Friday, November 16, 2007

கந்த சஷ்டி- 7: வள்ளித் திருமணம் - ஜீவாவின் பதிவு!

ஆறு நாட்களில் ஆறு பதிவுகளில் ஆறு முகனுக்கு சஷ்டி சிறப்புப் பதிவுகளில் முருகனருள் முன்னிற்கிறது.

ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே
ஈசனொடு ஞானமொழி பேசும் முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்றே
குன்றுருவாய் வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் முகம் ஒன்றே
வள்ளியயை மணம் புரிய வந்த முகம் ஒன்றே
என்று ஆனந்த பைரவியில் கண்ட சாபு தாளத்தில் அருணகிரி பாடிய ஆறுமுகமான பரம்பொருளை ஆறு பதிவுகளில் பாடிடக் கேட்டோம்:

* சரவணபவ என்னும் திருமந்திரம் ஷண்முகப்பிரியாவில் ஷண்முகன் புகழ் பாடியது.
* பரம்பொருள் அகரம் முதல் அனைத்தும் ஆனதை திருப்புகழில் புகழ்ந்தது.
* முருகு என உருகிடும் இன்பம்போல் வேறுண்டோ என சீர்காழியார் குரல் கேட்டது.
* நாத, வேத, ஞான பண்டிதனை ராஜ அலங்காரத்திலும் பார்த்தது.
* முதல் சொல் தந்து முக்திக்கு வித்தானவனை அருணகிரியாரின் சொற்சுவையில் பருகியது.
* தியான நிலையில் அகமுருகி நின்றார்க்கு அருள் பாலித்திடும் செந்தில்நாதனைப் போற்றியது.

இப்படியாக, குமரனும், கே.ஆர்.எஸ் உம் தாங்கள் தேர்ந்தெடுத்த தேனான பாடல்களை கேட்பதற்கு தோதாக தந்திட, கைமாறென்ன செய்வேன்? நன்றியோடு சேர்த்து வேறென்ன தரலாம்? பதிவு தரலாமா? வள்ளி திருமணமும், மங்களமும் கொடுத்து சஷ்டி பதிவுகளுக்கு இனிதான நிறைவினைத் தரலாமா!



வள்ளி திருமணத்தினை இசை நாடகமாக வெளியிட்டிருக்கிறார்கள் கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலனின் குழுவினர். இணையத்தில் அதனை இசைக்கோப்பாக வெளியிட்டுள்ளார்கள் சிஃபி தளத்தினர். நீங்களே கேட்டு மகிழுங்கள்.
வள்ளி திருமணம் ஒலிக்கோப்பு - பதினேழு பகுதிகளில்!

பாடல்களின் வரிகள்



இறுதியில் மங்களமும் பாடிடலாமா? MSV இசையில் SPB பாடி வெளிவந்த முருகன் சுப்ரபாதம் இசைத் தொகுப்பிலிருந்து மங்களம் பகுதி:





மங்களம் தருக என்றேதான் மலரடியை வேண்டுகிறோம்
மலையேறிய குமரேசா வந்தனம் வளர்க மங்களம்

பூமியில் கலியில் பூரணமாய் தோன்றிடும் சுவாமிநாதனே
புகழாம் பெரு சாகரனே கந்தனே பொலிக மங்களம்

நாதனே வேதநாயகனே நாதாந்தமான பூரணா
நயனங்களில் அன்பாளும் முருகனே தருக மங்களம்

தாரகன் சூரபதுமனெனும் தீமையை வென்ற தீரனே
தணிகாசல பெருமாளே உந்தனுகிங்கு வந்தனம்

வாடுவார் நெஞ்சில் பதமாவாய் வள்ளலே வள்ளிநாயகா
வயலூரினில் வளர்வாயே எங்குமே பொலிக மங்களம்

மாயவன் மாலின் மருகேசா மங்களம் அருளும் வாசவா
மருதாசல முருகேசா மன்னனே நித்ய மங்களம்

பதிவு: Jeeva Venkataraman

12 comments:

jeevagv November 16, 2007 7:34 PM  

படங்கள் சேர்த்து பதிவிற்கு மெருகூட்டியதற்கு நன்றி KRS!

பாடல் கேட்காவிட்டால், மேலுள்ள சுட்டியை அழுத்தவும்.
MP3 Widget இல், இரண்டூமுறை அழுத்தியும் பாடலை கேட்கலாம்!

Kannabiran, Ravi Shankar (KRS) November 16, 2007 8:19 PM  

//நன்றியோடு சேர்த்து வேறென்ன தரலாம்? பதிவு தரலாமா? வள்ளி திருமணமும், மங்களமும் கொடுத்து//

ஆகா...அருமையான நன்றிக்கு, இப்போ இன்னொரு நன்றி நான் சொல்ல வேண்டியிருக்கு! :-)

பொதுவா, சூரசம்காரத்துக்கு மறுநாள் தெய்வயானை திருமணம் நடக்கும் செந்தூரில். இங்கு பதிவில் வள்ளி திருமணமும் நடந்தேறியதே!

மங்களகரமான மங்களப் பதிவு! நன்றி ஜீவா!

மெளலி (மதுரையம்பதி) November 16, 2007 11:06 PM  

சுந்தரகாண்ட பாராயணத்தின் முடிவில் பட்டாபிஷேகமும், மகிஷவதத்தின் பின் சிவ பூஜையும் என்பது போல சூர சம்ஹாரத்திற்குப் பின் வள்ளிமணம் அருமையான பொருத்தம்........ நன்றி ஜீவா & ரவி

kaialavuman November 17, 2007 3:08 AM  

கந்த ஷஷ்டி விழாயன் என்றாலும், ஷஷ்டி வெள்ளி மதியம் வரை (IST) மீதம் இருக்கிறதே என நினைத்துக் கொண்டிருந்தேன். ஜீவா அதை நிவர்த்தி செய்து விட்டார்.

நன்றிகள்.

G.Ragavan November 17, 2007 5:27 AM  

வள்ளி திருமணத்தைத் தொடாத புலவன் இல்லை. எல்லாரும் அதத் தொட்டு எழுதீருக்காங்க எப்படியாவது. ஏன்னா... அது முழுக்க முழுக்க காதல் ததும்பியது. ஆனால் மறைபொருளாக இறைபொருள் நிரம்பியது. ஆகையினாலதான் நரைபொருள் வரிசைல வள்ளி திருமணம் சேராம இன்னைக்கும் இருக்கு.

நல்லதொரு பதிவிட்ட ஜீவாவிற்கு நன்றி. அதுவுமில்லாம மெல்லிசை மன்னர் இசையில பாட்டு கேக்குறதுன்னா எனக்கு விருப்பம். அதுலயும் முருகன் பாட்டுன்னா... கேக்கனுமா? நன்றி. நன்றி.

Raghavan alias Saravanan M November 17, 2007 8:24 AM  

ஆஹா.. மிக அருமையான நிறைவுப் பகுதி.

அத்தனையும் அருமை!

நன்றியும், வாழ்த்துக்களும் பல!!

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.

தி. ரா. ச.(T.R.C.) November 18, 2007 12:06 AM  

ஆறு நாளும் வந்து படித்து,பார்த்து,கேட்டு மக்ழ்ந்தேன்.ஆனால் ஒரு பதிவுகூடபோட முடியவில்லை வேலை பளுவின் காரணமாக.
ஆனால் வள்ளிகல்யாணத்தோடு "சப்தாகமாக" முடித்துவிட்டீர்கள்.முதல்பதிவில் கேட்ட சப்தக கேள்விக்கு முருகனேவிடைகொடுத்துவிட்டான்
நன்றி கேஆர்ஸ்,குமரன்,ஜிவா

Geetha Sambasivam November 20, 2007 7:32 AM  

கந்த சஷ்டிப் பதிவுகள் அனைத்தும், கந்தனைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டது. முருகனைக் கொஞ்சு தமிழாலே பாடிய அக்கால அடியாரைப் போற்றவா, அந்தக் கொஞ்சு தமிழை விஞ்சிய தமிழால் வர்ணனைகள் கொடுத்திருக்கும் இக்கால அடியார்களைப் போற்றவா? ஒண்ணுமே புரியலை!!!!!! மொத்தத்தில் திகைப்பால் வாயடைத்துப் போய் விட்டேன்!!!!!

cheena (சீனா) November 20, 2007 8:43 PM  

ஜீவா, ரவி - இருவருக்கும் நன்றி. அருமையான சஷ்டிப் பதிவு. மங்களகரமாக மங்களம் பாடுவது காதில் இனிக்கிறது.

ஆறுமுகனின் ஆறு பதிவுகளைப் பாராட்டி வள்ளி திருமணத்தைப் பரிசுப் பதிவாக தந்தது பாராட்டத்தக்கது.

//தணிகாசல பெருமாளே உந்தனுகிங்கு வந்தனம்//

தணிகாசல பெருமாளே உந்தனுகிங்கு மங்களம் - என வர வேண்டுமா ?

cheena (சீனா) November 20, 2007 8:45 PM  

வள்ளி திருமணமா ?? அல்லது வள்ளி த் திருமணமா ?? திருத்தலாமே

குமரன் (Kumaran) November 22, 2007 1:22 PM  

இந்த இடுகையை இட்டவுடனேயே படித்து விட்டேன். இன்று தான் பின்னூட்டமிட வாய்ப்பு கிடைத்தது.

தங்களின் அன்பான பாராட்டுகளுக்கும் அன்பிற்கும் நன்றி ஜீவா. ஆறு நாட்களில் ஐந்து நாட்கள் பாடல்களைச் சுவையாகத் தொகுத்து தந்ததென்னவோ இரவிசங்கர். ஆனால் ஒரே ஒரு நாள் பொருள் கூடச் சொல்லாமல் ஒரு பாடலை இட்ட அடியேன் பெயரை முதலில் சொல்லியிருக்கிறீர்கள். :-)

குமரன் (Kumaran) November 22, 2007 1:27 PM  

அண்மையில் கடவுளர்களுக்கு ஆண்வாரிசுகளே இருக்கிறார்கள்; பெண்வாரிசுகளே இல்லையோ என்றொரு நண்பர் கணை தொடுத்திருந்தார். இங்கே இந்த இடுகையில் திருமாலின் பெண்மக்களைப் பற்றிய குறிப்பை ஒரு ஓவியத்தில் நீங்கள் தந்திருக்கிறீர்கள். அவர்களைப் பற்றி மேலும் சொல்லுங்கள்.

வள்ளி திருமண ஒலிகோப்புகளை பொறுமையாகக் கேட்கவேண்டும்.

எஸ்.பி.பி. பாடிய மங்கலத்தைக் கேட்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP