Tuesday, November 01, 2011

6) பழமுதிர்சோலை: எனது முன் ஓடி வரவேணும்!

வாங்க மக்கா!
நேற்றே பஞ்சமியும்,சஷ்டியும் ஒரே நாளில் வந்து விட்டதால், நிறைவுப் பகுதியான 6ஆம் பதிவை, இன்று இடுகிறேன்!

கந்த சஷ்டி முடிந்த திருமண நாள் அல்லவா! என் முருகனுக்கு முதலிரவு!:)
மிக இனிமையான பாடல் ஒன்னு...
பழமுதிர்சோலைப் பாடல்! பார்ப்போமா? நாலே வரி தான்!

நேற்று சஷ்டி அதிகாலையில், நியூயார்க் ஆலயத்தில், பாடச் சொல்லி அழைத்திருந்தார்கள்! இதே பாடலையே அங்கும் பாடினேன்! அதன் ஒலித்துண்டு கீழே! கேட்டுக்கிட்டே வாசிங்க!:)


அகரமும் ஆகி, அதிபனும் ஆகி, அதிகமும் ஆகி - அகமாகி
அயன் என ஆகி, அரி என ஆகி, அரன் என ஆகி - அவர்மேலாய்


எழுத்துக்களில் = அகரம் போல் முதல் நீ! மக்களில் = தலைவன் போல் முதல் நீ! வரம் தருவதில் அதிகம் நீ! என் அகமும் நீ!
படைத்தலில் = அயன் (பிரமன்) நீ! காத்தலில் = அரி (திருமால்) நீ! அழித்தலில் = அரன் (சிவன்) நீ! முத்தொழில் மூவர் மேலும் உன் குணம், மணம் வீசுகின்றது!

இகரமும் ஆகி, எவைகளும் ஆகி, இனிமையும் ஆகி - வருவோனே
இருநிலம் மீதில் எளியனும் வாழ, எனது முன் ஓடி - வரவேணும்!!


இங்குள்ளதும் நீ! எங்குள்ளதும் நீ! இனிமையும் நீ...இப்படி நீயாக நீ இருந்தவாறு வரும் திருமுருகா!
இந்த நிலத்தில், உனக்காகவே நான் வாழ்கிறேன்...எனக்காக என் முன்னே ஓடி வர மாட்டியா? வாடா!

மகபதி ஆகி, மருவும் வலாரி, மகிழ் களி கூரும் - வடிவோனே
வனமுறை வேடன் அருளிய பூசை, மகிழ் கதிர்காமம் - உடையோனே


வேதங்களின் பதி நீ! வலாரி என்னும் அசுரனைக் கொன்றவன் இந்திரன்! அவன் படைகளைச் சிறை மீட்டுத் தந்து, அமராவதியை மகிழ்வித்தவனே!
அந்தியன் என்ற பூர்வகுடி வனவேடன், உன்னை ஈழத்தின் கதிர்காமத்திலே வைத்துப் பூசை செய்தானே! அதில் மகிழும் முருகவனே!
(ஈழத்தில் செல்வச்சன்னிதி மற்றும் கதிர்காமத்தில் பிராமணர் அல்லாதோர் பூசகராக உள்ளனர்! கதிர்காமத்தில் விளங்கும் பூசகரை கப்புறாளை என்றும் செல்வச்சன்னிதி பூசகரை கப்பூகர் எனவும் அழைப்பர் - நன்றி: கானா பிரபா)

செககண சேகு, தகுதிமி தோதி, திமி என ஆடும் - மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை, மலை மிசை மேவு - பெருமாளே!!


தகதிமி தகதிமி என்று விதம் விதமான தாள கதியில், மயிலோடு ஆடுபவனே!
செல்வ வளங்கள் நிறைந்த பழமுதிர்சோலை! அந்தச் சோலைமலையில் மேவும் பெருமானே! என் கண்ணாளா!
-----------------------------------------

* 2011 சஷ்டிப் பதிவுகள்முன்பு பதிவிட்ட, பழமுதிர் சோலை ரகசியங்களைப் பார்ப்போமா?

பழமுதிர்-ச்-சோலை ன்னு சொல்லாதீங்க! "ச்" வராது!
பழம் உதிர் சோலை = பழங்கள்...உதிர்ந்த சோலை, உதிர்கின்ற சோலை, உதிரும் சோலை என்னும் அழகிய வினைத் தொகை!
நம் வினையும் தொகைந்து விடும் முருக வினைத் தொகை!

பழமுதிர் சோலை ஆலயம்


* இங்கு முருகனுக்கு ஒரு காலத்தில் ஆட்டு ரத்தம் கலந்த அரிசிச் சோற்றைப் படைத்த வேடுவர்கள் உண்டு! சொல்பவர் நக்கீரர்! கொழுவிடைக் குருதி விரைஇய தூவெள்ளரிசி சில்பலிச் செய்து என்கிறார் திருமுருகாற்றுபடையில்!

* மற்ற படைவீடுகளைப் போல பிரம்மாண்டமான ஆலயம் இங்கு கிடையாது! முன்பு கூட வேல் வழிபாடு மட்டுமே இருந்துள்ளது. அண்மைக் காலங்களில் தான் தனியான ஆலயமும், முருகனின் சிலை வைத்து வழிபாடுகளும் தோன்றியுள்ளன!

* முற்காலத்தில், வேட்டுவர்கள், குறிஞ்சி நில மக்கள் எப்படி வழிபட்டு வந்தனரோ, அப்படியே தான் பல வழிபாடுகள் இன்றும் உள்ளன; வேட்டுவர்களின் தெய்வமான ராக்காயி அம்மனும் மலை மேல் உண்டு!

* நாகரீக மாற்றங்களால் அதிகம் அசைந்து கொடுக்காது, பண்டைத் தமிழ் மலையாகவே பழமுதிர் சோலை இருந்து வருகிறது போலும்!

* நூபுர கங்கை என்னும் சிலம்பாறு, காட்டாறாகப் பாயும் மலை. இங்கு மாதவி மண்டபத்தில் அமர்ந்து, இளங்கோ தம் காப்பியத்தை எழுதினார் என்று சொல்வாரும் உண்டு!

* ஒளவைக்கு நாவற் பழம் காட்டி, "பாட்டி, பழம் சுடுகிறதா?" என்று கேட்ட இடம் இதுவே!

* ஆழ்வார்கள் சோலைமலையின் இயற்கை அழகில் மனம் பறிகொடுத்து வர்ணித்துள்ளார்கள். ஆண்டாளின் கல்யாண வேண்டுதலை நிறைவேற்றிய இறைவனும் சோலைமலை அழகரே!
மாலிருஞ்சோலை பாடற் குறிப்புகள் பரிபாடல் முதலான சங்க இலக்கியங்களிலும் வருகின்றன!

* மாமன் திருமால் கீழே, காட்டில்! மருகன் முருகன் மேலே, மலையில்!

சோலைமலை, அழகர் கோயில்!


* கீழே ஒரு அழகன் - முல்லை அழகர்! மேலே ஒரு அழகன் - குறிஞ்சி முருகன்!
இப்படி இரு அழகன்களும் ஒரு சேர இருப்பதால், சோலைமலை முழுதும் அழகு ததும்பி வழிவதில் வியப்பென்ன?

* பலரும் அறிந்த பழமுதிர் சோலை திருப்புகழ்-கள்
- அகரமும் ஆகி அதிபனும் ஆகி,
- சீர் சிறக்கும் மேனி பசேல் பசேல்

* இழுமென இழிதரும் அருவிப், பழமுதிர் சோலை மலைகிழ வோனே - என்று பழமுதிர்சோலையில் தான் முருகாற்றுப்படை முடிகிறது!

திரு மலிவான பழமுதிர் சோலை, மலை மிசை மேவும் பெருமாளே!
இரு நிலம் மீதில், எளியனும் வாழ, எனது முன் ஓடி வர வேணும்!

வாடா முருகா! என் முன்னே...ஓடி வாடா....எத்தனை காலம் ஏங்குவேன்? முருகாஆஆஆ!

7 comments:

கவிநயா November 01, 2011 10:10 PM  

கேட்டுட்டேன்; வாசிக்கலை. அழகா பாடினதுக்கு நானும் . ஒலிச்சுட்டி பகிர்ந்ததுக்கு நன்றி கண்ணா.

sury November 02, 2011 4:34 AM  

http://youtu.be/WFYB4lZPECk

naanum paaduven.

subbu rathinam

Lalitha Mittal November 02, 2011 6:41 AM  

ஆறுநாளும் பலமுறை உன்குரலில் திருப்புகழைப் போட்டுக்கேட்டு முருகனருளை அனுபவித்தேன்.நன்றி!

முருகா !எனது முன் ஓடி வர வேண்டும்;

கந்தா !எனது முன் ஓடி வரவேண்டும் ;

ஷண்முகா!எனது முன் ஓடி வரவேண்டும்!

சிவமுருகன் November 02, 2011 9:45 AM  

ரொம்ப நல்லா இருக்குங்க கே.ஆர்.எஸ்.

adithyasaravana November 03, 2011 8:55 AM  

ரொம்ப நன்றி ப் பா

குமரன் (Kumaran) November 05, 2011 3:00 PM  

முரனைக் கொன்ற முராரி திருமருகன்!
வலனைக் கொன்ற வலாரி திருமருகன்!

அந்தத் திருமுருகனை அழகாகப் பாடி அதனைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி இரவி!

cheena (சீனா) November 06, 2011 12:53 AM  

அன்பின் கேயாரெஸ் - ஆறாம் படைவிடு பற்ரீய இடுகை அருமை - பழமுதிர் ( ச் போடல ) சோலை பற்றிய பல தகவல்கள் - வேடுவர் பழக்கம் இன்னும் தொடர்கிறது. மேலே ஒரு அழகம் கீழா ஒரு அழகன் - காட்டினிலே ஒருவன் மலையினிலே ஒருவன் - அடாடா - என்ன அருமையான் இடுகை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP