Friday, July 27, 2012

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 2



"அடுத்து வரும் வெண்பாவைப் பாடு நண்பா"


"அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி"

"எளிமையான குறள் வெண்பா இது. தேவர்களின் துயர் தீர சூரனுடன் போர் புரிந்த குமரன் திருவடிகளை நினைவில் நிறுத்துவாய் நெஞ்சே என்று பொருள்"

"நம்மாழ்வார் திருவாய்மொழியின் முதல் பாசுரம் நினைவிற்கு வருகிறது.

துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே.

துயர் தீர்க்கும் திருவடிகளைத் தொழுவாய் என்று அங்கேயும் மனத்திற்குத் தான் அறிவுரை"

"மனம் ஒரு குரங்கு. ஓரிடத்தில் நில்லாது. அதனால் அதற்கே அறிவுரை சொல்கிறார்கள் அறிவோர்கள்.

அது மட்டுமில்லை. நம் மனமே நாம் கீழ்மையில் இழிவதற்கும் காரணம். அதுவே நாம் மேன்மையுறுவதற்கும் காரணம்"
"மனமே ஒருவனின் நண்பன்; மனமே ஒருவனின் எதிரி - என்று கீதையிலும் வருகிறதே"

"தாமே தமக்கு சுற்றமும் என்று வாதவூராரும் சொல்லுவார்"

"ஆமாம். நெஞ்சுக்கு ஏன் இந்த அறிவுரை என்பது புரிகிறது. சொற்பொருள் கூறு நண்பா"

"அமர என்ற வடசொல்லுக்கு இறப்பில்லாதவர் என்று பொருள். சாவா நிலையைத் தரும் அமுதத்தைப் பருகியதால் வானுலகோருக்கு அமரர் என்று பெயர்"

"சாவா நிலையைப் பெற்றவரைக் குறிக்கும் அமரர் என்ற சொல்லை இப்பொழுதெல்லாம் அண்மையில் இறந்தவரைக் குறிக்க இன்னார் அமரரானார் என்று குறிப்பது முரண்நகை தான்"

"அது இடக்கரடக்கல். அமங்கலத்தை மங்கலமொழியால் சொல்லுவது மூத்தோர் வழக்கம். சுண்ணாம்பு என்று சொல்லாமல் வெண்ணெய் என்று சொல்லுவார்கள். அது போல"

"சரி தான். அடுத்த சொல்லுக்குப் பொருள் கூறு"

"தீராத துன்பம் வந்தால் இறப்பாவது அதனை ஒரு முடிவிற்குக் கொண்டு வரும். ஆனால் சாகாத நிலை பெற்ற அமரர்களுக்கு அதுவும் கிடையாது. சூரனின் குலத்தவரால் தீராத இடர் அடைந்து வந்தார்கள்.

அவர்களின் இடர் தீர குமரன் அமர் செய்தான். அமர், அமரம் என்றால் போர். இச்சொல்லுக்கு சமர், சமரம் என்றும் பாடவேறுபாடு உண்டு"

"குமரன் என்ற பெயர் முருகனுக்கு ஏன் வந்தது நண்பா"

"சிவபெருமானுக்கு இளைய பிள்ளை என்பதாலும் என்றும் இளமை மாறாதவன் என்பதாலும் மன்மதனைப் போன்ற அழகுடையவன் என்பதாலும் முருகனுக்கு குமரன் என்ற திருப்பெயர்"

"சரி தான். மதனனை ஒத்தவன் என்பதால் தான் அவனை மதனவேள் என்று சொல்வது போல் இவனைக் குமரவேள் என்று சொல்கிறார்கள் போல"

"வேட்கையைத் தூண்டுபவன் வேள். இவனும் இவன் அழகால் இவன் மேல் வேட்கையைத் தூண்டுவதால் இவனைச் செவ்வேள், முருகவேள், கந்தவேள், குமரவேள் என்று இவனுடைய திருப்பெயர்களுடன் எல்லாம் வேள் என்பதைச் சேர்த்துச் சொல்வார்கள்"

"இவ்வளவு அழகான இவன் திருவுருவம் முழுவதையும் நெஞ்சே குறி என்று சொல்லாமல் ஏன் அடி குறி என்று சொன்னார்?"

"இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும் அடியவர்களுக்கு திருக்கோவில்களே இறையருளைத் தருவதைப் போல இவன் முழுவதும் அழகியவன் என்றாலும் இவன் திருவடிகளே அடியார்கள் வேண்டுவதை எல்லாம் தருவதால் நெஞ்சே குமரன் அடி குறி என்று சொன்னார்"

"ஆமாம். கைக்குழந்தைக்குத் தாயின் கொங்கைகளைப் போன்றும் மற்றவர்க்கு பசுவின் பால்மடுவைப் போன்றும் இன்னருள் சுரப்பவை திருவடிகளே அன்றோ?"

"பொய்யாமொழிப் புலவரும் திருக்குறளின் முதல் அதிகாரத்தில் திருவடிகளையே மீண்டும் மீண்டும் போற்றுகிறாரே"

"ஆமாம். அந்த திருவடிகளையே நெஞ்சில் நிறுத்தி சஷ்டி கவசமாகிய இந்தப் பனுவலை ஓத வேண்டும்"

(இன்னும் பேசுவார்கள்)

9 comments:

திண்டுக்கல் தனபாலன் July 27, 2012 10:07 PM  

அருமையான உரையாடல்...
மிகவும் விரும்பிப் படித்தேன்.
என்னுடைய சமீபத்திய பதிவும் இதையே சொல்கிறது.

மிக்க நன்றி. தொடர வாழ்த்துக்கள்.

Unknown July 27, 2012 10:39 PM  

அருமையான விளக்கம். நன்றி

குமரன் (Kumaran) July 28, 2012 8:33 AM  

நன்றி திண்டுக்கல் தனபாலன், ஞானம் சேகர்.

kaialavuman July 30, 2012 4:23 AM  

//திருவுருவம் முழுவதையும் நெஞ்சே குறி என்று சொல்லாமல்//

ஆதியும் அந்தமும் இல்லாத பெருமானின் ரூபம் முருகன். அவனை முழுவதும் மனதில் ஒருசேர நினைப்பது கூட இயலாது என்பதால் அடியை மட்டும் நெஞ்சில் குறித்தாலே போதும் என்பதால் இருக்குமோ?

Kavinaya July 30, 2012 12:08 PM  

//"தீராத துன்பம் வந்தால் இறப்பாவது அதனை ஒரு முடிவிற்குக் கொண்டு வரும். ஆனால் சாகாத நிலை பெற்ற அமரர்களுக்கு அதுவும் கிடையாது.//

பா...வம்ல அமரர்கள்? எப்படிப் பார்த்தாலும் அரிதான மனிதப்பிறவிதான் இனிதான பிறவியும் என்று தோன்றுகிறது - அதாவது பற்ற வேண்டியதைப் பற்றிக் கொண்டு விட்டால்!

அழகான விளக்கத்திற்கு நன்றி குமரன்!

குமரன் (Kumaran) July 31, 2012 5:02 PM  

நீங்கள் சொல்வது சரி தான் வெங்கட ஸ்ரீநிவாசன். திருவடிகளின் பெருமையும் அளவிட முடியாதது. அவற்றை மட்டும் தியானிப்பது கூட கடினமான ஒன்று தான்.

குமரன் (Kumaran) July 31, 2012 5:04 PM  

மனித்தப் பிறவியும் வேண்டுவதே! ஏற்கனவே பெரியவங்க சொல்லிட்டாங்களே அக்கா. :-)

நாடி நாடி நரசிங்கா! August 01, 2012 8:48 AM  

"அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி":)

o my god!! i like tooooooo much this line:)

குமரன் (Kumaran) August 01, 2012 8:03 PM  

:-)

நன்றி!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP