Monday, October 28, 2013

நடிகர் நாகையா பாடும்: திருமுருகா ஒருதரம்..

நடிகர் நாகையா - நம்ம எல்லாருக்குமே தெரியும்!
சென்ற காலத்து நல்ல குணச்சித்திர நடிகர்...

கண்ணன் வந்தான்.. அங்கே கண்ணன் வந்தான்
ஏழைக் கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
-ன்னு உருக்கமாகப் பாடும் காட்சியில், அவர் நடிப்பைத் தான் பாத்துருக்கோமே?

*கண்ணன் பாட்டில் அவர் நடிச்சாரு; பாடவில்லை!
*கந்தன் பாட்டில் நடிக்கிறாரு; அவரே பாடவும் பாடுறாரு!

வியப்பா இருக்கா?
எதிர்பாராதது -ன்னு ஒரு படம்; பாட்டும் எதிர்பாராதது தான்:)

சிவாஜி-பத்மினி காதல்!
சிவாஜி வெளிநாட்டுப் படிப்புக்குச் சென்றிருக்கும் வேளையிலே... ஏழை வீட்டுப் பத்மினிக்குத் திருமணம் நடந்து விடுகிறது:(

மணமகன் யாரு? = சிவாஜியின் அப்பா!
என்ன.............. எதிர்பாராதது தானே?

(இன்றும் சினிமாவில், இரு மனம் ஒத்த காதலர்கள்..
ஆனா, தகப்பன் என்னைக்கோ பண்ண தப்பால், "அண்ணா-தங்கை" முறை-ன்னு பின்னாடி தெரிய வருமாம்;
பிரிஞ்சிடணும் = ஹிந்து தர்ம சாஸ்திரம்!
அடேய், "தர்மத்தை", ஆட்டின அப்பனுக்குச் சொல்லு, மனங் குடுத்த காதலர்க்கு அல்ல)

காதலி பத்மினியா? = "அம்மா" பத்மினியா?
சிவாஜியால் மறக்க முடியலையே! என்ன தான் பண்ணுவாரு?

கற்பனையான வாழ்வு; கற்பனையான காதல்!
கற்பனை வாழ்வினில், கதி இனி ஏது?????
= அடிப்பதும் அணைப்பதும், உன் கை தான் ஐயா!திருமுருகா என்று
ஒருதரம் சொன்னால்
உருகுது நெஞ்சம்
பெருகுது கண்ணீர்

சிறுமதியால் உள்ளம்
இருண்டிடும் வேளையில்
அருளொளி வீசும்
ஆண்டவன் நீயே
(திருமுருகா என்று..)

அப்பனும் பிள்ளையும்,  நீதான் ஐயா
அடிப்பதும் அணைப்பதும், உன் கை தான் ஐயா
கற்பனை வாழ்வினில், கதி இனி ஏது?
கருணா நிதியே கதிர் வடிவேலா
(திருமுருகா என்று..)

திருமுருகா, திருமுருகா, திருமுருகாபடம்: எதிர்பாராதது
வரி: ?
குரல்: சித்தூர் V. நாகையா
இசை: CN பாண்டுரங்கன்

(இதே படத்தில், சிற்பி செதுக்காத பொற்சிலையே, மிக அழகான Melody பாடல், கேட்டுப் பாருங்கள்..)

தியாகய்யா, பக்த ராமதாசு -ன்னு ஆரம்ப காலத்தில் மிக அதிக சம்பளம் வாங்கிய நடிகர் = நாகையா
வயதான பின்..
நாகையா நடிக்காத பெரும் படங்களே இல்லை எனலாம்! அதுவும் நடிகர் திலகம் சிவாஜியோடு!

*சம்பூர்ண ராமாயணத்தில் தசரதன் ஆகட்டும் - சிவாஜி பரதன்
*தில்லானா மோகனாம்பாளில் குரு - சிவாஜி சிக்கல் சண்முகசுந்தரம்

தெனாலி ராமன், பாவ மன்னிப்பு,
ஆலய மணி, பச்சை விளக்கு...

தியாகய்யர், பக்த ராமதாசு போன்ற படங்களில் தானே இசையமைத்து, பாடியும் இருக்காரு நாகையா!

Legends எனப்படும் விழுமம்!
அவர்களை அறிந்து கொள்ள, நமக்கு வயாசாகிப் போகத் தேவையில்லை; அதுவும் Internet யுகத்தில்!
வள்ளுவரைப் படித்தால் வயசாகி விட்டதா என்ன?

இசைஞானி இளையராஜா, ரஹ்மான் புகழ் பாடும் வேளையிலே...
தமிழ்ச் சினிமாவின் இசை மேதைகள் = ஜி.ராமநாதன், கேவி மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் என்று விழுமங்களையும் அறிந்து கொள்வோம்!

Legends are Legends!

Friday, October 25, 2013

பார்த்திபன் கனவு: வண்ண மயிலே, வண்ண மயிலே!

பார்த்திபன் கனவு -ன்னு ஒரு நாவல்!
அமரர் கல்கி எழுதி, பின்பு திரைப்படமா எடுத்தாங்க;
"தமிழ் - தெலுங்கு - சிங்களம்" -ன்னு மும் மொழிகளில் வந்த முதல் படம் (1960);
மாமல்லபுரம் சிற்பங்கள் அமைக்கும் காட்சியெல்லாம் காணலாம்!
Ponniyin Selvan Fame ஓவியர். மணியம் தான், படத்தின் கலை இயக்குநரும் கூட!

படத்தில் அப்பர் பெருமான் கூட வருவாரு!
பிள்ளைக் கறி தந்த பரஞ்சோதி/ சிறுத்தொண்டர், தான் அவ்வாறு செய்தது "தவறு" -ன்னு ஒப்புக் கொள்ளும் படமும் கூட:)


சிவகாமியின் சபதம் -நாவலில் வரும் கதாபாத்திரங்கள் தான்; ஆனா கதைக்களம் வேற!
கரிகால் பெருவளத்தானின் சோழ மரபில் வந்த பார்த்திபன்;

பல்லவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று, "தனிச்சோழம்" காணவேண்டும் என்பதே அந்தப் பார்த்திபனின் கனவு;

ஆனால் போதுமான படைபலம் இல்லை;
பின்னாளில்.. அவன் மகன் விக்கிரமன், பல்லவனின் மகளையே காதலித்துக் கைப்பிடித்து, அந்தக் கனவையும் நனவாக்குகிறான்!

சோழன் கனவு நனவாகப், பல்லவனே (நரசிம்ம வர்ம பல்லவனே) பலப் பல உதவிகள் செய்கிறான்:)
இது போன்ற "வரலாற்றுத் திரிபு"களுக்கு, கல்கியைப் பிலுபிலு என்று பின்னாளில் பிடிச்சிக்கிட்டாங்க!:)


ஜெமினி, கணேசன் வைஜயந்திமாலா,
ரங்காராவ், வீரப்பா, பாலைய்யா, அசோகன்,
(ஆரம்ப கால) சரோஜா தேவி, ராகினி, குமாரி கமலா
-ன்னு ஒரு நட்சத்திரப் பட்டாளமே உண்டு!

பாடகர்களும் = நட்சத்திரப் பாடகர்களே;
பி.சுசீலா, பி.லீலா இவர்களுடன் சேர்ந்து கொண்டது = பிரபல மேடைப் பாடகி, ML வசந்தகுமாரி!

ஆயனாரின் மகள் சிவகாமியாக = குமாரி கமலா ஆட..
அதற்கு MLV பாடும் பாட்டே = இன்றைய பாடல்!

வள்ளியின் முருகக் கனவை, 
ஆயன் மகள் ஆடிக் காட்டுகிறார்! பாருங்கள்!அந்தி மயங்குதடி, ஆசை பெருகுதடி
கந்தன் வரக் காணேனே
வண்ண மயிலே, வண்ண மயிலே

ஏக்கத்தால் படிந்துவிட்ட தூக்கமில்லாத் துன்பத்தைக்
கொத்தி எடுத்திடவே, உதடு அவரைத் தேடுதடி
(அந்தி மயங்குதடி
வண்ண மயிலே, வண்ண மயிலே)

தாகத்தால் நாவறண்டால் தண்ணீரால் தணியுமடி
இதயம் வறண்டுவிட்டால் எதைக்கொண்டு தணிப்பதடி?
கள்ளச் சிரிப்பாலே கன்னத்தைக் கிள்ளிவிட்டு
அள்ளி அணைத்திடவே, அவர் வரக் காணேனே
(அந்தி மயங்குதடி
வண்ண மயிலே, வண்ண மயிலே)

குரல்: M.L. வசந்தகுமாரி
வரி: விந்தன்
இசை: வேதா
படம்: பார்த்திபன் கனவு

முருகனின் செவ்வாயில் இட வேண்டிய பதிவு;
ஆனா மருத்துவமனையில் இருந்தேன்;
நேற்றே வீடு வந்து சேர்ந்தேன்; அதான் வெள்ளியில் வருது; தாமதத்துக்கு மன்னிக்க:)
தாகத்தால் நாவறண்டால் தண்ணீரால் தணியுமடி
இதயம் வறண்டுவிட்டால் எதைக்கொண்டு தணிப்பதடி?

Tuesday, October 15, 2013

மதுரை சோமு: துணைவன்! வழித் துணைவன்!

மதுரை சோமு -ன்னாலே நினைவுக்கு வரும் பாடல்:
தெய்வம் படத்தில் - மருதமலை மாமணியே முருகய்யா தான்!


அந்தப் பாட்டின் வரிகளும், வேகமும்,
கனத்த குரலின் உருக்கமும், அப்படியே ஆளைக் கட்டிப் போடும்!

ஆனால் அதே மதுரை சோமு, தேவர் பிலிம்ஸின், சஷ்டி விரதம் என்கிற இன்னொரு படத்திலும் பாடி இருக்காரு! அதான் இன்றைய பாடல்!


அடிப்படையில் மதுரை. சோமசுந்தரம் (எ) சோமு = கர்நாடக இசைக் கலைஞர்;
வேறு சில முருகன் பாடல்களும் பிரபலம் தான்!
ஆனால் அவை கச்சேரிப் பாடல்கள்; சினிமாப் பாடல்கள் அல்ல! - என்ன கவி பாடினாலும், நினைக்காத நேரமில்லை முருகா - போன்ற பாடல்கள்!

வாங்க, நாம சினிமாப் பாட்டுக்குப் போவோம்!
சிவகுமார் - பூர்ணிமா ஜெயராம் நடித்த படம்;


இந்தப் படத்தைப் பார்த்தால், திருச்செந்தூர் ஆலயத்தின் பல உள் நிகழ்வுகளைத் தெரிஞ்சிக்கிடலாம்;
அப்படிச் செந்தூர் அலயத்துக்குள்ளேயே சுத்திச் சுத்தி வரும் காட்சிகள்!

இந்தப் பாடலில், திருச்செந்தூர்க் கோயிலின் குடமுழுக்கு விழாவையும் காட்டுவார்கள்; கண்டு களியுங்கள்!
பாடலின் காணொளிச் சுட்டி இதோ:
http://www.youtube.com/watch?v=C7ByT4Oa3qc (cannot be embedded)

கேட்டுக் கொண்டே வரிகளைத் தட்டச்சினேன்; சில இடங்களில் சிற்சில சொற்கள் புரியவில்லை; கேட்போர் திருத்தி உதவவும்; நன்றி!


(நினைத்திருந்தேன் - நானும் உன்னை நினைத்திருந்தேன் 
கும்பிட்டால் காத்தருளும் குமரனுக்குக் குடமுழுக்கு!
ஈராறு வருடம் அதில் ஓர்முறை தான் பாருங்கள்
சீராரும் செந்தூரின் சந்நிதிக்கே வாருங்கள்)

துணைவன், வழித் துணைவன்,
வாழ்க்கைத் துணைவன்!

திக்கற்ற பேர்க்கெல்லாம் தக்கநலம் புரியும்
அழகன் முருகன் - எழில் 
குன்று தோறும் நின்றிருக்கும் குமரன்
(துணைவன் வழித் துணைவன்)
------------------------
தாய்க்குத் தாயான தெய்வம் அவன்
தந்தைக்குக் குருவான பிள்ளை அவன்
வாய்க்கு உணவாக, விழிக்கு ஒளியாக
நோய்க்கு மருந்தாக, நல்லருள் விருந்தாக..

உதவும் தலைவன் - அன்பர்க்கு என்றும் பூத்து 
கண்ணில் நிற்கும் குமரன்
(துணைவன் வழித் துணைவன்)
------------------------
மந்திர நீர்க்குடம் மண்டபம் அங்கு விளங்க
மங்கல வாத்தியம் தத்தள ஓசைகள் முழங்க
செந்தூர் அழகனின் சந்நிதி பூஜைகள் தொடங்க
கச்சிக் குமாரனை வக்ர கணங்கள் வணங்க

தகதக தகவென திருமுடி ஜொலிக்க
கணகண கணவென மணிகளும் ஒலிக்க
பளபள பளவென ஒளிவிளக்கு எரிய
பலப்பல வினைகளும் பொடிபட அழிய

தொழுதால் அழுதால் நிலைத்தல் தருவானே
மலைமேல் இருக்கும் மயில்மேல் வருவானே

துணைவன்
வள்ளித் துணைவன்
துணைவன், வழித் துணைவன்
வாழ்க்கைத் துணைவன்!
------------------------

குரல்: மதுரை சோமு
வரி: வாலி
இசை: சங்கர் கணேஷ்
ப்டம்: சஷ்டி விரதம்


திருச்செந்தூர் உற்சவர் - சண்முகரின் அணுக்கத் தோற்றம்
***
என்னவன் திருமுகம்!
என் துணைவா -  வழித் துணைவா 
என் ஐயா - எனக்கொரு துணை வா! 
என் வாழ்க்கைத் துணைவா!!

Wednesday, October 09, 2013

பி.சுசீலா: முருக நம்பி!

"ஓடும் நதி" -ன்னு ஒரு படம்; MSV Music;
ரவிச்சந்திரன் - சரோஜா தேவி நடிச்சது! அதிலிருந்து ஒரு முருகன் பாட்டு இந்தச் செவ்வாய்க்கிழமை:)

வயலூர் = மிக அற்புதமான முருகத் தலம்!
கோயில் சிறுசு தான்; ஆனா சூழ் வயல்கள் பெருசு!

ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மனோகர
ராஜ கம்பீர நாடாளும் நாயக - "வயலூரா" -ன்னு திருப்புகழ்!
அந்தத் "திருப்புகழ்" -ன்னு அமைப்பு உருவானதே இந்த வயலூரில் தான்!


பொதுவா, "நம்பி" (எ) சொல், வைணவத்தில் அதிகம்! (சைவத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் உண்டு)
திரு-மாலவன் ஆசை மகளாம் வள்ளி = அவளைப் புணர்ந்த அவனும் = "நம்பி" ஆகி விட்டானோ?:))

பாடலைக் கேட்டுக் கொண்டே வாசியுங்கள்:
Yourlisten.com - odum nathi - psusheela(முருகா அறிவோம் முருகா
வருவோம் முருகா வயலூர் 
முருகா வயலூர் முருகா)

குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி
எங்கள் குடும்பம் இருப்பது உன்னை நம்பி நம்பி
பெண்ணுடனே பிறந்த தங்கை தம்பி - தன்னை
என்னுடன் காவல் கொண்டேன் உன்னை நம்பி

கடந்ததும் நடந்ததும் கந்தன் விளையாட்டு
காலங்கள் யாவிலும் நல்ல வழி காட்டு
உள்ள துன்பம் யாவும் இல்லை எனும்போது
உன்னையன்றி யாரை நம்பும் இந்த மாது?

நெஞ்சம் உருகாதா கொஞ்சு தமிழ் வேலா?
நெஞ்சம் உருகாதா கொஞ்சு தமிழ் வேலா?

சந்தனம் குங்குமம் சிந்தும் வயலூரா
ஓம் எனும் மந்திரம் சொல்லி வரும் வேலா
மஞ்சள் முகம் பார்த்து பிள்ளை மொழி கேட்டு
மன்னன் மணிக் கைகள் "அஞ்சல்" என்று காட்டு!

நெஞ்சம் உருகாதா கொஞ்சும் வயலூரா
நெஞ்சம் உருகாதா கொஞ்சும் வயலூரா


படம்: ஓடும் நதி
குரல்: பி.சுசீலா
வரி: கண்ணதாசன்
இசை: MSV

Tuesday, October 01, 2013

சீர்காழி: காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது!

இந்தச் செவ்வாய்: ஒரு அபூர்வமான சீர்காழி பாடல்! அவருக்கே உரிய கணீர் என்ற குரலில்!

காதலில் மட்டும்: "காலையும் நீயே, மாலையும் நீயே" அல்ல!
முருகனிலும் உண்டு: "காலையும் நீயே, மாலையும் நீயே":))


காலை, மாலை -ன்னு..
ஒவ்வொரு பொழுதாக, முருகனை அடுக்கும் பாட்டைக் கேளுங்க!காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது
கடல் அலையில் மயில் எழுந்து நடனம் புரியுது!
(காலை இளம் கதிரில்)கடல் அலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
கலையாதது நிலை ஆகுது கதி ஆகுது!
(காலை இளம் கதிரில்)

மாலை வெயில் மஞ்சளிலே உன் மேனி மின்னுது - அந்தக் 
கோலம் கண்டு உள்ளம் கொள்ளை உறுதி கொள்ளுது
குமரா உனை மனம் நாடுது; கூத்தாடுது!
(காலை இளம் கதிரில்)

சோலை மலர்க் கூட்டம் உந்தன் தோற்றம் கொள்ளுது - சிவ 
சுப்பிரமண்யம் சுப்பிரமண்யம் என்று சொல்லுது
சுகம் ஆகுது! குக நாமமே! சொல் ஆகுது!!
(காலை இளம் கதிரில்)

வேலை ஏந்தும் வீரம் வெற்பு சிகரம் ஆகுது
"வெற்றி வேல், சக்தி வேலா" என்றே சேவல் கூவுது
"சக்தி வேல் சக்தி வேல்" என்றே சேவல் கூவுது
வினை ஓடுது! வடி வேல் அது,  துணையாகுது!!
(காலை இளம் கதிரில்)

பார்க்கின்ற காட்சியெல்லாம் நீயாகவே
நான் பாடுகின்ற பாட்டெல்லாம் நினக்காகவே
உருவாகுது திருவாகுது 
குருநாதனே முருகா ...
(காலை இளம் கதிரில்)

குரல்: சீர்காழி
இசை: ?
வரி: ?
Album Song

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP