Tuesday, July 17, 2012

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - முன்னுரை



"அழகெல்லாம் முருகனே
அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே
தெய்வமும் முருகனே"

"அருமையாக பாடுகிறாய் இராகவா. அடடா! அடடா!"

"எல்லாம் முருகனருள் சங்கரா. யாமோதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்தது"

"உண்மை தான் நண்பா. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று தானே அருளாளர்களும் சொல்லியிருக்கிறார்கள்.

முருகன் புகழ் பாடுவதில் உனக்கு இருக்கும் அன்பையும் ஆர்வத்தையும் பார்த்தால் எனக்கு ஆழ்வார் பாசுரம் தான் நினைவிற்கு வருகிறது.

அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா

நீ நன்றாக ஞானத்தமிழ் விளக்குகளை ஏற்றுகிறாய்"

"இப்படிப் புகழ்வதெல்லாம் மிகை சங்கரா. நீ சொல்வதைப் போல் செய்த பேரருளாளர்கள் நக்கீரர் தொடங்கி வாரியார் சுவாமிகள் வரை நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் புகழ் பாடிக் கிடப்பதே அடியேன் பணி. வேலை வணங்குவதே வேலை"

"நன்கு சொன்னாய். அந்த அடியார்கள் செய்த திருப்பணிகளைப் பற்றியும் கொஞ்சம் சொல்வாய்"

"நண்பா. கரும்பு தின்னக் கூலியா? சொல்கிறேன் கேள்.

உலகம் உவப்ப பலர் புகழ உதித்த முருகனின் புகழைப் போற்றிப் பாடியவர்கள் பலர்.

திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை என்னும் தலங்களில் முருகப்பெருமான் குடியிருப்பதை பலருக்கும் அறிவித்து முருகனருளைப் பெறுவதற்கு அனைவரையும் ஆற்றுப்படுத்தும் திருநூலாக திருமுருகாற்றுப்படையை இயற்றினார் மதுரை கணக்காயனார் திருமகனார் நக்கீரனார். அதுவே தமிழின் முதல் துதிநூல்.

ஓசைமுனி அருணகிரிநாதப் பெருமானின் திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம் போன்ற பனுவல்களைப் பற்றி நீயும் நன்கறிவாய். அவற்றில் சில பாடல்களுக்கு பொருளுரைகளும் எழுதியிருக்கிறாய்.

நக்கீரனாரைப் போல் ஆறு படைவீடுகளின் மேல் ஓசைமுனியின் பனுவல்களை ஒத்த பொருளாழத்துடன் ஆறுபடை சஷ்டி கவசங்களைப் பாடியவர் தேவராய சுவாமிகள். அவரைப் பற்றி அண்மையில் அடியேன் எழுதினேன். படித்திருப்பாய் என்று எண்ணுகிறேன்"

"படித்தேன் இராகவா. கந்தர் சஷ்டி கவசத்தின் சில வரிகளுக்கு நீ பொருள் சொல்லியிருப்பதைப் படித்துவிட்டு கவிநயா அக்காவும் முழு நூலுக்கும் பொருள் சொல்லும்படி கேட்டிருந்தார்களே.

நீ ஆறுபடைவீட்டு சஷ்டி கவசங்களுக்கும் பொருள் சொல்லப்போகிறாயா?"

"இல்லை சங்கரா. ஆறு கவசங்களுக்கும் பொருள் சொல்ல இப்போது நேரம் போதாது. புகழ் பெற்று விளங்கும் திருச்செந்தூர் சஷ்டி கவசத்தை மட்டும் இப்போது எடுத்துக் கொள்ளலாம்

எளிமையான நூல் தானே அது. சூலமங்கலம் சகோதரிகள் பாடி இந்நூல் புகழ் பெற்று பலரது நாவிலும் மிகச் சரளமாகப் பயிலும் நூல். அதனால் பொருள் உரை தேவையா என்று தான் தயங்குகிறேன்"

"சொல்லும் பொருளும் எளிமையாக இருக்கலாம் இராகவா. ஆனால் அச்சொற்களின் கூட்டினால் உண்டாகும் பொருளமைதியையும் அதில் பயின்று வரும் மறைப்பொருளையும் விளக்கி எழுதினால் பயில்பவர் பொருளுடன் பயின்று இன்புறுவார்கள் இல்லையா? அதனால் பொருள் சொல்வதில் தயக்கம் வேண்டாம்"

"நீ சொல்வதும் சரி தான் நண்பா. முருகனருளை முன்னிட்டு எழுதலாம். எழுதுவதற்கு முன் நாம் இருவரும் ஒவ்வொரு வரியாக ஒவ்வொரு சொல்லாக எடுத்துப் பொருள் உரையாடலாம்"

"ஆகட்டும் இராகவா. வேலும் மயிலும் துணை!"

(இன்னும் பேசுவார்கள்)

5 comments:

பார்வதி இராமச்சந்திரன். July 18, 2012 1:32 AM  

மிக நல்ல, உயர்ந்த பணி. தொடரும் பதிவுகளுக்காக மிக ஆவலோடு காத்திருக்கிறேன். தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

Kavinaya July 18, 2012 8:59 AM  

வேண்டுகோளுக்குச் செவி சாய்த்த குமரனுக்கு நன்றிகள் பல! அருமையான உரையாடலுடன் தொடங்கி இருக்கிறீர்கள். சங்கரனும், இராகவனும் பேசுவது நன்று! :)

வேலும் மயிலும் துணை.

குமரன் (Kumaran) July 18, 2012 10:05 PM  

நன்றி பார்வதியம்மா.

குமரன் (Kumaran) July 18, 2012 10:07 PM  

நன்றி கவிநயா அக்கா.

அன்று: வியாசரின் அருளால் கண்ணனும் பார்த்தனும் பேசியதைக் கேட்டுச் சொல்ல சஞ்சயனால் இயன்றது
இன்று: கவிநயா அக்காவின் தூண்டுதலால் இராகவனும் சங்கரநாராயணனும் பேசுவதைக் கேட்டுச் சொல்லும் வாய்ப்பு அடியேனுக்குக் கிடைத்தது.

:-)

Geetha Sambasivam July 21, 2012 8:28 PM  

அருமையான தொண்டு. வாழ்த்துகள்.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP