Monday, December 01, 2014

அவன் அழகன்!

அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்!

ராகமாலிகாவில் சுப்பு தாத்தா அனுபவித்துப் பாடியிருப்பதை நீங்களும் அனுபவித்துக் கேளுங்களேன்! மிக்க நன்றி தாத்தா!



அழகனின் அழகைப் பாடித் தீருமோ? தர்பாரி கானடா ராகத்தில் சுப்பு தாத்தா மீண்டும் பாடித் தந்தது... மிக்க நன்றி தாத்தா!



எத்தனை அழகு 
எந்தன் கந்த வடி வேலன்!
முத்து நகை பூக்கும் எழில் 
சக்தி சிவ பாலன்!
(எத்தனை)

பக்தர்களின் உளமிருப்பான்
சித்தமெல்லாம் நிறைந்திருப்பான்
அப்பனேயென் றழைத்து விட்டால்
அந்தக் கணம் வந்து நிற்பான்!

நெற்றியிலே நீறிருக்கும்
நேசமுகம் மலர்ந்திருக்கும்
சுற்றிவரும் வினைவிரட்டும்
சக்திவேல் கரம் இருக்கும்!
(எத்தனை)

பன்னிருகண் தாயின்
பரிவினைக் கொண்டிருக்கும்
கனியிதழ்ப் புன்னகையோ
கற்கண்டாய் இனித்திருக்கும்!

மார்பினில் ஆரங்கள்
மயிலுடன் அசைந்து வரும்
கிண்கிணிப் பாதங்கள்
சங்கீதம் இசைத்து வரும்!
(எத்தனை)

வேலெடுத்து வந்திடுவான்
வினையெல்லாம் விரட்டிடுவான்
கோலமயில் ஏறி வந்து
கொஞ்சு தமிழ் பேசிடுவான்!

முருகென்னும் பெயரழகன்
கருணையின் வடிவழகன்
இனித்திடும் தமிழழகன், நம்மை
ஈர்த்திடும் அருளழகன்!
(எத்தனை)


--கவிநயா

 படத்துக்கு நன்றி: kaumaram.com

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP