Monday, June 23, 2014

வேலனைப் பாடுவதே வேலை!


நீல மயில் மீதில் ஏறி நித்தம் நித்தம் ஆடி வரும்

கோல எழில் கொண்டவனே வேல் முருகா!

உன்னைக்  கொஞ்சிக் கொஞ்சிப் பாடுவதென் வேலை முருகா!



பாலனாக வந்து பர சிவனுக்கே பாடஞ் சொன்ன

பார்வதியின் புத்திரனே வேல் முருகா!

            உந்தன் புகழைத் தினம் பாடுவதென் வேலை முருகா!



வீறு கொண்டு சூரன் தன்னை வேலைக் கொண்டு வீழ்த்தி விட்ட

வெற்றி வடி வேலவனே வேல் முருகா!

            உன்னைப் போற்றித் தினம் பாடுவதென் வேலை முருகா!



தேவர் தம்மைக் காத்த பின்னே தேவ யானைத் தேவியைத் தன்

தாரமாகக் கொண்டவனே வேல் முருகா!

            உந்தன் தாள் பணிந்து பாடுவதென் வேலை முருகா!



காட்டுக்குள்ளே வேடுவனாய் காதல் கொண்ட கிழவனாய்

வேடமிட்டு வந்தவனே வேல் முருகா!

            உந்தன் லீலைகளைப் பாடுவதென் வேலை முருகா!



ஆறு படை வீடு கொண்டு அன்பு மிக்க பக்தருக்கு

ஆறுதலைத் தருபவனே வேல் முருகா!

                        உன்னை அன்பு மீறப் பாடுவதென் வேலை முருகா!


--கவிநயா

Saturday, June 14, 2014

செல்லக் குழந்தை!


தர்பாரி கானடாவில் சுப்பு தாத்தா மனமுருகப் பாடியிருப்பதை நீங்களும் கேட்டு மனம் ம(நெ)கிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!


நீ என் குழந்தையடா – உன்னை
மடியேந்துதல் என் உரிமையடா… முருகா…
(நீ என்)

தீச்சுடரில் பிறந்தாய்
தீங்கனியாய் வளர்ந்தாய்
மாங்கனியால் பழனி
மாமலையில் அமர்ந்தாய்!      
(நீ என்)

உன் முகம் காண்கையிலே
உள்ளத்தில் ஒரு நேசம்
திருமுகம் காண்கையிலே
தோன்றுது தனிப் பாசம்!

திருமகள் மருமகனே
திருப்புகழ் நாயகனே
அறுமுகத் திருமகனே
அருகினில் வா குகனே!
(நீ என்)

கூவி அழைக்கின்றேன்
குமரா திரு முருகா!
தாவி எனை அணைக்க
தக்ஷணமே வருவாய்!

தத்தித் தவழ்ந்து வரும்
தங்கத் திருப் பாதம்
எட்டி எனை உதைத்தால்
கிட்டிடுமே மோக்ஷம்!
(நீ என்)


--கவிநயா

படத்துக்கு நன்றி:  http://knowledgefruit.blogspot.com/2010/12/story-of-subrahmanya-is-found-in.html

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP