Thursday, December 26, 2013

கிறிஸ்துமஸ் முருகன்!

முருக அன்பர்களுக்குக் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
Merry Merry Christmas, Happy Happy New Year!

இயேசு நாதப் பெருமான்
(எ) இனிய குழந்தை மூலமாக..
எங்கும் நிறைந்தவரான கர்த்தரே = உமக்கு ஸ்தோத்திரம்!


திசை மாறிய பறவைகள் படத்திலிருந்து..
ஒரு கிறிஸ்துவக் கன்னி, முருகன் மேல் பாடும் பாடல்!

(கர்த்தர் மேல பாட வேண்டியவளைக்,
கந்தன் மேல பாடச் சொல்றேன்-ன்னு
தப்பா நினைக்காதே-ம்மா என்ற முன்னுரையோடு காட்சி துவங்கும்)

(நீராடிப் பட்டுடுத்தி நின்றவர்கள் யாவர்க்கும்
சீரான வாழ்வு தரும் செல்வத் திருக் குமரா
மாறாத செல்வமுடன் வாழத் துணை புரிவாய்
சூரனையே வென்ற தூயவனே, செந்தூரா)
 

உள்ளம் உருகாதா? - எந்தன்
ஊனும் உருகாதா?
அன்னை அழைத்தால் அருகில் வருவாய்
பேரன்பு குருநாதா முருகா
(உள்ளம் உருகாதா)

தங்கரதம் போல் மயில் வாகனத்தில்
கந்தன் வந்தால் கவலைகள் தீரும்
அங்கம் முழுதும் திருநீறு அணியும்
அன்னை முகத்தில் ஆனந்தம் மலரும்

கந்தா.... அழகுத் திருக்குமரா
செந்தில்.... அமுத வடிவழகா
(உள்ளம் உருகாதா)

நல்லவர் எல்லாம் கேட்டதைக் கொடுக்கும்
அல்லல் தீர்க்கும் கந்தனின் வேதம்
எந்த நோயும் அணுக விடாதே
என்றும் காக்கும் வைத்திய நாதன்

வேலா.... கருணை மழை முகிலே
பாலா.... பழநி மலை அரசே

---------

திரையில்: சுமலதா, சரத்பாபு
குரல்: வாணி ஜெயராம்
வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
இசை: திரையிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.வி
படம்: திசை மாறிய பறவைகள்


Tuesday, December 10, 2013

பி.சுசீலா: ஆறெழுத்தில் ஒரு மந்திரமாம்!

ஐந்தெழுத்து, ஆறெழுத்து என்று சொல்லுவார்கள், சமய உலகிலே!
எட்டெழுத்தும் உண்டு!

*பஞ்சாட்சரம் = ஐந்தெழுத்து = நம சிவாய
*ஷடாட்சரம் = ஆறெழுத்து = சரவண பவ

எட்டெழுத்து = ஓம் நமோ நாராயணாய
இவை "மந்திரங்கள்" என்றும் சொல்லப்படும்/ ஓதப் படும்!

"ஓங்காரம்" = ஐந்தெழுத்து/ஆறெழுத்தில் கிடையாது; நாம் தான் அவற்றோடு "ஓம்" சேர்த்துச் சொல்ல வேண்டும்!
எட்டெழுத்தில், ஓங்காரம் உள்ளேயே இருக்கும்! ஓங்காரத்தையும் சேர்த்தால் தான் எட்டெழுத்து; பிரிக்க முடியாத பிரணவம்!

இப்படிப் பிரணவமாக இருப்பதால், அரங்கன் கருவறை = "பிரணவாகாரம்" என்று சொல்லப்படும்!
எப்படி இருப்பினும், இவை எல்லாமே "நுணுக்கமான" மந்திரங்கள்;
அதில் முருகனுக்கே உரித்தானது = சரவண பவ!


"பவ" என்றால் பிறப்பு; அறுத்தல்!
"சரவண" = தர்ப்பைக் காட்டிலே பிறந்தவன் (தோன்றியவன்)

பரிபுர பவனே பவம் ஒழி பவனே
அரிதிரு மருகா அமரா பதியை..
-ன்னு கந்த சட்டிக் கவச வரிகள் ஞாபகம் வருதா?:)
அதே "பவம்" ஒழி சரவண பவன் அவன்!

சிவபெருமானின் கண்ணொளி, கங்கைக் கரையில், தர்ப்பைக் காட்டிலே (சரவணத்திலே), ஆறு பொறிகளாக இறங்கிற்று;
இப்படி நம் பிறப்பை அறுக்க = பிறந்தவன் (தோன்றியவன்) முருகப் பெருமான்!

அதனால் சரவணம் + பவம் = சரவண பவ
இந்தத் திருவாறெழுத்து, முருக அன்பர்களுக்கு மிக்க இனிப்பானது!

அந்த ஆறெழுத்தை வச்சி, இன்னிக்கி ஒரு பாடல்; சுசீலாம்மாவின் தேன் குரலில்... பழைய அபூர்வப் பாடல்..
(சினிமாப் பாடல் அல்ல, Album Music) - கேட்போமா?

(Note: மேற்சொன்னது எல்லாம் சம்ஸ்கிருத மரபு!
இவை சங்க தமிழ் மரபு அல்ல! தமிழ் முருகன் = இயற்கை வழிபாடே!)



ஆறெழுத்தில் ஒரு மந்திரமாம்
அனுதினம் ஓதிடும் மந்திரமாம்
ஆறுதல் தந்திடும் மந்திரமாம்
சரவணபவ எனும் மந்திரமாம்
(ஆறெழுத்தில்)

ஆறுமுகம் தரும் மந்திரமாம் - நல்ல
அறிவை வளர்க்கும் மந்திரமாம்
ஆறுபடையின் திரு மந்திரமாம் - நல்ல
அன்பை வளர்க்கும் மந்திரமாம்
(ஆறெழுத்தில்)

நெஞ்சில் நினைக்கும் மந்திரமாம் - நல்ல
நீதியைக் காக்கும் மந்திரமாம்
அஞ்செழுத்தால் பெற்ற மந்திரமாம் - நல்ல
அறநெறி காட்டும் மந்திரமாம்
(ஆறெழுத்தில்)

வஞ்சத்தை வெல்லும் மந்திரமாம் - நல்ல
வாழ்வைத் தந்திடும் மந்திரமாம்
வேலும் மயிலும் தொழும் மந்திரமாம் - நல்ல
வெற்றிகள் தந்திடும் மந்திரமாம்
(ஆறெழுத்தில்)


குரல்: பி.சுசீலா
வரி: பாரதிசாமி
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்

எல்லா வரிகளிலும் "மந்திரமாம்" -ன்னு வரும்; கூடவே "நல்ல" -ன்னு தொக்கும்!
அத்தகு "சரவண பவ" (எ) திருவாறெழுத்தை நினைச்சிப் பார்ப்போம், சுசீலாம்மாவின் தேன் குரலில், நம் மனசையோட்டி!

"சரவண பவ"னார் சடுதியில் வருக!

Tuesday, December 03, 2013

The 1st song of "Child" MS Subbulakshmi

எம்.எஸ்.சுப்புலட்சுமி (எ) MS Amma
= இவர்கள் இசையைக் கேட்காதவர்கள் கூட இருப்பார்கள்..
= ஆனால் இவரை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்!

அந்த MS Amma, பாடிய "முதல் பாட்டு" எது? அதாச்சும் முதலில் ஒலிப்பதிவு செஞ்ச பாட்டு?
= முதல் வணக்கம் முருகனுக்கே!:)

என்ன வியப்பா இருக்கா?:)
மீராவாக நடித்தவர்.. கண்ணா என்று கதறுபவர்..

அனைத்து தெய்வ வடிவங்களையும் போற்றினாலும்...
எம்பெருமான் திருவேங்கடமுடையான் மீது "ஆழ்ந்த பற்றுதல்" கொண்டவர்;
இன்றும் திருப்பதியில் சிலையாக வாழ்பவர்!


அவரா முருகன் மீது முதல் பாட்டு?:)
ஒரு வேளை, என்னைப் போலவே அவங்களும் போல..
*பொறந்த வீடு = "அப்பா திருமால்" என்றாலும்,
*புகுந்த வீடு = "காதல் முருகனோ" என்னமோ?:)))

அது ஒரு சிறுகதை!
பார்க்கலாமா, இன்றைய செவ்வாய்க்கிழமை?


Madurai Shanmugavadivu Subbulakshmi = MSS

சண்முகவடிவு = அம்மா பேரு;
அப்பா பேரு = அதிகம் வெளியிற் தெரிவதில்லை..
கணிகையர் குடியில் உதித்தவர்!

சுப்புலட்சுமிக்குப் 10 வயது (1926)
அன்னிக்கி சாயந்திரம், பள்ளிக்கூடம் முடிச்சிட்டு, வீட்டுக்கு வந்து கொறிச்சிட்டு..
வெளியில் போய் விளையாடும் ஆசையில், குட்டிப் பொண்ணு வீட்டுக்கு வந்தா....

தாய் சண்முகவடிவு = ஓர் ஒலிப்பதிவுக்கு ஏற்பாடு செஞ்சி வச்சிருக்காங்க!

அவிங்களே ஒரு நல்ல வீணைக் கலைஞர் தான்!
அந்தச் சுற்று வட்டாரச் சூழலும் நட்பும் தந்த அறிமுகத்தால், Oriental Records என்னும் ஒலித்தட்டு நிறுவனம் மூலமாக, இப்படியொரு வாய்ப்பு!

சரி, என்ன பாட்டு பாட?
அதையும் தாயே முடிவு பண்ணி வைச்சாச்சி!



அந்தப் பாட்டை எழுதியவர் = ஒரு பெரும் "வைணவர்"
ஆனால், திருச்செந்தூர் முருகனிடம் ஆராக் காதல் கொண்டவர்;
பேரு: பகழிக் கூத்தர் (15th CE)

"முருகா முத்தம் தருகவே, முருகா முத்தம் தருகவே"... ன்னு
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் பாடிய திருமால் அன்பர்!

முருகன் பிள்ளைத் தமிழிலும்..
நூலின் காப்புச் செய்யுளைத் திருமாலுக்கே வைத்தவர்..
குமரப் பெருமான் தனைக் காக்கச்
சங்கு ஆழி படைத்த பெருமாளே!

அவர் வயிற்று நோயும் தீர்த்து.. வங்கார மார்பிலணி பதக்கமும் குடுத்த முருகன்!
அவருடைய கதை = இங்கே!
அப்பறமாப் படிச்சிப் பாருங்க! "பகழி" என்ற செந்தமிழ்ச் சொல்லுக்குப் பொருளும் புரியும்!

இந்தப் பிள்ளைத் தமிழ்ப் பாட்டைத் தான், சுப்புலட்சுமியின் அம்மா, தேர்ந்தெடுத்து வச்சி இருக்காங்க!
ஆனா இதைப் பத்து வயசுப் பொண்ணு பாட முடியுமா? செந்தமிழ்-ல்ல வேற இருக்கே?

நீங்களே கேளுங்கள்..
How MS kid, can extend her voice, to suit the difficult tempo of the song, even at such a small age!


ஒரு பிறந்த நாள் பரிசாய், இந்தப் பாடலை முன்பு எப்பவோ வலையேற்றி இருந்தேன்..
பாட்டின் வரிகள், காணொளியில் கூடவே வரும்:)

மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்
வாகாய் வாடாதோ?
மதிமுக முழுதும் தண்துளி தரவே
வார்வேர் சோராதோ?
(மரகதப் பச்சை உமை அன்னை.. அவ வெயிலால் வாடுறாளே..
அவ மதிமுகம் முழுசும் வியர்வைத் துளியில் சோர்ந்து போகுதே)

கரமலர் அணைதந்(து) இன்புறு மடவார்
காணாதே போமோ?
கனமணி குலவும் குண்டலம் அரைஞாண்
ஓடே போனால் வார்
(மலர்க் கரத்தால் அணைத்து மகிழும் பெண்கள், குழந்தையைக் காணாது போகலாமா?
கனமான மணிகள் குலாவும் குண்டலம், அரை ஞாண் கயிறோடே நீ ஓடலாமா?)

பொருமிய முலையும் தந்திட உடனே
தாய்மார் தேடாரோ?
புரவலர் எவரும் கண்(டு) அடி தொழுவார்
போதாய் போதா நீள்
(முலை துடிக்குதே பாலூட்ட; அடேய், ஒன்னை ஒங்கம்மா தேடுறாளே!
தமிழைக் காக்கும் புரவலர்கள், உன் அடியைத் தொழுத் தேடுவார்களே!
* போதாய் = வருக | (நீராடப் போதுவீர், போதுமினோ?)
* போதா = போதம் (எ) ஞானம் மிக்கவனே)

சரவண மருவும் தண்டமிழ் முருகா
தாலே தாலேலோ
சதுமறை பரவும் செந்திலை உடையாய்
தாலே தாலேலோ
(சரவணத்தில் வளரும் தண்டமிழ் முருகா - தாலே தாலேலோ!
நான்மறை போற்றும் செந்தில் (எ) திருச்செந்தூர்க்காரா - தாலே தாலேலோ!)


திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ்
தாலப் பருவம்
வரிகள்: பகழிக் கூத்தர்

MS "அம்மா" என்று உலகமே பின்னாளில் அழைத்தது..
அந்த "அம்மா" பாடிய தாலாட்டு = இது குழந்தை பாடிய தாலாட்டு!:)

இதுவே MS சுப்புலட்சுமி அவர்களின் முதலில் பதிவு செய்த பாடல் - On LP Records by Oriental Recording Company!
முருகன் துவக்கி வைத்த இசைப் பயணம் = இனிதே "நிறைந்து" முடிந்தது!



செந்திலைக் கொண்ட தண்டமிழ் முருகா 
I Love U தாலேலோ
செவ்வாய் எச்சில் காதலன் முருகா 
I love U தாலேலோ

Sunday, December 01, 2013

நினைத்தது எத்தனையிற் ...... தவறாமல்
நிலைத்த புத்தி தனைப் ...... பிரியாமல்

கனத்த தத்துவம் உற்று ......  அழியாமல்
கதித்த நித்திய சித்து ......   அருள்வாயே

மனித்தர் பத்தர் தமக்கு ......  எளியோனே
மதித்த முத்தமிழில் ...... பெரியோனே

செனித்த புத்திரரில் ...... சிறியோனே
திருத்தணிப் பதியில் ...... பெருமாளே.
----------------


நினைத்தது எந்த அளவும் தவறாமல் கைகூடவும்,

நிலையான ஞானத்தை விட்டு யான் பிரியாமல் இருக்கவும்,

பெருமை வாய்ந்த தத்துவங்களைக்* கடந்து அப்பாலான நிலையை யான் அடைந்து அழியாமல் இருக்கவும்,

வெளிப்படுகின்ற நிரந்தரமான சித்தநிலையை நீ அருள்வாயாக.

மனிதர்களுக்குள் அன்புடையார்க்கு மிக எளியவனே,

மதிக்கப்படுகிற இயல், இசை, நாடகமாகும் முத்தமிழில் சிறந்தவனே,

சிவ மூர்த்தியிடம் தோன்றிய குமாரர்களுள் இளையவனே,

திருத்தணிகைப் பதியில் எழுந்தருளியுள்ள பெருமாளே

Friday, November 29, 2013

முருகன் சிவாஜி vs நாத்திக சிவாஜி!

"சிவாஜி படங்களில் முருகன் பாடல்கள்" -ன்னு தனிப் பதிவே இடலாம்..

*வெற்றிவேல் -ன்னு = கந்தன் கருணை வீரபாகு நடை ஆகட்டும்..
*கண்கண்ட தெய்வமே -ன்னு = கீழ்வானம் சிவக்கும் ஆகட்டும்..
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான முத்து!

இன்று இரண்டு சிவாஜிக்கள்!
= முருகன் சிவாஜி & நாத்திகச் சிவாஜி..
ஒருவரோடு ஒருவர் - முரண்பட்ட பாட்டுச் சண்டை:)

இன்னிக்கி, மனிதனும் தெய்வமாகலாம் படத்திலிருந்து ஒரு பாடல்;
முன்பே இந்தப் படத்தை, நாம பார்த்துள்ளோம், இந்த வலைப்பூவில்!


அந்தப் பாடல்: சிவாஜி (எ) நடிகர் திலகம், முருகனுக்குப் பார்த்துப் பார்த்துச் செய்யும் பணிவிடைகள்..
தட்டித் தட்டித் தாலாட்டும் முருகனின் பெரியாழ்வாரோ -ன்னு கூடத் தோனும்!

இந்தப் பாடல்: ஆத்திக-நாத்திகப் பாட்டுச் சண்டை:)

வாருங்கள், சீர்காழி-TMS குரலில் பார்ப்போம்/கேட்போம்!
திருச்செந்துரின் கடலோரத்தில் -ன்னு ஒன்னா இசைந்து பாடியவங்க, இதில் வசைந்து பாடுறாங்க:) | Very good combo!

செவ்வாய்க்கிழமை வரவேண்டிய பதிவு, சனிக்கிழமை வருகிறது:)
காரணம் = என் சோம்பலே!
ஏதோ மனக் கலக்கம்! சோர்விலேயே இருந்து விட்டேன்;

இந்த வாரம், இன்னுமாடா என் பாட்டு வரலை? -ன்னு கேட்க நினைச்சான் போலும் என் காதலன்!
Twitter-இல் @mokrish மூலமாக வேறு ஏதோ பேச்சு வர, இந்தப் பாட்டும் வர.. இதையே இன்று இட்டு விட்டேன்:)

வரிகள், பாட்டைக் கேட்டுக் கேட்டு எழுதியது; பிழைகள் இருப்பின் சுட்டித் திருத்தவும், நன்றி!



வெற்றி வேல் வெல்லுமடா! வினை தீர்ப்பான் வேலனடா!
கற்றவர்க்கும் கல்லார்க்கும், கருணை தரும் தென்றலடா!

பிறந்த வந்த கதையைப் பார்த்தால், பெரிய வீடு தெரியுமடா!
மறைந்து போகும் முடிவைப் பார்த்தால், மன்னன் சக்தி புரியமடா!

இடைப்பட்ட இடத்தில், கடன்பட்ட மனிதா
ஏன்டா உனக்குப் பொய்யறிவு?
ஈரேழு உலகமெங்கும் வடிவேலன் அரசாட்சி!
(வெற்றி வேல் வெல்லுமடா)
---------------

இறைவனாலே உலகம் என்றால், ஏழைகளை ஏன் படைத்தான்?
ஒருவன் வாழ ஒருவன் வாடும், உயர்வு தாழ்வை ஏன் அமைத்தான்?

கடன்பட்ட முருகன், உடன்பட்ட நமக்குக்
காட்டிய கருணை இது தானா?
கதை சொல்ல வேண்டாம் அண்ணா, அதிலே தான் அரசாட்சி!
(வெற்றி வேல் வெல்லுமடா)
---------------

குழந்தை போல அவனைப் பார்த்தால், கூட வந்து கொஞ்சுமடா!
குழந்தை இங்கு கோடி உண்டு, குமரன் என்ன தேவையடா?

ஆத்திரம் கொண்டவன் நாத்திகன் ஆவான்
அவனே அவனுக்குப் பகையாவான்!
நாத்திகம் என்பது சுய மரியாதை
நம்பிய மனிதன் தன்னை ஆள்வான்!

உன் கண்ணில் ஒருநாள் தோன்றும் வடிவேலன் அரசாட்சி!
உன் நெஞ்சில் ஒருநாள் தோன்றும் பெரியாரின் மனசாட்சி!
(வெற்றி வேல் வெல்லுமடா)

வெற்றிவேல் முருகனுக்கு - அரோகரா!
வேலக்குடி வேலனுக்கு - அரோகரா!

படம்: மனிதனும் தெய்வமாகலாம்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
வரி: கண்ணதாசன்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன் & TMS

வலப்பக்கப் பட்டியில் "கவிஞர்-இசையமைப்பாளர்-பாடகர்" தொகுப்பு மட்டுமே, இது வரை கொடுத்துருக்கேன்..
சிவாஜி (எ) நடிகரின் தொடுப்பும் கொடுக்கணுமோ? முருகா!

Monday, November 18, 2013

அபூர்வமான முருகன் பாடல்: MSV - KBS கூட்டணி!

வணக்கம்! இந்தச் செவ்வாயில் அபூர்வமான பாடல்!
MSV - KBS என்ற கூட்டணி அபூர்வம்!

கே.பி. சுந்தராம்பாள் (எ) KBS அம்மா
இவரின் பல திரையிசைப் பாடல்கள் = இசையமைப்பாளர் கேவி மகாதேவன் அவர்களுக்கே சென்று அமைந்து விட்டன;

MSV -க்கு = KBS அம்மாவின் ஒரு பாடலும் அமையவில்லை..
அப்படியும் அமைஞ்ச இந்த ஒரே படம், வெளிவராமலேயே போனது:(

படம்: ஞாயிறும் திங்களும்
சிவாஜி, தேவிகா, முத்துராமன், கே.ஆர்.விஜயா எனப் பலரும்..
இயக்குநர்: ஸ்ரீதர்
இத்துணை புகழ் மிக்கோர் இருந்தும், படம் வெளிவரவில்லை..

இந்தப் பாடலை வலையேற்றி உதவியுள்ளார், MSV Quiz ஆர்வலர்!
அவர் காலடியைத் தொட்டுக் கொள்கிறேன்!

கேட்டுச் சொல்லுங்கள், KBS (எ) செந்தமிழ் நங்கையை! - கீழே பட்டையைச் சொடுக்குங்கள்



வீறு தமிழ்ப் பாலுண்டு, வெற்றிக்கு வேல்கொண்டு
ஆறுதலைத் தந்த முருகா!

ஏறுமயில் சேவலென சூரபதன் மேல்மீது
கூறுபட வென்ற முருகா!

ஆறுபடை வீடுமலை மீதுகொடி ஆடஎம்மை
அரசாள நின்ற முருகா!

அத்தனிடமே பெரிய தத்துவம் உரைத்(து)அரிய
வித்தென விளைந்த முருகா!
-------------

ஓங்காரம் குடிகொண்டு ஆங்காரம் தனைவென்று
ரீங்காரம் செய்யும் முருகா

ஒருகால் நினைப்பவர்க்கு பலகாலும் துணைநின்று
எதிர்காலம் நல்கும் முருகா
நல்ல எதிர்காலம் நல்கும் முருகா!
(ஓங்காரம் குடிகொண்டு)

ஓராறு முகத்தாலும் ஈராறு விழியாலும்
தேனாறு சிந்தும் முருகா - இவர்
யார்யார் என்று எண்ணாமல், எவர் வந்து கேட்டாலும்
சீர்நல்கும் தெய்வ முருகா!
(ஓங்காரம் குடிகொண்டு)

தாழ்வாரை மேலெடுத்து, வீழ்வார்க்குக் கைக்கொடுத்து
வாழ்வாக்கி வைக்கும் முருகா - நன்றி 
வாழ்வார்க்கும் பால்வார்த்து மனம்காக்க அறம்காத்த
வேல்பார்த்த வீர முருகா!

நாடிய ஏழையின் தாய்முருகா!
நல்லவர் வீட்டினில் சேய்முருகா!
பாடிடும் செந்தமிழ்ப் பாவலர் கைகளில்
நாடகம் ஆடிடும் வேல்முருகா!

மலைமுருகா! தலைமுருகா!
தமிழ் மழையே! தனி அழகே!
நாளும் மனிதர் வாழும் வழியைக் கூறும் வகையில்
(ஓங்காரம் குடிகொண்டு)

படம்: ஞாயிறும் திங்களும் (வெளிவரவில்லை)
இசை: எம்.எஸ். விஸ்வநாதன் (MSV)
வரி: கண்ணதாசன்
குரல்: கே.பி.சுந்தராம்பாள்


இதே படத்தில், இன்னும் 2 பாடல்கள் உண்டு, அம்மா குரலில்!
* கேட்ட வரம் கொடுக்கும்
* வகுத்தால் வகுத்த

MS Viswanathan இசையில், KBS அம்மா குரல் வெளி வரலீன்னாலும்
TK Ramamurthi இசையில், வந்ததாச்சும் ஒரு பெரிய ஆறுதல்..
= சக்தி லீலை -ன்னு படத்தில் பாடி இருப்பாங்க..

கேவி மகாதேவனுக்கே பல KBS பாடல்கள் அமைஞ்சி விட்டாலும்..
வேறு சில இசையமைப்பாளர்களுக்கும் கொஞ்சமா அமைஞ்சது, ஒரு வரமே!

* ஆர்.சுதர்சனம் – பூம்புகார் (வாழ்க்கையெனும் ஓடம்)
* ஜி ராமநாதன் - ஒளவையார் (??? சரி பார்த்துச் சொல்லவும்)
* குன்னக்குடி - காரைக்கால் அம்மையார் | திருமலைத் தெய்வம்

முருகா முருகா -ன்னு முழங்கிய KBS அம்மாவின் கடைசிப் படம்
= “திருமலைத் தெய்வம்” -ன்னா முடிஞ்சி போனது?

ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக் கவலை? -ன்னு பாடினாங்களே தவிர..
அம்மாவின் மனக் கவலையை அறிவார்கள் மாயோனும் சேயோனும்!

வெற்றிக்கு வேல் கொண்டு, வீறு தமிழ்ப்பால் உண்டு
ஆறுதலைத் தந்த முருகா!
KBS (எ) ஜீவனுக்கு = உன் நிழலில், என்றும் ஆறுதலைத் தா!

Tuesday, November 12, 2013

செய்ய நிறத்தோனே! சேவற் கொடியோனே!


 
செய்ய நிறத்தோனே
சேவற் கொடியோனே
துய்ய உள்ளத்தில்
மெய்யொளியாய் ஒளிர்வோனே!

செல்லக் குமரனே
செந்தில் வடிவேலவனே
வெல்லத் தமிழாலே
வேந்தனுன்னைப் போற்றுகின்றேன்!

பால முருகனே
பன்னிருகை வேலவனே
பரமசிவன் புத்திரனே
பதம் பணிந்து போற்றுகின்றேன்!

பையத் தமிழ் பாடி
பார்வதியின் மைந்தனுன்னை
மையிட்ட மடமாதர்
மணாளனுன்னைப் போற்றுகின்றேன்!

நீல மயிலேறி
நித்தம் வலம் வருகின்ற
கோல எழிலோனே
கொஞ்சு வேளே போற்றுகின்றேன்!

மலர்க் கையில் வேலெடுத்து
மதிகெட்ட சூரபன்மன்
ஆணவத்தைப் பிளந்திட்ட
ஆண்டவனே போற்றுகின்றேன்!

அடியார்கள் வல்வினையை
அடியோடு களைந்து விடும்
ஆனைமுகன் சோதரனே
ஆறுமுகா போற்றுகின்றேன்!

செந்நெருப்பில் தோன்றிடினும்
தண்ணிலவாய்க் குளிர்வோனே
கண்மணியே கதிர்வேலா
கசிந்துருகிப் போற்றுகின்றேன்!

அமரரிடர் தீர்த்திடவே
சமர் புரிந்த ஷண்முகனே
புகல் தருவாய் புண்ணியனே
பொன்னடிகள் போற்றுகின்றேன்!

சதுர் முகனைச் சிறையிலிட்ட
சேந்தனே சேயோனே
தகப்பன் சுவாமியே
தண்டனிட்டுப் போற்றுகின்றேன்!

ஆறுபடை வீடு கொண்ட
அழகு மிகும் அற்புதமே
அம்பிகையின் அரும் புதல்வா
அன்புடனே போற்றுகின்றேன்!

முத்தமிழின் காவலனே
முந்தி வந்து அருள்பவனே
சித்தத்துள் உன்னை வைத்து
நித்தம் நித்தம் போற்றுகின்றேன்!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE.jpg

Thursday, November 07, 2013

திருச்செந்தூரின் கடலோரத்தில்!

மக்களே, இன்று தான் கந்த சஷ்டி (Nov-08)!
இன்றைய பாட்டாய் = திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
(ஏற்கனவே இட்ட பாடல் தான்; ஆனா ஒவ்வொரு சட்டியின் போதும், இதை இடுவது வழக்கம், அம்புட்டுதேன்:)

ஆனா, அதுக்கு முன்னாடி...
சூர சங்காரம் என்று "கதை"; அது எங்கு நடந்தது? = தமிழ் ஈழமா? திருச்செந்தூரா?


முருகன் சூரனை வதம் செய்ததாகப் பெரிதும் "சொல்லப்படுவது" திருச்செந்தூர் கடற்கரை!
ஒவ்வொரு ஆண்டும் கந்த சட்டியின் போது, செந்தூரில் வெகு விமரிசையாக நடக்கும் சூர சங்கார விழாவும் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது!

ஆனால் கந்த புராணம் சொல்வது என்ன?




அம்மையப்பனிடம் வேல் வாங்கிய முருகன், தேர் ஏறித் தெற்கு நோக்கிச் செல்கிறார்.
விந்தியமலையின் அடிவாரத்து மாயாபுரத்தைத், தாராகாசுரன் ஆண்டு வருகிறான். இவன் சூரனின் தம்பி.

கிரெளஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி இவன் வழிமறிக்க,
வீரபாகுத் தேவர் அவனுடன் போர் புரிகிறார்.
ஆனால், வீரபாகுவும், முருகனின் சேனையும், அந்த மலைக்குள் மாட்டிக் கொள்கின்றனர்!

தாரகன் முருகனோடு நேரடியாக மோதவில்லை!
எனினும் அன்பர்கள் மாட்டிக் கொண்டதால், முருகன் கூர் வேலை அவன் மேல் எறிய, மலை பிளந்து, தாருகன் அழிகிறான்.
அனைவரும் மலைச்சிறையில் இருந்து விடுபடுகின்றனர்.

சூரபத்மன் இந்தச் சேதி கேட்டு நடுக்குறுகிறான்.
எதிரிப் படை பலம் வாய்ந்ததோ என்ற ஐயம் முதன்முதலாக அவனுக்கு வருகிறது.
முருகனின் சேனையைக் கணக்கிட உளவுப்படையை அனுப்பி வைக்கிறான்.

மன்னி ஆற்றங்கரையில், சிவபிரானுக்கு ஆலயம் எழுப்பச் சொல்லித் தேவ தச்சனைப் பணிக்கிறார் முருகப் பெருமான்.
ஈசனும் முருகனுக்கு முன்னே தோன்றி, பாசுபதம் என்னும் அஸ்திரம் அளிக்கின்றார்.
பின்னரே திருச்செந்தூர் நோக்கி மொத்தப் படையும் கிளம்புகிறது.

பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள், முருகனைச் செந்தூரில் கண்டு, வீழ்ந்து வணங்குகிறார்கள்.
புதிதாகக் கட்டப்பட்ட ஆலயத்தில் அமர்ந்து,
தேவ குருவான வியாழனிடம் (பிரகஸ்பதி), சூரபத்மனின் முழுக் கதையையும் சொல்லுமாறு கேட்கிறார் முருகன்.
அதன் பின்னரே வீரபாகுவை மட்டும் தூது அனுப்ப முடிவாகிறது!

தூது செல்லும் வீரபாகு முதலிலேயே சூரனைச் சந்திக்கவில்லை!
தேவ இளவரசன் "ஜெயந்தனைத்" தான் முதலில் போய்ப் பார்க்கிறான்!
ஜெயந்தனுக்கு ஆறுதல் சொல்கிறான் வீரபாகு!
அவனுடன் இருக்கும் மற்ற அமரர்களுக்கும் படைபலத்தைச் சொல்கிறான்;

பின்னரே, சூரன் அவைக்குச் சென்று தூது உரைக்கிறான்!
ஆனால் கொஞ்சம் கூடப் பிடி கொடா உள்ளத்தால் தூது முறிகிறது.

அப்போது ஏற்பட்ட கைகலப்பில் சூரனின் புதல்வர்கள் சதமுகன், வச்சிரவாகு இருவரும் வீரபாகுவால் கொல்லப்படுகிறார்கள்.
வீரபாகு திருச்செந்தூர் திரும்பி, முருகனிடம் தூது நிகழ்வுகளை முன் வைக்கிறான்.

முருகனும் இனி தாமதிக்கலாகாது என்று செந்தூரில் இருந்து இலங்கை செல்கிறார்.
ஈழத்தில், 
ஏமகூடம் என்னும் ஊரில் படைக்கலன்களுடன் தங்க, அங்கிருந்து தான் போர் துவங்குகிறது.

பானுகோபன் என்னும் சூரனின் மகன், நன்னீர்க் கடலில் முருகன் சேனையை ஆழ்த்த, அதை முருகன் முறியடிக்கிறார்.

வீரமகேந்திரபுரத்தில் பலப்பல மாயங்கள் செய்து போர் புரிகிறான் சூரன்.
கடலாய், இருளாய் மாறி மாறிச் செய்யும் போர் எதுவும் உதவாமல் போக,
கடைசியில் வெறுத்துப் போய், கடலுக்கு அடியில் ஒரு மாமரமாய் நிற்கிறான்.

கூர் வேல் சூரனைப் பிளந்து.....சேவலும் மயிலுமாய் ஆக்குகிறது.
சூரசங்காரம் நடந்து முடிகிறது!
சூரனின் மொத்த கிளையும், உற்றார் உறவோடு, அத்தனை பேரும் அழிகிறார்கள்!

முருகனின் ஆணைப்படி, வருணன் மொத்த ஊரையும் கடலுக்கு அடியில் மூழ்கடிக்க, அசுர குலமே மூழ்கிப் போகிறது;
வெற்றித் திருமகனாய், முருகப் பெருமான் திருச்செந்தூர் திரும்புகின்றார்.

இப்படிச் சூரனை அழித்த மனக்கேதம் தீர்க்க, முருகன் மனம் எண்ணுகிறது!
செந்தூரில் போருக்கு முன்னரே கட்டப்பட்ட ஈசனின் ஆலயத்தில், கைகளில் ஜபமாலையோடு, சிவ பூசை செய்கிறார் முருகன்.

இந்தக் கோலமே நாம் இன்றும் திருச்செந்தூர் கருவறையில் காண்பது!
கைகளில் ஜப மாலையுடன் செந்தூர் மூலத்தானத்து முதல்வன் நிற்க,
சற்று எட்டிப் பார்த்தால், கருவறைக்குள் சிவலிங்கமும் தெரியும்!

ஆக, "கதைப்படி", சூரசங்காரம் நடந்தது ஈழத்தில் தான்! 
ஏமகூடம் என்ற ஊர் இப்போது இலங்கையில் எங்கு இருக்கு? 
யாரேனும் அறியத் தாருங்கள்!

திருச்செந்தூரில் நடித்துக் காட்டப்படும் சூர சங்காரம் மிகப் பிரபலமானதால், பலருக்கும் திருச்செந்தூரில் தான் போர் நடைபெற்றது என்ற நினைப்பு வந்து விடுகிறது!

திருச்செந்தூர் மட்டுமல்லாது, பல முருகன் ஆலயங்களிலும், ஏனைய ஆறுபடை வீடுகளிலும் கூடச் சூர சங்காரம் நடித்துக் காட்டப்படுகிறது! ஆனால் சூர சங்காரம் நடந்தது ஈழத்தில் தான்!

இது ஈழத்துக்கும், முருகனுக்குமே உள்ள தொடர்பு....



இன்றைய சட்டிப் பாடல்...
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்!
சீர்காழியும், TMS-உம் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல், உச்ச குரலில், உணர்ச்சி ஒருமித்துப் பாடுவது!

படம்: தெய்வம்
குரல்: சீர்காழி, TMS
வரிகள்: கண்ணதாசன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்



திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்!


அசுரரை வென்ற இடம் - அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் - வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்! அன்பர் திருநாள் காணுமிடம்!


கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா?


மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு!


பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய்............முருகா!



இந்தச் சட்டி விரதம் துதிப்போர்க்கு....
வல்வினை போம்! துன்பம் போம்!

நம்பியவர் வந்தால்,
நெஞ்சுருகி நின்றால்
...

மனம் கனிந்தருள் வேல் முருகா!


வெற்றி வடிவேலனே! சக்தி உமை பாலனே!
வீரம் விளைத்த குகனே!
உற்றதொரு பகை வெல்ல தோளிலும் நெஞ்சிலும்
ஓங்கிடும் வலிமை அருள்வாய்! அருள்வாய்!

மனம் கனிந்தருள் வேல் முருகா! புள்ளி
மயிலேறும் மால் மருகா! முருகா!
(மனம்)

குறத்தி மணாளா! குணசீலா! ஞான
குருபரனே! செந்தில் வடிவேலா!
செந்தமிழ்த் தேவா! சந்ததம் நீ காவாய்!

வேதனே - ஞான போதனே - சுவாமி நாதனே - எமது வேதனை தீர
(மனம்)

தோகை வள்ளி தனை - நாடி வேங்கை மர - மாகி நின்றாயடா!
வேலெடுத்து விளை - யாடி மாமலையைத் - தூளடித்த முருகா
சூரபத்மன் இரு - கூறு பட்டொழிய - போர் முடித்த குமரா!

படம்: வீரபாண்டிய கட்டபொம்மன்
இசை: ஜி. ராமனாதன் (எ) ஜிரா
குரல்: எஸ். வரலட்சுமி
வரி: கவிஞர். கு.மா.பாலசுப்பிரமணியம்

Wednesday, November 06, 2013

மலைகளில் சிறந்த மலை மருதமலை!


முத்துத் திருப்புகழைச் செப்பிவிட்ட அருணகிரி 
முருகனைக் கண்ட இடம் அண்ணாமலை! திருவண்ணாமலை!
நித்தம் தவம் கிடந்து பக்திப் பெருக்கோடு தேவன் 
முருகனைக் கண்ட இடம் மருதமலை!
(நித்தம்)

மலைகளில் சிறந்த மலை மருதமலை! சிவன்
மகன் வந்து விளையாடும் அழகு மலை!
ஆகா இதற்கு மிஞ்சி மலையும் இல்லை! பிள்ளை
அவனுக்கு மிஞ்சி இன்னும் பிறக்கவில்லை!
(மலைகளில்)

அஞ்சிலே பண்டாரம் ஆனவர் இல்லை! பெற்ற
அப்பனுக்கே பாடம் சொன்ன மகனும் இல்லை!
பிஞ்சிலே பழுத்தாலும் துவர்ப்பும் இல்லை! இனி
பேச்சு எதற்கு அவன் போல் கடவுள் இல்லை!
(மலைகளில்)

தேவைக்கு மேல் உள்ளதெல்லாம் தெய்வத்துக்கே என்று
திருப்பணி செய்து வரும் தேவனுக்கு - இந்தத் தேவனுக்கு - குமார தேவனுக்கு
மருதமலை அளவு பொருள் வரணும்!
வளமும் நலமும் இவன் பெறணும்!
பொங்கும் வளமும் பல நலமும் இவன் பெறணும்!

படம்: திருவருள்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
வரி: கண்ணதாசன்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்

பொங்கும் வளமும் பல நலமும் அனைவரும் பெற மருதமலையான் துணை!

Tuesday, November 05, 2013

பழனி என்னும் ஊரிலே...

நண்பர் ஒருவரின் மடிக்கணினியில் இருந்து நிறைய பாடல்களை என்னுடைய பென் டிரைவிற்குச் சில வாரங்களுக்கு முன் மாற்றிக்கொண்டு வந்தேன்.
நேற்று இந்தப் பாடலைக் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. கையில் இருந்த வேலையை அப்படியே வைத்துவிட்டு முழுதும் கேட்டபிறகு வேலையைத் தொடர்ந்தேன்.
சூலமங்கலம் சகோதரிகளின் குரலில் ஒரு அருமையான மெலடி.

பழனி என்னும் ஊரிலே
பழனி என்ற பேரிலே
பவனி வந்தான் தேரிலே
பலனும் தந்தான் நேரிலே - முருகன் 
பலனும் தந்தான் நேரிலே

பழமுதிரும் சோலையிலே
பால்காவடி ஆடி வர

தணிகைமலைத் தென்றலிலே
பன்னீர்க் காவடி ஆடிவர

சாமிமலைக் கோயிலிலே
சக்கரைக் காவடி ஆடிவர

செந்தூரின் வாசலிலே
சந்தனக் காவடி ஆடிவர

குமரன் 
பழனி என்னும் ஊரிலே
பழனி என்ற பேரிலே

பரங்குன்றில் மலையோரம்
சேவற்கொடி ஆடிவர

குன்றக்குடியில் எந்நாளும்
வண்ணமயிலும் ஆடிவர

மயிலத்தின் மலைமேலே
மணியோசை முழங்கிவர

விராலிமலை மேலிருந்து
வீரவேலும் வெற்றிபெற

கந்தன் 
பழனி என்னும் ஊரிலே
பழனி என்ற பேரிலே
பவனி வந்தான் தேரிலே
பலனும் தந்தான் நேரிலே - முருகன் 
பலனும் தந்தான் நேரிலே

அறுபடை வீடுகளும் ஒரே பாடலில் வருகின்றன. மேலும் குன்றக்குடி, மயிலம், விராலிமலைத் தலங்களும்.

பாடல் குறித்து மேலதிகத் தகவல்கள் நான் தேடியவரை இணையத்தில் கிடைக்கவில்லை. யாரேனும் தெரிந்தவர்கள் பகிர்ந்துகொண்டால் தன்யனாவேன்.



Monday, October 28, 2013

நடிகர் நாகையா பாடும்: திருமுருகா ஒருதரம்..

நடிகர் நாகையா - நம்ம எல்லாருக்குமே தெரியும்!
சென்ற காலத்து நல்ல குணச்சித்திர நடிகர்...

கண்ணன் வந்தான்.. அங்கே கண்ணன் வந்தான்
ஏழைக் கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
-ன்னு உருக்கமாகப் பாடும் காட்சியில், அவர் நடிப்பைத் தான் பாத்துருக்கோமே?

*கண்ணன் பாட்டில் அவர் நடிச்சாரு; பாடவில்லை!
*கந்தன் பாட்டில் நடிக்கிறாரு; அவரே பாடவும் பாடுறாரு!

வியப்பா இருக்கா?
எதிர்பாராதது -ன்னு ஒரு படம்; பாட்டும் எதிர்பாராதது தான்:)

சிவாஜி-பத்மினி காதல்!
சிவாஜி வெளிநாட்டுப் படிப்புக்குச் சென்றிருக்கும் வேளையிலே... ஏழை வீட்டுப் பத்மினிக்குத் திருமணம் நடந்து விடுகிறது:(

மணமகன் யாரு? = சிவாஜியின் அப்பா!
என்ன.............. எதிர்பாராதது தானே?

(இன்றும் சினிமாவில், இரு மனம் ஒத்த காதலர்கள்..
ஆனா, தகப்பன் என்னைக்கோ பண்ண தப்பால், "அண்ணா-தங்கை" முறை-ன்னு பின்னாடி தெரிய வருமாம்;
பிரிஞ்சிடணும் = ஹிந்து தர்ம சாஸ்திரம்!
அடேய், "தர்மத்தை", ஆட்டின அப்பனுக்குச் சொல்லு, மனங் குடுத்த காதலர்க்கு அல்ல)

காதலி பத்மினியா? = "அம்மா" பத்மினியா?
சிவாஜியால் மறக்க முடியலையே! என்ன தான் பண்ணுவாரு?

கற்பனையான வாழ்வு; கற்பனையான காதல்!
கற்பனை வாழ்வினில், கதி இனி ஏது?????
= அடிப்பதும் அணைப்பதும், உன் கை தான் ஐயா!



திருமுருகா என்று
ஒருதரம் சொன்னால்
உருகுது நெஞ்சம்
பெருகுது கண்ணீர்

சிறுமதியால் உள்ளம்
இருண்டிடும் வேளையில்
அருளொளி வீசும்
ஆண்டவன் நீயே
(திருமுருகா என்று..)

அப்பனும் பிள்ளையும்,  நீதான் ஐயா
அடிப்பதும் அணைப்பதும், உன் கை தான் ஐயா
கற்பனை வாழ்வினில், கதி இனி ஏது?
கருணா நிதியே கதிர் வடிவேலா
(திருமுருகா என்று..)

திருமுருகா, திருமுருகா, திருமுருகா



படம்: எதிர்பாராதது
வரி: ?
குரல்: சித்தூர் V. நாகையா
இசை: CN பாண்டுரங்கன்

(இதே படத்தில், சிற்பி செதுக்காத பொற்சிலையே, மிக அழகான Melody பாடல், கேட்டுப் பாருங்கள்..)

தியாகய்யா, பக்த ராமதாசு -ன்னு ஆரம்ப காலத்தில் மிக அதிக சம்பளம் வாங்கிய நடிகர் = நாகையா
வயதான பின்..
நாகையா நடிக்காத பெரும் படங்களே இல்லை எனலாம்! அதுவும் நடிகர் திலகம் சிவாஜியோடு!

*சம்பூர்ண ராமாயணத்தில் தசரதன் ஆகட்டும் - சிவாஜி பரதன்
*தில்லானா மோகனாம்பாளில் குரு - சிவாஜி சிக்கல் சண்முகசுந்தரம்

தெனாலி ராமன், பாவ மன்னிப்பு,
ஆலய மணி, பச்சை விளக்கு...

தியாகய்யர், பக்த ராமதாசு போன்ற படங்களில் தானே இசையமைத்து, பாடியும் இருக்காரு நாகையா!

Legends எனப்படும் விழுமம்!
அவர்களை அறிந்து கொள்ள, நமக்கு வயாசாகிப் போகத் தேவையில்லை; அதுவும் Internet யுகத்தில்!
வள்ளுவரைப் படித்தால் வயசாகி விட்டதா என்ன?

இசைஞானி இளையராஜா, ரஹ்மான் புகழ் பாடும் வேளையிலே...
தமிழ்ச் சினிமாவின் இசை மேதைகள் = ஜி.ராமநாதன், கேவி மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் என்று விழுமங்களையும் அறிந்து கொள்வோம்!

Legends are Legends!

Friday, October 25, 2013

பார்த்திபன் கனவு: வண்ண மயிலே, வண்ண மயிலே!

பார்த்திபன் கனவு -ன்னு ஒரு நாவல்!
அமரர் கல்கி எழுதி, பின்பு திரைப்படமா எடுத்தாங்க;
"தமிழ் - தெலுங்கு - சிங்களம்" -ன்னு மும் மொழிகளில் வந்த முதல் படம் (1960);
மாமல்லபுரம் சிற்பங்கள் அமைக்கும் காட்சியெல்லாம் காணலாம்!
Ponniyin Selvan Fame ஓவியர். மணியம் தான், படத்தின் கலை இயக்குநரும் கூட!

படத்தில் அப்பர் பெருமான் கூட வருவாரு!
பிள்ளைக் கறி தந்த பரஞ்சோதி/ சிறுத்தொண்டர், தான் அவ்வாறு செய்தது "தவறு" -ன்னு ஒப்புக் கொள்ளும் படமும் கூட:)


சிவகாமியின் சபதம் -நாவலில் வரும் கதாபாத்திரங்கள் தான்; ஆனா கதைக்களம் வேற!
கரிகால் பெருவளத்தானின் சோழ மரபில் வந்த பார்த்திபன்;

பல்லவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று, "தனிச்சோழம்" காணவேண்டும் என்பதே அந்தப் பார்த்திபனின் கனவு;

ஆனால் போதுமான படைபலம் இல்லை;
பின்னாளில்.. அவன் மகன் விக்கிரமன், பல்லவனின் மகளையே காதலித்துக் கைப்பிடித்து, அந்தக் கனவையும் நனவாக்குகிறான்!

சோழன் கனவு நனவாகப், பல்லவனே (நரசிம்ம வர்ம பல்லவனே) பலப் பல உதவிகள் செய்கிறான்:)
இது போன்ற "வரலாற்றுத் திரிபு"களுக்கு, கல்கியைப் பிலுபிலு என்று பின்னாளில் பிடிச்சிக்கிட்டாங்க!:)


ஜெமினி, கணேசன் வைஜயந்திமாலா,
ரங்காராவ், வீரப்பா, பாலைய்யா, அசோகன்,
(ஆரம்ப கால) சரோஜா தேவி, ராகினி, குமாரி கமலா
-ன்னு ஒரு நட்சத்திரப் பட்டாளமே உண்டு!

பாடகர்களும் = நட்சத்திரப் பாடகர்களே;
பி.சுசீலா, பி.லீலா இவர்களுடன் சேர்ந்து கொண்டது = பிரபல மேடைப் பாடகி, ML வசந்தகுமாரி!

ஆயனாரின் மகள் சிவகாமியாக = குமாரி கமலா ஆட..
அதற்கு MLV பாடும் பாட்டே = இன்றைய பாடல்!

வள்ளியின் முருகக் கனவை, 
ஆயன் மகள் ஆடிக் காட்டுகிறார்! பாருங்கள்!



அந்தி மயங்குதடி, ஆசை பெருகுதடி
கந்தன் வரக் காணேனே
வண்ண மயிலே, வண்ண மயிலே

ஏக்கத்தால் படிந்துவிட்ட தூக்கமில்லாத் துன்பத்தைக்
கொத்தி எடுத்திடவே, உதடு அவரைத் தேடுதடி
(அந்தி மயங்குதடி
வண்ண மயிலே, வண்ண மயிலே)

தாகத்தால் நாவறண்டால் தண்ணீரால் தணியுமடி
இதயம் வறண்டுவிட்டால் எதைக்கொண்டு தணிப்பதடி?
கள்ளச் சிரிப்பாலே கன்னத்தைக் கிள்ளிவிட்டு
அள்ளி அணைத்திடவே, அவர் வரக் காணேனே
(அந்தி மயங்குதடி
வண்ண மயிலே, வண்ண மயிலே)

குரல்: M.L. வசந்தகுமாரி
வரி: விந்தன்
இசை: வேதா
படம்: பார்த்திபன் கனவு

முருகனின் செவ்வாயில் இட வேண்டிய பதிவு;
ஆனா மருத்துவமனையில் இருந்தேன்;
நேற்றே வீடு வந்து சேர்ந்தேன்; அதான் வெள்ளியில் வருது; தாமதத்துக்கு மன்னிக்க:)
தாகத்தால் நாவறண்டால் தண்ணீரால் தணியுமடி
இதயம் வறண்டுவிட்டால் எதைக்கொண்டு தணிப்பதடி?

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP