Tuesday, April 20, 2010

சிவாஜியின் Walking ஸ்டைல் - யார் இந்த வீரவாகு?

கந்தன் கருணையில், பலரும் பார்த்து இருப்பீங்க! நடிகர் திலகம் சிவாஜி நடந்து காட்டும் ஸ்டைலை! :)
அந்தப் படத்தில் ஹீரோ என்ன தான் முருகனாக (சிவகுமார்) இருந்தாலும், Focus என்னமோ வீரவாகு மேலத் தான் விழும்! All Bcoz of Sivaji! :)

வீரவாகு அப்படித் தான் நடந்தாரோ, தெரியாது! ஆனால் சிவாஜி நடந்து காட்டுவது, ஒரு அணிவகுப்பு-ன்னா என்ன என்பதைக் கண் முன்னே கொண்டாந்து நிறுத்தும்!

அட, இப்படியெல்லாம் கூட யாராச்சும் நடப்பாங்களா என்ன? இதெல்லாம் ஓவர் ஆக்டிங் என்று சிலர் பேசலாம்! ஆனா, யாராச்சும் சிகெரெட்டைத் தூக்கிப் போட்டுப் பிடிப்பாங்களா-போன்ற கேள்விகள் மட்டும் வரவே வராது!
யாரு அட்ஜஸ்ட் பண்ணிக்கறாங்களோ அவிங்கள தான் உலகம் அட்ஜஸ்ட் பண்ணிக்கச் சொல்லும்! கேள்வியெல்லாம் இது போன்ற ஆட்களை நோக்கித் தான் :)


சிவாஜி ஓவர் ஆக்டிங்கோ இல்லையோ, இவர்கள் ஓவர் ரியாக்டிங் என்பது வேணும்னா உண்மையா இருக்கலாம்!
அட, உணர்ச்சிகளை உள்ளபடியே காட்டாம, நடிப்புக்குள்ள கூட நடிக்கணும் என்பது தான் இவர்கள் எதிர்பார்ப்போ?



முன்பே சஷ்டிப் பதிவில் பார்த்தது போல்.....சூரசங்காரம் நடந்த இடம் திருச்செந்தூர் அல்ல! தமிழ் ஈழத்தில் உள்ள ஏமகூடம் என்ற இடமே அது!
செந்தூர் என்பது படைவீடு (Battle Camp) மட்டுமே! சூரனுக்கு எதிரான தேவர் படைகளைத் திரட்டி, போர் துவங்கும் முன்னால், அணி வகுப்பைப் பார்வையிடுகிறான் சேனாபதி!

எந்தச் சேனாபதி? கந்தச் சேனாபதியா?

தேவ சேனாபதி என்னவோ = முருகன் தான்!
ஆனால் முருகச் சேனைக்கும் ஒரு சேனாபதி உண்டு = அவன் தான் வீரவாகு!

யார் இந்த வீரவாகு?

* முருகன் = அன்னையவள் கரம் படாது, நேராகத் தந்தையவர் கண்ணில் தோன்றியவன்!
* வீரவாகு = தந்தையவர் கரம் படாது, நேராக அன்னையவள் காற்சிலம்பில் தோன்றியவன்!

தந்தையின் கண்களில் இருந்து, ஆறு முருகன்கள் தோன்றிய அதே வேளையில்...
அன்னையின் காற் சிலம்பு வெடித்து, அதில் நவ சக்திகள் என்னும் ஒன்பது சக்திகள் தோன்ற, அதில் முதல்வன் இந்த வீரவாகு!
விநாயகருக்குப் பதிலாக, முருகன்-வீரவாகு தான் அண்ணன்-தம்பி என்று உறவாய்க் கூடச் சிலர் கொள்வதுண்டு!

வீரபாகு, முருகனைப் போலவே அழகன்! ஆற்றல் மிக்கவன்!
இவனைப் பற்றிய சங்கத் தமிழ்ப் பாடல்கள் உள்ளனவா என்று ஆய்ந்து பார்க்க வேண்டும்!
தமிழ்க் கடவுளான குறிஞ்சிக் கடவுளைப் பற்றி ஆர்வம் உடையோர்கள், வீரவாகுவைப் பற்றிச் சற்றே முயன்று பார்த்துச் சொல்லலாமே! முருகாற்றுப்படை நக்கீரரிடமிருந்தே கூடத் துவங்கிப் பார்க்கலாம்!

முருகனைப் பற்றிக் கிடைக்கும் குறிப்புகள் போல், வீரவாகு பற்றி தனிக் குறிப்புகள் அவ்வளவாக கிடைப்பதில்லை!
ஆலயங்களில் கூட இடும்பனுக்கு உண்டு! ஆனால், வீரவாகு-க்கு தனியான சன்னிதிகள் அவ்வளவாக இல்லை! திருச்செந்தூரில் முன் மண்டபத்தில் வீரவாகு வாயிற் காப்போனாக இருப்பான்-ன்னு நினைக்கிறேன்!
சுவாமிமலையில் இலக்குமியாகிய திருமகள் சன்னிதிக்கு அடுத்து, வீரவாகு சன்னிதி உண்டு!



முருகன், பால முருகனாய் வளர்ந்து வரும் போது, வீரவாகுவும் அங்ஙனமே வளர்ந்து வந்தான்!
சொல்லப் போனால், முருகனின் வீர தீரச் செயல்களுக்கு முன்னமேயே, வீரவாகுவின் வீரம் தான் முதலில் பேசப்படுகிறது!

நாரதரின் வேள்வியில் உதித்த ஆடு, ஊருக்கே உலை வைக்க, அதை வீரவாகுச் சிறுவனே முதலில் அடக்கி, முருகனிடம் சேர்ப்பிக்கிறான்! இந்த ஆடே முருகனின் முதல் வாகனமாக ஆகின்றது!

முருகன், திருமாலின் புதல்வியருக்குத் தோன்றி, அவர்களை மணங் கொள்ள இசைந்து, வாக்கு கொடுக்கும் போதும், வீரவாகு உடன் இருக்கின்றான்!
முருகன், ஈசனின் வேலாயுதத்தை, அன்னையின் கையால் பெற்றுக் கொள்ளும் போதும், வீரவாகு உடன் இருக்கின்றான்!

போருக்குச் செல்லும் வழியில், தாருகன் பெரும் மலையாக நின்று தடுக்கிறான்! வீரவாகு தான் முதலில் எதிர்க்கச் சென்று, அசுரர்களின் மாயத்தில் மாட்டிக் கொள்ள...
அதன் பின்னரே முருகன் கிரெளஞ்ச மலைக்கு வந்து, மலைமாவு சிந்த வடிவேல் எறிகிறான்! மலைச்சிறையில் இருந்து வீரவாகுவை மீட்டு எடுக்கின்றான்!

பின்னர் திருச்செந்தூரில் படைவீடு அமைத்து, சிவபூசை செய்யப்படுகிறது!
தேவதச்சன் அமைத்த மயிலாசனத்தில் அமர்ந்து, சூரனின் முழுக் கதையினையும், தேவ குரு சொல்லக் கேட்கின்றான் முருகன்!
அதன் பின்னரே, வீரவாகுவைத் தன் தூதுவனாக அசுரனிடம் அனுப்பி வைக்க ஏற்பாடு ஆகின்றது!

இங்கு தான் வீரவாகுவின் பல சாகசச் செயல்கள் பேசப்படுகின்றன! கிட்டத்தட்ட இராமாயணக் கதைக் களன் போலவே இருக்கும்!


வீரமகேந்திரபுரத்தில் நுழைந்த வீரவாகு, முதலில் சந்திப்பது, சிறையில் இருக்கும் ஜெயந்தனைத் தான்!
ஏன்-னு தெரியலை! ஜெயந்தன் இந்திர குமாரன்! அவனுக்கு ஆறுதல் கூறி, முருகன் உன்னை விடுவிக்க வருவான் என்று நம்பிக்கை ஊட்டுகின்றான்! பின்னரே அசுர சபைக்குச் செல்கின்றான்!

சபையேறி வந்தவனைக் கண்ணியம் கூட தராமல் நடத்துகிறது படித்த சூர உள்ளம்!

ஆனால் முருகனருள் முன்னிற்காதோ!
இதய ஆசனத்தில் முருகன் இருக்க, மதியாதார் வாசலிலும் ஆசனம் தோன்றுகிறது!
தூது பேசுகிறான் வீரவாகு! காதற்ற ஊசியில் நூல் நுழையுமோ? கடும் நெஞ்சில் நூலோர் சொல் நுழையுமோ?

தூது தோல்வியில் முடிகிறது! வீரவாகுவைச் சிறைப்பிடிக்க ஆணையிடுகிறான் சூரன்! வீரவாகுவோ தன்னை அடக்க வந்த சூரனின் மகன் வச்சிரவாகுவைக் கொல்கிறான்! சதமுகன் முதலான பிற படைவீரர்களையும் கொன்று...
அத்தாணி மண்டபத்தை அழித்து, தூதின் தோல்வியில் தளர்ந்து, செந்தூர் முருகனிடமே மீண்டு வருகின்றான்!

போர், ஈழத்தில், ஏமகூடத்தில் துவங்குகிறது! பல அசுர மாயங்கள் அரங்கேறுகின்றன!
சூரனின் மகன் பானுகோபன், மாயாயுதம் எறிந்து, வீரவாகுவை நன்னீர்க் கடலில் மூழ்கடிக்கிறான்!
அப்போது தான், முருகன் வீரவாகு மேல் வைத்த பாசம் தெரிய வருகிறது!


வீரவாகு வீழ்ந்தான் என்னும் போது தான், கோபமே கொள்ளாத நம்ம Cool Guy முருகனும், ஊரறிய முதலில் கோபப்படுகிறான்! வீரவாகுக்கு என்னவாயிற்றோ என்று அப்படி ஒரு பதைபதைப்பு!
என் முருகா - ஆர்வலர் புன்கண்ணீர் பூசல் தரும் - என்பது உன்னளவில் மட்டும் என்னிக்குமே உண்மை தான் முருகா!

மாயாயுதம் தகர ஞானாயுதம் எறிந்து, தன் அன்பனை மீட்டெடுக்கிறான் முருகன்!
பத்தாம் நாள் போரில், மாயத்தால் எங்கும் இருட்டாக்கி, அதே நன்னீர்க் கடலுக்குக் கீழே சென்று, மாமரமாய்....மரத்துப் போய் நிற்கிறான் சூரன்!
பிடிவாதம்! அதுவும் தலைகீழாக! வேர்கள் மேலே! கிளைகள் கீழே!

அப்போது தான்...........வேலால் வெஞ்சூர் பிளந்து, மயில் வாகனமாகவும், சேவற் கொடியாகவும் ஆக்கிக் கொள்கிறான், ஐயன் முருகன்!
முருகனின் ஆணையால், மொத்த வீரமகேந்திரபுரத்தையும், கடலில் மூழ்கடிக்கிறான் வருணன்!

செந்தூர் திரும்பி, மீண்டும் சிவபூசை நடக்கிறது!
* கையில் செபமாலையுடன் இன்றும் செந்தூர் முருகனைக் கருவறையில் காணலாம்!
* அந்த முருகனுக்குக் காவலாக, வீரவாகுவை இன்றும் அர்த்த மண்டபத்தில் காணலாம்!


இது தான் வீரவாகு-வின் சுருக்கமான கதை! :)
என் முருகனுக்கு வேண்டியவர்கள் எல்லாம், எனக்கும் வேண்டியவர்கள் அல்லவா! அவர்கள் நலத்தை இங்கு முருகனருளில் சொல்ல வைத்த முருகனருளை எனக்கு ரொம்பவே பிடிக்கும்! :)

இதோ, நடிகர் திலகம் சிவாஜியின் அந்த வீரவாகு பாடல்!!


வெற்றிவேல்! வீரவேல்!
சுற்றிவந்த பகைவர் தம்மைத்
தோள் நடுங்க வைத்த எங்கள்
சக்திவேல்! ஞான சக்திவேல்!

ஆதிசக்தி அன்னை தந்த ஞானவேல்!
அசுரர் தம்மை அஞ்சவைத்த வீரவேல்!
மோதி அந்தக் குன்றழித்த சக்திவேல்!
முவர் தேவர் வாழ்த்தவந்த வெற்றிவேல்!
(வெற்றிவேல்...வீரவேல்)

தெய்வம்உண்டு தெய்வம்உண்டு என்றுசொல்லும் வெற்றிவேல்!
தெய்வபக்தி உள்ளவர்க்குக் கைகொடுக்கும் வீரவேல்!
எய்தபின்பு மீண்டும் கந்தன் கையில்வந்து நின்றவேல்!
எங்கும்வெற்றி எதிலும்வெற்றி காணும்எங்கள் சக்திவேல்!
(வெற்றிவேல்...வீரவேல்)

வானத்தோடு பூமிதொட்டு வளர்ந்துநிற்கும் மாயவேல்!
இமயம்தொட்டுக் குமரிமட்டும் காத்துநிற்கும் சக்திவேல்!
ஆதிவேல்! அழகுவேல்! அன்புகாட்டும் தூயவேல்!
அகிலமுற்றும் புகழ்பரப்ப வேலெடுத்த முருகவேல்!
(வெற்றிவேல்...வீரவேல்)

குரல்: TMS
வரிகள்: ???
இசை: கே.வி. மகாதேவன்
ராகம்: நாதநாமக்ரியை
படம்: கந்தன் கருணை

Monday, April 12, 2010

பி.சுசீலாவின் முதல் முருகன் பாட்டு! - வைகறைப் பொழுதில் விழித்தேன்!

வணக்கம் மக்களே! இன்னிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை! வெளிய வெயில் காய்ஞ்சாலும் உள்ள படபட-ன்னு குளிருது! :)
அதனால், இந்தச் செவ்வாய்க்கு....ரொம்ப எழுதாமல்...

ஒரு அபூர்வமான பாட்டு முருகனருளில்! கிட்டத்தட்ட சுசீலாம்மாவின் முதல் முருகன் பாட்டு-ன்னே சொல்லீறலாம்-ன்னு நினைக்கிறேன்! நீங்களே கேட்டுப் பாருங்க! சுசீலாம்மாவின் ஆரம்ப காலக் குரல்!

பாட்டில் நாதசுரமும் இருக்கு! இருந்தாலும் சுசீலாவின் குரல் நாதசுரத்துக்குப் பொருந்தி வருது - ஜானகியை விட! :) இது பற்றிய கேள்வி ஜானகி-சுசீலா பதிவில் இருக்கு! :)




வைகறைப் பொழுதில் விழித்தேன் - அந்த
வடிவேல் முருகனை நினைத்தேன்
நெஞ்சத்தை மலராய்த் தொடுத்தேன் - அவன்
நினைவில் காலத்தைக் கழித்தேன்!
(வைகறைப் பொழுதில்)

திருப்புகழ்த் தேரில் இழுத்தேன் - அதை
தினமும் மனத்தால் சுவைத்தேன் - என்
தேவைகள் யாவையும் உரைத்தேன் - அவன்
திருவருள் தந்தான் களித்தேன்!
(வைகறைப் பொழுதில்)

உள்ளத்தில் கோயிலை அமைத்தேன் - பக்தி
உணர்வில் ராகத்தை வளர்த்தேன்
ஓம் எனும் மந்தரம் படித்தேன் - அவன்
கருணையைப் பொழிந்தேன் மகிழ்ந்தேன்!
(வைகறைப் பொழுதில்)

சூடிடும் குறிஞ்சி மலராவான் - அவன்
ஏந்திடும் தீபத்தின் ஒளியாவான் - மெய்
அருள் வரும் ஞானக் களியாவான் - என்றும்
அவனே வாழ்வுக்கே உயிராவான்!
(வைகறைப் பொழுதில்)

ஓம் சரவண பவாய நம ஓம்!

வரிகள்: ?
இசை: ?
குரல்: பி.சுசீலா


ஓம் சரவண பவாய நம ஓம் என்று அழகாக இழுத்து முடிக்கிறார்!

சின்ன வயசில், ஊரில் மார்கழி மாசம் போது, இந்தப் பாட்டைத் தான் வைகறைப் பொழுதில் மொதல்ல போடுவாங்க! திருப்பாவை ஒலிக்க விடுவதற்கு முன்பு, இந்தப் பாட்டு தான் ஒலிக்கும்! ஏன்-ன்னா சவுண்ட் சர்வீஸ் அண்ணா (பாஸ்கர்-ன்னு நினைக்கிறேன்) ஒரு தீவிர முருக பக்தர்! :)

நானும் "வைகறைப் பொழுதில் விழித்தேன்"-ன்னு கேட்டுக்கிட்டே தான் விழிச்சி இருக்கேன்! அப்பறம் தான் திருப்பாவை! யாரோ ராகமாப் பாடுவாங்க ஸ்பீக்கர்-ல! ஒரே லைனை பத்து வாட்டி இழுப்பாங்க! அது அவ்ளோ நல்லா இருக்காது சுசீலாம்மா பாடுவதைப் போல்! :)
இருந்தாலும் திருப்பாவை ஆச்சே! எப்படி வுட்டுக் கொடுக்கறது? மனசு வராதே! விதியே-ன்னு முப்பது பாட்டும் ஸ்பீக்கர்-ல்ல கேட்டுக்கிட்டே, கோயிலடி-கிணத்தடி-மஞ்சக் காப்பு அரைக்கிறது போல வேலையெல்லாம் முடிச்சி இருப்பேன்!

ஐயமாரு, அவிங்க வீட்ல தனி வாளியில் பொங்கியாந்த பொங்கலை, எனக்குத் தனியாக் கூப்புட்டுக் கொடுப்பாரு! பெருமாள் சாப்பிடாம அவரு சாப்பிட மாட்டாரு! ஆனா என்னைய மட்டும் சாப்பிடச் சொல்வாரு! சின்ன புள்ள ஒத்தை ஆளா மஞ்ச அரைச்சிருக்கேன்-ல்ல? :)
நானும் பெருமாள் சாப்புட்டாரா-ன்னா சென்ட்டி எல்லாம் அப்போ பார்த்ததில்லை! நல்ல புள்ளையா, பசியிலும் குளிரிலும் சுடச்சுட எறங்கும்! :)

Btw, திருப்பாவை முப்பதும் சுசீலாம்மாவும் தன் ஸ்டைலில் பாடி இருக்காங்க! யாராச்சும் சுட்டியோ, தகவலோ கொடுங்களேன்! புண்ணியமாப் போவும்!

சரி...என் முருகன் பாட்டுக்கு வருவோம்! நான் பேச்செடுத்தாலே பொறந்த வீட்டு பெருமாள் பேச்சு வந்துருது-ல்ல? :)
இந்தப் பாட்டில் தேன் தேன்-ன்னு வருது, கவனிச்சீயளா?
இப்படி சுசீலாம்மாவின் முதல் முருகன் பாட்டே தேனாகி...
பின்பு காலமெல்லாம் தித்திக்கும் பாடல்களைத் தந்தது!

நெஞ்சத்தை மலராய்த் தொடுத்தேன்!
அவன் நினைவில் காலத்தைக் கழித்தேன்!
அவன் நினைவில் காலத்தைக் கழித்தேதேதேதேன் - என்பதில் தான் எத்தனை "தேன்"!!! செல்வமே முருகாஆஆஆ!

Friday, April 09, 2010

மாயக் குறமாதின் மனம் மேவும் வாலக் குமரேசா!


திருப்புகழ் பாடல்கள் முதன்முறையாகப் படிக்கும் போது கடினமாக இருப்பது போல் தோன்றும். அவையே இசைவாணர்கள் பாடக் கேட்டால் எளிமையாக இருப்பது போல் தோன்றும். அவ்வகையிலான ஒரு பாடல் இது.

பதிவு எழுத வந்த புதிதில் (2005 நான்காவது காலாண்டில்) கால்கரி சிவா அண்ணா இப்பாடலின் எம்பி3 அனுப்பினார். அதனை இன்று தான் ஜிமெயிலில் கண்டெடுத்து இங்கே இட முடிந்தது.

கலை மேவு ஞானப் பிரகாசக்
கடலாடி ஆசைக் கடலேறிப்
பல மாய வாதிற் பிறழாதே
பதி ஞான வாழ்வைத் தருவாயே
மலை மேவு மாயக் குறமாதின்
மனமேவு வாலக் குமரேசா
சிலை வேட சேவற் கொடியோனே
திருவாணி கூடற் பெருமாளே


இப்பாடலை கந்தர்வக் குரலோன் ஜேசுதாஸின் குரலில் இங்கே கேட்கலாம்.

பாடலின் பொருளை எஸ்.கே. ஐயாவோ இரவிசங்கரோ தந்தால் மிக நன்றாக இருக்கும். இரவியின் எதிரே ஒரு மின்மினி ஆடுவதைப் போல் இப்பாடலுக்குப் பொருள் தர விழைகிறேன். அவர்கள் வந்து இன்னும் அழகான பொருள் தருவார்கள்!

மலை மேவு மாயக் குறமாதின் - வள்ளிமலையில் வாழும் வியப்பூட்டும் அழகை உடைய குறப்பெண்ணான வள்ளியம்மையின்

மனம் மேவும் வாலக் குமரேசா - மனத்தில் நிலையாக வீற்றிருக்கும் என்றும் இளையவனான குமரேசா!

சிலை வேட - வில்லையேந்திய வேடனே!

சேவற் கொடியோனே - சேவலைக் கொடியாகக் கொண்டவனே!

திருவாணி கூடற் பெருமாளே - திருவும் வாணியும் கூடும் திருவாணிக்கூடலாம் பவானியில் எழுந்தருளும் பெருமாளே!

கலை மேவு ஞானப் பிரகாசக் கடலாடி - எல்லா கலைகளையும் தனக்குள் வைத்திருக்கும் ஞான ஒளியாகிய கடல் முருகப்பெருமான்; அக்கடலில் திளைத்து ஆடி,

ஆசைக் கடலேறிப் - ஆசைகள் என்னும் பெருங்கடலை அவன் கருணையால் நீந்திக் கடந்து, மற்றை நம் காமங்கள் அவன் அருளாலே தீர்ந்து,

பல மாய வாதிற் பிறழாதே - பல வகையான மனத்தை மயக்கும் வீண் வாதங்களில் அடியேன் வழி தவறிச் செல்லாமல்,

பதி ஞான வாழ்வைத் தருவாயே - பசு, பதி, பாசம் என்னும் மூவகைப் பொருள்களைப் பற்றிய ஞானமும் அதனை ஒட்டிய அன்பு வாழ்க்கையும் தருவாயே!

Monday, April 05, 2010

கமல்-ஸ்ரீதேவி முருகன் பாட்டு! - வடிவேலன் மனசு வச்சான்!

சில பாடல்களில்... கமல்-ஸ்ரீதேவி தனியாத் தெரிவாங்க! ஆனா அந்த Romance-இல் என் முருகன் தெரிவானா? :)
இந்தப் பாட்டைக் கேளுங்க, பதில் உங்களுக்கே தெரிஞ்சிடும்!

இதில் கமலும்-ஸ்ரீதேவியும் ஸ்டைலாகச் சொடுக்கிச் சொடுக்கி ஆடுவது...
எனக்கென்னவோ...
தினைப்புனத்தில் முருகனும்-வள்ளியும் ஆடுவது போலவே இருக்கும்! அப்படித் தான் கற்பனை பண்ணிக்குவேன்! :)



அப்போ சென்னைக்கு வந்த புதுசு; தண்ணிப் பஞ்சம் வேற;
கீழே இருந்து மாடிக்கு, தண்ணிக் குடம் சுமப்பதற்குள், என் bend-u கழண்டுரும்:)
அப்பல்லாம் வானொலிப் பாட்டு தான்,  புள்ளைக்கு உற்சாகம்!

வீட்டில் ஒரு Sharp Tape Recorder;
பள்ளி ஆசிரியர் வாங்கிக் குடுத்தது; அப்பா, காசெட்டில் (TDK 45 , 60  and 90), "உள்ளம் உருகுதைய்யா" தான் முதலில் பதிஞ்சி வைப்பாரு;
எல்லாக் காசெட்டிலும் மொத பாட்டு இதே வச்சா, கோவம் வருமா? வராதா? நீங்களே சொல்லுங்க!:)

சின்னப் புள்ள எனக்கோ, "வடிவேலன் மனசு வைச்சான்" கேட்டதில் இருந்து, அதை Record பண்ண ஆசை! (TMS க்காக மட்டுமில்லை; but for Sridevi also:)))

ஒரு நாள் வானொலியில் ஒலிபரப்பும் போது,
நான் Record+Play Button, சேர்த்து அழுத்தி விட,
அது "உள்ளம் உருகுதையா" மேல் பதிஞ்சி போயிரிச்சி;

அவ்ளோ தான்; அப்பா என்னை விளாசித் தள்ளிட்டாரு;
பாட்டி தான் ஒன்னும் புரியாம..
"வடிவேலன் மனசு வச்சான்" கூட முருகன் பாட்டு தானேடா? எதுக்கு கொழந்தைய அடிக்கற? -ன்னு... அப்பவே, என் "முருக பக்தியை" மெச்சினாங்க:))


தாயில்லாமல் நானில்லை!
எம்.ஜி.ஆர் பாட்டு இல்லீங்க! இது கமலஹாசன் நடித்த படம்!
ஹீரோவான பிறகு, ரஜினி வில்லனாக நடித்த படமும் கூட!

மருத்துவமனையில் இருந்த போது, அருகிலேயே உள்ள வாகினி ஸ்டூடியோவுக்கு, ரஜினி தானே விரும்பிச் சென்று, ஒரு சீனில் சான்ஸ் கேட்டு நடித்த படம்! தேவர் ஃபிலிம்ஸ் படத்தின் மதிப்பு அப்படி!

இளவரசியான ஸ்ரீதேவியை, இசைக் குழுவின் கமல் காதலிக்க... ஸ்ரீதேவியின் அப்பா-சமஸ்தான மகாராஜா, ரவுடி ரஜினியை ஏவி விடுவார்!
ஆனால் ஸ்ரீதேவி தன் உள்ளம் பொங்க அழுது....காதலை வெளிப்படுத்த, ரஜினி மனம் மாறி, வாழ்த்தி விட்டுப் போய் விடுவார்!

இதில் வரும் கமல்-ரஜினி சண்டைக் காட்சிகளில்,
நீண்ட நாள் கழிச்சி, மறுபடியும் இரு தரப்பு ரசிகர்கள்.....நிஜமாலுமே சண்டை போட்டுக் கொண்டார்களாம்! அப்போவெல்லாம் பதிவுலகம் என்பது இல்லை போல! :)

சரி நாம பாட்டுக்கு வருவோம்!
* எப்போதும் உடனிருக்கும் மயிலார் (அவரு பேரு: வடிவேலன்),
* காதலர்கள் களிப்பிலும் உடன் இருக்க...
* ஸ்ரீதேவி பக்குவமா மயிலைக் கொஞ்சி...
* "ஹேய்...யாராச்சும் வெளிய வராங்களா-ன்னு பாத்துக்கோ"-ன்னு சொல்ல...
* மயிலார் தத்தித் தத்தி அழகா நடக்க...
* இதுல மயில் அகவுற சத்தமும் கேட்கும்.....யாராச்சும் இதுவரை கேட்காதவங்க கேட்கலாம்! :)

இதோ...முருகனும் முருகியும், அவனும் அவளுமாய்....
பாட்டின் நடுவில் வரும் மெட்டு...
தத்தாத தானா...... தத்தாத தானா.......
தத்தாத தாந் - தனா தானா!

முன்பெல்லாம் தனியறையில் நானும் இப்படியெல்லாம் பாடிக்கிட்டே ஆடுவேன்! அதில் ஒரு தனிப்பட்ட சுகம்! :))

இதோ பாடல், கேட்டுக் கொண்டே படிங்க!


படம்: தாயில்லாமல் நானில்லை
இசை: சங்கர் கணேஷ்
குரல்: TMS & பி.சுசீலா


வடிவேலன்
மனசு வச்சான், மலர வச்சான், மணக்குது ரோஜாச் செடி!
மாந்தோப்பு ஜோடிக்கிளி! மங்காத தங்கக்கொடி!!

(தத்தாத தானா..
தத்தாத தானா...
தத்தாத தாந் தனா தானா!)

அச்சாரமா ஒண்ணு கொடு, ஆராயிரம் அள்ளிக்கொடு!
இந்த மச்சான் வந்து மாலை இடுவான்!
வருவான் தருவான்! வருவான் தருவான்!

செவ்வத்திப்பூ கன்னத்துக்குள், தேனூறுது என்னத்துக்கு?
சின்னச் சிட்டு உன்னைக் கட்டிப் புடிப்பா
கொடுப்பா...முடிப்பா! கொடுப்பா...முடிப்பா!
(வடிவேலன்)

அன்னக்கொடி சின்ன இடை! அம்மாடியோ என்ன நடை!
அடி கண்ணால் ஏண்டி கட்டி இழுத்த?
சிரிச்சேன்...ரசிச்சேன்! சிரிச்சேன்...ரசிச்சேன்!

இந்நேரமாக் கண்ணுறங்கேன்! என்னென்னமோ கொண்டுவந்தேன்!
அந்தக் கந்தன் வள்ளி இந்தக் கதை தான்!
அதுதான்...இதுதான்! அதுதான்...இதுதான்! :)
(வடிவேலன்)


இது முருகன் பாட்டு தானா? முருகனருளில் போடலாமா?
அதுவும், செவ்வாய்க் கிழமை அதுவுமா?
என் முருகனின் "செவ்"வாய் இனிமைக்குக் கிழமை ஏது? எந்நாளும்.....அவன் அதரம் மதுரம், வதனம் மதுரம்! So,

அந்தக் கந்தன் வள்ளி இந்தக் கதை தான்!
அதுதான்...இதுதான்!
My Darling Boy Muruga! - அதுதான்...இதுதான்! :)

பாட்டு நல்லா இருந்திச்சா? :)
எண்பதுகளில், TMS-சுசீலாம்மா ஜோடி சேர்ந்து பாடுவது....அதுவும் இளைய தலைமுறை கமல்-ஸ்ரீதேவிக்கு என்பது அபூர்வம்! அதில் இது ஒன்னு!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP