Monday, July 19, 2010

முருகன் - பார்த்தால் பசி தீருமா? பசி வருமா??

இன்னிக்கு TMS குரலில், ஒரு வித்தியாசமான பாட்டை, கிட்டத்தட்ட கிறிஸ்துவ ட்யூன்-இல் இருக்கும் முருகன் பாட்டைக் கேட்போம்! :)
ஓப்பனிங் பீஸ், ஒரு பழைய தமிழ்ப் பாட்டு - சிவாஜி படப் பாட்டு போலவே இல்ல? என்ன சினிமாப் பாட்டு-ன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்! :)

முருகனைப் பார்த்தால் பசி தீருமா? பசி வருமா??
பார்த்தால் பசி தீரும் என்பார்கள்!
ஆனால் எனக்கு, அவனைப் பார்க்கப் பார்க்க, பசி தான் இன்னும் அதிகமாகும்... :)

பின்னே? படையலில் வச்சிருக்கும் தேன், தினைமாவு, அப்பம், அதிரசம் - இதெல்லாம் பார்த்தால்?
இதெல்லாம் கூட சமாளிச்சிறலாம்...
ஆனால் அவன் இதழ்க் கோட்டோரம் அந்தச் செழும்-செவ்-இதழ்கள்...அதைப் பார்த்தால்...பசி அல்லவோ அதிகமாகிறது? :) பாட்டைக் கேட்டுக்கிட்டே படிங்க!

பன்னிரு விழி அழகை, முருகா
பார்த்தால் பசி வருமா? - உன்

பனிமொழி வாய்த் தமிழை, முருகா

கேட்டால் துயர் வருமா?

(பன்னிரு விழி அழகை)

கண் இரண்டு இருந்தென்ன - உன்
கதிர்வேல் அழகைப் பாராமல்?

கால் இரண்டு இருந்தென்ன - உன்

குன்றத்தில் வந்து சேராமல்?

(பன்னிரு விழி அழகை)

பொன் பொருள் எதற்காக - உன்
புன்னகை இன்பம் இல்லாமல்?

என்னுயிர் எதற்காக - உன்

இணையடிப் போற்றிக் கொள்ளாமல்?
(பன்னிரு விழி அழகை)

ஓசைகள் எதற்காக - ஓம்
ஓம் என்று
ஒரு தரம் பாடாமல்?
ஆசைகள் எதற்காக - உன்
அருள் பெறும் வழியை நாடாமல்?

(பன்னிரு விழி அழகை)

முருகா ... முருகா ...
முருகா ... முருகா ...



உன் அருள் பெறும் வழியை நாடாமல், ஆசைகள் எதற்காக? என்கிறாரே! ஆசை வேணும்-ங்கிறாரா? வேணாம்-ங்கிறாரா?
ஆசையை ஒழி! ஆசையே துன்பத்துக்குக் காரணம்-ன்னுல்ல சொல்லுவாங்க?

அருள் பெறும் வழியை நாடாமால், கண்ட கண்ட ஆசை இருந்தால், அப்போது பயனில்லை!
ஆனால் அவன் அருளை நாடி, அதையே முதல் முதல் ஆசையாய், தலையாய ஆசையாய் வைத்து விட்டால், மத்த ஆசை எல்லாம் இருந்தாலும், அதெல்லாம் நம்மை ஒன்னும் செய்யாது விட்டு விடும்! :)

அவன் திருமேனி மீது அதிக ஆசை வையுங்கள்! மற்ற ஆசைகள் எல்லாம் அதற்கு அப்புறம் தான் என்று வைத்து விடுங்கள்! அப்படி வைத்து விட்டால்.....
முருக ஆசையே மேலோங்கி நிற்கும்!
இதர பருக ஆசையெல்லாம் அதன் பின்னால் தான் நிற்கும்!

நான் ஆசையை ஒழிக்க மாட்டேன்!
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்!
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்!

Friday, July 16, 2010

ஈழம் - கதிர்காமம் - ரமணி அம்மாள்!

ஈழத்தில் இன்று பலவும் முடிந்து விட்ட கோலம்! ஆனால் இன்னும் முடியாது முகாம்களில் தவிக்கின்ற கோலமும் கூட!
* முன்னது...கடந்த காலம் = உயிர் கடந்த காலம்!
* பின்னது...நிகழ் காலம் = உயிர் நிகழும் காலம்!

இருக்கும் இந்த உயிர்களையும், கடந்த காலமாய் ஆக்கி விடாது...
ஐ.நா-வின் அண்மைய ஈழ முயற்சிகள் பலன் அளிக்க வேணுமாய்...
பரமனையும் முருகனையுமே வேண்டிடுவோம்!

முருகனுக்கு ஆறு வீடுகள் இருப்பது போல், முகாம்களில் இருப்பவர்களுக்கும் வீடுகள் உள்ளன அல்லவா?
அவர்கள் எல்லாம், தம் ஒரு வீடு திரும்ப, ஆறு வீடு முருகன், மனம் வைத்தே ஆக வேண்டும்! மனம் வைத்தே ஆக வேண்டும்!!

வீடேறி வந்து நின்று, வேண்டியவர்களால் விரட்டப்பட்டால் அல்லவோ, வீட்டின் அருமை தெரியும்! அந்த அருமையைத் தெரிந்து கொள் என் முருகா!

இன்று முருகனருள் வலைப்பூவில்...
ஏழாம் படை வீடு என்று சிலாகிக்கப்படும் கதிர்காமம்=ஈழத்து முருகன்!

ஈழத்து ஆலயங்கள்



ரமணி அம்மாள் பற்றியும், அவர் முருகன் பாடல்கள் பலவும் அவ்வப்போது முருகனருள் வலைப்பூவில் இட்டு வந்துள்ளேன்!
* அம்மனுக்கு ஒரு பெண் பாடகர் = எல்.ஆர்.ஈஸ்வரி என்றால்,
* முருகனுக்கு ஒரு பெண் பாடகர் = ரமணி அம்மாள்!

மரபு இசை நுணுக்கம் உள்ளவர்! அதே சமயம் மக்களோடு மக்களாக எளிமையாக, கும்மாளமாகப் பாடக் கூடியவர்! கே.பி.சுந்தராம்பாள் போலவே வெங்கலக் குரல் அம்மாளுக்கு! கூடவே நம்மையும் பாட வைப்பார்!

திரைப்படங்களிலும் எம்.எஸ்.வி/குன்னக்குடி இசையில் பாடியுள்ளார்!
வேல் முருகா வேல் முருகா...வேல்ல்ல்ல்ல்ல்-ன்னு இவர் உச்ச கட்டத்தில் பாடும் போது, மைக் செட்டே அதிரும்! குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் பாட்டைத் தெரியாதவங்க இருக்க முடியாது! அவ்வளவு சிறப்பு!

ரமணி அம்மாள் பாடிய ஈழம்-கதிர்காமப் பாடல் தான் இன்றைய பதிவு!



கதிர்காமம், ஈழத்தின் தென் கிழக்குக் கோடியில் உள்ளது! எப்படி தமிழ்நாட்டில் திருச்செந்தூர் உள்ளதோ, அதே போல! ஆனால் கடலோரத்தில் இல்லை! கடலுக்குச் சற்று அருகே!
தமிழ்ப் பகுதிகளின் தென் கிழக்கு மாகாணத்தின் வால் பகுதியில் கடைசியாக ஒட்டிக் கொண்டு இருக்கும் ஊர்! இதைச் சுற்றிலும் சிங்களப் பகுதிகள் தான் அதிகம்!

முருகன் என்று நாம் பரவலாகச் சொன்னாலும், மொத்தம் மூன்று மதங்கள் சங்கமிக்கும் "புதிரான-புனிதமான" இடம் தான் இந்தக் கதிர்காமம்!
* தமிழ் = முருகன்!
* பெளத்தம் = "கதிர"தேவோ என்னும் மக்கள் வீரன்; போதி சத்துவர்-மகா சேனா ஆகியோரின் காலடி பட்டதாகச் சொல்வோரும் உண்டு!
* இஸ்லாம் = அல் கதிர் என்னும் இறைத் தூதர் மற்றும் வீரர் இஸ்கந்தர்; இருவரும் ஞான ஊற்றினைத் தேடிய இடம், அல் கதிருக்குத் தான் அகப்பட்டது என்பது வழக்கு; அதான் "கதிர்"காமம்!

இந்த மூன்று ஆலயங்களும் ஒன்று சேர்த்தே, "கதிர்காம தேவளே" என்று தற்போது அழைக்கப்படுகிறது!


கதிர்காமத்தை ஒட்டி ஏழுமலைகள்! ஆனால் முருகன் மலை மீது இல்லை!
முல்லைத் தெய்வமாக, காடும் காடு சார்ந்த இடத்தில் வசிக்கின்றான்! :)

குன்று இருக்கும் "இடம் எல்லாம்" குமரன் இருக்கும் இடம் என்று ஒரு நயத்துக்குச் சொன்னாலும்...இதோ...இந்தக் குறிஞ்சித் தெய்வம், கதிர்காமத்து முல்லைக் காட்டில்!
அருகில் மாணிக்க கங்கை ஆறு பாய்கிறது! இயற்கை அழகு கொஞ்சும் இனிய தொட்டிலில் தான், நம் அழகன் முருகனும் இளைப்பாறுகிறான்!

இந்த மூன்று மதங்களின் மக்கள் மட்டும் அல்லாமல், வேட்டா (வேட) என்ற பழங்குடி இனத்தவருக்கும் இதுவே கோயில்! இவர்களே இலங்கையின் ஆதி குடிகள்!
வள்ளிமலை வேடர்கள்-வள்ளியின் கதை போலவே தான் இவர்களின் கதையும்! இவர்களின் முருகனின் பெயர் = "கந்தே யாகா"= மலைகளின் ஆவி! தங்கள் குலப் பெண்ணான வள்ளியின் புகுந்த வீடே இவர்களின் கதிர்காமம்!

மற்ற இந்து ஆலயங்களில் இருப்பது போல், கதிர்காமத்தில் முருகனுக்குக் கருவறைச் சிலை கிடையாது! வேல் வழிபாடும் கிடையாது!
பின்னால் ஒரு எந்திரமும், முன்னால் ஒரு துணித் திரையும் தான் கருவறை!
அந்தத் திரையில் உள்ள வள்ளி-முருகன்-தேவயானையே மூலவர்!


கருவறையில் உள்ள அறுகோண எந்திரம், கதிர்காமத் தேவரின் அரு-உருவமாகக் கருதப்படுகிறது! அதைப் பெளத்தர்கள், இஸ்லாமியர்கள், தமிழர்கள் மூவருமே வழிபடுகிறார்கள்!

அவரவர் விழாக்களில் அது புறப்பாடும் கண்டருள்கிறது! பெளத்தர்களும் தங்கள் கிரி விஹாரத்தில் இதை எழுந்தருளப் பண்ணிப் பூசிக்கிறார்கள்!

முருகன் திரையில் இருக்க, திரைக்குப் பின்னுள்ள யந்திரத்துக்கு, ஒரு இஸ்லாமியர் பூசை செய்வதைக் கற்பனை செய்து பாருங்கள்! ஆகா!
புத்த பிக்குகள் முருகனின் திரைச்சீலைக்கு முன்னால் அமர்ந்து பூசிப்பதையும் மனக் கண்ணால் பாருங்கள்! ஆகா!

* "கதிர்காமத் தேவன்" யார்? தமிழ் முருகனா? பெளத்த தேவனா? இஸ்லாமிய இஸ்கந்தரா? = யாருக்கு வேணும் அதெல்லாம்?
* ஒரு இஸ்லாமியர் என்னவாய் நினைத்துக் கொண்டு, அந்தத் திரையின் முன்னால் நிற்பார்? = யாருக்கு வேணும் அதெல்லாம்?

அவன், என்றுமே "அவன்" தான்!
அவன் முன், யார் என்ன நினைத்துக் கொண்டு நின்றாலும், அவர்கள் அடியவர்களே! - வாழ்க சீர் அடியாரெல்லாம்!


இதோ...ரமணி அம்மாளின் பாடலைக் கேட்டுக் கொண்டே, கதிர்காமத்து பதிவைப் படியுங்கள்! கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே!!

madhavipanthal.podbean.com

ஆடு மயிலே கூத்தாடு மயிலே!
கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே!

அருகினில் நின்று அருள் புரியும் குகன் - கந்தன்
அருமையாய் அந்தரங்கத்து இருக்கும் குகன்
கருவிழி வள்ளிமானுக்கு உகந்த குகன் - கந்தன்
திருவடித் தாங்கி நின்றே ஆடு மயிலே!

(ஆடு மயிலே)

துள்ளித் துள்ளி விளையாடும் பால முருகன் - கந்தன்
அள்ளி அள்ளி அருள் தரும் சீல முருகன்
வள்ளியின் கரம் பிடித்த வேலன் முருகன் - கந்தன்
திருவடித் தாங்கி நின்றே ஆடு மயிலே!
(ஆடு மயிலே)

மனமது கனிந்திடில் மருவும் குகன் - கந்தன்
கனவிலும் கண் சிமிட்டிக் காட்டும் குகன்
தனதென தான் பரிந்து பேசும் குகன் - கந்தன்
திருவடித் தாங்கி நின்றே ஆடு மயிலே!

(ஆடு மயிலே)

அருகினில் நின்று அருள் புரியும் குகன் - கந்தன்
ஆறுமுகம் கொண்ட சரவண முருகன்
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முருகன் - கந்தன்
திருவடித் தாங்கி நின்றே ஆடு மயிலே!!!

(ஆடு மயிலே)


மேலே சொன்ன தகவல் பலவும், படித்தும், கேட்டும், உணர்ந்தும் எழுதியதே! இது வரை நான் கதிர்காமம் சென்றதில்லை....
கால்களால் சென்றதில்லையே தவிர, மனத்தால் பல முறை சென்றுள்ளேன்! எங்கள் வள்ளியைச் சொல்லும் காடும் கழனியும் அல்லவா!

தன்னை ஏற்றுக் கொள்வானா என்று கூடத் தெரியாது, அவனுக்காகவே தன் வாழ்வை அமைத்துக் கொண்டவள்!
பார்க்கவே பார்க்காத...பார்த்தாலும் ஏற்றுக் கொள்வானா என்று கூடத் தெரியாத ஒருவனுக்கு...ஒருத்தி, இப்படிக் காதலாய் நின்று விட்டாளே!

என் பால் நோக்காயே ஆகிலும், உன் பற்று அல்லால் பற்றில்லேன்!
உன் அந்தமில் சீர்க்கு அல்லால், வேறு அகம் குழைய மாட்டேனே!!

இது...ஒரு கால்...ஒருதலைக் காதல் ஆகி இருந்தால்???
ஐயோ!
எப்படியும் வள்ளி அவனிலே வாழ்ந்திருப்பாள்!
ஆனால் முருகன் தான் தன்னிலே தாழ்ந்திருப்பான்!


கதிர்காமம் பாடல் பெற்ற தலம்! அருணகிரியார் பதினான்கு திருப்புகழ்களாகப் பாடியுள்ளார்!

திருமகள் உலாவும் இருபுய முராரி
திருமருக நாமப் பெருமாள் காண்!
மருவும் அடியார்கள் மனதில் விளையாடு
மரகத மயூரப் பெருமாள் காண்!

மணி தரளம் வீசி, அணி அருவி சூழ,
மருவு கதிர்காமப் பெருமாள் காண்!
அரவு பிறை வாரி, விரவு சடை வேணி
அமலர் குரு நாதப் பெருமாள் காண்!

காண், காண் என்று வரிக்கு வரி காணச் சொல்கிறாரே! ஐயோ! கதிர்காமக் கந்தனை நான் காணும் நாள் எந்த நாளோ???
கதிர்காமம் அழைத்துச் செல்வதாக, முன்பு கா.பி அண்ணாச்சியும் மற்றும் ஸ்வாதியும் சொல்லி இருந்தார்கள்!

எவரும் ஏற்காத என்னைக் கதிர்காமத்து என் முருகனே ஏற்கட்டும்!
வனமுறை வேடன் அருளிய பூஜை - மகிழ் கதிர்காமம் உடையோனே!
இருநிலம் மீதில் எளியனும் வாழ - எனது முன் ஓடி, வரவேணும்!

கதிர்காமத்துறை கதிர்காமத்துரையே, என் முருகா...
எனது முன் ஓடி வரவேணும்!
பேதையை ஏற்க வரவேணும்!

Wednesday, July 07, 2010

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு: தமிழ்க்கடவுள் முருகன்!

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு!
தமிழ்க் கடவுள் முருகன் என்பவனைக் காணவில்லை!
வயது = ஆறில் இருந்து அறுபது வரை!
உயரம் = 5 அடி 11 அங்குலம்!
நிறம் = சிவப்பு (சேயோன்)

சுருள் முடி, சூரியக் கண்கள்
சுறுசுறு மூக்கு, சுவை இதழ்கள்
ஆறிரு திண் புயத்து அழகிய மார்பு
இஞ்சி இடுப்பு, இக-பர வளைவு
அதற்கும் கீழே....
இல்லை...அதற்கும் மேலே...

இதயம்!
- இது மட்டும் அவனுக்கு இருக்கவே இருக்காது!



மூவிரு முகங்கள் போற்றி, முகம் பொழி கருணை போற்றி என்று ஒப்புக்குப் பாடுவார்கள்! ஏன்?
இதயத்தில் தானே கருணை பொழியும்?
இவனுக்குத் தான் இதயமே இல்லையே! அதான் "முகம்" பொழி கருணை போற்றி என்று பாடல்!

பார்த்தவுடன் சொல்லவல்ல குணாதிசயங்கள்:

* மெத்த திமிர் பிடித்தவன் - பிடிவாதம் ஜாஸ்தி
* கொஞ்சம் வீரன் - கையில் வேல் இருக்கும்! - ஆனால் அதை "விட" எல்லாம் தெரியாது! சும்மாத் "தொட" மட்டுமே தெரியும்!
- தொளைபட்டு உருவத் "தொடு"வேலவனே, "தொடு"வேலவனே-ன்னு தான் இவனைச் சொல்லுவாங்க!

* சுமாரான அழகன் - மீசையில்லாத முகத்தை வச்சிக்கிட்டு ஊரை ஏமாற்றுபவன்
* அலங்காரப் பிரியன் - ஷோக்குப் பேர்வழி! நல்லா டிரெஸ் பண்ணுவான்! உடம்பில் சந்தனம் போல ஒரு மெல்லிய வாசனை வீசும்
* சரியான அலைஞ்சான்....பார்வை கண்டபடி மேயும்...மனம் முந்தியதோ, விழி முந்தியதோ, கரம் முந்தியதோ எனவே...

* நெற்றியில் மெல்லீசா மண்ணு போல திருநீறு இருக்கும்! அதை இவனே அப்பப்போ அழிச்சி விட்டுக்குவான்!
* பைக் ஓட்டக் கூடத் தெரியாது! வெறும் மொபெட் தான்! அதான், தானே ஓடவல்ல திறமையுள்ள மயிலை ஏமாத்தி, தன் பிடிக்குள்ளாற வச்சிருக்கான்!

* இவனுக்கு வெற்றி இல்லை! வேலுக்குத் தான் வெற்றி! - வெற்றிவேல் என்று வேலைத் தான் கூப்பிடுவாங்க! இவனை அல்ல!
இவன் சும்மா "தொடுவதோடு" சரி! மத்ததெல்லாம் வேலே தன் திறமையால் பார்த்துக்கும்!



இந்த மாங்கா தான் என் காதலன்! இந்த poRkki தான் என் pokkisham!
எல்லாம் என் விதி! - இவன் வந்து வாய்த்து விட்டான்!
கருவாய், உயிராய், கதியாய், "விதியாய்" - வாய்த்து விட்டான்!

இவனைத் தான் பல நாளாக் காணவில்லை!
ஆறு முகங்களைப் பார்த்து ஆறு மாசம் ஆகுது!
என்னமோ ஒரு மாதிரியாகவே இருக்கு!

இவனைக் கண்டு பிடித்துத் தருவோர்க்கு, எந்தை, எம்பெருமான்.......அதான் இவன் மாமன்....
தக்க சன்மானம் கொடுப்பதாகச் சொல்லி இருக்காரு! - வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!
யாராச்சும்....இந்தக் காணாமப் போனவனை....கண்டு பிடிச்சித் தருமாறு உங்களை இறைஞ்சுகிறேன்! டேய்...எங்க இருந்தாலும் வந்துருடா.....வந்துருவ தானே?

ஆறுமோ ஆவல்? ஆறுமுகனை நேரில்...காணாது....


இன்று முருகனருளில் இந்தப் பிரபலமான பாடல்! கேட்டுக்கிட்டே படிங்க!
The Best of MLV - எம்.எல்.வசந்தகுமாரி - Must Listen!

குன்னக்குடி வயலினில்

சுதா ரகுநாதன் குரலில், கீழே:


ஆறுமோ ஆவல்?
ஆறுமுகனை நேரில்...காணாது
(ஆறுமோ ஆவல்?)

ஏறு மயிலேறி, குன்றுதோறும் நின்று ஆடியவன்
பெரும் புகழைத் தெரிந்தும், அவன் பேரழகைப்...பருகாமல்

(ஆறுமோ ஆவல்?)

ஞான குருபரன் தீனத்தருள் குகன்
வானவரும் தொழும் ஆனந்த வைபோகன்
காணக் கிடைக்குமோ? கூறுதற்கு இல்லாமல்
அற்புத தரிசனம், கற்பனை செய்தால் மட்டும்....
(ஆறுமோ ஆவல்?)

வரிகள்: கண்ணன் ஐயங்கார்
ராகம்: மாண்டு
தாளம்: ஆதி

* கண்ணன் ஐயங்கார் சிறந்த வைணவ அறிஞர்! இராமானுச தொண்டு குழுமத்தைச் சேர்ந்தவர்! அவர் பாடல்களில் என்றும் நிலைத்தது இந்த முருகன் பாட்டே!
* மாண்டு என்பது துள்ளலான கம்பீர ராகம்! மாண்ட் என்று இந்துஸ்தானி இசையிலும் குறிப்பிடுவார்கள்! மாசிலா நிலவே நம்..., ஜாதி மல்லிப் பூச்சரமே போன்ற பாடல்கள் எல்லாம் இந்த மெட்டில் தான்!


ஆறு முகத்தால், ஆறு மோகத்தால் - ஆறுமோ என் ஆவல்?

வாழ்வே கற்பனையாகிப் போனதா?...
கற்பனையே வாழ்வாகிப் போனதா?...
ஆறுமோ என் ஆவல்?
செந்தூர் முருகா சேர்த்துக் கொள்!

Friday, July 02, 2010

எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு...


எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு!

எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு!
அத்தனை பாடலுக்கும் பெரும் பக்திச் சுவையிருக்கு!
சித்தம் இனித்திட வேலனை நினைத்திடுவோம்!
பக்திக்கருள் தரும் பாலமுருகனைப் பாடிப் பணிந்திடுவோம்!!

பிள்ளைத்தமிழ் பாடக் குமரன் உள்ளம் களித்தாடும்! - அந்தப்
புள்ளி மயிலோடு வடிவேல் துள்ளி விளையாடும்!

வள்ளி தெய்வானை சூழ்ந்திருக்கத் திருக்காட்சி அளித்திடுவான்! - கொடை
வள்ளலைப் போலக் கருணை எல்லாம் அள்ளி வழங்கிடுவான்!

எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு!
அத்தனை பாடலுக்கும் பெரும் பக்திச் சுவையிருக்கு!
சித்தம் இனித்திட வேலனை நினைத்திடுவோம்!
பக்திக்கருள் தரும் பாலமுருகனைப் பாடிப் பணிந்திடுவோம்!

ஆற்றுப்படைவீடு, திருமுறுகாற்றுப்படைவீடு! - சுவை
ஊட்டும் தமிழோடு முருகனைப் போற்றிப் புகழ்பாடு!

சந்தநடைத்தமிழ் திருப்புகழ்தனில் கந்தனவன் வருவான்!
சிந்தை குளிர்ந்திட சந்தன முருகன் நல்லருளைத் தருவான்!

எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு!
அத்தனை பாடலுக்கும் பெரும் பக்திச் சுவையிருக்கு!
சித்தம் இனித்திட வேலனை நினைத்திடுவோம்!
பக்திக்கருள் தரும் பாலமுருகனைப் பாடிப் பணிந்திடுவோம்!

எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு!!


பாடலைக் கேட்க...

எத்தனை அருமையான பாடல்! எத்தனை அருமையான பாவம்! சீர்காழி கோவிந்தராஜன் ஐயா பாடிய இந்தப் பாடல் முருகனருள் பதிவைப் பார்த்துவிட்டுப் பாடியது போல் இருக்கிறது! :-) இந்தப் பாடலின் ஒலி வடிவத்தையும் வரி வடிவத்தையும் இங்கே இடுவதற்குத் தந்த பிரகாசம் ஐயாவிற்கு நன்றி!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP