Sunday, July 22, 2007

"கந்தகுரு கவசம்" - 5 [171- 205]



"கந்தகுரு கவசம்" - 5 [171- 205]

முருகனின் மூலமந்திரம் இங்கு உபதேசிக்கப் படுகிறது!
மந்திரம், அதனை சொல்லும் முறை, எத்தனை முறை ஜெபிக்க வேண்டும், அதன் பலன்கள் என்னென்ன என்பதையெல்லாம் விளக்கும் அற்புதப் பகுதி.

மந்திரங்கள் எல்லாம் ஒரு குருமுகமாய்ப் பெறுதல் வேண்டும் என்பது நியதி.
ஆனால், இங்கு ஒரு சற்குருவே இதனைச் சொல்லியிருப்பதால், இதனையே முறைப்படி முருகன் சந்நிதியில் வைத்து, அங்கிருந்து ஜெபிக்கத் தொடங்கலாம் எனப் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். விருப்பமிருப்பின், அவ்வாறே செய்யலாம்.

முருகனருள் முழுதுமாய் முன்னிற்கும்! ]


பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்
க்லௌம் ஸௌம் நமஹ
என்று சேர்த்திடடா நாள்தோறும்
ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா
ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி ...... 175

ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திடடா
முருகனின் மூலமிது முழுமனத்தோடு ஏத்திட்டால்
மும்மலம் அகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்
முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம்
முருகன் இருப்பிடமே முக்தித் தலம் ஆகுமப்பா ...... 180

ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே
இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு
மூலமதை ஏத்துவோர்க்கு காலபயம் இல்லையடா
காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா
சொன்னபடிச் செய்தால் சுப்ரமண்ய குருநாதன் ...... 185

தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்
ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே
மூலத்தை நீ ஜபித்தே முக்தனுமாகிடடா
அக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்துவிடில்
எண்ணிய தெலாம்கிட்டும் எமபய மகன்றோடும் ...... 190

மூவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்
பூவுலகில் இணையற்ற பூஜ்யனுமாவாய் நீ
கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா
கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே
ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே ...... 195

வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளே
வேத சூட்சுமத்தை விரைவாகப் பற்றிடலாம்
சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே
அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய் ...... 200

சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான்
நின்னையே நான் வேண்டி நித்தமும் ஏத்துகிறேன்
மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீ
வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறிவாகவே நீ
பகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பா ...... 205


[கவசம் தொடரும்!]
**********************************

படிப்பவர்களின் வசதிக்காக முழு மூல மந்திரமும் இங்கே!

"ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லௌம் ஸௌம் நமஹ"

[Om Saum saravaNabhava sriim hriim kliim
klaum Saum namaha]

அக்ஷர லக்ஷம் என்றால், ஒவ்வொருஎழுத்துக்கும் ஒரு லக்ஷம் எனப் பொருள்.
"ஓம்[1] ஸௌ[2] ம்[3] ச[4] ர[5] வ[6] ண[[7] ப[8] வ[9] ஸ்ரீ[10] ம்[11] ஹ்ரீ[12]] ம்[13] க்லீ[14] ம்[15]
க்லௌ[16] ம்[17] ஸௌ[18] ம்[19] ந[20] ம[21] ஹ[: என்பதால் இது கணக்கில் வராது.]"

21 லக்ஷம் முறை ஜெபிக்க வேண்டும்.

கோடித்தரம் என்றால், ஒரு கோடி முறை இதை ஜெபிக்க வேண்டும்.

இதை ஜெபிப்பதால் கிடைக்கும் பலன்கள் தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கின்றன.

முருகனருள் முன்னிற்கும்!

0 comments:

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP