Monday, February 26, 2007

028: குமர மலை குயிலினம் கூவும் இசை கேட்குது


குமர மலை குயிலினம் கூவும் இசை கேட்குது
தணிகை மலை தென்றலும் தாலாட்டு பாடுது
செந்தூரின் அலை ஓசை ஸ்ருதியாக மாறுது
(குமர மலை குயிலினம்)

தெள்ளு தமிழ் பாட்டிலே புள்ளி மயில் ஆடுது
வள்ளலவன் பேரைத் தினம் சேவலினம் பாடுது
சரவணபவாவென்ற சங்கீதம் பரவுது
ஆறுபடை வீடுடைய எழில் வேந்தன் நாமத்தை
(குமர மலை குயிலினம்)

பழமுதிரும் சோலையில் வண்டினம் முழங்குது
அழகன் அவன் அருளமுதம் தேனாகப் பாயுது
வள்ளியுடன் குஞ்சரியின் மணக்கோலம் காணுது
அன்னை உமை தந்தை சிவன் அருளாசி கேட்குது
திருமுருகன் நாமம் அதை பக்தியுடன் பாடும் போது
பழனி மலை பஞ்சாமிருதம் நாவினிலே இனிக்குது
(குமர மலை)

இராகம்: மாண்ட்
தாளம்: கண்ட சாபு
பாடியவர்: சுதா இரகுநாதன்
இயற்றியவர்: கே.எஸ். இரகு


பாடலைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்

Monday, February 12, 2007

027: சிங்கார வேலனே தேவா - ஒரு பின்னணி!

சாந்தா! ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்?
உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த, ஓடோடி வந்த என்னை
ஏமாற்றாதே சாந்தா!

பாடு சாந்தா, பாடு!


இது நம்மில் எத்தனை பேருக்கு மனப்பாடம் ஆன வரிகள். கல்லூரியில் இதை வைத்துச் செய்யாத கேலியா? ஆனால் இன்று இந்தப் பாட்டைத் தனிமையில் (ஏகாந்தமாக) கேட்கும் போது, அப்படியே மனம் லயித்து விடுகிறது.
நாதஸ்வரச் சக்கரவர்த்தி, காருக்குறிச்சியாரின் வாசிப்பு அப்படி!

அப்படியே காட்சியை மனத்திரையில் ஓட்டிப் பாருங்கள்!
ஜெமினியின் அசைவுகள், நடிகையர் திலகம் சாவித்திரியின் நளினம்,
பாலைய்யாவின் கன ஜோரான வாசிப்பு பாவனை-அதுவும் உதட்டைப் பிதுக்கித் தவில் கொட்டும் அழகே தனி!

karaikurichi

இந்தப் பாட்டுக்கு ஒரு பின்னணிக் கதையும் உண்டு, தெரியுமா?
இசையமைப்பாளர் S.M சுப்பையா நாயுடு, முதலில் இந்தப் பாட்டைப் போடுவதாக இல்லை!
அவர் போட எண்ணிய பாட்டு, தேவாரப் பாடல்.
மந்திர மாவது நீறு
வானவர் மேலது நீறு...

இதைத் தான் முதலில் காருக்குறிச்சி அருணாச்சலம் வாசித்து விட்டுச் சென்றாராம், 'சிங்கார வேலனே தேவா' என்கிற மெட்டில்.

பின்னர் யாரோ ஒருவர், வெறுமனே நாதமாக இல்லாமல், ஒரு பாடகியின் குரலும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று சொல்ல, ஜானகியம்மா வரவழைக்கப்பட்டார்.
தேவாரப் பாடலும் ஏனோ மாறியது; கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம் "சிங்கார வேலனே தேவா" என்று எழுதினார். ஜானகியம்மா பாடினார்.
ஆனால் காருக்குறிச்சியார் ஏற்கனவே வாசித்துக் கொடுத்தது, கொடுத்தது தான்! அதை மாற்ற யாருக்கும் மனமில்லை.
பாடலையும், இசையும் பின்னர் காப்பி & பேஸ்ட் செய்தார்கள்.
ஆனால் கேட்கும் போது அப்படி மிக்ஸ் செய்தார்கள் என்று சொல்லத் தான் முடியுமா? அத்தனை நேர்த்தி.

(ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்டது)



சரி, நாம் சிக்கல் சிங்காரவேலர் சந்நிதிக்குச் செல்வோம் வாருங்கள்!
நாகைப்பட்டினத்தில் இருந்து கூப்பிடு தூரம் தான்.

pic2

முருகன் கொள்ளை அழகு. வடித்த சிற்பி யாரோ?
இதழ்க் கோட்டோரம் புன் சிரிப்பு தவழும் வதனம்.
சைட் ஆங்கிலில் இருந்து பார்த்தால் கூட, நம்மைப் பார்ப்பது போலவே ஒரு பாவனை!
இங்கு உற்சவ மூர்த்தி மட்டும் தான்!
இக்கோவிலின் மூலமூர்த்தி சிவனார், நவநீத ஈஸ்வரர் - வேல் நெடுங் கண்ணி அம்மை.
சூர சம்காரத்தில், அம்மையிடம் முருகன் வேல் வாங்கும் போது, ஒரு அதிசயம் காணலாம். என்னென்று சொல்லுங்கள்? புதிரா புனிதமாவில் ஒரு முறை கேட்கப்பட்டது.

சரி வாங்க பாட்டைக் கேட்கலாம்!

சிங்கார வேலனே தேவா - அருள்
சீராடும் மார்போடு வாவா - திருச்
செந்தூரில் நின்றாடும் தேவா - முல்லைச்
சிரிப்போடும் முகத்தோடும் வாவா

செந்தமிழ்த் தேவனே சீலா - விண்ணோர்
சிறைமீட்டுக் குறை தீர்த்த வேலா
சிங்கார வேலனே தேவா - அருள்
சீராடும் மார்போடு வாவா



படம்: கொஞ்சும் சலங்கை
வரிகள்: கு.மா. பாலசுப்ரமணியம்
குரல்: எஸ்.ஜானகி
நாதஸ்வரம்: காருக்குறிச்சி அருணாசலம்
இசை: எஸ்.எம்.சுப்பையாநாயுடு

026: மனம் இரங்காதோ ஐயா?




முருகா முருகா என்று பலமுறை உரைத்தாலும்
மனம் இரங்காதோ ஐயா?

முருகா முருகா என்று பலமுறை உரைத்தாலும்
மனம் இரங்காதோ ஐயா?
திருத்தணிகை வாழும் (முருகா)

வருக வருக நீ வண்ண மயில் ஏறி!
வாரண முகத்தோனே வணங்கும் சிவபாலன் (முருகா)

வையகம் போற்றும் வானவர் தலைவா!
வள்ளி மணவாளா வேலாயுதா கந்தா!
கைவிடுமாகில் யார் கதி எனக்கு?
கார்த்திகேயனே உன்னைச் சரணடைந்தேன்! (முருகா)


இராகம்: சண்முகப்ரியா
தாளம்: ஆதி
இயற்றியவர்: ??
பாடகர்: கே.ஜே. யேசுதாஸ்

பாடலைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்

Saturday, February 03, 2007

025: முருகா முருகா முருகா வா!

22 Nov 2016
அமரர். பாலமுரளி கிருஷ்ணா, தாமே எழுதி + பாடிய, முருகன் பாடல்!

 

முருகா முருகா முருகா வா!
மோகன குஞ்சரி பதியே வா!
முருகா முருகா முருகா வா!

மறைகளின் மூலப் பொருளினை ஓதி
பரசிவன் குருவான ஞானவரா - பேர்
அருள் நிறை விழியிலே அன்பு கொண்டிட வா
முருகா முருகா முருகா வா!

குன்று தோறாடும் குகனே வாராய்
குறை அகற்றிடும் சிவகுமரனே வாராய்
வென்றிட வல்வினை வேருடனே என் முன்
முருகா முருகா முருகா வா!

பெரும் இசை வித்தகர் திரு.பாலமுரளிகிருஷ்ணாவே இயற்றிப் பாடிய பாடல் இது.

இராகம்: குந்தளவராளி
தாளம்: ஆதி

பாடலைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்
(Changed the link to https://www.youtube.com/watch?v=f84-_28phLk )

***

அருஞ்சொற்பொருள்:

குஞ்சரி - தெய்வயானை
மறைகளின் மூலப்பொருள் - ஓம்காரம்
ஞானவரா - ஞானத்தில் சிறந்தவன்

Friday, February 02, 2007

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!


ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!


பாடல் தொகுப்பு: திருப்புகழ்
இயற்றியவர்: ஓசைமுனி அருணகிரிநாதப் பெருமான்
பாடியவர்கள்: பிரியா உடன்பிறந்தோர் (சகோதரிகள்)
பாடலைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP