Sunday, June 19, 2011

வள்ளி - உனக்காகவே பிறந்த முருகன்!

வள்ளியின் பாதங்களை, முருகன் 'வருடி விடுவதாக' அருணகிரி மட்டுமே அடிக்கடி பாடுவாரு! வேறு யாரும் சொன்னதில்லை! ஏன்?
* ஏன்-ன்னா அருணகிரியின் மனம் பேதை மனம்!

அவருக்கு நிறுவனக் கட்டுகள் கிடையாது!
பெருமாளே-ன்னும் திருப்புகழில் முடிப்பாரு! வள்ளியின் காலைத் தொட்டான் முருகன்-ன்னும் பாடுவாரு! இப்படி யாருமே செய்ததில்லை!

//பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா// - திருப்புகழ்
முருகன் இவ்வாறு செய்வதாக, கற்பனை பண்ணிப் பார்க்கும் போது...என் மனம் நினைத்தாலே இனிக்கும்!

பொதுவா புருசன் காலைப் பொண்டாட்டி பிடிச்சி விடுவதாகத் தான், சினிமாவில் காட்டிக் காட்டி, நம்மூருல பழக்கம்!
திருமகள் "இதோ திருவடிகள்" என்று இறைவனைக் காட்டிக் கொடுப்பதற்காக அந்தப் பக்கம் அமர்ந்திருந்தால், அவளையும் கால் பிடித்து விடுபவளாக நம் சினிமா ஆக்கி விட்டது!:)

அம்மி மிதிக்கும் போது, "என் குலத்தை நீ தான் தாங்கணும்"-ன்னு, ஒரே ஒரு முறை மட்டும், பெண்டாட்டி காலைப் புருசன் பிடிப்பான் என்று தத்துவம் பேசுவாங்க! :)
அதுக்கு அப்புறம் பிடிச்சா "ஆண்மைக்கு" இழுக்கு-ன்னு சமூகம் பேசும்! பொண்டாட்டி தாசன்-ன்னு வேற பட்டம் கட்டும்! :)

ஆனால் சேயோனாகிய முருகப் பெருமான், அடிக்கடி வள்ளியை ஏன் பாதத்தில் தொடணும்? ஆம்பளைப் பசங்க வேற என்னமோவெல்லாம் தானே தொடுவாய்ங்க? :)
இதழ், கன்னம், அதுக்கும் கீழே, அப்படி இப்படி-ன்னு இருப்பதை விட்டுட்டு...என் முருகனுக்கு "அதுல" எல்லாம் வெவரம் போதாதா? :)))
வள்ளி, மாயோன் திருமாலின் மகள்! அவளுக்கு வைணவம் தான் பொறந்த வீடு! அப்போதே முருகன் மேல் மாறாத காதல், தீராத அன்பு!
ஆனால் உடனே முருகனை மணக்க முடியவில்லை! தவம் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது! பூவுலகக் காதலால் தான் ஆட்கொள்ளப் படுவாள் என்றும் சொல்லப் பட்டது! என்ன செய்வாள் பேதை? :(

வைணவக் கொழுந்தானவள், நம்பியின் மகளாகப் பிறக்கிறாள்! உலகத்தையே அளந்த மாயோனின் செல்வ மகள், காடு மேடு எல்லாம் அலைகிறாள்!
எதற்கு காத்திருப்பு என்று தெரியாமலேயே, பாவம் அவளுக்குக் காத்திருப்பு!
இத்தனைக்கும் முருகன் அவளிடம் ஆசையாக ஒரு வார்த்தை கூட முன்பு பேசியதில்லை!

இப்படி, தான் பார்க்காத ஒரு முருகனுக்காக,
வீட்டில் பார்க்கும் எல்லா மாப்பிள்ளையும் தட்டிக் கழித்தாள்!
சில சமயம் வீரமாய் விரட்டவும் விரட்டினாள்! :)

* முருகன் தன்னைக் காதலிக்கிறானா? = தெரியாது...
* முருகன் வருவானா இல்லையா = தெரியாது...
* இருப்பினும், அவன் அந்தமில் சீர்க்கு அல்லால் "வேறு எங்கும் அகம் குழைய மாட்டேனே"!

அவன் காதலிலேயே, அவள் ஆழ்ந்து இருந்தாள்! - Hymns Of The Drowning!

காடு மேடு எல்லாம், குகைகள் தோறும், கால் தேயத் தேய, மனமும் தேயத் தேய அலைந்து திரிந்தவள் வள்ளி!
அதனால் தான் முருகப் பெருமான், அந்தத் தேய்ந்த போன வள்ளிப் பாதங்களைப் பிடித்துக் கொண்டான்! பிடித்து இன்னும் வருடிக் கொடுக்கிறான்!

இவள் எனக்காகவே மேலுலகில் நடந்து தேய்ந்தாளே, பின் அங்கிருந்து கீழே வந்து-வளர்ந்து, தினைப்புனத்தில் நடந்து நடந்து தேய்ந்தாளே! ஹைய்யோ!
நடந்த கால்கள் நொந்தவோ
இடந்த மெய் குலுங்கவோ?

//பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா//
இராமனின் பாதுகைக்கு "பாதுகா பட்டாபிஷேகம்"-ன்னு சொல்லுவாய்ங்க!
ஆனால் காதல் பாதங்களுக்கு, காதல் முருகன் செய்யும், இந்தப் பாதுகா பட்டாபிஷேகம், எந்தப் பாதுகா பட்டாபிஷேகத்துக்கும் ஈடாகாது!

பாதம் வருடிய மணவாளா! பாதம் வருடிய மணவாளா!ஸ்ரீ வள்ளி என்றொரு படம்!
அதற்கும் முன்பே KB சுந்தராம்பாள்-SG கிட்டப்பா மேடை நாடகம் மூலமாக...மிகப் பிரபலமான வள்ளித் திருமணக் கதை!

ஆனால் படமாக வந்த போது மெகா ஹிட்! காயாத கானகத்தே என்ற பாட்டும் இதில் தான்!
TR மகாலிங்கம் முருகனாக நடிக்க-ருக்மிணி தேவி வள்ளியாக நடித்தார்! AVM என்ற நிறுவனத்துக்கு மாபெரும் முதல் வெற்றி!

ஆனால் பல நாள் கழித்து, சிவாஜி முருகன்-பத்மினி வள்ளியாக நடிக்க, இன்னொரு படமும் வந்தது! அது அவ்வளவு ஹிட் ஆகவில்லை! முன்பு முருகனாக நடித்த TR மகாலிங்கம், இதில் நாரதர்:)
படத்தில் சுசீலாம்மா, சீர்காழி, TMS, சந்திரபாபு எனப் பலரும் பாடியுள்ளனர்! இனிமையான பாடல்கள்! அதில் ஒன்று...இன்று முருகனருளில்...


வலையேற்றித் தந்த தோழன் இராகவனுக்கு நன்றி!

உனக்காகவே பிறந்த அழகன்
உனக்காகவே பிறந்த முருகன்

உனக்காகவே பிறந்த அழகன்
திரு உருவான மால் மருகன் - வேல் முருகன்

நினைத்தாலே உள்ளமும் கனியாதா - செந்தமிழ்
நிதியான பதியோடு மகிழ் வாய்த்ததா!
இணையற்ற வீரன் குமாரன் - திரு முருகன்
உனக்காகவே பிறந்த முருகன்!

படம்: ஸ்ரீவள்ளி
வரிகள்: ?
குரல்: TR மகாலிங்கம்
இசை: ஜி.ராமநாதன்


முருகா.....உனக்காகவே பிறந்த ஜீவனை உன்னிடமே சேர்த்துக் கொள்!

வாரணமாயிரம் சூழ வலம் செய்து
ஏரக முருகன் ஏகின்றான் என்றெதிர்
அவனுக்கே என்னை விதி என்ற இம்மாற்றம்
நான் கடவா வண்ணமே நல்கு!

Friday, June 17, 2011

அழகு மயில் ஏறி...


அழகுமயில் ஏறிகுகன் ஆடி வந்தான் – நல்ல
பழகுதமிழ் பாடலிலே மயங்கி நின்றான்
பண்மலரால் பதம்பணிய மகிழ்ந்து நின்றான் – அவன்
கண்மலர்கள் தாம்செருக கனிந்து நின்றான்!

பழத்திற்கென கோபங்கொண்டு பழனியானவன் - அவன்
பழுத்தவன்போல் பாடஞ்சொல்லி சுவாமியானவன்
விருத்தனைப்போல் நடித்துவள்ளி கணவனானவன் – அவன்
திருத்தணியில் மணக்கோலம் கொண்டுஅருள்பவன்!

அன்னைதந்த வேலைத்தாங்கி வேலனானவன் – அவன்
அசுரர்களை அழித்துஅரிய வீரனானவன்
பரிசெனவே தேவயானை தன்னை அடைந்தவன் – அவன்
கரிசனமாய் அடியவரைக் காத்து மகிழ்பவன்!


--கவிநயா

என் மனசில் நினைச்சு எழுதிய ராகத்திலேயே சுப்பு தாத்தாவும் பாடித் தந்திருக்கார்! மிக்க நன்றி தாத்தா!படத்துக்கு நன்றி: http://my.opera.com/Tamil/albums/showpic.dml?album=196902&picture=5521553

Tuesday, June 14, 2011

அபகார நிந்தை - ஆறுதல் திருப்புகழ்!

வீண் அபவாதத்தில் மாட்டிக் கொண்டு முழிக்கும் போது, ஆறு தலையால் ஆறுதல் கொடுத்து, ஆற்றும் ஆற்றுப்படை எது?

நக்கீரரின் திருமுருகு ஆற்றுப்படையா? = இல்லை!
இது திருப்புகழ் ஆறுதல்! அவனே தன் கரத்தால், மெல்ல மெல்ல வருடிக் கொடுத்து, ஆற்றுப்படுத்துவது!

ஆமாம்! இந்தத் திருப்புகழ் மிகவும் மனமுருக்கும் திருப்புகழ்!

மிகவும் நொந்த நிலையில் தற்கொலைக்கு முயன்ற அருணகிரி, முருகனால் காப்பாற்றப்பட்டு, சில பாடல்களைப் பாடத் துவங்கி இருந்தார்!
அந்த வேளையில் தான் என்னவோ, அவரின் பாசமே உருவான அக்கா = ஆதி, இளம் வயதிலேயே மரணம் அடைந்தார்!

* தனக்கு மணமாகா விட்டாலும், தம்பிக்கு முதலில் மணமுடித்து, அவன் காம வேள்வியைக் கட்டுப்படுத்த எண்ணியவர்!
* அப்போதும் அடங்காத தம்பி, குடும்பத்தையும் கவனிக்காது போகவே, தான் ஓடாய் உழைத்து, அவன் மனைவியையும் காத்தவர்!
* நோய் பீடித்த தம்பியை, தாய் போல் அரவணைத்துக் காத்தவர்!

* அப்போதும் காமம் அடங்காத தம்பி, அன்று சிரித்த கணிகையரால் இன்று ஒதுக்கப்பட்ட போது துடிதுடித்தான்! அடக்க முடியவில்லை! கதறினான்!
* அவன் படும் பாட்டைக் கண்டு, மனம் அடக்கத் தெரியாத தொழுநோய்த் தம்பிக்கு, "வா", என்று தன்னையே தரத் துணிந்தவர்!
* இந்த ஒரு வார்த்தை தான் அவனை ஒட்டு மொத்தமாய் புரட்டிப் போட்டது!

தாயினும் மேலான ஆதி அக்கா! தன் தாய் = முத்தை அவன் சரிவரக் கண்டதில்லை! அந்த முத்து = இந்த ஆதி!
'முத்தை'த் தரு பத்தித் திருநகை...என்று தாயாகவே துவங்கியது திருப்புகழ்...

அந்த அக்கா தான் இப்போ மரணமுற்றுக் கிடக்கிறார்கள்! இவனோ இப்போது அருணகிரி"நாதர்" ஆகி விட்டான்!
இருந்தாலும் இவனுக்கு உடைத்துக் கொண்டு வருகிறது!
ஊர் அரசல் புரசலாக ஏசுகிறது - இவள் வாழ்வு இப்படிப் பாழாய்ப் போனதற்கு இந்த அருணகிரி'நாதரே' காரணம்!!!

அதை எண்ணியெண்ணி அவன் தலம் தலமாகத் திரிய ஆரம்பிக்கின்றான்!
பழனியில் ஒரு பாலகன்!
அவன் தான் இவன் மனத்தை மயிலிறகால் வருடிக் கொடுக்கிறான்!
மனத்தை ஒருமைப்படுத்த, கையில் ஜபமாலையும் கொடுக்கிறான்! செபமாலை தந்த சற் குருநாதா என்று பாடுகிறார் அருணகிரி...பழனி மலையில்!

அபகார நிந்தை பட்டு - நான் உழலாதே
...முருகா...
செபமாலை தந்த சற் குருநாதாதலம்: பழனி
வரிகள்: அருணகிரிநாதர்

அபகார நிந்தை பட்டு.....உழலாதே
அறியாத வஞ்சரைக்......குறியாதே

உபதேச மந்திரப்..............பொருளாலே
உனைநான் நினைந்தருள்.......பெறுவேனோ?

இபமா முகன் தனக்கு......இளையோனே
இமவான் மடந்தை........உத்தமி பாலா

செபமாலை தந்த சற்......குருநாதா
திருவாவி னன்குடிப்........பெருமாளே!


மிகவும் எளிமையான திருப்புகழ்! பொருளே சொல்லத் தேவையில்லை! அவனே பொருளாக ஆகி விட்டான்!
இபமா முகன் = யானை முகன்; இமவான் மடந்தை = இமவான் பெண்ணான பார்வதி

திருவாவினன்குடி என்பது தான் உண்மையான படைவீடு! இது பழனிமலைக்கு கீழே உள்ள ஆலயம்!
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கணும் என்ற மக்களின் பேச்சு வழக்கால், பின்னாளிலே மலை மேல் போகர் ஒரு ஆலயம் அமைக்க...,
அந்த ஆண்டிக் கோலச் சிலையாலும் கதையாலும், மலைமேல் உள்ள ஆலயம் மிகுத்த புகழைப் பெற்று விட்டது!

இருப்பினும், பழனி செல்லும் போது, கீழேயுள்ள திருவாவினன்குடி ஆலயத்தையும் தரிசித்து வாருங்கள்!
மயில் மேல் காலை மடித்து, ஒயிலாய் அமர்ந்த என் முருகனைக் கண்ணாரக் கண்டு வாருங்கள்!

அபகார நிந்தை பட்டு - நான் உழலாதே
செபமாலை தந்த சற் குருநாதா
முருகா.....அபகார நிந்தையில் ஆறுதல் கொடு! அணைத்துக் கொள்!

Sunday, June 12, 2011

'வைகாசி விசாகன்!'

'வைகாசி விசாகன்!'

விசாகப் பெருமானே! வினையெல்லாம் தீர்ப்பவனே!
மயில்மீது வருபவனே! மனமகிழச் செய்பவனே!
வேதத்தின் மூலமே! வாழ்வளிக்கும் தெய்வமே!
உயிர்மேவும் அழகனே! உள்ளமெலாம் நிறைபவனே!


மேலான தெய்வமே! மெய்ப்பொருளாம் பிரணவமே!
மலையேறி வருபவர்க்கு மங்களங்கள் அளிப்பவனே!
வேலிருக்க வினையில்லை எனவென்முன் வருபவனே!
மலையிருக்கு மிடமெல்லாம் முருகனென அருள்பவனே!


சிவனாரின் நுதலினிலே பொறியாக வந்தவனே!
சரவணத்தில் குழந்தையென தவழ்ந்திங்கு உதித்தவனே!
புவியினிலே பல்வேறு அற்புதங்கள் செய்பவனே!
கரங்குவித்துத் தொழுபவரைக் கரையேற்றிக் காப்பவனே!


நாடிவரும் அடியவரின் துயரெல்லாம் தீர்ப்பவனே!
நானிலத்தில் மிக்காரும் ஒப்பாரு மிலாதவனே!
ஓடிவந்து அருளிடவே உனையன்றி யாரிங்கு!
மானென்னும் குறவள்ளி பதம்பணியும் மலைக்குகனே!


கோடிக்கோடி பக்தர்களின் குலதெயவம் நீதானே!
கோடிசூரியர் ஒளிசேர்ந்து குன்றின்மேல் திகழ்பவனே!
வேடிச்சி கரம்பிடிக்க வனத்தினிலே அலைந்தவனே!
தேடியுனைச் சரணடைந்தோம் தென்பழனி யாண்டவனே!


சூரனவன் செருக்கடக்கச் செந்தூரில் நின்றவனே!
சீறிவரும் வேல்விடுத்துச் சேனைகளை யழித்தவனே!
கூர்வேலால் சூரனவன் மார்பினையே பிளந்தவனே!
ஏறிவரும் பக்தர்களைக் காத்தருளும் குஞ்சரனே!


ஈராறு விழியாலே கருணையினைப் பொழிபவனே
இருக்கின்ற தொல்லையெல்லாம் தீர்ந்திடுமே நின்னருளால்
ஓராறு முகத்தினிலே மலர்கின்ற புன்சிரிப்பால்
தீராத வினையெல்லாம் தீர்த்தருளும் சேவகனே!


கண்ணிரண்டும் நின்னடியே காண வேண்டும்!
காலிரண்டும் நின்மலையே ஏற வேண்டும்!
தொண்டென்றும் நானுனக்கே செய்ய வேண்டும்!
நாவினிக்க நின்புகழைப் பாட வேண்டும்!


அன்னைதந்தை யானவனே! அறுமுகனே! அன்பனே!
ஏதுபிழை செய்தாலும் நீயெனையே பொறுத்திடணும்!
கன்னித் தமிழ்த் தெய்வமே! கந்தனே!நீ
காலமெலாம் என்னருகில் கைவேலுடன் வரவேணும்!


தெய்வானை இடமிருக்கக் குன்றத்தில் அருள்பவனே!
வள்ளித்தாய் வலமிருக்கத் திருத்தணியில் திகழ்பவனே!
மெய்ப்பொருளை உரைத்திடவே ஏரகத்தில் அமர்ந்தவனே!
பிள்ளைப் பிராயத்திலே பழனியிலே நின்றவனே!


அலைவாயில் அருகினிலே அருளுமெங்க ளழகனே!
பழமுதிர்ச் சோலையினிலே பக்தர்களைக் காப்பவனே!
கலையாத கல்வியும் குன்றாத செல்வமும்
நிலையாக நீயெமக்குத் தந்திடவே தாள்பணிந்தோம்!
******************


வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

முருகன் பிறந்தநாள்! - கற்பனை என்றாலும்,கற்சிலை என்றாலும்..

இன்று என் ஆசைத்திரு முருகனுக்குப் பிறந்தநாள்! (Jun 13-2011 வைகாசி விசாகம்)
Happy Birthday da, MMMMMMuruga! :)
இனிய பிறந்தநாளில் இனியது கேட்டு, உனக்கு என்றும் பல்லாண்டு பல்லாண்டு!

ஒவ்வொரு ஆண்டும் மூன்று பிறந்தநாட்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்! - முருகன், தோழி கோதை, ..... !
முருகன் 'பிறவான் இறவான்' என்கிற வசனம் உள்ளதால், அவன் 'உதித்த' நாள் என்றும் கொள்ளலாம்! எதுவானாலும் என்னவனுக்கு "Happy" Birthday!:)

வைகாசியில் வரும் விசாக நட்சத்திரத்தில் உதித்ததால், விசாகன் என்ற பெயரும் அவனுக்கு உண்டு!
அருவமும் உருவும் ஆகி, அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பு அதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்து, ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய!!!

அந்த விசாக-விசால மனத்தவனுக்கு, என் மேல் மட்டும்...அப்பப்போ ஊடல் வரும்! போடா-ன்னு எனக்கும் கோவம் வரும்!
அந்த நேரம் பார்த்து, சில பேர் என்னிடம் வந்து கேட்பாய்ங்க! - "முருகன்-ன்னு ஒருத்தரு இருக்காரு-ன்னு நல்லாத் தெரியுமா? இதெல்லாம் கற்பனை தானே?"

ஹா ஹா ஹா!
கற்பனை என்றாலும்...கற்சிலை என்றாலும்...
கந்தனே என் சொந்தனே!
ஊடலும் உனக்கே,
கூடலும் உனக்கே,
ஆவியும் உனக்கே,
நான் மொத்தமாய் உனக்கே!

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன் - நீ
(கற்பனை என்றாலும்)

அற்புதம் ஆகிய அருட்பெரும் சுடரே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
(கற்பனை என்றாலும்)

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனி மொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண் விழியாலே
(கற்பனை என்றாலும்)

குரல்: TMS
வரிகள்: வாலி


திருச்சி ரயில் நிலையம்! வண்டியில் உட்கார்ந்து கொண்டு இருந்தவர் பிரபல பாடகர் TMS! அவரிடம் இளைஞர் ஒருவர் தயங்கித் தயங்கித் தான் எழுதிய பாட்டைக் காட்டுகிறார்!
பாட்டைப் பார்த்தவுடனேயே TMS-க்கு பிடித்து விட்டது! ஏன்-னா பாட்டிலேயே சந்தமும் இருக்கு! அங்கேயே மெல்லிதாய்ப் பாடிப் பார்க்க....கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்...
இளைஞர், கவிஞர், வாலி.....பலருக்கும் அறிமுகமாகி, பெரும்புகழ் பெற்றார்!

வைகாசி விசாகம், இன்னும் இரண்டு பேரின் பிறந்தநாளும் கூட!
* ஒரு குழந்தை = முத்தமிழ் முருகன்
* இன்னொரு குழந்தை = அத்தமிழில் வேதம் செய்த மாறன் - நம்மாழ்வார்!
இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

முருகா.....
என் மேல ரொம்ப கோவப்படாதே-ன்னா?
நான் நினைப்பதும் நீ நிகழ்வதும்.....நின் செயலாலே! கரெக்ட்டு தான்!
ஆனா இதையும் தெரிஞ்சிக்கோ...
காண்பதெல்லாம் உந்தன் கண் விழியாலே!

நான் உன் கண்களின் வழியாகவே! = கண்களின் வார்த்தைகள் புரியாதோ? காத்திருப்பேன் என்று தெரியாதோ? Happy Birthday Honey! :)

Sunday, June 05, 2011

காதல் காவடிச் சிந்து! - முருகன் நடையழகு!

மாதவிப் பந்தல் பதிவுக்கு எதிர்ப் பதிவு இது! :)

பொதுவாக, இறைவனை வீதியுலாவுக்கு எழுந்தருளப் பண்ணும் போது, சிற்சில சமயம், நடையழகு காட்டப்படும்!
1. சிம்ம கதி = சிங்க நடை
2. கஜ கதி = ஆனை நடை
3. அஸ்வ கதி = புரவி நடை
4. ஹம்ஸ கதி = அன்ன நடை
5. சர்ப்ப கதி = அரவு நடை

* துவக்கத்தில் சிம்மம் போல் உதறிப் புறப்படுதல்,
* மெல்ல யானை போல் நடந்து,
* பின்பு குதிரை வேகம்!
* திரும்பி வரும் போது, களைப்பால் அன்ன நடை!
* கடைசியில், பாம்பு புற்றுக்குள் போகும் போது, தலையைப் படக்-ன்னு எட்டிப் பார்த்து, மொத்தமும் சுருட்டிக்கும்! அது போல் கருவறைக்குள் படக்-ன்னு புகுதல்!
= இதுவே நடையழகு!

இதெல்லாம் தோளில் சுமந்து வரும் போது மட்டுமே சாத்தியம்; தேரிலோ, வண்டிச் சகடையிலோ வைத்து இழுத்து வரும் போது சாத்தியப்படாது!

ஒரு சில வைணவத் தலங்களில் மட்டுமே, இந்தத் தோளில் கதி போட்டு, உலா வருவதைக் கவனித்துள்ளேன்! அதுவும் நாட்டியம் ஆடி ஆடி அழைத்து வரும் அழகு! மற்ற வைணவக் கோயில்களும் கூட நடையழகு கிடையாது! வெறும் சகடை தான்!

சென்னை, கபாலீஸ்வரர் கோயிலில் கொஞ்ச நேரம் தோளில் லேசாக ஆட்டினாலும், உடனே சகடைக்கோ, தேருக்கோ மாற்றி விடுவார்கள்! நடையழகு பூரணமாக இருக்காது!
திருவாரூரில் அஜபா நடனம்; திருவண்ணாமலையில் அதே போல! ஆனால் அங்கும் சகடையில் ஏற்றி விடுவார்கள்! ஈசன் = நடன நாயகன் அல்லவா! ஆனால் என் முருகன்?


இதைப் பார்க்கும் போதெல்லாம் மனசு அடிச்சிக்கும்! என் முருகனுக்கு இப்படிப் பண்ண மாட்டாங்களா, பண்ண மாட்டாங்களா-ன்னு!

முன்னால் கும்பலாய் தமிழ் ஓதி வர,
இறைவன் தமிழுக்குப் பின்னால்!
வடமொழி சொல்றவங்க சொச்சம் பேரு, இறைவனுக்கும் பின்னாடி கொஞ்சமாய் ஓதி வருவாங்க!

இவருக்கே இம்புட்டு கெத்து-ன்னா, என்னவன் முருகன் = மாப்பிள்ளை!
அவனுக்கு எம்புட்டு கெத்து இருக்கும்! போங்கடா! :) என் முருகனும் இப்படியெல்லாம் தோளிலே ஆடி ஆடி வரும் நாள் வரும்! தமிழ் ஓதி வரும் நாள் வரும்!

அது வரை, நான் உன்னை நடையழகு செய்விக்கிறேன்-டா, Darling Muruga! Come on Honey, Letz dance! :)* காவடிச் சிந்து ஒன்னை இன்று அவசரம் அவசரமாய் எழுதினேன்!
* படம் ஒருவன் பிறந்தநாளுக்கு வரைந்தது!
* அத்தனையும் இங்கே என் முருகனுக்கே இட்டு.....இதோ...காதல் காவடிச் சிந்து :)

(தந்தனத் தன, தந்தனத் தன,
தந்தனத் தன, தந்தனத் தன
- என்ற மெட்டிலான காவடிச் சிந்து)

வண்ண மயில் தோகை ஒன்று, முன்ன மாகப் பின்னி வைத்து
அங்கும் இங்கும் ஆடிஆடி நோக்குதே - கந்தன்
அழகு மயில் என்னை உற்றுப் பாக்குதே!

நெற்றி மேலது நீலச் சுட்டியும், பேசும் வாய்மொழி வெல்லக் கட்டியும்
விட்டுவிட்டு என்னை வந்துச் சீண்டுதே - கைகள்
தொட்டுத்தொட்டுக் கொஞ்சி என்னைத் தீண்டுதே!
(1)
------------------------------------------------------------

பழனி மலையதும், சாமி மலையதும், தணிகை மலையதும், சோலை மலையதும்
வாடி வாடி என்று என்னைக் கூவுதே - பரங்
குன்றும் செந்தூர் அலையும் காலை நீவுதே!

ஆறு ஊர் படை, வீடு மீதினில், நானும் அவனொடு, சேர்ந்து வாழ்ந்திட
ஆசை ஆசை என்று என்னை ஏவுதே - உள்ளம்
பாகில் ஊறும் பாலைப் போலப் பாவுதே!
(2)
------------------------------------------------------------

கந்தன் வந்தெனைக் கூட்டிச் செல்வேன், காலம் முழுவதும் காத்து நிற்பேன்
சொல்லி என்தன் மூச்சையும் முகர்ந்தனன் - சொக்கி
ஈர இதழில் இன்பத் தமிழைப் பகர்ந்தனன்!

வேலும் ஆடிட, மயிலும் ஆடிட, சேவற் கொடியும் சேர்ந்து ஆடிட
வேகம் வேகம் ஆக வேலன் கூடினன் - என்னுள்
வேண்டி வேண்டி என்னென்னமோ தேடினன்!
(3)
------------------------------------------------------------

தந்தனத் தன, தந்தனத் தன, தந்தனத் தன, தந்தனத் தன
ஆடி ஆடி மேனி யெல்லாம் வேர்த்தனன் - ஐயன்
தாவித் தாவித் தாகம் எல்லாம் தீர்த்தனன்!

மரகதத் திரு, மயில் அணித் திரு, மாயவன் தன், மகள் எனக்கொரு
காதலோடே ஆசை நடை நடந்தனன் - நான்
காணும் முன்னே வாசலைக் கடந்தனன்! ஐயோ

காணும் முன்னே வாசலைக் கடந்தனன்! (4)
------------------------------------------------------------

காணும் முன்னே வாசலைக்க-டம்பன் அந்தப் பாவி மீண்டும்
வேணும் என்றே வாசலை அடைந்தனன்!! - நீ
வேணும் என்றே என்னையும் அடைந்தனன்!! - முருகன்

வேணும் என்றே என்னையும் அடைந்தனன்!!

முருகா!.......

Thursday, June 02, 2011

ML வசந்தகுமாரி - குமரன் வரக் கூவுவாய்!

இசைக் குயில் எம்.எல்.வி! MLV - Madras Lalithangi Vasanthakumari! இவர்களை அறியாதவர்கள் இருக்க முடியாது!

கர்நாடக இசை, சினிமா இசை என்று பல துறைகளில் முத்திரை பதித்தவர்! ஒரு காலத்தில் (இன்றும்)  MLV-இன் திருப்பாவை ஆடியோ கேசட்டுகள் விற்றுச் சக்கை போடு போட்டன!

MLV - நடிகை ஸ்ரீவித்யா அவர்களின் தாயார்! இன்றைய முன்னணிக் கலைஞர்களான சுதா ரகுநாதன், A.கன்னியாகுமரி போன்றவர்களின் குருவும் கூட!
கண்ணன் மேல் உள்ள புரந்தரதாசரின் கன்னடக் கீர்த்தனைகளை இசை உலகில் பரவச் செய்ததில் பெரும் பங்கு MLV-க்கே!

மணமகள் படத்தில் பாரதியாரின் "சின்னஞ் சிறு கிளியே" பாடி, குறுகிய காலத்தில் மிகப் பிரபலம் ஆனவர்!
அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு படத்தில், "அய்யா சாமி" பாடலைப் பாடியதும் இவரே!  ராஜா தேசிங்கு படத்தில் இவர் பாடிய "பாற்கடல் அலை மேலே பாம்பணையின் மேலே" பாட்டு தான் நாளடைவில் பரதநாட்டியப் பாட்டாக மாறி விட்டது! :)

இன்று முருகனருளில்...
MLV-இன் முருகான முருகன் பாட்டு - குயிலே, உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்....

தமிழ்க் கடவுள் என் முருகனுக்கு எதுக்குய்யா "நமஸ்காரம்"? :) ஆனாலும் பாடல் அருமை!
மிகவும் அபூர்வமான பாட்டு! எம்.எல்.வி இளமைக் காலப் பாட்டு - சர்ச்சைகளுக்கு உள்ளான மனிதன் திரைப்படத்தில் இருந்து...
குயிலே உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்
குமரன் வரக் கூவுவாய் - நீ
(குமரன் வரக் கூவுவாய்)

மலை மாங்கனிச் சோலையிலே
மதுவாய் எனையே பிழிந்த
(குமரன் வரக் கூவுவாய்)

வருவார் வருவார் என்றே
வழி பார்த்தே விழி சோர்ந்தே
மாரன் கணைகள் அல்லால்
வீரன் வரக் காணேனே!
(குமரன் வரக் கூவுவாய்)

தருவார் மலர்க்கை என்றே
தவித்து ஏங்கி வாடுறேனே!
தருணம் மகிழ்ந்தே வந்தென்
தாகம் தனைத் தீர்ப்பாரோ?
(குமரன் வரக் கூவுவாய்)

படம்: மனிதன் (ரஜினி படம் அல்ல; பழைய படம்)
இசை: SV வெங்கட்ராமன்
வரி: ?
குரல்: எம்.எல்.வசந்தகுமாரி
ராகம்: யமுனா கல்யாணி

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP