருப்புகழ் அர்ச்சனையில் வரும் காவிரி வயல் வர்ணனையில் உள்ளம் பறி கொடுக்கலாம். ராஜ கம்பீர நாடாளு நாயக - வயலூரா என்று நாமும் அர்ச்சிக்கலாம், வாருங்கள்!

தீப மங்கள சோதீ நமோநம!
வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா!

Wednesday, November 16, 2011

ஆதாரம் நின்திருப் பாதாரம்!

இந்தச் செவ்வாயில், செவ்வாயன் சேயோனின் எளிமையான பாட்டு ஒன்னு!

பொதுவா...TMS சினிமா/பின்னணிப் பாடகர்-ன்னு பலரும் அறிவாங்க!

ஆனா....அவர் ஒரு சிறந்த கச்சேரிப் பாடகர் (மரபிசை) என்பது சிலர் மட்டுமே அறிவாங்க! தமிழிசை/ கர்நாடக மேடைக் கச்சேரிகளிலும் கொடி கட்டியவர் TMS!
அப்படியான ஒரு பாட்டு, இந்தச் செவ்வாய் முருகனருளில்!

New York விட்டு வெகு தொலைவு வந்திருக்கேன்...
ஒருவன் ஊருக்கு வந்துவிடு, போதும் அங்கு இருந்தது-ன்னு என்னைக் கூப்பிடுகிறான்!
முருகவா....ஆதாரம் நின்திருப் பாதாரம்!


ஆதாரம் நின்திருப் பாதாரம் - இந்த
அவனியில் உனை அன்றித் துணை ஏது முருகா?
(ஆதாரம்)

ஓதாரும், தன்னை உணர்ந்தாரும் - போற்றும்
போதனே சுவாமி நாதனே, என்றும்
(ஆதாரம்)

பெற்று எனைப் பெரிதும் மகிழ் அன்னையும் நீ
பேணி எனை வளர்க்கும் தந்தையும் நீ
கற்ற கலை யாவினிற்கும் குருவும் நீ
கலியுக வரதா என் கண்கண்ட தெய்வமே
(ஆதாரம்)

Tuesday, November 01, 2011

6) பழமுதிர்சோலை: எனது முன் ஓடி வரவேணும்!

வாங்க மக்கா!
நேற்றே பஞ்சமியும்,சஷ்டியும் ஒரே நாளில் வந்து விட்டதால், நிறைவுப் பகுதியான 6ஆம் பதிவை, இன்று இடுகிறேன்!

கந்த சஷ்டி முடிந்த திருமண நாள் அல்லவா! என் முருகனுக்கு முதலிரவு!:)
மிக இனிமையான பாடல் ஒன்னு...
பழமுதிர்சோலைப் பாடல்! பார்ப்போமா? நாலே வரி தான்!

நேற்று சஷ்டி அதிகாலையில், நியூயார்க் ஆலயத்தில், பாடச் சொல்லி அழைத்திருந்தார்கள்! இதே பாடலையே அங்கும் பாடினேன்! அதன் ஒலித்துண்டு கீழே! கேட்டுக்கிட்டே வாசிங்க!:)






அகரமும் ஆகி, அதிபனும் ஆகி, அதிகமும் ஆகி - அகமாகி
அயன் என ஆகி, அரி என ஆகி, அரன் என ஆகி - அவர்மேலாய்


எழுத்துக்களில் = அகரம் போல் முதல் நீ! மக்களில் = தலைவன் போல் முதல் நீ! வரம் தருவதில் அதிகம் நீ! என் அகமும் நீ!
படைத்தலில் = அயன் (பிரமன்) நீ! காத்தலில் = அரி (திருமால்) நீ! அழித்தலில் = அரன் (சிவன்) நீ! முத்தொழில் மூவர் மேலும் உன் குணம், மணம் வீசுகின்றது!

இகரமும் ஆகி, எவைகளும் ஆகி, இனிமையும் ஆகி - வருவோனே
இருநிலம் மீதில் எளியனும் வாழ, எனது முன் ஓடி - வரவேணும்!!


இங்குள்ளதும் நீ! எங்குள்ளதும் நீ! இனிமையும் நீ...இப்படி நீயாக நீ இருந்தவாறு வரும் திருமுருகா!
இந்த நிலத்தில், உனக்காகவே நான் வாழ்கிறேன்...எனக்காக என் முன்னே ஓடி வர மாட்டியா? வாடா!

மகபதி ஆகி, மருவும் வலாரி, மகிழ் களி கூரும் - வடிவோனே
வனமுறை வேடன் அருளிய பூசை, மகிழ் கதிர்காமம் - உடையோனே


வேதங்களின் பதி நீ! வலாரி என்னும் அசுரனைக் கொன்றவன் இந்திரன்! அவன் படைகளைச் சிறை மீட்டுத் தந்து, அமராவதியை மகிழ்வித்தவனே!
அந்தியன் என்ற பூர்வகுடி வனவேடன், உன்னை ஈழத்தின் கதிர்காமத்திலே வைத்துப் பூசை செய்தானே! அதில் மகிழும் முருகவனே!
(ஈழத்தில் செல்வச்சன்னிதி மற்றும் கதிர்காமத்தில் பிராமணர் அல்லாதோர் பூசகராக உள்ளனர்! கதிர்காமத்தில் விளங்கும் பூசகரை கப்புறாளை என்றும் செல்வச்சன்னிதி பூசகரை கப்பூகர் எனவும் அழைப்பர் - நன்றி: கானா பிரபா)

செககண சேகு, தகுதிமி தோதி, திமி என ஆடும் - மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை, மலை மிசை மேவு - பெருமாளே!!


தகதிமி தகதிமி என்று விதம் விதமான தாள கதியில், மயிலோடு ஆடுபவனே!
செல்வ வளங்கள் நிறைந்த பழமுதிர்சோலை! அந்தச் சோலைமலையில் மேவும் பெருமானே! என் கண்ணாளா!
-----------------------------------------

* 2011 சஷ்டிப் பதிவுகள்



முன்பு பதிவிட்ட, பழமுதிர் சோலை ரகசியங்களைப் பார்ப்போமா?

பழமுதிர்-ச்-சோலை ன்னு சொல்லாதீங்க! "ச்" வராது!
பழம் உதிர் சோலை = பழங்கள்...உதிர்ந்த சோலை, உதிர்கின்ற சோலை, உதிரும் சோலை என்னும் அழகிய வினைத் தொகை!
நம் வினையும் தொகைந்து விடும் முருக வினைத் தொகை!

பழமுதிர் சோலை ஆலயம்


* இங்கு முருகனுக்கு ஒரு காலத்தில் ஆட்டு ரத்தம் கலந்த அரிசிச் சோற்றைப் படைத்த வேடுவர்கள் உண்டு! சொல்பவர் நக்கீரர்! கொழுவிடைக் குருதி விரைஇய தூவெள்ளரிசி சில்பலிச் செய்து என்கிறார் திருமுருகாற்றுபடையில்!

* மற்ற படைவீடுகளைப் போல பிரம்மாண்டமான ஆலயம் இங்கு கிடையாது! முன்பு கூட வேல் வழிபாடு மட்டுமே இருந்துள்ளது. அண்மைக் காலங்களில் தான் தனியான ஆலயமும், முருகனின் சிலை வைத்து வழிபாடுகளும் தோன்றியுள்ளன!

* முற்காலத்தில், வேட்டுவர்கள், குறிஞ்சி நில மக்கள் எப்படி வழிபட்டு வந்தனரோ, அப்படியே தான் பல வழிபாடுகள் இன்றும் உள்ளன; வேட்டுவர்களின் தெய்வமான ராக்காயி அம்மனும் மலை மேல் உண்டு!

* நாகரீக மாற்றங்களால் அதிகம் அசைந்து கொடுக்காது, பண்டைத் தமிழ் மலையாகவே பழமுதிர் சோலை இருந்து வருகிறது போலும்!

* நூபுர கங்கை என்னும் சிலம்பாறு, காட்டாறாகப் பாயும் மலை. இங்கு மாதவி மண்டபத்தில் அமர்ந்து, இளங்கோ தம் காப்பியத்தை எழுதினார் என்று சொல்வாரும் உண்டு!

* ஒளவைக்கு நாவற் பழம் காட்டி, "பாட்டி, பழம் சுடுகிறதா?" என்று கேட்ட இடம் இதுவே!

* ஆழ்வார்கள் சோலைமலையின் இயற்கை அழகில் மனம் பறிகொடுத்து வர்ணித்துள்ளார்கள். ஆண்டாளின் கல்யாண வேண்டுதலை நிறைவேற்றிய இறைவனும் சோலைமலை அழகரே!
மாலிருஞ்சோலை பாடற் குறிப்புகள் பரிபாடல் முதலான சங்க இலக்கியங்களிலும் வருகின்றன!

* மாமன் திருமால் கீழே, காட்டில்! மருகன் முருகன் மேலே, மலையில்!

சோலைமலை, அழகர் கோயில்!


* கீழே ஒரு அழகன் - முல்லை அழகர்! மேலே ஒரு அழகன் - குறிஞ்சி முருகன்!
இப்படி இரு அழகன்களும் ஒரு சேர இருப்பதால், சோலைமலை முழுதும் அழகு ததும்பி வழிவதில் வியப்பென்ன?

* பலரும் அறிந்த பழமுதிர் சோலை திருப்புகழ்-கள்
- அகரமும் ஆகி அதிபனும் ஆகி,
- சீர் சிறக்கும் மேனி பசேல் பசேல்

* இழுமென இழிதரும் அருவிப், பழமுதிர் சோலை மலைகிழ வோனே - என்று பழமுதிர்சோலையில் தான் முருகாற்றுப்படை முடிகிறது!

திரு மலிவான பழமுதிர் சோலை, மலை மிசை மேவும் பெருமாளே!
இரு நிலம் மீதில், எளியனும் வாழ, எனது முன் ஓடி வர வேணும்!

வாடா முருகா! என் முன்னே...ஓடி வாடா....எத்தனை காலம் ஏங்குவேன்? முருகாஆஆஆ!

Sunday, October 30, 2011

5) திருத்தணி: திருப்புகழ் "நெருப்பு"!

சஷ்டி: 5ஆம் நாள் & 6ஆம் நாள்! அடுத்து 7ஆம் அறிவா-ன்னு கேக்காதீக:)

இன்று பஞ்சமி-சஷ்டி இரண்டுமே வந்து விடுவதால்...பல தலங்களிலும் இன்றே கந்த சஷ்டி - சூர சங்காரம் ஆகி விடுகிறது!
வாங்க, ஓடுவோம்...இன்னிக்கி காலை-மாலை-ன்னு 2 பதிவாப் போடணும்! போடா, என்னை நீ ரொம்பவே படுத்தற, லூசு முருகவா!:)

திருத்தணிக்குத் தானே ஓடப் போறாம்? ஆமாம்!
ஆனா ஐந்தாம் படை வீடு அது மட்டுமே அல்ல! இன்னும் முருகனின் பல குன்றுகளும் சேர்த்தே 5ஆம் படைவீடு = குன்றுதோறாடல்!
பதி எங்கிலும் இருந்து விளையாடி
பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே!



இந்தத் திருப்புகழும் நாலே வரி தான்! அப்படியே கப்-ன்னு பிடிச்சிக்கோங்க!

சினத்தவர் முடிக்கும், பகைத்தவர் குடிக்கும்
செகுத்தவர் உயிர்க்கும்...சினமாகச்

சிரிப்பவர் தமக்கும், பழிப்பவர் தமக்கும்,
திருப்புகழ் நெருப்பென்(று)...அறிவோம் யாம்

நினைத்ததும் அளிக்கும், மனத்தையும் உருக்கும்
நிசிக்கரு அறுக்கும்...பிறவாமல்

நெருப்பையும் எரிக்கும், பொருப்பையும் இடிக்கும்
நிறைப்புகழ் உரைக்கும்...செயல் தாராய்!

சினத்தையும் உடற் சங்கரித்(து) அமலைமுற்றும்
சிரித்து எரி கொளுத்தும்...கதிர்வேலா

தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்து எண்
திருத்தணி இருக்கும்...பெருமாளே!!


பொருள்:
சினத்தவர் முடிக்கும், பகைத்தவர் குடிக்கும் = நல்ல அடியவர்களை.....சினப்போரை முடிக்கும், பகைப்போரைக் குடிக்கும்
செகுத்தவர் உயிர்க்கும்...சினமாக = கொல்வோரை அச்சினமே கொல்லும்!

சிரிப்பவர் தமக்கும், பழிப்பவர் தமக்கும் = நல்ல அடியவர்களை.....சிரித்து நகையாடுவோர் தமக்கும், பழித்துப் பகையாடுவோர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென்(று)...அறிவோம் யாம் = திருப்புகழே நெருப்பாய் மாறும்! அறிவோமாக!

நினைத்ததும் அளிக்கும், மனத்தையும் உருக்கும் = நல்ல அடியார்க்கு.....நினைத்ததை அளிக்கும், அவர்கள் மனத்தையும் உருக்கும்!
நிசிக்கரு அறுக்கும்...பிறவாமல் = நடுநிசி இருள் போல இருக்கும் கர்ப்ப வாசத்தை அறுக்கும்!

நெருப்பையும் எரிக்கும், பொருப்பையும் இடிக்கும் = நெருப்பையும் எரிக்கும்! மலையையும் உடைக்கும்!
நிறைப்புகழ் உரைக்கும்...செயல் தாராய்! = அப்படியான நிறைந்த உன் திருப்புகழைப் பாடும் செயல் தாராய்!

சினத்தையும் உடற் சங்கரித்(து) அமலைமுற்றும் = சினங் கொண்ட உடலை சங்காரம் செய்து, பல உடல் மாமிச மலைகளை
சிரித்து எரி கொளுத்தும்...கதிர்வேலா = ஒரு சிரிப்பினாலேயே கொளுத்த வல்ல கதிர்வேலா! நகை ஏவிய நாதா!

தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்து = தினைப்புனப் பெண், குறமகள், எங்கள் வள்ளியின் மார்பிலே அழுந்திச் சுகித்து இருக்கும் முருகவா...
எண் திருத்தணி இருக்கும்...பெருமாளே!! = நான் எண்ணுகின்ற திருத்தணி மலை மேவும் பெருமானே!




முன்பு பதிவிட்ட, திருத்தணி இரகசியங்கள்!

* மொதல்ல, திருத்தணிகை என்று தனியான ஒரு படைவீடே கிடையாது! குன்றுதோறாடல் என்பது தான் பொதுவான பெயர்.
இது "பல" குன்றுகளுக்குப் பொருந்தும். ஆனால் "எல்லாக்" குன்றுகளுக்கும் பொருந்தாது! :) பரங்கிமலை, சோளிங்கர் மலை, திருப்பதி மலை, சபரி மலை-ன்னு எல்லா மலைகளுக்கும் பொருந்தாது!:)

குன்று தோறு ஆடலில் ஒன்று தான் திருத்தணிகை!
திருத்தணிகை, திருச்செங்கோடு, வெள்ளிமலை, வள்ளிமலை, விராலிமலை என்று பல குன்று தோறும் ஆடல்! - எல்லாம் சேர்ந்து தான் ஐந்தாம் படைவீடு!
பதி எங்கிலும் இருந்து விளையாடி
"பல"குன்றிலும் அமர்ந்த பெருமாளே!


ஆனால் உபன்னியாசகர்களும், புலவர் பெருமக்களும், as usual, தணிகை மலையை மட்டும் வெகுவாகக் கொண்டாடி விட்டனர்.
நாளடைவில் அதையே புழங்கப் புழங்கத், திருத்தணிகை மட்டுமே ஐந்தாம் படை வீடு என்று மக்கள் மத்தியில் ஒரு தோற்றம் ஏற்பட்டு விட்டது!

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்ற சொலவடையும் அதே போலத் தான்!
குறிஞ்சிக் கடவுள் நம் முருகப் பெருமான்! மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி அல்லவா? அதனால் அப்படிச் சிறப்பிக்க வந்தார்கள்!
ஆனா நாமளோ, எங்கேனும் ஒரு குன்று இருக்கா? அப்படின்னா அங்கே குமரன் கோயிலும் இருந்தே ஆகணும்-ன்னு நினைச்சிக்கிட்டோம்! :)

திருமலை-திருப்பதி, சோளிங்கபுரம், அகோபிலம் (சிங்கவேள் குன்றம்), கொல்லூர் மூகாம்பிகை, சிருங்கேரி, வானமாமலை என்று அத்தனை குன்றுகளையும் அப்படி எடுத்துக் கொண்டால் சரியாக வருமா? சென்னைப் பரங்கிமலை மேலும் முருகப் பெருமான் என்று கிளம்ப முடியாதல்லவா? :)

குன்று தோறாடல் என்றால், குமரன் ஆடிய பல குன்றுகள் என்று தான் கொள்ள வேண்டும்! கிளிமஞ்சாரோ உட்பட உலகில் உள்ள எல்லாக் குன்றுகளிலும் ஆடினான் என்று பொருள் கொள்ளலாகாது! :)
பல குன்று தோறு ஆடல்களில், சிறப்பான ஒரு மலை, திருத் தணிகை மலை!


* திருத்தணிகை = பழத்துக்காகக் கோபித்துக் கொண்ட முருகன், சினம் தணிந்த இடம் என்று மட்டுமே பலரும் நினைத்துக் கொண்டுள்ளோம்!
ஆனால் அதை விட முக்கியமாக, வள்ளி அம்மையை முருகன் மணந்த தலமும் திருத்தணிகையே!

ஆனா, இதை ஏன் பெரிதாக யாரும் எடுத்துச் சொல்ல மாட்டாங்கிறாங்க-ன்னு தான் தெரியலை! :(

அருகில் உள்ள வள்ளிமலையில் காதல் புரிந்த முருகப் பெருமான்,
இங்கு வந்து தான்,
நம்பிராசனும் வேடுவர் குலமும் சூழ்ந்து இருந்து வாழ்த்த,
வள்ளியை, ஊரறிய, உலகறிய, மணம் புரிந்து கொண்டான்!

களவு மணமாவது? கற்பு மணமாவது?
களவில் தான் கற்பில்லையா? கற்பில் தான் களவில்லையா?
எல்லாம் ஒரே மணம் தான்! திரு-மணம் தான்! வள்ளித் திரு-மணம் தான்!
இனி வள்ளித் திருமணம் என்றாலே திருத்தணிகை தான் நம் நினைவுக்கு வர வேண்டும்! ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்!

வள்ளியம்மைக்குரிய விசேடச் சிறப்பை, அனைத்து முருகன் ஆலயங்களிலும், தெளிவாகத் தெரிசனப்படுத்த வேண்டும்!
சிவாலயங்களில் அம்பாளுக்குத் தரும் முன்னிறுத்தலைப் போலவே,
முருகாலயங்களில் வள்ளி-தேவானை அம்மைக்குத் தனியாக ஏற்றம் தர வேண்டும் என்பது அடியேன் நீண்ட நாள் அவா!



* அசுரர்களுடனான போரில், முருகனுக்கு ஏற்பட்ட கோபம், தணிந்த போன இடமும் இதுவே! தீமையைக் கண்டு பொங்கி எழுந்த பின், அந்தக் கோபம் மனதில் கனன்று கொண்டே இருக்கக் கூடாது அல்லவா!
இங்கு தான் அது தணிந்து, தணிகை மலை ஆனது! சாந்திபுரி என்றும் சொல்லிப் பார்த்தனர்! ஆனால் தணிகையே தனித்து நின்றது! வென்றது! :)

இராமனும் முருகனைப் போலவே, அரக்கர்களின் கொடுமையை எண்ணி மனத்தளவில் கனன்று கொண்டு இருந்தான். இராமேஸ்வரத்தில் அவன் வழிபட்ட போது, சிவபெருமானின் சொற்படி, தணிகை மலை வந்து முருகனையும் வழிபட்டான். பின்னரே இராமனின் கனன்ற கோபம் அகன்றது என்று தணிகை "ஸ்தல புராணம்" சொல்லுவார்கள்!

* இராமலிங்க வள்ளலார், கண்ணாடியில் ஜோதி காட்டி வழிபட்ட போது, அவரைத் தணிகை மலைக்கு அழைத்து, உருவத்திலும் அருவம் காட்டி அருளினான் முருகப் பெருமான்!
உருவாய் அருவாய், உளதாய் இலதாய் என்ற அநுபூதி வாக்கு சத்திய வாக்கு அல்லவா? அதனால் திருவருட்பாவில் தணிகை மலையானைப் போற்றிப் பாடுகிறார் வள்ளலார்!

* கர்நாடக இசை மும்மூர்த்திகளுள் ஒருவர் முத்துசாமி தீட்சிதர்! "குருகுஹ" என்றே தன்னுடைய பெயர் முத்திரையைத் தம் பாடல்களில் பதிப்பார். மிகுந்த முருக அன்பர்!
முதலில், இசையில் அவ்வளவாகத் தேர்ச்சி இல்லை அவருக்கு! தணிகை மலைப் படிகளில் அவர் தள்ளாடி வரும் போது, தணிகை வேலவன் வயசாளி உருவில் வந்து நின்றான்! தன் கோயில் பிரசாதத்தைத் தந்து, அவர் நாவினை இனிமை ஆக்கினான்!

அவர் முதல் கீர்த்தனையே திருத்தணி முருகப் பெருமான் மீது! - ஸ்ரீ நாதாதி குருகுஹோ, ஜயதி ஜயதி!
அருணகிரியைப் போலவே இவருக்கும் சந்தம், சலசலவென்று, சங்கீத ஸ்வரமாய்க் கொட்டும்! சந்தம் பாடணும்-ன்னாலே, அது சந்தச் சொந்தக்காரன், கந்தன் தான் தரணும் போல!

* திருத்தணியில் தான் ஆங்கிலப் புத்தாண்டுப் படி உற்சவம் பிரபலமானது! எல்லாரும் ஆங்கில மோகம் கொண்டு அலைகிறார்களே என்று பார்த்த வள்ளிமலை சுவாமிகள், சரியாக ஆங்கிலப் புத்தாண்டு அன்று, தமிழ்க் கடவுளுக்குப் படி உற்சவம் நடத்தி, அதைத் தமிழ் விழாவாக ஆக்கி விட்டார்!

* திருத்தணியும், திருப்பதி மாதிரியே ஆந்திராவுக்குப் போயிருக்க வேண்டியது!
மாநில எல்லைச் சீர்திருத்தம் (State Reorganization Act)-இன் படி சட்டம் கொண்டு வந்தது மத்திய அரசு! சிலம்புச் செல்வர் ம.பொ.சி தான் முன்னின்று திருத்தணியை மீட்டார்! "திருத்தணியை மீட்டேன்! திருப்பதியை மீட்பேன்!" என்று சூளுரைத்தார்! -ஆனால் முடியவில்லை!
ஒரு வேளை நல்லதற்காகக் கூட இருக்கலாம்! TTD என்று தனிப்பட்ட தன்னாட்சி நிறுவனம் அமையாது, கோயில் கொள்ளைகள் என்று பலவும் இங்கே மலிந்திருக்க வாய்ப்புண்டு!

* ஆசிரிய மாமணி, குடியரசுத் தலைவர், டாக்டர். எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்ததும் திருத்தணியே!

* திருத்தணித் திருப்புகழ்களில், பிரபலமானவை சில:
- இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்,
- எத்தனை கலாதி,
- சினத்தவர் முடிக்கும்,
- அதிரும் கழல் (குன்று தோறாடல்)

திருத்தணி முருகப் பெருமானும்-தேவியரும்!
(மூலவர் வரைபடம், உற்சவர் புகைப்படம்)



* திருத்தணியில், முருகனுக்கு எதிராக மயில் அல்ல! யானை வாகனம் தான்! அதுவும் யானை, முருகனைப் பார்த்தபடி இல்லாமல், திரும்பிப் பார்த்தபடி இருக்கும்!
கருவறையில் மயில் இல்லாக் குறையைப் போக்க, உற்சவ முருகனுக்கு மிகப் பெரிய மயில் வாகனம் உண்டு!

* அறுபடை வீடுகளில், திருத்தணியில் மட்டுமே சூரசங்காரம் கிடையாது!
சினம் தணிந்த இடம் அல்லவா? எதுக்கு இன்னோரு முறை சங்காரம்?:))

புயற்பொழில் வயற்பதி
நயப்படு திருத்தணி
பொருப்பினில் விருப்புறு பெருமாளே!
- முருகா!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP