Monday, June 29, 2015

காப்பாற்ற வா!

கந்த வடிவேலா காப்பாற்ற வாவா
செந்தில் வடிவேலா சீக்கிரமாய் வாவா!

ஆறுமுக வேலனுன்னை
அண்டியவர் கோடியுண்டு
வண்டுவிழி வள்ளியுடன் வாவா, முருகா
தேவயானை தேவியுடன் வாவா!

பக்தர்களைக் காக்கவென்று
பச்சை மயில் ஏறிக் கொண்டு
சக்திசிவ பாலகனே வாவா, எங்கள்
வெற்றிவடி வேலவனே வாவா!

வேதனைகள் தீர்க்கவென்று
வேலெடுத்து ஏந்திக் கொண்டு
மாலவனின் மருமகனே வாவா, எழிற்
கோலமயில் ஏறியிங்கு வாவா!

கான இருள் விரட்டி விட்டு
ஞானந் தர வேண்டுமென்று
தந்தைக் குபதேசித்தவா வாவா, எங்கள்
சிந்தையிலே வந்து அருள் தாதா!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.trinethram-divine.com/2011/09/arumughan.html


7 comments:

திண்டுக்கல் தனபாலன் June 30, 2015 12:55 AM  

அருமை...

Kavinaya June 30, 2015 10:09 PM  

நன்றி தனபாலன்!

Kannabiran, Ravi Shankar (KRS) June 30, 2015 11:08 PM  

//வண்டு விழி வள்ளியுடன் வா வா//

அந்த வள்ளிப் பொண்ணு சார்பாக, கவி அக்காவுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன், இந்த அழகிய உவமை/உருவகத்துக்கு!

வண்டின் அடர் கருமையால் = "வண்டு விழி வள்ளி" என்று ஆனாலும்..
வண்டுக்கு ஒரு கெட்ட குணம் உண்டு;
அது, மலர் விட்டு மலர் தாவும்!
அப்படீன்னா, வள்ளியின் கண்ணும் அப்படித் தானோ?

ஆமாம்!
வள்ளியின் கண், ஒரு மலரிலேயே தங்காது, பல மலர்களை மோகித்துத் தாவும்!

*முருகனின் முகம்= தாமரைப் பூ
*முருகனின் கண்= கருங் குவளைப் பூ
*முருகனின் மூக்கு= முல்லைப் பூ
*முருகனின் இதழ்= மாதுளைப் பூ

*முருகனின் கழுத்து= சங்குப் பூ
*முருகனின் தோள்= செண்பகப் பூ

*முருகனின் மார்புக் காம்பு= மகிழம் பூ
*முருகனின் மயிர்க் கால்கள்= தவனம் பூ

இன்னும் இடுப்பு= இலுப்பைப் பூ..
ரோசாப் பூ, சம்பங்கிப் பூ..
பாதங்கள்= அனிச்சம் பூ
கால் நகங்கள்= மாம் பூ

அவன் உடம்பு முழுக்க, இத்தனை பூக்கள்.. அத்தனை பூவிலும், வள்ளியின் "வண்டு விழி", தாவித் தாவி, இன்பம் குடிக்கும்!
அதனால், "வண்டு விழி வள்ளி" என்பது 1000% பொருத்தவமான உவமையே!

இதை, அந்த வள்ளிப் பொண்ணே வந்து சொல்லி, அவளே கவிக்காவின் உவமை பாராட்டிய பின்னூட்டமாக எடுத்துக் கொள்ளுங்கள்!

Kavinaya July 01, 2015 10:16 PM  

வருக கண்ணா! இங்கேதான் இருக்கீங்களா?

எழுதும்போது தானாக விழுந்த வரிகளில் ஒன்று. நீங்கள் இந்த அளவு ரசித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது :) வள்ளிப் பொண்ணே வந்து, வரியும் தந்து, வாழ்த்தும் தந்ததாக எடுத்துக்கறேன்! நன்றி கண்ணா.

Nanjil Siva January 02, 2020 8:55 AM  

கவிநயா உண்மையிலேயே நீங்கள் கிரேட் . இந்த பாடல் வரிகள் என்னை தாளம்போட வைத்துவிட்டன ... அருமை. ஜட்ஜ்மென்ட் கிளிக்.

Kavinaya July 06, 2020 10:24 PM  

சிவா, நீங்கள் பல பாடல்களுக்கு பின்னூட்டியிருப்பதை இப்பொதுதான் கவனித்தேன். வாசித்து ரசித்தமைக்கும் மிகவும் நன்றி.

advait10 January 28, 2022 5:38 AM  

வண்டுவிழி
வண்டுவிழி-பெயர் பெரிதல்ல; நன்னலமாய் அழகு பொருள் பாவுகளூடே நெசவிட்டது பேரருமை; நயமாய்க் கவிதை புனைபவரே

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP