Sunday, November 11, 2007

கந்த சஷ்டி - 3: நீயல்லால் தெய்வமில்லை!

முருகனைப் பற்றிய இசை என்றால் பல பாடகர்கள் நினைவுக்கு வந்தாலும், படேரென்று பலருக்கும் நினைவுக்கு வருவது சீர்காழி கோவிந்தராஜன் தான்! - ஏன்?

இசைப் பேரறிஞர், பத்ம ஸ்ரீ போன்ற பட்டங்கள் பெற்றவர் டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன்! - அவர் தமிழிசைக்கு செய்த தொண்டு அளப்பரியது!
ஆழ்வார்கள், நாயன்மார்கள், அருணகிரி என்று பல பாடல்கள், இவரின் குரலில் இசை வடிவம் பெற்றன!

திருவையாறு தியாகராஜர் உற்சவ சபையின் செயலராகவும் பல தொண்டுகள் செய்தார்!
பிபிசி, ரூபவாகினி என்ற வெளிநாட்டு மீடியாக்களும், பக்திப் பாடல்கள் மீது கவனத்தைத் திருப்பிய பெருமை சீர்காழிக்கு உண்டு!

இசை மட்டுமா? நடிப்பும் தானே!
அகத்தியர், ராஜ ராஜ சோழன் படங்களை மறக்க முடியுமா?
தசாவதாரத்தில் நாரதர் வேடம்! வா ராஜா வா படத்தில் சி.ஐ.டி போலீஸ் வேடம்!
தனக்குக் கிடைத்த விருதுகளின் பணத்தில், தன் குருநாதர் திருப்பாம்புரம் சுவாமிநாதப் பிள்ளையின் பேரில், அறக் கட்டளைகள் நிறுவினார்!
தனது 55ஆம் வயதில் இறைவனடி சேர்ந்த சீர்காழியின் இறுதி வாசகம்: "உலகம் வாழ்க!"


வணங்கிடலே எந்தன் வாழ்நாளின் இன்பம்!
தொழுவதொன்றே இங்கு யான்பெற்ற இன்பம்!!
- என்று சொல்வதைக் கொஞ்சம் உன்னிப்பாய்க் கவனிக்க வேண்டும்! வணங்கினால் என்ன என்ன இன்பம் வரும்?

அந்தக் கடவுளை வணங்கினால் செல்வம் வரும்! இந்தக் கடவுளை வணங்கினால் படிப்பு வரும்!! கந்தக் கடவுளை வணங்கினால் வீரம் வரும்-னு பல பேரு சொல்லுவாங்க!
பொதுவா உலகியலுக்குச் சொல்லுறது தான் அது! ஆனா உயர்ந்த பக்தியிலோ, காதலிலோ எது வரும், எது வராது என்ற கணக்கு முன்னே வராது! :-)

வணங்கினால் என்ன இன்பம் வரும்? வணக்கம் என்ற இன்பம் தான் வரும்!
இன்பத்தில் எல்லாம் இன்பம், இறை இன்பம்! வணங்கினால் அந்த இன்பமே வரும்! அதனால் தான் -- வணங்கிடலே எந்தன் வாழ்நாளின் இன்பம் -- என்று பாடுகிறார்!சீர்காழியின் குரலில் இன்றைய சஷ்டிப் பாடல்! கேட்க இதோ சுட்டி!


நீயல்லால் தெய்வமில்லை - எனது நெஞ்சே
நீவாழும் எல்லை முருகா
(நீயல்லால்)

தாயாகி அன்புப் பாலூட்டி வளர்த்தாய்
தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்
குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்
திருவே நீயென்றும் என் உள்ளம் நிறைந்தாய்

நாயேனை நாளும் நல்லவனாக்க
ஒயாமல் ஒளியாமல் உன்னருள் தந்தாய்

(நீயல்லால்)

வாயாரப் பாடி மனமார நினைந்து
வணங்கிடலே எந்தன் வாழ்நாளின் இன்பம்
தூயா முருகா மாயோன் மருகா - உன்னைத்
தொழுவதொன்றே இங்கு யான்பெற்ற இன்பம்

(நீயல்லால்)

21 comments:

குமரன் (Kumaran) November 11, 2007 9:34 PM  

மனத்தை மிகவும் உருக்கும் பாடல் இது. நேரே முருகனிடம் பேச விரும்பினால் இந்தப் பாடலைப் பாடலாம்.

cheena (சீனா) November 11, 2007 9:48 PM  

தமிழுக்கு சீர்காழி - உச்சரிப்பில் அவரை மிஞ்ச ஆளே இல்லை. கணீர்க் குரல். ஆயிரம் தடவை கேட்டாலும் திரும்பத் திரும்பக் கேட்கத் தூண்டும் பாடல். அருமை.
நன்றி கேயரெஸ்.

கோவி.கண்ணன் November 11, 2007 9:55 PM  

நாள் தோறும் கேட்கும் நல்ல தமிழ்பாடல் இது, செல்பேசியில் ஏற்றி வைத்திருக்கிறேன், காலை பயணத்தில் கேட்பேன்.

//நாயேனை நாளும் நல்லவனாக்க
ஒயாமல் ஒளியாமல் உன்னருள் தந்தாய்//

இந்த வரிகள் பாடும் போது சீர்காழியின் குரல் உடைந்த உணர்ச்சி பெருக்கு இருக்கும்.


இது போல் மற்றொரு பாட்டு உண்டு,
"உன்னுடைய வேல் ஒன்றே உறுதுணையாய் வருகிறது...."

அதில்,

தென்பழனி சன்முகத்தின் தேன் முகத்தை காண்பதற்கு,
என் முகத்தில் அமைந்திருக்கும் இருவிழியால் இயன்றிடுமோ'

இந்த பாடலும் கிடைத்தால் போடுங்கள் !

சாத்வீகன் November 11, 2007 9:58 PM  

கே.ஆர்.எஸ்.

சஷ்டியை முன்னிட்டு வரும் பதிவுகள். பாடல்கள். அருமை. தொடர்ந்து படித்து வருகிறேன்.

மிக்க நன்றி.
சாத்வீகன்.

மதுரையம்பதி November 12, 2007 2:45 AM  

//வாயாரப் பாடி மனமார நினைந்து
வணங்கிடலே எந்தன் வாழ்நாளின் இன்பம்//

என்ன இனிய வரிகள்.....அருமையான பாடலை நினைவில் கொணர்ந்தமைக்கு நன்றி.

நன்றி கே ஆர் எஸ்..

பாரதிய நவீன இளவரசன் November 12, 2007 2:56 AM  

மிக்க நன்றி ஐயா... சீர்காழி என்ற உடனேயே அவரது கம்பீரமான குரலில்ல் கணீரென ஒலிக்கும் 'நீயல்லால் தெய்வமில்லை' பாடல்தான் மனதைத் தொடுகிறது.

பாடலைக் கேட்க எனது கணினியில் வசதியில்லாமற் போனாலும், பாடல் வரிகளை வாசிக்கும்போதே அந்த பக்திச் சுவை சொட்டும் உச்சரிப்புகள் காதில் கேட்கிறது.

Seenu November 12, 2007 3:26 AM  

குமரன் இது மிக அருமையான பாடல்.

எனக்கு
"பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால் எனை நீ பார்த்தாலே போதும்
வாழ்வில் துயரேதும் வாராது எப்போதும்"

என்ற பாடல் இருந்தால் போடவும். [முன்பு என் தாயார் அடிக்கடி பாடுவார். இப்பொழுது, தமிழ்நாடு வந்த போது கேட்டால் பாடல் வரிகள் மறந்து விட்டதாக கூறினார்]


நன்றி

Raghavan alias Saravanan M November 12, 2007 8:10 AM  

//மனத்தை மிகவும் உருக்கும் பாடல் இது. நேரே முருகனிடம் பேச விரும்பினால் இந்தப் பாடலைப் பாடலாம்.

//

சத்தியமான வார்த்தைகள்.

கேட்டவுடன் நெக்குருகிப் போனேன். நெகிழ்ந்து, உவந்து, பணிந்து, உருகித்தொழ வைக்கும் பாடல்.

சீர்காழியின் குரலில் கேட்பது அப்படியே மெய்சிலிர்க்க வைத்ததய்யா...

மிக்க நன்றி..

முருகனருள் எல்லோருக்கும் முன்னிற்கும்.

சஷ்டியின் சிறப்பு செழிக்கிறது உங்கள் திருத்தொண்டினால்.


இந்தப் பாடலைத் தரவிறக்கம் செய்ய முடியுமா? அல்லது தரவிறக்கம் செய்ய வசதியுள்ள சுட்டியைத் தரமுடியுமா அன்பர்களே? அகம்மிக மகிழ்வேன்.

நான் நேற்று Youtube ல் இருந்து தெய்வம், திருவருள் படப்பாடல்களைத் தரவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன்.

(மருதமலை மாணியே முருகையா, குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம், வருவாண்டி தருவாண்டி மலையாண்டி, திருச்செந்தூரின் கடலோரத்தில் இப்படி)..

யாருக்காவது வேண்டுமெனில் சொல்லுங்கள். அனுப்பி வைக்கிறேன்.

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.

kannabiran, RAVI SHANKAR (KRS) November 12, 2007 9:50 AM  

//குமரன் (Kumaran) said...
மனத்தை மிகவும் உருக்கும் பாடல் இது. நேரே முருகனிடம் பேச விரும்பினால் இந்தப் பாடலைப் பாடலாம்.//

:-)
உண்மை தான் குமரன்.
அம்மா அப்பாவிடம், அவர்கள் நம்மை வளர்த்தது பற்றி எல்லாம் எண்ணிப் பேசுவது போல் இருக்கு!

kannabiran, RAVI SHANKAR (KRS) November 12, 2007 9:51 AM  

//cheena (சீனா) said...
தமிழுக்கு சீர்காழி - உச்சரிப்பில் அவரை மிஞ்ச ஆளே இல்லை//

ரெண்டு சீர்காழிகளும் தான் சீனா ஐயா!

kannabiran, RAVI SHANKAR (KRS) November 12, 2007 9:55 AM  

//கோவி.கண்ணன் said...
நாள் தோறும் கேட்கும் நல்ல தமிழ்பாடல் இது, செல்பேசியில் ஏற்றி வைத்திருக்கிறேன், காலை பயணத்தில் கேட்பேன்//

கோவி, தினம் தினம் கேட்கும் பாடலா? அருமை!

////நாயேனை நாளும் நல்லவனாக்க
ஒயாமல் ஒளியாமல் உன்னருள் தந்தாய்//
இந்த வரிகள் பாடும் போது சீர்காழியின் குரல் உடைந்த உணர்ச்சி பெருக்கு இருக்கும்//

ஆமாம். அவர் கலங்குவதும் கண்ணுக்குத் தெரியும்! கொஞ்சம் தழுதழுப்பார்!

//தென்பழனி சன்முகத்தின் தேன் முகத்தை காண்பதற்கு,
என் முகத்தில் அமைந்திருக்கும் இருவிழியால் இயன்றிடுமோ'
இந்த பாடலும் கிடைத்தால் போடுங்கள் !//

ஓ, சஷ்டிப் பதிவுகள் முடிந்தவுடன் இட்டு விடலாம்!

kannabiran, RAVI SHANKAR (KRS) November 12, 2007 9:57 AM  

//சாத்வீகன் said...
கே.ஆர்.எஸ்.
சஷ்டியை முன்னிட்டு வரும் பதிவுகள். பாடல்கள். அருமை. தொடர்ந்து படித்து வருகிறேன்.//

வாங்க தலைவா! நலமா?
சஷ்டியை ஒட்டிக், குமரன் நேற்று திருப்புகழ் சந்தப் பாட்டு போட்டாரு! அதையும் கேட்டீங்களா?

இன்னொரு திருப்புகழ் அர்ச்சனை இன்னிக்கிப் போடுகிறேன்!

kannabiran, RAVI SHANKAR (KRS) November 12, 2007 10:00 AM  

//மதுரையம்பதி said...
//வாயாரப் பாடி மனமார நினைந்து
வணங்கிடலே எந்தன் வாழ்நாளின் இன்பம்//

என்ன இனிய வரிகள்.....அருமையான பாடலை நினைவில் கொணர்ந்தமைக்கு நன்றி.//

மெளலி, நீங்க மார்க் பண்ணிக் காட்டிய பின்னால் தான் இன்னொரு பாட்டும் நினைவுக்கு வருது!

வாயாரப் பாடி மனமார நினைந்து = வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்!

kannabiran, RAVI SHANKAR (KRS) November 12, 2007 10:09 AM  

//பாரதிய நவீன இளவரசன் said...
பாடலைக் கேட்க எனது கணினியில் வசதியில்லாமற் போனாலும//

ஏங்க?
Player ஏதாச்சும் தரவிறக்கம் செய்யணுமா? இல்லை வேறு சுட்டிகள் வேலை செய்யுதா-ன்னு சொல்லுங்க! (music plugin, raaga)

//பாடல் வரிகளை வாசிக்கும்போதே அந்த பக்திச் சுவை சொட்டும் உச்சரிப்புகள் காதில் கேட்கிறது.//

அது தான் சீர்காழியின் சிறப்பு!

kannabiran, RAVI SHANKAR (KRS) November 12, 2007 10:23 AM  

//Seenu said...
குமரன் இது மிக அருமையான பாடல்//

சீனு,
குமரன் நேற்று பதிவு போட்டாரு!
இன்னிக்கி அடியேன்! :-)

//"பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால் எனை நீ பார்த்தாலே போதும்
வாழ்வில் துயரேதும் வாராது எப்போதும்"
என்ற பாடல் இருந்தால் போடவும்//

தேடிக் கிடைத்தவுடன் இடுகிறோம் சீனு!

//[முன்பு என் தாயார் அடிக்கடி பாடுவார். இப்பொழுது, தமிழ்நாடு வந்த போது கேட்டால் பாடல் வரிகள் மறந்து விட்டதாக கூறினார்]//

உன்னிரு பதம் நினைந்து
அன்புடன் தினம் பணிந்து
திண்ணமாய் போற்றும் என்பால்
நின் திரு உள்ளம் கனிந்து
அப்படின்னு அடுத்த அடிகள் வரும்-னு நினைக்கிறேன்!

தி. ரா. ச.(T.R.C.) November 12, 2007 11:11 AM  

முருகன் அருள் முன்னிற்கும்

Seenu November 14, 2007 3:18 AM  

//சீனு,
குமரன் நேற்று பதிவு போட்டாரு!
இன்னிக்கி அடியேன்! :-)//


மன்னிக்கவும், அவரசரத்தில் கவனிக்கவில்லை.

எனினும் ஐயப்பனுக்கு மாலையிட்ட அனைவரும் ஐயப்பன்‍‍தான். அதுபோல குமரனை பற்றி எழுதும் நீங்களும் குமரன் தான்

Seenu November 14, 2007 3:20 AM  

//தேடிக் கிடைத்தவுடன் இடுகிறோம் சீனு!//

நன்றி

வடுவூர் குமார் November 14, 2007 11:53 AM  

வெங்கலகுரலோன் சீர்காழி கோவிந்தராஜன் குரலை என்றுமே மறக்கமுடியாது.

kannabiran, RAVI SHANKAR (KRS) November 15, 2007 11:07 PM  

குமார் சார், திராச
இப்ப தான் உங்கள் பின்னூட்டங்களைப் பார்த்தேன்!

நன்றி!

சீனா ஐயா!
நீங்க சொல்வதும் சரியே!
மாலை போட்டவர் எல்லாம் சாமிமார் தானே!

யோகன் பாரிஸ்(Johan-Paris) November 16, 2007 5:00 PM  

இந்தப் பாடல் சீர்காழியாருக்கே எழுதப்பட்ட பாடல்.
'நாயேனை நாளும் நல்லவனாக்க
ஓயாது ஒழியாது உன்னருள் தந்தாய்'
எனக்குப் பிடித்த அடி..

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP