Sunday, August 21, 2011

கிருத்திகைபதிவு



மாலோன் மருகன் மன்றாடி மைந்தன் என்றபடி மாமனுக்கும்
 மருகனுக்கும் உகந்த நாள் இது.மாலுக்கு சிறப்பான கோகுலாஷ்டமியும்,மருக​னுக்கு உகந்த கிருத்திகையும் சேர்ந்த நாள் இது.அருணகிரிநாதர்முத​ல் தொடங்கி தமிழ்த்தியாகய்யா பாபனசம் சிவன் வரை இருவரையும் சேர்த்து பாடாதவரே கிடையது.மாலும் மருகனும்  ஒருவர்தான் என்பதை நமக்கு உணர்த்தும் நாள்

ஊத்துகாடு வேங்கடகவி கண்ணனின்மீது பல மனதைக் கவரும் பாடல்களைப்பாடியுள்ளார்.ஆராய்ந்து பார்த்ததில் ஒரு அருமையான பாடல் முருகனின் மீது பாடியுள்ளார் வழக்கம்போல் தமிழ் அருவிபோல் கொட்டுகிறது. சொற்களின் அணிவரிசையும் அடுக்கு வரிசையும் அபாரம். பாட்டைப் பார்ப்போம்

ராகம்: ஷண்முகப்பிரியா    தாளம் :ஆதி

பல்லவி

வரமொன்று தந்தருள்வாய் வடிவேலா
எங்கள் மரகத மாமயிலேறும் ஆறுமுக வடிவேலா அந்த....(வரமொன்று)
அனுபல்லவி
பரமென்ற சொல்லுக்கொரு பொருளே
பரத்தில் பரமென்ற சொல்லுக்கொரு பொருளே
இளம்பச்சைக்கும் இச்சைக்கும் நடுப்பொருளே
பலபொருள் கேட்டுன்னை அது இது என்னாது
பட்டென்று ஒரு பொருள் கேட்டிடுவேன் அந்த........(வரமொன்று)
சரணம்
பொன்னும் மணியும் எந்தன் புத்தியிலே பட்டு அவை புளித்துப் புளித்து போச்சே
ஏனென்றால் உந்தன் புன்னகை முகம்கண்டதாலாச்சே
இன்னும் உலகம் ஒரு இன்பம் என்றது எப்படியோ மறந்துபோச்சே
உன் ஏறுமயில் நடனம் கண்டலாச்சே
முன்னும் மனம் உருக முருகா முருகா என்று மோகமீறி தலைசுற்றலாச்சே
சொல்லவந்த மொழிகூட மறந்துதான்போச்சே
எதோ பொன்னார் மேனியன் காதில் சொன்னாயே
அந்தரங்கம் போதுமென்று கேட்கவும் ஆசையாச்சே
புனிதமான அறுபடை வீடுடையாய் புகுமதக் களிறு நடையுடையாய்
இனித்த நறும் எக்கலவை எதிலும் இனித்த விளைதினை சுவையுடையாய்
எனக்கு ஒரு பதம் தந்தருளும் மண மணக்க வரும் தமிழ் அருளடையாய் 
அன்னயினும் சிறந்ததான அருளோடு நிறைந்ததான அறுமுகவடிவே.....(வரமொன்று)

 வேங்கடகவி வாழ்ந்த காலமோ 1700 -௧765. ஆனால் அந்த கொஞ்சும் தமிழைப் பாருங்கள் எவ்வளவு எளிமை. இப்போதுள்ள பேச்சுத்தமிழ்போலவே இருக்கும் பொருள் விளக்கமே தேவையில்லை சரளமான வரிகளும், அடுக்கு வரிசைகளும், வார்த்தை வண்ணஜாலங்களும். அதில்மிகையாக இருக்கும் அவரது கோரிக்கையும், பக்தியும், மெய்சிலிர்க்கவைக்கும் சங்கீதமும், மனதை கவரும் வண்ணம் இருக்கிறது.எனக்கு பிடித்த இந்தப் பாடல் உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன் அதுவும் குறிப்பாக கேஆர்ஸ்க்கு.

 இனி பாட்டை பார்த்து கேட்டு ரசியுங்கள்.  மறைந்த திரு. மஹாராஜபுரம் சந்தானம் அவர்கள் ஒரு 5 மணித்துளிகள் ஷண்முகப்பிரியா ராகத்தை பிழிந்து ரசமாக கொடுத்துவிட்டு பின்பு கீர்த்தனையை தன் மதுர குரலில் தேனைக் குழைத்து ரசிக்கும் வகையில் வழங்கியுள்ளார். இந்த கிருத்திகை நன்னாளில் முருகனின் ஆசிபெற்றுச் செல்லுங்கள்



Tuesday, August 09, 2011

திருப்பதி மாமனுக்குக் கண் இல்லையோ? - வருவான் வடிவேலன்!

இன்னிக்கி முருகனருளில், எனக்கே எனக்கான பாட்டு!
திருப்பதி மாமனுக்குக் கண் இல்லையோ?
இலக்குமி எனைப்போலே பெண் இல்லையோ?


(நானும் என்-அவனும்! same color too..)

வருவான் வடிவேலன்-ன்னு ஒரு படம் வந்துச்சி!
அறுபடை வீடு மட்டுமன்றி, சிங்கப்பூர், மலேசியா, கதிர்காமம் என்று பல நாடுகளுக்கும் சென்று எடுத்த படம்!
அதில் தான் இந்தப் பாட்டு! வாணி ஜெயராம்-இன் வார்த்தெடுத்த குரலில்...!

புராணப் படம் அல்ல! ஆனா, முருகனை மையமாக வைத்து, இன்றைய வாழ்விலே நடக்கும் ஒரு கதை!
முருகனே குழந்தை உருவத்தில் வந்து, வளர்ந்து, சொற்பொழிவு செஞ்சி, மாயோன் அன்ன மாயங்கள் செய்து...பல பேரின் வாழ்வைச் சீராக்கும் கதை!



அவளுக்கு இயற்கையிலேயே இறையன்பு ஒரு சுத்து கூடுதலாப் போயிருச்சி!
இதனாலோ (இல்லை) வேறு என்ன புரிதலினாலோ, கொண்டவன் அவளைச் சீண்டுவதில்லை! கேலி பேசுறான்!
நாள் முற்ற முற்ற, விவாகரத்துக்கு ஓலையே அனுப்பிகிறான்! என்ன செய்வாள்?

அவனுக்கே ஒப்புவித்து விட்டவள்! விவாகரத்தை ஏற்க மறுக்கிறாள்!
மனதால் கொண்ட கணவனுக்கே, தன்னையும் கொடுத்து, அவர்களுக்குள் பிறக்கும் பிள்ளைக்கு "வடிவேலன்" என்று பேர் வைப்பேன்!
= கங்கணம் கட்டிக் கொள்கிறாள்! நடக்கற காரியமா இது? = வருவானா வடிவேலன்?

இவ இப்படின்னா... இன்னொருத்தி.... தன் உயிராய் வைத்து இருக்கும் கணவனுக்குக் கண் பார்வையில்லை! எத்தனையோ இடம் பார்த்தாகி விட்டது! = இனி ஒன்னுமே இல்லை!

ஈழத்துக் கதிர்காமம் சன்னிதியில் கையேந்திக் கெஞ்சுகிறாள்!
இனி ஒன்னுமே இல்லை-ன்னாலும்.....
அவன் ஒருவன் மட்டும் உண்டு தானே?
உண்டு தானே? = என் முருகன், எனக்கு என்னிக்குமே உண்டு தானே!!!

பாடலைக் கேட்டுக் கொண்டே வாசியுங்கள்! இதோ!!!



நீயின்றி யாருமில்லை விழி காட்டு- முருகா
நெஞ்சுருக வேண்டுகிறேன் ஒளி காட்டு!
நம்பிக்கை கொண்டு வந்தேன் அருள் கேட்டு - நீ
ஞானக்கண் தனைத் திறந்து வழி காட்டு!


அருளே அருளே, உலகம் உனதல்லவா
அறிவும் பொருளும், யாவும் நீயல்லவா!

(நீயின்றி யாருமில்லை)

திருப்பதி மாமனுக்குக் கண் இல்லையோ? - மாமி
இலக்குமி எனைப்போலே பெண் இல்லையோ?

கவனத்தில் எங்கள் நிலை வரவில்லையோ? - நாங்கள்
கதிர்காமம் வந்ததற்குப் பலன் இல்லையோ?


காசி விசாலாட்சி, உன்தன் மகனிடம் சொல்வாய்!
காஞ்சி காமாட்சி, உன்தன் மகனிடம் சொல்வாய்!
அங்கயற் கண்ணி, உன்தன் மகனிடம் சொல்வாய்!
அடி அபிராமி, நீ உனது மகனிடம் சொல்வாய்!


(என்ன மாயமோ, காதல் கணவன்....கண் கொண்டு பார்க்கிறான்!
அவள் முருகன் அவளைக் கைவிடவில்லை!)

கண்டேன்! கண்டேன்! கண்டேன்!
முத்துக் குமரன், பக்திச் சரவணன், வைத்திய நாதனைக் கண்டேன்!
முடியுடை மன்னன், திருமுடி அருகே, கொடியுடைச் சேவலைக் கண்டேன்!
கொத்தும் நாகம் பொல்லாதாக கத்தும் தோகையைக் கண்டேன்!
கோலம் மாறிட, ஞானக் கண்களும், ஊனக் கண்களும் கொண்டேன்!


வீடு நமக்குண்டு = அறுபடை வீடு!
வேதம் நமக்குண்டு = முருகனின் பாதம்!
விருந்து நமக்குண்டு = கந்தனின் நாமம்!
மருந்து நமக்குண்டு = வைத்திய நாதம்!


ஐயா, முருகய்யா! ஐயா, முருகய்யா!
ஐயா, முருகய்யா! ஐயா, முருகய்யா!


படம்: வருவான் வடிவேலன்
குரல்: வாணி ஜெயராம், சீர்காழி
வரி: கண்ணதாசன்
இசை: MSV



திரையருட் செல்வர் என்று புகழப்பட்ட K.சங்கர் இயக்கிய அருமையான படம் = வருவான் வடிவேலன்! பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படம்!
ஜாய்ஃபுல் சிங்கப்பூர் கலர்ஃபுல் மலேசியா போன்ற பிரபல பாடல்கள் எல்லாம் இந்தப் படத்தில் தான்!

வாணி ஜெயராமின் வார்த்தெடுத்த குரலுக்கென்றே வந்த படமோ-ன்னு கூடச் சொல்லலாம்!
வருவான் வடிவேலன் - தணிகை வள்ளல் அவன் - அழகு மன்னன் அவன்-ன்னு வரும் துவக்கப் பாடலைக் கேட்டால் தெரியும்...தோழன் இராகவனுக்கு மிகவும் பிடித்த பாடல்!

பத்துமலை திரு முத்துக்குமரனை - என்னும் பாடல்...கூட்டாக...MSV, சுசீலாம்மா, சீர்காழி, TMS, LR Eswari என்று பலரும் சேர்ந்து பாடுவது!
இன்று நாம் அறிந்த Batu Caves (எ) மலேசியப் பத்துமலையில் படமாக்கப்பட்ட பாடல்!

இந்த மலைக்கு..... அம்மா-அப்பாவோடு இரண்டு ஆண்டுக்கு முன்பு சென்றிருந்த போது... I had to play a trick on my murugan...



மதியம்.....கோயில் நடை சாத்தும் நேரம்! நல்ல மழை வேறு!

அம்மா அப்பாவால் வேகமாக ஏற முடியவில்லை! 300 படிகள்! மழையில் வழுக்குது வேறு!
நான் மட்டும் ஓடோடிச் சென்று, சன்னிதியில் திருப்புகழ் பாட....அர்ச்சகரால் நடைசாத்த முடியலை...அதற்குள் அம்மா அப்பா மெல்ல வந்து விட்டார்கள்!

தரிசனம் ஆன பிறகும், நடை சார்த்தாமல், அர்ச்சகர் ஏனோ தாமதிக்க... நான் அவரிடம் உண்மையைச் சொல்லி, மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்!
ஆனால் அவரோ... இன்னொரு முறை பாடமுடியுமா தம்பி?-ன்னு கேட்க...

பத்துமலை மூலத்தானத்து முருகனுக்கு உருவமில்லை! வேல் தான்!
ஆள் மயக்கும் அழகோ....அலங்கார ஒப்பனையோ ஒன்னுமே இல்லை!
கற் காரைக்கு இடையே, உருவான வடிவேல்! என்னவன் கைவிடேல்!!

வாழ்வின் முக்கியமான காலகட்டம் அந்தத் தருணம்... அப்போ எனக்கு முருகன் மேல் ஆயிரம் கோவம்...
அம்மா-அப்பாவுக்குச் சொல்லாம ஏதோ தப்பு பண்ணுறோமோ-ன்னு மனசில் ஒரு எண்ணம்! தப்பில்லை-ன்னு அதே மனசும் சொல்லுது;

இந்தச் சூழலில், அர்ச்சகரோ, பாடச் சொல்றாரு...
அம்மா அப்பாவைப் பக்கத்துல வச்சிக்கிட்டே, கண்ணில் தண்ணி தண்ணியா ஊத்துது!
ரெண்டு கையுமே தாளமாக்கி, ஒலி எழுப்பி, அந்தத் திருப்புகழைப் பாட... குறை தீர வந்து குறுகாயோ? பேதை கொண்டேன் கொடிதான துன்ப மையல் தீர,  குறை தீர வந்து குறுகாயோ?

முருகனின் வேலில் இருந்து, சிவந்த நூலினைக் களைந்து, தாளந் தட்டும் என் கையைப் பிடித்துக் கொண்டார் ஓதுவார்...
அந்தக் காப்புக் கயிற்றைக் கட்டி விட...
வேலின் மேலிருந்த மாலையை எடுத்து, எனக்கே எனக்காய்ச் சூட்ட...

முருகா...
காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன்!
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன்!


விழியில் பெருகுவதை அவரே துடைத்து விட...
அம்மா-அப்பா ஒன்றுமே புரியாமல் விழிக்க...
தீபம் காட்டி...திருநீறு குடுத்து...நடையைச் சார்த்தாமல்...
நான் சொன்ன திருப்புகழையே, பேப்பரில் எழுதித் தரச் சொல்லி...அவரும் பாடத் துவங்கினார்! - "விறல் மாரன் ஐந்து"

அம்மா என்னை மெல்ல இழுத்துக் கொண்டு வந்து விட்டார்கள்!
நானோ என் கையில் கட்டப்பட்ட சிவப்புக் காப்பினையே பார்த்துப் பார்த்து...

மயிலும் செங்கையும் ஆறிரு திண்புயக்
கவியின் சங்கமி இராகவ புங்கவன்
அகமும் கண்டருள் வாய்-என அன்பொடு...
வரவேணும் முருகா வரவேணும்.....வந்துனை எனக்குத் தரவேணும்!
இரு நிலம் மீதில் எளியனும் வாழ.....
எனது முன் ஓஓஓஓடி வர வேணும்!


"வருவான்" வடிவேலன்!

Tuesday, August 02, 2011

ஆண்டாள் பாசுரம்! - முருகனுக்கு!!

என் அந்தரங்கத் தோழியின் பிறந்தநாள்!
அந்த-ரங்கத் தோழியின் பிறந்தநாள்! (Aug-02, 2011)!
திரு ஆடிப் பூரத்துச் செகத்து உதித்தாள் வாழியே! Happy Birthday dee, Kothai! - from me & murugan :)

இவள் உறுதியே..............என் முருகனிடம் என் உறுதி!

இவள் தோழமை.............உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே...இடுக்கண் களைவது எனக்கு! எற்றைக்கும் இவளே தோழி!


என்னாது, ஆண்டாள் முருகன் மேல பாட்டு பாடி இருக்காளா?

மறந்தும் புறம் தொழா-எல்லாம் கிடையாதா? ha ha ha! நான் ஒன்னும் சொல்லலை! நீங்களே பாருங்க! - இது தமிழ் அர்ச்சனைப் பாடல்!

சுசீலாம்மாவின் குரலில், இதோ:

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி!
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி!


பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி!
கன்று குணில்ஆ எறிந்தாய் கழல் போற்றி!


குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி!
வென்று பகை கெடுக்கும் நின்கையில் "வேல்" போற்றி!

என்றென்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம், இரங்கு ஏல்-ஓர் எம்பாவாய்!!!



இப்போ தெரியுதா? ஏன் "முருகன்" பாசுரம்-ன்னு சொன்னேன்-ன்னு! இது "வேல்" பாசுரம்! :)

யோவ், கண்ணன் கையில் எங்கேய்யா வேல் வந்துச்சு?
இதுக்கு முன்னாடியும், முதல் திருப்பாவைப் பாட்டில், "கூர் வேல்" கொடுந் தொழிலன் நந்தகோபன் குமரன்-ன்னு தான் பாடினா!
ஒரு வேளை கந்த-கோபன் அப்படிங்கறதைத் தான் நந்த-கோபன்-ன்னு பாடிட்டாளோ?:))

இந்தப் பாசுரத்துக்குப் பொருள் சொல்லும் ஆசார்யர்கள், இந்த "வேல்" கட்டம் வந்த போது, என்ன சொல்லுறாங்க-ன்னு பார்க்க குறுகுறு-ன்னு இருக்கு-ல்ல?:) பார்ப்போமா?

போற்றி, வாழி, பல்லாண்டு - இவை ஒரு பொருட்சொற்கள். அடிபோற்றி-தாளால் உலகம் அளந்த அசவு தீரவேணும் என்றபடி.
(வேல்போற்றி) = வெறுங் கையைக் கண்டாலே போற்றி என்னுமவர்கள், வேல்பிடித்த அழகைக் கண்டால் போற்றி என்னாது ஒழிவாரோ?
அடிபோற்றி, திறல்போற்றி, புகழ்போற்றி, கழல்போற்றி, குணம்போற்றி, வேல்போற்றி!


ஏய் முருகா, உனக்கு இளமையான மாமி போன்றவள்....என் தோழி கோதை!
உன் பால் நான் ஒட்டிக்கிட்டு இருக்கேன்னா, அதுக்கு அவ தமிழ் தான் காரணம்!

அவளுக்கு ஆய்ச்சியர்களின் முல்லைப்பூ-ன்னா ரொம்ப உசுரு!
அப்படியே மருக்கொழுந்தும் செண்பகமும்!
மாலை கட்டி அழகு பாக்கவே பொறந்தவ அவ!
கொத்து கொத்தா அவளுக்குப் பூ குடுக்கலாமா, நாம ரெண்டு பேரும்?

அவளுக்கு நல்ல பரிசா வாங்கிட்டு வாடா.....கொண்டு போய் குடுத்துட்டு, நம்ம ரெண்டு பேரும் ஒன்னா வாழ்த்திட்டு வரலாம்...
எனக்கு வாங்கிக் குடுத்தியே.......வைரம் பதித்த வாட்ச் - அதே போல, ஆனா உன் பேர் செதுக்காத வாட்ச் ஒன்னு அவளுக்கும் குடுப்போமா?

Happy Birthday Kothai - From, me & murugan!
அடிபோற்றி, திறல்போற்றி, புகழ்போற்றி, கழல்போற்றி, குணம்போற்றி, வேல்போற்றி!

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP