Tuesday, December 14, 2010

பித்துக்குளி - ஈழத் திருப்புகழ் - முருகனா? பெருமாளா?

இன்றைய செவ்வாய்க் கிழமை, ஒரு எளிமையான...ஆனால் மிக அழகான திருப்புகழைப் பார்க்கப் போறோம்!
அதுவும் பித்துக்குளி முருகதாஸ் பாடப் பாடக் கேட்பது...சுகமோ சுகம்! வாடும் மனசுக்கு நிதமே இதம்!பித்துக்குளி-ன்னாலே என்ன ஞாபகத்துக்கு வரும்?
எனக்கு முருகன் ஞாபகம் வருவான்! :) அப்பறமா முருகதாசின் கூலிங் க்ளாஸ், தலையில் காவி Scarf! :) மனுசன் அப்பவே என்ன ஸ்டைலா இருக்காரு-ன்னு பாருங்க! :)

பித்துக்குளி முருகதாஸ்! இயற்பெயர் பாலசுப்ரமணியம்! கோயம்புத்தூர் காரரு! :)
இந்தக் கொங்கு நாட்டுத் தங்கம், எதையும் கொஞ்சம் வித்தியாசமா பண்ணும்!
கர்நாடக இசைப் பாடல்களை, இழு இழு-ன்னு இழுக்காம, பஜனை ஸ்டைலில், மக்களோடு மக்களாச் சேர்ந்து, பாடிக் காட்டியவர்!

Fast Beat காவடிச் சிந்தை, செஞ்சுருட்டி / நாதநாமக் கிரியை-ன்னு கர்நாடக இசையில் போடறது தப்பே இல்லை! ஆனா காவடியின் ஜீவனான அந்த "துள்ளல்" போயிறக் கூடாதுல்ல?
பண்டிதர்கள் அதை இழுத்து இழுத்தே ஜீவனைப் போக்கிருவாங்க! :)
ஆனால் நம்ம பித்துக்குளியாரின் காவடிச் சிந்தைக் கேளுங்க! சுருட்டி ராகமும் இருக்கும்! காவடியைச் "சுருட்டிக்"கிட்டு போகாமலும் இருக்கும்! :)
பித்துக்குளியாருக்கு இப்போ வயசு 95 இருக்கும்-ன்னு நினைக்கிறேன்!

"நான்" என்ற சொல்லே அவர் வாயில் வராது! "அடியேன்"! இல்லீன்னா தன்னையே கூட "அவன்"-ன்னு தான் சொல்லிப்பாரு! :)
தத்துவத்தால் வைணவம் பிடிச்சிப் போய், அடியேன், அடியேன்-ன்னு சொல்லிக்கிட்டாலும், முருகன் தான் மனத்துக்கு இனியான்! அவரும் என்னையப் போலத் தானோ? :)

திருப்புகழ் பாடல்கள் பலவும், தன் ஸ்டைலில் பாடி இருக்கார்! ஆழ்வார் பாசுரங்களும் அப்படியே! ஆனால் மிகவும் ஹிட்டானது என்னவோ, கார்த்தி-கேயா கலியுக வரதா & அலைபாயுதே கண்ணா பாட்டுக்கள் தான்! சினிமாவிலும் பாடி உள்ளார் - நாடறியும் நூறுமலை! குன்னக்குடி இசையில், தெய்வம் படத்துக்காக!

சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடித் துறவறத்தில் திளைத்தவர்!
ஆனால்....சுமார் அறுபது வயதில்....
உடன்பாடும், தேவி சரோஜா என்ற அம்மையாரை மணம் செய்து கொண்டார்!

முதலில் சாஸ்திரோத்காரமான மடங்களில் எதிர்ப்பு கிளம்பினாலும்,
கண்ணன் அருளால், எதிர்ப்புகள் அடங்கின!
தேவி முருகதாஸ் + பித்துக்குளி முருகதாஸ் இணைந்து, "கண்ணன்-ராதா கல்யாணம்" பாடல்களை எல்லாம் பாடிப் பிரபலம் ஆக்கினர்!

எல்லாஞ் சரி! "ஊத்துக்குளி" (வெண்ணைய்) தெரியும்! அது என்ன "பித்துக்குளி"?
சின்ன வயசில், தெருவில் விளையாடும் போது, ரோட்டுல போற ஒருவர் மேல கல்லெறிஞ்சி இருக்கான் இந்த வாலுப் பையன்!
அடிபட்ட பெரியவரோ, பெருமாள் பக்தர்-மகா ஞானியான பிரம்மானந்த பரதேசியார்! அவரு நெற்றியில் இரத்தம் வடிய...

"அடேய்.....நீ என்ன பித்துக்குளியா? (பைத்தியமா)? சும்மா போற என் மேல் கல்லு எறியற? ஒரு நாள், என்னைப் போலவே நீயும் ஆகப் போற பாரு!"-ன்னு சொல்லி வைக்க...

* அப்படியே ஆகி, பித்துக்குளியாகி,
* கண்ணன்-முருகனில் நம்மையும் பித்துக்குளியாக்கும்,
பித்துக்குளி முருகதாசர் திருவடிகளே சரணம்!!!


ஈழத்து ஆலயங்கள் - கதிர்காமம் கீழே..
(சொடுக்கி, பெரிதாக்கிப் பார்க்கவும்)


கதிர்காமம், ஈழத்தின் கீழே.....தென் கிழக்குக் கோடியில் உள்ளது!
எப்படித் தமிழ்நாட்டில் திருச்செந்தூர் உள்ளதோ, அதே போல கதிர்காமம்! ஆனால் கடலோரத்தில் இல்லை! கடலுக்குச் சற்று அருகே!

கதிர்காம முருகன் என்று நாம் பரவலாகச் சொன்னாலும்...
மொத்தம் 3 மதங்கள் = இந்து மதம், இஸ்லாம், பெளத்தம் என்று சங்கமிக்கும் "புதிரான-புனிதமான" இடம் இது! அதன் தகவல்கள் பற்றி முன்னர் இட்ட பதிவு, இங்கே!

நாம பாட்டுக்கு வருவோமா? கேட்டுக்கிட்டே பதிவை வாசிக்க, இதோ, சொடுக்குங்கள்!
குறிப்பாக, சேர்ந்து பாடும் கட்டமான, பாட்டின் கடைசியைத் தவற விடாதீர்கள்!பாடல்: திருமகள் உலாவும் (திருப்புகழ்)
வரி: அருணகிரிநாதர்
குரல்: பித்துக்குளி
தலம்: ஈழம் - கதிர்காமம்

திருமகள் உலாவும், இரு புய முராரி,
திரு மருக நாமப் பெருமாள் காண்!
செக தலமும் வானும், மிகுதிபெறு பாடல்,
தெரி தரு குமாரப் பெருமாள் காண்!!

மருவும் அடியார்கள், மனதில் விளையாடு
மரகத மயூரப் பெருமாள் காண்!
மணி தரளம் வீசி, அணி அருவி சூழ,
மருவு கதிர் காமப் பெருமாள் காண்!!

அரு வரைகள் நீறு, பட அசுரர் மாள
அமர் பொருத வீரப் பெருமாள் காண்!
அரவு பிறை வாரி, விரவு சடை வேணி
அமலர் குரு நாதப் பெருமாள் காண்!!

இரு வினை இலாத, தரு வினை விடாத
இமையவர் குலேசப் பெருமாள் காண்!
இலகு சிலை வேடர், கொடியின் அதி பார
இரு தன விநோதப் பெருமாளே!!


பாட்டைப் பிரிச்சி மேயலாமா? :)


பொதுவா, அருணகிரி, பல திருப்புகழையும் "பெருமாளே"-ன்னு தான் முடிப்பாரு! ஆனா, இந்தத் திருப்புகழில் மட்டும்....
வரிக்கு வரி, பெருமாள் காண், பெருமாள் காண்-ங்கிறாரு! = இது என்ன திருப்புகழா? திருமால் புகழா?:))

பெரும்+ஆள் = பெருமாள்!
"திருமால்" என்று சங்க காலம் தொட்டு வழங்கி வந்த பெயர், காலப் போக்கில் "பெருமாள்" என்றாகி விட்டது!
சேர அரசர்கள் ஒரு சிலரையும் (குலசேகரப் பெருமாள், சேரமான் பெருமாள்), சமண முனிவர்கள் ஒரு சிலரையும் கூட இந்தப் பெயர் குறிக்கும்!

ஆனால், பொது மக்கள் ஏகோபித்தமாக வழங்குவது தானே என்றைக்கும் நிலைக்கும்?
பொது மக்கள் வழக்கில், தொல்காப்பியர் காலத்து திருமால், "பெருமாள்" என்றாகி விட்டார்!

இந்த மாற்றம், அருணகிரி காலத்துக்கும் (15th CE) முன்னரே நடந்து விட்டது!
அப்படி இருக்க....
தன் முருகனைப் பாட, இன்னொரு தெய்வத்தைக் குறிக்கும் "பெருமாள்" என்ற சொல்லை ஏன் அருணகிரி பயன்படுத்தணும்?

* "ரஹீம்" என்றால் கருணை-ன்னு பொருள்! கருணையே உருவான கந்தனை, "முருக ரஹீம்"-ன்னு நாம வரிக்கு வரி பாடுவோமா? :)
* "பிள்ளையார்" என்றால் இளையவர்-ன்னு பொருள்! இளைய முருகனை "பிள்ளையாரே"-ன்னு பாட்டுக்குப் பாட்டு கூப்பிடுவோமா? :)

ஏங்க, அருணகிரி மட்டும் இப்படிப் பண்றாரு? :)

ஏன்னா அருணகிரியின் "அடி மனசு" அப்படி! அதில், என்னமோ தெரியலை, திருமாலுக்கும்/வள்ளிக்கும் நிறையவே இடமுண்டு!
மார்கழி மாதப் பதிவுகளில் சொல்லுறேன்! நீங்களும் முடிஞ்சா பின்னூட்டத்தில் சொல்லுங்க! இப்போ, பாட்டை மட்டும் சுவைப்போம்! சூப்பர் பாட்டு, கொஞ்சம் பிரிச்சி மேயலாமா? :)


திருமகள் உலாவும், இரு புய முராரி,
திரு மருக நாமப் பெருமாள் காண்!

பொதுவா நான்கு கைகள் உடைய திருமால் = தெய்வம்!
ஆனா ரெண்டே கைகள் இருந்தா? = மனிதன்!

"இரு புய" முராரி = இரண்டு கை கண்ணன்!
அவன் தெய்வம் அல்ல! மனிதன்!

நல்லதும் செய்து காட்டுவான்! தவறும் செய்து காட்டுவான்!
ஆனால் தவறுக்கான பொறுப்பையும் சேர்த்தே ஏற்றுக் கொள்வான்!
தான் தெய்வம் என்று சொல்லித் தப்பிக்காது...
அதற்கு கழுவாய் செய்வது எப்படி-ன்னு நடந்தும் காட்டுவான்!

காலம்பு வாங்கி, பாலாழி பாய்ந்தான் "பாதகன்" = கண்ணன்!
நம்மைத் "தெய்வ" நிலைக்கு உயர்த்த...
தெய்வம் "மனித" நிலைக்கு, "பாதகனாய்", தாழ்ழ்ழ்ழ்ழ்ந்து போகிறது!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் (குறள்: 50)

பிறவா-இறவா இறைவன் = அவதாரமாக, பிறப்பதும்-இறப்பதும் இந்தக் "கருணையால்" தான்!
"கருணை" என்பது ஒருவருக்குப் புரிந்தால், பா.பா.பா-வைப் புரிந்து கொள்ள முடியும்! (அதாங்க, பாலாழி பாய்ந்த பாதகன்)

சும்மா ஒரு எடுத்துக்காட்டு-க்கு வீரேந்திர சேவாக்-கை வச்சிக்குவோம்!
தான் பந்து வீசும் போது, எதிரே இருப்பவன் அடிக்கும் ரன்னில், பாதி என் கணக்குக்கு அப்பறமா ட்ரான்ஸ்ஃபர் ஆயிறணும்! - இப்படி ஒரு வரம் வாங்கி வந்தால் எப்படி இருக்கும்? :)) வாலி வாங்கிய வரம் அப்படி!

நண்பன் என்று ஏற்றுக் கொண்ட சுக்ரீவன்,...
இதோ கொஞ்ச நேரத்தில் சாகப் போகிறான்!
அப்போ நண்பன்-ன்னு சொன்னவனை, இப்போ கழட்டி விட்டுறலாமா? :)

ஹிஹி! ஆனா வாலியின் முன்னால் போனா??? எவ்ளோ தான் வீரம் காட்டினாலும் வரமும் பேசுமே! சரி, முன்னாடி போகாமல், மறைஞ்சி இருந்து கொன்னா? அய்யய்யோ, அது மகா பாவம்!
தப்புத் தப்பா வரம் வாங்கியது பாவம் இல்ல! ஆனால் இது பாவம்! ஏன்-ன்னா செய்யறது ராகவன் ஆச்சே! உம்ம்ம்ம்....என்ன பண்ணலாம்?

சரி, நண்பனுக்காகப் பாவமும் செய்வோம்!
ஆனால்..ஆனால்....
அதை ஒளிக்காது மறைக்காது, தெய்வம்-ன்னு நியாயப் படுத்தாது......

பாவத்தை ஏற்றுக் கொள்வோம்! கழுவாய்-க்கு நடந்தும் காட்டுவோம்!
* அதே வாலி, வேடன் ஜராவாய் வந்து, இவன் உயிரையே முடிப்பான்!
* இவனும், மானம் பார்க்காது, அதை ஊரறிய ஏற்பான்! = இது தான் "இரு புய" மனிதன்! நால் கரக் கடவுள் அல்ல!

அருணகிரியின் கற்பனை வளத்தைப் பாருங்க!
இந்தப் பாதகனின் "இரண்டு புயங்களில்" தான், காதலிக்கு மிகுந்த ஆசையாம்! அவனின் ரெண்டு கைகளையும் "தழுவ" வில்லையாம்! "உலாவு"கிறாளாம்!
திருமகள் "உலாவும்" + "இரு புய" முராரி = ஒரு காதலி, மொத்தமாய் நம்ம கையில் "உலாவு"றா-ன்னா என்ன அர்த்தம்? :)
இதுக்கு மேல சொல்ல முடியாது! சென்சார் :) அவ்ளோ ஆசை! காதல் :)

திருமகள் உலாவி விளையாடும், ரெண்டு கை "மனிதன்" கண்ணன்!
பா.பா.பா-வின் "ஆசை மருமகன்" என்ற பேரை வாங்கிக் கொண்டவன் முருகன்!
* மருக நாமப் பெருமாள் காண் = "முருக" நாமம் அல்ல! "மருக" நாமம்!
அந்த மருகப் பெருமாளைக் காணுங்கள்! காணுங்கள்!

செக தலமும் வானும், மிகுதி பெறு பாடல்,
தெரி தரு குமாரப் பெருமாள் காண்!!

செகதலமும் = பூமி; வானும் = வானம்
மிகுதி பெறு பாடல் = வானும் மண்ணும் போற்றும் தமிழ்ப் பாடல்

தெரி தரு குமாரப் பெருமாள் காண் = அந்தத் தமிழைத் தந்த குமரப் பெருமாளைக் காணுங்கள், காணுங்கள்!


மருவும் அடியார்கள், மனதில் விளையாடு
மரகத மயூரப் பெருமாள் காண்!

மருவும் அடியார்கள் = அவனையே சுற்றி வரும் அடியார்கள்
மனதில் விளையாடு = அவங்க மனத்தில் விளையாடும் முருகன்

மரகத மயூரப் பெருமாள் = மரகதப் பச்சை போல் மயில்! அந்த மயிலேறு பெருமாளைக் காணுங்கள், காணுங்கள்!


மணி தரளம் வீசி, அணி அருவி சூழ,
மருவு கதிர்காமப் பெருமாள் காண்!!

மணி = மாணிக்கம்; தரளம் = முத்து;
மாணிக்க கங்கை ஆற்றிலே, இரத்தினங்களை அள்ளி வீசி, அலைகள் ஆர்ப்பரிக்க...அணி அருவி சூழ....

மருவு கதிர்காமப் பெருமாள் காண் = எங்கள் ஈழத் தமிழனான, கதிர்காமப் பெருமாளைக் காணுங்கள், காணுங்கள்!


அரு வரைகள் நீறு, பட அசுரர் மாள
அமர் பொருத, வீரப் பெருமாள் காண்!

அரு வரைகள் நீறு பட = கிரவுஞ்ச மலை பொடிப் பொடியாக
அசுரர் மாள = மலையைச் சுற்றி நின்ற அசுரர்கள் எல்லாம் அழிய
அமர் பொருத = போர் செய்த
வீரப் பெருமாள் காண் = எங்கள் வீரப் பெருமாளைக் காணுங்கள், காணுங்கள்!அரவு பிறை வாரி, விரவு சடை வேணி
அமலர் குருநாதப் பெருமாள் காண்!!

அருணகிரியின் சொல்லாட்சி, கற்பனைக்கு இதுவும் ஒரு சாட்சி!
சிவபெருமான், நடனமாடும் போது, தன்னுடைய தலை கலையாமல் இருக்க, என்னமோ செய்கிறாராம்? என்னது? அரவு = பாம்பு; பிறை = சந்திரன்;

பாம்பு -Ribbon போட்டுக் கட்டி,
பிறை -Hair Pin-ஐ குத்தி,
அரவு பிறை வாரி....விரவு சடை வேணி = செஞ்சடை சீவிக் கொள்ளும் பிரான்! :)

அமலர் குருநாதப் பெருமாள் காண் = அந்தச் சிவனார், அமலன்=குற்றம் நீங்கியவர்! அவருக்கே தகப்பன் சாமியான எங்கள் குருநாதப் பெருமாளைக் காணுங்கள், காணுங்கள்!


இரு வினை இலாத, தரு வினை விடாத
இமையவர் குலேசப் பெருமாள் காண்!

இரு வினை இலாத = நல்-வினை/தீ-வினை என்று இரண்டு செயல்களுமே, நமக்கு உலகத்தோடு பந்தம் ஏற்படுத்தி விடும்! ஆனால் முருகனுக்கு?
இரண்டு வினைகளும் இல்லாதவன்! சூரனை......கிளையோடு, ஊரோடு அழித்த வினைகள் எதுவுமே முருகனை அண்டாது! அசுரர் குடி கெடுத்த ஐயா வருக!

* முருகன் = வினைகளைக் கடந்தவன், கடவுள்!
* கண்ணன் = வினைகளின் பொறுப்பையும் ஏற்றுக் கொள்பவன், மனிதன்! - வானுறையும் தெய்வத்துள் "வைக்கப்பட்டவன்"!

தரு வினை விடாத = வினை ஆற்றினால் விளைவு விளையும்! நம் வினைகளுக்கு, பதில் வினைகளைத் தருவார்கள், பொறுப்பில் உள்ள இமையவர்கள் / கிரகங்கள் முதலானோர்! அவர்கள் குலேச = குல+ஈச; அந்த இமையவர் குல ஈசனான பெருமாளைக் காணுங்கள், காணுங்கள்!இலகு சிலை வேடர், கொடியின் அதி பார
இரு-தன விநோதப் பெருமாளே!!

சிலை=வில்! இலகு சிலை வேடர் = ஆற்றல் மிக்க வில்லுடைய வேடர்!
கொடியின் அதி பார = அந்த வேடர் குலக் கொடி!

* அஞ்சு குடிக்கொரு சந்ததியாய் = ஆண்டாள்
* வேடர் குடிக்கொரு சந்ததியாய் = வள்ளி

இருவருமே, அவர்கள் காதலனை, முன்னே பின்னே, பார்த்தது கூட இல்லை!
தங்கள் காதல் "ஏற்றுக் கொள்ளப்படுமா"-ன்னு கூட இருவருக்குமே தெரியாது! ஆனாலும்.....
உள்ளத்து உண்மையோடு, அவனுக்கென்றே வாழ்ந்தவர்கள்!
மருந்தாம் என்று தம்-மனத்தே வைத்துக் கொண்டு வாழ்ந்தவர்கள்....

கொடியின் அதி பார = அந்த வள்ளிக் கொடி!
இரு தன = அதில், அதி பாரமான இரு மார்பகங்கள்! :)

ஹைய்யோ...முடிக்கும் போது, என்னைக் கிளுகிளு விளக்கம் சொல்ல வைக்கிறாரே இந்த அருணகிரி! அருணையடிகளே, மேடைக்கு வரவும்! :))

ஒரு கொடியில், எப்பமே, அது தாங்கும் அளவேயான கனிகளே பழுக்கும்!
ஆனால் ஒல்லியான வள்ளிக் கொடியிலோ....?
அதிக பாரமான இரு மார்புக் கனிகள்! :)
எதனால் இந்தப் பாரம்? அவள் மெல்லிய-ஒல்லியானவள் தானே?
ஏற்றுக் கொள்வானா என்று கூடத் தெரியாது, அவனையே தம்-மனத்தே வைத்துக் கொண்டு வாழ்ந்தவள்...
அவன் புரிஞ்சிக்கிட்டான்! அவளை ஏற்றுக் கொள்ள வந்துட்டான்! - என்று தெரிந்தால், என்ன ஆகும் அந்தப் பேதைக்கு?

இயற்கை என்ன கொடுத்ததோ, அதுவே ஆகும்! = உன்னித்து எழுந்த என் தடமுலைகள்!
ஊன் இடை, ஆழி சங்கு உத்தமர்க்கு என்றே = உன்னித்து எழுந்த என் தடமுலைகள்!

அதனால் வந்த "திடீர்ப் பாரம்" தான் இது!
அவன் ஏற்றுக் கொண்டான் என்று கண்ட மாத்திரத்தில், இப்படி ஒரு "விநோதமா" இந்தப் பேதைக்கு? = இயற்கை விநோதம்!
ஹேய், இதுக்கு மேலச் சொல்ல எனக்கு வெட்கமா இருக்கு முருகா! :)


* கொடியின் அதி பார...இரு தன வினோதம்! = அந்த விநோதப் பெருமாளைக் காணுங்கள்! காணுங்கள்!
* மருக நாமப் பெருமாள் காண் = அந்த மருக-முருகப் பெருமாளை.... என் ஆசை முருகனை......எல்லாரும் காணுங்கள்! காணுங்கள்! முருகாஆஆஆ!

7 comments:

குமரன் (Kumaran) December 15, 2010 12:33 AM  

Good song!

குமரன் (Kumaran) December 15, 2010 12:34 AM  

Good Explanation!

kannabiran, RAVI SHANKAR (KRS) December 15, 2010 10:16 AM  

Enna Kumaran, Tamizh kadavuL kitta engleesh la pesaReenga? :)

cheena (சீனா) December 15, 2010 3:50 PM  

அன்பின் கேயாரெஸ்

அருமையான பாடல் - அருமையான விளக்கம் - குமரன் கூறியதை தமிழ்ப் ப்டுத்தி விட்டேன். பித்துக்குளி முருகதாஸின் முருகன் பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அதி காலையில் முதல் இடுகையாக நல்லதொரு இடுகையினை - முருகப் பெருமானை - பெருமாளைப் பாடியதைக் கேட்க வைத்தமைகு நன்றி கேயாரெஸ். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

குமரன் (Kumaran) December 15, 2010 7:56 PM  

Thanks Cheena Sir! :-)

Ramachandran December 17, 2010 7:52 AM  

என் மனதில் விளையாடும்
மானசீக பாடகரின் பாடல் பதிவு கதிர் காம முருகனை கைதொழ வைத் தது
வயது ஏறினாலும் வாடா மலரால் பாமாலை தொடுக்கிறார் ..
வாழனும் நூறு வயது ....

Gopi Ramamoorthy December 20, 2010 9:20 AM  

ரவி, பின்றீங்க போங்க!

கோனார் உரை எல்லாம் தோற்றது போங்கள்!

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP