Friday, July 27, 2012

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 2"அடுத்து வரும் வெண்பாவைப் பாடு நண்பா"


"அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி"

"எளிமையான குறள் வெண்பா இது. தேவர்களின் துயர் தீர சூரனுடன் போர் புரிந்த குமரன் திருவடிகளை நினைவில் நிறுத்துவாய் நெஞ்சே என்று பொருள்"

"நம்மாழ்வார் திருவாய்மொழியின் முதல் பாசுரம் நினைவிற்கு வருகிறது.

துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே.

துயர் தீர்க்கும் திருவடிகளைத் தொழுவாய் என்று அங்கேயும் மனத்திற்குத் தான் அறிவுரை"

"மனம் ஒரு குரங்கு. ஓரிடத்தில் நில்லாது. அதனால் அதற்கே அறிவுரை சொல்கிறார்கள் அறிவோர்கள்.

அது மட்டுமில்லை. நம் மனமே நாம் கீழ்மையில் இழிவதற்கும் காரணம். அதுவே நாம் மேன்மையுறுவதற்கும் காரணம்"
"மனமே ஒருவனின் நண்பன்; மனமே ஒருவனின் எதிரி - என்று கீதையிலும் வருகிறதே"

"தாமே தமக்கு சுற்றமும் என்று வாதவூராரும் சொல்லுவார்"

"ஆமாம். நெஞ்சுக்கு ஏன் இந்த அறிவுரை என்பது புரிகிறது. சொற்பொருள் கூறு நண்பா"

"அமர என்ற வடசொல்லுக்கு இறப்பில்லாதவர் என்று பொருள். சாவா நிலையைத் தரும் அமுதத்தைப் பருகியதால் வானுலகோருக்கு அமரர் என்று பெயர்"

"சாவா நிலையைப் பெற்றவரைக் குறிக்கும் அமரர் என்ற சொல்லை இப்பொழுதெல்லாம் அண்மையில் இறந்தவரைக் குறிக்க இன்னார் அமரரானார் என்று குறிப்பது முரண்நகை தான்"

"அது இடக்கரடக்கல். அமங்கலத்தை மங்கலமொழியால் சொல்லுவது மூத்தோர் வழக்கம். சுண்ணாம்பு என்று சொல்லாமல் வெண்ணெய் என்று சொல்லுவார்கள். அது போல"

"சரி தான். அடுத்த சொல்லுக்குப் பொருள் கூறு"

"தீராத துன்பம் வந்தால் இறப்பாவது அதனை ஒரு முடிவிற்குக் கொண்டு வரும். ஆனால் சாகாத நிலை பெற்ற அமரர்களுக்கு அதுவும் கிடையாது. சூரனின் குலத்தவரால் தீராத இடர் அடைந்து வந்தார்கள்.

அவர்களின் இடர் தீர குமரன் அமர் செய்தான். அமர், அமரம் என்றால் போர். இச்சொல்லுக்கு சமர், சமரம் என்றும் பாடவேறுபாடு உண்டு"

"குமரன் என்ற பெயர் முருகனுக்கு ஏன் வந்தது நண்பா"

"சிவபெருமானுக்கு இளைய பிள்ளை என்பதாலும் என்றும் இளமை மாறாதவன் என்பதாலும் மன்மதனைப் போன்ற அழகுடையவன் என்பதாலும் முருகனுக்கு குமரன் என்ற திருப்பெயர்"

"சரி தான். மதனனை ஒத்தவன் என்பதால் தான் அவனை மதனவேள் என்று சொல்வது போல் இவனைக் குமரவேள் என்று சொல்கிறார்கள் போல"

"வேட்கையைத் தூண்டுபவன் வேள். இவனும் இவன் அழகால் இவன் மேல் வேட்கையைத் தூண்டுவதால் இவனைச் செவ்வேள், முருகவேள், கந்தவேள், குமரவேள் என்று இவனுடைய திருப்பெயர்களுடன் எல்லாம் வேள் என்பதைச் சேர்த்துச் சொல்வார்கள்"

"இவ்வளவு அழகான இவன் திருவுருவம் முழுவதையும் நெஞ்சே குறி என்று சொல்லாமல் ஏன் அடி குறி என்று சொன்னார்?"

"இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும் அடியவர்களுக்கு திருக்கோவில்களே இறையருளைத் தருவதைப் போல இவன் முழுவதும் அழகியவன் என்றாலும் இவன் திருவடிகளே அடியார்கள் வேண்டுவதை எல்லாம் தருவதால் நெஞ்சே குமரன் அடி குறி என்று சொன்னார்"

"ஆமாம். கைக்குழந்தைக்குத் தாயின் கொங்கைகளைப் போன்றும் மற்றவர்க்கு பசுவின் பால்மடுவைப் போன்றும் இன்னருள் சுரப்பவை திருவடிகளே அன்றோ?"

"பொய்யாமொழிப் புலவரும் திருக்குறளின் முதல் அதிகாரத்தில் திருவடிகளையே மீண்டும் மீண்டும் போற்றுகிறாரே"

"ஆமாம். அந்த திருவடிகளையே நெஞ்சில் நிறுத்தி சஷ்டி கவசமாகிய இந்தப் பனுவலை ஓத வேண்டும்"

(இன்னும் பேசுவார்கள்)

Friday, July 20, 2012

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 1

" சங்கரநாராயணா. திருமுறைப்பாடல்களின் அமைப்பை நீ கவனித்திருக்கிறாயா?"

"எந்த அமைப்புமுறையைக் குறிப்பிடுகிறாய் என்று புரியவில்லையே இராகவா!"

"அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்னும் மூவர் முதலிகள் பாடிய தீந்தமிழ் பாடல்களுக்குத் தேவாரம் என்ற திருப்பெயர் வழங்குவதற்கு முன் திருப்பதியம் என்ற திருப்பெயர் வழங்கியிருக்கிறது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியமுடிகிறது. இன்றைக்கு அதே பெயரை திருப்பதிகம் என்று சொல்கிறோம். இத்திருப்பெயரின் காரணம் உனக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்"

"தெரியும் இராகவா. மூவர் முதலிகள் ஒவ்வொரு திருத்தலங்க ளிலும் பாடிய பாடல்களைத் தொகுக்கும் போது பத்து பத்து பாடல்களாகத் தொகுத்திருக்கிறார்கள். அதனால் அவற்றை திருப்பதிகங்கள் என்று அழைக்கிறார்கள்"

"ஆமாம். அப்படி பத்து பத்து பாடல்களாக வரும் போது கடைசி பாடலில் இந்த பதிகத்தைப் பாடி இறைவனை வணங்கினால் என்ன என்ன பயன் விளையும் என்றும் பாடியிருக்கிறார்கள்"

"ஆமாம். வடமொழியிலும் அந்த வழக்கம் உண்டு. துதிப்பாடல்களின் இறுதிப் பாடல் அந்தப் பாடல்களைப் பாடிப் பரவுவதால் கிடைக்கும் பயன்களைச் சொல்லும். அதனைப் பலச்ருதி என்று அழைப்பார்கள்"

"அப்படி பதிகங்களின் இறுதியில் பயன்கூறும் பாடலைப் பாடுவது துதிப்பாடல்களின் அமைப்பு முறையாக இருக்கிறது"

"அருளிச்செயல்களாம் ஆழ்வார்ப் பாசுரங்களிலும் இந்த அமைப்பைப் பார்க்க முடிகிறது இராகவா"

"இந்த கந்தர் சஷ்டி கவசத்திலும் அந்த அமைப்பைப் பார்க்கலாம் நாராயணா. நூலின் இறுதிப்பகுதியில் மந்திர நூலான இதனை முப்பத்தாறு முறை உருவேற்றி திருநீறு பூசினால் என்ன என்ன பயன்கள் எல்லாம் விளையும் என்று தேவராய சுவாமிகள் கூறுகிறார்.

அப்படி வழக்கத்தை மாற்றாமல் பயன்களை நூலின் இறுதிப்பகுதியில் சொன்னாலும் புது வழக்கமாக நூலின் தொடக்கத்திலும் பயனைக் கூறும் ஒரு வெண்பாவை பாடியிருக்கிறார்"

"நீ சொல்வது புரிகிறது இராகவா. துதிப்போர்க்கு வல்வினை போம் என்று தொடங்கும் வெண்பாவினைத் தானே சொல்கிறாய்.

அது புது வழக்கமில்லை இராகவா. ஆழ்வார் பாசுரங்களின் தொடக்கத்தில் நூலையும் நூல் இயற்றியவரையும் அதாவது ஆழ்வாரையும் அவர்கள் ஊரையும் புகழும் வெண்பாக்கள் பிற்காலத்தவர் இயற்றி அதனை ஆழ்வார் பாசுரங்களைப் பாடுவதற்கு முன்னர் பாடும் வழக்கம் ஒன்று இருக்கிறது. அந்த வெண்பாக்களை தனியன்கள் என்று சொல்வார்கள்.

நீ கூட திருப்பாவைக்குப் பொருள் சொல்லும் போது அப்படி சில தனியன்களுக்கும் பொருள் சொல்லியிருக்கிறாய்.

எடுத்துக்காட்டாக இந்த தனியனை எடுத்துக் கொள்ளலாம்.

பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
வேதம் அனைத்திற்கும் வித்தாகும் - கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு"

"ஆனால் தனியன்களுக்கும் சஷ்டி கவசத்தின் தொடக்கத்தில் வரும் வெண்பாவிற்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது நண்பா. தனியன்கள் நீ சொன்னதைப் போல் நூலையோ ஆசிரியரையோ ஊரையோ புகழும் போது இந்த வெண்பா கந்தர் சஷ்டி கவசம் தனை துதிப்போர்க்கு என்ன என்ன பயன் விளையும் என்று கூறுகிறது. இறுதியில் மட்டுமே ஆழ்வார் பாசுரங்களும் பயன்கூறு பாடல்களைப் பாடுகின்றன. இங்கே தொடக்கத்திலும் பாடுகிறார். அதனால் இதனை புதுமை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்"

"நீ சொல்வதும் சரி தான். சரி. இப்போது இந்தப் பாடலின் பொருளைக் கூறு"

"பொருள் சொல்வதற்கு முன் அதனை ஒரு முறை பாடு சங்கரா"

"துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்து - கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலர் அருள் கந்தர்
சஷ்டி கவசந்தனை"

"இந்த வெண்பாவை உரைநடையாகச் சொல்வதென்றால் எப்படி சொல்வாய் நண்பா?"

"நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசம் தனைத் துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம் போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்; நிஷ்டையும் கைகூடும்"

"அருமை. இப்போது பொருள் புரிந்திருக்குமே"

"பொருள் புரிகிறது இராகவா. ஆனாலும் சில சொற்களுக்கு இன்னும் விளக்கம் சொல்லலாம் போல் தோன்றுகிறதே. எடுத்துக்காட்டாக முதல் சொல்லான நிமலர் யாரைக் குறிக்கிறது?"

"உனக்குப் புரிவதை சொல் நண்பா. மேலும் ஏதேனும் சொல்ல வேண்டும் என்றால் நான் சொல்கிறேன்"

"கந்தர் என்பது முருகப்பெருமானின் திருப்பெயர் என்று தெரியும். அந்த கந்தனை அருளும் நிமலர் என்பதால் அங்கே முருகப்பெருமானைத் தோற்றுவித்த சிவபெருமான் என்று புரிந்து கொள்கிறேன். சரி தானா?"

"சரி தான் நண்பா. மலம் என்ற வடசொல் குற்றம் என்ற பொருளைத் தரும். நிமலர் என்றால் குற்றமற்றவர், குறையொன்றுமில்லாதவர் என்று பொருள் தரும். இங்கே அது சிவபரம்பொருளைக் குறித்து நிற்கிறது.

கந்தன் என்ற திருப்பெயருக்கும் பொருள் விளக்கம் உண்டு. சங்க காலத்தில் கந்து என்ற உருவில் இறைவனை வழிபட்டார்கள். அதிலிருந்து கந்தன் என்ற திருப்பெயர் வந்ததாகக் கொள்ளலாம். ஸ்கந்தன் என்ற வடசொல் தமிழில் கந்தன் என்று வழங்கப்படுகிறது என்று பெரும்பான்மையோர் எடுத்துக் கொள்ளும் பொருளில் பார்த்தால் கந்தன் என்பதற்கு இணைக்கப்பட்டவன் என்று பொருள்"

"இணைக்கப்பட்டவனா? அந்த பெயர் எப்படி முருகனுக்குப் பொருத்தம்?"

"ஆறு குழந்தைகளாக சரவணப் பொய்கைக் கரையில் விளையாடிக் கொண்டிருந்தவனை உமையன்னை வாரி அணைத்த போது ஆறுருவும் ஓருருவாக இணைந்ததால் ஆறுமுகனுக்கு ஸ்கந்தன் என்ற பெயர் வந்ததாக கந்த புராணமும் பிற நூல்களும் கூறும் நண்பா."

"கந்தம் என்றால் நறுமணம், சந்தனம் என்றெல்லாம் கூட பொருள் உண்டல்லவா? நறுமணம் மிக்கவன், சந்தனக் குழம்பைப் பூசியவன் என்ற பொருள்களை எல்லாம் கூட இந்தப் பெயருக்குச் சொல்லலாம் இல்லையா?"

"ஆமாம். சொல்லலாம். ஆனால் அவை முதன்மைப் பொருள்கள் இல்லை"

"ஆகட்டும். நிமலரான சிவபெருமான் அருளும் கந்தனாகிய முருகப்பெருமான் மேல் இயற்றப்பட்ட சஷ்டி கவசம் என்ற நூல் இந்த நூல். செய்யுளின் கடைசி அடிக்குப் பொருள் சரி தானா?"

"சரி தான்.

உடலைக் காக்க அணிவது கவசம். இந்த நூலும் உடலைக் காக்க இறையருளை வேண்டுவதால் இந்த நூலுக்கும் கவசம் என்ற பெயர் வந்தது.

ஓவ்வொரு நாளும் இந்த கவசத்தைச் சொல்லி உகந்து திருநீறு அணியலாம். சஷ்டி திதியில் ஓதினால் இன்னும் பலமடங்கு பயன் உண்டு. அதனால் இதற்கு சஷ்டி திதியில் சொல்லும் கவசம் என்ற பொருளில் சஷ்டி கவசம் என்ற பெயர் வந்தது"

"இப்படி ஒவ்வொரு சொல்லாக விளக்கிச் சொல்வதற்கு நன்றி இராகவா. இந்த வெண்பாவின் மற்ற அடிகளுக்கும் இப்படியே பொருள் சொல்"

"இந்த கந்தர் சஷ்டி கவசத்தை துதிப்போர்க்கும் நெஞ்சில் பதிப்போர்க்கும் என்ன என்ன பயன் விளையும் என்பதை மற்ற அடிகள் சொல்கின்றன.

துதிப்போர்க்கு வலிய வினைகள் போகும். பல பிறவிகளாகச் செய்த செயல்களின் பயன்களை இப்பிறவியிலும் இனி வரும் பிறவிகளிலும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். தீவினைகள் துன்பமாகவும் நல்வினைகள் இன்பமாகவும் மாறி மாறிப் பயன் தந்து கொண்டிருக்கின்றன.

இந்நூலைத் துதிப்போர்க்கு தீவினைப் பயன்களான துன்பங்கள் போகும் என்பதை வல்வினை போம் துன்பம் போம் என்று தெளிவாக எடுத்துச் சொல்கிறார் தேவராய சுவாமிகள்.

மீண்டும் மீண்டும் துதித்து இப்பனுவலை நெஞ்சில் பதிப்போர்க்கு நல்வினைப் பயன்களான இன்பமும் செல்வமும் பலித்து பயன் தந்து ஆல் போல் தழைத்து அருகு போல் வேர் ஊன்றி பல தலைமுறைகளாக ஓங்கி நிற்கும்.

இங்கே செல்வம் என்று சொன்னது இம்மையில் வேண்டும் பொருட்செல்வம் மட்டும் இல்லை; மறுமைக்கு வேண்டிய அருட்செல்வமும் தான்.

அந்த அருட்செல்வம் பலித்து கதித்து ஓங்கும் ஒரு வழி இறைவன் திருவடிகளிலேயே மனம் நின்று கிடைக்கும் ஆழ்ந்த நிஷ்டை தான். நெஞ்சில் பதிப்பவர்களுக்கு அந்த நிஷ்டையும் எளிதாகக் கை கூடும்"

"அடடா. இம்மை மறுமைப் பயன்களை அனைத்தும் தரும் பனுவலாக அல்லவா சஷ்டி கவசம் இருக்கிறது. மனம், மொழி, மெய்யாலே உந்தனைத் துதிக்க என்று அருளாளர்கள் சொன்னதை போல் இப்பனுவலை ஓதினால் இப்பயன்கள் எல்லாமே கிட்டும் கிட்டும்"

"நண்பா. இன்னும் நுண்ணிய பொருளைச் சொல்லாமல் சொல்லிவிட்டாயே. ஆமாம். மனம், மொழி, மெய் என்னும் மூன்று கரணங்களையும் இந்த வெண்பாவில் குறிக்கிறார் சுவாமிகள்.

துதிப்பது வாயால் செய்யும் செயல். அங்கே மொழியைக் குறித்தார்.

நெஞ்சில் பதிப்பது மனத்தால் செய்யும் செயல்.

அனைத்துப் புலன்களையும் அடக்கி நிஷ்டையில் அமர்வது உடலால் செய்யும் செயல். அங்கே மெய்யைக் குறித்தார்.

ஆக மனம், மொழி, மெய் என்னும் முக்கரணங்களாலும் ஒன்றி வழிபட இப்பயன்கள் கிட்டும் என்பது அவர் சொல்லும் செய்தி"

தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி
மனத்தினால் சிந்திக்க

என்று கோதை சொன்னதைப் போல் இருக்கிறது இராகவா"“புன்னகை மட்டும் தான் இதற்கு பதிலா இராகவா?

சரி தான். இன்னும் வேறு பொருள்களும் இந்த வெண்பாவில் இருக்கின்றனவா?"

"இதற்கு மேலும் ஆழ்ந்த பொருள் இருக்கலாம் நண்பா. இறையருளில் ஆழங்காட்பட்டவர்களிடம் தான் கேட்டு உணர்ந்து கொள்ள வேண்டும்"

"அப்படியென்றால் அடுத்த வெண்பாவிற்குச் செல்லலாம் இராகவா"

(தொடர்ந்து பேசுவார்கள்)Tuesday, July 17, 2012

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - முன்னுரை"அழகெல்லாம் முருகனே
அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே
தெய்வமும் முருகனே"

"அருமையாக பாடுகிறாய் இராகவா. அடடா! அடடா!"

"எல்லாம் முருகனருள் சங்கரா. யாமோதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்தது"

"உண்மை தான் நண்பா. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று தானே அருளாளர்களும் சொல்லியிருக்கிறார்கள்.

முருகன் புகழ் பாடுவதில் உனக்கு இருக்கும் அன்பையும் ஆர்வத்தையும் பார்த்தால் எனக்கு ஆழ்வார் பாசுரம் தான் நினைவிற்கு வருகிறது.

அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா

நீ நன்றாக ஞானத்தமிழ் விளக்குகளை ஏற்றுகிறாய்"

"இப்படிப் புகழ்வதெல்லாம் மிகை சங்கரா. நீ சொல்வதைப் போல் செய்த பேரருளாளர்கள் நக்கீரர் தொடங்கி வாரியார் சுவாமிகள் வரை நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் புகழ் பாடிக் கிடப்பதே அடியேன் பணி. வேலை வணங்குவதே வேலை"

"நன்கு சொன்னாய். அந்த அடியார்கள் செய்த திருப்பணிகளைப் பற்றியும் கொஞ்சம் சொல்வாய்"

"நண்பா. கரும்பு தின்னக் கூலியா? சொல்கிறேன் கேள்.

உலகம் உவப்ப பலர் புகழ உதித்த முருகனின் புகழைப் போற்றிப் பாடியவர்கள் பலர்.

திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை என்னும் தலங்களில் முருகப்பெருமான் குடியிருப்பதை பலருக்கும் அறிவித்து முருகனருளைப் பெறுவதற்கு அனைவரையும் ஆற்றுப்படுத்தும் திருநூலாக திருமுருகாற்றுப்படையை இயற்றினார் மதுரை கணக்காயனார் திருமகனார் நக்கீரனார். அதுவே தமிழின் முதல் துதிநூல்.

ஓசைமுனி அருணகிரிநாதப் பெருமானின் திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம் போன்ற பனுவல்களைப் பற்றி நீயும் நன்கறிவாய். அவற்றில் சில பாடல்களுக்கு பொருளுரைகளும் எழுதியிருக்கிறாய்.

நக்கீரனாரைப் போல் ஆறு படைவீடுகளின் மேல் ஓசைமுனியின் பனுவல்களை ஒத்த பொருளாழத்துடன் ஆறுபடை சஷ்டி கவசங்களைப் பாடியவர் தேவராய சுவாமிகள். அவரைப் பற்றி அண்மையில் அடியேன் எழுதினேன். படித்திருப்பாய் என்று எண்ணுகிறேன்"

"படித்தேன் இராகவா. கந்தர் சஷ்டி கவசத்தின் சில வரிகளுக்கு நீ பொருள் சொல்லியிருப்பதைப் படித்துவிட்டு கவிநயா அக்காவும் முழு நூலுக்கும் பொருள் சொல்லும்படி கேட்டிருந்தார்களே.

நீ ஆறுபடைவீட்டு சஷ்டி கவசங்களுக்கும் பொருள் சொல்லப்போகிறாயா?"

"இல்லை சங்கரா. ஆறு கவசங்களுக்கும் பொருள் சொல்ல இப்போது நேரம் போதாது. புகழ் பெற்று விளங்கும் திருச்செந்தூர் சஷ்டி கவசத்தை மட்டும் இப்போது எடுத்துக் கொள்ளலாம்

எளிமையான நூல் தானே அது. சூலமங்கலம் சகோதரிகள் பாடி இந்நூல் புகழ் பெற்று பலரது நாவிலும் மிகச் சரளமாகப் பயிலும் நூல். அதனால் பொருள் உரை தேவையா என்று தான் தயங்குகிறேன்"

"சொல்லும் பொருளும் எளிமையாக இருக்கலாம் இராகவா. ஆனால் அச்சொற்களின் கூட்டினால் உண்டாகும் பொருளமைதியையும் அதில் பயின்று வரும் மறைப்பொருளையும் விளக்கி எழுதினால் பயில்பவர் பொருளுடன் பயின்று இன்புறுவார்கள் இல்லையா? அதனால் பொருள் சொல்வதில் தயக்கம் வேண்டாம்"

"நீ சொல்வதும் சரி தான் நண்பா. முருகனருளை முன்னிட்டு எழுதலாம். எழுதுவதற்கு முன் நாம் இருவரும் ஒவ்வொரு வரியாக ஒவ்வொரு சொல்லாக எடுத்துப் பொருள் உரையாடலாம்"

"ஆகட்டும் இராகவா. வேலும் மயிலும் துணை!"

(இன்னும் பேசுவார்கள்)

Thursday, July 12, 2012

ஆறுமுகத்தரசே! யார் உந்தனைப் போல் ஆதரிப்பவர்?!யார் உந்தனைப் போல் ஆதரிப்பவர்
ஆறுமுகத்தரசே (யார்)


பார் புகழும் பழனி மலை மேவிய
பரமனே திவ்ய பரஞ்சுடரே (யார்)


அல்லல் செய்யும் என் வினையை தீர்த்து
அன்பு கொண்டு என்னை வந்து காத்து
பொல்லா சூரன் உடலை வெடித்து
புரம் எரித்தவன் திருமதலையாய் உதித்து (யார்)
இந்தப் பாடலின் சரணத்தைக் கேட்கும் போது கொஞ்சம் வியப்பாக இருக்கிறது. புரம் எரித்தவனான சிவபெருமானின் திருமதலையாக உதித்து என்பதைத் தான் முதலில் சொல்லி, பின்னர் சூரனை வென்றதை சொல்லி, பின்னர் வினை தீர்த்து அன்புடன் காப்பதைச் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன். இந்தப் பாடலில் அது தலைகீழாக வருகிறது. என்ன காரணமோ?! :-)

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP