Thursday, December 02, 2010

சுவாமிமலை

சுவாமிமலை பற்றி நான் புதிதாக எதுவும் எழுதி விடப் போவதில்லை. இது என் அனுபவங்களை ஒரு தொகுப்பாகக் கொண்டு வரும் ஒரு சிறு முயற்சியே. மேலும் தந்தைக்கு உபதேசிக்கும் தத்துவம் பற்றி எனக்குத் தோன்றிய சில விஷயங்களையும் எழுதியுள்ளேன்.

முதன்முதலாக எப்போது சென்றேன் என்பது நினைவில் இல்லை. இது வரை எத்தனை முறை சென்றிருக்கிறேன் என்பதும் நினைவில் இல்லை. எல்லாம் அவனருள்.

பொங்கல், தீபாவளி விடுமுறைகளின்போது மாமா பையன்களும் நானும் கும்பகோணத்தில் இருந்து மிதி வண்டியிலேயே சென்று விடுவோம். அப்போதெல்லாம் தொலைக்காட்சியின் ஆக்கிரமிப்பு அவ்வளவாகக் கிடையாது. புதிதாக வரும் திரைப்படங்களின் மேலும் அவ்வளவு ஈர்ப்பு இருந்ததில்லை.

விடுமுறை என்றால் கொண்டாட்டம்தான். கொஞ்சம் போலக் காசு வசூலாகும். இரண்டு மூன்று வாடகை மிதிவண்டிகள். ஒரு மிதிவண்டிக்கு மூவராகக் கிளம்பி விடுவோம். நாங்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது கும்பகோணம்-தாராசுரம்-வளையப்பேட்டை-மாங்குடி-சுவாமிமலை வழிதான். போக்குவரத்து அதிகமிருக்காது. வழிதோறும் சோலைகள். பணி, கல்வி காரணங்களுக்காகக் கடல் கடந்து எத்தனையோ வெளி நாடுகளுக்குச் சென்று வந்த அனுபவம் இருப்பினும் அந்த இளவயது பயண அனுபவம் தந்த சுகமே வேறு.

ஓரிரு சமயங்களில் நடந்தே கூட சென்றிருக்கிறேன். பாதை தெரியும். இலக்கும் தெரியும். கோவில் நெருங்க நெருங்க நடந்து வந்த துன்பமெல்லாம் மறைந்து போகும்.

இது அறுபடை வீடுகளில் ஒன்று (நான்காவது). பிரணவத்தின் பொருளைத் தந்தைக்கு உபதேசித்த ஸ்தலம். இங்கு எழுந்தருளி இருக்கும் சுவாமிநாதன் தகப்பன் சுவாமி என்ற பெயர் பெற்றவர்.

இப்போதைக்குப் பிரணவத்தை விட்டுவிடுவோம். முடிந்தால் வேறொரு சமயத்தில் ஒரு பதிவு போடுகிறேன் அதைப் பற்றி.

தந்தைக்கு உபதேசித்தல் என்பது ஒரு பெரிய தத்துவம். நம்மை விடப் பெரியவருக்கு உபதேசம் செய்வது என்பது நம் நடைமுறை வழக்கில் பொதுவாக இல்லாத ஒன்று. அப்படியே நாம் சொல்வதாக இருந்தாலும் ஒரு ஆலோசனை வடிவத்தில்தான் அதை நாம் முன்வைப்போம். உபதேசிக்க என்றுமே துணிந்ததில்லை.

இந்த இடத்தில் சுவாமிநாதனை விட்டுவிடுங்கள். நாம் நிறையப் புரிந்து கொள்ள வேண்டியது தகப்பன் சுவாமியிடம் இருந்துதான். யார்ரா இவன், சுவாமிமலை பற்றி எழுதுமிடத்தில் சிவனைப் போற்றி எழுதுகிறானே. இவனுக்கு ஒரு கூடை எலுமிச்சம் பழம் வாங்கி அனுப்பினால் என்ன என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

ஒரு விஷயம் நமக்குத் தெரியாத பட்சத்தில் அதைத் தெரிந்து வைத்துள்ள வேறொருவரிடம் இருந்து கற்பது தவறே இல்லை. சிவன் வாய்பொத்தி நிற்பது முருகனுக்கு அடங்கி நிற்பது என்கிற பொருளில் நாம் இதைப் பார்க்கக் கூடாது. இவன் என்ன சின்ன பையன், நமக்குத் தெரியாததா என்ற எந்த விதமான முன்முடிவுகளும் இல்லாமல் சொல்ல வரும் விஷயத்தை மட்டுமே பார்க்க வேண்டும் என்ற தத்துவத்தின் குறியீடு அது என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த விஷயம் நடைமுறை வாழ்க்கையில் மிகவும் முக்கியம். நம்மை விட வயதில் குறைந்தவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. எந்த வித ஈகோவும் பார்க்காமல் நாம் நல்ல விஷயங்களை யார் சொன்னாலும் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதை இந்த ஸ்தலம் நமக்கு உணர்த்துகிறது.

இதைச் சொல்லும்போதே

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப(து) அறிவு

என்ற குறளும் ஞாபகம் வராமல் இல்லை.

இந்தத் தத்துவத்தின் நீட்சியாக ஒரு சீனப் பழமொழியும் ஞாபகம் வருகிறது.

உனக்கு ஒரு விஷயம் தெரியவில்லை என்றால் அதைத் தெரிந்து கொள்ளும்வரை நீ முட்டாளாக இருக்கிறாய் அந்த விஷயத்தைப் பொருத்தவரை. எனக்குத் தெரியவில்லை, விளங்க வையுங்கள் என்று கேட்கும் தருணம் முதல் புத்திசாலி ஆகிறாய். எவ்வளவு நாட்கள் முட்டாளாக இருக்கவேண்டும் என்பது உங்கள் கையில்தான் (வாயில்?) உள்ளது.

இந்தத் தத்துவத்திற்கு இன்னொரு முகமும் உண்டு (dimension). பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாமல் படைப்புத் தொழிலில் பிரம்மன் ஈடுபடுவது ஏற்புடையதன்று. இது நம் எல்லோருக்குமே பொருந்தும். ஒரு தொழிலில் ஈடுபட்டுள்ள நாம் அதன் அடிப்படை விஷயங்களை நன்றாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் பிரம்மன் போலக் கஷ்டப் பட வேண்டி வரும்!

பெயர்தான் சுவாமிமலையே தவிர மலையொன்றும் கிடையாது. ஏகப்பட்ட உயர்ந்த தத்துவங்கள் இந்த ஸ்தலத்தில் விளக்கப்படுவதால் இந்த ஸ்தலத்தின் சிறப்பைக் கூறும் பொருட்டு, இவ்விடத்தை மலை (உயர்ந்த என்ற பொருளில்) என்று அழைப்பதில் தவறே இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

வேலன் போல ஒரு ஞானக்கொழுந்து பிள்ளையாக வாய்க்கும் பட்சத்தில் அவன் சொல்வதைக் கேட்க யாருக்குத்தான் மனமில்லாமல் போகும்? இந்தத் தருணத்தில் பட்டிணத்தார் படத்தில் வரும் ஒரு பாடல் (பாடல் மருதகாசி, இசை ஜி. ராமநாதன் , பாடியது டிஎம்எஸ், பெண் குரல் யாரென்று தெரியவில்லை) ஞாபகம் வருகிறது. பட்டிணத்தார் சிறந்த சிவபக்தர். குழந்தை இல்லாதது குறித்து அவரும் அவர் மனைவியும் முறையே சிவனுக்கும், உமைக்கும் நிலவைத் தூது விடுவர் குழந்தை வரம் வேண்டி.

அதில் ஒரு இடத்தில்

…கோடிச் செல்வம் நிறைந்தாலும் என்ன
அதைக் குலவிக் கொஞ்ச மனம் குளிர்ந்திடுமோ
ஓடி வந்து விளையாட இங்கு ஒரு
பாலன் வேண்டுமென வேலன் தந்தையிடம்
நிலவே...

வேலன் தந்தை என்று இங்குக் குறிப்பிடுவது மிக விசேஷம். வெறும் ஓசை நயத்திற்காகக் (பாலன், வேலன்) குறிப்பிடப்பட்ட ஒரு விஷயமாக இல்லாமல் ஞானக் கொழுந்தான வேலன் போன்ற ஒரு பையன் உங்களுக்கு உண்டு, அது போல உங்கள் பக்தனுக்கும் ஒரு குழந்தையை வரமாக அளிக்க வேண்டும் என்று சிவனிடம் எடுத்துச் சொல்லுமாறு நிலவை வேண்டுகிறார் பட்டிணத்தார்.

வேலன் போன்ற ஒரு பாலனும் (புத்திசாலி) சிவன் போன்ற ஒரு தந்தையும் (நல்ல விசயங்களை யார் சொன்னாலும் எடுத்துக் கொள்பவர்) அமைந்துவிட்டால் அந்தக் குடும்பம் பெரும் பேறு பெற்று விட்டதாகவே எண்ணத் தோன்றுகிறது.

ஆலயம் கும்பகோணத்திற்கு மிக அருகில் உள்ளது (ஆறு கிமீ). சுவாமிமலைக்குப் போகும் பட்சத்தில் பக்கத்திலேயே இருக்கக் கூடிய திருவலஞ்சுழி (ஸ்வேத விநாயகர்), பட்டீஸ்வரம் (துர்க்கை), திருசக்திமுற்றம் கோவில்களையும் தரிசித்து விடுங்கள்.

மற்றபடி திருக்கோவிலின் அமைப்பு பற்றித் தெரிந்து கொள்ள இந்த சுட்டியை சொடுக்குங்கள்.

மேலும் அதிக விவரங்களுக்கு இந்த தினமலர் இணைப்பைப் பாருங்கள்.

எல்லாம் வல்ல முருகன் அருள் நமக்குக் கிட்டட்டும்!

23 comments:

Gopi Ramamoorthy December 02, 2010 11:22 AM  

இது முருகனருள் வலைப்பூவில் வரும் என் முதல் பதிவு. பதிவில் குறைகள் ஏதேனுமிருப்பின் பொறுத்தருள வேண்டுகிறேன். குறை நிறைகளைப் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும். மிக்க நன்றி.

அடியேன்

கோபி ராமமூர்த்தி

முத்துலெட்சுமி/muthuletchumi December 02, 2010 11:54 AM  

\\வேலன் போன்ற ஒரு பாலனும் (புத்திசாலி) சிவன் போன்ற ஒரு தந்தையும் (நல்ல விசயங்களை யார் சொன்னாலும் எடுத்துக் கொள்பவர்) அமைந்துவிட்டால் அந்தக் குடும்பம் பெரும் பேறு பெற்று விட்டதாகவே எண்ணத் தோன்றுகிறது.//நல்லா எழுதி இருக்கீங்க கோபி..

kannabiran, RAVI SHANKAR (KRS) December 02, 2010 12:01 PM  

முருகனருள் வலைப்பூ குழுவினர் சார்பாக, உங்களுக்கு நல்வரவு கோபி! :)

கன்னி இடுகை நல்ல இடுகை!
அதுவும் என் மனத்துக்கினிய சுவாமி மலையான் கிட்ட இருந்து துவங்கி இருக்கீக! :)

முருகனருளில் பல அடியார்கள் இன்புறுமாறு, இன்னும் பல சிறப்பான இடுகைகள் வழங்க வாழ்த்துக்கள்! முருகனருள் முன்னிற்க நீடு பீடு வாழ்க!

kannabiran, RAVI SHANKAR (KRS) December 02, 2010 12:19 PM  

//இரண்டு மூன்று வாடகை மிதிவண்டிகள். ஒரு மிதிவண்டிக்கு மூவராகக் கிளம்பி விடுவோம். நாங்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது கும்பகோணம்-தாராசுரம்-வளையப்பேட்டை-மாங்குடி-சுவாமிமலை வழிதான். போக்குவரத்து அதிகமிருக்காது. வழிதோறும் சோலைகள்//

ஆகா!
மாங்குடி ரூட்டா? சூப்பரா இருக்குமே! மாங்குடி ரோட்டில், திருவலஞ்சுழி தாண்டித் தானே கீழக் காவேரி பாலம் வரும்? அதைக் கடந்தா தானே சாமிமலை எல்லை?

பச்சைப் பசேல்-ன்னு தோப்பும் வயலும்...அப்படியே அருணகிரி சொல்லுறாப் போலவே இன்னிக்கும் இருக்குமே!

குளிர் கா மிகுந்த வளர் பூக மெத்து
குட காவேரிக்கு வட பாலார், திருவேரகத்தில் உறைவா...உமைக்கு ஓர்
சிறுவா கரிக்கும் இளையோனே!

பெரு காதல் உற்ற தமியேனை நித்தல்
பிரியாது பட்சம் மறவாதே
பிழையே பொறுத்து உன் இரு தாளில் உற்ற
பெருவாழ்வு பற்ற அருள்வாயே!

kannabiran, RAVI SHANKAR (KRS) December 02, 2010 12:29 PM  

// நம்மை விடப் பெரியவருக்கு உபதேசம் செய்வது என்பது நம் நடைமுறை வழக்கில் பொதுவாக இல்லாத ஒன்று. அப்படியே நாம் சொல்வதாக இருந்தாலும் ஒரு ஆலோசனை வடிவத்தில்தான் அதை நாம் முன்வைப்போம். உபதேசிக்க என்றுமே துணிந்ததில்லை//

இந்த விதியெல்லாம் நல்ல பசங்களுக்கு! :)

நாங்கெல்லாம் முருகன் கோஷ்டி! நாங்களும் உபதேசிப்போம்! மத்தவங்க நல்லதை உபதேசிச்சாலும் கேட்டுக்குவோம்! :)

//யார்ரா இவன், சுவாமிமலை பற்றி எழுதுமிடத்தில் சிவனைப் போற்றி எழுதுகிறானே. இவனுக்கு ஒரு கூடை எலுமிச்சம் பழம் வாங்கி அனுப்பினால் என்ன என்று நீங்கள் நினைப்பது புரிகிறது//

அதெல்லாம் தவறே இல்லை!
முருகனைப் பற்றிச் சொல்லும் இடத்தில், ஈசனையும் சொல்லலாம், பெருமாளையும் சொல்லலாம்!

அப்படிப் பார்த்தா ஒவ்வொரு திருப்புகழிலும், பெருமாளைச் சொன்ன அருணகிரியாருக்குத் தான் ஒரு கூடை எலுமிச்சம் பழம் அனுப்பணும்! :) இது என்ன திருப்புகழா? திருமால் புகழா-ன்னு கேட்க முடியுமா அவரை? :)

kannabiran, RAVI SHANKAR (KRS) December 02, 2010 12:33 PM  

பதிவு நடுவாப்புல கொஞ்சம் படங்களும் கொடுங்க கோபி;

உங்க சைக்கிள் பயணம், காவிரி வயல்/வாய்க்கால் போன்ற படங்கள் இருந்தால் இன்னும் சூப்பர்! :)

மோகன்ஜி December 02, 2010 12:59 PM  

கோபி! சுவாமிமலை பற்றி நல்ல பதிவு!
அது மலையில்லை எனபதல்ல. இந்தக் கோவிலை கட்டு மலை என்பார்கள்.
நானும் எத்தனை முறை வந்திருப்பேன் என்று கணக்கில்லை. ஸ்வாமிநாதன் என்ற எனக்கு முதல் பெயர் இட்டகாரணமோ என்னவோ இந்த முருகன் என் செல்ல முருகன்.
இது அற்புதமான வலைப்பூ! இனி அடிக்கடி வருகிறேன்.. குஹமயம்!

அருணையடி December 02, 2010 1:11 PM  

கன்னிப் பதிவு கலக்கல் பதிவு!

சுவாமி மலைக்கு நான் ஒரு முறை மட்டுமே போயிருக்கிறேன்!
அரோகரா கோஷத்தில் மனம் லயித்து தங்க ரதத்தின் பின்னலேஈ நான் சென்று விட எங்க வீட்டுக்காரம்மா என்னைத் தேடிக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது :)

raji December 02, 2010 1:28 PM  

அருமையான விளக்கங்கள்.

தாங்கள் குறிப்பிட்ட அந்த பட்டினத்தார் பாடலின் பெண் குரல் பி.லீலா அவர்களுடையது.இசையின் ராணி என்று பெயர் சூட்டப்பட்ட பி.லீலா அவர்கள் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,பெங்காலி மற்றும் சின்ஹாலா மொழிகளில் 5000 பாடல்கள் பாடியுள்ளார்.

தாங்கள் குறிப்பிட்ட அந்த பட்டினத்தார் பாடல் மாயாமாளவ கெளளை ராகத்தில் அமைந்த அருமையான பாடல்

Chitra December 02, 2010 1:49 PM  

அருமை. வாழ்த்துக்கள், கோபி!

சுசி December 02, 2010 4:20 PM  

நல்ல பகிர்வு கோபி..

துளசி கோபால் December 02, 2010 8:27 PM  

அழகா எழுதி இருக்கீங்க.

நம்ம கும்பகோணம் பயணத்துலே ஸ்வாமிமலை போனாலும் நாலே வரிதான் எழுதி இருக்கேன்:(

தி. ரா. ச.(T.R.C.) December 03, 2010 2:25 AM  

கோடிச் செல்வம் நிறைந்தாலும் என்ன
அதைக் குலவிக் கொஞ்ச மனம் குளிர்ந்திடுமோ
ஓடி வந்து விளையாட இங்கு ஒரு
பாலன் வேண்டுமென வேலன் தந்தையிடம்
நிலவே...
கோபிக்கு நல்வரவு. பதிவுக்கு நன்றி. இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தது மாயாமாளவ ராகத்தில் அமைந்த அருமையான பாடல். ச்வாமிமலைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளேன் ஆனால் தாங்கள் அளித்த தகவல் புதிதாக உள்ளது

தி. ரா. ச.(T.R.C.) December 03, 2010 2:41 AM  

மனிதனின் கணக்கு வழக்குகளை சரி செய்யும் முருகனின் முருகனருளில் மற்றுமொரு கணக்காளரா நல்லது.

sury December 03, 2010 10:49 AM  

கோபி ராமமூர்த்தி !!
முதல் பதிவா இது !!
மூத்தவர் பதிவல்லவா இது !!
என வியக்கும் வண்ணம் உள்ளது.

சுப்பு ரத்தினம்.

குமரன் (Kumaran) December 03, 2010 4:11 PM  

கோபி,

கோர்வையாக எழுதியிருக்கிறீர்கள்.

சுவாமிமலைக்கு ஒரே ஒரு முறை தான் சென்றிருக்கிறேன். அப்போது ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு படி என இருக்கும் அறுபது படிகளும் முருகன் முன் இருக்கும் யானை வாகனமும் பார்த்த நினைவு.

தி. ரா. ச.(T.R.C.) December 04, 2010 1:42 AM  

@குமரன் ஒரு ஒற்றுமை பாத்தீங்களா. திருத்தணியிலும் முருகனுக்கு வாகனம் யானைதான் .தேவயானையை கல்யாணம் செய்து கொண்டதற்கு இந்திரன் தன்னுடைய யானையான ஐராவதத்தை கல்யாணப் பரிசாக கொடுத்தாராம்

துளசி கோபால் December 04, 2010 1:51 AM  

அந்த யானைகூட சந்நிதியை நோக்கி நிக்காமல் அவசரமாப் புறப்படுவதுபோல் நம்மைப் பார்த்து நிக்கும்.

Gopi Ramamoorthy December 05, 2010 8:33 PM  

மிக்க நன்றி முத்துலட்சுமி

கண்ணபிரான் சார், உங்க பின்னூட்டம் பதிவை விட அழகாக இருக்கிறது!

மோகன்ஜி, விளக்கத்திற்கு நன்றி, அடிக்கடி வாருங்கள்.

அருணை, அப்போ சுவாமிமலை உங்களுக்கு என்றுமே மறக்காத அனுபவம்னு சொல்லுங்க.

ராஜி மேடம், உங்கள் விளக்கங்களுக்கு மிக்க நன்றி

சித்ரா, மிக்க நன்றி

சுசி, மிக்க நன்றி

துளசி கோபால் மேடம், அடுத்த வாட்டி போய்வரும்போது நல்லா பெரிய பதிவு ஒன்னு போட்டுடுங்க!

தி ரா ச, உங்க மின்னஞ்சல் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்த கதைதான். ஊரில் இல்லாததால் பதில் எழுதவில்லை. இன்று நாளைக்குள் எழுதுகிறேன்.

சுப்பு ரத்தினம் சார், மிக்க நன்றி

குமரன் சார், மிக்க நன்றி.

யானை வாகனத்திலேயே இவ்வளவு விஷயம் இருக்கிறதா?!

கவிநயா December 06, 2010 10:31 PM  

//கோடிச் செல்வம் நிறைந்தாலும் என்ன
அதைக் குலவிக் கொஞ்ச மனம் குளிர்ந்திடுமோ
ஓடி வந்து விளையாட இங்கு ஒரு
பாலன் வேண்டுமென வேலன் தந்தையிடம்
நிலவே...//

வெகு அழகான பதிவு, ச்செல்ல முருகன் போல :)

ஜெய்கணேஷ் December 06, 2010 11:54 PM  

'அரோஹரா' என்றால் என்ன ? யாராவது எனக்கு சொல்லுங்களேன் ப்ளீஸ்!!!!

அருணையடி December 07, 2010 11:33 PM  

/'அரோஹரா' என்றால் என்ன ? யாராவது எனக்கு சொல்லுங்களேன் ப்ளீஸ்!!!!
/

http://pluzmedia.com/youtube/8HdEPYql8G0/meaning-of-arogara-part-1-in-tamil

அருணையடி December 08, 2010 7:12 AM  

அரோஹரா - விளக்கம்
ஒருவர் இன்னொருவருக்கு பணத்தைக் கடனாகக் கொடுத்து அது திரும்பி வரவில்லை என்றால் உன் பணம் அரோஹரா தான் என்று விளையாட்டாக சொல்வது வழக்கம். அரோஹரா என்ற சொல்லுக்கு போய்விட்டது என்று பொருள். ஹர ஓ ஹர என்ற சொல் தமிழில் அரோகரா என திரிந்தது. சிவ நாமங்களில் அர என்ற சொல் உயர்ந்தது. அரஹர என்றால் பாவங்கள் போய்விட்டது என்று பொருள் கொள்ள வேண்டும். இதை இடைவிடாது உச்சரித்தால் நம் பாவங்கள் யாவும் ஒழிந்து விடும். அதனால் தான் அண்ணாமலையில் அரோஹரா என்ற சொல் வேத மந்திரமாக ஒலிக்கிறது.

- SP.VR.Subbaiya

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP