Thursday, December 31, 2020

அம்பரமே தண்ணீரே | முருகன் திருப்பாவை - 17

அம்பரமே தண்ணீரே சோறும் இருப்பிடமும்...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-17

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)



17/30 | முல்லை குறிஞ்சி; தலைக்குடும்பம் துயிலெழுப்பல்!

அம்பரமே தண்ணீரே சோறும் இருப்பிடமும்
நம்பி அறஞ்செய்யும் நாரணா கண்திறவாய்!
நம்பினார்க்கும் நம்பார்க்கும் நம்-பார்க்கும் நல்விளக்கே,
எம்பெருமாட்டி நப்பின்னாய், அம்மா வழிதிறவாய்!

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே,
செம்மகள் செல்வீ,  விழிதிறவாய் மைவள்ளி்!
செம்தமிழ் ஆதிகுடி முல்லை குறிஞ்சிக்கு
நம்மாயச் சேயோனே தூங்கேலோ ரெம்பாவாய்!   (17)


முருகன் திருப்பாவை தொடரும்..


மகிழ் திகழ் புத்தாண்டு 2021 வாழ்த்துக்கள்!

Wednesday, December 30, 2020

நாயகனாய், நற்றமிழ் | முருகன் திருப்பாவை - 16

நாயகனாய், நற்றமிழ் நன்னிலத்தின் செங்குறிஞ்சி...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-16

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)



16/30 | முருகன் முற்றம்; காவல் கோட்டத்தானை வணங்கல்!

நாயகனாய், நற்றமிழ் நன்னிலத்தின் செங்குறிஞ்சிக்
கோயிலைக் காப்பவனே, கோன்வீட்டுத் தாழ்திறவாய்!
மேயத்தொல் காப்பியச் சேயோன், நெருநலில்
நேயப் பறைதருவேன் என்றே வழிமொழிந்தான்!

வேயுறு தோளியாள் வள்ளியே முன்மொழிந்தாள்!
தூயவாய், யாக்கை, மனமொடு வந்துளோம்!
நீயதை ஏற்று-எம் அம்மானைக் கைக்கூட
ஆய அருங்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்!   (16)


முருகன் திருப்பாவை தொடரும்..

Tuesday, December 29, 2020

எல்லேநம் சேக்காளி | முருகன் திருப்பாவை - 15

எல்லேநம் சேக்காளி, சோலியாத் தூங்குதியோ?

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-15

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


15/30 | பத்தாம் வீட்டுத் தோழியை எழுப்பல் (கடைசி வீடு)!

எல்லேநம் சேக்காளி, சோலியாத் தூங்குதியோ?
வல்லடியாய் ஏசாதீர்; வந்திடுவேன் பையத்தான்!
சில்லென்று வேண்டாம் சிரிப்பாணி; கொண்டி-திற!
சில்சிலுப்பு நானல்ல; நீங்கள்தான் ஆயிடுக!

நில்லாமல் வந்தனர்காண், நொம்பலம் பாராமல்!
எல்லாரும் வந்தனரோ? வந்தார்வந் தெண்ணிக்கொள்!
சில்லு,கை ஏந்தியவன் செல்லமாம் மாமருகன்
சொல்லுவோம் வேல்முருகா சொல்லேலோ ரெம்பாவாய்!   (15)


தென் தமிழக/ நெல்லை வட்டார வழக்கு - அருஞ்சொற்பொருள்:

*சேக்காளி= தோழன்/தோழி
*சோலி= வேலை
*வல்லடி= வம்பு
*ஏசல்= திட்டுதல்
*பைய= மெதுவாக
*சிரிப்பாணி= கள்ளச் சிரிப்பு
*கொண்டி திற= தாழ்ப்பாள் திற
*சில்சிலுப்பு= அலட்டல்
*நொம்பலம்= சிரமம்/வலி
*சில்லு= சக்கரம் | சில்லு, கை ஏந்திய திருமால்

முருகன் திருப்பாவை தொடரும்..

Monday, December 28, 2020

உங்கள் மனையின் | முருகன் திருப்பாவை - 14

உங்கள் மனையின் புழைக்கடைக் கேணியுள்...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-14

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


14/30 | ஒன்பதாம் வீட்டுத் தோழியை எழுப்பல்!

உங்கள் மனையின் புழைக்கடைக் கேணியுள்
பைங்கெழு தாமரை, ஆம்பலை வென்றதே!
செங்கொடி மாமயில் தூவிகள் சேர்த்திறுக்கி
அங்கெழு காவடிகள் ஏந்தி விரைகின்றார்!

எங்களை ஓட்டுவாள், இங்கிவள் தூங்கினாள்;
நங்கையே நாணமும் என்விலை? சொல்லடீ!
பங்கயக் கைகளில், பைந்தமிழ் வேலெழில்
தங்கிடும் கந்தனைப் பாடேலோ ரெம்பாவாய்!   (14)


முருகன் திருப்பாவை தொடரும்..

Sunday, December 27, 2020

புள்ளின்வாய் பைம்பொழிலில் | முருகன் திருப்பாவை - 13

புள்ளின்வாய் பைம்பொழிலில், உன்பேர் அகவுதுகாண்!

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-13

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


13/30 | எட்டாம் வீட்டுத் தோழியை எழுப்பல்!

புள்ளின்வாய் பைம்பொழிலில், உன்பேர் அகவுதுகாண்!
துள்ளித் துடித்தெழுவாய், தூக்கம் களைந்தெழுவாய்!
பிள்ளைப் பெதும்பைகளும் நோன்புக் களம்தன்னில்
மெள்ளத் திரள்கின்றார்; நீமட்டும் தூங்குவையோ?

வெள்ளி எழுந்து, பெருவானில் மின்னிற்றே!
வெள்ளி-எதிர் செல்வோம், விழுமையிலை சோதிடத்தில்!
கள்ளக்  கதிர்வேலன், செவ்வேள் தனைக்கூட
கள்ளம் விலக்கிக் கலந்தேலோ ரெம்பாவாய்!   (13)


முருகன் திருப்பாவை தொடரும்..

Saturday, December 26, 2020

கனைத்திளம் கன்றெருமை | முருகன் திருப்பாவை - 12

கனைத்திளம் கன்றெருமை காராம் பசுக்கள்...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-12

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


12/30 | ஏழாம் வீட்டுத் தோழியை எழுப்பல்!


கனைத்திளம் கன்றெருமை காராம் பசுக்கள்
நினைத்தவுடன் பால்பொழியும் நீள்வீட்டு நங்காய்!
வினைக்கு உயிராகும் வேளாண்மை செய்யும்
பனைக்குத் திமிலுயரம் காளைகள் துள்ளும்!

பனியின் துளிவீழும் செங்கழனிப் பைங்கால்
குனித்துப் பழனிவயல் குன்றோன்கைக் கூப்பும்!
இனித்த இளங்காலை வாராய்நீ பெண்ணே
அனைத்தும் முருகே அறிந்தேலோ ரெம்பாவாய்!   (12)


முருகன் திருப்பாவை தொடரும்..

Friday, December 25, 2020

கற்றுக் கறவையாம் | முருகன் திருப்பாவை - 11

கற்றுக் கறவையாம் மாடுகளும் ஆடுகளும்...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-11

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


11/30 | ஆறாம் வீட்டுத் தோழியை எழுப்பல்!


கற்றுக் கறவையாம் மாடுகளும் ஆடுகளும்
குற்றம் விலகிய கோவல் பதிவாழும்!
செற்றார் செருச்செய்யும் வெட்சி கரந்தையுமே
நற்றமிழின் கூர்-புறங்கள், முல்லை அகத்திணையே!

இற்று இறுக்கிவிட்ட இஞ்சும் இடுப்பழகி
முற்றம்நீ வாராயோ, நப்பின்னை நன்மயிலே?
அற்றம் அழித்திடும் ஆண்மைக் குறிஞ்சிக்கோன்
கற்ற தமிழே பொருளேலோ ரெம்பாவாய்!   (11)


முருகன் திருப்பாவை தொடரும்..

Thursday, December 24, 2020

நோற்றுத் திருமுருகன் | முருகன் திருப்பாவை - 10

நோற்றுத் திருமுருகன் சேர்கின்ற நங்கையளே...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-10

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


10/30 | ஐந்தாம் வீட்டுத் தோழியை எழுப்பல்!


நோற்றுத் திருமுருகன் சேர்கின்ற நங்கையளே,
ஏற்றமும் இல்லை, துயிலிறக்கம் இல்லார்க்கு!
மாற்றம்தான் தாயேன்டீ; வாசலுக்கு வாயேன்டீ!
சீற்றங்கள் இல்லாத சீராளும் கந்தனெழில்

நாற்றம் நறுமணங்கள் நம்முருகன் மேனியிலே
போற்றும் பொழுதெல்லாம் பொங்கித் தழுவிடவே
ஆற்றல் மிகவந்து ஆற்றிலேன் வாயேன்டீ!
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்!   (10)


முருகன் திருப்பாவை தொடரும்..


*நேற்றிரவு (Dec 24, 2020) மறைந்த பெருந்தமிழறிஞர், பேரா. முனைவர். தொ. பரமசிவன் அவர்களின் குன்றா நினைவுக்கு இரங்கல் வணக்கம்!


தொ.ப. என்று அன்புடன் விளிக்கப்படும் பேரா. தொ. பரமசிவன், தமிழியல், திராவிடவியல், மாந்தவியல் மற்றும் வரலாற்றுத் துறைகளில், காய்தலுவத்தல் இல்லாச் செப்பம் மிகு  நடுவுநிலைமையுடன் இயங்கிய திறனாய்வாளர்.

“வரலாற்று வாசிப்பு என்பது மானுட வாசிப்பே; சமூகமும் மக்களுமே மொழியியலை இயக்கும் அச்சாணி” 
என்று பலமுறை பகன்றவர். நாட்டார் பேச்சு வழக்கையே இலக்கிய வழக்கும் ஆக்கியவர். நாட்டாரியல் தமிழ்த் தெய்வ மரபின் சீரிய சிந்தனையாளர். 

எம் அன்பு கெழுமிய பேராசிரியர் தொ. ப. அய்யனுக்கு, நினைவு வணக்கம்!

Wednesday, December 23, 2020

தூமணி மாடங்கள் | முருகன் திருப்பாவை - 09

தூமணி மாடங்கள், முற்றத்துக் கூடங்கள்...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-09

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


09/30 | நான்காம் வீட்டுத் தோழியை எழுப்பல்!

தூமணி மாடங்கள், முற்றத்துக் கூடங்கள்,
பூமணித் தீபங்கள் பூண்டு விளக்கெரிய,
யாமம் விலகியும், யானையின் கோட்டுக்கால்
தாமம்சூழ் கட்டிலில், தூங்கும்பொற் செல்வீநீ!

மாமி எழுப்பீரோ? மாமன்மார் செல்லமோ?
காமநல் தூக்கத்தாள் தாழ்திறக்க மாட்டாளோ?
மாமாயன் வில்முருகன் மச்சானை முன்னிட்டு
நாமம் பலகோடி சொல்லேலோ ரெம்பாவாய்!   (09)


முருகன் திருப்பாவை தொடரும்..

Tuesday, December 22, 2020

கீழ்வானம் கீழ்ச்சிவக்கும் | முருகன் திருப்பாவை - 08

கீழ்வானம் கீழ்ச்சிவக்கும்; பல்-எருமைக் கீழ்வீட்டில்...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-08

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


08/30 | மூன்றாம் வீட்டுத் தோழியை எழுப்பல்!


கீழ்வானம் கீழ்ச்சிவக்கும்; பல்-எருமைக் கீழ்வீட்டில்
தாழ்வான கால்வாயில் சூழ்ந்துமிக மேயுதுபார்!
ஆழ்வார்கள் தீந்தமிழில் ஆசைமிக கொண்டவளே,
சூழ்ந்துவரும் தோழிகளைச் செல்லாமல் காத்து-உன்னை,

ஏழ்பாரும் உய்விக்கும் ஏந்தல் முருகனிடம்
வீழ்வாய்நீ காதலில் வந்தே-யாம் கூவுகிறோம்!
பாழ்-வாயில் சாக்குபல சொல்லாமல் நீ-எழுந்து
ஆழ்வாய்நீ வாராய், அருளேலோ ரெம்பாவாய்!   (08)


முருகன் திருப்பாவை தொடரும்..

Monday, December 21, 2020

கீசுகீசு என்று-எங்கும் | முருகன் திருப்பாவை - 07

கீசுகீசு என்று-எங்கும், கீச்சுது-பார் புள்குருவி!

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-07

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


07/30 | இரண்டாம் வீட்டுத் தோழியை எழுப்பல்!

கீசுகீசு என்று-எங்கும், கீச்சுது-பார் புள்குருவி!
ஏசுது உன்னைத்தான், என்-திருடி எந்திருடீ!
வீசுது வெண்ணெயின் வாசங்கள் உன்வீட்டில்
பேசுது-பார் கை-வளைகள்; பெண்கள் தயிர்கடைய!


தீசல் கரும்-பானை சும்மாட்டின் மேடைமேல்
மூசொலி பல்-கயிறும் மத்தும் நடனமிட,
வாசநெய் மண்டி, பொரிச்ச முருங்கை-இலை
ஆசையாய் இல்லம் திறவேலோ ரெம்பாவாய்!   (07)


முருகன் திருப்பாவை தொடரும்..

Sunday, December 20, 2020

புள்ளினம் கூக்கீச்ச | முருகன் திருப்பாவை - 06

புள்ளினம் கூக்கீச்ச, புள்ளிமயில் மெல்-அகவ...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-06

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


06/30 | முதலாம் வீட்டுத் தோழியை எழுப்பல்!

புள்ளினம் கூக்கீச்ச, புள்ளிமயில் மெல்-அகவ
மெள்ளவே சேவல்கள், மேவியே கூவினகாண்!
நள்ளென்று கள்ளிரவும் நாடகச் சீலைபோல்
மெள்ள விலகிவிட, மேதினியின் ஆட்டம்காண்!

வெள்ளை விளிசங்கு சங்கத் தமிழ்-அவையில்
கள்ளக் கவி-விலகப் பொங்கொலிநீ கேட்கலையோ?
வள்ளித் திருமுருகன், வள்ளல் திருப்பொய்கை
பிள்ளாய் வருவாய்டீ, வாரேலோ ரெம்பாவாய்!   (06)


முருகன் திருப்பாவை தொடரும்..

Saturday, December 19, 2020

மாயனை, பைந்தமிழ் | முருகன் திருப்பாவை - 05

மாயனை, பைந்தமிழ்த் தென்மதுரை மக்களின்...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-05

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


05/30 | நோன்பு கைக்கூட வாயும் மனமும் வேண்டுதல்!

மாயனை, பைந்தமிழ்த் தென்மதுரை மக்களின்
தூய்மை மனந்தனில் வையை அழகனை,
ஆயர்கள் மேவு-தொல் காப்பியத் தோன்றலை,
நேயர்கள் இட்டதொரு தொன்ம-நடு கல்லினைத்,

தீயினில் கள்ள-வழி பாடுகள் வேண்டிடா
வாயினால் பாடி மனத்தினால் சிந்தனை!
தாயினும் நம்மொழி முல்லை குறிஞ்சியாய்ச்
சேயின் முருகுமால் செப்பேலோ ரெம்பாவாய்!   (05)


முருகன் திருப்பாவை தொடரும்..

Friday, December 18, 2020

ஆழி மழைமுருகா | முருகன் திருப்பாவை - 04

ஆழி மழைமுருகா, யார்க்கும்-நீ கைகரவேல்!

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)
முருகன் திருப்பாவை-04

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)


04/30 | நோன்புக்கு, இயற்கையே ஆதாரம் எனல்!

ஆழி மழைமுருகா, யார்க்கும்-நீ கைகரவேல்!
ஆழி அவன்மருகா, அண்ணல்-உன் செங்-கர-வேல்!
தாழும்நீர் சூடாகித், தாவியெழும் மேலாப்பு,
சூழும்நீர் சூடுவிட்டு, வெண்துமி பின்-துளியாகி,

மூழும்நீர் முத்தாகி, மூள்முகிலாய்த் தண்வளிமம்
வீழும்நீர் பற்பலவாய்; பற்பலவும் ஒன்றாகும்!
ஊழி உலகினிலே ஆழிமேல் நாடகங்கள்!
வாழிநீ, வாழிநாம், வாழ்ந்தேலோ ரெம்பாவாய்!   (04)


முருகன் திருப்பாவை தொடரும்..

Thursday, December 17, 2020

ஓங்கி அறம்வளர்த்த | முருகன் திருப்பாவை - 03

ஓங்கி அறம்வளர்த்த சான்றோர்கள் பேர்பாடி...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை-03

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)



03/30 | நோன்பு நல்கும் நலங்கள் கூறல்!

ஓங்கி அறம்வளர்த்த சான்றோர்கள் பேர்பாடித்
தீங்கில்லா நற்-சமணம், தீந்தமிழில் தந்தகொடை!
பாங்குடனே பாடிடுவோம் பாவையர் நோன்புதனில்
தாங்குதமிழ் மால்முருகன், மெல்-அருகன் நன்மரபே!

ஈங்குள்ள பைங்கழனி ஒட்டிவிழும் மாம்பழங்கள்,
தேங்கும்நீர் துள்ளி-எழும் தேன்மீன்கள் துள்ளி-விழும்!
வீங்கு-பயிர் வேளாண்மை வீறுடனே மாடு-மனை
நீங்காது நல்-இயற்கை வாழ்ந்தேலோ ரெம்பாவாய்!   (03)


முருகன் திருப்பாவை தொடரும்..

Wednesday, December 16, 2020

வையத்து மங்கையரே | முருகன் திருப்பாவை - 02

வையத்து மங்கையரே, நம்-பாவை நோன்புக்கு...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)

முருகன் திருப்பாவை

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)



02/30 | நோன்பு நோற்கும் முறை விளக்கல்!

வையத்து மங்கையரே, நம்-பாவை நோன்புக்குச்
செய்வன என்னென்ன? செப்புகிறேன் கேளீரே!
பெய்வோம் பிற-உயிர்க்கு, அன்பும் தமிழறமும்
மெய்யாய் மனத்தினிலே, மேலோட்டப் பேச்சல்ல!

தையல் மகளிர்-நாம், தேவையிலாச் சாதியினைப்
பையப் புறம்தள்ளிப், பைந்தமிழின் வள்ளுவத்தைச்

செய்ய மிக-ஓதிச், செந்தில்-அவன் சேவடியை
உய்யும்-ஆறு என்றே உகந்தேலோ ரெம்பாவாய்!   (02)


முருகன் திருப்பாவை தொடரும்..

Tuesday, December 15, 2020

மார்கழித் திங்கள் | முருகன் திருப்பாவை - 01

தமிழ் திகழ் வணக்கம், முருகனருள் வலைப்பூ அன்பர்களுக்கு!

மார்கழி பிறந்து விட்டது!
தமிழ் திகழும் கோதை ஆண்டாளும், அதிகாலையே வீதிக்கு வந்து விட்டாள்!


சுற்றத் தோழிமாரெல்லாம் முற்றம் புகுந்து..
*முகில்வண்ணன் - திருமால் பேர் பாடத் துவங்குகிறார்கள்!
*முருகன் பேரையும், தோழிகள் பாடலாம் அல்லவா?:)

திருப்பாவை, திருவெம்பாவை.. போன்ற பாவைப் பாடல்கள் யாவும்,
பாலை நிலக் கொற்றவை அன்னையைப் பாவை உருவத்தில் எழுதி,
தம் நெஞ்சுநேர் காதலனோடு
தானும் அவன் வாழ்வியல் கூடலில் கூட..
அருள் புரிய வேண்டுகின்ற அழகுத் தமிழ்ப் பாடல்களே!

அவை, திருமால் மேல் மட்டுமே பாட வேண்டும் என்றில்லை!
அவை, முருகன் மீதும் பாடலாம்!
அவ்வளவு ஏன்.. தந்தை பெரியார் மீது கூடப் பாடலாம்:)

சமூகச் சேதிகளும் உள்ளடக்கியவையே பாவைப் பாடல்கள்!
சாதி மறுத்துச் சமூகநீதிக் காதல் திருமணம் கைக்கூட..
பெரியாரையும் நாயகராக வைத்து, பாவைப்பாடல் பாட முடியும்!
அது, திராவிடத் திருப்பாவை ஆகும்!

தமிழ்நில ஆதிகுடி முன்னோர்களின் நடுகல் மரபாகத் தோன்றி விரிந்துள்ள
திருமால், முருகன், மாரித்தாய்..
மாயோன், சேயோன், கொற்றவை - மூவரும் தமிழ்க் கடவுள்களே!
*அதில், மாயோனுக்குப் பாவைப் பாடல் உள்ளது!
*ஆனால், சேயோனுக்குப் பாவைப் பாடல் இல்லாத குறையைப் போக்க..

முன்பு கீச்சுலகில் (Twitter) நானே எழுதிப் பகிர்ந்த
முருகன் திருப்பாவையை, 
இங்கே முருகனருள் வலைப்பூவிலும் பதித்து வைக்கிறேன்!
இப்போதைக்கு, அப்போதே சொல்லி வைத்தேன்!

முப்பது நாளும் முப்பது முருகன் பாவைகள்!
சுவைத்து மகிழ்க!
சமூகநீதி மிக்க அருள்மரபுத் தமிழ் வாழ்க!
இதோ, தொடங்குவோம்.. வைகறை முதல் நாள்,, முதற் பாடல்!

மார்கழித் திங்கள், பனிநிறைந்த நன்னாளால்...

(மாதவி நாச்சியார் மனமகிழ்ந்தருளிய)
முருகன் திருப்பாவை-01

(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே
சூடிக்கொடுக்கும் “புதிய” திருப்பாவை.
பல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா 
ஏலோ ரெம்பாவாய்’ நீங்கலாக)



01/30 | அனைவரையும் நோன்புக்கு அழைத்தல்!

மார்கழித் திங்கள், பனிநிறைந்த நன்னாளால்
நீராடச் செல்லுவீர், செல்வியரே சென்றிடுவோம்!

ஏர்தமிழ்க் குன்றம் குறிஞ்சித் தலைவன்-அவன்
கூர்வேல் விழியுடைய வில்புருவக் கூர்மூக்கன்!

சீராரும் செம்முகத்தில் சின்னநகைப் பூத்திடுவான்
கார்மேனி அண்ணல் கருமாயோன் மாமகளாம்

பேராரும் வள்ளி, முருகன் பறைதருவான்!
பாரோர் மகிழ-நீர் ஆடேலோ ரெம்பாவாய்!   (01)


திருப்பாவை, தமிழ்ப் பாவை!
பாவை நோன்பினை நோற்பார் நெஞ்சகம் குளிர,
முருகன் திருப்பாவை தொடரும்..

Wednesday, May 27, 2020

இராச கம்பீர நாடாளும் நாயக வயலூரா!

முருகனருள் வலைப்பூ அன்பர்களுக்குத் தமிழ் திகழ் வணக்கம்!
Covid-19 கட்டுப்பாடுகள் ஆங்காங்கே தளர்த்தப்பட்டாலும்,
வழமையான பாதுகாப்போடே, நலமோடு இருக்க வேண்டுகிறேன்.

கால மாற்றத்தால், பதிவுலகை விட்டுக்
கீச்சு உலகம், முகநூல் உலகம்
என்று பறவைகள் பல்வேறு திசைகளில் பறந்தாலும்,
ஆண்டுக்கு ஒரு முறை பதிவுலகம் வருவது என்பது,
பறவைகளின் வேடந்தாங்கல் வலசை போலத் தான்!


இன்று May 27, 2020!
நண்பன், ஜி.ரா எனும் கோ. இராகவன் பிறந்தநாள்.
மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள், ராகவா!
நலம் ஏம வைகல், இயைந்து ஏல்-ஓர் எம்பாவாய்!

பிறந்தநாள் பாடலாக, இந்த அரிய திரைப்பாடல்!
ஓடும் நதி என்ற படத்தில்,
சுசீலாம்மா பாடுவது! வயலூர் முருகா என்று வாயாரத் துவங்கி..

வயலூர்.. திருப்புகழ்த் தலம்!
எங்கெங்கோ அலைந்து திரிந்த அருணகிரியை,
"போதும்! என்னிடம் வா.." என்று விளித்த தலம்!
குயிலோ மொழி அயிலோ விழி.. முதலான 19 திருப்புகழ்ப் பாடல்கள்,
இத் தலத்துக்கென்றே அருணகிரி பாடினாலும்,
வேறு தலங்களின் பாடல்களிலும், இந்தத் தலத்தை
அருணகிரியால் மறக்க முடியாது முனுகுவார்!
திரு ஆவிநன்குடித் (பழனி) திருப்புகழிலும்.. இராச கம்பீர நாடாளும் நாயக,
வயலூரா! என்று.. வயலூரை வாய்மொழியாது அவரால் இருக்க முடியாது!

ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மனோகர
இராச கம்பீர நாடாளும் நாயக - வயலூரா

ஆதி அந்த உலா ஆசு பாடிய

சேரர் கொங்கு வைகாவூர் நன்னாடு அதில்
ஆவிநன்குடி வாழ்வான தேவர்கள் - பெருமாளே! (பழனித் திருப்புகழ்)

இது ஒரு வகைக் காதல்!

வேறு தலமும் புலமும் போய்விட்டாலும்,
பறவைகள் வேடந்தாங்கலை நோக்கி இனப்பெருக்க வலசை வருவது போல்,
வேறு களங்களில் இயங்கினாலும்,
அங்கும் நினைவில் ஆழ்த்தி, உதடுகள் முனுகிடும் காதல் - வயலூர்க் காதல்!

தான் பிறந்த வட ஆர்க்காடு, காங்கேயநல்லூர் முருகனை விடவும்,
திருச் சிராப்பள்ளி, வயலூர் முருகனை வணங்கியே,
வாரியார் சுவாமிகள் தன் உரைகள் பலவும் துவக்குவார்!

வயலூர்த் திருப்புகழ்ப் பாடல்கள் மொத்தம் 19.
எல்லாவற்றிலும், 'வயலூர்' எ. சொல் நேரடியாக வரும், ஒரு பாடல் தவிர!
அது தான், 'கைத்தல நிறைகனி' எனும் திருப்புகழ் துவக்கப் பாடல்!

திருவண்ணாமலையில் தான் திருப்புகழ் தொடங்கிற்று என்றாலும்,
அந்த 'முத்தைத் தரு பத்தித் திருநகை'..
உயிர்-உணர்ச்சிப் பெருக்கால் திடீரென்று விளைந்து விட்ட ஒன்று!

அதைத் 'திருப்புகழ்' என்ற நூலாக்கி, ஓர் ஒழுங்கு வரிசையில் பாடல்களை அடுக்க, வயலூர்த் தலமே துணை புரிந்தது! அதனால், காப்புப் பாடலோடு சந்தமிகு திருப்புகழ் நூல், வயலூரில் இருந்தே துவங்குகிறது!
திருப்புகழ்ப் பயணத்தின் முதல் தலம், வயலூர்!

வயலூரின் வளம் அப்படி! நில வளம் மட்டுமல்ல, மனவளம்!
அந்த மனவள மணவாளப் பெருமானை,
நம்பி நம்பி என்று நம்பி அழைப்பதை, இப் பாடலில் காண்க/கேட்க!


முருகா
அறிவோம் முருகா
வருவோம் முருகா
வயலூர் முருகா
வயலூர் முருகா

குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி
எங்கள் குடும்பம் இருப்பதுன்னை நம்பி நம்பி
பெண்ணுடனே பிறந்த தங்கை தம்பி - தன்னை
என்னுடன் காவல் கொண்டேன் உன்னை நம்பி

கடந்ததும் நடந்ததும் கந்தன் விளையாட்டு
காலங்கள் யாவிலும் நல்ல வழி காட்டு
உள்ள துன்பம் யாவும் இல்லை எனும்போது
உன்னையன்றி யாரை நம்பும் இந்த மாது

நெஞ்சம் உருகாதா
கொஞ்சு தமிழ் வேலா
நெஞ்சம் உருகாதா
கொஞ்சு தமிழ் வேலா

சந்தனம் குங்குமம் சிந்தும் வயலூரா
ஓம் எனும் மந்திரம் சொல்லி வரும் வேலா
மஞ்சள் முகம் பார்த்து பிள்ளை மொழி கேட்டு
மன்னன் மணிக்கைகள் அஞ்சல் என்று காட்டு

நெஞ்சம் உருகாதா
கொஞ்சும் வயலூரா
நெஞ்சம் உருகாதா
கொஞ்சும் வயலூரா

படம்: ஓடும் நதி
குரல்: பி.சுசீலா
வரி: கவியரசர் கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர் M.S.விசுவநாதன்

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP