Thursday, October 30, 2008

கந்த சஷ்டி 2: சிந்தனை செய் மனமே! திருத்தணிகை!

அம்பிகாபதி லவ் ஸ்டோரி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்! இன்னிக்கி அந்தப் படத்தில் இருந்து அருமையான ஒரு முருகன் பாட்டு, மருகனருள் வலைப்பூவில்! - சிந்தனை செய் மனமே!
இது அம்பிகாபதியின் 100-வது பாட்டு; ஆனால் மற்றவர்க்கு இது 99-வது பாட்டு!

ஒருத்தர் சும்மா ஏதாச்சும் நம்மளைக் கேட்டுக்கிட்டே இருந்தா, சும்மா "னை-னை" ங்காதே என்று சொல்லுவோம்ல? இந்தப் பாட்டில் பாருங்கள், "னை-னை" என்றே வருகின்றது! ஆனால் மிகவும் அழகாக!

செந்தமிழ் தரும் ஞான தேசிக-னை,
செந்தில் கந்த-னை,
வானவர் காவல-னை,
குக-னை, சிந்த-னை......
செய் மனமே!

படம்: அம்பிகாபதி
குரல்: டி எம் எஸ்
இசை: ஜி ரா (அட நம்ம ஜிரா இல்லீங்க, இவர் ஜி.ராமநாதன்)
வரிகள்: பாபனாசம் சிவன் ? / KD சந்தானம் ?
ராகம்: கல்யாணி


பாடலை இங்கு கேளுங்கள்!

சிந்தனை செய் மனமே, தினமே
சிந்தனை செய் மனமே!

சிந்தனை செய் மனமே, செய்தால்
தீவினை அகன்றிடுமே!
சிவகாமி மகனை, சண்முகனை
சிந்தனை செய் மனமே!


செந்தமிழ் தரும் ஞான தேசிகனை,
செந்தில் கந்தனை, வானவர் காவலனை, குகனை
சிந்தனை செய் மனமே!


சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை!
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை!
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை?
ஆதலினால் இன்றே...

அருமறை பரவிய
சரவண பவ குகனை
சிந்தனை செய் மனமே!



அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை? என்று பாடுகிறான் அம்பிகாபதி். ஆனால் அவன் காதலுக்கும் உயிருக்கும் உலை வைக்க, அதோ அந்தகன் வரப் போகிறான் என்று அறியாது பாடுகிறான்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவ்வளவு அருமையாக நடித்திருப்பார் இந்தப் பாட்டுக்கு! ஆரம்பத்தில் மெல்லிதாகத் தொடங்கும் பாடல், இறுதியில் உச்சத்துக்குச் செல்லும் போது, அவரும் நரம்பு புடைக்கப் பாடுவது போல், அப்படியே வாயசைப்பார்.

காதலியான அமராவதி, பாடல் முடிந்ததும் எழுந்து ஓடோடி வர,
பக்திப் பாடல் ஒரே நிமிடத்தில் காதலாகி விடும்! :)

சரவண பவ குகனை, சிந்தனை செய் மனமே என்பது மாறி, சற்றே சரிந்த குழலே அசைய-ன்னு பப்ளிக்கா அமராவதி வர்ணனை ஆகிவிடும்.
பொறுக்குமா ஆசார சீலர், கவிப் பேரேறு, ஒட்டக் கூத்தருக்கு? ஏற்கனவே கம்பன் என்றாலே அவருக்கு ஆகவே ஆகாது! போதாதா?
கம்பன்-ஒட்டக் கூத்தர் பிணக்கு பற்றி தமிழ் இலக்கியங்கள் என்ன சொல்கின்றன? உம்.... படிக்க வேண்டும்!
இருவர் சமயமும் வேறு! கொள்கைகளும் வேறு! ஆனால் தமிழால் ஒன்றுபட முடியாதா? சமயம் வேறானால் நட்பும் வேறாமோ? கொள்கை மாறானால் நட்பும் மாறாமோ?

இத்தனைக்கும் ஒட்டக் கூத்தர் சாதாரணமானவர் அல்ல! பெரும் புலவர்!
வெண்பாவுக்குப் புகழேந்தி, விருத்தம் என்னும் ஒண் பாவிற்கு கம்பன் என்றால், உலாவுக்கு ஒரு கூத்தன்! தேவியின் அருள் பெற்றவர். சைவச் செம்மல். குலோத்துங்கனின் அந்தரங்க மதிப்புக்கு ஆளானவர்! ஆனால் பொது மக்கள் மதிப்பில் குறைந்தது ஏன் என்று தான் தெரியவில்லை!

கம்பனைத் தாண்டி, அவர் மகன் மீதும், தமிழ்ப் பண்பாட்டின் ஒரு அங்கமான காதல் மீதும், வெறுப்பு கொள்ளும் அளவிற்கு என்ன அப்படியொரு பகையுணர்ச்சி?
ஹூம்...தமிழ் வளரவாவது, தமிழன் தமிழனோடு ஒற்றுமை கொள்ளும் நாள் எந்நாளோ? தமிழ்க் கடவுளே! முருகா!

சரி, நாம் முருகனுக்கு வருவோம்! சிந்தனை செய் மனமே அருமையான கல்யாணி ராகத்தில் அமைந்துள்ளது! ஜனனீ ஜனனீ-யும் அதே ராகம் தான்! அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே-வும் கல்யாணி தான்!

பாட்டிலிருந்து சில கேள்விகள், வாசகர்களுக்கு!
1. முருகனை தேசிகன் என்று ஏன் அழைக்க வேண்டும்?
2. சந்ததம் மூவாசை என்றால் என்ன?
3. இராமாயணத்தில் குகன் இருக்கான். முருகனைக் குகன் என்பதன் பொருள் என்ன?



இன்றைய படைவீட்டுத் தகவல்கள் - திருத்தணிகை!

* மொதல்ல, திருத்தணிகை என்று தனியான ஒரு படைவீடே கிடையாது! குன்றுதோறாடல் என்பது தான் பொதுவான பெயர்.
இது "பல" குன்றுகளுக்குப் பொருந்தும். ஆனால் "எல்லாக்" குன்றுகளுக்கும் பொருந்தாது! :) பரங்கிமலை, சோளிங்கர் மலை, திருப்பதி மலை, சபரி மலை-ன்னு எல்லா மலைகளுக்கும் பொருந்தாது!

அந்தக் குன்று தோறு ஆடலில் ஒன்று தான் திருத்தணிகை!
திருத்தணிகை, திருச்செங்கோடு, வெள்ளிமலை, வள்ளிமலை, விராலிமலை என்று பல குன்று தோறும் ஆடல்! - எல்லாம் சேர்ந்து தான் ஐந்தாம் படைவீடு!
பதி எங்கிலும் இருந்து விளையாடி
"பல"குன்றிலும் அமர்ந்த பெருமாளே!


ஆனால் உபன்னியாசகர்களும், மற்ற புலவர் பெருமக்களும், சினம் தணிந்த கதையின் காரணமாகத், தணிகை மலையை மட்டும் வெகுவாகக் கொண்டாடி விட்டனர். நாளடைவில் அதையே புழங்கப் புழங்கத், திருத்தணிகை மட்டுமே ஐந்தாம் படை வீடு என்று மக்கள் மத்தியில் ஒரு தோற்றம் ஏற்பட்டு விட்டது!

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்ற சொலவடையும் அதே போலத் தான்! குறிஞ்சிக் கடவுள் நம் முருகப் பெருமான்! மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி அல்லவா? அதனால் அப்படிச் சிறப்பிக்க வந்தார்கள்! ஆனா நாம் தான் வாய்மையை விட்டுவிட்டு வார்த்தையை மட்டும் பிடித்துக் கொள்வோமே! எங்கேனும் ஒரு குன்று இருக்கா? அப்படின்னா அங்கே குமரன் கோயிலும் இருந்தே ஆகணும்-ன்னு நினைச்சிக்கிட்டோம்! :)

திருமலை-திருப்பதி, சோளிங்கபுரம், அகோபிலம் (சிங்கவேள் குன்றம்), கொல்லூர் மூகாம்பிகை, சிருங்கேரி, வானமாமலை என்று அத்தனை குன்றுகளையும் அப்படி எடுத்துக் கொண்டால் சரியாக வருமா? சென்னைப் பரங்கிமலை மேலும் முருகப் பெருமான் என்று கிளம்ப முடியாதல்லவா? :)

குன்று தோறாடல் என்றால், குமரன் ஆடிய பல குன்றுகள் என்று தான் கொள்ள வேண்டும்! கிளிமஞ்சாரோ உட்பட உலகில் உள்ள எல்லாக் குன்றுகளிலும் ஆடினான் என்று பொருள் கொள்ளலாகாது! :)
பல குன்று தோறு ஆடல்களில், சிறப்பான ஒரு மலை, திருத் தணிகை மலை!


* திருத்தணிகை = பழத்துக்காகக் கோபித்துக் கொண்ட முருகன், சினம் தணிந்த இடம் என்று மட்டுமே பலரும் நினைத்துக் கொண்டுள்ளோம்!
ஆனால் அதை விட முக்கியமாக, வள்ளி அம்மையை முருகன் மணந்த தலமும் திருத்தணிகையே!
ஆனா, இதை ஏன் பெரிதாக யாரும் எடுத்துச் சொல்ல மாட்டாங்கிறாங்க-ன்னு தான் தெரியலை! :(

அருகில் உள்ள வள்ளிமலையில் காதல் புரிந்த முருகப் பெருமான்,
இங்கு வந்து தான்,
நம்பிராசனும் வேடுவர் குலமும் சூழ்ந்து இருந்து வாழ்த்த,
வள்ளியை, ஊரறிய, உலகறிய, மணம் புரிந்து கொண்டான்!

களவு மணமாவது? கற்பு மணமாவது?
களவில் தான் கற்பில்லையா? கற்பில் தான் களவில்லையா?
எல்லாம் ஒரே மணம் தான்! திரு-மணம் தான்! வள்ளித் திரு-மணம் தான்!

வாரியார் சுவாமிகள் பின்னாளில் தன் பேருரைகளில் எல்லாம் இதைத் தொட்டுச் செல்வார். இனி வள்ளித் திருமணம் என்றாலே திருத்தணிகை தான் நம் நினைவுக்கு வர வேண்டும்!

வள்ளியம்மைக்குரிய விசேடச் சிறப்பை, அனைத்து முருகன் ஆலயங்களிலும், தெளிவாகத் தெரிசனப்படுத்த வேண்டும்!
சிவாலயங்களில் அம்பாளுக்குத் தரும் முன்னிறுத்தலைப் போலவே,
முருகாலயங்களில் வள்ளி-தேவானை அம்மைக்குத் தனியாக ஏற்றம் தர வேண்டும் என்பது அடியேன் நீண்ட நாள் அவா!


* அசுரர்களுடனான போரில், முருகனுக்கு ஏற்பட்ட கோபம், தணிந்த போன இடமும் இதுவே! தீமையைக் கண்டு பொங்கி எழுந்த பின், அந்தக் கோபம் மனதில் கனன்று கொண்டே இருக்கக் கூடாது அல்லவா! இங்கு தான் அது தணிந்து, தணிகை மலை ஆனது! சாந்திபுரி என்றும் சொல்லிப் பார்த்தனர்! ஆனால் தணிகையே தனித்து நின்றது! வென்றது! :)

இராமனும் முருகனைப் போலவே, அரக்கர்களின் கொடுமையை எண்ணி மனத்தளவில் கனன்று கொண்டு இருந்தான். இராமேஸ்வரத்தில் அவன் வழிபட்ட போது, சிவபெருமானின் சொற்படி, தணிகை மலை வந்து முருகனையும் வழிபட்டான். பின்னரே இராமனின் கனன்ற கோபம் அகன்றது என்று சொல்வது தணிகை ஸ்தல புராணம்!

* இராமலிங்க வள்ளலார், கண்ணாடியில் ஜோதி காட்டி வழிபட்ட போது, அவரைத் தணிகை மலைக்கு அழைத்து, உருவத்திலும் அருவம் காட்டி அருளினான் முருகப் பெருமான்! உருவாய் அருவாய், உளதாய் இலதாய் என்ற அநுபூதி வாக்கு சத்திய வாக்கு அல்லவா? அதனால் திருவருட்பாவில் தணிகை மலையானைப் போற்றிப் பாடுகிறார் வள்ளலார்!

* கர்நாடக இசை மும்மூர்த்திகளுள் ஒருவர் முத்துசாமி தீட்சிதர்! "குருகுஹ" என்றே தன்னுடைய பெயர் முத்திரையைத் தம் பாடல்களில் பதிப்பார். மிகுந்த முருக அன்பர்!
முதலில், இசையில் அவ்வளவாகத் தேர்ச்சி இல்லை அவருக்கு! தணிகை மலைப் படிகளில் அவர் தள்ளாடி வரும் போது, தணிகை வேலவன் வயசாளி உருவில் வந்து நின்றான்! தன் கோயில் பிரசாதத்தைத் தந்து, அவர் நாவினை இனிமை ஆக்கினான்!

அவர் முதல் கீர்த்தனையே திருத்தணி முருகப் பெருமான் மீது! - ஸ்ரீ நாதாதி குருகுஹோ, ஜயதி ஜயதி!
அருணகிரியைப் போலவே இவருக்கும் சந்தம், சலசலவென்று, சங்கீத ஸ்வரமாய்க் கொட்டும்! தியாகராஜர் கீர்த்தனைகளில் எளிமையும் உணர்ச்சியும் இருக்கும் என்றால், முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனைகளில் சொற்செட்டும், சந்தமும் மின்னும்!

சந்தம் பாடணும்-ன்னாலே, அது சந்தச் சொந்தக்காரன், கந்தன் தான் தரணும் போல!

* திருத்தணியில் தான் ஆங்கிலப் புத்தாண்டுப் படி உற்சவம் பிரபலமானது! எல்லாரும் ஆங்கில மோகம் கொண்டு அலைகிறார்களே என்று பார்த்த வள்ளிமலை சுவாமிகள், சரியாக ஆங்கிலப் புத்தாண்டு அன்று, தமிழ்க் கடவுளுக்குப் படி உற்சவம் நடத்தி, அதைத் தமிழ் விழாவாக ஆக்கி விட்டார்!

* திருத்தணியும், திருப்பதி மாதிரியே ஆந்திராவுக்குப் போயிருக்க வேண்டியது! மாநில எல்லைச் சீர்திருத்தம் (State Reorganization Act)-இன் படி சட்டம் கொண்டு வந்தது மத்திய அரசு!
சிலம்புச் செல்வர் ம.பொ.சி தான் முன்னின்று திருத்தணியை மீட்டார்! "திருத்தணியை மீட்டேன்! திருப்பதியை மீட்பேன்!" என்று சூளுரைத்தார்!
ஆனால் முடியவில்லை! ஒரு வேளை நல்லதற்காகக் கூட இருக்கலாம்! TTD என்று தனிப்பட்ட தன்னாட்சி நிறுவனம் அமையாது, கோயில் கொள்ளைகள் என்று பலவும் இங்கே மலிந்திருக்க வாய்ப்புண்டு!

* ஆசிரிய மாமணி, குடியரசுத் தலைவர், டாக்டர். எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்ததும் திருத்தணியே!

* திருத்தணித் திருப்புகழ்களில், பிரபலமானவை சில:
- இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்,
- எத்தனை கலாதி,
- சினத்தவர் முடிக்கும்,
- அதிரும் கழல் (குன்று தோறாடல்)

திருத்தணி முருகப் பெருமானும்-தேவியரும்! (மூலவர் வரைபடம், உற்சவர் புகைப்படம்)


புயற்பொழில் வயற்பதி
நயப்படு திருத்தணி
பொருப்பினில் விருப்புறு பெருமாளே!
- முருகா!


* பதிவர் தி.ரா.ச அவர்கள் திருத்தணி முருகன் மீது அன்பு கொண்டவர்!
இன்று (Oct-31,2008) அவர் மகளுக்குச் சென்னையில் திருமண விழா!
மணமக்களை, நீங்காத செல்வம் நிறைந்தேலோ என்று வாழ்த்தி,
திருத்தணிகை முருகப் பெருமானை வேண்டுவோம்!

Wednesday, October 29, 2008

கந்த சஷ்டி 1: வருவான்டி தருவான்டி மலையாண்டி! பழமுதிர்சோலை!

இந்த ஆண்டு கந்த சஷ்டியின் போது, முருகனருள் வலைப்பூவில் என்ன பார்க்கலாம்? வெறும் பாடல்கள் மட்டும் தானா? ஒவ்வொரு படைவீட்டிலும் மறைமுகமான சில ரகசியங்களைக் கூடவே பார்க்கலாமா? தீபாவளிப் பட்டாசு வெடித்த கையோடு, இப்படி எல்லாம் ஒரு ரகசியமா? தீபாவளிக் கொண்டாட்டம் எல்லாம் எப்படிப் போச்சு மக்கா?

ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி-அமாவாசை முடிந்து முதல் நாள் அன்று துவங்குவது கந்த சஷ்டி! மொத்தம் ஆறு நாட்கள்!
* ஆறு படை வீடுகளில் படையுடன் தங்குகிறான் முருகன்!
* பின்னர் ஆறு நாட்கள் கடும் போர்!
* இறுதி நாள் சூரசங்காரம்!
தீமையை அழித்து நல்லன காத்தல்! வெறும் இவ்வளவு தானா இந்த சஷ்டி?

ஆற்றுப்படை கேள்விப்பட்டு இருப்பீங்க! நக்கீரரின் திருமுருகாற்றுப்படையும் கேள்விப்பட்டு இருப்பீங்க! ஆறு=வழி! வழி காட்டி உதவுதலை ஆற்றுப்படை-ன்னு சொல்லுவது மரபு. வறுமையில் வாடும் புலவர்களுக்கு, ஏற்கனவே பரிசில் பெற்ற புலவர்கள், நல்ல வழி சொல்வது போல் இருக்கும் ஆற்றுப்படைப் பாடல்களின் அமைப்பு.

இந்த ஊர் மன்னன் நல்ல வள்ளல், அந்த ஊர் மன்னன் கலைகளின் ரசிகன் என்றெல்லாம் சொல்லி வழிகாட்டுதல் ஆற்றுப்படை.
இந்தப் பதிவர் ரொம்ப நல்லவரு! அவரு எவ்வளவு அடிச்சாலும் அழுவ மாட்டாரு, இவரு பின்னூட்ட வள்ளல்-ன்னு எல்லாம் நாம ஆற்றுப்படுத்தறோம் இல்லையா? சுட்டி கொடுத்து வலைச்சரம் எல்லாம் கட்டுறோம் இல்லையா? அது போல-ன்னு வச்சுக்குங்களேன்! :)

தான் மட்டுமே நல்லா இருக்கணும் என்று நினைக்காது, அடுத்தவருக்கும் செல்வம் பெறும் வழியைக் காட்டிக் கொடுத்து ஒருவருக்கொருவர் உதவினார்கள் தமிழ்ப் புலவர்கள்! பொருநர் ஆற்றுப்படை, சிற்பாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை எல்லாம் சங்க இலக்கிய ஆற்றுப்படை நூல்கள்.

பழமுதிர் சோலை நாவல் மரம்


சரி, முருகு-ஆற்றுப்படை எதற்கு?
நக்கீரர் தமிழ் இலக்கியப் புரட்சியாளர். ஒரு நல்ல ஆன்மீகப் பதிவர் :)
எல்லாரும் அரசன், வள்ளல் என்று தான் ஆற்றுப்படை நூற்களைச் செய்தார்கள். தான் மட்டும் வித்தியாசமாகச் செய்ய நினைத்தார்.

அகம்-புறம் என்பது தான் அப்போதைய தமிழ் இலக்கிய முறை! இறை பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே வந்து போகுமே தவிர, முழு நூலும் இறையருள் பாற்பட்டதாய் இருக்காது!
எல்லாரும் சினிமா, கலை, கதை, காதல், போர்-ன்னு எழுதும் போது, இவர் மட்டும் ஆன்மீகத்தை நுழைத்தால்? :)

என்னைப் பொறுத்தவரை முதல் ஆன்மீகப் பதிவர் என்பது எங்கள் ஆசான் நக்கீரரே! :)
முருகு ஆற்றுப் படை என்று தைரியமாகப் பதிந்து, புதிய வழி காட்டினார் பதிவுலகிற்கு!

எதுக்கு வழி காட்டணும்? = செல்வத்துக்கு வழி காட்டணும்!
செல்வம் இருக்கும் இடத்துக்கு மட்டும் வழிகாட்டினால் போதுமா?
அங்கே கஷ்டப்பட்டு, அலைந்து திரிந்து, போன பின்பு, செல்வம் தர முடியாது போ-என்று அந்த மன்னன் சொல்லி விட்டால்? இல்லை...ஒப்புக்கு ஏதோ ஒரு சிறு செல்வத்தை மட்டும் அவன் அளித்து விட்டால்?

தேவியருடன், பழமுதிர் சோலை முருகப் பெருமான்


செல்வத்துள் செல்வம் அருட் செல்வம்!
அருள் என்னும் அன்பு ஈன் குழவி, பொருள் என்னும்
செல்வச் செவிலியால் உண்டு
- என்பது குறள்.
* அருள்பவன் யார்? = யாரையும் அழிக்க நினைக்காதவன். கருணையால் ஆட்கொள்பவன்!
* அழிவில்லாத செல்வம் எது? = தெய்வத்-திரு-அருள்
* எந்தவொரு சூழ்நிலையிலும் தரமாட்டேன் என்று சொல்லாதவன் யார்? = வள்ளியின் வள்ளல்! முருகப் பெருமான்!

அவனிடம் நம்மை ஆற்றுப்படுத்துகிறார் நக்கீரர்! அவன் இருக்கும் ஒவ்வொரு படைவீடாகச் சொல்லி, நம்மைச் சென்று சேர்பிக்கிறார் நக்கீரர்!
அட, நம்மைச் சேர்ப்பிக்க இவர் யாருங்க நடுவுல? நல்ல கேள்வி!

ஆற்றுப்படையின் இலக்கணம் என்ன? ஏற்கனவே பரிசு பெற்றவன், இன்னொருவனுக்கு அந்த அரசனைக் காட்டி வழி சொல்லுவது! நக்கீரர் ஏற்கனவே பரிசு பெற்றவர்! அதான் அதை நமக்கும் சொல்லி நம்மையும் அவனிடம் ஆற்றுப்படுத்துகிறார்!
நக்கீரரும் முருகனும்


கார்க்கிமுகி என்னும் கொடும் பூதம் ஏற்கனவே 999 புலவர்களைப் பிடித்து அடைத்து வைத்தது; ஆயிரமாவது ஆளாக நக்கீரரையும் பிடித்துக் கொண்டது!
ஆலமரத்தின் கீழ் தியானத்தில் அமர்ந்த நக்கீரர் முன்னால், வித்தியாசமான இலை ஒன்று விழுகிறது! அதுவும் பாதி இலை நீரில், மீதி மண்ணில்!

நீரின் இலை மீனாகவும், மண்ணின் இலை பறவையாகவும் மாறி ஒன்றை ஒன்று இழுக்க, இது என்ன அதிசயம் என்ற ஆவலில், பார்க்கிறார் நக்கீரர்! தவம் கலையும் சமயமாகப் பார்த்துப் பிடித்துக் கொண்டது பூதம்!
உள்ளே இருக்கும் ஏனைய 999 பேர்களும், ஆயிரமாவது ஆளும் மாட்டிக் கொண்டாரே, இனி மொத்தமாக அழிந்தோம் என்று பயத்தில் நடு நடுங்க, அவர்களை ஆற்றுப்படுத்தி முருகனை நோக்கிப் பாடுகிறார் நக்கீரர்.

தன்னுயிர் காப்பதற்காக இல்லாது, இவர்களை ஆற்றுப்படுத்தவாவது உன்னை நிலைநாட்டிக் கொள் முருகா என்று இறைவனை வேண்ட, முருகனும் பூதத்தை அழித்து அனைவரையும் விடுவித்து அருள்கிறான்.

கந்த சஷ்டியின் போது, ஆறு நாட்களும், ஒவ்வொரு படைவீட்டின் சில ரகசியங்களைப் பார்ப்போமா? இன்று பழமுதிர்சோலை! அதுக்கு முன்னால் இன்றைய பாட்டு!


பழமுதிர் சோலை ஆலய ஓவியம்


வருவான்டி தருவான்டி மலையாண்டி...
ஒவ்வொரு வரியும், டி,டி என்றே முடியும்! டகு டகு டிகு டிகு என்று மணியோசை போலவே! எல்லாம் கண்ணதாசன் கைவண்ணம்!
பாடலை இங்கு கேளுங்கள்! கீழே காணுங்கள்! பாடலின் நடுவே (செட் போட்டு எடுக்கப்பட்ட) பழனியாண்டவர் அபிடேகக் காட்சியும் காணத் தவறாதீர்கள்!


* சூலமங்கலம் ராஜலட்சுமி, சூலமங்கலம் சகோதரிகளுள் ஒருவர். கந்த சஷ்டி கவசம் ஒலிப் பேழைகள் எத்தனையோ வந்த போதும், முதலில் வந்த சூலமங்கலம் பாட்டு போல வருமா? திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் என்று பாடுவதும் இவரே, சுசீலாம்மாவோடு!

* M.R விஜயா திரைப்படப் பின்னணிப் பாடகி என்பதை விட, தெய்வீக இசைப் பாடகி என்பதே பொருத்தம். பட்டீஸ்வரம் துர்கை மீது இவர் பாடும் தொகுப்பு, மணமாகாத பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலம்! மதுரை அரசாளும் மீனாட்சி என்று பாடுவதும் இவரே!

படம்: தெய்வம்
வரிகள்: கண்ணதாசன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
குரல்: சூலமங்கலம் ராஜலட்சுமி - M.R விஜயா


வருவான்டி தருவான்டி மலையாண்டி
வருவான்டி தருவான்டி மலையாண்டி - அவன்
வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வான்டி
வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வான்டி - அவன் தான்டி
வருவான்டி தருவான்டி மலையாண்டி, பழனி மலையாண்டி!

சிவனாண்டி மகனாகப் பிறந்தான்டி - அன்று
சினம் கொண்டு மலை மீது அமர்ந்தான்டி
நவலோக மணியாக நின்றான்டி - என்றும்
நடமாடும் துணையாக அமைந்தான்டி - அவன் தான்டி,
வருவான்டி தருவான்டி மலையாண்டி, பழனி மலையாண்டி!

பாலபி ஷேகங்கள் கேட்பான்டி - சுவை
பஞ்சாமிர்தம் தன்னில் குளிப்பான்டி
காலாற மலை ஏற வைப்பான்டி
கந்தா என்றால் இங்கு வந்தேன் என்று - சொல்லி
வருவான்டி தருவான்டி மலையாண்டி, பழனி மலையாண்டி!

சித்தர்கள் சீடர்கள் பல கோடி - அவன்
செல்வாக்கு எவற்கேனும் வருமோடி
பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி
திருப் புகழ் பாடி வருவார்கள் கொண்டாடி
வருவான்டி தருவான்டி மலையாண்டி, பழனி மலையாண்டி!


பழமுதிர் சோலை ஆலயம்


படைவீட்டின் சில ரகசியங்களைப் பார்ப்போமா? இன்று பழமுதிர் சோலை!

* இங்கு முருகனுக்கு ஒரு காலத்தில் ஆட்டு ரத்தம் கலந்த அரிசிச் சோற்றைப் படைத்த வேடுவர்கள் உண்டு! சொல்பவர் நக்கீரர்! கொழுவிடைக் குருதி விரைஇய தூவெள்ளரிசி சில்பலிச் செய்து என்கிறார்.

* மற்ற படைவீடுகளைப் போல பிரம்மாண்டமான ஆலயம் இங்கு கிடையாது! முன்பு கூட வேல் வழிபாடு மட்டுமே இருந்துள்ளது. அண்மைக் காலங்களில் தான் தனியான ஆலயமும், முருகனின் சிலை வைத்து வழிபாடுகளும் தோன்றியுள்ளன!

* முற்காலத்தில், வேட்டுவர்கள், குறிஞ்சி நில மக்கள் எப்படி வழிபட்டு வந்தனரோ, அப்படியே தான் பல வழிபாடுகள் இன்றும் உள்ளன; வேட்டுவர்கள் தெய்வமான ராக்காயி அம்மனும் மலை மேல் உண்டு!

* நாகரீக மாற்றங்களால் அதிகம் அசைந்து கொடுக்காது, பண்டைத் தமிழ் மலையாகவே பழமுதிர் சோலை இருந்து வருகிறது போலும்!

* நூபுர கங்கை என்னும் சிலம்பாறு, காட்டாறாகப் பாயும் மலை. இங்கு மாதவி மண்டபத்தில் அமர்ந்து, இளங்கோ தம் காப்பியத்தை எழுதினார் என்று சொல்வாரும் உண்டு!

* ஒளவைக்கு நாவற் பழம் காட்டி, "பாட்டி, பழம் சுடுகிறதா?" என்று கேட்ட இடம் இதுவே!

* ஆழ்வார்கள் சோலைமலையின் இயற்கை அழகில் மனம் பறிகொடுத்து வர்ணித்துள்ளார்கள். ஆண்டாளின் கல்யாண வேண்டுதலை நிறைவேற்றிய இறைவனும் சோலைமலை அழகரே! மாலிருஞ்சோலை பாடற் குறிப்புகள் பரிபாடல் முதலான சங்க இலக்கியங்களிலும் வருகின்றன!
சோலைமலை, அழகர் கோயில்!


* கீழே ஒரு அழகன் - முல்லை அழகர்! மேலே ஒரு அழகன் - குறிஞ்சி முருகன்! இப்படி இரு அழகன்களும் ஒரு சேர இருப்பதால், சோலைமலை முழுதும் அழகு ததும்பி வழிவதில் வியப்பென்ன?

* அகரமும் ஆகி அதிபனும் ஆகி, சீர் சிறக்கும் மேனி பசேல் பசேல் = போன்ற புகழ்மிக்க திருப்புகழ்கள், பழமுதிர்சோலை மீதே!

இழுமென இழிதரும் அருவிப், பழமுதிர் சோலை மலைகிழ வோனே!
திரு மலிவான பழமுதிர் சோலை, மலை மிசை மேவும் பெருமாளே!
இரு நிலம் மீதில், எளியனும் வாழ, எனது முன் ஓடி வர வேணும்!

முருகா!

Friday, October 17, 2008

ஈழத்தமிழனின் வேண்டல்:

ஈழத்தமிழனின் வேண்டல்!
பழநிமலை முருகா பழம் நீ திருக்குமரா என்னும் மெட்டில்!



கதிர்காம வேல்முருகா
காப்பதுமுன் பாரமப்பா
எம்துயரம் நீக்கிடுவாய் - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா

போரும் ஓயாதோ விடியலும் வாராதோ
இடமின்றித் தவிக்கின்ற அவலமும் தீராதோ
நிலைமை சீராக நிழலும் நிஜமாக
நிம்மதியை எங்களுக்குத் தா - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

இதுநாள் யாம்பட்ட இடரிங்கு போதாதோ
இப்படியே எம்மக்கள் அழிவதும் சரியாமோ
கருணைத் திருவுள்ளம் மிகுந்தவன் நீயல்லவோ
கண்மலரை திறந்திடப்பா - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

சூரனை மாய்த்திடவே வேற்படை நீகொண்டாய்
சூரர்கள் பலவிங்கு எமையழிக்க வருகின்றார்
கதிர்காமப் படைவீட்டில் பாங்குடனே நீயிருக்க
எமக்கிந்த நிலை முறையோ - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

இப்படிக்கு நீயிருந்தால் என்செய்வோம் சொல்லப்பா
ஏனின்னும் மௌனமிங்கு எழுந்து நீ வா அப்பா
அழுகின்ற எம்மக்கள் துயர்நீக்க வேலெடப்பா
பரிந்தெம்மைப் பாரப்பா - முருகா
தமிழீழம் எங்களுக்குத் தா
[கதிர்காம வேல்முருகா]

திருப்பரங்குன்ற வேலா........

திருத்தணி முருகனுக்கு அரோஹரா ஆறுபடை முருகனுக்கு அரோஹரா


இன்று கிருத்திகைத் திருநாள். முருகனை வணங்க வாய்ப்பளித்த முருகனுக்கு நன்றி.ஆறுபடை வீடுகளையும் விருத்தத்திலும் பாட்டிலும் கொண்ட அருமையாண பாடல்.ஹிந்தோள ராகத்தில் திருமதி. அருணா சாயிராமின் குரலில் ஒலிக்கிறது.எத்தனை கிருத்திகை வந்தாலும் எத்தனை பாடல்கள் முருகன் மீது இட்டாலும் எனக்கு அலுக்கவே இல்லை படிப்போருக்கும் கேட்பவருக்கும் அப்படித்தான் இருக்கும் எண்ணத்தில் இடுகிறேன்.அடுத்தது ஸ்கந்த ஷஷ்டியில் பார்க்கலாம்.முருகன் அருள் முன்னிற்கும்

ராகம்: ஹிந்தோளம் தாளம்: ஆதி

விருத்தம்

திருச்செந்தூர் சீரலை வாழ் தேவா போற்றி
திருப்பழனியிலிருக்கும் தேவா போற்றி
திருவேரகத்து சாமிநாதா போற்றி
திருத்தணி முதல் மலைகள் திகழ்வாய் போற்றி
தேன்பழங்கள் உதிர் சோலை சேர்வாய் போற்றி
திருப்பொலிய உலகாளும் செம்மா போற்றி
செந்தமிழ் தெய்வமே போற்றி
ஆறுபடைகொண்ட திரு முருகா போற்றி போற்றி.

பல்லவி

திருப்பரங்குன்ற வேலா... சீர்மிகும்
திருஆலவாய் பரசிவனோடு அங்கயற்கண்ணி கொஞ்சி முத்தாடும் பாலா...(திரு....)

அனுபல்லவி

விருப்புடன் விண்ணோர்க்கும் கிடைத்தரும் தீந்தமிழ் திருப்புகழ்
தமிழ் திருப்புகழ் நின் திருப்புகழ் பாட திருவருள் தா பாலா(திரு....)

சரணம்

அமரர் முனிவரும் மெய்யடியவரும் வணங்கி
வாராய் குமரா குமரா என்று துதிக்க
கோயில் கொண்ட (திரு....)



-

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP