Tuesday, March 25, 2008

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்...


அண்மைக்காலம் வரை இந்தப் பாடலைப் படித்ததும் இல்லை; கேட்டதும் இல்லை. இராகவன் எங்கோ ஒரு பின்னூட்டத்தில் இந்தத் திருப்புகழ் பாடலைப் பற்றி சொல்லியிருந்தார். மிக அருமையான பாடல். பொருளும் தந்திருக்கிறேன்.

இயற்றியவர்: அருணகிரிநாதர்
நூல்: திருப்புகழ்
பாடல் பெற்ற தலம்: பழனி
பாடியவர்: எஸ்.பி. இராம்
இராகம்: குந்தவராளி

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி

ஆகம் அணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடி
யார்கள் பதமே துணைய(து) ...... என்றுநாளும்

ஏறுமயில்வாகன குகா சரவணா எனது
ஈச எனமானமுன(து) ...... என்று ஓதும்

ஏழைகள் வியாகுலமி(து) ஏதென வினாவில் உனை
ஏவர் புகழ்வார் மறையும் ...... என்சொலாதோ

நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
நீலமயில் வாக உமை ...... தந்தவேளே

நீசர்கள் தமோ(டு) எனது தீவினையெலாம் மடிய
நீடுதனி வேல்விடும் ...... மடங்கல்வேலா

சீறிவரு மாறவுணன் ஆவியுணும் ஆனைமுக
தேவர்துணைவா சிகரி ...... அண்டகூடஞ்

சேரும் அழகார் பழநிவாழ்குமரனே பிரம
தேவர் வரதா முருக ...... தம்பிரானே.

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி - ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்று ஆறுமுகனின் திருப்பெயரை ஆறுமுறை பக்தியுடன் சொல்லி விபூதியாகிய திருநீறை

ஆகம் அணி மாதவர்கள் - தன் உடலில் (ஆகம் - உடல்) அணியும் பெருந்தவம் செய்தவர்கள் (மாதவர் - மாபெரும் தவத்தைச் செய்தவர்கள்)

பாதமலர் சூடும் அடியார்கள் பதமே துணைய(து) என்றுநாளும் - மாதவர்களின் பாதமலர்களை தன் தலையில் சூடும் அடியார்களின் பாதமே துணையது என்று நாள்தோறும் (அடியார்க்கு அடியார்க்கு அடியேன் என்கிறார்)

ஏறுமயில்வாகன குகா சரவணா எனது ஈச - மயிலை வாகனமாக உடையவனே; குகனே (இதயக்குகையில் வாழ்பவனே), சரவணா, எனது ஈசனே

என மான முன(து) என்று ஓதும் - என்னுடைய மானம் (பெருமை, சிறுமை எல்லாமே) உனது என்று எப்போதும் ஓதுகின்ற

ஏழைகள் வியாகுலமி(து) ஏதென வினாவில் - உன் அடியவர்கள் குறைகள் நீ கண்டுகொள்ளாமல் இருந்தால்

உனை ஏவர் புகழ்வார் மறையும் என்சொலாதோ - உன்னை யார் புகழ்வார்கள்? வேதங்களும் 'என்ன இது? உனக்குத் தகுமா?' என்று கேட்காதா?

நீறுபடு மாழைபொரு மேனியவ வேல - திருநீற்றினை அணிந்து பொன் போன்ற மேனியுடையவனே வேலவா

அணி நீலமயில் வாக உமை தந்தவேளே - அழகான நீலமயிலை வாகனமாக உடையவனே; உமையவள் தந்த தலைவனே

நீசர்கள் தமோ(டு) எனது தீவினையெலாம் மடிய - கீழானவர்களுடன் சேர்ந்து நான் செய்த என் தீவினைகள் எல்லாம் அழிய (அ) கீழானவர்களான அசுரர்களுடன் நான் செய்த தீவினைகளும் அழிய (அசுரர்கள், தீவினைகள் இரண்டும் அழிய)

நீடுதனி வேல்விடும் மடங்கல்வேலா - நீண்ட பெருமைவாய்ந்த வேலினை விடும் சிங்கம் போன்ற வேலவா

சீறி வரும் மாறவுணன் ஆவி உணும் - சீறி வரும் யானைமுகம் கொண்ட மாற்றானான கஜமுகாசுரனின் உயிரை எடுத்த

ஆனைமுக தேவர்துணைவா - ஆனைமுகத் தேவரான பிள்ளையாரின் தம்பியே (துணைவனே; நண்பனே)

சிகரி அண்டகூடஞ் சேரும் அழகார் பழநிவாழ் குமரனே - அழகிய சிகரத்துடன் கூடி அண்டங்களை எல்லாம் மூடி நிற்கும் அண்ட கூடத்தினைத் தட்டும்படி உயரமான அழகு மிகுந்த பழனியின் வாழ் குமரனே

பிரம தேவர் வரதா முருக தம்பிரானே - பிரம்மதேவருக்கு அருளியவா; முருகனே; என் பிரானே!

***

அண்டகூடம் - எல்லா உலகங்களுக்கும் மேலே கூரையாக அண்டகூடம் என்ற ஒன்று உண்டு என்பது புராணங்கள் சொல்லுவது; பழனிமலையின் உயரத்தை உயர்வு நவிற்சியாக அண்டகூடம் சேரும் அழகார் பழனி என்று சொல்லுகிறார் அருணகிரியார்.

***

இந்தப் பாடல் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 31 மே 2006 அன்று இட்டது.

Saturday, March 22, 2008

ஆனந்த நடனம் ஆடுவதேன்.....






-

ராகம்:- ஹம்ஸாநந்தி தாளம்:- ஆதி
பல்லவி

ஆனந்த நடனம் ஆடுவதேன் மயிலே
அழகன் முருகனை கண்டதனாலோ............( ஆனந்த நடனம்)

அனுபல்லவி

மான்விழியாள் குறவள்ளி மயிலாள்
மடிமீது உனை இருத்தி வருடியதாலோ.........(ஆனந்த நடனம்)

சரணம்

குன்று தோராடிடும் குமர வடிவேலன்
உந்தனின் மீது அமர்ந்ததனாலோ
மீன்விழியாள் குலமங்கை குஞ்சரியாள்
கடைக்கண்அருள் பார்வை கிடைத்ததினாலோ ..ஆனந்த நடனம்)

Thursday, March 20, 2008

பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் (பங்குனி உத்திரச் சிறப்பு இடுகை)


முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ..... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்

பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ..... ஒருநாளே


தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ..... கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ..... எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை

கொட்புற்றெழ நட்புற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல ..... பெருமாளே.




இந்தத் திருப்புகழ் பாடலுக்கு அருமையாக பொருள் சொல்லியிருக்கிறார் எஸ்.கே. ஐயா. அருணகிரிநாதர் இயற்றிய இந்தப் பாடலை 'அருணகிரிநாதர்' திரைப்படத்தில் டி.எம். சௌந்தரராஜன் பாடியிருக்கிறார்.

Tuesday, March 18, 2008

காற்றின் அணுவை மூச்சாக்கி

வேலுண்டு வினையில்லை என்ற திரைப்படத்திற்காக மெல்லிசை மன்னர் இசையில் வாணி ஜெயராம் அவர்கள் பாடிய இந்தப் பாடல் உள்ளத்தை உருக்கும்.

திரைப்படங்களில் எத்தனையோ பாடல்கள் இன்னிசையோடு இறைவனைத் துதித்து வெளி வந்துள்ளன. துன்பப்படும் கதாபாத்திரங்கள் தங்களைக் கடவுளே காக்க வல்லார் என்று அழுது தொழுது பாடுகையில் உள்ளம் உருகும் படி இசையமைத்திருப்பார்கள்.

இதோ பாடலைக் கேளுங்கள். நமது நெஞ்சமே உருகும் பொழுது தமிழ்வேளின் திருவுளம் இழகாதா? உருகாதா?



அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

(திருமலைக் குமார சுவாமி, திருவடி சரணம் ஐயா - உன்
அருளினால் பிறவி பெற்றேன், அடைக்கலம் நீயே ஐயா!)

காற்றின் அணுவை மூச்சாக்கி - என் கந்தா எனக்கு உயிர் கொடுத்தாய்!
மூச்சே காற்றாய் முடியும் வரை - உன்னைப் போற்றிப் பாடிடக் குரல் கொடுத்தாய்!

பாலூட்டும் அன்னை இல்லை! தந்தை சீராட்டும் நிலையில் இல்லை!
ஊரோடு உறவும் இல்லை! இங்கு உனை அன்றி எதுவும் இல்லை!
போராட்டம் ஆகும் வாழ்வில் - உன்னைப் பாராமல் அமைதி இல்லை!
வேலோடு மயிலும் நீயும் - என்னை வாழ்நாளில் காக்கும் எல்லை!

வானூரும் வெள்ளி மலையில் - தந்தை தாயோடு வீடும் உண்டு!
கணநாதன் அண்ணன் உண்டு! - சபரி மலை மீது தம்பி உண்டு!
ன் வாழ்வு என்ற ஒன்று, நீ தரும்போது தானே உண்டு?
குன்றாடும் குமர வேலே - அருள் கொடுத்தாள வேண்டும் இன்று!

Friday, March 14, 2008

அருளாளன் வடபழநி ஆண்டி!


வடபழநி முருகன்

======================================================================

அருளாளன் வடபழநி ஆண்டி!

காணிக்கை கேளாமல், என்ற னுக்குக்
கடவுள்திருச் சந்நிதியின் பெருமை சொல்லி
கோணிச்சென் றிடாமல் உள்ளம் நன்கு
குவிந்துதொழ வடபழநிக் கோயில் காட்டி
ஊணிற்கென் றாக்காமல் செவ்வாய் தோறும்
உள்ளுருக்க உயர்வுக்கென் றழைத்த அந்த
மாணிக்கக் குரலுக்குள் குருவின் நாத
மகிமையினை நான்கண்டு மகிழ லானேன்!

ஞாயிற்றின் பின்னாலே திரியும் திங்கள்;
நடந்துவரும் திங்களுக்குப் பின்னே செவ்வாய்;
ஆயிற்று வடபழநிக் கோயி லில்தான்
அடியேன்நான் கண் விழிப்பேன்; அலறிஓடிப்
போயிற்று உலகநினை வென்கின் றாற்போல்
பொங்கிவரும் கண்ணீரில் எனையி ழப்பேன்!
வாயற்று நின்றுவட பழநிக் குள்ளே
வாழ்வெல்லாம் நானாக வளங்கொ ழிப்பேன்!

பாகாக உருகுகின்ற கிளியென் றென்னைப்
பதமாக இள்முருகன் வருடி விட்டான்;
சாகாத கவலையினைச் சாக வைத்தான்;
சந்ததமும் மெய்ப்பொருளைக் காண வைத்தான்;
போகாத ஊருக்குப் போக வைத்து
புகழ்மலையின் உச்சியிலே வாழ வைத்தான்;
ஆகாத தென்னவெனக் காட்டி விட்டான்
அருளாளன் வடபழநி ஆண்டி தானே!

நான்என்ற மமதைக்கே வழிவி டாமல்
நடக்கின்ற தெதுவாக இருந்த போதும்
ஏன்என்ற கேள்விக்கே இடங்கொ டாமல்
எடைபோட்டுப் பார்க்கின்ற மனம்வ ராமல்
கோன்என்ற திருக்குமரன் அளந்தெ டுத்துக்
கொடுப்பதெலாம் அமுதமென்னும் கொள்கை யோடு
தான்இன்று வரை வாழ்ந்து வருகின் றேன்நான்
தனியாக ஓரின்பம் பெறுகின் றேனே!

தண்டத்தை ஏந்துகிறான்; உலகம் போற்றும்
தவக்கோலம் தாங்குகிறான்; தனியே நின்றிவ்
வண்டத்தை ஆளுகிறான்; நம்பி னோர்க்கிங்(கு)
ஆனந்தம் அருளுகிறான்; அனுப வித்துக்
கண்டத்தை எழுதுகிறேன்; அவனை விட்டால்
கதியில்லை நிம்மதியைக் காண! திங்கள்
துண்டத்தை அணிந்தவனின் மைந்த னைநீர்
தொழுதிருந்து பாருங்கள்; சொல்வீர் பின்னே!

- ஆக்கம் திருமதி செளந்தரா கைலாசம் அவர்கள்

”தொழுதிருந்து பாருங்கள்; சொல்வீர் பின்னே!” என்று என்னவொரு
அழுத்தத்துடன் சொன்னார் பாருங்கள். அதுதான் இப் பாடலின்
முத்தாய்ப்பான வரிகள்

Wednesday, March 12, 2008

தீனசரண்யா.... சுப்ரமண்யா.....

கார்த்திகைத் திருநாள் இன்று/நாளை அதோடு ஷஷ்டியும் இன்றே . பருத்தி புடைவையாய் காய்த்தது என்பார்கள் பெரியோர்கள்.
கேஆர்ஸ் வேறு சொல்லிவிட்டார் நான்தான் காலண்டர் என்று. ஆமாம் காலபயத்தை அண்டவிடாத முருகனின் பக்தர்.
குமரனை கண்டவர்க்கு கனவிலும் கால பயம் ஏதைய்யா
திரு.பாபநாசன் சிவனின் பக்தியின் பெருமையையும் அவருடைய தமிழ்ப் பற்றையும் பறைசாற்றும் முருகனின் மீது மற்றோரு பாடல்.

இந்தப் பாடல் எனக்காவே எழுதியது போல நான் நினைத்துக்கொள்வேன்

நெஞ்சம் உருகி (நெக்குருகி) உன்னை பணியாத கல்நெஞ்சன் நான். இருந்தாலும் எனக்கு நீ அருளவேண்டும். ஏன் தெரியுமா. சூரனனின் கொடுமைதாங்காமல் முனிவர்களும் தேவர்களும் உன்னைத்தான் பணிந்தார்கள். நீ தட்டாமல் அவர்களுக்கு அருள் புரிந்தாய். அப்படிப்பட்ட தீன சரண்யன் நீ. அதனால்தான் கூறுகிறேன் எனக்கு வேறு திக்குஇல்லை. நீ தான் காப்பாற்றி அருளவேண்டும்


நீ யாரென்று நினைத்தாய். மூன்று கண்களை உடைய சிவனின் மூன்றாவது கண்ணாகிய அக்னியிலிருந்து ஆறு பொறிகளால் உமாதேவியின் அருளால் உண்டானவன்.ஆறுமுகன்,திருமாலின் அருமை மருமகன்,சிக்கல் சிங்கார வேலன், வள்ளி தெய்வானை மகிழும் மணவாளன்.

பாபநாசம் சிவனுக்கு சொந்த ஊர் நாகப்பட்டினம். ஆகையால் பக்கத்து ஊரான சிக்கில் சிங்கார வேலன் மேல் அளவிடமுடியாத காதல் கொண்டவர் அதனால்தான் பல பாடல்களில் சிக்கலாரை சிக்கல் வரும்போதெல்லாம் வம்புக்கு இழுப்பார்.

ராகம்:- ஆபோகி தாளம்:- ஆதி

பல்லவி
நெக்குருகி உன்னைப் பணியாக்-கல்
நெஞ்சன் எனக்கருள்வாய்
-முருகா.. (நெக்குருகி)

அனுபல்லவி

திக்கு வேறில்லை தீனசரண்யா
தேவர் முனிவர் பணி ஸுப்ரம் மண்யா..... (நெக்குருகி)

சரணம்

முக்கண்ணன் உமைஈன்ற மகனே-ஷண்
முகனே மாயோன் மருகனே-
சிக்கல் சிங்கார வேல குஹனே -வள்ளி
தெய்வயானை மணவாளா உன்னை நினைந்து... (நெக்குருகி)








-

மறைந்த திரு. D.K ஜெயராமன் குரலில் /<"இங்கே கேட்கலாம்">

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP