Tuesday, October 24, 2017

திரு முருகா...அருள் முருகா!

அனைவருக்கும் இனிய கந்த சஷ்டி திருநாள் வாழ்த்துகள்!
வெற்றி வேல் முருகனுக்கு… அரோஹரா!

ஆறு மலர் மீதில் ஆறு உருவாகி
ஆறு முகமான திரு முருகா
கோடி மலர் கொண்டு குழந்தை உனைக் கண்டு
கொஞ்சும் தமிழ் பாட அருள் முருகா

ஆனை முகக் கன்று ஞானப் பழந் தன்னை
வெல்ல வழி செய்த திரு முருகா
தானே பழமாகி ஞான வடிவாகி
பழனி மலை மீதில் அருள் முருகா

ப்ரணவப் பொருள் அறியா அயனைச் சிறையிட்டு
படைப்புத் தொழில் புரிந்த திரு முருகா
தந்தை சிவனார்க்கு தானே குருவாகி
சுவாமி மலைமீதில் அருள் முருகா

அன்னை சிவகாமி தந்த வடிவேலை
தாங்கி அமர் செய்த திரு முருகா
சூரன் தனைப் பிளந்து சேவல் மயிலாக்கி
செந்தூர் அலைவாயில் அருள் முருகா

தேவ சேனைக்கு சேனாபதியாகி
தேவர்களைக் காத்த திரு முருகா
தேவசேனைக்குக் காதல் பதியாகி
பரங் குன்றின் மீதில் அருள் முருகா

வேகம் மிகக் கொண்டு வேலை ஏந்திக் கொண்டு
அசுரர்களை அழித்த திரு முருகா
கோபந் தணிந்து வந்து கொஞ்சம் இளைப்பாற
தணிகை மலை மீதில் அருள் முருகா

வேடர் குல மாது வள்ளிக் குற மகளைக்
காதல் மணம் புரிந்த திருமுருகா
வள்ளி தேவயானை தேவியர் அருகிருக்க
பழமுதிர் சோலையில் அருள் முருகா


--கவிநயா


Saturday, May 27, 2017

Western Classical திருப்புகழ்: கந்தன் உன்னை இன்புறுவேனோ?

தமிழில், முருகனுக்கு.. 3 பெரும் பெயர்கள்!
*முருகன்
*கந்தன்
*சேயோன்


பிற பெயர்கள்..
*சுப்ரமண்யன் (सुब्रह्मण्य), சரவணன் (शरवण), குஹன் (गुहा), சண்முகன் (षण्मुख) ..
*இயற்கைக்கு மாறான 6 முகம்/ 12 கை/ 18 கண்..
*அரோகரா (ஹரோஹரா) உட்பட..
யாவும் சம்ஸ்கிருதக் கலப்பே அன்றி, தமிழ் அல்ல!


தமிழ்த் தொன்ம முருகன்:
*முருகன் = முருகு+அன் = அழகு இளமையோன்
*கந்தன்= கந்து + அன் = அடிப்படையோன் (பற்றுக்கோட்டு நடுகல்)
*சேயோன் = செம்மை + ஓன் = செம்மைப் பண்புடையோன்

இதில், "கந்தன்" என்ற பெயர் மட்டும்.. நடுநாயகமாய்,
இலக்கியத்துக்கு இலக்கியமாகவும், மக்கள் வாழ்வியலுக்கு வாழ்வியலாகவும்,
தமிழ் ஆதிகுடி வரலாறும் + வாழ்வையும் உள்ளடக்கிய பெயர்!

இன்று தமிழில் கிடைக்கும் தொல்பெரும் ஆதிநூலான தொல்காப்பியம்..
கந்தன்/ சேயோன் என்று 2 பெயர்களையுமே காட்டும்!
சேயோன் மேய மை வரை உலகமும்
கொடிநிலை கந்தழி வள்ளி

கந்து= நடுகல்
முன்னோர் நினைவு போற்றும் நடுகல், தெய்வ நடுகல் மட்டுமே அல்ல!
யானை கட்டும் நடுகல், வேளாண்மை நடுகல்..
எனப் பல வகை "குத்துக்கல்"; ஒரு வகையான பற்றுக்கோடு!

யானை கட்டும் கல்லாய்ப் பயன்படுத்தும் போது
அக் கல்லையும், யானையே சுமந்து செல்லும்!
இளைப்பாறும் இடத்தில், அக்கல்லையே நட்டு, யானையும் கட்டி வைப்பர்;

தன்னைக் கட்டுண்டு வைக்கும் கல்லை, தானே சுமப்பதா? என்று யானை மறுக்குமா?:)
போலவே, நீங்கள் கந்தனைக் கட்டுப்படுத்தினாலும், அதையும் அவனே சுமப்பான்:)

இறை = அன்பு
நன்மை/ தீமை, லாப/ நட்டம், காம/ மோகம் என்ற இரட்டைக்குள் சிக்கிக் கொள்ளாது அன்பு!
ஆளை அடிக்கலாம்/ அணைக்கலாம்; ஆனால் அன்பை?

அன்பின் பயனே, அன்பு தான்!
அன்பு= அழிவிலி; அதான் இறையன்பு.. இறையை= அன்பாக மட்டுமே வைத்தது தமிழ்! பிற பரிகார Shortcutகள் இல்லை, தமிழில்!

தமிழ்க் கந்தன் வேறு! சம்ஸ்கிருத ஸ்கந்தன் வேறு!
*Sanskrit स्कन्द/ ஸ்கந்தன் = 6 முகமும் 1 ஆன Effusion கதை
*தமிழ்க் கந்தன் = "கந்து" எ. பற்றுக்கோட்டு நடுகல்!
ஒன்று போல் ஒலித்தாலும், வேர்ச்சொல்  வேறு வேறு என்று அறிக!


இன்று May 27
தோழன் இராகவன் பிறந்தநாள்..

மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் இராகவா!
நலங் கேழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் இராகவா!
உடல் உள்ள நலங்களொடு, தமிழன்பால்.. இன்னுமொரு நூற்றாண்டு இரு!

இன்றைய பாடலாக, ஒரு "கந்தன்" & "அன்புத்" திருப்புகழ்..
ஆனால் மேற்கு இசையில்!
ஆனால் நம்மவர்களே இசையமைத்து, மேலையர்களோடு பாடுவது! (Shamrockin Records)

Orchestra இசையில், திருப்புகழ்!
  • Guitar
  • Ukulele
  • Violin 
  • Viola
  • Cello
  • Double Bass
  • French Horn 
  • Trombone
  • Flute
  • Clarinet
  • Oboe
  • Basson
  • & Percussion
கண்டு கேட்டு, களிக்க!
பிறந்தநாள் வாழ்த்தும், வாழ்த்தி அருளுக!



சந்ததம் பந்தத் தொடராலே
   சஞ்சலம்  துஞ்சித் திரியாதே

கந்தன் என்றென்று உற்று உனைநாளும்
   கண்டுகொண்டு அன்பு உற்றிடுவேனோ?

தந்தியின் கொம்பைப் புணர்வோனே
   சங்கரன் பங்கில் சிவைபாலா

செந்திலங் கண்டிக் கதிர்வேலா
   தென்பரங் குன்றில் பெருமாளே!

நூல்: திருப்பரங்குன்றத் திருப்புகழ்
வரிகள்: அருணகிரிநாதர்
இசை: பிரதீப் குமார்
குரல்: Sean & Pradeep


பிற பாடகர்கள் பாடுவதையும் கேட்டுக் கொள்ளுங்கள், உங்கட்குப் பழக்கமான கருநாடக மரபிசையில்:)

டி. எம். கிருஷ்ணா:


கற்பகக் காமாக்ஷி: (பயிற்சி)




அரும் பெறல் மரபின் பெரும்பெயர் முருக!
கொடிநிலை, கந்தழி, வள்ளி!

கந்து (எ) கல்தூணில் படரும் வள்ளிக் கொடி!
தலைவன் – தலைவியுமாய்; நடுகல்லும், அதில் படரும் கொடியுமாய்!

மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் இராகவா!


சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலம்  துஞ்சித் திரியாதே
கந்தன் என்றென்று உற்று உனைநாளும்
கண்டுகொண்டு அன்பு உற்றிடுவேனோ?

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP