Monday, July 02, 2007

50. உணவினிலே நஞ்சு வைத்தார்1986ல வந்த படத்திலிருந்து ஒரு பாட்டு இந்தப் பதிவில் பார்க்கலாம். விஜயகாந்த்தும் அம்பிகாவும் இணைந்து நடித்த படம். இந்தப் படத்தில் நம்பியார், டெல்லி கணேஷ், வடிவுக்கரசி, செந்தில், ஜெய்கணேஷ் ஆகியோரும் உண்டு. இறையருட் கலைச்செல்வர் என்ற பட்டம் கொண்ட கே.சங்கர் இயக்கத்தில் வந்த படம் வேலுண்டு வினையில்லை. அந்தப் படத்தில் ஒரு பாட்டு. உணவில் நஞ்சு வைத்து விடுகிறார்கள். அப்பொழுது வரும் பாடல் இது. கேட்போமா? மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் யேசுதாஸ் பாடிய பாடல். மிகவும் அருமையான பாடல்.உணவினிலே நஞ்சு வைத்தால்
நீலகண்டன் மகனே..........................
உணவினிலே நஞ்சு வைத்தால்
நீலகண்டன் மகனே
உன் ஓங்காரம் அதையழிக்கும்
யாரறிவார் குகனே

வினை விதைப்பார் வினையறுத்தல்
விதியல்லவோ முருகா...........
வினை விதைப்பார் வினையறுத்தல்
விதியல்லவோ முருகா
அந்த விளையாட்டை நடத்திட வா
பழநி மலை அழகா
அந்த விளையாட்டை நடத்திட வா
பழநி மலை அழகா............

(உணவினிலே நஞ்சு வைத்தால்

பொன்முகமும் உன்னருளும் பார்த்திருந்தேன் வேலா...............
பொன்முகமும் உன்னருளும் பார்த்திருந்தேன் வேலா
ஒரு பெண் வடிவில் இங்கு வந்து திகைத்து விட்டேன் தேவா

கல் நெஞ்சம் கயமைத்தனம் வஞ்சனைகள் எங்கும்
பெரும் கடல் போலத் தன்னலமே கரைமீறிப் பொங்கும்
கடல் போலத் தன்னலமே கரைமீறிப் பொங்கும்

(உணவினிலே நஞ்சு வைத்தால்

மயில் வடிவில் பகைவனையும் மாற்றிவிட்ட இறைவா............
மயில் வடிவில் பகைவனையும் மாற்றிவிட்ட இறைவா
அந்த மனங்களையும் நீ மாற்றக் கூடாதா தலைவா

அன்பை விட்டு மற்றதற்கே அலைகின்ற ஜனங்கள்
யாரை அழித்தேனும் தான் வாழத் துடிக்கின்ற நரிகள்

(உணவினிலே நஞ்சு வைத்தால்

சாதனையாய் நினைத்தபடி சோதிக்கிறார் உன்னை
இவர் சதிராட்டம் காண்பதற்கோ அனுப்பி வைத்தாய் என்னை

பாதகத்தால் பணவெறியால் கொல்ல வந்தார் பெண்ணை
இந்தப் பாவிகளே கெடுக்கின்றார் நீ படைத்த மண்ணை
இந்தப் பாவிகளே கெடுக்கின்றார் நீ படைத்த மண்ணை

(உணவினிலே நஞ்சு வைத்தால்


அன்புடன்,
கோ.இராகவன்

9 comments:

துளசி கோபால் July 02, 2007 7:33 PM  

அரைச் சதத்துக்கு வாழ்த்து(க்)கள்.

முந்தாநாள் 'தெய்வம்' படம் பார்த்தப்ப உங்க நினைவு வந்தது.அந்தப் படத்தில் முருகன் கொள்ளை அழகு.

G.Ragavan July 03, 2007 2:32 AM  

// துளசி கோபால் said...
அரைச் சதத்துக்கு வாழ்த்து(க்)கள். //

நன்றி டீச்சர். உங்களது வாழ்த்தும் ஆதரவும் எங்களை இன்னமும் ஊக்கப்படுத்துகிறது.

// முந்தாநாள் 'தெய்வம்' படம் பார்த்தப்ப உங்க நினைவு வந்தது.அந்தப் படத்தில் முருகன் கொள்ளை அழகு. //

ஆகா. தெய்வம் படம் நானும் பாத்திருக்கேன். அருமையான படம். அருமையான பாடல்கள். ஆனா...என்னோட நினைவு வந்ததுன்னு சொல்றீங்களே. மகிழ்ச்சிதான். முருகனை நினைக்கும் போதுதான் என் நினைவு வந்தது. அது கண்டிப்பா மகிழ்ச்சிதான்.

kannabiran, RAVI SHANKAR (KRS) July 03, 2007 10:51 AM  

//சாதனையாய் நினைத்தபடி சோதிக்கிறார் உன்னை
இவர் சதிராட்டம் காண்பதற்கோ அனுப்பி வைத்தாய் என்னை//

அருமையான வரிகள்!
பாடலாசிரியர் யார் ஜிரா?

தி. ரா. ச.(T.R.C.) July 03, 2007 12:43 PM  

மயில் வடிவில் பகைவனையும் மாற்றிவிட்ட இறைவா............
மயில் வடிவில் பகைவனையும் மாற்றிவிட்ட இறைவா
அந்த மனங்களையும் நீ மாற்றக் கூடாதா தலைவா
இன்றைக்கும் பொருந்துவரிகள்.50 100 ஆக வேண்டும் வாழ்த்துக்கள்

வல்லிசிம்ஹன் July 03, 2007 2:22 PM  

நூறில் பாதியும் முருகன் முழுவதும்.

வேலுண்டு வினையில்லை படம் மிக நம்பிக்கையைக் கொடுக்கும். வார்த்தைகளின் வலிமை அப்படி. வாழ்த்துகள் ராகவன்.

G.Ragavan July 03, 2007 3:09 PM  

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//சாதனையாய் நினைத்தபடி சோதிக்கிறார் உன்னை
இவர் சதிராட்டம் காண்பதற்கோ அனுப்பி வைத்தாய் என்னை//

அருமையான வரிகள்!
பாடலாசிரியர் யார் ஜிரா? //

உண்மைதான் அருமையான வரிகள். பாடலாசிரியர் யாரென்று கண்டுபிடிப்பதில் சிறிய பிரச்சனை. படத்தின் எழுத்தோட்டம் பார்த்தேன்.

அமரர் கவியரசு கண்ணதாசன்
அமரர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் (காயாத கானகத்தே)
கவிஞர் வாலி
கவிஞர் கே.பி.அறிவானந்தம்
கவிஞர் தமிழ்நம்பி
வேம்பத்தூர் கிருஷ்ணன்

இப்படி ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது. சங்கரதாஸ் சுவாமிகளின் பாடல் காயாத கானகத்தே. ஆகையால் அவரை விட்டுவிடலாம். வரிகளையும் மற்ற பாடல்களையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் கவியரசராக இருக்கவே வாய்ப்புள்ளது. இந்தப் படத்தில் இன்னும் மூன்று பாடல்கள் மிகச் சிறப்பாக இருக்கும்.

1. காற்றின் அணுவை மூச்சாக்கி என் கந்தா எனக்கு உயிர் கொடுத்தாய்
2. வேலுண்டு வேலுண்டு வேலய்யா இனி வினையில்லை வினையில்லை முருகய்யா

இந்த இரண்டு பாடல்களும் வாணி ஜெயராம் பாடியுள்ளார்.

மற்றொரு பாடல் இசையரசி பி.சுசீலா பாடியது. "முத்துக்குமரனை நித்தம் பணிந்தவர் சித்தந்தனில் பக்திக் கடலது" என்ற பாடல். மிகவும் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் போகும். அந்தப் பாடலும் முருகனருளுக்கு வரும். :)

G.Ragavan July 03, 2007 5:23 PM  

// தி. ரா. ச.(T.R.C.) said...
மயில் வடிவில் பகைவனையும் மாற்றிவிட்ட இறைவா............
மயில் வடிவில் பகைவனையும் மாற்றிவிட்ட இறைவா
அந்த மனங்களையும் நீ மாற்றக் கூடாதா தலைவா
இன்றைக்கும் பொருந்துவரிகள்.50 100 ஆக வேண்டும் வாழ்த்துக்கள் //

நன்றி தி.ரா.ச ஐயா. இந்த ஐம்பதில் உங்கள் பங்கும் உண்டே. :) நாம் கூடி இழுக்கும் தேர்தானே..

// வல்லிசிம்ஹன் said...
நூறில் பாதியும் முருகன் முழுவதும்.

வேலுண்டு வினையில்லை படம் மிக நம்பிக்கையைக் கொடுக்கும். வார்த்தைகளின் வலிமை அப்படி. வாழ்த்துகள் ராகவன். //

நன்றி வல்லியம்மா. உண்மைதான். வேலுண்டு வினையில்லை என்று நினைத்த பொழுதிலேயே முன்வினை இவ்வினை வருவினையாவும் தொலையுமே!

Niraimathi July 20, 2007 12:06 PM  

இந்த பாடலை எழுதியது எனது தந்தை 'தமிழ்நம்பி' :)
அவர் இப்போது எங்கள் நினைவுகளில் வாழும்போது .....இந்த பதிவு சொல்லமுடியாத ஒரு ஆனந்தத்தை எனக்கு அளிக்கிறது. மிக்க நன்றி :) :) :)

G.Ragavan July 20, 2007 5:17 PM  

// Niraimathi said...
இந்த பாடலை எழுதியது எனது தந்தை 'தமிழ்நம்பி' :)
அவர் இப்போது எங்கள் நினைவுகளில் வாழும்போது .....இந்த பதிவு சொல்லமுடியாத ஒரு ஆனந்தத்தை எனக்கு அளிக்கிறது. மிக்க நன்றி :) :) :) //

ஆகா...நிறைமதி, பெயரிலேயே தமிழைக் கொண்டிருக்கும் தும்பியாகிய தமிழ்நம்பிதான் இந்தப் பாடலை எழுதியது என்று எடுத்துச் சொல்லி...அவர் உங்கள் தந்தையார் என்று நீங்கள் பெருமிதம் கொள்வது, எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி. உங்கள் நினைவுகளில் மட்டுமல்ல பல முருகன் பாடல்களை எங்களுக்குக் கொடுத்து எங்கள் நினைவிலும் வாழ்கின்றவர் உங்கள் தந்தை. நாங்களும் அவரது தமிழ்ப் புல் மேயும் மந்தை.

TMS அஞ்சலி! (May 25, 2013)

TMS எனும் முருக இசை!
1. (Rare) Kantha Sashti Kavacham - Sung by TMS!
2. All songs of TMS, in this Muruganarul Blog!

அறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்!

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP