Wednesday, November 10, 2010

கந்த சஷ்டி 6: திருச்செந்தூரின் கடலோரத்தில்...ஈழத்தின் கடலோரத்தில்,,,

மக்களே, இன்று தான் கந்த சஷ்டி (Nov-11)!

முருகன் சூரனை வதம் செய்ததாகப் பெரிதும் சொல்லப்படுவது திருச்செந்தூர் கடற்கரை!
ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டியின் போது, செந்தூரில் வெகு விமரிசையாக நடக்கும் சூர சங்கார விழாவும் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது! ஆனால் கந்த புராணம் சொல்வது என்ன? இலக்கியங்கள் சொல்வது என்ன?

சூர சங்காரம் எங்கு நடந்தது? = தமிழ் ஈழமா? திருச்செந்தூரா?
அம்மையப்பனிடம் வேல் வாங்கிய முருகன், தேர் ஏறித் தெற்கு நோக்கிச் செல்கிறார். விந்தியமலையின் அடிவாரத்து மாயாபுரத்தைத், தாராகாசுரன் ஆண்டு வருகிறான். இவன் சூரனின் தம்பி.
கிரெளஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி இவன் வழிமறிக்க, வீரபாகுத் தேவர் அவனுடன் போர் புரிகிறார். ஆனால், வீரபாகுவும், முருகனின் சேனையும், அந்த மலைக்குள் மாட்டிக் கொள்கின்றனர்!

தாரகன் முருகனோடு நேரடியாக மோதவில்லை! எனினும் அன்பர்கள் மாட்டிக் கொண்டதால், முருகன் கூர் வேலை அவன் மேல் எறிய, மலை பிளந்து, தாருகன் அழிகிறான். அனைவரும் மலைச்சிறையில் இருந்து விடுபடுகின்றனர்.
சூரபத்மன் இந்தச் சேதி கேட்டு நடுக்குறுகிறான். எதிரிப் படை ப்லம் வாய்ந்ததோ என்ற ஐயம் முதன்முதலாக அவனுக்கு வருகிறது. முருகனின் சேனையைக் கணக்கிட உளவுப்படையை அனுப்பி வைக்கிறான்.

மன்னி ஆற்றங்கரையில், சிவபிரானுக்கு ஆலயம் எழுப்பச் சொல்லித் தேவ தச்சனைப் பணிக்கிறார் முருகப் பெருமான்.
ஈசனும் முருகனுக்கு முன்னே தோன்றி, பாசுபதம் என்னும் அஸ்திரம் அளிக்கின்றார். பின்னரே திருச்செந்தூர் நோக்கி மொத்தப் படையும் கிளம்புகிறது.

பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள், முருகனைச் செந்தூரில் கண்டு, வீழ்ந்து வணங்குகிறார்கள். புதிதாகக் கட்டப்பட்ட ஆலயத்தில் அமர்ந்து, தேவ குருவான வியாழனிடம் (பிரகஸ்பதி), சூரபத்மனின் முழுக் கதையையும் சொல்லுமாறு கேட்கிறார் முருகன். அதன் பின்னரே வீரபாகுவை மட்டும் தூது அனுப்ப முடிவாகிறது!

தூது செல்லும் வீரபாகு முதலிலேயே சூரனைச் சந்திக்கவில்லை! சிறைப்பட்ட தேவ இளவரசன் ஜெயந்தனைத் தான் முதலில் போய்ப் பார்க்கிறான்! ஜெயந்தனுக்கும் அவனுடன் இருக்கும் மற்ற அமரர்களுக்கும் ஆறுதல் சொல்கிறான் வீரபாகு!
பின்னரே, சூரன் அவைக்குச் சென்று தூது உரைக்கிறான்! ஆனால் அசுரனின் ஆணவப் பேச்சாலும், கொஞ்சம் கூடப் பிடி கொடா உள்ளத்தாலும் தூது முறிகிறது.

அப்போது ஏற்பட்ட கைகலப்பில் சூரனின் புதல்வர்கள் சதமுகன், வச்சிரவாகு இருவரும் வீரபாகுவால் கொல்லப்படுகிறார்கள்.
வீரபாகு திருச்செந்தூர் திரும்பி, முருகனிடம் தூது நிகழ்வுகளை முன் வைக்கிறான்.

முருகனும் இனி தாமதிக்கலாகாது என்று செந்தூரில் இருந்து இலங்கை செல்கிறார்.
ஈழத்தில்,
ஏமகூடம் என்னும் ஊரில் படைக்கலன்களுடன் தங்க, அங்கிருந்து தான் போர் துவங்குகிறது.

பானுகோபன் என்னும் சூரனின் மகன், நன்னீர்க் கடலில் முருகன் சேனையை ஆழ்த்த, அதை முருகன் முறியடிக்கிறார்.

வீரமகேந்திரபுரத்தில் பலப்பல மாயங்கள் செய்து போர் புரிகிறான் சூரன்.
கடலாய், இருளாய் மாறி மாறிச் செய்யும் போர் எதுவும் உதவாமல் போக, கடைசியில் வெறுத்துப் போய், கடலுக்கு அடியில் ஒரு மாமரமாய் நிற்கிறான்.

கூர் வேல் சூரனைப் பிளந்து.....சேவலும் மயிலுமாய் ஆக்குகிறது. சூரசங்காரம் நடந்து முடிகிறது!
ஒருவனின் ஆணவத்தால், சூரனின் மொத்த கிளையும், உற்றார் உறவோடு, அத்தனை பேரும் அழிகிறார்கள்!

முருகனின் ஆணைப்படி, வருணன் மொத்த ஊரையும் கடலுக்கு அடியில் மூழ்கடிக்க, போர் முடிகிறது.
வெற்றித் திருமகனாய், முருகப் பெருமான் திருச்செந்தூர் திரும்புகின்றார்.

ஆனால் இப்படிச் சூரனத் தாமே அழித்த மனக்கேதம் தீர்க்க, முருகன் மனம் எண்ணுகிறது!
செந்தூரில் போருக்கு முன்னரே கட்டப்பட்ட ஈசனின் ஆலயத்தில், கைகளில் ஜபமாலையோடு, சிவ பூசை செய்கிறார் முருகன்.

இந்தக் கோலமே நாம் இன்றும் திருச்செந்தூர் கருவறையில் காண்பது!
கைகளில் ஜப மாலையுடன் செந்தூர் மூலத்தானத்து முதல்வன் நிற்க, சற்று எட்டிப் பார்த்தால், கருவறைக்குள் சிவலிங்கமும் தெரியும்!

ஆக, சூரசங்காரம் நடந்தது ஈழத்தில் இருந்து தான்! ஏமகூடம் என்ற ஊர் இப்போது இலங்கையில் எங்கு இருக்கு? யாரேனும் அறியத் தாருங்கள்!

திருச்செந்தூரில் நடித்துக் காட்டப்படும் சூர சங்காரம் மிகப் பிரபலமானதால், பலருக்கும் திருச்செந்தூரில் தான் போர் நடைபெற்றது என்ற நினைப்பு வந்து விடுகிறது!
திருச்செந்தூர் மட்டுமல்லாது, பல முருகன் ஆலயங்களிலும், ஏனைய ஆறுபடை வீடுகளிலும் கூடச் சூர சங்காரம் நடித்துக் காட்டப்படுகிறது! ஆனால் சூர சங்காரம் நடந்தது ஈழத்தில் இருந்து தான்!

ஈழத்துக்கும், முருகனுக்கும் உள்ள தொடர்பு....
ஈழத்தின் நிலைத்த நிம்மதிக்கு அந்த முருகவேளே முன்னிற்க, முன்னிற்க!


இன்றைய சஷ்டிப் பாடல்... = திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்!
சீர்காழியும், TMS-உம் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல், உச்ச குரலில், உணர்ச்சி ஒருமித்துப் பாடுவது!

படம்: தெய்வம்
குரல்: சீர்காழி, TMS
வரிகள்: கண்ணதாசன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்


திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்!


அசுரரை வென்ற இடம் - அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் - வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்! அன்பர் திருநாள் காணுமிடம்!

கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா?

மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு!


பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய்............முருகா!இது வரை சஷ்டிப் பதிவுகளுக்கு, அன்பாய் வந்திருந்த முருக அன்பர் அனைவர்க்கும் அடியேன் நன்றி!

இந்தச் சஷ்டி விரதம் துதிப்போர்க்கு....
வல்வினை போம்! துன்பம் போம்!
முருக இன்பமே முளைக்கும் ஓம்!

சஷ்டியின் ஆறு நாள் பதிவுகளோடு கூட, வள்ளித் திருமணம் இல்லாமலா?

என் திரு முருகா!!! = நாளை ஒரு கனவுப் பதிவாய் - என் கனவுப் பதிவாய்...அதையும் இட்டு நிறைவு செய்கின்றேன்!

நம்பியவர் உன் வீட்டுப் படியேறி வந்தால்,
அவர்களிடம் நீ நெஞ்சுருகி நின்றால்
...
நம்பியவர் வந்தால்.....நெஞ்சுருகி நின்றால்
.....
கந்தா முருகா.....வருவாய் அருள்வாய்
......என் விதியாய், கதியாய்.....காதல் வேலவனே!


அப்படியே ஆடிப் பாடிக் கொண்டாட வேண்டாமா?
இதையும் பார்த்துடுங்ககந்தனிடம் உந்தனையே சொந்தமென விட்டுவிடு
சங்கதமும் செல்வமெல்லாம் வீடு வருமே!
உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே!
முருகனருள் கூட வருமே!
முருகனருள் கூட வருமே!
முருகனருள் கூட வருமே!

7 comments:

Narasimmarin Naalaayiram November 12, 2010 1:05 AM  

முருகா! முருகா!

Narasimmarin Naalaayiram November 12, 2010 1:05 AM  

சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்
எங்கும் கேட்கும் குரல்

தாங்கள் கூறியது அரிய விஷயம் எளிய நடை

குமரன் (Kumaran) November 12, 2010 7:12 AM  

தேவர் சிறை மீட்டவன்னா இப்பத் தானே புரியுது. அது ஜெயந்தன் முதலான தேவர்களைச் சிறை மீட்டதைச் சொல்லலை. வீரபாகு தேவரை சிறை மீட்டதைச் சொல்லுது! :-)

தமிழ் ஈழத்தில் தான் சூரசம்ஹாரம் நடந்தது என்றால் அது குமரிக்கண்டம் மூழ்கிய பிறகு நடந்ததா? :-)

கருவறைக்குள் சிவலிங்கம் தெரியுமா? பஞ்ச லிங்கம் கருவறைக்குப் பின்னாடி வேற ஒரு வழியா போய் பார்த்தோமே இந்த வருடமும், உங்க தயவாலே?

kannabiran, RAVI SHANKAR (KRS) November 12, 2010 1:41 PM  

@ராஜேஷ்
எப்படி இருக்கீங்க? "அரிய" விஷயமெல்லாம் ஒன்னுமில்ல! அடியார்கள் "அறிய", விஷயம் சொன்னேன்! அவ்வளவே! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) November 12, 2010 1:47 PM  

@ குமரன் அண்ணா
//கருவறைக்குள் சிவலிங்கம் தெரியுமா?//

ஆமாம்! அவனுக்கு இடப்பக்கம், கருவறைக்குள்ளேயே இருப்பது ஜகன்னாதர் என்னும் சிவ லிங்கம்!

அதோடு பாம்பறை வழியாகச் சென்று பார்த்தால் திருச்சுற்றில் இருப்பது பஞ்ச லிங்கம்!

//போய் பார்த்தோமே இந்த வருடமும், உங்க தயவாலே?//

ஆகா! என் தயவாலா? நோ வே! எல்லாம் செந்திலாண்டவன் தயவும், என் இராகவப் பெருமாள் அன்பும்-ன்னு வேணும்-ன்னாச் சொல்லுங்க!

kannabiran, RAVI SHANKAR (KRS) November 12, 2010 1:59 PM  

//தேவர் சிறை மீட்டவன்னா இப்பத் தானே புரியுது. அது ஜெயந்தன் முதலான தேவர்களைச் சிறை மீட்டதைச் சொல்லலை. வீரபாகு தேவரை சிறை மீட்டதைச் சொல்லுது! :-)//

ஹா ஹா ஹா
வீரவாகுத் தேவர் சிறை இருந்தாரா என்ன? :)
மலையில் மாட்டிக் கொண்டதெல்லாம் சிறையாகுமா? கம்பி எண்ணினால் மட்டுமே சிறை! :)

//தமிழ் ஈழத்தில் தான் சூரசம்ஹாரம் நடந்தது என்றால் அது குமரிக்கண்டம் மூழ்கிய பிறகு நடந்ததா? :-)//

அச்சச்சோ! அப்போ இதுவும் "கங்கை கொண்ட சோழபுரம்" போல் குரு பரம்பரைக் "கதையா"? :)

குமரிக் கண்டம் மூழ்கும் முன்னரே, குமரவேள் கதை அனைத்தும் முடிந்து விடுகிறதே! எனவே ஈழம் அப்போதும் இருந்தது! அதுவுக் கடலை ஒட்டி! ஆனால் இப்போது போல் தீவாக இல்லை!

jaisankar jaganathan October 30, 2011 10:25 PM  

குமரிக்கண்டம் பத்தி ஒரு பதிவு போடுங்க

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP