Sunday, June 19, 2011

வள்ளி - உனக்காகவே பிறந்த முருகன்!

வள்ளியின் பாதங்களை, முருகன் 'வருடி விடுவதாக' அருணகிரி மட்டுமே அடிக்கடி பாடுவாரு! வேறு யாரும் சொன்னதில்லை! ஏன்?
* ஏன்-ன்னா அருணகிரியின் மனம் பேதை மனம்!

அவருக்கு நிறுவனக் கட்டுகள் கிடையாது!
பெருமாளே-ன்னும் திருப்புகழில் முடிப்பாரு! வள்ளியின் காலைத் தொட்டான் முருகன்-ன்னும் பாடுவாரு! இப்படி யாருமே செய்ததில்லை!

//பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா// - திருப்புகழ்
முருகன் இவ்வாறு செய்வதாக, கற்பனை பண்ணிப் பார்க்கும் போது...என் மனம் நினைத்தாலே இனிக்கும்!

பொதுவா புருசன் காலைப் பொண்டாட்டி பிடிச்சி விடுவதாகத் தான், சினிமாவில் காட்டிக் காட்டி, நம்மூருல பழக்கம்!
திருமகள் "இதோ திருவடிகள்" என்று இறைவனைக் காட்டிக் கொடுப்பதற்காக அந்தப் பக்கம் அமர்ந்திருந்தால், அவளையும் கால் பிடித்து விடுபவளாக நம் சினிமா ஆக்கி விட்டது!:)

அம்மி மிதிக்கும் போது, "என் குலத்தை நீ தான் தாங்கணும்"-ன்னு, ஒரே ஒரு முறை மட்டும், பெண்டாட்டி காலைப் புருசன் பிடிப்பான் என்று தத்துவம் பேசுவாங்க! :)
அதுக்கு அப்புறம் பிடிச்சா "ஆண்மைக்கு" இழுக்கு-ன்னு சமூகம் பேசும்! பொண்டாட்டி தாசன்-ன்னு வேற பட்டம் கட்டும்! :)

ஆனால் சேயோனாகிய முருகப் பெருமான், அடிக்கடி வள்ளியை ஏன் பாதத்தில் தொடணும்? ஆம்பளைப் பசங்க வேற என்னமோவெல்லாம் தானே தொடுவாய்ங்க? :)
இதழ், கன்னம், அதுக்கும் கீழே, அப்படி இப்படி-ன்னு இருப்பதை விட்டுட்டு...என் முருகனுக்கு "அதுல" எல்லாம் வெவரம் போதாதா? :)))




வள்ளி, மாயோன் திருமாலின் மகள்! அவளுக்கு வைணவம் தான் பொறந்த வீடு! அப்போதே முருகன் மேல் மாறாத காதல், தீராத அன்பு!
ஆனால் உடனே முருகனை மணக்க முடியவில்லை! தவம் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது! பூவுலகக் காதலால் தான் ஆட்கொள்ளப் படுவாள் என்றும் சொல்லப் பட்டது! என்ன செய்வாள் பேதை? :(

வைணவக் கொழுந்தானவள், நம்பியின் மகளாகப் பிறக்கிறாள்! உலகத்தையே அளந்த மாயோனின் செல்வ மகள், காடு மேடு எல்லாம் அலைகிறாள்!
எதற்கு காத்திருப்பு என்று தெரியாமலேயே, பாவம் அவளுக்குக் காத்திருப்பு!
இத்தனைக்கும் முருகன் அவளிடம் ஆசையாக ஒரு வார்த்தை கூட முன்பு பேசியதில்லை!

இப்படி, தான் பார்க்காத ஒரு முருகனுக்காக,
வீட்டில் பார்க்கும் எல்லா மாப்பிள்ளையும் தட்டிக் கழித்தாள்!
சில சமயம் வீரமாய் விரட்டவும் விரட்டினாள்! :)

* முருகன் தன்னைக் காதலிக்கிறானா? = தெரியாது...
* முருகன் வருவானா இல்லையா = தெரியாது...
* இருப்பினும், அவன் அந்தமில் சீர்க்கு அல்லால் "வேறு எங்கும் அகம் குழைய மாட்டேனே"!

அவன் காதலிலேயே, அவள் ஆழ்ந்து இருந்தாள்! - Hymns Of The Drowning!

காடு மேடு எல்லாம், குகைகள் தோறும், கால் தேயத் தேய, மனமும் தேயத் தேய அலைந்து திரிந்தவள் வள்ளி!
அதனால் தான் முருகப் பெருமான், அந்தத் தேய்ந்த போன வள்ளிப் பாதங்களைப் பிடித்துக் கொண்டான்! பிடித்து இன்னும் வருடிக் கொடுக்கிறான்!

இவள் எனக்காகவே மேலுலகில் நடந்து தேய்ந்தாளே, பின் அங்கிருந்து கீழே வந்து-வளர்ந்து, தினைப்புனத்தில் நடந்து நடந்து தேய்ந்தாளே! ஹைய்யோ!
நடந்த கால்கள் நொந்தவோ
இடந்த மெய் குலுங்கவோ?

//பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா//
இராமனின் பாதுகைக்கு "பாதுகா பட்டாபிஷேகம்"-ன்னு சொல்லுவாய்ங்க!
ஆனால் காதல் பாதங்களுக்கு, காதல் முருகன் செய்யும், இந்தப் பாதுகா பட்டாபிஷேகம், எந்தப் பாதுகா பட்டாபிஷேகத்துக்கும் ஈடாகாது!

பாதம் வருடிய மணவாளா! பாதம் வருடிய மணவாளா!



ஸ்ரீ வள்ளி என்றொரு படம்!
அதற்கும் முன்பே KB சுந்தராம்பாள்-SG கிட்டப்பா மேடை நாடகம் மூலமாக...மிகப் பிரபலமான வள்ளித் திருமணக் கதை!

ஆனால் படமாக வந்த போது மெகா ஹிட்! காயாத கானகத்தே என்ற பாட்டும் இதில் தான்!
TR மகாலிங்கம் முருகனாக நடிக்க-ருக்மிணி தேவி வள்ளியாக நடித்தார்! AVM என்ற நிறுவனத்துக்கு மாபெரும் முதல் வெற்றி!

ஆனால் பல நாள் கழித்து, சிவாஜி முருகன்-பத்மினி வள்ளியாக நடிக்க, இன்னொரு படமும் வந்தது! அது அவ்வளவு ஹிட் ஆகவில்லை! முன்பு முருகனாக நடித்த TR மகாலிங்கம், இதில் நாரதர்:)
படத்தில் சுசீலாம்மா, சீர்காழி, TMS, சந்திரபாபு எனப் பலரும் பாடியுள்ளனர்! இனிமையான பாடல்கள்! அதில் ஒன்று...இன்று முருகனருளில்...


வலையேற்றித் தந்த தோழன் இராகவனுக்கு நன்றி!

உனக்காகவே பிறந்த அழகன்
உனக்காகவே பிறந்த முருகன்

உனக்காகவே பிறந்த அழகன்
திரு உருவான மால் மருகன் - வேல் முருகன்

நினைத்தாலே உள்ளமும் கனியாதா - செந்தமிழ்
நிதியான பதியோடு மகிழ் வாய்த்ததா!
இணையற்ற வீரன் குமாரன் - திரு முருகன்
உனக்காகவே பிறந்த முருகன்!

படம்: ஸ்ரீவள்ளி
வரிகள்: ?
குரல்: TR மகாலிங்கம்
இசை: ஜி.ராமநாதன்


முருகா.....உனக்காகவே பிறந்த ஜீவனை உன்னிடமே சேர்த்துக் கொள்!

வாரணமாயிரம் சூழ வலம் செய்து
ஏரக முருகன் ஏகின்றான் என்றெதிர்
அவனுக்கே என்னை விதி என்ற இம்மாற்றம்
நான் கடவா வண்ணமே நல்கு!

18 comments:

S.Muruganandam June 20, 2011 1:18 AM  

//இவள் எனக்காகவே மேலுலகில் நடந்து தேய்ந்தாளே, பின் அங்கிருந்து கீழே வந்து-வளர்ந்து, தினைப்புனத்தில் நடந்து நடந்து தேய்ந்தாளே! ஹைய்யோ!
நடந்த கால்கள் நொந்தவோ
இடந்த மெய் குலுங்கவோ?//

Arumai, Arumai

Lalitha Mittal June 20, 2011 6:56 AM  

காலுக்குமாறாக ஒருவரை ஒருவர் கழுத்தைப்பிடித்துக்கொள்ளும் இக்கலியுகத்தில், வள்ளியின் காலைப்பற்றி வருடும் கந்தனைப்பற்றிய பதிவு மிகவும் "ஆறுதலை"கொடுக்கிறது!



ராதாக்ருஷ்ணன் என்று 'கண்ணனுக்காக உருகிய ராதை'யை முதலில் வைத்துக் கண்ணனை அழைப்பதுபோல் கந்தனுக்காக உருகிய குறமகளை முதலில் வைத்து 'வள்ளிக்கந்தன்' என்றோ,அல்லது உன் அழகிய தமிழில் வேறேதாவது பேரோ சொல்லி அவனை அழைத்தாலென்ன!இன்றே புது நாமகரணம் செய்துவிடு நம் கந்தனுக்கு!

Kavinaya June 20, 2011 10:23 PM  

பாடல் short and sweet :) (பத்மினி)வள்ளியோட கனவுக் கண்களும்!

//
* முருகன் தன்னைக் காதலிக்கிறானா? = தெரியாது...
* முருகன் வருவானா இல்லையா = தெரியாது...
* இருப்பினும், அவன் அந்தமில் சீர்க்கு அல்லால் "வேறு எங்கும் அகம் குழைய மாட்டேனே"!//

நன்றாகச் சொன்னீர்கள். எதிர்பார்ப்பின்றி அன்பு செய்தாள் வள்ளி. அதைப் போன்ற அன்பை என(நம)க்கும் கந்தவேள் தரணும்.

Kannabiran, Ravi Shankar (KRS) June 20, 2011 10:35 PM  

@கைலாஷி ஐயா - நன்றி!
புதுமணத் தம்பதிகள், பெண்ணும் மாப்பிள்ளையும் நலமா?

Kannabiran, Ravi Shankar (KRS) June 20, 2011 10:43 PM  

@லலிதாம்மா
ஆறுதலையான் ஆறுதலைக் கொடுத்தது கண்டு மகிழ்ச்சி!

//உன் அழகிய தமிழில் வேறேதாவது பேரோ சொல்லி அவனை அழைத்தாலென்ன!//

என் அழகுத் தமிழா?:)
என்னவன் அழகுத் தமிழ்!

உண்மை தான்! பெருமாளுக்கு எப்பமே சேர்த்தி தான்! அதுவும் அவளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளும் அப்பன்!:)
திரு+மால், ஸ்ரீமன் நாராயணன் - இப்பிடித் தானே சொல்றோம்!
மால்திரு, நாராயண ஸ்ரீ-ன்னா சொல்லுறோம்?:)

எனக்கு அடிக்கடி ஒரு சொல் ஓடும் மனசுக்குள்ள...என் முருகனைப் பற்றி...அது...அது...அது...
வள்ளியமுதன்!

Kannabiran, Ravi Shankar (KRS) June 20, 2011 10:44 PM  

ஏய்...வள்ளியமுதா! என்னைக் கொஞ்சம் பாரேன்...

குமரன் (Kumaran) June 20, 2011 10:48 PM  

வள்ளி மணாளன் திருப்பெயர் சொன்னால் உள்ளம் உருகாதோ? இனிமையான பாடல்! நன்றி இரவி இராகவர்களே!

Kannabiran, Ravi Shankar (KRS) June 20, 2011 10:50 PM  

@கவி-க்கா
//(பத்மினி)வள்ளியோட கனவுக் கண்களும்!//

பத்மினி ஒங்களுக்கு பிடிக்குமாக்கா? ஓ, நாட்டியப் பேரொளி-ல்ல?:)

//நன்றாகச் சொன்னீர்கள். எதிர்பார்ப்பின்றி அன்பு செய்தாள் வள்ளி//

வள்ளியின் வலி ரொம்ப அதிகம்-க்கா! எனக்கு நல்லாத் தெரியும்! முருகன் ஏற்றுக் கொள்வானா-ன்னு கூடத் தெரியாது, அவனுக்காகவே ஆயுசுக்கும் காத்துக் கிடக்கணும்-ன்னா...அந்த மனசு வேற யாருக்கும் அவ்ளோ சீக்கிரம் வராது! அவனையே எண்ணி எண்ணி...அவள் ஆவியே பாதி கரைந்து போனது...அப்படியொரு காத்திருப்பு!

Kannabiran, Ravi Shankar (KRS) June 20, 2011 10:53 PM  

@குமரன் அண்ணா
//வள்ளி மணாளன் திருப்பெயர்//

ஆமாம்! அவன் பேர் முருகன் இல்ல! வள்ளி மணாளன்! வள்ளியமுதன்!

//நன்றி இரவி இராகவர்களே!//

:)
உங்களை வணங்கிக் கொள்கிறோம்!

Kavinaya June 21, 2011 8:33 AM  

சொல்ல மறந்துட்டேன். கடைசி படம் ரொம்ப அழகா இருக்கு. ஒரு சின்ன சந்தேகம் - வள்ளி வலது பக்கத்தில்தானே இருப்பா?

பி.கு.: நீங்க ஏன் படுத்திருக்க படங்களையே தேர்ந்தெடுக்கிறீங்க? ப.கொ.பெ. உடைய பக்தர்ங்கிறதாலயா? :)

Kannabiran, Ravi Shankar (KRS) June 21, 2011 7:30 PM  

@கவிக்கா
கடைசிப் படம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிமலை முருகன்! அங்கு முருகன்-வள்ளி மட்டுமே!

தாலி கட்டும் போது எப்பமே பெண் வலப்புறம்!
அது முடிஞ்சி சேஷை போடும் போது அவள் இடப்புறம்!
இங்கே மணக்கோலம் முடிந்து, அடுத்த கோலம்! அதான்!:)

நான் ஏன் பள்ளி கொண்ட போஸிங்-கா?
என்ன தான் முருகா-ன்னு அவனைக் கெட்டியா பிடிச்சிக்கிட்டாலும், பொறந்த வீட்டு கலாச்சாரம் மறக்கவே மாட்டேன்! அதான் ப.கொ.பெ!:)

Lalitha Mittal June 22, 2011 4:47 AM  

புதுப்பேரைப் படித்ததுமே அந்தப்பேருள்ள பாட்டு எழுதணும்னு ஆசை வந்துடுத்து!பாரதிதாசன் பாட்டை நினைத்தவண்ணம் கிட்டத்தட்ட அதேமெட்டில்எழுதிட்டேன் சின்னதா ஒரு பாட்டு!



குகனுக்கு அமுதனென்று பேர்!

வள்ளியமுதனென்று பேர்! -குரு

குகன்,ஆறுமுகன் நமது உயிருக்கு நேர்!

உயிருக்கு நேர்!

குகனுக்கு குமரனென்று பேர்!-குரு

குகன் கொஞ்சுந்தமிழ் மொழித்தருவிற்கு வேர்!



[குகனுக்கு அமுதனென்று பேர்!

வள்ளியமுதனென்று பேர்! -குரு

குகன்,ஆறுமுகன் நமது உயிருக்கு நேர்!

உயிருக்கு நேர்!]



குகன் தருவான் துன்பத்தில் தோள்!குரு

குகன் நம்மைக் காக்கவே ஏந்தினான் வேல்!

குகனைக் காணாக் கண் வெறும் புண்!குரு

குகனை நாம் போற்றியே பாடுவோம் பண்!



[குகனுக்கு அமுதனென்று பேர்!

வள்ளியமுதனென்று பேர்! -குரு

குகன்,ஆறுமுகன் நமது உயிருக்கு நேர்!

உயிருக்கு நேர்!]

Kannabiran, Ravi Shankar (KRS) June 22, 2011 5:35 AM  

@லலிதாம்மா
அடியேன் மனத்தால் நினைத்து நினைத்து வாழும் அந்தப் பேரை - வள்ளியமுதன் - அதைப் பாட்டாக்கிய உங்களை, அடிக்கீழ் விழுந்து பணிந்து கொள்கிறேன்!

என்முருகா-வள்ளியமுதா...All that I ask: Take me as Yours!

Kannabiran, Ravi Shankar (KRS) June 22, 2011 5:56 AM  

ஆழகான பாடல் லலிதாம்மா!
உங்க பாட்டில், ஒரு பத்தி அவளுக்கும் சேர்த்து...

வள்ளிக்கு மெய் என்று பேர் - முருகன்
அன்னவள் மெய்யில் உயிர் என்று சேர்!
உயிரென்று சேர்!

வள்ளி அமுதனின் மேல் - நான்
துள்ளி அவன்கையில் வேல் என்று சேர்!
வேல் என்று சேர்!

இந்திரன் June 24, 2011 4:35 AM  

எனக்கென்னவோ முருகன் சேயோனாக இருந்த காலத்தில் வள்ளி மட்டுமே அவன் மனைவியாக இருந்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. (தரவு இல்லை. வெறும் கருத்து அடிப்படையிலான கூற்று மட்டுமே) வள்ளியை ஏற்றுக்கொண்ட அளவுக்கு தேவயானியை ஏனோ ஏற்க முடியவில்லை. முருகன், குறிஞ்சி மக்களின் தலைவனாகவோ, அவர்கள் தம்மைப் போலவே உருவகப் படுத்திக்கொண்ட கடவுளாகவோ இருந்திருக்கக்கூடும். துணைவி-அவர்கள் குலப்பெண் வள்ளியே. புராண இணைப்புகள் எல்லாம் பின்னரே. சேயோன் ஸ்கந்தன் ஆன பின்பே தேவயானி பிற்காலத்தில் இணைக்கப்பட்டு மூத்தோள் ஆகியிருப்பாள். (ஜஸ்ட் லைக் விநாயகருக்குப் பின் முருகன்) இது வெறும் ஊகம் மட்டுமே.

Kannabiran, Ravi Shankar (KRS) June 24, 2011 11:38 AM  

@இந்திரன்
தேவானை அம்மையைப் பற்றித் தாழ்வாகப் பேசம் மனம் எண்ணா விட்டாலும்...
பண்டைத் தமிழ்க் கடவுள் என்று பார்க்கும் போது, வள்ளியே மனத்தில் முன்னிற்கிறாள்!

இது பற்றி மேலும் பேசினால், என் பதிவுலகத் தம்பி @வெட்டிப்பையல் என்னைக் கொல்லவும் துணிவான்!:) அதனால் இத்தோடு விட்டு விடுகிறேன்! :))

Here...இறுதி அலங்காரம்-வள்ளி என்பவள் யார்?

குமரன் (Kumaran) June 24, 2011 12:05 PM  

இந்திரன்,

முடிந்தால் எனது 'கூடல்' பதிவில் 'இலக்கியத்தில் இறை' வகையில் வரும் முருகன் பதிவுகளைப் படித்துப் பாருங்கள். உங்கள் கருத்தினைக் கொஞ்சம் ஆராயும் இடுகைகள் சில அங்கே இருக்கின்றன.

இந்திரன் June 24, 2011 11:59 PM  

அழைப்புக்கு நன்றி குமரன் சார். இதோ கூடல் பிரவேசம்... :)

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP