Sunday, August 19, 2012

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 5

"பன்னிரு திருக்கண்களும் அழகுடன் விளங்க பன்னிரு திருக்கைகளிலும் பன்னிரு படைக்கலன்களை ஏந்தி விரைந்து என்னை காக்க வரும் என்னை ஆளும் இளையவன். ஆகா. என்ன ஒரு அழகான திருத்தோற்றம்?!


பன்னிரு திருக்கரங்களிலும் ஏந்தியிருக்கும் ஆயுதங்களைப் பற்றி சுவாமிகள் ஏதேனும் சொல்லியிருக்கிறாரா நண்பா?"

"ஆமாம். அறுபடைவீட்டுக் கவசங்களில் ஐந்தாவது சஷ்டி கவசமாகிய குன்று தோறாடும் குமரனைப் போற்றும் கவசத்தில் சுவாமிகள் இந்த ஆயுதங்களைப் பற்றி சொல்லியிருக்கிறார்.

வேலாயுதம், சூலாயுதம், சங்கு, சக்கராயுதம், வில், அம்பு, வாள், மழு, குடை, தண்டாயுதம், சந்திராயுதம், வல்லாயுதம் என்னும் பன்னிரு ஆயுதங்களையும் முருகன் தனது திருக்கரங்களில் ஏந்தியிருப்பதாகச் சொல்கிறார்"

"அருமை. அருமை"

"அடுத்த பகுதியைப் பாடு நண்பா"

ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளியையும்

நிலை பெற்று என் முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் தீயும் தனியொளி ஒவ்வும்
குண்டலியாம் சிவ குகன் தினம் வருக"

இந்த பகுதி முழுக்க முழுக்க மந்திரங்களைப் பற்றி பேசும் பகுதி.

ஐம், க்லீம், சௌம் என்னும் மந்திர ஒலிகளைப் பற்றியும் ஓம்காரத்தைப் பற்றியும் சுவாமிகள் கூறுகிறார்.

ஐம், க்லீம், சௌம் என்பவை பீஜாக்ஷரங்கள் என்று வடமொழியில் கூறுவார்கள். மந்திரங்களின் வித்தாக விளங்கும் ஒலிகள். இம்மூன்றிலும் ஐம் என்பதை உயிர் என்றே குறிக்கும் வழக்கமும் இருக்கிறது.

ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்.

ஐம் க்லீம் சௌம் என்று முறையே சொல்லும் மந்திரமும்.

உய் ஒளி சௌவும் உயிரையும் கிலியும்.

உய்வதற்கு வழி தரும் ஒளி மிகுந்த சௌம் ஐம் க்லீம் என்ற வகையில் சொல்லும் மந்திரமும்.

கிலியும் சௌவும் கிளர் ஒளி ஐயும்.

ஒளி கூடி விளங்கும் க்லீம் சௌம் ஐம் என்ற வகையில் சொல்லும் மந்திரமும்.

நிலை பெற்று என் முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் தீயும்.

தினமும் என் முன்னே ஒளியுடன் திகழும் ஆறுமுகங்கள் கொண்ட தீயைப் போன்றவனும்.

தனி ஒளி ஒவ்வும்.

தனித்து ஒளிவீசும் ஓம்காரமும்.

குண்டலியாம் சிவ குகன் தினம் வருக.

மூலாதாரம் என்னும் சக்கரத்தில் வீற்றிருக்கும் குண்டலினி சக்தியின் வடிவமாகிய சிவகுமாரன் குகன் தினந்தோறும் வருக"

"மடமடவென்று சொல்லிக் கொண்டே சென்றுவிட்டாயே நண்பா. விரிவான பொருளையும் சொல்வாய்"

"மந்திரங்களின் பொருளை நான் அறியேன் நண்பா. அவற்றை குருவிடம் கேட்டு உணர்ந்து ஓதுவதே முன்னோர் வகுத்த முறை. இவை மந்திரங்கள் என்று மட்டும் உணர்ந்து கொண்டு சஷ்டி கவசம் ஓதும் போது இவ்வரிகளைச் சொல்லி வந்தால் போதும். அவற்றின் பயன் கிடைக்கும். மனக்குகையில் வாழும் குறிஞ்சிக்கிழவன் குகனும் முன் வந்து காப்பான்"

(தொடர்ந்து பேசுவார்கள்)

8 comments:

VSK August 19, 2012 9:23 PM  

சரியாகவே இங்கு சொல்லியிருப்பதுபோல, இந்த மந்திரங்களின் பொருளை குருமுகமாக அறிந்துகொண்டு ஓதுவதே முறை. பொருளறியாவிடினும், குருமுகமாக உபதேசம் பெற்றபின் உச்சரித்தால் பலன் அதிகம்.

ஒரு சில கருத்துகளை மட்டும் இங்கே வைக்கிறேன்.

"ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளியையும்
நிலை பெற்று என் முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் தீயும் தனியொளி ஒவ்வும்
குண்டலியாம் சிவ குகன் தினம் வருக"

சௌம் எனச் சொல்வதைக் காட்டிலும் சௌ: [சௌஹு] எனச் சொல்வதே சிறப்பு. அதைத்தான் குறிப்பாக 'அடைவுடன் சௌவும்' என ஸ்வாமிகள் குறிப்பிடுகிறார்.

ஐம் என்பது உயிர் நிலை மந்திரம் எனச் சொன்னது சரியே. அதே சமயம்,....

'உய்யொளி சௌவும் உயர் ஐயுங் கிலியும்' எனவும்,
'கிலியுஞ் சௌவும் கிளரொளி ஐயும்' எனும் வரியை 'க்லீம் சௌ: இவற்றுடன் கிளர் ஒளி எனும் 'உயிர்' ஆகிய ஐம் எனவும் பொருள் கொள்வது சிறப்பு.

ஷண்முகன்றீயும் தனியொளி யொவ்வும்
குண்டலியாஞ் சிவ குகன் றினம் வருக.

சிவனைக் குறிக்கும் 'ஓம்', குகனைக் குறிக்கும் 'ஸ்ரீம்' என இரண்டும் இதில் குறிப்பதாகவும் பெரியோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ஓம் ஸ்ரீம் ஐம் க்லீம் சௌ: சௌ: ஐம் க்லீம் க்லீம் சௌ: ஐம்

குருமுகமாகக் கேட்டு, குண்டலியில் சிவகுகனை நினைந்து ஓதவேண்டுமெனப் பெரியோர் அருளுவர்.

ஏதேனும் தவறிருப்பின் அது என்னையே சாரும்.

முருகனருள் முன்னிற்கும்.

திண்டுக்கல் தனபாலன் August 20, 2012 2:45 AM  

அருமையான விளக்கங்கள்...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

Kavinaya August 20, 2012 4:36 PM  

எந்த அளவு புரிய வேண்டுமோ அதனை அவனே அருள்வான். எளிய விளக்கங்களுக்கு நன்றி, குமரன், மற்றும் அண்ணா.

குமரன் (Kumaran) September 02, 2012 8:08 AM  

நன்றி எஸ்.கே ஐயா.

நன்றி தனபாலன் & கவிநயா அக்கா.

Geetha Sambasivam October 23, 2012 8:18 AM  

மந்திர விளக்கம் அருமை.

குமரன் (Kumaran) October 23, 2012 10:32 AM  

நன்றி கீதாம்மா.

Unknown October 18, 2020 2:22 AM  

எளிமையாக புரிந்தது நன்றி

Anonymous July 02, 2022 8:43 AM  

Thank you

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP