Sunday, November 21, 2010

என் வாழ்வின் பொருளதனை யார் வந்து சொல்வார்


தெரு நாய் கண்டெடுத்த
தெங்கொன்றைப் போலே
எவரேதும் பயன்காணா
என் வாழ்வை ஏன் தந்தாய் ?

என் வாழ்வின் பொருளதனை
யார் வந்து சொல்வார் - முருகா
நீயன்றி வேறெவர்தான்
நான் கேட்டுத் தருவார்?

ஊழ்வினை தீர்க்கத்தானே
உனைநாடி வந்தேன் - முருகா
என்வினை சேர்க்கநீயும்
உறவொன்றை ஏன்தந்தாய்?

பற்றுக்கள் யான்வெறுத்து
நின்பதம் சேரவந்தால் - முருகா
என்கையினிலே திருவோட்டை
ஏனய்யா நீதந்தாய்?

பாசங்கள் அகலவென
ஞானத்தை யான்கேட்டால் - முருகா
பாசத்தை விதைத்தோர்
வேஷத்தை ஏன்கொடுத்தாய்?
உறவென்ற ஓடதனை
உடைத்திடவோர் வழியில்லை - முருகா
எனைநீயும் ஆட்கொண்டு
அருள்தரவே மனமிலையோ?


பிணையென்றும் உறவென்றும்
இல்லாத நிலையாக - முருகா
உனைமட்டும் நினைந்துருகும்
மெய்யான பொருளாக - முருகா
எனைநீ மாற்றி விடு! - முருகா
நின்பதமலர் தந்துவிடு!


8 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) November 20, 2010 10:01 PM  

திருக்கார்த்திகைப் பதிவா?
இந்தக் கவிஞர் பேர் என்னங்க? :)

//முருகா என்வினை சேர்க்க
உறவொன்றை ஏன் தந்தாய்?//

நல்ல கேள்வி! :)
உறவொன்றை ஏன் தரணும் அவன்? :)

//உனைமட்டும் நினைந்துருகும் மெய்யான பொருளாக
முருகா எனைநீ மாற்றி விடு!//

மற்றை நம் காமங்கள்
மாற்றேலோர் எம்பாவாய்!

Anonymous November 23, 2010 8:24 AM  

அ + உ + ம் = ஓம்
தலைகீழாக
ம் + உ + அ = முருக
முருகனே பிரணவம் ஆவான்
ஓம் முருகா!!!!

kannabiran, RAVI SHANKAR (KRS) November 23, 2010 10:16 AM  

அன்புள்ள அனானி அவர்களே

ம் + உ + அ = முஅ தான் வருது! முருகா அல்ல!

ஒரு நயத்துக்கு வேண்டுமானால் இப்படிச் சொல்லலாமே தவிர, பிரணவப் பொருளைத் திருப்பிப் போட்டு, மாற்றிச் சொல்ல வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்! இது தவறான தகவலையே அடியார்கள் மத்தியில் பரப்பி விடும்!

முருகன் பிரணவப் பொருள் சொன்னவன்!
அவன் பிரணவம் அறிந்தவன்! பிரணவ ரூபமானவன்!
அது வரை சரியே!

முருகா என்பது தூய தமிழ்ச் சொல்! அது பிரணவம் ஆகாது!

பிரணவப் பொருள் சொன்னான், சொன்னான் என்று தான் பலரும் சொல்வார்களே அன்றி, என்ன பொருள் சொன்னான் என்பதைப் பலரும் சொல்வதில்லை!

அதனால் இப்படி ம்+உ+அ, உ+ம்+அ, என்று திருப்பிப் போடுதல்கள், அறியாமல் நிகழ்கின்றன!
உ+ம்+அ=உம, அது தான் உமா என்றெல்லாம் "நயத்துக்கு" சொல்லி விடுவார்கள்! :)

பிரணவம் = இறைவனுக்கும் உயிர்களுக்கும் இடையேயான உறவைச் சொல்வது! அதையே முருகன் சொன்னான், படைப்பின் பொருட்டு, பிரம்மனுக்கு! முருகன் சொன்னதை, நம் "நயத்துக்கு" நாமே மாற்றிட வேண்டாம்! முருகன் சொல்லையே முன்னிறுத்துவோம்!

Anonymous November 23, 2010 10:58 PM  

you are wrong
please see the following link

http://siththarkal.blogspot.com/2010/08/blog-post_12.html

madhavipanthalai vittu konjam veliye vaarungal!!!

kannabiran, RAVI SHANKAR (KRS) November 24, 2010 12:02 AM  

//Anonymous said...
you are wrong
please see the following link//

:)
அந்தச் சுட்டியில் அன்னை பாலாம்பிகையின் பீஜ மந்திரங்கள், பூஜா விதி மட்டுமே சித்தர் பாடல்களால் பேசப்படுகின்றன!

எந்தவொரு இடத்திலும் ம்+உ+அ = முருகா என்பதற்கான சித்தர் குறிப்பை அவர் சொல்லவில்லை! அது அவராகச் சொல்லிக் கொண்ட குறிப்பு, அவ்வளவே!

அப்படிச் சித்தர்களோ, திருமூலரோ காட்டிச் சென்றதாகவும் இல்லை!

பிரணவ மந்திரப் பொருள் முருகப் பெருமான் ஈசனுக்கு எடுத்துக்காட்ட, பின்னர் அதையே ஈசன் நந்தி தேவருக்கு உபதேசிக்க...
நந்தி -> சிவயோக முனிக்கும், சிவயோகர் -> பதஞ்சலிக்கும்...இப்படியே வரிசை திருமூலர், சித்தர்கள் என்று விரிந்து, திருக்கைலாய ஞான பரம்பரை உருவாகிறது!

இதில் எவரும் ம்+உ+அ = முருகா என்று சொல்லிச் சென்றார் இல்லை!

முருகு என்பது அழகிய தமிழ்ச் சொல்!
அதற்குள் பிரணவ பீடம் இருக்கு, அது இருக்கு, இது இருக்கு என்று தாமாகக் கிளப்பி....
தமிழையும் நோகடித்து, வடமொழியையும் நோகடித்து, பிரணவ தத்துவத்தையும் நோகடிக்க வேண்டாம்!

//madhavipanthalai vittu konjam veliye vaarungal!!!//

:)
உண்மையான சித்தர் வழி நடப்பவர்களுக்கு, எதை விட்டும் "வெளியே" வரத் தேவையில்லை! அனைத்தும் "உள்" ஒளியே!

ஊனினை உருக்கி, "உள்"ஒளி பெருக்கி, உலப்பிலா ஆனந்த மாயத் தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்து, செல்வமே சிவபெருமானே - இதுவே சித்த யோகம், சித்த நெறி! ஆதலால் மாதவிப் பந்தலோ, சித்தப் பந்தலோ...எதை விட்டும் "வெளியே" வரத் தேவையில்லை! "உள்ளே" உள்ளது உண்மையின் தரிசனம்!

தனக்குப் பிடிச்சிருக்கு என்பதால், பிரணவத்துக்கு, ஆதாரம் இல்லாமல், தாமாகவும் தவறாகவும் சொல்லும் போக்கு, இங்கு அடியார் குழாத்தில் வேண்டாம் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்!

kannabiran, RAVI SHANKAR (KRS) November 24, 2010 12:23 AM  

தோழி அவர்கள், அகார-உகாரங்களைப் பற்றித் தெளிவாகவே இன்னொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்! வாசித்துப் பார்க்கவும்! http://siththarkal.blogspot.com/2010/08/blog-post.html

Quote:
//
எட்டும் இரெண்டும் இனிதறிகின்றலர்
எட்டும் இரெண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரெண்டும் இருமூன்று நான்கெனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே!

இந்த அ, உ என்ற இரண்டு உயிரெழுத்துக்களையே சித்தர்கள் தங்களின் பாடல்களில் மறை பொருளாக எட்டிரண்டு என குறிப்பிட்டனர்.

இத்தனை முக்கியத்துவம் கொடுத்து மறைபொருளாக சித்தர்கள் பாடியது எதனால்?

இயற்கையின் ஓசைகள் அனைத்துமே இந்த அ, உ என்கிற சப்தத்தை கொண்டு தான் இயங்குகின்றன. இந்த அகார, உகார நாதத்தில் இருந்துதான் அனைத்துமே தோன்றின.அனைத்து ஒலிகளுக்கும் மூல ஆதாரமே இந்த எட்டிரெண்டுதான். வேதம், இசை, மந்திரம், யந்திரம், தந்திரம் என அனைத்திலுமே இவை இரகசியமாக அமைந்துள்ளது//

கவிநயா November 24, 2010 8:53 AM  

உங்க கவிதையைப் படிச்சதும் புன்னகை வந்தது :) தப்பா நினைக்காதீங்க. என்னை மாதிரியே புலம்பல் கேசா இருக்கீங்களேன்னுதான் :) முருகன் எது செய்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கும். கவலை வேண்டாம்.

அருணையடி November 25, 2010 1:09 PM  

/முருகன் எது செய்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கும். கவலை வேண்டாம்./

Realized! I could understand the reasons nowadays!

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP