Monday, October 18, 2010

இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

ஆன்மீகத்தைப் போயும் போயும், "சினிமாத்தனமாக" எழுதுவதாக முன்பெல்லாம் ஒரு அன்பான குற்றச்சாட்டு உண்டு, என் மீது! :)
ஆனால் இந்தக் குறிப்பிட்ட சினிமாப் பாட்டு போல், நான் தமிழாய் நேசிக்கும் அருணகிரியின் திருப்புகழ் கூட என்னைக் கசிய வைத்ததில்லை!

* எத்தனையோ திருப்புகழ் உண்டு! = நாத விந்த கலாதீ நமோநம, முத்தைத் தரு பத்தித் திருநகை, பாதி மதி நதி போது மணி சடை, கலை மேவும் ஞான பிரகாசா, அயெனனவாகி அரியெனவாகி...
* எத்தனையோ கந்த கவசங்கள் உண்டு! = கந்த சஷ்டிக் கவசம், சண்முக கவசம், ஸ்கந்த குரு கவசம்...

* எத்தனையோ நல்ல மரபு இசைப் பாடல்கள் உண்டு = பெ.தூரன், தண்டபாணி தேசிகர், ரமணி அம்மாள், முருகனைப் பாடவென்றே பிறந்த சீர்காழி கோவிந்தராஜன், TMS, கே.பி. சுந்தராம்பாள்!!!
* மெல்லிசையில் கூட சுசீலாம்மா, வாணி ஜெயராம் பல அழகிய முருகன் பாடல்களைப் பாடி உள்ளனர்! (முருகனருள் வலைப்பூவின் வலப்பக்கம் பாருங்கள்)

ஆனால்,
ஆனால்,
ஆனால்....
எந்தச் சந்தப் பாடலும், இந்தக் கந்தப் பாடல் போல் கசிய வைக்குமோ?

MS ராஜேஸ்வரி என்பவர் பாடியது! இன்றைய பல பேருக்கு. இவர்கள் யார் என்று கூடத் தெரியாது! ஆனால் இந்தப் பாட்டு???

எனக்கு மிகுந்த தாபமாக இருக்கும் போது, இந்தப் பாட்டில் உள்ள ரெண்டே வரி தான் மனதிலும் வாயிலும் ஓடிக்கிட்டே இருக்கும்!
எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே?
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

என் முருகனோடு பேசுவது போலவே இருக்கும்!
அவன் சட்டையை உலுக்கி, டேய் முருகா முருகாஆஆஆ என்று அவனை இரு கன்னத்திலும் அறைந்து,
அறைந்த கையோடு அவன் கையும் கோர்த்து, அவன் தோளில் சாய்ந்து கொள்வது போலவே இருக்கும்!

இன்று அதே ரீங்காரத்தில்....நான்.....இதோ!



பாடலைக் கேட்டுக் கொண்டே படியுங்கள்!

அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே!
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே!
(அம்மாவும் நீயே!)

தந்தை முகம், தாயின் முகம், கண்டறியோமே!
மனச் சாந்தி தரும் இனிய சொல்லைக் கேட்டறியோமே!
எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே?
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?
முருகா முருகா முருகா முருகா
(அம்மாவும் நீயே!)

பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே
பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே!
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?
முருகா முருகா முருகா முருகா
(அம்மாவும் நீயே!)

படம்: களத்தூர் கண்ணம்மா
இசை: ஆர்.சுதர்சனம்
குரல்: எம்.எஸ்.ராஜேஸ்வரி
வரி: வாலி



எல்லாருக்கும் தெரிந்த தகவல், குழந்தை கமலஹாசன் நடித்த முதல் படம் இதுவென்று!
இதை வாலியா எழுதினார் என்ற சந்தேகம் எனக்கு வருவதுண்டு! இப்படிச் சாகா வரம் பெற்ற பாடலாகி விட்டதே!

இதைப் பாடும் எம்.எஸ்.ராஜேஸ்வரி, குழந்தைக் குரல் பாட்டுக்கென்றே சொந்தமானவர்!
சிட்டுக் குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா, மண்ணுக்கு மரம் பாரமா, படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரமுண்டு போன்ற பாடல்கள் பிரபலமானவை! ஆனால் அக்காலக் குழந்தைப் பாடகரான இவர் பாடிய இக்கால இன்னொரு பாட்டும் மிகவும் பிரபலம் = நான் சிரித்தால் தீபாவளி!


முருகா...என் கண்ணாளா...
நான் உன் சட்டையை உலுக்கிக் கேட்கட்டுமா?
கையால் உன் கன்னத்தில் அறைந்து கேட்கட்டுமா?
இதழாலும் உன் கன்னத்தில் அறைந்து கேட்கட்டுமா?
உன் தோளில் சாய்ந்து கொண்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே கேட்கட்டுமா?

ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே?
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?

Saturday, October 16, 2010

குன்றெங்கு இருந்தாலும்....!


குன்றெங்கு இருந்தாலும்

சென்றங்கு அருள்பவனே
என்றென்றும் எம்மனதில்
குன்றாது நிற்பவனே
ஆறுமுக ஆண்டவனே!
என்னப்பன்
ஆறுமுக ஆண்டவனே!

எம் எண்ணத்தை
ஒன்றாக்கி
அதையே நான் குன்றாக்கி
வைத்துள்ளேன் நீ குடிகொள்ளவே!
வேலா!
நீ இங்கு குடிகொள்ளவே!

குன்றெங்கு இருந்தாலும்
சென்றங்கு அருள்பவனே...!

நானென்ற ஒன்றிங்கு
இல்லாமல் செய்திட்டாய்!
நீயன்றி வேறொன்றாய்
ஏதொன்றுமில்லாமல்
எனையே நீ ஆட்கொண்டாயே!
முருகா!
எனையே நீ ஆட்கொண்டாயே!

அன்னையாய் நீயிருந்து
அன்பை ஊட்டுவித்தாய்!
அப்பனாய் நீயிருந்து
அறிவை ஊட்டுவித்தாய்!
எனக்கு எல்லாமும் நீயேயன்றோ!
வேலா!
எனக்கு எல்லாமும் நீயேயன்றோ!

குன்றெங்கு இருந்தாலும்
சென்றங்கு அருள்பவனே...!

எம் சிந்தை ஒருபொழுதும்
உமை அகலாதிருக்கும் வண்ணம்
உம் சிந்தையாய் எனை ஆக்கிவிடு!
இப்பொழுதும் எப்பொழுதும்
முப்பொழுதும்
உம் சிந்தையாய் எனை ஆக்கிவிடு!

உயிரெழுத்து, மெய்யெழுத்து
எல்லாமாய் நீயிருக்க
வெறும் எழுத்தாய் நானிங்கு
உன் பாதச் சரண் தேடினேன்!
முருகைய்யா!
உன் பாதச் சரண் தேடினேன்!

குன்றெங்கு இருந்தாலும்
சென்றங்கு அருள்பவனே...!

(இதை இயற்றியவரும் ஒரு நாமக்கல் கவிஞர்(!?)தான்.)
---------------------------------------------------------------
ஒரு கொசுறுச் செய்தி!
ஒரு ஆங்கிலேய முருக பக்தர் "முருக தாஸ்" கந்த புராணத்தை தன்னோட தளத்தில்அழகா (ஆங்கிலத்தில்தான்) பதிவு செஞ்சி வெச்சிருக்கார்! நீங்களும் படிச்சிப் பாருங்க!

Thursday, October 07, 2010

உனைப் பாடும் "தொழில்"!

இந்தப் பதிவு, நாமக்கல் சிபி என்னும் சிபி அண்ணாவை, முருகனருளில் வாழ்த்தும் பொருட்டு, தாமே பெற வேலவர் தந்ததினால்...

முருகனருள் வலைப்பூவை முதன் முதலில் 2006-இல் துவக்கியவர் இவரே! = அவரே நாமக்கல் சிபி!

அப்பறம் தோழன் இராகவன், குமரன், TRC, VSK, வாத்தியார் ஐயா எல்லாம் இணைய...
அப்பறமா வந்து சேர்ந்த வந்தேறியும் "கந்தே"றியும் தான் அடியேன்! :)

பணி நிமித்தமோ என்னவோ சிபிக்கு! ஆளு பிஸியாகி விட்டார்! இந்தப் பக்கமே வரதில்லை :)
1. இனி, அப்பப்ப வந்து, முருகனருளில் பதிவிடவும்
2. சிபி சேர்ந்துள்ள புதிய அலுவலகத்தில், பணியில் சிறந்து, வளர்ச்சி காணவும்...
முருகனருள் அன்பர்கள் அனைவரும், கூடி இருந்து குளிர்ந்தேலோ வாழ்த்திடுவோம்!

பாடும் பணியே பணியாய் அருள்வாய்! - உனைப் பாடும் "தொழில்"!




பாடலைக் கேட்டுக் கொண்டே படியுங்கள்! சுட்டி இதோ!

குரல்: TMS
வரிகள்: தமிழ் நம்பி
இசை: VR மாணிக்க விநாயகம்

உனைப் பாடும் தொழில் இன்றி வேறு இல்லை!
எனை காக்க உனையின்றி யாருமில்லை!
முருகா! முருகா! முருகா! முருகா!

கற்பனையில் வருகின்ற சொற்பதமே - அன்பு
கருணையில் உருவான அற்புதமே!
சிற்பச் சிலையாக நிற்பவனே - வெள்ளைத்
திருநீறில் அருளான விற்பனனே!

முருகா! முருகா! முருகா! முருகா!
(உனைப் பாடும் தொழில் இன்றி)

அமுதம் இருக்கின்ற பொற்குடமே - இயற்கை
அழகு வழிகின்ற எழில் வனமே!
குமுத இதழ் விரிந்த பூச்சரமே - உந்தன்
குறுநகை தமிழுக்கு திருவரமே!

முருகா! முருகா! முருகா! முருகா!
(உனைப் பாடும் தொழில் இன்றி)

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP