Tuesday, September 14, 2010

வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

அரோகரா!! அரோகரா!! அரோகரா!! அரோகரா!!
அரோகரா!! அரோகரா!!

சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செய்யும் முக ...... மலராறும்
அரோகரா!!

சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள ...... இருதாளும்
அரோகரா!!

ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட ...... முறைவாழ்வும்
அரோகரா!!

ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
ஞானாபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது ...... பெறவேணும் (இது விராலிமலை திருப்புகழ்)



அரோகரா!!

முருகா! முத்துக்குமரா!! வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

எண்ணங்கள் ஈடேற எங்களுள்ளம்தான் மகிழ
எண்ணை அபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----எண்ணை அபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

பாசமெல்லாம் பொங்குதப்பா வாசனைப்பொடி அபிஷேகம்,
பாசமெல்லாம் பொங்குதப்பா வாசனைப்பொடி அபிஷேகம்
பாபம் தீர உன்னைக்காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----உன்னைக்காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

மலர்களெல்லாம் உனக்காக மகிழ்வுடனே தேன் சிந்தும்
மலர்கள் எல்லாம் உனக்காக மகிழ்வுடனே தேன் சிந்தும்
தேனாபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----தேனாபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

சந்திரனோ சூரியனோ தந்த நிறம் சந்தனமோ,
சந்திரனோ சூரியனோ தந்த நிறம் சந்தனமோ
சந்தனாபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----சந்தனாபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

பத்துக் காதம் மணக்குதப்பா! பன்னீரின் வாசமப்பா!!
பத்துக் காதம் மணக்குதப்பா! பன்னீரின் வாசமப்பா!!
பன்னீரபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----பன்னீரபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

இளகுதப்பா கல்மனமும் இளையவனே உனைக்காண,
இளகுதப்பா கல்மனமும் இளையவனே உனைக்காண
இளநீரபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----இளநீரபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

தனித்து நின்ற இளையவனே,தண்டாயுதம் தரித்தவனே!!
தனித்து நின்ற இளையவனே,தண்டாயுதம் தரித்தவனே!!
தயிரால் அபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----தயிரால் அபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

தஞ்சமென்று வருவோர்க்கு வஞ்சமில்லா தருள்பவனே
தஞ்சமென்று வருவோர்க்கு வஞ்சமில்லா தருள்பவனே
பஞ்சாம்ருத அபிஷேகம் காண புண்ணியம்செய்தோம்
நாங்கள்----பஞ்சாம்ருத அபிஷேகம் காண புண்ணியம்செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

பண்டாரம் ஆனதனால் வீபூதி அபிஷேகம்,
பண்டாரம் ஆனதனால் வீபூதி அபிஷேகம்
விபூதி அலங்காரம் காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----விபூதி அலங்காரம் காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

புண்ய தீர்த்தம் பல சேர்த்து புனித வேதத் தமிழ்வேதம்
புண்ய தீர்த்தம் பல சேர்த்து புனித வேதத் தமிழ்வேதம்
கும்பாபிஷேகமும் காண புண்ணியம் செய்தோம்
நாங்கள்----பூர்ண அபிஷேகமும் காண புண்ணியம் செய்தோம்
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!
வேல் வேல் முருகா! முத்துக்குமரா!!

முத்துக்குமரா!! முத்துக்குமரா!! முத்துக்குமரா!! முத்துக்குமரா!!
முத்துக்குமரா!! முத்துக்குமரா!! முத்துக்குமரா!! முத்துக்குமரா!!
அரோகரா!அரோகரா!!அரோகரா!!! அரகரோகரா!!!




......... சொல் விளக்கம் .........

சீரான கோலகால நவ மணி மால் அபிஷேக பார ...
வரிசையானதும், ஆடம்பரமுள்ள ஒன்பது மணிகள் பதிக்கப்பெற்ற பெருமை பொருந்திய கிரீடங்களின் கனத்தை உடையதும்,

வெகு வித தேவாதி தேவர் சேவை செயு முக மலர் ஆறும் ...
பல வகையான தேவாதி தேவர்களெல்லாம் வணங்குவதுமான ஆறு திரு முகங்களையும்,

சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளும் ...
சிறப்பு உற்று ஓங்கும் வீர லக்ஷ்மி குடிகொண்டிருக்கும் பன்னிரு
தோள்களையும்,

நீளும் வரி அளி சீராகம் ஓதும் நீப பரிமள இரு தாளும் ...
நீண்ட ரேகைகள் உள்ள வண்டுகள் ஸ்ரீராகம் என்னும் ராகத்தைப் பாடி ரீங்காரம் செய்யும் கடப்ப மலரின் மணம் வீசும் இரண்டு திருவடிகளையும்,

ஆராத காதல் வேடர் மட மகள் ஜீமூதம் ஊர் வலாரி மட மகள் ... முடிவில்லாத ஆசையை உன் மீது கொண்ட வேடர்களின் இளம் மகளான வள்ளியும், மேகத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனுடைய அழகிய பெண்ணாகிய தேவயானையும்,

ஆதார பூதமாக வலம் இடம் உறை வாழ்வும் ...
பக்தர்களின் பற்றுக் கோட்டின் இருப்பாக வலது பாகத்திலும்,
இடது பாகத்திலும் உறைகின்ற உனது திருக்கோல வாழ்க்கையையும்,

ஆராயும் நீதி வேலும் மயிலும் ...
நன்கு ஆராய்ந்து நீதி செலுத்தும் உனது வேலையும் மயிலையும்,

மெய்ஞ் ஞான அபிராம தாப வடிவமும் ...
ஞான ஸ்வரூபியான கீர்த்தி பெற்ற உனது பேரழகுடைய திருவுருவத்தையும்,

ஆபாதனேனும் நாளும் நினைவது பெற வேணும் ...
மிகக் கீழ்ப்பட்டவனாக நான் இருப்பினும், நாள் தோறும்
(மேற்சொன்ன அனைத்தையும்) தியானம் செய்யும்படியான பேற்றைப் பெற வேண்டுகிறேன்.

***

திரு. பித்துக்குளி முருகதாஸ் ஐயாவும் குழுவினரும் பாடிய இந்தப் பாடலையும் வரி வடிவத்தையும் அனுப்பிய திரு. பிரகாசம் ஐயாவிற்கு நன்றி.

7 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) September 14, 2010 10:58 AM  

மிகவும் அழகான விராலிமலைத் திருப்புகழ்...
அந்த அபிடேகத்தை அபிமானம் ஆக்கிக் கொடுக்கும் குரல்...

பித்துக்குளியார் குரலில் குளியார், குளியாதாரே! களியார் களியாதாரே!

இந்தத் திருப்புகழைத் தான் விராலிமலைச் சன்னிதியில் அம்மாவுடன் சென்றிருந்த போது ஓதி, அதனால் அர்ச்சகர்கள் ஈர்க்கப்பெற்று, அருகில் அழைத்துக் கொண்டு போய்...

என்னை அவனுக்கு அணுக்க அணுக்கக் காட்டிக் கொடுத்தார்கள்! அவன் பிடிக்கும் சுருட்டு பீடி உட்பட! :))

இதோ அந்தப் பதிவும் அதற்கு குமரன் அண்ணாவின் "கண்டனங்களும்"!!

Kannabiran, Ravi Shankar (KRS) September 14, 2010 11:55 AM  

பித்துக்குளி கிட்ட பிடித்ததே இது தான்!
திருப்புகழில், மாலாபிஷேக என்ற ஒற்றைச் சொல்லை லபக்-ன்னு பிடிச்சிக்கிட்டு, கூடவே அத்தனை அபிடேகங்களையும், தன் சொந்தச் சரக்காக, கூடவே நுழைத்து ஆனந்திக்கறார் பாருங்க!

இத்தனைக்கும் இங்கே அபிஷேகம் என்பது = மணிமுடி/கிரீடம் என்ற பொருளில் தான் வருது!

ஆனால் அதற்கு மாறாக...
எண்ணெய், வாச்னைப்பொடி, தேன், சந்தனம், பன்னீர், இளநீர், தயிர், பஞ்சாமிருதம், விபூதி என்று அத்தனையும் தன் சொந்தச் சரக்காக ஜனரஞ்சகமாக ஓட்டிக் காட்டுகிறார்! :)

இது தான் பொதுமக்களைக் கவரும் தன்மை, அவர்களை முருகனருளில் ஆழ்த்தும் தன்மை!
திருப்புகழில் கை வைக்கக் கூடாது, புனிதம் கெடும் என்றெல்லாம் பேசிக் கொண்டிராமல்...

இப்படித் திருப்புகழும், தன் பாட்டும் சேர்த்துச் சேர்த்து தருவது நல்லதற்கே! திருப்புகழ்ச் சந்தம் கடினமானது, பண்டிதர்களுக்கே புரியும் என்றில்லாது பொதுமக்களையும் சென்றடையும்!

சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
முருகா முருகா முருகா!

Kannabiran, Ravi Shankar (KRS) September 14, 2010 12:18 PM  

இன்னொன்றும் கவனியுங்கள் குமரன்!

எப்படி முதல் முதல் திருப்புகழில், தன்னைத் தற்கொலையில் இருந்த காத்த முருகனோடு,
தோழனைத் தற்கொலையில் இருந்து காத்த கண்ணனை எப்படி நினைத்தாரோ அருணகிரி...

அதே போல் இங்கும் நினைக்கிறார்! இதோ இந்தத் திருப்புகழின் அடுத்த வரிகள்!

கூர் ஆழியால் முன் வீய நினைபவன்
ஈடேறும் ஆறு "பாநு மறைவுசெய்
கோபால ராயன்" நேயம் உள திரு - மருகோனே!

கோடாமல் ஆரவார அலை எறி
காவேரி ஆறு பாயும் வயலியில்
கோனாடு சூழ் விராலி மலை உறை - பெருமாளே!!!

பட்டப் பகல் வட்டத் திகிரியில், இரவாக...
பச்சைப் புயல் மெச்சத் தகு பெருமாளே!

"மெச்சத் தகு, மெச்சத் தகு" என்று வியாக்கியானங்களை உருவாக்கி, இடைச் செருகும் இலகினை, நல்லோர்கள் செய்ய மாட்டார்கள்! போலிப் பண்பாளனின் பாங்கைப் போற்றுவதிலும் பேருவகை கொள்ளல் அனைவரும் செய்வதன்று! என்றால்...
அருணகிரி நல்லவரா? தீயவரா?

"கோபாலராயன்" நேயம் உள என் முருகா - சொல் முருகா சொல்!
பாநு மறைவுசெய் "கோபாலராயா" - சொல், கோபாலராயா சொல்!

Kannabiran, Ravi Shankar (KRS) September 14, 2010 12:30 PM  

நேயம் உள "கோபாலராயன்" மன்னிப்பானாக!
இந்த விராலிமலைத் திருப்புகழைக் கேட்ட மாத்திரத்தில், கட்டுப்படுத்த முடியாமல் படபடவென்று நினைவுகள் வந்துவிட்டன! நீ இருக்க பயம் ஏன்...முருகா!!!

Kannabiran, Ravi Shankar (KRS) September 14, 2010 12:31 PM  

@குமரன்
ஜீமூதம் ஊர் வலாரி மடமகள்-ன்னா என்ன குமரன்? ஜீமூதம்/வலாரி-க்கு பொருளே புரியலை!

பிரகாசம் September 14, 2010 2:39 PM  

பித்துக்குளியாரின் இந்த அழகிய பாடலை வெளியிட்டமைக்கு மிக நன்றி.
அருணகிரிநாதர் எங்கள் ஊரான திருச்செங்கோட்டில் பாடிய சில சந்தமிகு திருப்புகழ்ப் பாடல்களில் ஒன்று:

கலக்குங் கோதற வடிக்குஞ் சீரிய
கருப்பஞ் சாறெனு மொழியாலே

கருத்தும் பார்வையு முருக்கும் பாவிகள் கடைக்கண் பார்வையி லழியாதே

விலக்கும் போதக மெனக்கென் றேபெற
விருப்பஞ் சாலவு முடையேனான்

வினைக்கொண் டேமன நினைக்குந் தீமையை
விடற்கஞ் சேலென அருள்வாயே

அலைக்குந் தானவர் குலத்தின் சேனையை அறுக்குங் கூரிய வடிவேலா

அழைத்துன் சீரிய கழற்செந் தாமரை
யடுக்கும் போதக முடையோராம்

சிலர்க்கன் றேகதி பலிக்குந் தேசிக
திருச்செங் கோபுர வயலூரா

திதிக்கும் பார்வயின் மதிப்புண் டாகிய
திருச்செங்கோடுறை பெருமாளே.

Unknown September 24, 2010 4:08 AM  

பித்துகுளி ஐயா முருகனை பாடி அபிஷேகம் செய்தது .
அழகன் ஆடாது அசங்காது இருந்தாலும் அசைந்து ஆடி வருவார் ......
.நல்ல பாட ல் குமரன் மதுரை பயணம் நன்றக இருந்திருக்கும் ....சித்ரம்//

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP