Thursday, July 28, 2011

சேவற்கொடியோன்!


முருகன்அவன் நாமம் சொல்லிப் பாடுவோம் – மனம்
உருகஉருக கந்தன் பாதம் நாடுவோம்!
நீலமயில் மீதில் அவன் ஏறுவான் – நம்
உளம்மகிழ நொடியில் முன்னே தோன்றுவான்!

ஆடிஅவன் வரும் அழகைப் பார்க்கணும் - நாம்
கூடிநின்று அவன் புகழைப் பாடணும்!
தேவியர்கள் இருவருடன் அருளுவான் - நமைத்
தாயெனவே காப்பதிலே மகிழுவான்!

வேலைக் கண்டால் வேதனைகள் ஓடுமே – ஒரு
சோலை போல வாழ்க்கையெல்லாம் ஆகுமே!
நாவற் பழம் தந்தவனை நாடுவோம் – அந்த
சேவற் கொடியோனின் பதம் சேருவோம்!

--கவிநயா

பிகு. படத்தைப் பெரிதுபடுத்தி(க்ளிக்கி)ப் பார்க்கத் தவறாதீர்கள்!

Monday, July 25, 2011

ஆடிக் கிருத்திகை: சந்தனம் மணக்குது! கற்பூரம் ஜொலிக்குது!!

இன்று ஆடிக் கிருத்திகை! (Jul 25, 2011) - முருகன் தலங்களிலே பெரு விழா!

* தைப் பூசம் = அன்னையிடம் வேல் பெற்ற நாள்
* பங்குனி உத்திரம் = திருமண நாள்
* வைகாசி விசாகம் = பிறந்த நாள்
* ஆடிக் கிருத்திகை = அறுவரும் ஒன்றான நாள்
* ஐப்பசியில் சஷ்டி = சூர சங்காரம்
* கார்த்திகையில் கார்த்திகை = தீபம்

இன்று, உருவாய் அருவாய்...அறுவராகி ஒருவன் ஆனவன்!
இன்று, வாசனை மிக்க ஒரு பாடலையும் காண்போம்! = என்ன படம்?

பாடலை வலையேற்றித் தந்த தோழன் இராகவனை எண்ணிக் கொண்டு...
சந்தனம் மணக்குது! கற்பூரம் ஜொலிக்குது!! - கந்தர் அலங்காரம்


சந்தனம் மணக்குது! கற்பூரம் ஜொலிக்குது!
கந்தகிரி கோவில் வந்தால் நன்மையெல்லாம் நடக்குது!

நித்தமும் பாலிலே நீராட்டுவோம் - பச்சை
நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்
திருநீறின் தத்துவம் தந்தை என்போம் - அதில்
திகழும் குங்குமத்தை அன்னை என்போம்!
(சந்தனம் மணக்குது)

பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்
பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்
திருமார்பில் ஒளிவீசும் கவசம் இட்டு
தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!
(சந்தனம் மணக்குது)

விரலுக்கு மோதிரம் பவளத்திலே - கையில்
விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே
தங்கத் திருப்பாதம் வணங்கும் போது
பெறுகின்ற சுகத்திற்கு எல்லை ஏது!
(சந்தனம் மணக்குது)

மயில்மீது மன்னனை இருக்க வைத்து
ஏழுசுரம் பாடும் கிங்கிணிச் சலங்கை கட்டி
வெற்றி வேலுடன் சேவல்கொடி ஏற்றிவைத்து
இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!
(சந்தனம் மணக்குது)

படம்: கந்தரலங்காரம்
இசை: குன்னக்குடி
குரல்: சீர்காழி - டி.எல்.மகாராஜன்
வரி:ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, இங்கே...நியூஜெர்சி கோயிலிலே, முருகன் பவனி வரும் காட்சி!
"மறந்தும் புறம் தொழாதவர்களாக" சித்தரிக்கப்படும், நெற்றியில் நாமம் தரித்த வைணவ நம்பிகள், என் ஆசை முருகனின் கைங்கர்யத்திலே, சிரித்தபடி வரும் காட்சியையும் கண்டு களிக்கலாம்! :)

Sunday, July 24, 2011

ஆடிக் கார்த்திகைத் திருநாள்
இன்று(25/07/2011) கிருத்திகைத் திருநாள்.முருகனுக்கு விருப்பமான திருநாள்.பதிவு போட அருள்கூர்ந்த முருகனுக்கு நன்றி.எங்கள் குலதெய்வம் திருத்தணி முருகன். கந்தன் மீது ஒரு உணர்ச்சி மிக்க பாடல்
பாடலைப் பாடியவர் மறைந்த மாமேதை திரு. சோமு அவர்கள்.பாமரனையும் கர்நாடக சங்கீதத்தை அனுபவிக்கச் செய்தவர் அவர்.உள்ளம் உருகும் வண்ணம் அவர் முருகனின் மீது பாடிய பாடல்கள் பல.அதில் ஒன்றுதான் கீழே வரும் பாடல். பாடலை படித்து, பார்த்து, கேட்டு ரசித்து ஆடிகிருத்திகயையின் நாயகனான திருத்தணி முருகனின் அருளைப் பெற அவன் தாள் போற்றுவோம்


  ராகம் : சிந்துபைரவி    தாளம் ஆதி

பல்லவி

எதைச் செய்ய மறந்தாலும்
தமிழ் முருகனை துதி செய்ய மறாவாதே... (எதை...)


அனுபல்லவி

விதிசெய்யும் சதிக்கிடையில் முருகனை துதி செய்தால்
மதி தருவான் உயர் நிதி தருவான் மனமே....(எதை....)


சரணம்

தேவர் துயர் தீர்த்த தேவ சேனாதிபதி
மூவரில் அவன் முக்கண்ணனின்  புதல்வன்
ஆவதும் அழிவதும் அவன் அருள் இன்றில்லை
அவனை மறந்தால் உண்டு அவனியில் பெரும்தொல்லை (எதை>>>.)
......)Tuesday, July 19, 2011

முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே!

ஓர் அலுவல் காரணமாக ஆம்ஸ்டர்டாம் வந்துள்ளேன்! - இது என் தோழன் முன்பிருந்த ஊர்! Croeselaan கடந்து செல்லும் போதெல்லாம் பழைய நினைவுகள்! ஏனோ தெரியல, வண்டியை நிப்பாட்டி அந்தப் பழைய இடங்களை, இறங்கிப் போய் பார்க்கத் தோனுது!

(தோழனுக்காக முன்பு எழுதியது.....)
பச்சைமா மலைபோல் சாலட்
பவளவாய் கென்டக்கி சிக்கன்
அச்சுதா அஞ்சப்பர் குழம்பே
ஆயர் தம் அன்னபூர்ணா

இச்சுவை தவிர யான்போய்
மெக்டொனால்ட்ஸ் ஃபாஸ்ட்ஃபுட் உண்ணும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
ஆம்ஸ்டர் டாம் நகருளானே!! :))இன்றைய செவ்வாய் - முருகனருளில் சீர்காழி பாடல்!முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே
முன்னின்று காக்கும் இறைவனுக்கே
புகழ் மணக்கும் அவன் பெயர் சொன்னால்
பூச்சொரிந்தே மனம் பாடி வரும்
(முதல்)

சிம்மாசனம் போன்ற மயிலாசனம்
செங்கோலும் அவன் கையில் சிரிக்கின்ற வேல்
அடியார் தம் இதயங்கள் குடி மக்களே
அருளாட்சி எல்லாம் அவன் ஆட்சியே
(முதல்)

முதல் சங்கம் உருவாக மொழியானவன்
இடைச் சங்கம் கவிபாட புகழானவன்
கடைச் சங்க வாழ்வுக்கு வழியானவன்
கடல் கொண்டும் அழியாத தமிழானவன்!
(முதல்)

Thursday, July 14, 2011

ஏறுமயில் ஏறிவிளை ஆடும் முகம் ஒன்றே!

இன்றைக்கு, முருகனருளில், அனைவருக்கும் தெரிந்த அழகான பாட்டு! = ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!

யார் எழுதியது? = நம்ம அருணகிரி தான்! திருப்புகழில் வரும் பாடல்!
ஆனா, திருப்புகழ்ச் சந்தம் எதுவுமே தளும்பாத "அமைதியான" பாடல்!

இதுவே கடைசித் திருப்புகழ் எனச் சொல்லப்படுவதும் உண்டு!
அது என்ன "ஏறு மயில் ஏறி"? மயில் ஏறி-ன்னு சொன்னாப் போதாதா?
ஏறு மயில்-ன்னா, யாரோ ஏறிய மயில் மீது, முருகனும் ஏறுகிறானா?
மயில் என்ன Subway Trainஆ? பலரும் ஏற, பின்னாடியே நாமும் ஏற? :)))

அட, ஏறு = காளை மாடு-ன்னு ஒரு பொருள் இருக்குல்ல?
ஏறு தழுவுதல்-ன்னு சொல்றோம்-ல்ல? (ஜல்லிக் கட்டு)

அப்ப ஏறு மயில்=காளை மயிலா?
அது எப்படிய்யா ஒரு காளை, மயிலாகும்? அருணகிரி ஆரம்பிக்கும் போதே தகாரறு பண்றாரா என்ன? ஹிஹி! இல்லை!

ஏறு-மயில் = வினைத் தொகை! ஏறின - ஏறுகின்ற - ஏறும் மயில்!
ஏறு-மயில் = உம்மைத் தொகை! ஏறும், மயிலும்!

முருகன் மயில் மேலும் ஏறுவான்,அவங்க அப்பாவின் வாகனம், காளை மீதும் ஏறுவான்!
சின்ன பய புள்ள-ல்ல! வீட்டுல இருக்குற கார், பைக்-ன்னு ஒன்னு விடாம எல்லாத்து மேலேயும் ஏறுகிறது!
அதான்....ஏறி "விளையாடும்"-ன்னு சொல்றாரு! ஏறிப் "பறக்கும்"-ன்னு சொல்லலை பாருங்க! :)

அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன்! அதுனால அப்பன் வாகனமும் சுப்பனுக்கு அடங்கிருச்சி:)
அண்ணாவின் எலி வேலைக்கு ஆவாது!
அம்மாவின் சிங்கம்-ன்னா பயமோ என்னவோ கொழந்தைக்கு!
மாடு+மயில் மேல மட்டும் ஜாலியா ஏறி விளையாடுது! :)

* ஏறு(ஏறிச் செல்லும்) மயில்
* ஏறு(எருது) + மயில்=இரண்டிலும் ஏறி விளையாடும் முகம்!
* ஏறு(உயரமான) மயில் மீது ஏறி விளையாடும் முகம்!
* ஏறு(போர்) = போர் வாகன மயில் மீது ஏறி விளையாடும் முகம்!
* ஏறு(ஆண்) மயில் மீது ஏறி விளையாடும் முகம்!
* ஏறு(ஏறிச் செல்லும்) மயில்=அது சென்று கொண்டிருக்கும் போதே...அதன் மீது தாவி ஏறுவான்! ஓடுற பஸ்ஸில் ஏறும் இளவட்டம் போல! :)


சொல்லித் தருகிறார்! கூடவே பாடலாம்...கேட்டுக்கிட்டே படிங்க...

madhavipanthal.podbean.com

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!

ஓடும் மயிலில், ஓடி ஏறி, விளையாடும் ஒரே முகமும்...
ஞானியான அப்பாவுடனேயே பிரணவ ஞானம் பேசும் ஒரே முகமும்...

கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!

கஷ்டங்களைச் சொல்லி அழும் அடியார்கள் வினைகளைத் தீர்க்கும் ஒரே முகமும்...
தாரகன் என்னும் மாய அரக்கனின் மலையைப் பொடியாக்கி, வேல் பிடித்து நிற்கும் ஒரே முகமும்...

மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
போரில் வந்த சூரனை, மற்ற அசுரர்களை வதைத்திட்ட ஒரே முகமும்...

வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
மாறிலா வள்ளி என்னும் பேதையை, உணரவும்-புணரவும், ஆசையுடன் வந்த ஒரே முகமும்...

ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

அருணாசலம் என்னும் திரு-அண்ணாமலையில் கோயில் கொண்ட கம்பத்து இளையனாரே! என் கந்தனே!
ஒரே முகங்களால் பலவும் செய்து, ஆறுமுகமாகவும் ஆகி நிற்கிறாய்!
ஆறுமுகம் ஆன பொருள் = நீ தான்!
 நீ அருள வேண்டும் = எதை? = ஆறுமுகம் ஆன பொருளை = உன்னை!


எதை அருள வேண்டும்? = உணவு, உடை, இடம் | பணம், புகழ் | காமம், சுகம் - இதெல்லாமா? இல்லை! இல்லை!

"நீ" அருள வேண்டும்=உன்னையே அருள வேண்டும்!
ஏங்கியே வாழும் பேதைக்கு, உன்னைக் கொடுப்பாயா?
ஆறுமுகமான பொருளை (உன்னை) எனக்கு அருள்!


உன் மடியில் தலை வச்சிப் படுத்துக்கிடவா?
உன் முகத்தைப் பாத்துக்கிட்டே.....உன் மூச்சின் நிழலில்.....நானும் நீயும்.....
வாழும் காலம் யாவும்,
மடியில் சாய்ந்தால் போதும்....
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா?


எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்.....
அவனுக்கே என்னை விதி என்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு!


மகாராஜபுரம் சந்தானம் குரலில்:


சுதா ரகுநாதன் குரலில்:


எல்லாத்தையும் விட, எனக்குப் பிடிச்சது: இளையராஜா இசையில், குத்துப் பாட்டில், என் முருகனுக்குக் குத்துங்கடே:)))
தம்பிப் பொண்டாட்டி படத்தில்...மின்மினி, பிரசன்னா, ஸ்வர்ணலதா பாடும் - இதோ - குத்து Style - ஏறுமயில் ஏறி விளை ஆடும் முகம் ஒன்றே!

--------------

Thursday, July 07, 2011

முருகன்: கடவுள் பேர்சொல்லி, காணாமல் போகின்ற...

முருகனருள் அன்பர்களே, வெளிநாட்டுப் பயணமா வந்திருக்கேன்! சில காரணங்களால் இரவெல்லாம் வலி!
ஆறுதலுக்குத் தோழனை அழைக்க எண்ணி, செல்பேசியில் தட்ட, என் mp3 தொகுப்பில் கைதவறி இந்தப் பாடல் அழுந்தி விட்டது! வருகின்றான் முருகன் வருகின்றான்...ன்னு அலற...

என் முருகனே, வந்து...வந்து...வலியெலாம் விரட்டி...மெத்த்த்த்தென்று கால் பிடிச்சி விட்டாப் போல...ஒரு ஈரத்தில் அப்படியே தூங்கி விட்டேன்...

TMS பாடியது! நான் சொல்வதற்குப் பதிலா, நீங்களே இந்தப் பாடலைக் கேளுங்க! பொருள் வீறினால், உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிப் போகும்! - வருகின்றான் முருகன் வருகின்றான்!!வருகின்றான் முருகன் வருகின்றான்! - இந்த
வையத்தினை மாற்ற...வாழும் வழி கூற...
(வருகின்றான் முருகன் வருகின்றான்)

பெறுகின்ற பொருளாலே பெருமானையே மறக்கும்
பித்தரின் தலைமேலே பிரம்பால் அடித்திடவே
(வருகின்றான் முருகன் வருகின்றான்)

துன்பத்தில் அவன்பாதம் நாடிவிட்டு - அவன்
துணையாலே வாழ்வெல்லாம் தேடிவிட்டு
இன்பத்தில் அவன்நாமம், தன்னை மறக்கின்ற
ஈனரைப் பதம் பார்க்க, இன்றே தான் விரைந்து...
(வருகின்றான் முருகன் வருகின்றான்)

கடவுள் பெயர்சொல்லி...பொருள்சேர்த்து - பின்பு
காணாமல் போகின்ற சிறியோரை,
அடையாளமே இன்றி அழித்திடவே - வெகு
ஆவேசமாய்க் கடம்பைக் கையோடு கொண்டு...
(வருகின்றான் முருகன் வருகின்றான்)

குரல்: TMS
வரி: ?
தொகுப்பு: "முருகா என்றழைக்கவா"


இன்று, போலி குருக்களைக் கைக்கொண்டு, தன் பாவத்தை போயும் போயும் இன்னொரு பாவியா கரைக்க முடியும் என்ற சாதாரண அறிவு கூட இல்லாது....

மாய மந்திர வித்தைகளுக்கும், குறி சொல்லுதற்கும், ஆரவார யோகம்-குண்டலினி-ன்னு வணிகத்தை அரங்கேற்றும் ஆன்மீக வணிகர்களை....ஒரே வரியில் என்ன சொல்லுறார் பாருங்க...

கடவுள் பெயர்சொல்லி...பொருள்சேர்த்து - பின்பு
காணாமல் போகின்ற சிறியோரை....
இது தான் நாட்டு நடப்பில், கண்ணெதிரே காணும் உண்மை! குதிரை மீதிருந்தும் விழும் உண்மை! பகுத்தறிவே திருநள்ளாறு போனாலும், தோற்கும் உண்மை!

சுய-நலத்துக்காக, குறுக்கு வழியில் மோட்சம் கிடைக்காதா, துன்பம் விலகாதா-ன்னு போலி குருக்களிடம் போவானேன்? நோவானேன்??
அன்பால் தடவித் தரும் இனிய குரு...அவனே இருக்கும் போது...குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

உண்டியலில் எந்த ஆழ்வாராவது காசு போட்டு இருக்காரா? இல்ல, உண்டியல் காசால் பாவம் தான் கரையுமா?
கண்ணிலே தான் ரெண்டு சொட்டுத் தண்ணி இருக்கே! பாலைவனத்திலும் அந்தத் தண்ணி வத்தாதே! அதால் கரையாததா, காசால் கரையப் போகுது?

முருகாஆஆஆ என்று வலியில் சிந்தும் அந்த விழித்துளி மலர்கள்!
என்னவனுக்கு என் ஈரம்! வருகின்றான் முருகன் வருகின்றான்!!

Saturday, July 02, 2011

ஆயில்யன் திருமணம் - அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்!

ஆயில்யன் அண்ணாச்சியின் திருமணம் இன்று! (Jul-03-2011)!
முருகனருளில், இன்று ஆயில்யன் சிறப்புப் பாடல்!!


திருவாரூர் கமலாலயம் குளக்கரையில், மணப்பந்தலின் கீழ்,
கவின்மிகு இல்லறத்தில் மகிழத் துவங்கும்
அனு-ஆயில்யன்
தம்பதிகளை

வாழ்த்துவோம், மக்கா! வாங்க, வாங்க!
முருகனருளால் நீடு பீடு வாழ்க! நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!

ஆயில்யன் முருக பக்தர்! முருகனருள் வலைப்பூவின் நெடுநாள் வாசகர்!
அவர் திருமணத்துக்கு நானும்-என்னவன் முருகனும் மகிழ்வுடன் வந்து வாழ்த்துகிறோம்! :)பஞ்சவர்ணக் கிளி என்னும் படத்தில், ஒரு திருமண வரவேற்பு (ரிசப்ஷன்);
அதில் ஒரு நடனக் காட்சி. மிருதங்கத்துக்கு என்றே ஒரு கட்டம் வரும் பாருங்க; நிஜமாலுமே சூப்பர்!
பாட்டை விட ஒவ்வொரு பத்தியின் முடிவிலும், சுசீலாம்மா ஆஆஆ என்று இழுப்பாங்க பாருங்க, அது இன்னமும் சூப்பர்!

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
- இது தான் அந்த நடனம் + பாடல்!
சுசீலாம்மாவின் தேன் குழையும் குரலில், பாட்டைக் கேட்க...பார்க்க...


சத்தியம், சிவம், சுந்தரம்! ஆஆஆ....
சரவணன் திருப்புகழ் மந்திரம்! ஆஆஆ....

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்.
அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன் - அவன்
அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)


பனி பெய்யும் மாலையிலே, பழமுதிர் சோலையிலே,
கனி கொய்யும் வேளையிலே, கன்னி மனம் கொய்து விட்டான்!
பன்னிரெண்டு கண்ணழகைப் பார்த்திருந்த பெண்ணழகை,
வள்ளல் தான் ஆளவந்தான், பெண்மையை வாழ வைத்தான்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)


மலை மேல் இருப்பவனோ, மயில் மேல் வருபவனோ!
மெய்யுருக பாடி வந்தால் தன்னைத் தான் தருபவனோ!
அலை மேல் துரும்பானேன், அனல் மேல் மெழுகானேன்,
அய்யன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)


படம்: பஞ்சவர்ணக்கிளி
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வரிகள்: வாலி
குரல்: பி.சுசீலா


அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன் !
"உனக்கே என்னை விதி"யென்ற இம்மாற்றம், நாங்கடவா வண்ணமே நல்கு!

அச்சோ! 10:00 மணி ஃபிளைட் பிடிக்கணும் பிரேசிலுக்கு!
ஆல்ரெடி லேட்டு! ஓடு......
இந்தக் கல்யாணப் பதிவின் பின்னூட்டங்களைக் குமரன் அண்ணா கொஞ்சம் பாத்துக்கோங்க! :) Bfn!

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP