Thursday, August 09, 2012

அனைத்தும் நீ!

ஆடிக்கிருத்திகை சிறப்புப் பதிவு.


சுப்பு தாத்தா தன் பேரனுடன் பாடியதை இங்கே கேட்கலாம்! மிக்க நன்றி, தாத்தா மற்றும் Sanchu! :)


ஆடியிலே காவடிகள் எடுத்து வந்தோம் முருகய்யா!
ஆடியாடி உன்னை நாடி ஓடி வந்தோம் முருகய்யா!

ஆடிவெள்ளிக் கிழமையிலே
ஆடும் மனம் அடங்கிடவே!
ஆடிவரும் காவடியில்
ஆறுமுகம் கனிந்திடவே!

(ஆடியிலே)

அரசனும் நீயடா!
ஆண்டியும் நீயடா!
ஆறுதலைத் தந்தருளும்
அழகுமுகம் நீயடா!

கந்தனும் நீயடா!
கடம்பனும் நீயடா!
கனியிதழ் மலர்ந்திழுக்கும்
காந்தனும் நீயடா!

(ஆடியிலே)

கண்மணி நீயடா!
கருணையின் வடிவடா!
கார்த்திகைப் பெண்டிரின்
கவினுறும் சேயடா!

முருகும் நீயடா!
முத்தமிழ் நீயடா!
மூவுல கேற்றிடும்
முதல்வனும் நீயடா!

(ஆடியிலே)


--கவிநயா 

படத்துக்கு நன்றி: http://www.trinethram-divine.com/2012/05/kaavadiyaam-kaavadi-kandhavelan-kaavadi.html

6 comments:

Lalitha Mittal August 10, 2012 1:59 AM  

அப்பனுக்கு ஏரகத்தில்ஆசான் நீ!

அலைவாயில்அவனுக்குநீ பூசாரி!

அழகிக் குறவள்ளியுடன் கிழமுனி;

அவ்வையுடன் குறும்பு செய்த சிறுவனும் நீ!

கனியால் கனிந்து பழநியமர்ந்த ஞானக்கனி;

காவடியால் மனங்குளிரும் சுப்பிரமணி!

எனக்கென்றும் தாயும் நீ !தந்தையும் நீ!

தனயனும் நீ ! அனைத்தும்நீ!அனைத்தும் நீ!

திண்டுக்கல் தனபாலன் August 10, 2012 2:50 AM  

சிறப்பான பகிர்வு...

வாழ்த்துக்கள்... நன்றி…

Kavinaya August 10, 2012 8:56 AM  

அழகான கவிதைக்கு நன்றி லலிதாம்மா!

வருகைக்கு நன்றி திரு.தனபாலன்!

VSK August 13, 2012 10:55 AM  

பாடல் வரிகள் சொல்லும் பொருள் மிக இனிமை! பாடியதை இன்னும் கேட்கவில்லை!

முருகுவும் என வருவது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. முருகும் என்றே இருந்திருக்கலாமோ என எண்ணுகிறேன்.
அதேபோல, 'பெண்களின்' என்பதை 'பெண்டிரின்' எனச் சொன்னால் சந்தமாக இருக்கிறது.
மலர்ந்திழுக்கும் சற்று நீளமாக இருக்கிறது. 'கனியிதழ்க் கவர்ந்திடும்' ??

சற்று அ.பி. தனம் என்றால் மன்னிக்கவும்!

முருகனருள் முன்னிற்கும்!

Kavinaya August 13, 2012 9:56 PM  

வாசித்தமைக்கு நன்றி அண்ணா. நான் நினைத்திருந்த மெட்டிற்கு 'கனியிதழ் கவர்ந்திழுக்கும்' என்பது சரியாக இருந்தது. மற்ற இரண்டு இடங்களிலும் நீங்கள் சொன்னபடியே மாற்றி விட்டேன் :) நன்றி அண்ணா.

VSK August 14, 2012 12:49 PM  

சரிதான்! 'மலர்ந்திழுக்கும்' என்பதைக் காட்டிலும் 'கவர்ந்திழுக்கும்' நன்றாக இருக்கிறது.:) முமு.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP