Sunday, October 21, 2012

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 9



ஆனை அடியினில் அரும்பாவைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகள் உடனே பல கலசத்துடன்
மனையில் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒரு வழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட!

"இந்தப் பகுதியில் மந்திரதந்திரங்களினால் கேடு உண்டாகாத வண்ணம் காக்க வேண்டும் என்று வேண்டுகிறார் தேவராய சுவாமிகள்.

ஒருவரை அழிக்க நினைத்து அவரைப் போல் மாவினாலும் மரத்தினாலும் பாவை என்னும் சிறு உருவங்களைச் செய்து அவற்றில் மந்திரத்தை உருவேற்றி அவற்றை யானைகள் கட்டப்பட்டிருக்கும் இடத்திலும் புற்றுகள் நிறைந்திருக்கும் இடத்திலும் புதைத்து வைப்பார்கள். யானையின் காலடியில் மிதிபட்டும் புற்றுகளில் இருக்கும் கரையான்களால் உண்ணப்பட்டும் அந்த பதுமைகள் மற்றவர்களால் கண்டெடுக்கப்பட்டு மாற்று மந்திரம் செய்யப்படும் முன்னர் உருக்குலையும்; அப்படி நேர்ந்தால் யாரை அழிக்க நினைத்து அப்பாவைகளைப் புதைத்து வைத்தார்களோ அவர்களின் அழிவு உறுதியாகும் என்பது சூனியம் வைப்பவர்களின் நம்பிக்கை.

அப்படி யானை அடியினில் வைக்கப்பட்ட அரும்பாவைகளும்

ஆனை அடியினில் அரும்பாவைகளும்

காட்டுப்பூனையின் முடி, தலைச்சன் பிள்ளைகளின் எலும்பு, நகம், தலைமுடி, நீண்ட முடியுடன் கூடிய மண்டை போன்றவற்றுடன் பாவைகளும் பல கலசங்களும் மந்திர உருவேற்றப்பட்டு ஒருவரின் அழிவை விரும்பி அவரது வீட்டில் புதைத்து வைக்கப்படும். அப்படி வீட்டில் புதைத்து வைக்கப்பட்ட வஞ்சனையும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகள் உடனே பல கலசத்துடன்
மனையில் புதைத்த வஞ்சனை தனையும்

ஒட்டியம் என்பது ஒருவகை சூனிய மந்திரச் சாத்திரம். அந்த நூலில் கூறப்பட்ட வகையில் செய்யப்பட்ட மந்திர தந்திரங்கள் ஒட்டியச் செருக்குகள். அந்த நூலில் கூறப்பட்ட வகையில் செய்யப்பட்ட பாவைகள் ஒட்டியப் பாவைகள். அந்த ஒட்டியச் செருக்கும், ஒட்டியப் பாவையும், கூடவே புதைக்கப்பட்ட காசும் பணமும், பலி கொடுக்கப்பட்ட விலங்குகளின் குருதியில் கலந்த சோறும், அந்த ஒட்டியச் சாத்திரம் கூறும் மந்திர மையும், மனம் கலங்கித் தனி வழியே போகும்படி செய்யும் மந்திரமும்

ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒரு வழிப் போக்கும்

உன் அடிமையான என்னைக் கண்டவுடனே நடுங்கி அழிந்து போகும் படி நீ அருள் செய்ய வேண்டும்!

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட!

அடுத்த பகுதி பாடு"

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட!
காலதூதாள் எனைக் கண்டால் கலங்கிட!
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட!
வாய் விட்டலறி மதி கெட்டு ஓட!
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு!
கட்டி உருட்டு கால்கை முறிய!
கட்டு கட்டு கதறிடக் கட்டு!
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட!
செக்கு செக்கு செதில் செதில் ஆக!
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு!
குத்து குத்து கூர்வடிவேலால்!
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது ஆக!
விடுவிடு வேலை வெருண்டது ஓட!

"எதிரிகளும் கூடவே இருந்து குழி பறிக்கும் வஞ்சகர்களும் உயிரைப் பறிக்க வரும் எம தூதர்களும் அழிந்து போகும்படி அருள் செய்ய வேண்டுகிறார்.

எதிரிகளும் வஞ்சகர்களும் மனம் திருந்தி வந்து என்னை வணங்கிட வேண்டும்!

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட!

காலனின் தூதர்களான எம தூதர்கள் என்னைக் கண்டால் கலங்க வேண்டும்!

காலதூதாள் எனைக் கண்டால் கலங்கிட!

அவர்கள் என்னைக் கண்டால் அஞ்சி நடுங்க வேண்டும்! பயந்து புரண்டு ஓட வேண்டும்! வாய் விட்டு அலறி புத்தி கெட்டு ஓட வேண்டும்!

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட!
வாய் விட்டு அலறி மதி கெட்டு ஓட!

மனம் திருந்தாத பகைவர்களையும் வஞ்சகரகளையும் இந்த காலதூதர்கள் கொண்டு வரும் பாசக் கயிற்றால் படியினில் முட்டும்படி கட்ட வேண்டும்! அவர்கள் உடல் உறுப்புகள் எல்லாம் கதறிடக் கட்ட வேண்டும்! அவர்கள் கால் கைகள் எல்லாம் முறியும் படி கட்டி உருட்ட வேண்டும்! அவர்கள் விழிகள் பிதுங்கும்படி முட்ட வேண்டும்! அவர்கள் செதில் செதிலாக உதிர்ந்து போகும் படி அவர்களை நீ செகுக்க வேண்டும்!

படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு!
கட்டி உருட்டு கால்கை முறிய!
கட்டு கட்டு கதறிடக் கட்டு!
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட!
செக்கு செக்கு செதில் செதில் ஆக!

அழகனே! சூரனின் பகைவனான அழகனே! கூர்மையான உன் அழகான வேலால் அவர்களைக் குத்த வேண்டும்! பகலவனின் எரிக்கும் தணல் போல நீ அவர்களைப் பற்றி எரிக்க வேண்டும்! அவர்கள் வெருண்டு ஓடும் படி உன் வேலை விட வேண்டும்!

சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு!
குத்து குத்து கூர்வடிவேலால்!
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது ஆக!
விடுவிடு வேலை வெருண்டது ஓட!

அடுத்த பகுதியை பாடு நண்பா!"

(தொடர்ந்து பேசுவார்கள்)

7 comments:

திண்டுக்கல் தனபாலன் October 21, 2012 10:15 PM  

குழந்தைகளுக்கு புரியும் படி சொல்ல... விளக்கங்களுக்கு மிக்க நன்றி...

தொடர்கிறேன்...

Perungulam Ramakrishnan Josiyar October 21, 2012 10:44 PM  

தங்கள் தளத்தைப் பார்த்தோம் மிகவும் அருமையாக உள்ளது. முருகனை அடைவதற்கு கந்தர் சஷ்டி கவசம் எப்படி ஒரு வழியோ அதே போன்றதொரு வழி உங்கள் தளம்.

பார்த்தோம், வியந்தோம், மகிழ்ந்தோம், ஆசீர்வாதங்கள்.

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.
http://kuppuastro.blogspot.in/

Geetha Sambasivam October 23, 2012 10:10 AM  

அருமையான, எளிமையான விளக்கங்களுக்கு நன்றி.

Geetha Sambasivam October 23, 2012 10:10 AM  

தொடர

குமரன் (Kumaran) October 23, 2012 10:29 AM  

நன்றி தனபாலன்.

குமரன் (Kumaran) October 23, 2012 10:30 AM  

ஆசிகளுக்கு நன்றி ஜோஸ்யர் ஐயா.

குமரன் (Kumaran) October 23, 2012 10:30 AM  

நன்றி கீதாம்மா.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP