Thursday, December 24, 2020

நோற்றுத் திருமுருகன் | முருகன் திருப்பாவை - 10

நோற்றுத் திருமுருகன் சேர்கின்ற நங்கையளே...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-10

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


10/30 | ஐந்தாம் வீட்டுத் தோழியை எழுப்பல்!


நோற்றுத் திருமுருகன் சேர்கின்ற நங்கையளே,
ஏற்றமும் இல்லை, துயிலிறக்கம் இல்லார்க்கு!
மாற்றம்தான் தாயேன்டீ; வாசலுக்கு வாயேன்டீ!
சீற்றங்கள் இல்லாத சீராளும் கந்தனெழில்

நாற்றம் நறுமணங்கள் நம்முருகன் மேனியிலே
போற்றும் பொழுதெல்லாம் பொங்கித் தழுவிடவே
ஆற்றல் மிகவந்து ஆற்றிலேன் வாயேன்டீ!
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்!   (10)


முருகன் திருப்பாவை தொடரும்..


*நேற்றிரவு (Dec 24, 2020) மறைந்த பெருந்தமிழறிஞர், பேரா. முனைவர். தொ. பரமசிவன் அவர்களின் குன்றா நினைவுக்கு இரங்கல் வணக்கம்!


தொ.ப. என்று அன்புடன் விளிக்கப்படும் பேரா. தொ. பரமசிவன், தமிழியல், திராவிடவியல், மாந்தவியல் மற்றும் வரலாற்றுத் துறைகளில், காய்தலுவத்தல் இல்லாச் செப்பம் மிகு  நடுவுநிலைமையுடன் இயங்கிய திறனாய்வாளர்.

“வரலாற்று வாசிப்பு என்பது மானுட வாசிப்பே; சமூகமும் மக்களுமே மொழியியலை இயக்கும் அச்சாணி” 
என்று பலமுறை பகன்றவர். நாட்டார் பேச்சு வழக்கையே இலக்கிய வழக்கும் ஆக்கியவர். நாட்டாரியல் தமிழ்த் தெய்வ மரபின் சீரிய சிந்தனையாளர். 

எம் அன்பு கெழுமிய பேராசிரியர் தொ. ப. அய்யனுக்கு, நினைவு வணக்கம்!

0 comments:

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP