Tuesday, June 22, 2010

எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும் எண்ணத்தில் ஆடவில்லையே - ஏன்?

இந்தச் செவ்வாயில், அன்பர்களின் செவ்-வாய் தோறும் மணக்கும் ஒரு அழகான முருகன் பாடல், TMS பாடியது!
தித்திக்கும் தேன் பாகும், திகட்டாத தெள்ளமுதும், தீஞ்சுவை ஆகவில்லையே, முருகய்யா! தீஞ்சுவை ஆகவில்லையே! - ஏனாம்?

சர்க்கரை/வெல்லப் பாகு திகட்டும்! ஆனால் தேனில் எடுக்கும் பாகு திகட்டாது! - அதான் திகட்டாத தெள்ளமுது!
ஆனாலும் அது கூடத் தீஞ்சுவை ஆகவில்லையாம்! ஏன்-ன்னு பின்னூட்டத்தில் சொல்லுங்க பார்ப்போம்!

அதுக்கு முன்னாடி பாட்டை முதலில் பார்த்து விடுவோம்! முதலில் முருகன்! அப்பறம் ஆராய்ச்சி! ஓக்கேவா? :)
இதோ...கேட்டுக் கொண்டே படிங்க!
குரல்: டி.எம்.எஸ்
வரிகள்: ?
தொகுப்பு: முருகன் பக்திப் பாமாலை


தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீஞ்சுவை ஆகவில்லையே - முருகய்யா - தீஞ்சுவை ஆகவில்லையே!

எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல
இன்பம் ஏதும் இல்லையே - குமரய்யா - இன்பம் ஏதும் இல்லையே!

அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும்
அங்கம் மணக்கவில்லையே - முருகய்யா - அங்கம் மணக்கவில்லையே!


சித்தம் மணக்கும் செல்வக் குமரன் பெயரினைப் போல
சீர் மணம் வேறு இல்லையே - குமரய்யா - சீர் மணம் வேறு இல்லையே!

முத்தும் இரத்தினமும் முத்திறைப் பசும்பொன்னும்
முதற் பொருள் ஆகவில்லையே - முருகய்யா - முதற் பொருள் ஆகவில்லையே!


சத்திய வேல் என்று சாற்றும் மொழியினைப் போல
மெய்ப் பொருள் வேறு இல்லையே - குமரய்யா - மெய்ப் பொருள் வேறு இல்லையே!


எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும்
எண்ணத்தில் ஆடவில்லையே - முருகய்யா - எண்ணத்தில் ஆடவில்லையே!


மண்ணுக்குள் மகிமை பெற்ற மாமலை முருகன் போல்
மற்றொரு தெய்வமில்லையே - குமரய்யா - மற்றொரு தெய்வமில்லையே!

(தித்திக்கும் தேன் பாகும்)


இப்போ ஒவ்வொன்னா உன்னிச்சிப் பாருங்க...முருகனுக்காக, உன்னித்து எழுந்தன...உணர்வலைகள்!

* தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும் தீஞ்சுவை ஆகவில்லையே = தீஞ்சுவை-ன்னா என்ன?
தேன்பாகு, தெள்ளமுது எல்லாம் சுவையாத் தான் இருக்கு! ஆனால் "தீஞ்சுவை"யா?

* அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும் அங்கம் மணக்கவில்லையே = என்ன அங்கம்? எப்படி மணக்கும்?

* முத்தும் இரத்தினமும் முத்திறைப் பசும்பொன்னும் முதற் பொருள் ஆகவில்லையே = முதற் பொருள் எது? நீங்காத செல்வம் தான் முதற் பொருள்! அது எது?

* எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும் எண்ணத்தில் ஆடவில்லையே = எண்ணற்ற தெய்வங்களா? ஒன்றே குலம் ஒருவனே தேவன்-ன்னு அல்லவா கேள்வி? :)
ஏன் முருகனைத் தவிர வேறு எந்த தெய்வ வடிவமும் எண்ணத்தில் ஆடலை-ன்னு பாடணும்? :) சொல்லுங்க பார்ப்போம், சொல்லுங்க!

Friday, June 18, 2010

முருகனை நினை மனமே!

உணர்வில் பெருகும் அன்புடன் அனுபவங்களையும் தொகுத்துத் தரும் இனிமையான பாடல் இது. இன்று காலையில் தான் முதன்முதலில் கேட்டேன். இது வரை பல முறை கேட்டுவிட்டேன். பாடியவர் இளையராஜா என்று குரலை வைத்துத் தெரிகிறது. இசையும் அவருடையதாகத் தான் இருக்கும். இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. அதுவும் அவரேயாக இருக்கலாம். வரிகளில் தெறிக்கும் அனுபவ உண்மைகளைப் பார்த்தால் அப்படித் தான் தோன்றுகிறது.
முருகனை நினை மனமே! - நலங்கள்
பெருகிடும் தினம் தினமே!
உருகிடும் மறு கணமே! - நெருங்கி
வருவது அவன் குணமே! (முருகனை)

ஒவ்வொரு நொடியிலும் அருகினில் இருப்பவன்!
ஒவ்வொரு செயலிலும் பெருமையைக் கொடுப்பவன்!
உடலுக்கு உயிரெனில் உயிருக்கு ஒளி அவன்!
உணர்ந்தவர் தொழுதிடும் உயர்ந்தவர் பரவிடும் முருகனை...

அழகனின் அழகினில் இருவிழி குளிர்ந்திடும்!
அவன் விழி அசைவினில் கணைகளும் மலர்ந்திடும்!
அவன் அருள் மழையினில் உணர்வுகள் சிலிர்த்திடும்!
அறிவுடன் பொருள் புகழ் அனைத்திலும் சிறந்திட முருகனை ...

Tuesday, June 08, 2010

குரு-சிஷ்யை! MLV-சுதா ரகுநாதன்! முருகன் ஒரு துறவியா?

குருவும் சிஷ்யையும் சேர்ந்து பாடிப் பார்த்து இருக்கீங்களா? ரெண்டு பேருமே பிரபலமானவர்கள்! யாரு அவிங்க?

MLV எனப்படும் எம்.எல்.வசந்தகுமாரி அவர்களைப் பற்றிப் பலரும் அறிவார்கள்! தமிழ் சினிமாவில் கலக்கிய ஸ்ரீவித்யா அவர்களின் தாயார்! எம்.ஜி.ஆரின் மன்னாதி மன்னன் படத்தில் வரும் "ஆடாத மனமும் உண்டோ?" என்ற ஹிட் பாடலைப் பாடியவர்! மேடையிலும் சினிமாவிலும் பல தமிழ்ப் பாடல்களைப் பாடிப் பிரபலப்படுத்தியவர்!

கர்நாடக இசை உலகில் கோலோச்சிய பெண் மும்மூர்த்திகளில் எம்.எல்.வி-யும் ஒருவர்!
* எம்.எஸ் அம்மா = ஆத்மார்த்தமான பக்திப் பொழிவு என்றால்
* எம்.எல்.வி = மேதைமை தவழும் இசை கம்பீரம்!

இவரின் சீடர் தான், இன்று பிரபலமான பாடிகியாக வலம் வரும் திருமதி சுதா ரகுநாதன்!
கர்நாடக இசையில் கொடி கட்டிப் பறக்கும் பெண் கலைஞர்களில் இவரும் ஒருவர்! பார்த்திபனின் இவன், உளியின் ஓசை, வாரணமாயிரம், ஆதவன் போன்ற பல திரைப்படங்களிலும் பாடி உள்ளார்!

இந்தக் குருவும் சிஷ்யையும் சேர்ந்து பாடிப் பார்த்து இருக்கீங்களா? முருகனருளில் இன்னிக்கி பார்க்கலாமா? இதோ குரு-சிஷ்யை முருகன் பாட்டு!Video Link opens in a new Page = இங்கே!

முருகனின் மறுபெயர் அழகு - அந்த
முறுவலில் மயங்குது உலகு!
(முருகனின்)

குளுமைக்கு அவனொரு நிலவு
குமரா எனச் சொல்லிப் பழகு!
(முருகனின்)

வேதங்கள் கூறிடும் ஒளியே - உயர்
வேலோடு விளையாடும் எழிலே!
துறவியும் விரும்பிய துறவே - நீ
துறவியாய் நின்றிட்ட திருவே!
(முருகனின்)

வரிகள்: குரு சூரஜானந்தா
ராகம்: பெஹாக்
தாளம்: கண்ட சாபு


என் முருகனின் முறுவலில் மயங்குது மனம்! அவன் குளுமையாமே! பாவி, என்னைச் சிரித்து சிரித்து மயக்கிச் சூடாக்கியவன்...குளுமைக்கே நிலவாய் இருக்கிறானாமே! போகட்டும்! அது என்ன துறவியும் விரும்பிய துறவு? சொல்லுங்க பார்ப்போம்!

அது கூடப் பரவாயில்லை! "துறவியாய் நின்றிட்ட திருவே!"-ன்னு பாடுறாங்களே? அவன் ரெண்டு பொண்டாட்டிக்காரன்! அவன் எப்படிய்யா துறவியாய் நின்றிட்டவன்? சொல்லுங்க பார்ப்போம்! :)

Tuesday, June 01, 2010

சிவாஜி vs சரிதா - கீழ் வானம் சிவக்கும்! முருகன் பாட்டு!

கீழ்வானம் சிவக்கும்-ன்னு ஒரு படம் வந்துச்சி! சிவாஜி-சாவித்திரி மாதிரி, சிவாஜி-சரிதா காம்பினேஷன்-ன்னு வச்சிக்குங்களேன்!
ரெண்டு பேரும் மாமனார்-மருமகளா போட்டி போட்டுக்கிட்டு நடிச்சி இருப்பாங்க!


நாங்க எல்லாரும் சென்னைக்கு வந்த போது...புரசைவாக்கம், Roxy தியேட்டரில் (இப்போ இந்த தியேட்டரே இல்ல, அடுக்கு மாடி சரவணா ஸ்டோர்ஸ் ஆகி விட்டது வேறு விஷயம்)...
ஒரே மாசத்தில் நாலைஞ்சு பழைய படங்களை எல்லாம் ஓட்டினாங்க! சிவாஜி ஹிட் படங்கள்! அதுல இதுவும் ஒன்னு! எப்படி ஞாபகம் இருக்கு-ன்னா...

1. சென்னையில், நாங்க எல்லாரும் சேர்ந்து பார்த்த முதல் படம் இது!
2. தியேட்டருக்கு கீழேயே, White Field Bakery! சின்னப் பையன் எனக்கு, அந்த கேக் வாசனையும், பட்டர் பிஸ்கட் வாசனையும்...ஆஆ...
3. இந்தப் படத்தில் வரும் - "முருகா முருகா முருகா" பாட்டு!

இந்தப் பாட்டில், ஒரு வீட்டுத் தோட்டத்தின் நடுவே முருகன் சிலை இருக்கும்!
அங்கே நின்னுக்கிட்டு, சிவாஜியும் சரிதாவும், மாறி மாறிப் பாடுவாங்க!
என்னமோ தெரியலை, அந்த முருகன் சிலை எனக்கு ரொம்ப பிடிச்சிப் போச்சி!

"அப்பா, மெட்ராஸ்-ல்ல வாடகை வீடு நல்லாவே இல்லை! ரொம்ப குறுகல்! நாம சொந்தமா வீடு கட்டிக்கிட்டுப் போனா, சின்ன தோட்டமாச்சும் வைக்கணும்!
நடுல, இதே போல ஒரு முருகன் சிலை வைக்கணும்!"-ன்னு சொல்லிய ஞாபகம்...எனக்கே இருக்கு! :)படத்துக்கு வருவோம்!
சிவாஜி, பெரிய மருத்துவர்! அவரு பையன் சரத்பாபு - மருமகள் சரிதா! ரொம்ப பாசமா இருப்பாங்க மாமனாரும் மருமகளும்!
அப்போ....பார்வையற்ற ஜெய்சங்கர், கண் அறுவை சிகிச்சை செஞ்சிக்க, சிவாஜி கிட்ட வருவாரு! தன் தங்கையின் வாழ்வைக் கெடுத்தவனைக் கொலை பண்ணும் வெறியில் இருப்பாரு! அவர் கையில் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்த சிவாஜிக்கு செம ஷாக்!

சரத்பாபுவும்-அந்தப் பெண்ணும் ஃபோட்டோவில் இருப்பாய்ங்க!

தன் பையன் சரத்பாபுவைப் போட்டுத் தள்ளத் தான் ஜெய்சங்கர் வந்திருக்காரு-ன்னு தெரிஞ்ச பிறகும், சிகிச்சை செய்வாரு சிவாஜி!
ஆனா Doctor vs Father உணர்ச்சிப் போராட்டத்தில் அப்பப்போ தவிப்பாரு! இதனால், சரிதா, சிவாஜி மேல சந்தேகப்பட்டு, வெறுப்பும் கோபமும் தானாவே வளர்த்துக்குவாங்க! ஆனா தன் கணவன் தான் அதில் உள்ளான்-ன்னு தெரியாது!

தன் புருஷன் தான் இதுல Involved-ன்னே தெரியாம, சிவாஜியைத் தாறுமாறாகச் சரிதா பேச...கதை விறுவிறு-ன்னு போகும்!

சிவாஜியைப் பொய்யர், புரட்டர், மருத்துவத் துரோகி-ன்னு எல்லாம் பேசிய அந்தப் பாசமிகு மருமகள்...சான்சே இல்லை!
சிவாஜிக்கு ஈடு குடுத்து நடிக்கவல்ல ஒரே பின்னாளைய கதாநாயகி = சரிதா! முதல் மரியாதை ராதா கூட அப்புறம் தான்!பாட்டைக் கேளுங்க!

முருகன் முன்னாடி...
* குற்றம் சாட்டி ஒதுக்கும் ஒரு உள்ளமும்,
* குற்றவாளி "ஆக்கப்பட்டு" அழும் இன்னொரு உள்ளமும்,
மாறி மாறி மோதும் காட்சி!

குரல்: TMS, பி.சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
இசை: MSV
படம்: கீழ்வானம் சிவக்கும்

சரிதா:
கண் கண்ட தெய்வமே, கை வந்த செல்வமே,
முருகா முருகா முருகா!
என்னென்ன சொல்கின்றார், என்னென்ன செய்கின்றார்?
சில உள்ளதுக்குள் கள்ளம் வைத்தது - உன் வேலையா?
வேலய்யா இது உன் வேலையா?

சிவாஜி:
கண் கண்ட தெய்வமே, கை வந்த செல்வமே
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா

சரிதா:
சுந்தர வேல்முருகா, துண்டுகள் இரண்டாக
சூரனைக் கிழித்தாய் அன்றோ! - ஒரு
தோகையைக் காலடியில், சேவலை கை அணைவில்
காவலில் வைத்தாய் அன்றோ!

சிவாஜி:
மந்திரத் தெய்வங்களின் மாயக் கதைகளுக்கு
வரைமுறை கிடைாது அன்றோ!
அவை தந்திரம் செய்வதுண்டு, சாகசம் கொள்வதுண்டு
சகலமும் நன்றே அன்றோ!

என்னென்ன சொல்கின்றார், என்னென்ன செய்கின்றார்?
சில உள்ளதுக்குள் உள்ளம் வைத்தது - உன் வேலையா?
வேலய்யா இது உன் வேலையா?
(கண் கண்ட தெய்வமே)

சரிதா:
காட்சியைக் கொன்றவர் முன், சாட்சியைக் கொன்றுவிட்டு
ஆட்சியும் செய்தாய் ஐயா - உன்தன்
மாட்சிமை என்னவென்று காட்சிக்கும் தோன்றவில்லை
சூழ்ச்சியைச் சொல்வாய் ஐயா!

சிவாஜி:
பிள்ளையைக் கொன்றுவிட்டு, பெரிய விருந்து வைத்தான்
கள்ளமில் பரஞ் சோதியே - விருந்து
எல்லாம் முடிந்த பின்னே, பிள்ளையினை அழைத்தான்
இறைவன் அருள்ஜோதியே!

சரிதா: காரிருள் சூழ்ந்ததும் கதிரும் மறைந்தது - நீதி எல்லாம் துடிக்கும்!
சிவாஜி: மேற்கினில் சூரியன் மறைந்தாலும் - கீழ் வானம் சிவக்கும்!
சரிதா: கந்தன் இருப்பது உண்மை என்றால் இது உண்மைகள் வெளியாகும்!
சிவாஜி:காலம் வரும் வரை காத்திருந்தால் அது நல்லவர் வழியாகும்!!

இருவரும்:கண் கண்ட தெய்வமே! கை வந்த செல்வமே! முருகா முருகா முருகா!முருகா முருகா முருகா!சில உள்ளதுக்குள் கள்ளம் வைத்தது - உன் வேலையா?
வேலய்யா இது உன் வேலையா?-ன்னு அது கேட்க...
சில உள்ளதுக்குள் உள்ளம் வைத்தது - உன் வேலையா?
வேலய்யா இது உன் வேலையா?-ன்னு இது கேட்க...

பாவம், என் முருகன் என்ன தான் பண்ணுவான்? ரெண்டு பேருமே முருகனைத் தான் துணைக்கு கூப்பிடறாங்க! யாரை-ன்னு அவன் பாக்குறது?

அவன் அர்ச்சனையைப் பார்ப்பதில்லை! = லட்சார்ச்சனை லட்சம் பேர் செய்யறாங்க....ஒரு டிக்கெட் ரூ100.00 தான்!
ஆட்களைப் பார்ப்பதில்லை! அவனோட பேரை, நிறைய வாட்டி ஒருவர் சொல்வதாலேயே அவர்களைப் பார்ப்பதும் இல்லை! = சரவணபவன் அண்ணாச்சி சொல்லாத முருகன் பேரா?

பின்பு எதைப் பார்க்கிறான் முருகன்?

சில உள்ளதுக்குள் கள்ளம் வைத்தது உன் வேலையா? வேலய்யா இது உன் வேலையா? என்று ஒரு உள்ளம் குற்றம் சாட்டும் போது...
தன்னையும், தன்-மானத்தையும், தன் மகிழ்வையும்...
அன்புக்காகவே இழக்கத் துணிந்த அந்த அன்பு...டைக்கும் தாழ் இல்லாத அன்பு

= அந்த உருக அன்பு ஒன்றினையே, முருகன் பார்க்கிறான்! போதும் நீ பட்டது; வா என்னிடம் என்று வாரி அணைத்துக் கொள்கிறான்!

பெருகாதல் உற்ற தமியேனை
நித்தல் பிரியாதே! பட்சம் மறவாதே!
கை வந்த செல்வமே! என் - முருகா முருகா முருகா!

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP