Thursday, December 26, 2013

கிறிஸ்துமஸ் முருகன்!

முருக அன்பர்களுக்குக் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
Merry Merry Christmas, Happy Happy New Year!

இயேசு நாதப் பெருமான்
(எ) இனிய குழந்தை மூலமாக..
எங்கும் நிறைந்தவரான கர்த்தரே = உமக்கு ஸ்தோத்திரம்!


திசை மாறிய பறவைகள் படத்திலிருந்து..
ஒரு கிறிஸ்துவக் கன்னி, முருகன் மேல் பாடும் பாடல்!

(கர்த்தர் மேல பாட வேண்டியவளைக்,
கந்தன் மேல பாடச் சொல்றேன்-ன்னு
தப்பா நினைக்காதே-ம்மா என்ற முன்னுரையோடு காட்சி துவங்கும்)

(நீராடிப் பட்டுடுத்தி நின்றவர்கள் யாவர்க்கும்
சீரான வாழ்வு தரும் செல்வத் திருக் குமரா
மாறாத செல்வமுடன் வாழத் துணை புரிவாய்
சூரனையே வென்ற தூயவனே, செந்தூரா)
 

உள்ளம் உருகாதா? - எந்தன்
ஊனும் உருகாதா?
அன்னை அழைத்தால் அருகில் வருவாய்
பேரன்பு குருநாதா முருகா
(உள்ளம் உருகாதா)

தங்கரதம் போல் மயில் வாகனத்தில்
கந்தன் வந்தால் கவலைகள் தீரும்
அங்கம் முழுதும் திருநீறு அணியும்
அன்னை முகத்தில் ஆனந்தம் மலரும்

கந்தா.... அழகுத் திருக்குமரா
செந்தில்.... அமுத வடிவழகா
(உள்ளம் உருகாதா)

நல்லவர் எல்லாம் கேட்டதைக் கொடுக்கும்
அல்லல் தீர்க்கும் கந்தனின் வேதம்
எந்த நோயும் அணுக விடாதே
என்றும் காக்கும் வைத்திய நாதன்

வேலா.... கருணை மழை முகிலே
பாலா.... பழநி மலை அரசே

---------

திரையில்: சுமலதா, சரத்பாபு
குரல்: வாணி ஜெயராம்
வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
இசை: திரையிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.வி
படம்: திசை மாறிய பறவைகள்


Tuesday, December 10, 2013

பி.சுசீலா: ஆறெழுத்தில் ஒரு மந்திரமாம்!

ஐந்தெழுத்து, ஆறெழுத்து என்று சொல்லுவார்கள், சமய உலகிலே!
எட்டெழுத்தும் உண்டு!

*பஞ்சாட்சரம் = ஐந்தெழுத்து = நம சிவாய
*ஷடாட்சரம் = ஆறெழுத்து = சரவண பவ

எட்டெழுத்து = ஓம் நமோ நாராயணாய
இவை "மந்திரங்கள்" என்றும் சொல்லப்படும்/ ஓதப் படும்!

"ஓங்காரம்" = ஐந்தெழுத்து/ஆறெழுத்தில் கிடையாது; நாம் தான் அவற்றோடு "ஓம்" சேர்த்துச் சொல்ல வேண்டும்!
எட்டெழுத்தில், ஓங்காரம் உள்ளேயே இருக்கும்! ஓங்காரத்தையும் சேர்த்தால் தான் எட்டெழுத்து; பிரிக்க முடியாத பிரணவம்!

இப்படிப் பிரணவமாக இருப்பதால், அரங்கன் கருவறை = "பிரணவாகாரம்" என்று சொல்லப்படும்!
எப்படி இருப்பினும், இவை எல்லாமே "நுணுக்கமான" மந்திரங்கள்;
அதில் முருகனுக்கே உரித்தானது = சரவண பவ!


"பவ" என்றால் பிறப்பு; அறுத்தல்!
"சரவண" = தர்ப்பைக் காட்டிலே பிறந்தவன் (தோன்றியவன்)

பரிபுர பவனே பவம் ஒழி பவனே
அரிதிரு மருகா அமரா பதியை..
-ன்னு கந்த சட்டிக் கவச வரிகள் ஞாபகம் வருதா?:)
அதே "பவம்" ஒழி சரவண பவன் அவன்!

சிவபெருமானின் கண்ணொளி, கங்கைக் கரையில், தர்ப்பைக் காட்டிலே (சரவணத்திலே), ஆறு பொறிகளாக இறங்கிற்று;
இப்படி நம் பிறப்பை அறுக்க = பிறந்தவன் (தோன்றியவன்) முருகப் பெருமான்!

அதனால் சரவணம் + பவம் = சரவண பவ
இந்தத் திருவாறெழுத்து, முருக அன்பர்களுக்கு மிக்க இனிப்பானது!

அந்த ஆறெழுத்தை வச்சி, இன்னிக்கி ஒரு பாடல்; சுசீலாம்மாவின் தேன் குரலில்... பழைய அபூர்வப் பாடல்..
(சினிமாப் பாடல் அல்ல, Album Music) - கேட்போமா?

(Note: மேற்சொன்னது எல்லாம் சம்ஸ்கிருத மரபு!
இவை சங்க தமிழ் மரபு அல்ல! தமிழ் முருகன் = இயற்கை வழிபாடே!)ஆறெழுத்தில் ஒரு மந்திரமாம்
அனுதினம் ஓதிடும் மந்திரமாம்
ஆறுதல் தந்திடும் மந்திரமாம்
சரவணபவ எனும் மந்திரமாம்
(ஆறெழுத்தில்)

ஆறுமுகம் தரும் மந்திரமாம் - நல்ல
அறிவை வளர்க்கும் மந்திரமாம்
ஆறுபடையின் திரு மந்திரமாம் - நல்ல
அன்பை வளர்க்கும் மந்திரமாம்
(ஆறெழுத்தில்)

நெஞ்சில் நினைக்கும் மந்திரமாம் - நல்ல
நீதியைக் காக்கும் மந்திரமாம்
அஞ்செழுத்தால் பெற்ற மந்திரமாம் - நல்ல
அறநெறி காட்டும் மந்திரமாம்
(ஆறெழுத்தில்)

வஞ்சத்தை வெல்லும் மந்திரமாம் - நல்ல
வாழ்வைத் தந்திடும் மந்திரமாம்
வேலும் மயிலும் தொழும் மந்திரமாம் - நல்ல
வெற்றிகள் தந்திடும் மந்திரமாம்
(ஆறெழுத்தில்)


குரல்: பி.சுசீலா
வரி: பாரதிசாமி
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்

எல்லா வரிகளிலும் "மந்திரமாம்" -ன்னு வரும்; கூடவே "நல்ல" -ன்னு தொக்கும்!
அத்தகு "சரவண பவ" (எ) திருவாறெழுத்தை நினைச்சிப் பார்ப்போம், சுசீலாம்மாவின் தேன் குரலில், நம் மனசையோட்டி!

"சரவண பவ"னார் சடுதியில் வருக!

Tuesday, December 03, 2013

The 1st song of "Child" MS Subbulakshmi

எம்.எஸ்.சுப்புலட்சுமி (எ) MS Amma
= இவர்கள் இசையைக் கேட்காதவர்கள் கூட இருப்பார்கள்..
= ஆனால் இவரை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்!

அந்த MS Amma, பாடிய "முதல் பாட்டு" எது? அதாச்சும் முதலில் ஒலிப்பதிவு செஞ்ச பாட்டு?
= முதல் வணக்கம் முருகனுக்கே!:)

என்ன வியப்பா இருக்கா?:)
மீராவாக நடித்தவர்.. கண்ணா என்று கதறுபவர்..

அனைத்து தெய்வ வடிவங்களையும் போற்றினாலும்...
எம்பெருமான் திருவேங்கடமுடையான் மீது "ஆழ்ந்த பற்றுதல்" கொண்டவர்;
இன்றும் திருப்பதியில் சிலையாக வாழ்பவர்!


அவரா முருகன் மீது முதல் பாட்டு?:)
ஒரு வேளை, என்னைப் போலவே அவங்களும் போல..
*பொறந்த வீடு = "அப்பா திருமால்" என்றாலும்,
*புகுந்த வீடு = "காதல் முருகனோ" என்னமோ?:)))

அது ஒரு சிறுகதை!
பார்க்கலாமா, இன்றைய செவ்வாய்க்கிழமை?


Madurai Shanmugavadivu Subbulakshmi = MSS

சண்முகவடிவு = அம்மா பேரு;
அப்பா பேரு = அதிகம் வெளியிற் தெரிவதில்லை..
கணிகையர் குடியில் உதித்தவர்!

சுப்புலட்சுமிக்குப் 10 வயது (1926)
அன்னிக்கி சாயந்திரம், பள்ளிக்கூடம் முடிச்சிட்டு, வீட்டுக்கு வந்து கொறிச்சிட்டு..
வெளியில் போய் விளையாடும் ஆசையில், குட்டிப் பொண்ணு வீட்டுக்கு வந்தா....

தாய் சண்முகவடிவு = ஓர் ஒலிப்பதிவுக்கு ஏற்பாடு செஞ்சி வச்சிருக்காங்க!

அவிங்களே ஒரு நல்ல வீணைக் கலைஞர் தான்!
அந்தச் சுற்று வட்டாரச் சூழலும் நட்பும் தந்த அறிமுகத்தால், Oriental Records என்னும் ஒலித்தட்டு நிறுவனம் மூலமாக, இப்படியொரு வாய்ப்பு!

சரி, என்ன பாட்டு பாட?
அதையும் தாயே முடிவு பண்ணி வைச்சாச்சி!அந்தப் பாட்டை எழுதியவர் = ஒரு பெரும் "வைணவர்"
ஆனால், திருச்செந்தூர் முருகனிடம் ஆராக் காதல் கொண்டவர்;
பேரு: பகழிக் கூத்தர் (15th CE)

"முருகா முத்தம் தருகவே, முருகா முத்தம் தருகவே"... ன்னு
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் பாடிய திருமால் அன்பர்!

முருகன் பிள்ளைத் தமிழிலும்..
நூலின் காப்புச் செய்யுளைத் திருமாலுக்கே வைத்தவர்..
குமரப் பெருமான் தனைக் காக்கச்
சங்கு ஆழி படைத்த பெருமாளே!

அவர் வயிற்று நோயும் தீர்த்து.. வங்கார மார்பிலணி பதக்கமும் குடுத்த முருகன்!
அவருடைய கதை = இங்கே!
அப்பறமாப் படிச்சிப் பாருங்க! "பகழி" என்ற செந்தமிழ்ச் சொல்லுக்குப் பொருளும் புரியும்!

இந்தப் பிள்ளைத் தமிழ்ப் பாட்டைத் தான், சுப்புலட்சுமியின் அம்மா, தேர்ந்தெடுத்து வச்சி இருக்காங்க!
ஆனா இதைப் பத்து வயசுப் பொண்ணு பாட முடியுமா? செந்தமிழ்-ல்ல வேற இருக்கே?

நீங்களே கேளுங்கள்..
How MS kid, can extend her voice, to suit the difficult tempo of the song, even at such a small age!


ஒரு பிறந்த நாள் பரிசாய், இந்தப் பாடலை முன்பு எப்பவோ வலையேற்றி இருந்தேன்..
பாட்டின் வரிகள், காணொளியில் கூடவே வரும்:)

மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்
வாகாய் வாடாதோ?
மதிமுக முழுதும் தண்துளி தரவே
வார்வேர் சோராதோ?
(மரகதப் பச்சை உமை அன்னை.. அவ வெயிலால் வாடுறாளே..
அவ மதிமுகம் முழுசும் வியர்வைத் துளியில் சோர்ந்து போகுதே)

கரமலர் அணைதந்(து) இன்புறு மடவார்
காணாதே போமோ?
கனமணி குலவும் குண்டலம் அரைஞாண்
ஓடே போனால் வார்
(மலர்க் கரத்தால் அணைத்து மகிழும் பெண்கள், குழந்தையைக் காணாது போகலாமா?
கனமான மணிகள் குலாவும் குண்டலம், அரை ஞாண் கயிறோடே நீ ஓடலாமா?)

பொருமிய முலையும் தந்திட உடனே
தாய்மார் தேடாரோ?
புரவலர் எவரும் கண்(டு) அடி தொழுவார்
போதாய் போதா நீள்
(முலை துடிக்குதே பாலூட்ட; அடேய், ஒன்னை ஒங்கம்மா தேடுறாளே!
தமிழைக் காக்கும் புரவலர்கள், உன் அடியைத் தொழுத் தேடுவார்களே!
* போதாய் = வருக | (நீராடப் போதுவீர், போதுமினோ?)
* போதா = போதம் (எ) ஞானம் மிக்கவனே)

சரவண மருவும் தண்டமிழ் முருகா
தாலே தாலேலோ
சதுமறை பரவும் செந்திலை உடையாய்
தாலே தாலேலோ
(சரவணத்தில் வளரும் தண்டமிழ் முருகா - தாலே தாலேலோ!
நான்மறை போற்றும் செந்தில் (எ) திருச்செந்தூர்க்காரா - தாலே தாலேலோ!)


திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ்
தாலப் பருவம்
வரிகள்: பகழிக் கூத்தர்

MS "அம்மா" என்று உலகமே பின்னாளில் அழைத்தது..
அந்த "அம்மா" பாடிய தாலாட்டு = இது குழந்தை பாடிய தாலாட்டு!:)

இதுவே MS சுப்புலட்சுமி அவர்களின் முதலில் பதிவு செய்த பாடல் - On LP Records by Oriental Recording Company!
முருகன் துவக்கி வைத்த இசைப் பயணம் = இனிதே "நிறைந்து" முடிந்தது!செந்திலைக் கொண்ட தண்டமிழ் முருகா 
I Love U தாலேலோ
செவ்வாய் எச்சில் காதலன் முருகா 
I love U தாலேலோ

Sunday, December 01, 2013

நினைத்தது எத்தனையிற் ...... தவறாமல்
நிலைத்த புத்தி தனைப் ...... பிரியாமல்

கனத்த தத்துவம் உற்று ......  அழியாமல்
கதித்த நித்திய சித்து ......   அருள்வாயே

மனித்தர் பத்தர் தமக்கு ......  எளியோனே
மதித்த முத்தமிழில் ...... பெரியோனே

செனித்த புத்திரரில் ...... சிறியோனே
திருத்தணிப் பதியில் ...... பெருமாளே.
----------------


நினைத்தது எந்த அளவும் தவறாமல் கைகூடவும்,

நிலையான ஞானத்தை விட்டு யான் பிரியாமல் இருக்கவும்,

பெருமை வாய்ந்த தத்துவங்களைக்* கடந்து அப்பாலான நிலையை யான் அடைந்து அழியாமல் இருக்கவும்,

வெளிப்படுகின்ற நிரந்தரமான சித்தநிலையை நீ அருள்வாயாக.

மனிதர்களுக்குள் அன்புடையார்க்கு மிக எளியவனே,

மதிக்கப்படுகிற இயல், இசை, நாடகமாகும் முத்தமிழில் சிறந்தவனே,

சிவ மூர்த்தியிடம் தோன்றிய குமாரர்களுள் இளையவனே,

திருத்தணிகைப் பதியில் எழுந்தருளியுள்ள பெருமாளே

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP