Tuesday, March 25, 2008

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்...


அண்மைக்காலம் வரை இந்தப் பாடலைப் படித்ததும் இல்லை; கேட்டதும் இல்லை. இராகவன் எங்கோ ஒரு பின்னூட்டத்தில் இந்தத் திருப்புகழ் பாடலைப் பற்றி சொல்லியிருந்தார். மிக அருமையான பாடல். பொருளும் தந்திருக்கிறேன்.

இயற்றியவர்: அருணகிரிநாதர்
நூல்: திருப்புகழ்
பாடல் பெற்ற தலம்: பழனி
பாடியவர்: எஸ்.பி. இராம்
இராகம்: குந்தவராளி

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி

ஆகம் அணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடி
யார்கள் பதமே துணைய(து) ...... என்றுநாளும்

ஏறுமயில்வாகன குகா சரவணா எனது
ஈச எனமானமுன(து) ...... என்று ஓதும்

ஏழைகள் வியாகுலமி(து) ஏதென வினாவில் உனை
ஏவர் புகழ்வார் மறையும் ...... என்சொலாதோ

நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
நீலமயில் வாக உமை ...... தந்தவேளே

நீசர்கள் தமோ(டு) எனது தீவினையெலாம் மடிய
நீடுதனி வேல்விடும் ...... மடங்கல்வேலா

சீறிவரு மாறவுணன் ஆவியுணும் ஆனைமுக
தேவர்துணைவா சிகரி ...... அண்டகூடஞ்

சேரும் அழகார் பழநிவாழ்குமரனே பிரம
தேவர் வரதா முருக ...... தம்பிரானே.

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி - ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்று ஆறுமுகனின் திருப்பெயரை ஆறுமுறை பக்தியுடன் சொல்லி விபூதியாகிய திருநீறை

ஆகம் அணி மாதவர்கள் - தன் உடலில் (ஆகம் - உடல்) அணியும் பெருந்தவம் செய்தவர்கள் (மாதவர் - மாபெரும் தவத்தைச் செய்தவர்கள்)

பாதமலர் சூடும் அடியார்கள் பதமே துணைய(து) என்றுநாளும் - மாதவர்களின் பாதமலர்களை தன் தலையில் சூடும் அடியார்களின் பாதமே துணையது என்று நாள்தோறும் (அடியார்க்கு அடியார்க்கு அடியேன் என்கிறார்)

ஏறுமயில்வாகன குகா சரவணா எனது ஈச - மயிலை வாகனமாக உடையவனே; குகனே (இதயக்குகையில் வாழ்பவனே), சரவணா, எனது ஈசனே

என மான முன(து) என்று ஓதும் - என்னுடைய மானம் (பெருமை, சிறுமை எல்லாமே) உனது என்று எப்போதும் ஓதுகின்ற

ஏழைகள் வியாகுலமி(து) ஏதென வினாவில் - உன் அடியவர்கள் குறைகள் நீ கண்டுகொள்ளாமல் இருந்தால்

உனை ஏவர் புகழ்வார் மறையும் என்சொலாதோ - உன்னை யார் புகழ்வார்கள்? வேதங்களும் 'என்ன இது? உனக்குத் தகுமா?' என்று கேட்காதா?

நீறுபடு மாழைபொரு மேனியவ வேல - திருநீற்றினை அணிந்து பொன் போன்ற மேனியுடையவனே வேலவா

அணி நீலமயில் வாக உமை தந்தவேளே - அழகான நீலமயிலை வாகனமாக உடையவனே; உமையவள் தந்த தலைவனே

நீசர்கள் தமோ(டு) எனது தீவினையெலாம் மடிய - கீழானவர்களுடன் சேர்ந்து நான் செய்த என் தீவினைகள் எல்லாம் அழிய (அ) கீழானவர்களான அசுரர்களுடன் நான் செய்த தீவினைகளும் அழிய (அசுரர்கள், தீவினைகள் இரண்டும் அழிய)

நீடுதனி வேல்விடும் மடங்கல்வேலா - நீண்ட பெருமைவாய்ந்த வேலினை விடும் சிங்கம் போன்ற வேலவா

சீறி வரும் மாறவுணன் ஆவி உணும் - சீறி வரும் யானைமுகம் கொண்ட மாற்றானான கஜமுகாசுரனின் உயிரை எடுத்த

ஆனைமுக தேவர்துணைவா - ஆனைமுகத் தேவரான பிள்ளையாரின் தம்பியே (துணைவனே; நண்பனே)

சிகரி அண்டகூடஞ் சேரும் அழகார் பழநிவாழ் குமரனே - அழகிய சிகரத்துடன் கூடி அண்டங்களை எல்லாம் மூடி நிற்கும் அண்ட கூடத்தினைத் தட்டும்படி உயரமான அழகு மிகுந்த பழனியின் வாழ் குமரனே

பிரம தேவர் வரதா முருக தம்பிரானே - பிரம்மதேவருக்கு அருளியவா; முருகனே; என் பிரானே!

***

அண்டகூடம் - எல்லா உலகங்களுக்கும் மேலே கூரையாக அண்டகூடம் என்ற ஒன்று உண்டு என்பது புராணங்கள் சொல்லுவது; பழனிமலையின் உயரத்தை உயர்வு நவிற்சியாக அண்டகூடம் சேரும் அழகார் பழனி என்று சொல்லுகிறார் அருணகிரியார்.

***

இந்தப் பாடல் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 31 மே 2006 அன்று இட்டது.

14 comments:

குமரன் (Kumaran) March 25, 2008 11:27 AM  

இந்தப் பாடல் 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 31 மே 2006 அன்று இட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

59 comments:

சிவமுருகன் said...
மேல ஒரு முருகன் படத்தையும் போட்டிருந்தா இன்னும் ரொம்ப நல்லா இருந்திருக்கும்.

பாடல் மற்றும் விளக்க அருமை.

Wednesday, May 31, 2006 6:14:00 AM

--

குமரன் (Kumaran) said...
சிவமுருகன். அருணகிரிநாதருடன் அருணாச்சல முருகன் இருக்கும் படத்தை போட முயற்சித்தேனே. பிளாக்கர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏன் என்று தெரியவில்லை. இன்னொரு முறை பின்னர் முயற்சிக்கலாம் என்று விட்டுவிட்டேன்.

பாராட்டிற்கு நன்றி.

Wednesday, May 31, 2006 6:16:00 AM

--
நாமக்கல் சிபி said...
நல்ல பாடலும், விளக்கமும் குமரன்!

Wednesday, May 31, 2006 7:02:00 AM

---

நாமக்கல் சிபி said...
ஆமாம் நீங்கள் ஏன் புகைப் படத்தை மாற்றி விட்டீர்கள்?

Wednesday, May 31, 2006 7:03:00 AM

--
Merkondar said...
படிப்பது கடிணமாக உள்ளது
நல்ல கருத்து உள்ள பாடல்

Wednesday, May 31, 2006 7:29:00 AM

--
johan -paris said...
குமரா! நற் தெரிவு!!!!
மிக நன்றாகப் பாடியுள்ளார்.
சாதாரணமாக "பெருமாளே" என திருப்புகழை நிறைவு செய்யும் "அருணகிரியார்" இதில் "தம்பிரானே" என்றதற்கு யாதேனும் சிறப்புக் காரணம் உண்டா,??
யோகன் பாரிஸ்

Wednesday, May 31, 2006 7:31:00 AM
--

G.Ragavan said...
இந்தத் திருப்புகழ் பலரும் அதிகமாக எடுத்தாளாத (எடுத்தாழாத என்றும் சொல்லலாம்தானே) பாடல். எடுத்தாண்டமைக்கு நன்றி.

திருப்புகழ் ஒவ்வொன்றும் படிக்கப் படிக்கச் சுவைக்கும் அற்புதக் கனிகள். வழக்கம் போல உங்கள் எளிய அறிமுகம். நன்று. நன்று.

Wednesday, May 31, 2006 7:44:00 AM

---

குமரன் (Kumaran) said...
இராகவன், எனக்குப் பொருள் தெரியாத வரிகளுக்கு நீங்கள் பொருள் சொல்வீர்கள் என்று நினைத்தேனே?! :-(

Wednesday, May 31, 2006 7:59:00 AM

--
கோயமுத்தூர் குசும்பு. said...
//எனக்குப் பொருள் தெரியாத வரிகளுக்கு நீங்கள் பொருள் சொல்வீர்கள் என்று நினைத்தேனே//

அவருக்குத் தெரிந்தால் அவர் சொல்லியிருக்க மாட்டாரா?

Wednesday, May 31, 2006 8:13:00 AM

--
SK said...
பாடல் 114 இன் திருப்புகழ் Mஅதனி
----------------------------------------------------

ஆஅருமுகம் (Pஅழனி)

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி

ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
யார்கள் பதமே துணைய ...... தென்று நாளும்

ஏறுமயில் வாகன குகா சரவணா எனது
ஈசஎன மானமுன ...... தென்று மோதும்

ஏழைகள் வியாகுலம் இதேதென வினாவிலுனை
யேவர் புகழ்வார் மறையும் ...... என்சொலாதோ

நீறுபடு மாழைபொரு மேனியவ வேல அணி
நீலமயில் வாக உமை ...... தந்தவேளே

நீசர் கட மோடெனது தீவினையெலா மடிய
நீடு தனி வேல் விடு ...... மடங்கல் வேலா

சீறிவரு மாறவுணன் ஆவியுணும் ஆனைமுக
தேவர் துணைவா சிகரி ...... அண்டகூடஞ்

சேரும் அழகார் பழனி வாழ் குமரனே பிரம
தேவர் வரதா முருக ...... தம்பிரானே.

......... பொருள்.........

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி:: ஆறுமுகம் என்று ஆருமுறை சொல்லி திருநீற்றை;

ஆகம் அணி மாதவர்கள்:: உடலிலே பூசி அணியும் பெரிய தவசிகள்தம்;

பாதமலர் சூடும் அடியார்கள்:: பாதமலர்களைச் சூடும் அடியவர்களின் ;

பதமே துணைய தென்று:: திருவடியே துணை என்று கடைப்பிடித்தும்,

னாளும் ஏறுமயில் வாகன:: தினந்தோறும், ஏறுதற்கு அமைந்த மயில் வாகனனே! !

குகா சரவணா எனது ஈச:: குஹனே! சரவணனே! என்னுடைய ஈசனே! !

எனமானம் உனதென்றும் ஓதும்: என் பெருமை உனது பெருமை என்று கூறியும்;

ஏழைகள் வியாகுலம்: ஏழையடியார்களின் மனத்துயர்;

இதேதென வினாவிலுனை: ஏன் இப்படி வந்தது என முறையிட்டுக் கேட்டும் [நீ கேளாதிருந்தால் பின்பு] உன்னை;

யேவர் புகழ்வார்: யார்தாம் புகழ்வார்கள்?

மறையும் என்சொலாதோ: வேதம்தான் பின்பு உன்னை என்ன சொல்லாதோ?

னீறுபடு மாழைபொரு மேனியவ: திருநீறு துலங்கும் பொன்னார் மேனியுடையாய்,

வேல, அணி நீலமயில் வாக: வேலனே! அழகிய நீலமயில் வாகனனே!

உமை தந்தவேளே: உமையாள் பெற்ற முருகவேளே!

னீசர்கள் த(ம்)மோடு: அசுரர்கள் அனிவருடனும்,

(எ)னது தீவினையெலா மடிய: என்னுடைய தீவினை யாவும் மடிந்தொழிய;

னீடு தனி வேல் விடு: நீண்ட ஒப்பற்ற வேலாயுதத்தைச் செலுத்திய;

மடங்கல் வேலா: வடவாக்கினி போன்ற உக்கிரமான வேலனே

சீறிவரு மாறவுணன்: கோபித்து வந்த பெரும் அசுரன் [கஜமுகாசுரன்]

ஆவியுணும் ஆனைமுக தேவர் துணைவா: உயிரை உண்ட ஆனைமுகத்தெவரின் தம்பியே!!

சிகரி அண்டகூடஞ் சேரும்: மலைச்சிகரம் வான்முகட்டைத் தொடும்,

அழகார் பழனி வாழ் குமரனே: அழகு நிரைந்த பழனி வாழும் குமரனே!!

பிரம தேவர் வரதா: பிரம்மதேவருக்கு வரம் தந்தவனே!!

முருக தம்பிரானே.: முருகனே! தம்பிரானே!

Wednesday, May 31, 2006 8:30:00 AM

--
தி. ரா. ச.(T.R.C.) said...
இந்தப்பாடலை திரு. பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் நாட்டை குறுஞ்சி ராகத்தில் பாடி இசைத்தட்டும் கொடுத்துள்ளார் 1960வருடத்தில். அதற்குபிறகு உங்கள் வலைப்பதிவில் கேட்டேன்.சிறப்பாக இருந்தது. நன்றி உங்களுக்கும் அரும்பொருள் உரைத்த ஸ்.கே. அவர்களுக்கும். தி.ரா.ச

Wednesday, May 31, 2006 10:02:00 AM

--
பொன்ஸ்~~Poorna said...
வந்து போனதை பதிவு செய்வதற்கு :-)
எனக்கு அத்தனை பரிச்சயமில்லாத பாட்டை ரசிக்க முடியாமல் போனதால் :-(

:) (இது இலவச இணைப்பு )

Wednesday, May 31, 2006 10:12:00 AM

--
பொன்ஸ்~~Poorna said...
அட! இந்தப் பதிவிலும் நமக்குப் பேச ஒரு சங்கதி கிடைக்கிறது பாருங்கள்!!

எடுத்தாழாத - என்றால் என்ன ராகவன்? ஆளாத என்னும் போது, ஆளுமை, ஆள்வது என்னும் பொருளில் எடுத்தாளுதல் என்பது சரி..

எடுத்தாழாத என்றால்? எடுத்து அதில் ஆழ்ந்து போகாமல், இப்படி ஏதாச்சும் பொருள் கொள்ளணுமா?

Wednesday, May 31, 2006 10:14:00 AM

--
SK said...
அலுவலகத்தில் சற்று அவசரமாகத் தட்டிவிட்டு ஒரு கூட்டத்துக்குச் செல்ல வேண்டியிருந்ததால், "தட்டுப்பிழை பார்க்க முடியவில்லை!

"பொன்"மனம் கொண்டு பிழை பொறுக்கவும்.

Wednesday, May 31, 2006 11:07:00 AM

--
SK said...
'எடுத்தாளுதல்' எனின், ஒரு பொருளைப் பற்றிய செய்தியைக் கொள்வது

'எடுத்தாழ்வது'- அதைபற்றி விரிவாகப் பொருள் சொல்லி விளக்குவது. எடுத்து, அதில் ஆழ்ந்து பொருள் சொல்லி விளக்குவது என்றும் கொள்ளலாம்.

'ஆழ்வார்' என்பதற்கு இப்படிப்பொருள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

நாராயணன் என்பவனைப் பற்றி அகலமாக, ஆழமாக உணர்ந்து சொல்பவர், அதிலேயே ஆழ்ந்து சொல்பவர், ஆழ்வார்!

நீங்களும் கிட்டத்தட்ட சரிதான், பொன்ஸ்!

Wednesday, May 31, 2006 12:50:00 PM

--
பொன்ஸ்~~Poorna said...
//"தட்டுப்பிழை பார்க்க முடியவில்லை! //
தலைவா,, தட்டினதையே நான் படிக்கலை.. இதுல பிழை வேறயா?!! :)

//நீங்களும் கிட்டத்தட்ட சரிதான், பொன்ஸ்! //
அப்போ நானும் ஆழ்வார் ஆய்ட்டேனா?? :)

Wednesday, May 31, 2006 1:12:00 PM

--
செல்வன் said...
இன்னும் பாட்டை கேக்கலைங்க.இன்னைக்கு சாயந்திரம் கேக்கறேன்

Wednesday, May 31, 2006 1:33:00 PM

--
குமரன் (Kumaran) said...
ரொம்ப நாளைக்கப்புறமா வந்திருக்கீங்க. எல்லாரும் நல்லா இருக்காங்களா சிபி? பாராட்டுக்கு நன்றி சிபி. என் புகைப்படத்தை மாற்றியதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று சொன்னால் அது பொய். ஆனால் அந்தக் காரணத்தைச் சொல்ல விருப்பமில்லை. படத்தை மாற்றவேண்டும் என்று தோன்றியது; எந்தப் படம் போடலாம் என்று தேடிய போது தமிழன்னையின் படம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி என்று அதனையே போட்டுவிட்டேன். :-)

Wednesday, May 31, 2006 1:51:00 PM

--
குமரன் (Kumaran) said...
என்னார் ஐயா. திருப்புகழ் எல்லாப் பாடல்களும் முதன்முறை படிக்கும் போது கொஞ்சம் கடினமாகத் தான் தோன்றுகிறது. ஆனால் ஒன்றுக்கு இரண்டு முறையோ மும்முறையோ படித்துவிட்டால் பின்னர் அது எளிதாக ஆகிவிடுகிறது. மறைமலையடிகளின் எழுத்துகளைப் படிக்கும் உங்களுக்கு இது கடினமா? வியப்பாக இருக்கிறது. நீங்கள் சொன்ன மாதிரி அருமையான கருத்து உள்ள பாடல் இது.

Wednesday, May 31, 2006 1:53:00 PM

--
குமரன் (Kumaran) said...
நன்றி யோகன் ஐயா. நீங்கள் சொன்ன மாதிரி பெரும்பாலான பாடல்களில் 'பெருமாளே' என்று தான் திருப்புகழ் பாடல்களை அருணகிரியார் நிறைவு செய்கிறார். ஆனால் சில பாடல்களில் 'தம்பிரானே' என்றும் நிறைவு செய்துள்ளார். தம்பிரான் என்பதும் பெருமாள் என்பதும் ஏறக்குறைய ஒரே பொருளைத் தரும் சொற்கள் தானே. அது தவிர வேறு ஏதேனும் காரணம் உண்டா என்று தெரியவில்லை.

Wednesday, May 31, 2006 1:55:00 PM

--
குமரன் (Kumaran) said...
இராகவன், உங்களைப் போன்றவர்களே திருப்புகழை இன்னும் எடுத்தாளாமலோ எடுத்தாழாமலோ இருக்கும் போது மற்றவர்களை என் சொல்வது? இராமநாதன் படிப்பு என்று சொல்லி அனுபூதியை சிறிது நிறுத்தி வைத்திருக்கிறார். ஜெயச்ரி ஊருக்குப் போய்விட்டார்கள். எஸ்.கே. யோ ஆத்திகம்ன்னு வலைப்பூ பெயரை வைத்துக் கொண்டும், முருகன் படத்தை தன் படமாகப் போட்டுக் கொண்டும் இருக்கிறாரே தவிர திருப்புகழுக்கு அவர் வலைப்பூவில் பதிவுகள் இடுவதில்லை (இடுவாரோ? நான் தான் பார்க்கவில்லையோ?). இப்படி இருக்க என்னைப் போன்றவர்கள் எடுத்தாண்டால் அது எடுத்து தாழ்த்தியதைப் (எடுத்தாழ்த்தியதைப்) போல் தான் ஆகிறது. :-(

பாராட்டிற்கு நன்றி இராகவன். திருப்புகழ் படிக்க மட்டும் இனிப்பதன்று. கேட்பதற்கும் அது இனிப்பது. :)

Wednesday, May 31, 2006 2:00:00 PM
--

குமரன் (Kumaran) said...
ஏய். யாருப்பா அது கோயமுத்தூர் குசும்பு? வந்து சந்துல சிந்து பாடறது? புதுசா? :-)

இராகவனுக்கு பொருள் தெரியும் ஐயா. ஆனால் இரவு வெகு நேரம் ஆகிவிட்ட படியால் பொருள் சொல்லாமல் சென்றுவிட்டார். அதுல வந்து உங்க குசும்பைக் காமிக்கிறீங்களே? ஐயோ ஐயோ.

Wednesday, May 31, 2006 2:05:00 PM

--

குமரன் (Kumaran) said...
தமிழ்மணத்திற்கும் என் பதிவிற்கும் வருக வருக கோயமுத்தூர் குசும்பு அண்ணா.

Wednesday, May 31, 2006 2:06:00 PM

--

குமரன் (Kumaran) said...
முழுப்பாடலுக்கும் பொருளைத் தந்ததற்கு மிக்க நன்றி எஸ்.கே. எப்போது திருப்புகழைப் பற்றி உங்கள் பதிவுகளில் எழுதப் போகிறீர்கள்?

Wednesday, May 31, 2006 2:06:00 PM

--

குமரன் (Kumaran) said...
தி.ரா.ச. பித்துகுளி முருகதாஸ் பாடியிருக்கிறாரா இந்தப் பாடலை. நான் இந்தப் பாடல்களை எல்லாம் எடுத்துப் போடும் வலைப்பக்கத்தில் அவருடைய பாடல்கள் சில இருக்கின்றன. ஒவ்வொன்றாய் கேட்டுப் பார்க்கிறேன். இந்தப் பாடலும் இருந்தால் அதனையும் இங்கே இடுகிறேன்.

Wednesday, May 31, 2006 2:08:00 PM

--
குமரன் (Kumaran) said...
பொன்ஸ். அதிகம் படிக்காத பாடல்ன்னு சொல்றீங்க. உண்மையைச் சொல்லணும்ன்னா நான் கூட நாலு நாளைக்கு முன்னால தான் இந்தப் பாட்டை முதன்முறையா கேட்டேன். இரண்டு மூனு தடவை கேட்டா நல்லா ரசிக்கலாம். கேட்டுப் பாருங்க.

Wednesday, May 31, 2006 2:10:00 PM

--

குமரன் (Kumaran) said...
இலவச இணைப்பிற்கு நன்றி பொன்ஸ்.

பின்ன... இலவச இணைப்பிற்கு இலவசப் பின்னூட்டம் போட்டாத்தானே மரியாதை. :-)

Wednesday, May 31, 2006 2:10:00 PM

--
குமரன் (Kumaran) said...
எஸ்.கே. எனக்குப் பொருள் தெரியாமல் இருந்த அடிகளுக்கும் பொருளை உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்து எழுதிவிட்டேன். பதிவினைப் பாருங்கள்.

Wednesday, May 31, 2006 2:41:00 PM

--
SK said...
பார்த்தேன் ஐயா!
கூடவே பாடலிலும், மாறவுணன் ஆவியுணும் ஆனைமுக

என மாற்றினால் நலமாயிருக்கும்.
நன்றி.

ஒரு வகைப் படுத்திக் கொண்டு எழுத வேண்டும் என இருக்கிறேன்!

அதற்குள் கொஞ்சம் அரசியலில் ஆட்கொண்டு ஒரு சிறிய பயணம்!:)))

முருகன் அருள் முன் நிற்கும்!

Wednesday, May 31, 2006 2:57:00 PM

--
SK said...
//அப்போ நானும் ஆழ்வார் ஆய்ட்டேனா?? :) //


கிட்டத்தட்ட என்றுதானே சொன்னேன்!

ஆனால், நீங்கள் எதிர்மறையாகச் சொன்னீர்கள்!

சரி !

'ஆல்வார்' என வைத்துக் கொள்வோம்! :)

புரிகிறதா??!!

Wednesday, May 31, 2006 3:02:00 PM

--
குமரன் (Kumaran) said...
என்ன சொல்ல வர்றீங்க பொன்ஸ். 'இந்தப் பதிவிலும்'ன்னா என்ன பொருள்???? :-) உங்களை எல்லாம் நம்பித்தானே எழுதிக்கிட்டு இருக்கேன்?

எடுத்தாழாத என்றால் 'பலரால் எடுத்தாளப்பட்டு அதனால் மதிப்பு தாழ்ந்த பிற பாடல்கள் போல் ஆகாத' என்று தான் எனக்கு முதலில் பொருள் தோன்றியது. :-) இராகவன் அந்தப் பொருளில் எழுதினாரோ இல்லையோ? :-)

Wednesday, May 31, 2006 3:08:00 PM

--
குமரன் (Kumaran) said...
எஸ்.கே. பிழை பொறுக்க வேண்டியவர் உங்கள் பின்னூட்டத்தையே சரியாகப் படிக்கவில்லை போல இருக்கிறது. :-) கூட்டம் நன்றாய் நடந்ததா? சோடா எத்தனை குடித்தீர்கள்? என்ன சோடா கிடையாதா? ஐயா. நான் சொல்வது கோலி சோடா இல்லை. கோகோ கோலாவை. அதனையும் சோடா என்று சொல்கிறார்களே இங்கு. :-)

Wednesday, May 31, 2006 3:10:00 PM

--
குமரன் (Kumaran) said...
நீங்களும் கிட்டத்தட்ட சரிதான் பொன்ஸ் என்று தானே எஸ்.கே. சொல்லியிருக்கிறார். எங்கே பொன்மகளை ஆழ்வார் என்று சொன்னார்? ஒரு வேளை பொன்மகள் ஆண்டாளின் அவதாரமோ? :-)

Wednesday, May 31, 2006 3:11:00 PM

--
குமரன் (Kumaran) said...
பொன்ஸ். நீங்களும் கிட்டத்தட்ட சரிதான் என்பதற்கு ஆழ்வார் என்று எப்படி பொருள் வந்தது. மரமண்டைக்கு விளங்கவில்லை. கொஞ்சம் சொல்லுங்கள். :-)

Wednesday, May 31, 2006 3:12:00 PM

--
குமரன் (Kumaran) said...
சரி செல்வன். மெதுவாக வந்து கேளுங்கள். இப்போதே கேட்டீர்களானால் கொஞ்சம் சூடு குறையும். வேனிற்கால சூட்டினைச் சொன்னேன் செல்வன். :-)

Wednesday, May 31, 2006 3:13:00 PM

--
குமரன் (Kumaran) said...
நீங்கள் சொன்ன திருத்தத்தைச் செய்துவிட்டேன் எஸ்.கே. விரைவில் உங்கள் பதிவுகளில் ஆன்மிகப் பதிவுகளை எதிர்பார்க்கிறேன். :-) நன்றி.

Wednesday, May 31, 2006 3:23:00 PM

--
குமரன் (Kumaran) said...
ஆல்வாரா? ஒன்னும் புரியலை போங்க. :-(

Wednesday, May 31, 2006 3:24:00 PM

--
பொன்ஸ்~~Poorna said...
குமரன், நீங்க ரொம்பக் குழம்பி இருக்கீங்கன்னு நினைக்கிறேன்..
1. எடுத்தாழாத = எடுத்து +ஆழாத.. நீங்க சொல்லும் எடுத்து தாழாத என்பதைப் புணர்ந்தால், எடுத்துத் தாழாத என்று தான் வரும்
2. "இந்தப் பதிவிலும்" - // எனக்கு அத்தனை பரிச்சயமில்லாத பாட்டை //

எஸ்கே, ஆல்வார்னு ஒரு ஊரு இருக்குங்க.. ராஜஸ்தானில்.. டெல்லியிலிருந்து சுமார் 2 மணினேரம் பஸ் பயணம்.. :) மத்த படி ஆல்வார்னா என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலை :(

Wednesday, May 31, 2006 3:51:00 PM

--
குமரன் (Kumaran) said...
குழம்பிப்போயிட்டேனா? இருக்கலாம் பொன்ஸ். ஆனால் எடுத்துத் தாழாத என்பதை எடுத்தாழாத என்றாலும் தவறில்லை என்று தான் நினைக்கிறேன். இலக்கணப்படி சரியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த மாதிரி சொற்களைப் படித்த மாதிரி நினைவு எனக்கு. :-)

Wednesday, May 31, 2006 3:58:00 PM

--
வெற்றி said...
குமரன்,
படித்தேன்.கேட்டேன்.இரசித்தேன்.
நன்றிகள்.

அன்புடன்,
வெற்றி

Wednesday, May 31, 2006 4:02:00 PM

--
குமரன் (Kumaran) said...
நன்றி வெற்றி. :-)

Wednesday, May 31, 2006 4:03:00 PM

--
G.Ragavan said...
// கோயமுத்தூர் குசும்பு. said...
//எனக்குப் பொருள் தெரியாத வரிகளுக்கு நீங்கள் பொருள் சொல்வீர்கள் என்று நினைத்தேனே//

அவருக்குத் தெரிந்தால் அவர் சொல்லியிருக்க மாட்டாரா? //

அப்பிடிச் சொல்லுங்க குசும்பு. குமரனுக்கு இது கூடப் புரியலை. :-)))))

Thursday, June 01, 2006 8:44:00 AM

--
G.Ragavan said...
// எடுத்தாழாத - என்றால் என்ன ராகவன்? ஆளாத என்னும் போது, ஆளுமை, ஆள்வது என்னும் பொருளில் எடுத்தாளுதல் என்பது சரி..

எடுத்தாழாத என்றால்? எடுத்து அதில் ஆழ்ந்து போகாமல், இப்படி ஏதாச்சும் பொருள் கொள்ளணுமா? //

பொன்ஸ். இப்ப நீங்களே எடுத்தாழுத் தொடங்கீட்டீங்க. நான் எதுவும் சொல்ல வேண்டியதில்ல.

Thursday, June 01, 2006 8:47:00 AM

--
G.Ragavan said...
// குமரன் (Kumaran) said...
இராகவன், உங்களைப் போன்றவர்களே திருப்புகழை இன்னும் எடுத்தாளாமலோ எடுத்தாழாமலோ இருக்கும் போது மற்றவர்களை என் சொல்வது? //

கந்தன் கட்டளையிட்டால் காத்திருக்குமா கைகள்? எப்பொழுது எதைச் செய்ய வேண்டுமென்று அவன் அறிவான்.

// இராமநாதன் படிப்பு என்று சொல்லி அனுபூதியை சிறிது நிறுத்தி வைத்திருக்கிறார். ஜெயச்ரி ஊருக்குப் போய்விட்டார்கள். எஸ்.கே. யோ ஆத்திகம்ன்னு வலைப்பூ பெயரை வைத்துக் கொண்டும், முருகன் படத்தை தன் படமாகப் போட்டுக் கொண்டும் இருக்கிறாரே தவிர திருப்புகழுக்கு அவர் வலைப்பூவில் பதிவுகள் இடுவதில்லை (இடுவாரோ? நான் தான் பார்க்கவில்லையோ?). இப்படி இருக்க என்னைப் போன்றவர்கள் எடுத்தாண்டால் அது எடுத்து தாழ்த்தியதைப் (எடுத்தாழ்த்தியதைப்) போல் தான் ஆகிறது. :-( //

நீங்கள் சொன்னதில் பொன்ஸ் ஒரு தவறு கண்டு பிடித்திருக்கிறார்.

// பாராட்டிற்கு நன்றி இராகவன். திருப்புகழ் படிக்க மட்டும் இனிப்பதன்று. கேட்பதற்கும் அது இனிப்பது. :) //

அதனால்தான் அது திருப்புகழ். முத்துமுத்தாகப் பாடச் சொல்லிக் கேட்டதல்லவா.

Thursday, June 01, 2006 8:54:00 AM

--
குமரன் (Kumaran) said...
//அப்பிடிச் சொல்லுங்க குசும்பு. குமரனுக்கு இது கூடப் புரியலை. :-)))))
//

இராகவன். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும். என்னை நம்பச் சொல்றீங்களா? :-)

Thursday, June 01, 2006 12:28:00 PM

--
குமரன் (Kumaran) said...
//நீங்கள் சொன்னதில் பொன்ஸ் ஒரு தவறு கண்டு பிடித்திருக்கிறார்.
//

இராகவன். பொன்ஸுக்குப் பதில் சொல்லியிருந்தேனே. படிக்கலையா?

Thursday, June 01, 2006 12:30:00 PM

--
SK said...
குமரன்,
நீங்கள் இன்னும் அந்த முதல் வரியின் பொருளை "6 முறை ஆறுமுகம்" என மாற்றவில்லை!

ஜிராவுடன் பதிலாட்டம் ஆடுவதை விடுத்து[!!:))!!] நாளை[வெள்ளி] சஷ்டியன்று, இந்தத் திருப்புகழை 6 முறை படித்து இன்புறுங்கள்!

:)))

Thursday, June 01, 2006 12:41:00 PM

--
குமரன் (Kumaran) said...
அட ஆமாம். அதை எப்படி விட்டேன்? இப்ப மாத்திட்டேன் எஸ்.கே.

நாளைக்கு சஷ்டியா? போன வருடம் வரை அதெல்லாம் பாத்து வச்சுக்கிட்டேன். இப்ப எல்லாம் அது மறந்து போச்சு - இந்த வருடம் தினசரி நாட்காட்டி இந்தியாவிலிருந்து கொண்டு வர மறந்ததால். :-)

இப்போது விஷ்ணு ஸகஸ்ரநாமம் கேட்டுக்கொண்டே வேலை செய்துகொண்டிருக்கிறேன். நாளைக்குத் திருப்புகழ் கேட்கிறேன். :-)

200வது பதிவிற்கு என்ன எழுதுவது என்று தான் இன்னும் புரியவில்லை. ஏதாவது ஆலோசனை இருந்தால் தனிமடலில் அனுப்புங்கள். :-)

Thursday, June 01, 2006 12:47:00 PM

--
SK said...
http://www.himalayanacademy.com/resources/panchangam/

அதற்கு முன்னால் இதோ பிடியுங்கள் இந்த லிங்க்கை!

உங்கள் ஊர் தெரிந்தால் அதையோ, அல்லது, உங்கல் ஊருக்கு அருகிலுள்ள ஊரையோ 'தட்டி'
இந்த வருடப் பஞ்சாங்கத்தை இறக்கி வைத்துக் கொள்ளுங்கள்!

மற்றவரும் பயன்பெற வேண்டி, உங்கள் பதிவில் இடுகிறேன்!


மற்றபடி,
தலாய் லாமா 2000 வருட ஆரம்பத்தின் போது சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது!

IT IS JUST ANOTHER DAY!!

Hope you get it!

Thursday, June 01, 2006 1:03:00 PM

--
குமரன் (Kumaran) said...
எஸ்.கே. நீங்க குடுத்த சுட்டியில இருக்கற பஞ்சாங்கத்தை ஏற்கனவே பாத்திருக்கேன். நன்றி.

ஆமாம் எஸ்.கே. ஒத்துக் கொள்கிறேன். இட் இஸ் ஜஸ்ட் அனதர் டே தான். ஆனால் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு விசேஷம் வைத்துக் கொண்டாடினால் நாளெல்லாம் கொண்டாட்டம் தானே?! :-)

Thursday, June 01, 2006 9:17:00 PM

--
SK said...
நான் சொன்னது தங்களது 200-வது பதிவு பற்றி!

மற்ற பதிவுகளுக்கு இது ஒன்றும் உயர்த்தியும் அல்ல;
ஏனைய பதிவுகள் எல்லாம் தாழ்த்தியும் அல்ல!

எப்போதும் போல மனதுக்கு வருவதை எழுதுங்கள்!

நிச்சயம் சிறப்பாக வரும்!

Thursday, June 01, 2006 9:53:00 PM

--
குமரன் (Kumaran) said...
நன்றி எஸ்.கே. :-)

Friday, June 02, 2006 6:31:00 AM

--
rnateshan. said...
பாடல் மற்றூம் உரை மிக அற்புதம்!!
மேலும் ஒரு வேண்டுகோள்!!
சமீபத்தில் "கண்ட நாள் முதல் காதல் பெருகுதடி!கையிலே வேல் பிடித்தகருணை சிவபாலனை கண்ட நாள் முதல் " என்ற பாடலை கேட்டேன்,அதன் வரிவடிவம் கிடைக்குமா??

Saturday, June 03, 2006 10:05:00 AM

--
Anonymous said...
kanda naal mudhalaai song link:

http://www.musicindiaonline.com/p/x/v5vg.MDyg9.As1NMvHdW/

http://www.musicindiaonline.com/l/26/s/movie_name.8040/

Saturday, June 03, 2006 11:30:00 AM

--
மலைநாடான் said...
குமரன்!

வேலைப்பளு காரணமாக உங்கள் பக்கம் வரவில்லை. இன்றுதான் பார்க்கக் கிடைத்தது.
''ஆனைமுக தேவர்துணைவா - ஆனைமுகத் தேவரான பிள்ளையாரின் தம்பியே (துணைவனே; நண்பனே)''

இதற்கு ஆனைமுகனின் தம்பியே, தேவர்களின் துணைவனே என்றும் பொருள்கொள்ளலாம்தானே?

புழக்கத்தில் இல்லாத மிக நல்ல திருப்புகழ். கண்டெடுத்துக் கொணர்ந்தததுற்கு நன்றிகள்.

Sunday, June 04, 2006 4:04:00 AM

--
Vishvesh said...
The beauty of Thirupugazh lies very much in the complex metrical arrangement of the syllables. Even while you read it aloud, it is so musical. The raga kundalavarali adds a special flavor to the song. It is very nicely sung by the singer. Thanks for the song.

Kumaran, on a faster tempo, TMS has done a greater job with his ‘muthai tharu…’, another Thirupagazh gem.

Monday, June 05, 2006 9:52:00 AM

--
குமரன் (Kumaran) said...
பாராட்டிற்கு நன்றி நடேசன் ஐயா. நீங்கள் சொல்லும் கண்ட நாள் முதல் காதல் பெருகுதடி பாடலை ஒரு முறை கேட்டேன். இன்னும் ஒரு முறை கேட்டுவிட்டு பின்னர் இந்தப் பதிவில் இடுகிறேன்.

சுட்டி தந்த பெயர் சொல்லாத நண்பருக்கு நன்றி.

Monday, June 05, 2006 6:39:00 PM

--
குமரன் (Kumaran) said...
ஆமாம் மலைநாடான். புழக்கத்தில் அவ்வளவாக இல்லாத பாடல் தான் இது. ஆனைமுகத் தேவர் துணைவா என்னும் இடத்தில் ஆனைமுக என்று இல்லாமல் வெறும் தேவர் துணைவா என்று இருந்திருந்தால் நீங்கள் சொல்வது போல் தேவர்களின் துணைவனே என்று பொருள் கொள்ளலாம். ஆனால் ஆனைமுகத் தேவர் துணைவா என்று இருப்பதால் ஆனைமுகனின் தம்பியே என்று பொருள் கொள்வது தான் பொருத்தம் என்று எண்ணுகிறேன்.

Tuesday, June 06, 2006 6:02:00 AM

--
குமரன் (Kumaran) said...
ஆமாம் விஸ்வேஷ். திருப்புகழ் பாடல்கள் எல்லாமே அப்படித்தான். ஓசை முனி என்று அதனால் தானே அருணகிரிநாதரைச் சொல்கிறார்கள். திரு. டி.எம்.எஸ். பாடிய, முருகனாலேயே முதலடி எடுத்துக் கொடுக்கப்பட்ட, முதல் திருப்புகழான 'முத்தைத் தரு பத்தித் திருநகை'ப் பாடலைத் தேடிப் பார்க்கிறேன். கிடைத்தால் இடுகிறேன்.

Tuesday, June 06, 2006 6:04:00 AM

மதுரையம்பதி March 25, 2008 1:05 PM  

ஆக 2006ல் எல்லாம் நீங்க முருகன் பதிவு போட்டிருக்கீங்க?.... :-)

நாராயண, அரங்க நாராயண....

குமரன் (Kumaran) March 25, 2008 5:16 PM  

நாரத மகாமுனிவரே. இப்ப எல்லாம் முருகன் பாட்டோ பதிவோ போடறதில்லைன்னா சொல்றீங்க? 2005ல இருந்து தொடர்ந்து விடாம முருகன் பதிவு போட்டுக்கிட்டு இருக்கேனையா. கண் திறந்து கடைக்கண் பாருங்கள் ஐயா. :-)

ஜீவா (Jeeva Venkataraman) March 25, 2008 7:49 PM  

இந்த திருப்புகழை உன்னி கிருஷ்ணன் பாடிட நிறைய கேட்டிருக்கிறேன் குமரன்.
இப்போதுதான் பொருள் ஓரளுவக்காவது புரிகிறது - மூன்றுமுறை படித்துவிட்டேன். இன்னும் சிலமுறைகள் படிக்க வேணும் போலும்!

குமரன் (Kumaran) March 26, 2008 10:16 AM  

ஜீவா. உன்னிகிருஷ்ணன் எனக்கும் பிடித்த பாடகர். அவர் இந்தத் திருப்புகழைப் பாடியிருக்கிறாரா? சுட்டி இருந்தால் தாருங்கள்.

sury March 26, 2008 10:59 AM  

திருமுருக கிருபானந்த வாரியார் கூறியதிலிருந்து சில பகுதிகள்.

குமரன் என்றும் குருபரன் என்றும் முருகன் என்றும் சரவணன் என்றும் குகன்
என்றும் ஷண்முகன் என்றும் ஆறுமுகன் அழைக்கப்படுகிறார்.

என்றும் இளமையோடு இருப்பதால் குமரன் எனவும்
குருவாக உள்ளவர், யாவருக்கும் முதன்மையானவர் என்பது மட்டுமன்றி அவரைக்
குருவாகக் கொண்டவரே மெய்ப்பொருளை உணர்வார் என்பதால் குருபரன் எனவும்,
முருகு என்பதற்கு அழகு என்ற பொருள் கொண்டவர், நக்கீரர் உரைத்தபடி, "முருகா என ஓதுவார்முன் அஞ்சுமுகந்தோன்றில் ஆறுமுகந்தோன்றும்,
வெஞ்ச மரம் தோன்றில் வேல் தோன்றும், நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலுந்தோன்றும் என உபதேசித்தினால் முருகன் எனவும்,
சரவணத் தடாகத்தில் எம்பெருமான் மூவர் தேவாதிகள் பொருட்டுத் தோன்றியதால் சரவணன் எனவும்,
குறிஞ்சி நிலக்கடவுள், மலைக்குகையில் உறைபவர் என்றும் ஆன்மாக்களின் இதயக்குகையில் வீற்றிருப்பதால் குகன் என்றும்
ஷண்முகன் (ஆறு முகத்தோன்) அழைக்கப்படும் தமிழ்க்கடவுளாம் எம்பெருமானின்
ஆறு குணங்களை ஒட்டியே ஆறுமுகம் எனப்பெயர் வந்ததாய்க் கந்தபுராணம் கூறும்.

இந்த ஆறு குணங்களாவன: ஸர்வஞ்ஞ்த்வம், திருப்தி, அநாதிபோதம், ஸ்வதந்தரம், அலுப்த சக்தி, அநந்த சக்தி என்ப்படுவாம்.

" ஏவர்தம் பாலுமின்றி எல்லைதீ ரமலற்குள்ள
மூவிரு குணனுஞ் சேய்க்கு முகங்களாய் வந்ததென்ன‌
பூவியல் சரவணத்தன் பொய்கையில் வைகுமையன்
ஆவிகட் கருளுமாற்றால் அறுமுகங் கொண்டானன்றே... கந்தபுராணம்.

அத்தகைய ஆறுமுகக் கடவுளை எங்கும் எந்நாளும் போற்றி போற்றி எனப்பணிவோம்.

ஆறுமுகன் பாடலை விளக்கியது மிகவும் நன்றே. இதனை நாட்டக்குறிஞ்சியிலோ அல்லது செஞ்சுருட்டி ராகத்திலோ மெட்டமைத்து பாடலாமே என யோசித்த போது,
குந்தலவராளியில் அற்புதமாக திரு ராம் பாடிய சுட்டி கொடுத்திருக்கிறீகள். மிகவும்
இனிமையாக இருக்கிறது.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://vazhvuneri.blogspot.com
http://arthamullavalaipathivugal.blogspot.com

sury March 26, 2008 12:56 PM  

Today, a villager, near my residence sang this song even at the first instance as he just saw this song. you may listen here:
http://www.youtube.com/watch?v=5ajV_WGR_ns
He danced in trance, as he sang this, and
as he finished tears rolled down his eyes.
subbu rathinam
thanjai.
PS: i have given a link to your blog in http://vazhvuneri.blogspot.com, anticipating your permission.

ஜீவா (Jeeva Venkataraman) March 26, 2008 7:34 PM  

தொகுப்பிலிருந்து வலையேற்றியபின் அதற்கான சுட்டியைத் தருகிறேன், குமரன்.

ஜீவா (Jeeva Venkataraman) March 26, 2008 7:35 PM  

சுப்புரத்தினம் ஐயா,
அறுமுகனின் அறுகுணங்களையும் அழகாகச் சொல்லி

ஆறுமுகமான பொருளையும் விளக்கியுள்ளீர், நன்றி.

ஜீவா (Jeeva Venkataraman) March 26, 2008 8:40 PM  

இதோ, இங்கே கேட்கலாம் உன்னி கிருஷ்ணன் பாடிட:
http://www.esnips.com/doc/a7b42bde-20f1-4b73-bfc6-bf8b936317a9/Arumugam

குமரன் (Kumaran) April 21, 2008 1:36 PM  

சுப்புரத்தினம் ஐயா. முருகப்பெருமானின் திருப்பெயர்களுக்கு அருமையான விளக்கங்களை வாரியார் சுவாமிகளிடமிருந்து வாங்கித் தந்தீர்கள். மிக்க நன்றி.

குமரன் (Kumaran) April 24, 2008 6:30 AM  

உன்னிகிருஷ்ணன் பாடி இந்தப் பாடலைக் கேட்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி ஜீவா.

உண்மைத் தமிழன்(15270788164745573644) April 24, 2008 7:23 AM  

முருகா.. நானும் இப்போதுதான் படிக்கிறேன்.. கேட்கிறேன்..

குமரா.. எங்கேயிருந்துதான் இப்படியெல்லாம் பிடிக்கிறீர்கள்..?

நன்றிகள்..

குமரன் (Kumaran) May 03, 2008 10:24 PM  

முருகனருளால் தானே கிடைப்பவை தான் உண்மைத் தமிழரே. அவனருளாலே அவன் தாள் வணங்கி...என்று அருளாளர்களும் சொல்லியிருக்கிறார்களே.

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP